2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராகக் குண்டு வீசத் தொடங்கியதில் இருந்து ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இரண்டு மடங்கிக்கொண்டுள்ளனர். சிரியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி தற்போது ஐ. எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் இதுவரை 800இற்கு மேற்பட்ட குண்டுகளை ஐ எஸ் அமைப்பினர் மீது வீசியுள்ளனர். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடும் அமெரிக்க சார்பு அமைப்புக்கள் ஐ எஸ் அமைப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றன. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் 400 படைத்துறை நிபுணர்களை சிரியப் போர் முனைக்கு அனுப்பி 5400 போராளிகளைப் பயிற்றுவிப்பதாக முடிவு செய்துள்ளது.
அல் அவ்லாக்கி - செத்தும் கொடை கொடுக்கின்றார்!
2009-ம் ஆண்டு அமெரிக்க விமானம் ஒன்றின் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்த இருந்த ஒரு தாக்குதல் உளவுத் தகவல்கள் பெற்று முறியடிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு பிரித்தானியப் பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டர். 2013-ம் ஆண்டு அமெரிகாவின் பொஸ்டன் நகரின் நடந்த மரதன் ஓட்டப் போட்டியில் செஸ்னியத் தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல் நடாத்தினர். இவற்றுடன் பாரிஸ் கேலிச் சஞ்சிகை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை ஆய்வு செய்த பயங்கரவாதம் தொடர்பான நிபுணர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு உந்து வலுவாக இருப்பவர் அமெரிக்காவில் யேமன் நாட்டுப் பெற்றோருக்குப் பிறந்து பொறியியல் படித்து இசுலாமைய மத போதகராக மாறிப் பின்னர் யேமனில் செயற்படும் அல் கெய்தா அமைப்பில் இணைந்த அன்வர் அல் அவ்லாக்கி எனச் சொல்கின்றார்கள். ஆங்கிலத்தில் மிகவும் திறமையாகப் பேசக் கூடிய இவரை அமெரிக்க ஊடகங்கள் வெள்ளி நாக்குடைய அவ்லாக்கி என விபரித்ததுண்டு. 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏயின் ஆளில்லாப் போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு வீச்சால் இவர் கொல்லப்பட்டார். இவர் இறந்த பின்னரும் இவரது போதனைகளின் காணொளிகள் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு பெரும் உந்து வலுவாக அமைந்துள்ளது என்கின்றனர் பயங்கரவாதம் தொடர்பான நிபுணர்கள்.
மாற்றப்பட்ட தாக்குதல் வடிவம்
பிரான்ஸில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் செய்த தாக்குதல் அவர்கள் தமது தாக்குதல்களுக்கு ஒரு புதிய வடிவம் கொடுத்துள்ளனர் என நம்பப்படுகின்றது. தற்கொடைத் தாக்குதல் நேரக் குண்டுகள் போன்றவை மூலம் தாக்குதல் ஆகியவை மட்டுமே இதுவரை நடந்த பல தாக்குதல்களின் வடிவங்களாக இருந்தது. துப்பாக்கி ஏந்தி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள நகரங்களில் பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்துவதும் அவர்களைப் பணயக் கைதிகளாக்கிக் கொண்டு தப்பிச் செல்வதும் ஒரு புதிய தீவிரவாதத் தாக்குதல் முறைமையாகக் கருதப்படுகின்றது. அண்மையில் தலிபானும் குண்டுத்தாக்குதல்களில் இருந்து விலகி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்துவதை அதிகரித்துள்ளது. Urban warfare எனப்படும் நகர்சார் போர்முறை உத்திகளை கையாண்டு தீவிரவாதிகள் தமது எதிரிகள் மீது தாக்குதல் நடாத்துவது முதன் முறையாக இந்தியாவின் மும்பாய் நகரில் 2008-ம் ஆண்டு நடாத்தப் பட்டது. பாக்கிஸ்த்தானில் இருந்து படகின் மூலம் பயணித்து மும்பாய் நகருக்குள் புகுந்த லக்சர் இ தொய்பா அமைப்பினர் நான்கு நாட்கள் துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் தாக்குதல் நடாத்தி 164 பேரைக் கொன்றனர். இத்தாக்குதலின் வெற்றியை உணர்ந்த அல் கெய்தா அமைப்பினர் அத்தாக்குதல் பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொண்டனர். அதே பாணியிலான தாக்குதல்கள் பலவற்றை அல் கெய்தா பல ஐரோப்பிய நகரங்களில் மேற்கொள்ள முயற்ச்சித்தது. அவை உளவுத் தகவல்களால் முறியடிக்கப்பட்டன. பின்னர் அல் கெய்தாவின் இணை அமைப்பான அல் ஷபாப் 2014-ம் ஆண்டு நைரோபி நகரில் உள்ள வெஸ்ற்கேற் கடைத் தொகுதியில் அதே பாணியான தாக்குதலை சோமாலியாவில் இருந்து சென்று நடாத்தினர். பாரிஸில் தாக்குதல் நடாத்த முன்னர் ஒஸ்ரேலியாவிலும் கனடாவிலும் தனி ஓநாய்த் தாக்குதல் எனப்படும் தனி நபர் செய்யும் தாக்குதல்களைத் தீவிரவாதிகள் மேற்கொண்டிருந்தனர். பிரித்தானிய உளவுத் துறையான எம் ஐ 5 பாரிஸ் பாணித் தாக்குதல் பிரித்தானியாவில் நடக்கலாம் என எச்சரித்துள்ளது. சிரியாவில் செயற்படும் அல் கெய்தா இணை அமைப்புக்கள் பிரித்தானியாவில் தாக்குதல் நடாத்தலாம் என எம் ஐ 5 கருதுகின்றது.
தீவிரவாதிகளுக்கு தூண்டில் போடும் சதி
இசுலாமிய மதத்தை இழிவு படுத்தும் வகையில் மேற்கு நாடுகளின் ஊடகங்களில் ஏதாவது பிரசுரமானால் அதற்கு எதிராக கடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடக்கும் என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தும் "ஷார்லி எப்டோ" சஞ்சிகையில் ஒரு கருத்துப் படம் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த ஊடகப் பணிமனைக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை. அதுவும் போதாது என்று அடுத்த பிரசுரத்தில் மீண்டும் அட்டைப்படமாக இசுலாமியர்களின் கடவுளின் உருவம் பிரசுரிக்கப்பட்டது. அதை வாங்குவதற்கு அதிகாலையில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருந்தனர். இப்படிப் பட்ட செய்கைகள் மூலம் தமது நாடுகளில் உள்ள தீவிரவாதப் போக்குடைய இசுலாமியர்களை இனம் காண்பதற்கு இப்படிச் செய்யப்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட முடியும். இசுலாமியத் தீவிரவாதிகளை இலகுவாகக் கண்டு பிடிக்க இதுவும் ஒரு வழியா?
ஐ. எஸ் அல் கெய்தா முறுகலும் மோதலும்
உலகெங்கும் இசுலாமிய அரசுகள் உருவாக்கப்பட வேண்டும், உலகெங்கும் ஷரியா சட்டப்படி ஆளப்பட வேண்டும் என்பது அல் கெய்தா அமைப்பினதும் ஐ. எஸ் அமைப்பினதும் பொதுவான கொள்கையாகும். ஐ.எஸ் அமைப்பு ஈராக்கியரான அபூபக்கர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். அபூபக்கர் அல் பக்தாடி தான் முஹம்மது நபியின் வழித் தோன்றன் என்கின்றார்அவரது ஐ எஸ் அமைப்பு முதலில் Islamic State of Iraq and Syria என்னும் பெயருடன் 2006-ம் ஆண்டு அல் கெய்தாவின் தலைவர் அபு அயூப் அல் மஸ்ரிலால் உருவாக்கப்பட்டது. ஐ எஸ் ஐ எஸ் பின்னர் தன் பெயரை Islamic State எனச் சுருக்கிக் கொண்டது. இந்த அமைப்பை Islamic State of Iraq and the Levant என்றும் அழைப்பர். மற்ற இசுலாமியப் போராளி அமைப்புக்கள் சிரியாவில் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடிக் கொண்டிருக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தனக்கு என ஒரு நாட்டை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் அல் கெய்தாவின் ஒரு இணை இயக்கமாக இருந்தது. ஈராக்கில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பு தனது நடவடிக்கையை சிரியாவிற்கும் விரிவு படுத்தியதை அல் கெய்தா விரும்பவில்லை. சிரியாவில் அல் கெய் தாவின் கிளை அமைப்பான அல் நஸ்ரா செயற்பட்டுக் கொண்டிருந்தது. அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பிற்கும் அல் நஸ்ரா அமைப்பிற்கும் சிரியாவில் மோதல் உருவானது. பின்னர் ஐ.எஸ் சிரியாவில் செய்த சகோதரக் கொலைகளால் அல் கெய்தா அதிருப்தி அடைந்தது. ஐ. எஸ் (அப்போது அதன் பெயர் ஐ. எஸ். ஐ. எஸ்) அமைப்பைக் கலைக்கும் படி 2013-ம் ஆண்டின் இறுதியில் அல் கெய்தா உத்தரவிட்டது. அதற்கு ஐ. எஸ் தலைவர் மறுக்கவே தனக்கும் ஐ.எஸ் இற்கும் தொடர்பு இப்போது இல்லை என 2014-ம் ஆண்டு ஜனவரியில் அல் கெய்தா அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் நிதி திரட்டல், ஆட் சேர்ப்பு, உலகப் புகழ் ஆகியவற்றிற்குப் போட்டி உருவானது. ஐ எஸ் அமைப்பு அய்மன் அல் ஜவஹிரி தலைமையில் இயங்கும் அல் கெய்தா அமைப்பு பின்லாடனின் பாதையில் இருந்து விலகி விட்டது எனக் குற்றம் சாட்டுகின்றது. இரண்டு அமைப்புக்களும் முகாமை ரீதியிலும் வேறுபடுகின்றன. அல் கெய்தா அமைப்பு ஒரு தலைமைக்குக் கீழ் இருந்து செயற்படும் அமைப்பு. ஐ எஸ் அமைப்பு ஒரு குழுவின் கீழ் செயற்படுகின்றது. அல் கெய்தா தனது ஆட்சேர்ப்பில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றது. சிறந்த விசுவாசிகளாகக் கருதப்படுபவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஐ. எஸ் அமைப்பு கண்டபடி ஆட்களை தனது ஆளணிக்குச் சேர்கின்றது. அல் கெய்தா 9/11 போன்ற பேரழிவு விளைவிக்கும் தாக்குதல்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஐ எஸ் அமைப்பு கொடூரமாக ஆட்களைக் கொலை செய்யும் காணொளிகள் மூலம் தனது பரப்புரைகளைச் செய்கின்றது. ஐ. எஸ் அமைப்பின் ஈராக்கில் உள்ள கிரிஸ்த்துவர்களையும் யதீஷியர்களையும் முற்றாக ஒழிக்கும் செயற்பாட்டை அல் கெய்தா விரும்பவில்லை.
தலை இருக்க ஆடும் வால்கள்
ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்காவின் சிஐஏ செய்த ஆளில்லா விமானத் தாக்குதலால் அல் கெய்தா வலுவிழக்க அதன் கிளை அமைப்புக்கள் வலுவடைந்தன. பின் லாடனின் மறைவின் பின்னர் எகிப்த்திய அரசு சினாய் பாலைவனத்திலும், எகிப்தும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து லிபியாவிலும் அல் கெய்தா அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தின. யேமனில் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபு வளைகுடாவிற்கான அல் கெய்தா தனது நடவடிக்கைகளை ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளுக்கு விரிவு படுத்தியுள்ளது. அல் கெய்தாவின் இன்னும் ஒரு கிளை அமைப்பான அல் ஷபாப் சோமாலியா, உகாண்டா, கென்யா ஆகிய நாடுகளில் தன் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது. அல் கெய்தாவின் துணை அமைப்பான பொக்கோ ஹரம் நைஜீரியா, கமரூன், நிகர் ஆகிய நாடுகளில் தனது தாக்குதல்களைச் செய்து கொண்டிருக்கின்றது. மற்ற அமைப்புக்கள் உலகெங்கும் இருந்து தமக்கு ஆட்சேர்ப்புச் செய்து தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தை விரிவு படுத்திக் கொண்டிருக்க அல் கெய்தா தனது போராளிகளை வேறு வேறு நாடுகளில் தாக்குதல் செய்யப் பண்ணுகின்றது. அல் கெய்தா தனது போர் முறைமைகளை மரபு வழிப்போர் போல மாற்றி வருகின்றது. அல் கெய்தா கரந்தடிப் போரை மட்டும் பின்பற்றிவருகின்றது. அல் கெய்தாவைப் போல் எந்த ஒரு தாக்குதல்களையும் அமெரிக்காவிற்கு எதிராக ஐ. எஸ் அமைப்பால் செய்ய முடியவில்லை. அல் கெய்தா தனது நிதியை நன் கொடை மூலம் பெற்றுக் கொள்கின்றது. ஐ. எஸ் அமைப்பு தனது நிதியை நன் கொடைகளில் இருந்து மட்டுமல்ல பல வித சட்ட விரோத நடவடிக்கைகளில் இருந்தும் திரட்டுகின்றது. உலகெங்கும் நடக்கும் புனிதப் போர்களிற்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இரு அமைப்புக்களும்முரண்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக அல் கெய்தாவிலும் பார்க்க ஐ. எஸ் அமைப்பிற்கு இசுலாமிய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.
ஐ. எஸ் அமைப்பு அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தாவை தன்னுடன் இணைக்கும் முயற்ச்சியில் நீண்ட நாட்களாக ஈடுபட்டிருந்தது.
மீள வரும் அல் கெய்தா
பரிஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகைப் பணிமனையில் நடந்த தாக்குதல் அல் கெய்தா மீளவும் வீறு கொண்டு எழுகின்றது என்பதைக் காட்டுகின்றது. சஞ்சிகைப் பணிமனையில் நடந்த தாக்குதலை அல் கெய்தாவும் யூத உணவு விற்பனை நிலையத்தில் நடந்த தாக்குதலை ஐ. எஸ் அமைப்பும் செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இரண்டு அமைப்புக்களும் இணைந்து இத்தாக்குதல்களைச் செய்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. பெல்ஜியத்தில் செய்த அதிரடிக் கைதுகளும் பரிஸ்த்தாக்குதல்களைத் தொடர்ந்து திரட்டப்பட்ட உளவுத் தகவல்களும் இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களிடை நடந்த தொடர்பாடல்களும் அல் கெய்தாவிற்கும் ஐ. எஸ் அமைப்பிற்கும் இடையில் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் மீள உருவாகிவிட்டது எனச் சுட்டிக் காட்டுகின்றன. சிரியாவில் தீவிரவாதக் குழுக்களிடை நடக்கும் செயற்பாடுகளும் இரு அமைப்புக்களிடை ஒற்றுமை உருவாகிவிட்டது எனக் காட்டுகின்றது. அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தாக் குழுவைச் சேர்ந்த முன்னணிப் போராளிகள் அல் கெய்தாத் தலைமை அமைப்பிற்கும் ஐ. எஸ் அமைப்பிற்கும் இடையில் ஒற்றுமை ஏற்படுத்த முயற்ச்சி சிரியாவில் வெற்றியளித்துள்ளது. அத்துடன் இன்னும் ஓர் அல் கெய்தாக் கிளை அமைப்பான கொரோசோன் அமைப்பும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த தீவிர முயற்ச்சி எடுத்தது. கொரசோன் அமைப்பின் முன்னணிப் போராளிகளுக்கும் அரபுக் குடாவிற்கான அல் கெய்தாவின் தலைவர் நசார் அல் வஹய்ஷிக்கும் ( Nasser al-Wuhayshi) இடையில் நல்ல ஒற்றுமையும் புரிந்துணர்வும் உண்டு. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்பினருக்கும் இடையிலான கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. லெபனானிற்கும் சிரியாவிற்கும் இடையில் உள்ள குவாலமௌன் (Qualamoun) மலைப்பிராந்தியத்தில் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களான அல் நஸ்ரா, கொரோசன் போன்றவையும் ஐ. எஸ் அமைப்பும் இணைந்து செயற்படத் தொடங்கி விட்டன. இருந்தும் ஐ. எஸ் அமைப்புடன் இணைந்து செயற்பட அல் கெய்தா அமைப்பு தனது செயற்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டி இருந்தது. இந்த தீவிரமாக்கும் முயற்ச்சியில் அல் நஸ்ராவின் மிதவாதத் தலைவர்கள் பலர் அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.
பாரிஸில் ஷார்லி இப்தோ சஞ்சிகைப் பணிமனைமீது தாக்குதல் நடாத்திய சகோதரர்களின் மனைவி மார்களிற்கிடையில் நடந்த 500 தொலைபேசி உரையாடல் பதிவுகளை உளவுத் துறையினர் பரிசீலனை செய்த போது அவர்கள் தமது கணவன்மார்களின் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய கதைகள் எதுவும் இருந்ததில்லை.
அல் கெய்தாவும் ஐ. எஸ் அமைப்பும் ஒன்றுபட்டு விட்டதை வேறு சிலர் ஏற்க மறுக்கின்றனர். ஐ. எஸ் அமைப்பின் இசுலாமிய அரசை அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தாவின் அறிஞர்கள் ஏற்க மறுத்திருந்தனர். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ. எஸ்ஸின் பத்திரிகையான தபீக்கில் அல் கெய்தா அமைப்பைத் தாக்கி இரு கட்டுரைகள் வெளிவந்தன.
இரு அமைப்புக்களும் சுனி முஸ்லிம் அமைப்புக்களே என்பதையும் இங்கு அழுத்திக் கூற வேண்டும்.
அல் கெய்தாவிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் உள்ள போட்டி நிலை அவர்களுக்கிடையில் மோதலைத் தீவிரப்படுத்துமா அல்லது இரண்டு அமைப்புக்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற் கொள்ளுமா?
Monday, 19 January 2015
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...