Wednesday 23 September 2020

தமிழீழக் கட்சிகளும் இந்தியாவும்

  

அதிமுகவை பாஜக ஆட்டுவிப்பது போல் இந்திய ஈழத் தமிழ் கட்சிகளை ஆட்டுவிக்கப் போகின்றது. அண்ணா திமுகாவை கட்டுப்பாட்டுக்குள் பாரதிய ஜனதாக் கட்சி எடுத்தது போல் ஈழத் தமிழ் கட்சிகளை இந்திய மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க  முயல்கின்றது

தற்போது பாஜகவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அண்ணா திமுக இருக்கின்றது. நடுவண் அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கின்றது. அன்று ஜிஎஸ்ரி வரி முதல் இன்று வேளாண் சட்டங்கள் வரை தமிழ்நட்டுக்கான நன்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் அண்ணா திமுக பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  

செல்வி ஜெயலலிதா பிழைக்க மாட்டார் எனத் தெரிந்தவுடன் பாஜக அரசு அண்ணா திமுகாவிற்குள் பிளவைக் கொண்டு வருகின்றது. திருமதி சசிகலா நடராஜ சிறையில் அடைக்கப்படுகின்றார். அநாதை போல் நின்ற பன்னீர்செல்வதிற்க்கு பாஜக கை கொடுக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமியா பன்னீர்செல்வமா என்ற பிரச்சனை வந்தபோது இருவருக்கும் இடையில் அவர்களே உடன்பாட்டை செய்து வைக்கின்றனர். உடன்பாடு செய்த பாஜாக அண்ணா திமுகவின் சட்டாம் பிள்ளையாகிவிட்டது.

ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் இரண்டு மாடுகளான பன்னீரையும் எடப்பாடியையும் தமிழக ஆட்சி என்னும் வண்டியை இழுக்கும் இரு மாடுகளாக்கிவிட்டு வண்டி ஓட்டியாக பாஜக தன்னை ஆக்கிக் கொண்டது. இரண்டு மாடுகளுக்கும் மூக்கணாங்கயிறு தேவைப்படவில்லை ஆடிட்டரின் பூநூலே போதுமானதாக இருக்கின்றது. வண்டி ஓட்டியில் கையில் சாட்டைகளாக சிபிஐ என்னும் நடுவண் அரசின் புலனாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை இருக்கின்றன. பாஜகவுடனான நிர்ப்பந்தக் கூட்டணியால் 2019 மே மாதம் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் அண்ணா திமுக தோல்வியைச் சந்தித்து ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பாஜகவின் தந்திரம்: நானே பிளவு படுத்தி பின் நானே ஒன்று படுத்தி சட்டாம் பிள்ளையாவது.

ஈழத்திலும் பிளவு,

2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட்டன. யாரும் எதிர்பாராத வகையில் திரு விக்கினேஸ்வரன், திருமதிஅனந்தி சசிதரன் போன்றோர் கட்சிகளை தொடக்கினர். சுரேஸ் பிரேமச்சந்திரன் புது டில்லி போய் வந்தவுடன் ஒரு கூட்டணி ஒன்று உருவானது. பல கட்சிகள், மதப் பிளவு, சாதிப் பிளவு பிராந்தியப் பிளவுகள் ஈழத்தமிழ் மக்களிடையே உருவானது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமே இல்லாத அதிக அளவு கட்சிகள் மற்றும் குழுக்கள் போட்டியிட்டதை பார்த்தோம்.

ரணிலின் கையில் அதிகாரம் இருந்த போது அவரின் கைப்பிள்ளையான சுமந்திரன் எல்லாவற்றையும் கட்டி ஆண்டார். இப்போது ரணில் செல்லக்காசாகிய நிலையில் சுமந்திரனே கட்டிவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். இப்போது இந்தியா எல்லோரையும் ஒன்று படுத்துவது போல் நாடகமாடி களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான களமாக தியாகி திலீபனின் நினைவேந்தல் பாவிக்கப்படுகின்றது.

 கொழும்பைக் கையாள மீண்டும் தமிழர்கள் வேண்டும்

இந்தியாவிற்கு உகந்த ஆட்சி கொழும்பில் இல்லை. பல தமிழ் கட்சிகளுக்கு பிரச்சனை கொடுக்கும் ஆட்சியாக ராஜபக்சேக்களின் ஆட்சி இருக்கின்றது. அவர்களின் பல அரசியல் நடவடிக்கைகளுக்கு அரச படையினலும் காவற்றுறையினரும் ஈடுபடலாம். தற்போதைய பாராளமன்றக் காலம் முடிந்த பின்னர் அடுத்த தேர்தலில் மக்கள் முன் போய் தங்கள் சாதனை எனச் சொல்லும் படி எதையும் ஈழத் தமிழ்கட்சிகளால் செய்ய முடியாது. பன்னாட்டு புதிய தாராண்மைவாத ஒழுங்கு இப்போது செயலிழந்துள்ளது. அதனால் பன்னாட்டரங்கிலும் ஈழத் தமிழ் கட்சிகளுக்கு ஆறுதல் இல்லை. அநாதைகளாக அவர்கள் இருக்கின்ரார்கள்.

சீனா சரணம் கச்சாமி நிலையில் இலங்கை

மோசமடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோய் தாக்கத்தின் பின்னர் மேலும் மோசமடைந்துள்ளது. அதற்கு இலகு கடன் சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும். இந்தியாவே சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய் என்ற வெளிநாட்டுக் கொள்கையுடைய சீனா இலங்கைக்கு கடன் கொடுத்து அதை தன் பொறிக்குள் சிக்க வைத்துக் கொள்ளும்.

சீனாவிடம் கடன் பட்டு இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் இலங்கை சீனாவுடன் இணைந்து செயற்பட்டால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு தமிழர்கள் தேவைப்படும். எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களை பல கூறுகளாகப் பிரித்து கையாண்டது. அவ்வப்போது அவர்களை ஒன்றுபடுத்துவது போல் நாடகமும் ஆடியது. பின்னர் அவர்களது படைக்கலன்களைப் பறித்தெடுத்தது. அதன் திருத்திய பதிப்பின் முதலாம் அத்தியாயத்தை இப்போது இந்தியா எழுதத் தொடங்கிவிட்டது. தமிழ்க் கட்சிகளை ஒன்று படுத்துவது போல் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது. 2021 மே மாதத்திற்கு முன்னர் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமனத்திற்கான தேர்தலில் பாஜக எப்படியாவது கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என துடிக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு தான் ஆதரவு போல இனி வரும் மாதங்களில் பாஜக சில போலி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மோடி எனது நண்பர் என்றவரும் மோடி என் பின்னால் இருக்கின்றார் என்பவரும் மோடியைப் புகழ்ந்து கருத்துக்களை இனி வரும் சில மாதங்களில் வெளிவிடுவார்கள். 

Monday 21 September 2020

வல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்

 


F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்துள்ளது. முதலாவது பரீட்சார்த்த பறப்பை 2020 செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் பரீட்சார்த்தமாகப் பறக்கவிட்ட செய்தி செப்டம்பர் 14-ம் திகதி வெளிவந்த போது உலக பாதுகாப்புத்துறைகளின் விற்பன்னர்கள் மட்டுமல்ல அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆய்வாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். Air Force Association’s Virtual Air, Space & Cyber Conference என்ற மாநாட்டிலேயே அமெரிக்க வான்படையினர் இந்தத் தகவலை முதலில் வெளிவிட்டனர். எந்த நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கியது என்ற தகவல் கூட வெளிவிடப்படவில்லை. அடுத்த தலைமுறைப் போர்விமானத்தின் முதலாவது பறப்பைச் செய்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என பலதரப்பினரும் எதிர்பார்த்தனர். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்க இருபது ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. புதிய அடுத்த தலைமுறை போர்விமானம் ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா எண்மிய உற்பத்தி தொழில்நுட்பத்தில் (Digital Manufacturing Techniques) மிகவும் முன்னேறியுள்ளது என்பதை 2019 ஜனவரியில் போயிங் நிறுவனம் உற்பத்தி செய்த T-15 போர்விமானம் எடுத்துக் காட்டியது. Next Generation Air Dominance என்னும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விமானம் தொடர்பான எல்லாத் தகவல்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் தொழில்நுட்பத்தை சீனா இணைய வெளியூடாக திருடி தனது ஜே-20, ஜே-30 ஆகிய போர்விமானங்களை உருவாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அந்த வகையான திருட்டுக்கள் நடக்காமல் இருக்க அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் உலகில் பாவனைக்கு வரும் போது உலகப் போர்முறைமையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்
வலிமை மிக்க புதிய படைக்கலன்கள் உருவாக்கப் படும் போது படைத்துறை ஆதிக்க சமநிலை மாறி புவிசார் அரசியில் மாற்றங்கள் ஏற்படும். இரசியாவும் சீனாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையே இன்னும் முழுமையாக உருவாக்க முடியாமல் இருக்கும் போது அமெரிக்கா ஒரு படி மேலே சென்று விட்டதா? இரசியாவின் SU -3 5, SU -57 ஆகிய போர்விமானங்களும் சீனாவின் J-20 போவிமானமும் புலப்படாத் தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ளன.  அதிலும் சீனாவின்  J-20 போர்விமானத்தில் Super cruise என்பது இல்லவே இல்லை. 

பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறை விமானம்

2018-ம் ஆண்டு பிரித்தானியா தனது Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் மாதிரி அமைப்பைக் காட்சிப்படுத்தியது. இதன் மொத்த உற்பத்திச் செலவு மிக மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இத்தாலியும் சுவீடனும்ம் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீடனின் விமான உற்பத்தித் துறை சிறந்த இலத்திரனியல் போர்முறைமைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால் அதன் அனுபவம் சிறந்த பங்களிப்பைச் செய்யக் கூடும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35இன் உற்பத்தியில் கணினி முறைமைகளின் குறியீடுகளில் பெரும்பாலானவற்றை பிரித்தானியர்களே எழுதினர். அந்த அனுபவம் மேலும் விருத்திச் செய்யப்பட்டு ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தில் பாவிக்கப்படும். Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் எந்திரத்தை பிரித்தானியாவின் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. Tempest(சூறாவளி) போர் விமானம் 2030-ம் ஆண்டுதான் முழுமையான பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்கா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை பரீட்சார்த்தமாகப் பறக்க விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து தலைமுறைப் போர்முறைமைகள்

முதலாம் தலைமுறைப் போர்முறைமையில் படையினரை வரிசைப் படுத்துதல் அணிவகுப்பு ஆகியவை முக்கியத்துவமானதாக இருந்தது.

இரண்டாம் தலைமுறைப் போர்முறைமையில் ரைபிள் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளடக்கப்பட்டன.

மூன்றாம் தலைமுறைப் போர் முறைமையில் படை நகர்வு வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எதிரியைப் பல முனைகளில் தாக்குதல் இதில் அடங்கும். இதில் தாங்கிகளும் விமானப்படையின் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்ட்ன.

நான்காம் தலைமுறைப் போர்முறைமையில் பல புதிய தளபாடங்கள் உள்ளடக்கப்பட்டன. அரசற்ற அமைப்புக்களும் போரில் ஈடுபட்டன. போர்த்தாக்குதல்களின் பொதுமக்களும் கொல்லபடுதல் தவிர்க்க முடியாததாகியது. போரில் அரசியலின் ஆதிக்கம் அதிகரித்தது. உளவியல் போர் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிரி நாட்டு மக்களுக்களுக்கான விநியோகங்களை நிர்மூலமாக்குதலும் போரின் பகுதியானது.

ஐந்தாம் தலைமுறைப் போர்முறைமையில் தகவல் தொழில்நுட்பம், புலப்படா விமானங்களும் தாங்கிகளும் கடற்கலன்களும் உள்ளடக்கப்பட்டன. போலிச் செய்திகளைப் பரப்பி எதிரி நாட்டின் படையினரையும் மக்களையும் பிளவுபடுத்தல் திசை திருப்பல் போன்றவையும் இதில் உள்ளன. தரைப்படை, கடற்படை, கடல்சார்படை, வான்படை ஆகியவனவற்றிற்கு இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் வலையமிடல் (Networking) முக்கியத்துவம் பெறுவதுடன். இதில் பல்-திரளப்போர் முறை (multi-domain warfare) உள்ளடக்கப்பட்டுள்ளது.

 


பல்-திரளப்போர் முறை (multi-domain warfare)

இனிவரும் காலங்களில் போர்விமானங்கள் பாரிய அளவில் வலையமாக்கம் (networking) உள்ளடக்கப்படும். இதனால் பல போர் விமானங்கள் ஒன்றாக இணைந்து செயற்படமுடியும். தாக்குதல் போர்விமானங்களும் ஆளில்லாப் போர் விமானங்களும் இணையவெளிப்படையினரும் இணைந்து செயற்படுவது பல்-திரளப் போர்முறையாகும். முதலில் எதிரியின் பிரதேசத்தினுள் ஆளில்லாப் போர் விமானங்கள். பறந்து சென்று தாக்குதலில் ஈடுபடும். சில ஆளில்லாப் போர் விமானங்கள் எதிரியின் ரடார்களுக்கு பெரிய போர்விமானம் போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் சமிக்ஞைகளை வெளியிடும். எதிரி இந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் போது எதிரியின் விமான எதிர்ப்பு முறைமைகளின் இருப்பிடத்தை கட்டுப்பாட்டகத்திற்கு அறிவித்து விடும். பின்னர் அந்த இடங்களில் புலப்படா போர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். எதிரியின் தாக்குதல் நிலைகளில் உள்ள கணினிகளின் செயற்பாடுகளை போர் விமாங்களில் உள்ள கணினிகள் இணையவெளிப் போர் மூலம் செயலிழக்கச் செய்யும். உரையாடல் மூலமும் கையசைவுகள் மூலமும் படையினரால் ஆளில்லா விமானங்களை இயக்கும் முயற்ச்சியில் 2020இன் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வெற்றி கண்டனர். விமானங்களும் ஆளில்லா விமானங்களும் செயற்கை நுண்ணறிவை பாவித்து தாமாகவே மனித தலையீடின்றி தமக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி நிலைமைக்கு ஏற்ப தமது பறப்புக்களை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் பாவனைக்கு வந்து விட்டன.



லேசர் படைக்கலன்கள்

அடுத்த தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் படைக்கலன்கள் இணைக்கப்படும். 2017-ம் ஆண்டு அமெரிக்கா உலங்கு வானூர்திகளில் இருந்து செயற்படுத்தும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்தது. ஒளியின் வேகத்தில் செயற்படும் லேசர் படைக்கலன்கள் ஒலியிலும் பார்க்க பலமடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இலகுவில் அழித்துவிடும். 2020 மே மாதம் அமெரிக்கப் கடற்படையினர் லேசர் படைக்கலன்களைப் பாவித்து விமானங்களை அழிக்கும் பரிசோதையை செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது எல்லா நாசகாரிக் கப்பல்களிலும் லேசர் படைக்கலன்களைப் பொருத்திக் கொண்டிருக்கின்றது.

முப்பரிமாண அச்சிடல்

எதிர்காலப் போரிலும் படைத்துறை உற்பத்தியிலும் முப்பரிமாண அச்சிடலும் முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றது. படையினரின் தலைக்கவசம் முதல் படைக்கலன்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் உட்பட நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகுதி வரை முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படும். போரின்போது படையினருக்கு தேவையான வழங்கல்களில் பெரும்பகுதி முப்பரிமாண அச்சிடல் மூலம் துரிதமாக உற்பத்தி செய்யப்படும். தற்போது பல புதிய போர்விமானங்களின் உதிரிப்பாகங்கள் முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை உற்பத்திச் செலவையும் நேரத்தையும் பெருமளவில் மிச்சப்படுத்துகின்றன. போர் முனைகளில் காயப்படும் வீர்ர்களுக்கு தேவையான புதிய உறுப்புக்களையும் முப்பரிமாண அச்சிடல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 2011-ம் ஆண்டு முப்பரிமாண அச்சிடல் மூலம் உருவாக்கிய உலகின் முதலாவது ஆளில்லா விமானம் வெற்றீகரமாகப் பறக்கவிடப்பட்டது.

விண்வெளிப்படை

ஒரு நாட்டு செய்மதி மற்ற நாட்டு செய்மதியை அழிப்பதும் செய்மதிகளில் இருந்து ஏவுகணைகளையும் குண்டுகளையும் வீசுவதும் உளவு பார்த்தலும் வேவுபார்த்தலும் இணையவெளிப் போர் செய்வதும் விண்வெளிப் படையின் முக்கிய செயற்பாடுகளாக அமையும். 2018 ஓகஸ்ட் 9-ம்  டிரம்ப் அமெரிக்காவின் ஆறவது படையாக விண்வெளிப்படையை அறிவித்தார். அதற்கான சட்டமும் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. 1990இல் இருந்தே இரசியா தனது விண்வெளிபடையை ஆரம்பித்து விட்டது.2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது.2016-ம் ஆண்டு சீனா விண்வெளிப்படையை உருவாக்கத் தொடங்கியது.

ஆறாம் தலைமுறைப்போர்முறைமை

1991-ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக நடந்த போரை அவதானித்த இரசியாவின் Major-General Vladimir Slipchenko ஆறாம்தலைமுறைப் போர்முறைமை என்ற கோட்பாட்டை உருவாக்கினார். இப்போர் முறைமையில் தொலைவில் இருந்தே துல்லியமாகத் தாக்கக் கூடிய படைக்கலன்களை எதிரியின் மீது ஏவி அழித்தல் பயன்படுத்தப்பட்டன. தாக்குதல்களுக்கு செய்மதிகள் மூலம் தகவல் திரட்டப்பட்டது. Global Positioning System(GSP) முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் மனித இயந்திரங்களான ரொபோக்கள் படையினராகச் செயற்படுவதும் எதிர்காலப் போர்முறைமையில் முக்கியமாக இடம்பெறும்.

 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...