அமெரிக்க வெளியுறவுத்துறை பாக்கிஸ்த்தானில் மத சுதந்திரம் இல்லை எனக் குற்றம் சாட்டி அதை சிறப்புக் கண்கானிப்புப் பட்டியலில் இட்டுள்ளதாகவும் 2018-01-04 வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பாக்கிஸ்த்தானில் தமது மதத்தைப் பின்பற்றிச் செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்கின்றது அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை. இதன் அடுத்த கட்டமாக பாக்கிஸ்த்தான் கடுமையான கரிசனைக்கு உரிய நாடு என்ற பட்டியலில் இணைக்கப்படலாம். உதவி நிறுத்தம் என்பது முழுமையான நிறுத்தம் அல்ல பாக்கிஸ்த்தான் செய்யும் ஒவ்வொரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கும் பார்த்துப் பார்த்து உரிய பணம்(கூலி) வழங்கப்படும்.
டிரம்பின் டுவிட்டர் அடியும் பாக்கிஸ்த்தானின் பதிலடியும்
2018-ஆண்டுப் பிறப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை காலமும் இருந்த அமெரிக்க அதிபர்கள் முட்டாள்த்தனமாக பாக்கிஸ்த்தானுக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் எனவும் பாக்கிஸ்த்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாகக் கொடுத்த 33பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிக்குப் பதிலாக பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகள்க்கு புகலிடம் வழங்கிக் கொண்டு அமெரிக்காவிற்கு பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதற்குப் பாக்கிஸ்த்தான் ஊடகங்கள் அமெரிக்க அதிபர் ஆப்கானிஸ்த்தானில் அடையும் தோல்விகளுக்கான காரணங்களை பாக்கிஸ்த்தான் மீது சுமத்தப் பார்க்கின்றார் எனக் கருத்து வெளியிட்டிருந்தன. பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் Khawaja Muhammad Asif டிரம்பின் கருத்து ஒரு நட்பு நாட்டுத் தலைவரின் கருத்துப் போல் இல்லை எனவும் பாக்கிஸ்த்தான் அரசுறவியல் அடிப்படையில் தனிமைப் படுத்தப்பட்ட நாடல்ல அதன் ஆப்கான் கொள்கையை இரசியா, சீனா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். பாக்கிஸ்த்தானில் இருந்து அமெரிக்க வான் படையினர் 57800 தாக்குதல்களை பாக்கிஸ்த்தானில் இருந்து மேற்கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் அவர் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதே சரித்திரம் எமக்குக் கற்றுத்தரும் பாடம் என்றார். அமெரிக்க உதவியின்றி பாக்கிஸ்த்தானால் இருக்க முடியும் எனவும் பாக்கிஸ்த்தானை மிரட்ட முடியாது எனவும் பாக்கிஸ்த்தான் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரால் பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்திற்கு இதுவரை நூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றது பாக்கிஸ்தானிய அரசு. பாக்கிஸ்த்தானியப் படையின் ஜெனரல் அசிஃப் கபூர் நாம் பணத்திற்காக போர் புரிவதில்லை. எம்மால் முடியுமானவற்றைச் செய்கின்றோம். இதிலும் அதிகமாகச் செய்ய முடியாது என்றார்.
2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடிய பணயக்கைதி விடுவிப்பின் போது பாக்கிஸ்த்தான் கைது செய்த ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த திவிரவாதியை விசாரிக்க அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்க பாக்கிஸ்த்தான் மறுத்துவிட்டது.
அமெரிக்காவிற்கு பாக்கிஸ்த்தான் தேவை
ஆப்கானிஸ்த்தான் எல்லாப் பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 14,000 படையினருக்கான வழங்கல்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்த்தானூடகவே செல்கின்றன. பாக்கிஸ்த்தான் அப்பாதையை மூடினால் அமெரிக்கா மாற்றுப் பாதைகளை தேட வேண்டி இருக்கும். மற்ற நாடுகள் எல்லாப் பொருட்களையும் தமது நாட்டினூடாக எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டாது. அத்துடன் பெரும் செலவும் ஏற்படும். 2011-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்குள் பிரவேசித்து பயங்கரவாதிகள் என எண்ணி பாக்கிஸ்த்தானியப் படையினரைக் குண்டு வீசிக் கொன்றது. இதைத் தொடர்ந்து பலுச்சிஸ்த்தானின் ஊடாக நேட்டோ நாடுகளது படையினரும் படைக்கலன்களையும் நகர்த்துவதை பாக்கிஸ்த்தான் தடை செய்தது. அந்தப் பாதையை திறப்பதற்கான பேச்சு வார்த்தை ஒரு புறம் இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் உறுப்பினர் ஒருவர் பாதை திறக்காவிடில் பலுச்சிஸ்த்தான் பிரிவினைக்கு அமெரிக்கா உதவும் என ஒரு மிரட்டலை விட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா மன்னிப்புக் கேட்க பாதை திறக்கப் பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ் மீண்டும் அது போன்ற ஒரு பாதை மூடல் நடக்க மாட்டாது என தான் நம்புவதாகச் சொல்லியுள்ளார்.
சீன பாக்கிஸ்த்தானிய உறவு
பாக்கிஸ்த்தான் பயங்கரவாத ஒழிப்பில் சிறப்பாகச் செயற்படுவதாக சீனா பாராட்டுத் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்த்தானின் பல உட்கட்டுமானனங்களில் சீனா முதலீடு செய்துவருகின்றது. பாக்கிஸ்த்தானின் கஷ்கர் நகரத்திற்கும் குவாடர் நகரத்திற்கும் இடையிலான 3500 கிலோ மீட்டர் நீளப் பாதையை நிர்மாணிக்க சீனா உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தையும் சீனாவையும் இணைக்கும் கொரக்கோரம் நெடுஞ்சாலையை அகலப்படுத்தவும் சீனா உதவி செய்கின்றது. தொடர்ச்சியான் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள பாக்கிஸ்த்தானியர்களுக்கு சீன முதலீடு ஒரு வரப்பிரசாதமாகும். பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் 4 விழுக்காடு தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆண்டு தோறும் புதிதாக வேலை தேடிவரும் முன்று மில்லியன் இளையோருக்கு வேலை கொடுக்க குறைந்தது 7 விழுக்காடாவது வளரவேண்டும். சீன முதலீட்டில் 25பில்லியன் டொலர்கள் வலு உற்பத்தி சார்ந்ததாக இருக்கின்றது. வழமையாக பாக்கிஸ்த்தானில் முதலீடு செய்யும் நாடுகள் தமது முதலீடுகளைக் குறைத்த வேளையில் சீனா பாக்கிஸ்த்தானில் அதிக முதலீடு செய்கின்றது. பாக்கிஸ்த்தான் தேவையான நேரம் எல்லாம் உதவி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது.
சீன பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரப் பாதை
ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமாகும். பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிக்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீனாவின் பொருளாதாரப் பாதை.
பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அண்மைக்காலங்களாக அமெரிக்காவும் இந்தியாவும் எடுக்கும் நடவடிக்கைக்கள்:
- அமெரிக்கப் பாராளமன்றத்தில் பாக்கிஸ்த்தானை ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாகப் பிரகடனப் படுத்தும் சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவும் அமெரிக்காவும் படைத்துறை ஒத்துழைப்புக்களை அதிகரித்து வருகின்றன. ஒரு நாட்டின் படை நிலைகளை மற்ற நாடு தனது பராமரிப்பு மற்றும் எரிபொருள் மீள் நிரப்புதலுக்குப் பாவிக்கக் கூடியவகையில் இரு நாடுகளும் LEMOA என்னும் ஒப்பந்தம் செய்துள்ளன.
- நரேந்திர மோடி பலுச்சிஸ்த்தானியப் பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் இந்திய சுதந்திர நாளன்று உரையாற்றினார்.
- கஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் செய்பவை பொதுவாக இரகசியமாக வைக்கப்படும். ஆனால் 2016 செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா செய்த தாக்குதலுக்கு பெரும் பரப்புரை செய்யப் பட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பாக்கிஸ்த்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு எனச் சொன்னார்.
- ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா செய்யும் பல நகர்வுகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளை பலுச்சிஸ்த்தானை நோக்கி நகரச் செயவதாக இருக்கின்றது.
- இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான நதிகளின் நீர்ப் பங்கீடு தொடர்பாக உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் பகுதியான ஊறியில் நடந்த தாக்குதலின் பின்னர் பாக்கிஸ்த்தானை தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
- அமெரிக்காவும் இந்தியாவும் Communications and Information Security Memorandum Agreement (CISMOA) என்னும் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன. இதன் படி அமெரிக்காவின் பல தொடர்பாடல் தொழில் நுட்பங்களை இந்தியா வாங்க முடியும்.
- முன்பு அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்வதில்லை எனத் தடுத்து வைத்திருந்த பல படைக்கலன்களை அமெரிக்கா தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
- அமெரிக்காவும் இந்தியாவும் செய்யவிருக்கும் Basic Exchange and Cooperation Agreement for Geospatial Intelligence (BECA) என்னும் ஒப்பந்தத்தின் படி இந்தியப் படைத்துறைத் தலைமை தனது போர்விமானங்களுடனும் போர்க்கப்பல்களுடனும் பாதுகாப்பான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இரு நாடுகளும் தமது உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் பாக்கிஸ்த்தானுக்கு முக்கிய பங்கு உண்டு. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதையில் இருந்து பாக்கிஸ்த்தானுக்கு ஒரு பொருளாதாரப் பாதை வகுக்கும் திட்டத்தை சீனா ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அத்திட்டத்திற்கு சீனா “சீன-பாக் பொருளாதாரப்பாதை” (China-Pakistan Economic Corridor -CPEC) எனப் பெயரும் இட்டுள்ளது. சீனா பொருளாதார உதவியாகவும் முதலீடாகவும் பாக்கிஸ்த்தானில் 62 பில்லியன்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமும் ஆப்கானிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடமுமாகும். ஒரு புறம் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப்படைகளின் நடவடிக்கைக்களுக்கு பாதை வழிவிடுவது உட்படப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. மறு புறம் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புக்களுக்கு பாக்கிஸ்த்தான் உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிர்க்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீன-பாக் பொருளாதாரப்பாதை. 2017 ஒக்டோபர் 17-ம் திகதி முதல் 24-ம் திகதிவரை சீனாவில் நடந்த பொதுவுடமைக் கட்சியின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை கட்சியிலும், ஆட்சியிலும், படையிலும் முடிசூடா மன்னன் ஆக்கிக் கொண்டார். உலக அரங்கில் சீனாவின் நிலையையும் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தையும் விரிவு படுத்த வேண்டும் என்ற கொள்கையுடைய ஜின்பிங் தனது கிழக்கு வாசலான பாக்கிஸ்த்தானில் எதிரிகளின் கைகள் ஓங்குவதை அனுமதிக்க மாட்டார்.
இந்தியா மகிழ்ச்சியடையலாமா?
அல் கெய்தா, தலிபான் போன்ற அமைப்புக்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை, அதிலும் மோடிக்கு முன்னைய காலத்தில் அவர்கள் இந்தியாவின் நட்பை விரும்பின எனச் சொல்லலாம். வேறு பல அமைப்புக்கள் இந்திய எதிர்ப்பை தமது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றில் சில பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டவை என இந்தியா குற்றம் சாட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் சில அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையுடனௌம் தலிபானுடனும் தொடர்புகளை வைத்திருக்கின்றன. அதனால் அவற்றிற்கு இரு தரப்பில் இருந்தும் உதவிகளும் கிடைக்கின்றன. பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை இட்டு இந்தியா மகிழ்ச்சியடைய முடியாது. அந்த முறுகல் நிலை ஒரு பிளவு நிலையாக மாறினால் பாக்கிஸ்த்தான் சீனாவில் அதிகம் தங்கியிருக்கும் அமெரிக்க விரோத நாடாக மாறும். அமெரிகாவின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானிலும் பார்க்க சீனாவில் பெரிதும் தங்கியிருக்கும் பாக்கிஸ்த்தானால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்.
பாக்கிஸ்த்தான் அமெரிக்காவுடன் அதிகம் முரண்டு பிடிக்கவும் முடியாது. ஆனால் முரண்டு பிடிப்பது போல் பாவனை செய்வது அதை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும். அமெரிக்காவால் பாக்கிஸ்த்தானில் இலகுவாக ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்க முடியும். பலுச்சிஸ்த்தானில் பிரிவினைவாதப் போரை உருவாக்க முடியும். அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானை முழுமையாக ஒதுக்கி விடாது. இரு நாடுகளும் மீசையில் மண்படாத வகையில் தமக்கிடையே உள்ள பிணக்குக்களைத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்.