அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையும்ம் மூதவையும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்யும் கூட்டத்தை தடுக்கும் முகமாக அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் செய்தது உலகைச் சூழவிருக்கும் ஆபத்தின் ஆரம்பக் கட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொவிட்-19 தொற்று நோயை மோசமாக கையாண்ட நாடுகளின் பட்டியலில் மக்களாட்சி நாடான அமெரிக்கா முதலாம் இடத்திலும் சிறப்பாகக் கையாண்ட நாடுகளின் பட்டியலில் பொதுவுடமையாட்சி நாடான வியட்னாம் முதலாம் இடத்திலும் இருக்கின்றன. உலகெங்கும் பெரும் அழிவை விளைவிக்கக் கூடிய படைத்தளங்களையும் படைக்கலன்களையும் வைத்திருக்கும் ஒரு நாடு ஒரு மனநோயாளியால் ஆட்சி செய்யும் வாய்ப்பு உள்ளதா என்ற அச்சத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகெங்கும் அமெரிக்க இரசிகர்கள்
“மக்களாட்சி என்பது ஓர் அரசல்ல அது எல்லா மக்களும் தங்கள் பாத்திரத்தை உரிய முறையில் மேடையேற்ற வேண்டிய ஒரு நாடகம்” என்ற அடிப்படியில் அமெரிக்க அரசு கட்டியெழுப்பப்பட்டது. உலகின் எந்த ஒரு நாட்டிலும் தேர்தல் ஊழல் இல்லாமல் நடப்பதில்லை. அமெரிக்கத் தேர்தல்களில் இரண்டு கட்சியினரும் ஊழல் செய்வதுண்டு. எதிர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத அளவிற்கு அமெரிக்காவில் ஊழல் நடப்பதில்லை. மற்றத்தரப்பு பெரும் ஊழலில் ஈடுபட்டது ஒரு தரப்பு பெரும் பொய்யை அவிழ்த்து விடுவதில்லை. ஆனால் அது 2020 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் நடந்துள்ளது. அந்தப் பொய்யைச் சொன்னவர் ஒரு தனிப்பட்ட டிரம்ப் என்பவர் மட்டுமல்ல. அவரின் பொய்யை பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர் பதவியில் உள்ளவர்களும் சொல்வதுடன் அமெரிக்க நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கின்றனர். பலர் அத்தாக்குதலை நியாயப்படுத்து கின்றனர். 2020இல் கொரோனா நச்சுக்கிருமி உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போல் 2021 அமெரிக்க குடியரசுக் கட்சியினரின் பயங்கரவாதம் உலகெங்கும் பரவக் கூடிய ஆபத்து உள்ளது. மேற்கு ஐரோப்பாவில் பலர் அமெரிக்காவை எப்போதும் ஒரு முன்னுதாரணமாக எடுப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் உள்ள பல நகரவாசிகளில் பலர் அமெரிக்காவை முன்னுதாரணமாக கொள்ளக் கூடியவர்கள். அமெரிக்கத் திரைப்படங்கள், பாடகர்கள், ஊடகங்கள் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை.
உலகப் பயங்கரவாத வடிவம் பெற்ற வெள்ளைத் தேசியவாதம்
அமெரிக்காவில் ஒரு பகுதியினர் கடும் சினம் கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கறுப்பின மக்கள், பெண்கள், தன்னினச் சேர்க்கையாளர்கள் போன்ற பல ஒடுக்கப்பட்ட பிரிவினர் தங்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுள்ளனர் என சில அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் சொல்கின்ற ஒரு பகுதியினர் வலதுசாரி வெள்ளைத் தேசியவாதிகளையே. 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் அப்பாவி இஸ்லாமியர்களை ஒரு வெள்ளைத் தேசியவாதி சுட்டுக் கொண்ட போதே அமெரிக்காவில் உருவான வெள்ளைத் தேசியவாதம் உலகெங்கும் ஒரு பயங்கரவாதமாகப் பரவத் தொடங்கி விட்டது என சில சமூகவியலாளர்கள் எச்சரித்திருந்தனர். சமூகச் சிந்தனை மிக்க ஸ்கண்டினேவிய நாடுகளில் கூட வெள்ளைத் தேசியவாதம் 2019இலேயே பரவிவிட்டது. வெள்ளையர் அல்லாதோர் வாழ்கின்ற நாட்டிலும் வெள்ளைத் தேசியவாதம் வேறு வடிவங்களைப் பெறும் ஆபத்தும் உள்ளது. வெள்ளைத் தேசியவாதம் மக்களாட்சியில் வெள்ளையர் அல்லாதவர் அரசுத் தெரிவில் பங்களிப்புச் செய்வதை விரும்பாததால் அவர்கள் மக்களட்சி முறைமை மீது வெறுப்படைந்துள்ளனர். உலகெங்கும் உள்ள பெரும்பான்மைவாதிகளும் மதவாதிகளும் இந்த வெறுப்பை தங்கள் மத்தியில் இனி வளர்த்துக் கொள்ளப் போகின்றார்கள்.
அமெரிக்கா மேன்மையானது.
கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடல் சுதந்திரம், ஊடக சுதந்திரம், சட்ட அமூலாக்கம், சுதந்திரமான நீதித்துறை, துடிவினை மிக்க குடிசார் அமைப்புக்கள், வெளிப்படைத்தன்மை, ஏற்புத்தன்மைமிக்கதும் பொறுப்பு கூறத்தயங்காததுமான பொதுநிறுவனங்கள் ஆகியவை அமெரிக்காவில் சிறப்பாக அமைந்திருப்பதாலும் எந்த ஒரு எதிரியாலும் தோற்கடிக்கப் படாத நிலையில் இருப்பதாலும் அமெரிக்கா உலகில் மேன்மையானது என அமெரிக்கர்கள் மார் தட்டி நிற்கின்றனர். அவர்கள் முகங்களில் 2021 ஜனவரி 6-ம் திகதி கரி பூசப்பட்டுள்ளது.
முழு உலகிற்கும் பேராபத்து!
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த ரிமதி ஸ்னைடர் “தமது நாடுகளில் ஃபாஸிசத்தையும் நாஜியிஸத்தையும் பொதுவுடமைவாதத்தையும் வளரவிட்ட ஐரோப்பியர்களிலும் பார்க்க அமெரிக்கர்கள் புத்திசாலிகள் அல்லர் ஆனால் ஐரோபியர்களின் அனுபவம் அமெரிக்கர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது” என்றார். 1995இல் பதினாறு அமெரிக்கர்களில் ஒருவர் படைத்துறை ஆட்சியை விரும்பினர். 2014இல் அது ஆறுபேரில் ஒருவராக மோசமடைந்தது. 2011-ம் ஆண்டு அரைப்பங்கு அமெரிக்கர்கள் தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம் இல்லாமல் ஒரு தலைவரால் நாடு ஆளப்படுவதை விரும்பினர். அமெரிக்க இளையோரில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மக்களாட்சி அவசியம் எனக் கருதுகின்றனர். பேரழிவு விளைவிக்க படைக்கலன்களைக் கொண்ட ஒரு நாட்டில் பொறுப்புக்கூறலற்ற ஒரு சர்வாதிகாரி ஆட்சியில் அமர்வது பேராபத்தானது.
யார் இந்த டிரம்பின் ஆதரவாளர்கள்?
அமெரிக்க உளவுத்துறை, அமெரிக்க காவல்துறை ஆகியவற்றின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்க நாடளமன்றத்தின் மீது தாக்குதல் செய்ய முடியாது. உலகின் எந்தப் பகுதியிலும் எட்டு மணித்தியாலங்களுக்குள் பெரும் படையணியைக் கொண்டு போய் இறக்கக் கூடிய அமெரிக்காவால் ஒரு சில நிமிடங்களுக்குள் அமெரிக்க நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலை முறியடித்திருக்க முடியும். அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பயங்கரவாதத்தை 2021 ஜனவரி ஆறாம் திகதி அரங்கேற்றியவர்களில் இரு பிரிவினர் கவனிக்கப் பட வேண்டியவர்கள். நாடாளமன்றத்தைத் தாக்கிய பயங்கரவாதிகள் தம்மை பெருமிதமான இளையோர் (Proud Boys) என அழைத்துக் கொண்டனர். தாக்குதலுக்குப் போகும் வழியில் அவர்கள் முழந்தாளிட்டு ஏசு நாதரைத் தொழுதனர். இவர்கள் பெண்களின் உரிமைகளுக்கும், குடிவரவிற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் நற்செய்தி சார்ந்த கிருத்தவர்கள் (Evengelical Christians). இவர்கள் தங்களது தாக்குதலை புனிதப் போர் எனவும் அழைத்தனர். இவர்களில் ஒரு பெண்மணி (தேர்தல்) திருட்டை நிறுத்தவும் என தேவாலய குரு போதனை செய்த பின்னர் தனக்கு கடவுளிடமிருந்து எரிகின்ற புதர் என்ற சமிக்ஞை கிடைத்த படியால் தான் தாக்குதல் செய்ய விமான மூலம் வாஷிங்டன் போனதாக பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார். மேலும் அவர் தான் பைபிளிள் உள்ள எஸ்த்தர் ராணி போல் செயற்படுவதாகவும் சொன்னார். நாடாளமன்றத்தைத் தாக்கிய குடியரசுக் கட்சியின் பயங்கரவாதிகளில் இன்னொரு பிரிவினர் கியூஅனான் (QAnon) என்னும் இணையவெளி மதக்குழுவினர். இவர்கள் ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சியினர் சாத்தானை தொழுபவர்கள் என நம்புகின்றனர். இவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது தமது கடமை என இவர்கள் கருதுகின்றனர்.
எய்தவர்கள் வேறு அம்பு வேறு
மேற்படி இரண்டு மதக் குழுவினர்களுக்கும் பின்னால் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பலர் இருக்கின்றனர். கொவிட்-19 தொற்று நோயால் அமெரிக்க அரசின் செலவு மிகவும் அதிகரிதும் வரவு மிகவும் குறைந்தும் இருக்கின்றது. இதனால் அரசு செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. பொதுவாக ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சியினர் ஆட்சியில் அமர்ந்தாலே அதிக வரிகளை விதிப்பார்கள். டிரம்ப் ஆட்சிக்கு வந்தச்தும் பெரும் செல்வந்தர்களின் கூட்டாண்மை நிறுவனங்கள் மீதான வரியைக் குறைத்தார். அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் ஜோ பைடனின் ஆட்சியை பெரிதும் எதிர்க்கின்றார்கள். அதிலும் இம்முறை வெள்ளை மாளிகை, மக்களவை ஆகிய இரண்டும் மக்களாட்சிக் கட்சியினரின் கையில். மூதவையில் இரு கட்சிகளும் ஐம்பதிற்கு ஐம்பது என்ற நிலையில் இருக்கின்றன. மூதவைக் கூட்டங்களுக்கு துணை அதிபர் தலைமை தாங்குவார். அதனால் தீர்மானிக்கும் வாக்கு மக்களாட்சியின் கையில் உள்ளது. இதனால் மக்களாட்சிக் கொள்கையை குடியரசுக் கட்சியினர் குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கின்றனர்.
அமெரிக்க சட்ட அமூலாக்கத்திற்கு பொறுப்பான Federal Bureau of Investigation (FBI) இன் அறிக்கையின் படி ஜனவரி ஆறம் திகதி நடந்தது போல் இனியும் நடக்க வாய்ப்புண்டு.