Tuesday, 11 May 2021

எண்மிய நாணயத்தில் அமெரிக்காவை முந்தும் சீனா

  

எண்மிய நாணயம் என்பது இலத்திரனியல் வடிவத்தில் உள்ள பணமாகும். 2014-ம் ஆண்டு சீனா தனது பன்னாட்டு நிதி சுதந்திரத்திற்கும் உலகப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கும் எண்மிய நாணயம் அடித்தளமாக அமையும் என முடிவு செய்தது. எண்மிய நாணயத்தை சீனா நான்கு நகரங்களில் பரீட்சார்த்தமாக பாவனைக்கு விட்டுள்ளது. அதன் மூலம் உலகில் முதலில் எண்மிய நாணயத்தை அறிமுகம் செய்த நாடு என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டது. அமெரிக்காவின் நடுவண் வங்கியான இணைப்பாட்சி ஒதுக்கம் (Federal Reserve) அமெரிக்காவின் மசாச்சுசெட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தனது எண்மிய நாணயத்தை அறிமுகம் செய்ய முயல்கின்றது. சீனாவின் முயற்ச்சி தடையின்றி தொடரும் போது அமெரிகாவின் முயற்ச்சிக்கு சில எதிர்ப்புக்கள் அங்குள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து கிளம்பியுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையும் எண்மிய நாணயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை.

கடன் அட்டை முட்டுக்கட்டை

விசா, மஸ்டர் கார்ட் ஆகிய கடன் அட்டை நிறுவனங்கள் எண்மிய நாணயத்தின் மூலம் தங்களது வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகளை செய்வது பற்றி ஆய்வுகள் செய்து முடிக்கும் வரை எண்மிய நாணய அறிமுகத்தை தாமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க நடுவண் வங்கி எண்மிய நாணயம் தொடர்பான தொழில்நுட்பத்தில் மிகவும் உன்னத நிலையை முதலில் அடைய வேண்டும் என நினைக்கின்றது. முறைகேடுகள் நடந்தால் எண்மிய நாணயத்தின் மீதான நம்பிக்கை இல்லாமற் போய் அதன் செயற்பாடே இல்லாமல் போய்விடும் என்பது அமெரிக்க நடுவண் வங்கியில் கரிசனையாகும்.

எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும்

கடந்த பத்து ஆண்டுகளாக Bitcoin, Ethereum, Litecoin போன்ற நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) உலகெங்கும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றின் பெறுமதிகள் பல மடங்காக உயர்ந்தும் உள்ளன. 2020இல் பேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்னும் பெயரில் ஒரு நுண்மிய நாணயத்தை அறிமுகம் செய்ய முயன்றது. பேஸ்புக் உரிமையாளரை அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை அது தொடர்பாக விசாரணை செய்த போது சீனா எண்மிய நாணயத்தை (Digital Currency) அறிமுகம் செய்வதில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது என்றார் அவர். நுண்மிய நாணயங்கள் எந்த ஒரு அரசினதோ அல்லது நடுவண் வங்கினதோ உத்தரவாதம் இல்லாதவையாகும். எண்மிய நாணயங்கள் நடுவண் வங்கிகளால் அறிமுமக் செய்யப்படும் இலத்திரனியல் நாணயங்களாகும். தற்போது நடைமுறையில் உள்ள நாணய முறைமையை நுண்மிய நாணயங்கள் இல்லாமற் செய்துவிடும் என்ற கரிசனையால் நடுவண் வங்கிகள் எண்மிய நாணயங்களை உருவாக்குகின்றன.  நுண்மியநாணயங்கள்(cryptocurrency) என்பவை தனியார் நிறுனவங்கள் உருவாக்கிய இலத்திரன் நாணயங்களாகும். அவற்றின் பின்னணியில் எந்த ஒரு அரசோ அல்லது நடுவண்வங்கியோ இல்லை. ஆனால் எண்மிய நாணயங்கள் அரசுகளாவும் அவற்றின் நடுவண் வங்கிகளாலும் உருவாக்கி முகாமை செய்யப்படுபவை. சீன நடுவண் வங்கி நுண்மிய நாணயத்தை உருவாக்கி முதலில் அரச வங்கிகளுக்கு வழங்கும். பின்னர் அவை தமக்கிடையேயான பணப்பரிமாற்றங்களுக்கும் Alipay, Wechat போன்ற கைப்பேசி பணப்பரிமாற்ற நிறுவனங்களின் கொடுப்பனவுகளுக்கும் வங்கிகளின் வாடிக்கையாளர்களிற்கு இடையிலேயான கொடுப்பனவுகளுக்கும் பாவனைக்கு அனுமதிக்கும். ஒரு நுண்மிய நாணயங்களின் பாவனை அதிகரிக்கும் போது அந்த நாட்டின் நாணயப்பாவனையை அந்த நாட்டின் நடுவண் வங்கியால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். நாட்டின் வட்டி வீதத்தை முடிவு செய்வதும் கடினமாக அமையும். அதனால் பல நாடுகள் நுண்மிய நாணயத்தை தடை செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல நாடுகள் நுண்மிய நாணயத்தை தடை செய்துள்ளன. அது எண்மிய நாணயத்தின் அறிமுகத்தை இலகுவாக்கும்.

சீனாவின் பரீட்சார்த்த நடவடிக்கை

தற்போது பாவிக்கப்படும் கடுதாசி நாணயத் தாள்களை முதலில் அறிமுகப்படுத்தியது சீனாவே. அதே போல் எண்மிய நாணயத்தின் முன்னோடியாக சீனாவும் திகழவிருக்கின்றது. சீனாவின் சுழௌ நகரில் வாழும் 181,000 பேருக்கு சீனாவின் நடுவண் வங்கியான மக்கள் வங்கி ஆளுக்கு 55யுவான்கள் எண்மிய நாணயத்தை அவர்களின் கைப்பேசியில் உள்ள பணப்பை செயலியில் வைப்பிலிட்டு அவற்றை செலவு செய்யும்படி பணித்தது. இந்த நடவடிக்கை பின்னர் ஐந்து இலட்சம் பேருக்கு சீனாவின் பதினொரு பிராந்தியங்களுக்கு 2021 ஏப்ரலில் விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பங்கு பற்றும் விற்பனையாளர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டன. ஹொங் கொங்கிற்கும் பிரதான சீனாவிற்கும் இடையிலான கொடுப்பனவுகளிலும் எண்மிய நாணயப் பயன்படுத்தப்பட்டது. நுண்மிய நாணயங்கள் பயன்படுத்தும் BLOCKCHAIN என்னும் கணக்குப் பதிவேட்டு மென்பொருளையே சீன மக்கள் வங்கி தனது எண்மிய நாணயங்களுக்கு சிறிய மாற்றத்துடன் பயன்படுத்துகின்றது. 2022 ஏப்ரல் மாதத்தின் முன்னர் சீனா முழுவதும் எண்மிய நாணயம் அறிமுகப்படுத்தப்படும். ஐக்கிய அமீரகம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் சீனாவின் எண்மிய நாணய முறைமையில் இணையவிருக்கின்றன. சீனாவின் எண்மிய நாணய அறிமுகத்தின் வெற்றி அதில் எத்தனை நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வருகின்றன என்பதில் தங்கியுள்ளது.

மேற்கு நாடுகளின் நடுவண் வங்கிகளின் தயக்கம்

அமெரிக்காவின் Federal Reserve, பிரித்தானியாவின் Bank of England ஐரோப்பிய ஒன்றியத்தின் Eruopean Central Bank ஆகிய நடுவண் வங்கிகள் எண்மிய நாணயங்களை அறிமுகப் படுத்த விருப்பம் கொண்டுள்ள வேளையில் அதன் பயன்பாட்டின் போது பாவனையாளரின் தகவல்களின் இரகசியத்தன்மைகளைப் பேணுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதால் அவற்றில் நகர்வுகள் மெதுவாக நடைபெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தமது எண்மிய நாணய அறிமுகம் 2026-ம் ஆண்டு வரை இழுபடலாம் என்கின்றது. பிரித்தானிய நடுவண் வங்கியும் திறைசேரியும் இணைந்து எண்மிய நாணயம் தொடர்பாக ஒரு பணிக்குழுவை 2021 ஏப்ரலில் நியமித்துள்ளன.

அமெரிக்க டொலருக்கு சவாலாக சீன எண்மிய நாணயம்.

அமெரிக்கா பல நாடுகள் மீதும் தனிப்பட்டவர்கள் மீதும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை சீனாவின் எண்மிய நாணயம் வலிவிழக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகெங்கும் நடக்கும் சட்ட விரோத பணப் பரிமாற்றங்களை அமெரிக்கா கண்காணித்து வருகின்றது. சீனாவின் எண்மிய நாணயம் உலகெங்கும் பாவனைக்கு வரும் போது அமெரிக்காவின் கண்காணிப்பில் மண் தூவப்பட்டுவிடும். அமெரிக்கா தனது டொலர் கொடுப்பனவு முறைமைகள் மூலம் பல நாடுகளைமீது பொருளாதார மிரட்டல்களைச் செய்வது போல் சீனாவும் தனது எண்மிய நாணயம் உலகில் பெருமளவு பாவனைக்கு வந்த பின்னர் செய்ய முடியும். சீனா ஒரு எண்மிய பட்டுப்பாதையையும் (Digital Belt and Road) உருவாக்கலாம். அமெரிக்க டொலர் தற்போது 120இற்கும் மேற்பட்ட நாடுகளின் பன்னாட்டு கொடுப்பனவு நாண்யமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

வெட்டுமுனைத் தொழில்நுட்பம் (cutting-edge technology)

செயற்கை நுண்ணறிவு, தொடர் பேரேட்டுத் தொழில்நுட்பம் (blockchain technology) இலத்திரனியல் கொடுப்பனவு முறைமை ஆகிய மூன்றும் எண்மிய நாணய அறிமுகத்திற்கு தேவையான முக்கிய அடிப்படைகளாகும். இவை சீனாவில் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன. சீனாவில் இலத்திரனியல் நாணயக் கொடுப்பனவு முறைமை மேம்பட்ட நிலையிலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக கொடுப்பனவுகள் நடப்பதாகவும் உள்ளது. Alipay, Wechat போன்ற சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கைப்பேசிகள் மூலமும் இணையவெளி மூலமும் பெருமளவு கொடுப்பனவுகளைச் செய்கின்றன. சீனாவின் கைப்பேசிப் பாவனையாளர்களில் எண்பது விழுக்காட்டினர் கைப்பேசி மூலமான கொடுப்பனவுகளைச் செய்கின்றனர்.

பன்னாட்டு கொடுப்பனவு முறைமைகளில் அமெரிக்க ஆதிக்கம்

பன்னாட்டு வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவுகளில் பெரும்பாலானவை அமெரிக்க வங்கிகளினூடாகவே நடக்கின்றன. பன்னாட்டு கொடுப்பனவுகளுக்கான Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) என்னும் அமைப்பும் அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் உருவாக்கிய Treasury’s Terrorist Finance Tracking Program (TFTP) என்ற அமைப்பும் உலக கொடுப்பனவுகள் சட்டத்திற்கு உட்பட நடப்பதை உறுதி செய்கின்றன. தீவிரவாத அமைப்புக்களினதும் போதைப்பொருள் உற்பத்தியாளர்களினதும் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இவை உறுதியாக இருக்கின்றன. அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிந்து ஈரானை SWIFT கொடுப்பனவு முறைமையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட்டது. சீன எண்மிய நாணயத்தின் பயன்பாடு உலகெங்கும் பரவி எண்மிய பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமை ஒன்றை சீனா உருவாக்குமானால் அமெரிக்க டொலர் உலக கொடுப்பனவில் செய்யும் ஆதிக்கம் பெருமளவு குறைக்கப்படும்.

உலக நாணயமாக சீன ரென்மின்பி

சென்ற நூற்றாண்டில் சீனா தனது ரென்மின்பி நாணயத்தை உலக நாணயமாக்குவது பற்றி ஆராய்ந்தது. அதற்கு தேவையான வெளிப்படைத்தன்மை சீனாவில் தற்போது இருக்கும் சீனாவில் இல்லை. அப்படி ஒரு வெளிப்படைத்தன்மையை உருவாக்குவது சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் ஆட்சிக்கு பெரும் சவாலாக அமையும். சீன நாணயம் உலக நாணயமாக்குவதற்கு அதை தடைகளின்றி இலகுவில் வாங்கவும் விற்கவும் முடியுமான நிலை உருவாக வேண்டும். தனது நாணயத்தின் பெறுமதியின் அசைவு தொடர்பாக கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா விரும்பவில்லை. இதனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் முயற்ச்சியைக் கைவிட்டது. ஆனாலும் அமெரிக்க டொலர் உலக நாணயமாக இருப்பதை சீனா விரும்பவில்லை. ஏற்கனவே சீனா ரென்மின்பி, யுவான் என இரண்டு பெயரில் தனது நாணயத்தை வைத்திருக்கின்றது.

தனது மக்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் விரும்பும் சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்களுக்கு எண்மிய நாணயத்தைப் பாவிக்கும் மக்களின் வரவு செலவு தொடர்பான உடனடித் தகவல்களை எண்மிய நாணயப் பாவனை வழங்கிக் கொண்டிருக்கும். அதை அமெரிக்க அரசால் அமெரிக்க மக்களிடம் செய்ய முடியுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...