Friday, 11 July 2014

பிரெஞ்சு அமெரிக்கப் பிணக்கும் டொலருக்கு வைக்கப்படும் ஆப்பும்

அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த சூடான், கியூபா, ஈரான் ஆகிய நாடுகளுடன் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக பிரெஞ்சு வங்கியான BNP Paribas மீது அமெரிக்க நிதித்துறை அதிகார சபை வழக்குத் தொடர்ந்தது. இக்குற்றச் சாட்டை BNP Paribas ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு ஒன்பது பில்லியன் (90 கோடி) அமெரிக்க டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டது.

இது பிரன்ஸிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகலை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இரசியக் கடற்படைக்கு நான்கு உழங்கு வானூர்தி தாங்கிக் கப்பலைகளை நிர்மாணிக்க பிரான்ஸ் ஒத்துக் கொண்டிருந்தது. இவை நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடியன. இவற்றில் உழங்கு வானூர்திகள் இறங்கவும் இவற்றில் இருந்து பறத்து செல்லவும் முடியும். துருப்புக் காவியாகவும் மிதக்கும் மருத்துவ மனையாகவும் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்த முடியும். இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து இந்த உழங்கு வானூர்தி தாங்கி ஈரூடகக் கப்பல்களை இரசியாவிற்கு வழங்குவதை ஒத்தி வைக்குமாறு அமெரிக்கா பிரான்ஸிடம் வலியுறுத்தியது. ஆனால் இது 2011-ம் ஆண்டு ஒத்துக் கொண்ட ஒப்பத்தம் என்றபடியால் பிரான்ஸ் அதற்கு மறுத்துவிட்டது. இந்தக் கப்பல் விற்பனை மூலம் மேற்கு நாட்டுத் தொழில்நுட்பத்தை இரசியா பெற்றுக் கொள்ளும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கப்பல் நிர்மாணத்திற்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைதான் அமெரிக்கா பிரெஞ்சு வங்கி மீது விதித்த அபராதம் என்கின்றன இரசிய ஊடகங்கள்.  2014 ஜூன் 30-ம் திகதி நானூறு இரசியக் கடற்படையினர் பிரான்ஸ் சென்று இக்கப்பல்களை இயக்குவதற்கான பயிற்ச்சிகளைப் பெறுகின்றனர்.

2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ம் திகதி பிரெஞ்சு நி்தியமைச்சர் மைக்கேல் சப்பின் உலக வர்த்தகங்களுக்கான கொடுப்பனவு நாணயமாக அமெரிக்க டொலர் இருப்பதை விடுத்து அது பல நாட்டு நாணயங்களை உள்ளடக்கியாதாக இருக்க வேண்டும் என்று ஒரு குண்டைப் போட்டார். மேலும் அவர் இந்த உலகக் கொடுப்பனவு நாணயமாக வளரும் நாடுகளின் நாணயங்களும் உள்ளடக்கப் படவேண்டும் எனவும் தெரிவித்தார். சீன நாணயத்தை மனதில் கொண்டே பிரெஞ்சு நிதியமைச்சர் இப்படித் தெரிவித்தார். ஏற்கனவே பல நாடுகள் டொலர் உலக நாணயமாக இருப்பதை விரும்பவில்லை.  தற்போது உலக நாடுகளின் பெரும்பான்மையான மைய வங்கிகள் தமது நாணயக் காப்பிருப்பை (currency reserve) அமெரிக்க டொலரிலேயே வைத்திருக்கின்றன. இரசியா, சீனா ஆகிய நாடுகள்  டொலர் உலக நாணயமாக இருப்பதற்கு எதிராகப் பலதடவை கருத்துத் தெரிவித்துள்ளன. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டத்தை வைத்துள்ளது. 2008-ம் ஆண்டின் பின்னர் 17 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயமான யூரோ பல நெருக்கடிகளைச் சந்தித்தது. இப்போது அது தனது பிரச்சனைகளில் இருந்து மீண்டு கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரம் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரமாகும்.. இந்த நாடுகள் பொருளாதாரம் மேம்பட்டால் அமெரிக்காவின் உலகப் பொருளாதார ஆதிக்கத்திற்கு அது  சவாலாக அமையலாம்.

உலக நாணயமாகப் பலநாடுகளின் நாணயங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற பிரெஞ்சு நி்தியமைச்சர் மைக்கேல் சப்பின் முன் மொழிவிற்கு பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் பேராதரவி தெரிவித்துள்ளன.

தற்போது உலக நாணயமாக இருக்கும் அமெரிக்க டொலரை அதன் நிலையில் இருந்து அகற்றினால் டொலர் தனது பெறுமதியைப் பெருமளவு இழக்க வேண்டிவரும். அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் உடனடியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  அமெரிக்காவில் பெரும் பணவிக்க்கம், வட்டி வீத அதிகரிப்பு போன்றவை ஏற்படலாம்.

ஜேர்மன் அதிபர் அஞ்செலா மாக்கெல்லை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்ததால் ஜேர்மானியர்கள் ஆத்திரப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸுடன் நெருக்கமாக இணைந்து செயற்படும் ஜேர்மனியும் டொலருக்கு எதிரான நடவடிக்கையில் இணையலாம். யூரோ நாணயத்தை உலக நாணயமாக மாற்ற வேண்டும் என்பது ஜேர்மனியின் நீண்டகாலத் திட்டமாகும்.

Wednesday, 9 July 2014

இரசியாவைப் புட்டீன் எங்கு கொண்டு செல்கின்றார்?

இரசிய மக்களிடையே உள்ள பல தேசியவாதிகள் இரசியா மீண்டும் உலக அரங்கில் முன்னணி வகிக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். இவர்களில் பலர் தமது விருப்பத்தை அதிபர் விளடிமீர் புட்டீன் நிறைவேற்றுவார் என நினைக்கிறார்கள். இவர்களில் பலர் உலக அரங்கில் அமெரிக்கா செலுத்தும் ஆதிக்கத்தை வெறுக்கிறார்கள். 73 விழுக்காடு இரசியர்கள் இரசியா உலக அரங்கில் போதிய அளவு மதிக்கப்படுவதில்லை என நினைக்கின்றார்கள். 72 விழுக்காடு மக்கள் விளடிமீர் புட்டீனில் மரியாதை வைத்துள்ளார்கள். இரசியாவில் நடக்கும் ஊழல் நிறைந்த ஆட்சியையும் ஒரு சில பணமுதலைகளின் ஆதிக்கத்தையும் பலர் நன்கு அறிவர்.

ஏற்கனவே சிரியாவிலும் உக்ரேனிலும் தனது கைவரிசையைக் காட்டிய இரசியா இப்போது ஈராக்கிலும் தனது வலுவை நிரூபிக்க முயல்கின்றது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து செயற்படும் சியா முசுலிம்களின் அரசு ஆட்டக் கண்டு கொண்டிருக்கையில் ஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌரி அல் மலிக்கி ஐக்கிய அமெரிக்காவிடம் கேட்ட உதவி கிடைக்காமையினால் இரசியாவின் பக்கம் திரும்பினார். தீவிரவாதக் குழுக்களை அடக்க விமானத் தாக்குதல் பெரிதும் பயன்படும். இதற்காக அல் மலிக்கி கேட்ட விமானங்களை உடன் வழங்க இரசிய அதிபர் புட்டீ ஒத்துக் கொண்டார்.

ஈராக்கியத் தலைமை அமைச்சர் அல் மலிக்கி கேட்ட உதவிகளை எப்படி நிறைவேற்றுவது என்று வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் பராக் ஒபாமா ஆலோசித்துக் கொண்டிருக்கையில் இரசியாவின் ஐந்து எஸ்யூ-25 போர் விமானங்கள் விமானிகளுடன் ஈராக் போய்ச் சேர்ந்து விட்டது. இரசியா உடனடியாக  இரசியா எம்.ஐ-28, எம்.ஐ-35, உழங்கு வானூர்திகளையும் ஈராக்கிற்கு அனுப்பவிருக்கிறது. இரசிய விமானிகள் எஸ்யூ-25  விமானங்களை ஓட்ட மாட்டார்கள் என்று இரசியா தெரிவித்தமை நம்பக்கூடியதாக இல்லை. இரசியாவின்  எஸ்யூ-25 போர் விமானங்களை ஓட்டக் கூடிய விமானிகள் எவரும் ஈராக்கில் இல்லை. இப்படிப்பட்ட போர் விமானங்களை ஈராக்கிய விமானப் படையினர் 2003-ம் ஆண்டின் பின்னர் பாவித்தது இல்லை. சதாம் ஹுசேயின் விமானப்படையினர் பாத் கட்சியினர் என்பதால் அவர்கள் இப்போது ஈராக்கிய விமானப் படையில் இல்ல்லை. பலர் எதிரணியில் சுனி இசுலாமியப் போராளிகளான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் அவர்கள் இணைந்து இருக்கின்றார்கள். புதிதாக  எஸ்யூ போர் விமானங்களை ஓட்டுவதற்கு பயிற்ச்சியளிக்க பல மாதங்கள் எடுக்கும். இதனால் இரசிய விமானிகளே ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் மீதும் அவர்களினது நிலைகள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டும். ஏற்கனவே ஈராக்கில் அமெரிக்காவினதும் ஈரானினதும் ஆளில்லாப் போர் விமானங்கள் பறந்து உளவுத் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் இரசியப் போர் விமானங்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்க் வேண்டும். உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து இரசியாவுடனான எல்லாவகையான படைத்துறைத் தொடர்புகளையும் அமெரிக்கா துண்டித்து விட்டது. அமெரிக்கப் படைத்துறையின் நிபுணர்கள் முன்னூறு பேர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

ஜூன் மாதக் கடைசிவாரம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் தொலைபேசியில் உரையாடினார்கள். அது பெரும்பாலும் உக்ரேனை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஈராக் தொடர்பாக விரிவான உரையாடல் நடக்கவுமில்லை. இதனால் ஈராக் தொடர்பாக அமெரிக்காவும் இரசியாவும் ஒருமித்த கருத்தில் இல்லை. ஈராக்கிற்கு இரசியா தனது போர் விமானங்களையும் விமானிகளையும் அனுப்பியது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை உறுப்பினர் ஒருவர் இரசியாவின் நகர்வு கரிசனைக்கு உரியது ஆனால் கலவரமடைய வேண்டிய ஒன்றல்ல என்றார்.  அமெரிக்கா அனுப்பவிருக்கும் F-16 போர் விமானங்களும் அபாச்சே ரக உழங்கு வானூர்திகளும் ஈராக்கிற்குப் போய்ச் சேர இன்னும் சில நாட்கள் எடுக்கலாம்.

ஈராக்கில் பராக் ஒபாமா கவனமாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கையில் விளடிமீன் புட்டீன் அதிரடியாகக் களத்தில் இறக்கியமை உலக அரசியலில் ஒரு சிந்தனையைத் தூண்டும் நிகழ்வாக அமைந்தது. ஈராக்கிற்கு விமானங்களை விமானிகளுடன் அனுப்பியமை இரசியாவிற்கு எந்தவிதக் கேந்திரோபாய நன்மைகளையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகிற்கு ஒரு செய்தியை அங்கு சொல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. அதாவது யாராவது உதவி என்று கேட்டால் இரசியா அதைத் துணிந்து செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றது என புட்டீன் உலகிற்கு உணர்த்த வருகின்றார். அவர் இரசியாவை இப்போது இருக்கும் நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாற்ற முயல்கின்றார். 1984-ம் ஆண்டு மிக்கேல் கோர்பச்சேவ் ஆரம்பித்து வைத்த "சீர்திருத்தம்" இரசியாவை திசை மாற்றிவிட்டது.

இரசியாவிற்கு ஒரு புது முகவரி தேவை
உலகை ஆள முயன்ற ஜேர்மனியர்கள் போரில் தோற்ற பின்னர் மற்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து இப்போது உலகின் முன்னணிப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பது போல் பனிப்போரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏன் இரசியாவால் அப்படி ஒரு நிலையை எடுக்க முடியாது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 1917-ம் ஆண்டு ஜார் மன்னரின் ஆட்சியை ஒழித்து லெனின் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்னும் இடைக்கால அரசை உருவாக்க முயன்றார். அவர் மறைவிற்க்குப் பின்னர் 1924-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜோசப் ஸ்டாலின் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை பட்டினி ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் திண்டாடினார். விவசாயிகள் மீது கடும் அடக்கு முறையைப் பிரயோகித்தார். பல விவசாயிகளைக் கொன்றார். அவரது ஆட்சியில் சோவியத் மக்கள் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். சோவியத்தின் உளவுத் துறையை உள்நாட்டிலும் வெளிநாடுகாளிலும் விரிவுபடுத்தினார். பொதுவுடமைக் கட்சியில் ஸ்டாலினிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த நிக்கிட்டா குருசேவ் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் பொதுவுடமைக் கட்சி முன்னணி உறுப்பினர்களை தண்ணியில்லாக் காடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பினார். குருசேவ் இரசியாவை தொழில்நுட்பத்தில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். ஸ்டாலினைப் போல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்காமல் குருசேவ் முக்கிய முடிவுகளை பொதுவுடமைக்கட்சியின் முன்னணித் தலைவர்களுடன் கலந்துரையாடி எடுத்தார். இருந்தும் கியூபாவில் அணுக்குண்டு தாங்கிய ஏவுகணைகளைக் குவித்தவமையை தானாகவே முடிவு செய்தார். ஆனால் அவர் புத்திசாலித்தனமாக நிலைமையைக் கையாண்டு துருக்கியில் அமெரிக்கா வைத்திருந்த அணுக் குண்டுகளை அகற்றச் செய்து கியூபாவில் இருந்த இரசிய அணுக் குண்டுகளையும் அகற்றினார். தொடர்ந்து வந்த பிரெஸ்னேவ் இரசியாவையும் சோவியத்தையும் உலகில் படைத்துறையில் முதல்தர நாடாக்கினார். படைத்துறைக்கு அரச வருமானத்தில் பெரும்பகுதி செலவு செய்யப்பட்டதால் இரசியா பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. பின்னர் வந்த மிக்கேல் கோர்பச்சேவிற்கு பொருளாதாரப் பிரச்சனை பெரும் பிரச்சனையானது. இரசியப் பொருளாதாரத்தையும் ஆட்சி முறைமையிலும் சீர் திருத்தம் செய்யக் கோர்பச்சேவ் முயன்றார். அது நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்ட கதையானது.  சோவியத் ஒன்றியம் என்னும் பெயரில் ஒன்றாக இருந்த நாடுகள் 1991-ம் ஆண்டு உடைந்து 15 நாடுகள் ஆகப் பிளவடைந்தன. பின்னர் 1998-ம் ஆண்டு இரசியா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதன்பின்னர் இரசியாவை மேற்கு நாடுகள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என விளடிமீர் புட்டீன் கருதினார். இரசியாவை மீண்டும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த வைப்பது அவரது தலையாய குறிக்கோளானது.
பெரு வல்லரசு நிலையை இழந்த இரசியா
1991-ம் ஆண்டின் பின்னர் இரசியா தனது பெருவல்லரசு என்ற நிலையை இழந்து விட்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா  கிறிமியப் பிரச்சனையின் போது இரசியாவை ஒரு பிராந்திய வல்லரசு என்று குறிப்பிட்டார். பெரு வல்லரசு என்பது படைவலு மட்டுமல்ல அதன் நட்பு நாடுகளையும் பொறுத்தது. முன்னாள் இரசியா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பான வார்சோ ஒப்பந்த நாடுகள் தமது ஒப்பந்தத்தை 1991-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடித்துக் கொண்டன. பின்னர் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் வார்சோ ஒப்பந்த நாடுகளும் இரசியாவிற்கு எதிராகத் திரும்பி நேட்டோ ஒப்பந்த நாடுகளுடன் இணைந்ததைத் தொடர்ந்து இரசியா தனது உலகப் பெருவல்லரசு என்ற நிலையை இழந்துவிட்டது. உலக அரங்கில் அதன் ஆதிக்கமும் குறைந்து விட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இரத்து அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்புரிமையும் கைவசமுள்ள அணுக் குண்டுகளும் இன்னும் இரசியாவை ஒரு வல்லரசாக வைத்திருகின்றது.

புட்டீனின் இரசியா
2000-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை இரசியாவின் அதிபராகவும் பின்னர் நான்கு ஆண்டுகள் இரசியாவின் தலைமை அமைச்சராகவும், 2012-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை மீண்டும் இரசியாவின் அதிபராகவும் கடமையாற்றும் முன்னாள் இரசிய உளவுத் துறை அதிபரான விளடிமீர் புட்டீன் இரசியாவை மீண்டும் உலக அரங்கில் முன்னிலைப்படுத்த முயல்கின்றார். இப்போது இரசியா ஒரு சில பண முதலைகளின் கைகளில் இருக்கின்றது. விளடிமீர் புட்டீனும் ஒரு பணமுதலை ஆவார். அவரது மொத்தச் சொத்து மதிப்பு எழுபது பில்லியன் (எழு நூறு கோடி) அமெரிக்க டொலர்களிலும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் எழுபத்தி ஒன்பது பில்லியன் டொலர் சொத்துக் கொண்ட உலகின் முன்னணிச் செல்வந்தரான பில் கேட்சின்  இணையானவர் எனக் கருதப்படுகின்றார். ஆனால் இரசியப் பொருளாதாரம் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றது. இரசியா கிறிமியாவை தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை புட்டீனின் செல்வத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் புட்டீன் இரசியப் பாராளமன்றம் தனக்கு வழங்கிய உக்ரேனில் படையெடுக்கும் அதிகாரத்தைத் திரும்பப் பெறச் செய்தார். ஆனாலும் அவர் உக்ரேனை விட்டு வைப்பதாக இல்லை. இரசியாவில் இருந்து இரகசியமாகப் படையினர் உக்ரேனுக்குள் எல்லை தாண்டிச் செல்வது தொடர்கின்றது.

ஒதுங்க நினைக்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் பொருளாதார வலுவும் படைவலுவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நட்புறவும் அதனை இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக வைத்துக் கொண்டிருக்கின்றது. 2008ம் ஆண்டிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் காண அதன் பாதுகாப்புச் செலவைக் குறைக்க வேன்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்கா எந்த ஒரு நாட்டுக்கும் படை அனுப்பி போர் செய்வதை இப்போது விரும்பவில்லை. இதை விளடிமீர் புட்டீன் ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றார்.

புட்டீனின் முதல் நகர்வு
ஈரக்கில் அமெரிக்கப் படை எடுப்பு, லிபியாவில் மும்மர் கடாஃபியைப் பதவியில் இருந்து நீக்கியமை ஆகியவற்றை அமெரிக்கா செய்தபோது இரசியா வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையை இரசியா எதிர்க்கவில்லை. உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை புட்டீன் முதல் தடவையாக சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவித்த போது அரங்கேற்றினார். அமெரிக்காவை சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கை எடுக்காமல் தடுத்தார். இதற்கு அவர் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை வரை தனது கைவரிசையைக் காட்டினார். அதைத் தொடந்து உக்ரேனிலும் தற்போது ஈராக்கிலும் இரசியாவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துகின்றார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...