Wednesday, 19 July 2017

கடற்படைகளின் ஆதார (logistic) அல்லது இருப்பியக கப்பல்கள்



கடற்படைகளில் பெரிய கப்பல்களாக இருப்பவை ஆதாரக் (இருப்பியக்கக்) கப்பல்களே. கடற்படைக்குத் தேவையானவற்றை வழங்குவதும் அவை ஆபத்தில் சிக்கியிருக்கும்போது மீட்பு நடவடிக்கைகளில் முன்னிற்பதும் ஆதாரக் கப்பல்களின் முக்கிய பணிகளாகும். இது கடலில் மிதக்கும் களஞ்சியசாலை போன்றது. மனிதன் செய்த கட்டுமானங்களில் கப்பல்களே பெரியவை. அவற்றில் பெரியவை ஆதாரக்கப்பல்களாகும். உலகின் எந்தப் பகுதிக்கும் அவை செல்லக்கூடியவை. அவற்றை இயக்குவதற்கான செலவு இயலக் கூடிய அளவிற்கு குறைக்கப்படும். பல நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது ஆதாரக் கப்பல்கள் உதவிகளும் மீட்புப் பணிகளும் அவசர உணவு விநியோகங்களும் செய்வதுண்டு. குண்டூசியில் இருந்து விமான உதிரிப்பாகங்கள் வரை ஆதாரக் கப்பல்கள் விநியோகம் செய்ய வேண்டும். போருக்கும் படையினருக்கு தேவையானவற்றின் இருப்பு (Stock) தொடர்ச்சியாக மீள்நிரப்பு செய்யும் இயக்கம் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தமிழில் logistics ஐ தமிழில் இருப்பியக்கம் என அழைப்போமாக.

ஆதார (இருப்பியக்க) அதிகாரி (logistics officer)
ஆதார அதிகாரி என்பது கடற்படையில் முக்கிய பதவியாகும். ஆதாரக் கப்பல்களின் செயற்பாடுதிறனுக்கு இவர் பொறுப்பாவார். இந்த அதிகாரி நன்கு திட்டமிடக் கூடியவராக இருப்பர். களஞ்சிய முகாமைத்துவம், பாதீட்டுக்கு ஏற்பச் செயற்படுதல், எதிர்பாராத சூழல்களைச் சமாளித்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயற்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

சட்டம் முக்கியம்
ஒரு நாட்டின் கடலாதிக்கம் அதன் கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரைக்குமே செல்லுபடியாகும். அதைத் தாண்டிப் போகும் கப்பல்களை நெறிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் மரபொழுங்குச் சட்டம் (UN Convention on the Law of the Sea) இருக்கின்றது. அவற்றுக்கு ஏற்பவே கடற்படைகளின் ஆதாரக் கப்பல்களும் செயற்பட வேண்டும். அதன் படி எல்லா கப்பல்களுக்கும் ஏதாவது ஒரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். அந்த நாட்டின் தேசியக் கொடி அதில் பறக்கவிடப்பட வேண்டும்.

கடற்படை மற்றும் கடல்சார் படைக் கப்பல்களின் வகைகள்
Frigates என்னும் கப்பல்கள் மூவாயிரம் தொன் வரையிலான எடையுடையவை அவை எதிரியின் கலன்களில் இருந்து அதில் முக்கியமாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து கடற்படைக் கூட்டத்தை பாதுகாப்பதை பணியாகக் கொண்டவை. corvette கப்பல்கள் சிறியவையும் இலகுவானவையுமாகும். இலகுவில் செலுத்தக் கூடிய இந்த வகைக் கப்பல்கள் ஆழம் குறைந்த கடல்களில் சிறப்பாகச் செயற்படக் கூடியவை. பரவலாகப் பாவிக்கப்படுபவையும் பல பணிகளைச் செய்யக் கூடியவையும் Destroyers எனப்படும் நாசகாரிக் கப்பல்களே இவை தாக்குதலுக்கும் மற்றக் கடற்படைக் கலன்களைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. Cruisers எனப்படும் கப்பல்கள் அபரிமிதமான சுடுவலுக் கொண்டவை. அதிக அளவிலான ஏவுகணைகளை இவை தாங்கிச் செல்லும். Amphibious Assault Ships
என்னும் ஈரூடகக் கப்பல்கள் பெயருக்கு ஏற்ப நீரிலும் நிலத்திலும் செயற்படக் கூடியவை. எல்லாவற்றிலும் சிறிய வகைக் கப்பல்கள் Littoral combat ship எனப்படும் கரையோரத் தாக்குதல் கப்பல்கள். இவை ஆழம் குறைந்த கடற்கரையோரத்தில் செயற்படும் தாக்குதல் கப்பல்கள். கடைசியாக விமானம் தாங்கிக் கப்பல்கள் நடமாடும் விமானத் தளங்களாகும். தற்போது அமெரிக்கா பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லாமல் இயங்கக் கூடிய படகுகளை உருவாக்கி வருகின்றது. இவை பெரும்பாலும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இயக்கக் கூடிய இந்தப் படகுகள் அமெரிக்காவின் கடலாதிக்கத்தை நிலை நிறுத்தும் என நம்பப்படுகின்றது. இந்த எல்லா வகைக் கப்பல்களுக்கும் தேவையானவற்றை வழங்குவதே ஆதாரக் கப்பல்களாகும்.

இரசிய ஆதார (இருப்பியக்க) கப்பல்
இரசியா தனது கடற்படைக்கு வலுச் சேர்க்கும் வகையில் புதிய மூன்று ஆதாரக் (logistic) கப்பல்களை களத்தில் இறக்கவுள்ளது. இவை பனிப்பிரதேசத்திலும் செயற்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரசியாவின் JSC Spetssudoproekt Design Bureau of St Petersburg நிறுவனம் இப்புதிய கப்பல்களை வடிவமைக்க இரசியாவின் Severnaya Verf Shipyard என்னும் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனம் அவற்றை உருவாக்கியுள்ளது. இரசியாவில் இருந்து மிகத் தொலை தூரம் சென்று செயற்படக்கூடியவையாக அவை இருக்கும். இந்தக் புதிய ஆதரக்கப்பல்களை இரசியா The Elbrus-class கப்பல்கள் என வகைப்படுத்தியுள்ளது. ஆழ்கடல்களிலும் தொலைவில் உள்ள துறை முகங்களிலும் உள்ள இரசியக் கடற் படையினருக்குத் தேவையான படைக்கலன்கள், குடிநீர், போன்றவற்றை எடுத்துச் செல்லவும் அவற்றைக் கொண்ட பெரும் களஞ்சியம் போல் கடலில் செயற்படவும் இரசியாவின் புதிய ஆதாரக் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் வழங்கவும் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்கலன்களையும் படையினரையும் மீட்கும் பணியிலும் இந்த ஆதாரக் கப்பல்கள் சிறப்பாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது.

அமெரிக்க ஆதாரக் (இருப்பியக்க) கப்பல்கள்
உலகெங்கும் பல கடற்படைத் தளங்களையும் கடல்சார் படைத் தளங்களையும் வைத்திருக்கும் அமெரிக்கா பத்து விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. அமெரிக்காவின் உலகெங்கும் உள்ள படையினரின் தேவைகளின் 90 விழுக்காடு ஆதாரக் கப்பல்கள் மூலமே விநியோகிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் ஆதாரக்கப்பல்கள் Logistic Support Vessels (LSVs) என அழைக்கப்படுகின்றன. அமெரிக்காவிடம் இருக்கும் ஆதாரக் கப்பல்கள் General Frank S. Besson என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு நிர்மானிக்கப்பட்டன. பனிப்போர் உச்சத்தில் இருக்கும் போது ஐக்கிய அமெரிக்கா இவற்றில் ஆறு  கப்பல்களை உருவாக்கியது. இவை 273 அடி நீளமும் 60 அடி அகலமும் உடையவை. இவை அமெரிக்கத் தரைப்படையின் எந்தப் பெரிய படைக்கலன்களையோ வாகனங்களையோ காவிச் செல்லக் கூடியவை. அவற்றைத் தூக்கவும் இறக்கும் தேவையான தூக்கிகள் அந்த ஆதாரக் கப்பல்களிலேயே இருக்கின்றன. வசதிகளற்ற இறங்கு துறைகளிலும் அவற்றால் படைகலன்களையும் வாகனங்களையும் இறக்கவும் ஏற்றவும் முடியும். இரட்டை அடுக்குகளைக் கொண்ட 20 அடி நீளமான 82 கொள்கலன்களை (containers) அவை தாங்கிச் செல்லக் கூடியவை. அத்துடன் ஒரு Boeing C-17 fuselage விமானத்தையும் தாங்கிச் செல்லும். இந்த ஆதாரக் கப்பல்களின் தளப்பரப்பு (deck area) 10,500 சதுர அடிகளாகும். 2000-ம் ஆண்டளவில் General Frank S. Besson என வகைப்படுத்தப்பட்ட ஆதாரக் கப்பல்களில் இருந்து மேம்படுத்தப்பட்ட கப்பல்களை அமெரிக்கா உருவாக்கியது. USAV SSGT Robert T. Kuroda (LSV-7), USAV Major General Robert Smalls (LSV-8) என்ற இரு கப்பல்கள் அவையாகும். General Frank S. Besson கப்பல்களிலும் பார்க்க 43 அடிகள் நீளமானவை இவையாகும். புதிய கப்பல்களின் நீரியக்கமும் (hydrodynamic) மேம்படுத்தப்பட்டன. செலுத்தும் வலுவும் இரண்டு மடங்காக்கப்பட்டது. கடுமையான கடல் சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடிக்கக் கூடியவையாகவும் புதிய ஆதாரக்கப்பல்களை அமெரிக்கா வடிவமைத்தது. அவை தொடர்ந்து 6,500 மைல்கள் பயணிக்கக் கூடியவை. ஒவ்வொன்றும் 26மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. 2014-ம் ஆண்டு தனது ஆதாரக் கப்பல்களுடன் இணைந்து செயற்படக் கூடிய பயணிக்கும் கடற்படைத் தளங்கள் (Expeditionary Mobile Base) என்னும் பெரியவகைக் கப்பல்களையும் அமெரிக்கா உருவாக்கியது. பழைய எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா பயணிக்கும் கடற்படைத் தளங்களை உருவாக்கியது.

பிரித்தானியாவின் ஆதாரப் படைப்பிரிவு
மற்ற நாடுகள் ஆதாரக் கப்பல்கள் எந்த அளவு பெரியதாக இருக்க வேண்டும் என் பதில் கவனம் செலுத்த பிரித்தானியக் கடற்படையினர் செயற் திறனில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆதரக் கப்பல்கள் போர்ச் சூழலில் துரிதமாக விநியோகங்களை மேற்கொள்வது முக்கியமானதாகும். இதற்காக பிரித்தானியக் கடற்படையில் Commando Logistics Regiment என்ற சிறப்பு ஆதாரப் படையணி இருக்கின்றது. மூன்று பிரிவுகளில் மொத்தம் 780 ஆளணியைக் கொண்ட இந்தப் படையணி பச்சை யாளி (Green Dragon) என்னும் குறியீட்டுப் பெயருடன் சிறப்புப் பயிற்ச்சிகளை மேற்கொள்ளும். கடற்படைக்குத் தேவையான வாகனங்கள், படைக்கலன்கள், சுடுகலன்கள், படையினருக்கான உணவு மருத்துவ உதவி போன்றவற்றை மிகத் துரிதமாக மேற்கொள்ளும் பணியை மிகச் சிறப்பாகச் செய்யக் கூடிய வகையில் பச்சை யாளி என்னும் பயிற்ச்சி வழங்கப்படுகின்றது. நூறு படை வாகனங்கள் இதில் ஈடுபடுத்தப்படும். சத்திர சிகிச்சை நிபுணர்கள் காயப்பட்ட படையினருக்கு அவசர சிகிச்சைகளை வழங்குவதும் இப்பயிற்ச்சியில் அடங்கும். தேவை ஏற்படின் போர் முனையின் முன்னணி நிலைகளுக்கும் சென்று தேவையானவற்றை வழங்குவதும் இப்பயிற்ச்சியில் அடங்கும். பிரித்தானியாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பலான HMS Queen Elizabeth இல்3010 சிறிய அறைகள்(compartments) ஆதாரத் தேவைகளுக்கா உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன ஆதாரக் கப்பல்கள்
சீனாவின் ஆதாரக் கப்பலான குவாங் குவா கௌ உலகின் மிகப்பெரியக் கப்பல்களில் ஒன்றாகும். இது 693 அடி நீளமும் 223 அடி அகலமும் கொண்டது. 98,000 தொன் எடையுள்ளது. கப்பல் நிர்மானத் துறையில் சீனாவின் பாரிய முன்னேற்றத்திற்கு குவாங் குவா கௌ ஆதாரக் கப்பல் சான்று சொல்கின்றது சீனாவின் ஆதாரக் கப்பல் ஆழ்கடல் துளையிடல், ஆழ்கடலில் கடற்படுக்கையில் அகழ்வு வேலைகள் செய்தல், தற்காலிக கடற்படைத் தளங்களை நிர்மணித்தல் போன்றவற்றைச் செய்யக் கூடியது. அத்துடன் பலவித அனர்த்த நிவாரண நடவடிக்கைகளையும் செய்யக் கூடியது. இது வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலையே தன்னுள் வைத்துத் தாங்கிச் செல்லக் கூடியது. சீனாவின் பொருளாதார வலிமையும் தொழில்நுட்ப மேம்பாடும் குவாங் குவா கௌ போன்ற பாரிய ஆதராக கப்பல்களை உருவாக்கும் திறனை வழங்கின. அதன் மூலம் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் சீனக் கடற்படை எதிர்காலத்தில் செயற்படவும் ஆதிக்கம் செலுத்தவும் குவாங் குவா கௌ ஆதாரக் கப்பல் வழிசமைக்கும். உலகின் மிகப்பெரிய கப்பல்களில் குவாங் குவா கௌ ஆதாரக் கப்பலும் ஒன்றாக இருப்பதால் அதன் அசையும் வேகம் குறைவாக உள்ளது. இதனால் ஒரு போரின் போது அவசரத் தேவைகளை இவற்றால் உரிய நேரத்தில் வழங்க முடியாமல் போகலாம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் இது பத்தாண்டுகளுக்கு மேல் நின்று பிடிக்காது எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. 

கடல்சார் படைகள்
ஆதாரக்கப்பல்களின் சேவை கடற்படை மற்றும் கடல்சார் படைகளுக்கு (Marines) மட்டுமல்ல தரைப்படைக்கும் விமானப் படைக்கும் பல சந்தர்ப்பங்களில் தேவைப்படும். ஆனால் அவற்றின் சேவைகள் மிக அவசியாமகத் தேவைப்படுவது கடல்சார் படைகளுக்கே. போர்க்கப்பல்கள், விமானங்கள், நிலத்தில் பயணிக்கும் தாங்கிகள் பார ஊர்திகள் எனப் பலதரப்பட்ட படைக்கலன்களுடன் கடல்சார் படைகள் செயற்படும். முன்னணி வல்லரசு நாடுகளின் கடல்சார் படைகள் தமது நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நாடுகளில் தமது படை நடவடிக்கையில் ஈடுபடும் போது அவற்றிற்கு ஆதாரக் கப்பல்களின் சேவை மிக அவசியமானதாகும்.

உலக கடலாதிக்கப் போட்டியில் ஆதாரக் கப்பல்களின் சேவை இன்றியமையாதவையாகும் எனத் துணிந்து சொல்லலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...