கொரியப் போர்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத்
ஒன்றியமும் நேரடியாக மோதிக் கொண்டது 1950-ம் ஆண்டில் இருந்து 1953-ம்
ஆண்டுவரை நடந்த கொரியப் போரிலாகும். முதன் முறையாக நாய்ச் சண்டை எனப்படும்
போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டைகள் கொரியப் போரில் இரு
நாடுகளுக்கும் இடையில் நடந்தன. கொரியப் போரில் சீனாவும் பங்கு
கொண்டிருந்தது. ஜப்பானும் கொரியப் போரில் அதிக அக்கறை காட்டியது.
கொரியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றபடியால் இரண்டாம் உலகப்
போரால் களைத்துப் போயிருந்த நாடுகள் கூட கொரியப் போரில் அதிக அக்கறை
காட்டின. வட கொரியா தென் கொரியப் போர் கொரியாவை ஆக்கிரமித்து முழுமையாக
கைப்பற்ற இருந்த நிலையில் உருவானது. மூன்று ஆண்டுகள் கழித்து வட கொரியா
தென் கொரியாவை விட்டு வெளியேறியது. கொரியப் போர் முடிந்த பின்னரும் வட
கொரியா தென் கொரியாவை தன்னுடன் மீண்டும் இணைக்கும் ஆர்வத்துடன்
இருக்கின்றது.
மூன்று தலைமுறை
கொரியாவை மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் ஆண்டு வருகின்றது எனச் சொல்லும் அளவிற்கு கிம் உல் சூங் முதலிலும் பின்னர் அவரது மகன் கிம் ஜொங் இல்லும் அவரைத் தொடர்ந்து அவர மகன் கிம் உல் ஜொங்கும்
வடகொரியாவில் அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். முதலாமவரான கிம் உல் சூங்
கட்சியில் அதிக கவனம் செலுத்தினார். சிறந்த பேச்சாளரான இவர் மக்கள் முன்
தோன்றி சிறப்பாக உரையாற்றக் கூடியவர். ஆனால் இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த
மகன் கிம் ஜொங் படைத்துறையில் அதிக கவனம் செலுத்தினார். வட கொரியாவில் ஒரு
அணுக் குண்டு உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதனால் வட கொரியா தனது
முதலாவது அணுக்குண்டு வெடிப்புச் சோதனையில் 2006-ம் ஆண்டு வெற்றி கண்டது.
இரண்டாம் கிம் ஜொங் இல் பொது இடங்களில் உரையாற்றுவது குறைவு. ஆனால்
மூன்றாம் கிம் உல் ஜொங் தனது தந்தையைப் போல் அல்லாமல் பேரனைப் போல் பொதுத்
தொடர்பில் அதிக அக்கறை காட்டியதுடன் வட கொரியாவின் படை வலுவை
முன்னேற்றுவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்.
வட - தென் கொரிய முறுகலின் பின்னணி
1910இல் இருந்து 1945வரை ஜப்பானிய அட்டூழிய ஆட்சிக்குக் கீழ் இருந்த
கொரியாவை ஜப்பானிடம் இருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பிடுங்கிப்
பங்கு போட்டுக் கொண்டன. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாகப்
பிரிந்தன. 1950இல் அமெரிக்காவிற்காகவும் சோவியத்திற்காகவும் இரு
கொரியாக்களும் பலமாக மோதிக் கொண்டன. இருபது இலட்சம் பேர் பலியாகினர்.
1953-ல் போர் முடிவுக்கு வந்தது. பின்னர் இரு நாட்டுக்கும் இடையில்
தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வருகிறது. தென் கொரியா பொருளாதாரத்தில்
பெரும் வளர்ச்சி கண்டு ஆசியாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த இரண்டு
நாடுகளில்( மற்றது ஜப்பான்) ஒன்றாகத் திகழ்கிறது. இரு கொரியாக்களும் ஒன்றை
ஒன்று பெரும் பகையாளிகளாகக் கருதுகின்றன. மோசமான பொருளாதரத்தைக் கொண்ட வட
கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. நீண்ட தூர
ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. தென் கொரியா
அமெரிக்காவிடமிருந்து பெருமளவு படைக்கலனகளை வாங்கி வைத்திருப்பதுடன்
அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுகிறது. தென் கொரியாவில் அமெரிக்க
படைத்தளமும் இருக்கிறது. 1953இன் பின்னர் மிகவும் கொதி நிலையில் இருக்கும்
எல்லையாக வட-தென் கொரிய எல்லை இருந்து வருகிறது. வட கொரியா தனது நாட்டின்
பொருளாதாரப் பிரச்சனையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது
எனப்படுகிறது. இப்படிப் போட்டியுள்ள இரு நாடுகளில் ஒன்று அணுக் குண்டு
வெடிப்புப் பரிசோதனைகளையும் நடுத்தூர மற்றும் தொலை தூர ஏவுகணைகளைப்
பரிசோதனை செய்வதும் உலகை உலுக்கியுள்ளது. வட கொரியாவின் அணுக்குண்டு
தயாரிப்பைத் தொடர்ந்து அதன் மீது அமெரிக்காவும் தென் கொரியாவும்
பொருளாதாரத் தடையை விதித்தன. இது வட கொரியாவை மேலும் ஆத்திரப்படுத்தியது.
வட கொரிய அணுக்குண்டு வரலாறு
1961இல் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வட கொரியா தனது அணுத் தொழில்
நுட்பத்தை தொடக்கியது. 1961இல் அணுமின் உலையை வட கொரியா உருவாக்கியது.
1985இல் மேலும் அதை அபிவிருத்தி செய்தது. வட கொரியாவின் அணுத் தொழில்
நுட்பத்தை விரும்பாத அமெரிக்காவும் தென் கொரியாவும் 1994இல் வட கொரியாவுடன்
ஒரு ஒப்பந்தம் செய்து வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி இரு
மென்னீர் அணு உலைகளை அமைத்துக் கொடுத்தன. பின்னர் 1991இல் வட கொரியா
பாக்கிஸ்த்தானிய அணு விஞ்ஞானி A Q கானிடமிருந்து யூரேனியம் பதப்படுத்தும்
தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. 1998இல் ஏவுகணைத்தொழில் நுட்பத்தையும்
விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது.
2002இல் வட கொரியா அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் 1994இல் செய்து
கொண்ட ஒப்பந்தத்தை மீறி அணுக் குண்டுகளை உருவாக்க ஆராய்ச்சிகள் செய்வதாக
அமெரிக்கா குற்றம் சாட்டியது. 2003இல் வட கொரியா பன்னாட்டு அணுப்படைக்கலன்
பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 2006 வட
கொரியா தனது முதலாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத்
தொடர்ந்து அறுவர் குழுப் பேச்சுவார்த்தை எனப்படும்
அமெரிக்கா, சீனா, தென் கொரியா, இரசியா யப்பான் ஆகிய நாடுகளுடன் வட கொரியா
ஒரு அணுக்குண்டு தொடர்பான பேச்சு வார்த்தையை மேற்கொண்டது. 2007வரை தொடர்ந்த
இந்தப் பேச்சு வார்த்தை இறுதியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை
நிறுத்துவதாகவும் பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில்
மீளிணைவதாகவும் அறிவித்தது. பதிலாக வட கொரியாவிற்கு நிதி உதவி செய்வதாகவும்
உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து 2008இல் வட கொரிய தனது அணு உலை ஒன்றை
மூடியது. 2009இல் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய வட கொரியா
அறுவர் குழுப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது. 2009 ஜூனில் வட கொரியா
தனது இரண்டாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. உலகப் பொருளாதார
வீழ்ச்சியால் பல வட கொரியர்கள் வறுமையால் வாடினார்கள். இதைத் தொடர்ந்து
2012 பெப்ரவரியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி
அமெரிக்காவில் இருந்து உணவைப் பெற்றுக் கொன்டது. 2012 டிசம்பரில் வட கொரியா
தனது பலதட்டு ஏவுகணையை விண்ணில் செலுத்த முயன்றது. அது இரண்டு நிமிடத்தில்
வெடித்துச் சிதறியது. 2013 மார்ச்சில் வட கொரியா தனது மூன்றாவது
அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து வட கொரியாவிற்கு
எதிரான புதிய தடைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின்
நிறைவேற்றப்பட்டது. வட கொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பைத்
தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவில் தனது படைபலத்தை அதிகரித்து
வருகிறது. அமெரிக்கா தனது படை நகர்த்தல்கள் எதையும் இரகசியமாகச்
செய்யவில்லை. வட தென் கொரிய முறுகல் நிலை ஒரு புறம் கிழக்குச் சீனக் கடலில்
சீன ஜப்பான் முறுகல் மறுபுறம் என யப்பானியக் கடலும் மஞ்சள் கடலும் கொதி
நிலையில் இருக்கையில் ஒரு தவறான படை நடவடிக்கை பெரும் மோதலை உருவாக்காமல்
இருக்கவே ஐக்கிய அமெரிக்கா தனது தென் கொரியாவைப் பாதுகாக்கும் படை
நகர்த்தல்களைப் பகிரங்கமாகச் செய்து வருகிறது. அமெரிக்காவின் நவீனரக
விமானங்கள் தனகு கிழக்குக் கொல்லைப் புறத்தில் நடமாடுவதை சீனா
விரும்பவில்லை. ஆனால் வட கொரியா ஒரு அணுக்குண்டு நாடாக மாறுவதை அமெரிக்கா
ஒரு போதும் அனுமதிக்காது. வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சீனா
தடுக்காமல் இருப்பது பல படைத்துறை வல்லுனர்களை ஆச்சரியதில் ஆழ்த்தியுள்ளது.
கட்சியில் தனது பிடியை இறுக்கிய கிம் உல் ஜொங்
பொதுவுடமை நாடுகளில் பாராளமன்றத்திலும் பார்க்க கட்சியின் பேரவை அதிக
அதிகாரங்களைக் கொண்டது. ஆனால் வட கொரியாவில் அதன் அதிபர் கிம் உல் ஜொங்
உச்ச அதிகாரங்களைக் கொண்டவராகத் திகழ்கின்றார். கடந்த 36 ஆண்டுகளாக நடக்காத
கொரியத் தொழிலாளர்கள் கட்சியின் பேரவைக் கூட்டம் 2016-ம் ஆண்டு மே மாதம்
6-ம் திகதி தொடங்கி நடந்தது. பொதுவாக பொதுவுடமை ஆட்சி நாடுகளில் பேரவைக்
கூட்டத்தில் புரட்சிகர மாற்றங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால்
2016 மே மாதம் தொடங்கிய வட கொரிய தொழிலாளர்களின் கட்சியின் பேரவைக்
கூட்டத்தில் பாரிய முடிவுகள் எடுக்கப் படும் என எதிர்பார்க்கப் பட்டது.
உலகிலேயே அதிக அளவு அரசுத் தலையீடு உள்ள பொருளாதாரமானமாக வட கெரியா
இருக்கின்றது. வியட்னாமிலும் சீனாவிலும் நடந்தது போன்ற பொருளாதாரச்
சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்படும் என பெரிதும் நம்பப்பட்டது. ஆனால்
பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிவித்த சோவியத் ஒன்றியத்திற்கும் அதன்
அதிபர் கோர்பச்சோவிற்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றி கிம் உல் ஜொங்
நன்கறிவார். ஏற்கனவே படைத் துறையில் தனது பிடியை இறுக்கிக் கொண்ட கிம் உல்
ஜொங் கட்சியிலும் தனதி பிடியை வலுப்படுத்த பேரவைக் கூட்டத்தைப்
பயன்படுத்திக் கொண்டார். அத்துடன் வட கொரியா படைத்துறையில் அடைந்து
கொண்டிருக்கும் முன்னேற்றத்தைப் பறைசாற்ற பேரவைக் கூட்டம் பயன்
படுத்தப்பட்டது. ஆனால் கூட்டத்தின் முக்கிய அம்சமாக ஒரு ஐந்தாண்டுத்
திட்டம் தயாரிக்கப் பட்டது. அதன்படி வட கொரியாவின் பொருளாதாரத்தையும்
படைத்துறையையும் ஒன்றாக அபிவிருத்தி செய்வதாக முடிவு செய்யப்பட்டது
சீனாவின் கவசம்
.கொரியத் தீபகற்பம் வட கொரியாவையும் தென் கொரியாவையும் கொண்டது. வட
கொரியா சீனாவுடன் எல்லையைக் கொண்டது. இந்த எல்லை கொரியத் தீபகற்பத்தின் வட
மேற்குப் பகுதியாகும். கொரியத் தீபகற்பத்தின் வடக்கில் ஜப்பானியக் கடலும்.
தெற்கில் மஞ்சள் கடலும் தென் கிழக்கில் கொரிய நீரிணையும் இருக்கின்றன.
ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா இரசியா ஆகியவற்றிடமிருந்து
தனித்தனியாகவும் கூட்டாகவும் சீனாவிற்கு வரக் கூடிய அச்சுறுத்தல்களுக்கு
ஒரு பாதுகாப்புக் கவசமாக வட கொரியா இருக்கின்றது. இந்தக் கவசத்தை இழக்க
சீனா தயாராக இல்லை. இதனால் சீனா வட கொரியா ஒரு பொருளாதார வீழ்ச்சியைச்
சந்திக்காமல் இருக்க உதவிக் கொண்டே இருக்கின்றது.
ஒலிபெருக்கிகளூடான பரப்புரை
வட கொரியாவும் தென் கொரியாவும் எல்லைகளில் ஒலி பெருக்கிகள் மூலம்
ஒன்றிற்கு எதிராக மற்றது பரப்புரை செய்வதுண்டு. இப்படிப்பட்ட பரப்புரைகள்
செய்து ஒன்றை ஒன்று ஆத்திரப்படுத்துவதில்லை என 2004-ம் ஆண்டு
உடன்பாட்டுக்கு வந்தன. ஆனால் 2015ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி வட கொரியப்
படையினர் வைத்த கண்ணி வெடிகளால் தென் கொரியப் படையின் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து தென் கொரியா தனது ஒலிபெருக்கிகளூடான பரப்புரையைத் தொடங்கியது.
தென் கொரியாவின் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும்
டிவிடிக்கள் மூலமும் மெமரி ஸ்ரிக் மூலமும் வட கொரியாவிற்குக்
கடத்தப்படுவதால் வட கொரியாவிலும் பார்க்க தென் கொரியா பொருளாதார ரீதியில்
சிறப்பாக இருக்கின்றது என வட கொரியர்கள் உணர்ந்து அதனால் தமது நாட்டை
வெறுக்கின்றார்கள் என வட கொரிய அரசு அச்சமடைந்துள்ளது.
தென் கொரியாவின் ஆத்திரம்
வட கொரியாவை ஒரு அணுப் படைக்கலன் கொண்ட ஒரு நாடாக நாம் ஒரு போதும்
ஏற்கப் போவதில்லை என்கின்றது தென் கொரியா. இரண்டு நாடுகளினதும் பொருளாதார
நிலைமை மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் போல் இருக்கின்றது.
ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டும் தான் வளர்ச்சியடைந்த
நாடுகள். வட கொரியாவின் அணுப்படைக்கலன்கள் உற்பத்தியாலும் ஏவுகணை
உற்பத்தியாலும் தென் கொரியாவிலும் பார்க்க அதிக கரிசனை கொண்ட நாடாக
ஜப்பான் இருக்கின்றது. 1910-ம் ஆண்டில் இருந்து 1945-ம் ஆண்டுவரை ஜப்பான்
கொரியாவை ஆண்ட போது செய்த கொடுமைகளை கொரியர்கள் மறக்கவில்லை. வட கொரியா
தன்னைப் பழிவாங்குமா என்ற் அச்சம் ஜப்பானிடம் இருக்கின்றது. 2016- மார்ச்
மாதம் வட கொரியாவின் அணுக்குண்டுப் பரிசோதனையை அடுத்து ஐநாவினால் கொண்டு
வரப்பட்ட வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை சமாளிக்கக் கூடிய
உத்திகள் எதுவும் வட கொரியாவின் ஐந்து ஆண்டுத் திட்டத்தில் இருக்கவில்லை.
பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளைச் சமாளிக்க மக்களுக்கு
பங்கீட்டு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்ப்டுகின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் ஊட்டச் சத்து இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை
32விழுக்காட்டால் அதிகரித்துள்ளது.
போச்சே போச்சு
அணுக்குண்டுகள் செய்த வட கொரியாவால் அவற்றைத் தாங்கிச் செல்லக்கூடிய
ஏவுகணைகளை இதுவரை உருவாக்க முடியவில்லை. ஆனால் பல ஏவுகணைப் பரிசோதனைகளைத்
தொடர்ந்து செய்து அது எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருக்கின்றது. 2016
ஏப்ரல் மாதம் 27-ம் 28-ம் திகதிகளில் வட கொரியா இரண்டு ஏவுகணைகளைப்
பரிசோதித்தது. இரண்டும் புஸ்வாணமாகிப் போனது. முஸ்டான் என்னும் நடுத்தரத்
தூர ஏவுகணைகளைளே வட கொரியா பரிசோதிக்கப்பட்டுப் பிழையாகிப் போனது என தென்
கொரியா சொல்ல அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இந்த ஏவுகணைப் பரிசோதனைகள்
வெற்றியடைந்திருந்தால் அது 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ம் திகதி ஆரம்பமான
பேரவைக் கூட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். உலக அரங்கிலும் பெரும்
அதிர்வலைகள் உருவாகியிருக்கும். வட போச்சே!!!