Wednesday, 29 March 2017

தேசியவாதங்களும் தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும்

முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் பிழைத்துப் போகின்ற வேளைகளில் அந்தக் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்காக நடக்கின்ற பிழைகளுக்கு வேறு காரணங்களை காட்டி வெற்றி பெறுவது முதலாளித்துவவாதிகள் தொடர்ந்து செய்யும் செயல். இனவாதம், மத மோதல் போன்றவை அவர்கள் விரும்புக் கருவிகள். 2007-ம் ஆண்டின் பின்னர் உருவான பொருளாதார வீழ்ச்சிக்கு குடிவரவையும் வளர்முகநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியும் காரணம் என தொடர்ந்து முன் வைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே தாழ் நிலையில் வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மொத்த கடன் தொகையான 20ரில்லியன் டொலர்களில் சினாவின் பங்கு 1.157ரில்லியனும், ஜப்பானின் பங்கு 1.136 ரில்லியனுமாகும். 

பணவீக்கம் அதிகரிக்காமையும்(Deflation) மீள்வீக்கமும் (Reflation)
கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரிக்காமை (Deflation) பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தது. இப்போது கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி அதிகரிப்பு பல நாடுகளில் செய்யப்படுகின்றது. இது மீள்வீக்கம் (Reflation) என அழைக்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு தீர்க்கப்பட்டு இப்போது உலகப் பொருளாதாரம் வளரும் அறிகுறிகள் தென்படுகின்ற வேளையில் பலவிதமான தேசிய வாதங்கள் எழுந்துள்ளன. வெள்ளைத் தேசியவாதமும் பொருளாதாரத் தேசியவாதமும் உலக அமைதிக்கும் செழிப்பிற்கும் பாதகமான நிலையை எடுத்துள்ளன. 

பரப்பியவாதிகள் (Populists)
பரப்பியவாதிகள் என்போர் மக்களிடையே எது பிரபலமாக இருக்கின்றதோ அதை தமது கொள்கைகளாக வகுத்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகும். மக்களிடையே குடிவரவுக்கு எதிரான கருத்து அதிகரிக்கும் போது அவர்கள் குடிவரவுக்கு எதிரான கொள்கைகளைத் தமதாக்கிக் கொள்வர். ஒரு நல்ல ஆட்சியாளர் எடுத்த சிறந்த தொடர் நடவடிக்கைகள் மக்களுக்கு பல  குறுகிய காலத்தில் சுமைகளைக் கொடுத்தாலும் அவை நீண்டகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகளைக் கொண்டுவரும். குறுங்காலத்தில் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கையில் பரப்பியவாதிகள் தங்கள் கொள்கைகளை மக்களின் குறுங்கால நோக்கங்களுக்கு ஏற்ப வகுத்துக் கொள்வர். அதை வைத்து ஆட்சியையும் பிடித்துக் கொளவர். நல்ல ஆட்சியாளர் எடுத்த நடவடிக்கையின் பயன் தரும் போது பரப்பியவாதிகள் ஆட்சியில் இருப்பர். யாரோ போட்ட விதையின் அறுவடைகளைத் தாம் செய்து கொள்வர். 

குடிவரவு எதிர்ப்பு
பரப்பியவாதம், பொருளாதாரத் தேசியவாதம், வெள்ளைத் தேசியவாதம் ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டவர்களின் பரப்புரைகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் என்பதற்கு அதிகப்படியானோர் வாக்களித்தனர். இதே போலத்தான் 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவும் அமைந்தது. இது ஒரு தொடர் சரிவாக வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் பரவுமா எனப் பலரும் அஞ்சிக் கொண்டிருக்கையில் நெதர்லாந்தில் தேசியவாதிகள் தேர்தல் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் மதவாதம் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் ஆகியவற்றைக் கொண்ட வலதுசாரியினர் இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதாவது பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையிலும் பார்க்க அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பெரு வெற்றியீட்டியுள்ளனர். அடுத்தாக பிரான்சில் 2017 ஏப்ரல் 23-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிக்கடி சடுதியான அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும் பிரான்ஸில் நீண்ட காலமாகப் பெரும் அரசியல் மாற்றங்கள் நடக்கவில்லை. குடிவரவுக்கு எதிரான கொள்கைகான ஆதரவு பிரான்சில் அதிகரித்து வருகின்றது

வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism)
1988-ம் ஆண்டில் இருந்து சீனா செய்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் 2011-ம் ஆண்டு அது உலக வர்த்தக அமைப்பில் இணைந்து கொண்டதும் அதன் ஏற்றுமதியைப் பெருமளவில் அதிகரிக்கச் செய்தன. சீனா உலகின் தொழிற்ச்சாலையானது. அதனால் பல வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பல வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயின. வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism), குடிவரவு எதிர்ப்பு, உள்நாட்டு முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தல், பயமுறுத்தல் கலந்த ஒருபக்கச்சார்பு (belligerent unilateralism) ஆகியவையின் கலவையே தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்களின் கொள்கை. தன்னுடய பதவியேற்பு உரையில் வர்த்தகப்பாதுகாப்புக் கொளை செழிப்பையும் வலிமையையும் தரும் என்றார் டொனால்ட் டிரம்ப். முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையில் உருவான பொருளாதார மந்தத்தின் போது தீவிரமான பொருளாதாரத் தேசியவாதம் பல நாடுகள் இறக்குமதிக்கு எதிரான வரிவிதிப்புக்களையும் தடைகளையும் செய்தன. அப்போதைய உலகப் பொருளாதாரக் கட்டமைப்புப் போல் 2007-ம் ஆண்டு இருக்கவில்லை. உலகமயமாதல் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளையும் பொருளாதார ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பல நாடுகளை பாதிக்கக் கூடிய சிக்கலான நிலைமை இப்போது நிலவுகின்றது.

எரிபொருள் அரசியல்
அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைச்சரவை பற்றிப் பல குற்றச் சாட்டுகள் வந்த போதிலும் அவரது வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சனும் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ரிக் பெரியும் உலக எரிபொருள் உற்பத்தி பாவனை விநியோகம் ஆகியவற்றில் நிபுணர்கள். அமெரிக்கா உலகின் முதலாவது எரிபொருள் உற்பத்தி நாடாக உருவெடுத்த வேளையில் அவர்கள் தங்களது பதவியை ஏற்றுள்ளார்கள். அமெரிக்கா தனது வெளியுறவுத் துறையில் எரிபொருளை ஒரு கருவியாகப் தனக்கு ஏற்ப பாவிக்கக் கூடிய நிலைய அடைந்துள்ளது. 2011-ம் ஆண்டு அமெரிக்கா உலகிலேயே அதிக அளவு எரிவாய் உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்து இரசியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 2014-ம் ஆண்டு அது அதிக அளவு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும் உருவெடுத்தது. ஒபெக் நாடுகள் கூட்டமைப்பு தமது உற்பத்தியை கட்டுப்படுத்தி எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்ய முயன்ற போது அமெரிக்கா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்கின்றது. 2017-ம் ஆண்டில் மசகு எண்ணெயின் விலை ஐம்பது டொலருக்கு மேல் அதிகரிக்க அமெரிக்கா அனுமதிக்காது போல் தெரிகின்றது. இது எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியாவின் பொருளாதாரம் தலையெடுக்காமல் செய்யும் உத்தியாகும். எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருப்பது பல வளர்முக நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பெரும் வாய்ப்பாகும். ஆனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த நாடுகள் உலகின் பல் வேறு நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்காசிசாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு பல வளர்முக நாடுகளில் இருந்து சென்று வேலைசெய்வோர் மூலமாகக் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் எரிபொருள் கொள்கை பல்வேறுவிதமான தாக்கங்களை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்றது. 

முப்பரிமாண அச்சும் செயற்கை விவேகமும்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2008-ம் ஆண்டு உருவான் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்தது. தற்போது முப்பரிமாண அச்சுக்கலையும் செயற்கை விவேகமும் (artificial intelligence) உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன. முப்பரிமாண அச்சு பல தொழிலாழர்கள் செய்யும் வேலைய மிகக் குறுகிய காலத்தில் மிகக்குறைந்த செலவுடன் செய்யக் கூடியது. செயற்கை விவேகம் பல தொழில்நெறிஞர்களின் வேலைகளைச் செய்யக் கூடியதாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. பல கணக்கியல் மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த பெரு நிறுவனங்கள் செயற்கை விவேக ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவிடுகின்றன. இதனால் பல சட்டம் மற்றும் கணக்கியல் படித்தவர்களின் வேலைகளை கணினிகள் மூலம் செய்யக் கூடியவகையில் செயற்கை விவேகத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கின்றது. முப்பரிமான அச்சுக்கலையாலும் செயற்கை விவேகத்தாலும் மேற்கு நாடுகளில் வெளிநாட்டவர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாக இருப்பதால் தேசியவாதிகள் குடிவரவுக்கு எதிரான கொள்கைய தீவிரப்படுத்தி வருகின்றார்கள். தற்போது 700மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா 2050-ம் ஆண்டு 557முதல் 653 மில்லியன் மக்களையும் கொண்டதாகவிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. அந்த ஊழியர் இடைவெளியை அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நிரப்பவிருக்கின்றார்கள். 

ஜப்பானின் பிரச்சனைக்குத் தீர்வு
உலக மக்கள் தொகை 1950இல் இருந்து 2000 வரை மூன்று பில்லியன்களில் இருந்து ஆறு பில்லியன்களாக அதிகரித்தது. ஆனால் 2000-ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2050-ம் ஆண்டு ஐம்பது விழுக்காடு அதிகரிப்பை மட்டும் காணும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பானில் முதியோர் தொகை அதிகரித்தும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் செல்வதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களைத் தேட வேண்டி வருமென இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஜப்பானியத் தேசியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதன் விளைவாக ஜப்பானில் செயற்கை விவேகத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருந்தது. Fukoku Mutual Life Insurance என்ற ஜப்பானிய நிறுவனம் செயற்கை விவேகத்தில் 200மில்லியன் யென் முதலீடு செய்ததன் விளைவாக உற்பத்தித் திறன் அதிகரித்ததால் முதலாம் ஆண்டில் மட்டும் 140மில்லியன்கள் சேமிக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இயந்திர மனிதர்கள் எனப்படும் ரொபோக்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வளர்ச்சி நிலையில் வைத்துள்ள ஜப்பானுக்கு செயற்கை விவேகத் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் நன்மையைக் கொடுக்கின்றது. 

இந்தியாவும் சீனாவும்
இந்தியாவும் சீனாவும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட் வளர்முக நாடுகள். குறைந்த ஊதியத்தில் தொழில்செய்யக் கூடிய பலதரப்பட்ட ஊழியர்களையும் கொண்ட நாடுகள். இரண்டும் வேகமாக வளரும் பொருளாதாரங்கள். இர்ண்டு நாடுகளிலும் உறுதியான தலைமை உருவெடுத்துள்ளது. இரண்டு நாடுகளினதும் புள்ளி விபரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அவை திரித்து வெளிவிடப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. சீனாவின் அதிகரிக்கும் முதியோர் தொகை பெரும் பிரச்சனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நீர்த்தட்டுப்பாடு மோசமாகிக் கொண்டிருக்கின்றது. அது தேசிய ஒருமைப்பட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. உலகமயமாதல் இருநாடுகளிலும் பல கோடி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்து நீக்கியுள்ளது. இரு நாடுகளும் தான் எதிர்கால உலகப் பெரு வல்லரசுகளாக இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவெடுக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் மேற்கு நாடுகளில் பெருகும் தேசியவாதம், முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவை இரு நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவிருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி இவை உலகப் பெரு வல்லரசுகளாகுமா என்பதை ஐயத்திற்கு இடமாக்கியுள்ளது.  வேலை செய்யக் கூடிய மக்கள் தொகையைக் குறைவாகக் கொண்டுள்ள ஜப்பான் முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளது. ஜப்பானின் மிற்சுபிசி நிறுவனம் 2030-ம் ஆண்டு செயற்கை விவேகத்தால் 7.4 மில்லியன் வேலைகள் பறிபோகவிருக்கின்றது என்றும் ஐந்து மில்லியன் வேலைகள் மட்டும் உருவாக்கப்படவிருக்கின்றது என்றும் எதிர்வு கூறியுள்ளது.


மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தேசியவாதத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் இணைத்து ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் மேம்படாமல் தடுக்க முயல்கின்றன. அவை அதிகம் குறிவைப்பது சீனாவையும் இந்தியாவையுமே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...