2022 ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து உக்ரெனின் கிழக்குப் பிரதேசமான டொன்பாஸ் பகுதியில் இரசிய அதிபர் புட்டீன் தனது ஆக்கிரமிப்பு போரை தீவிரப்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை இரசியப் படையினரின் ஆதரவுடன் அங்கு வாழும் இரசிய மக்கள் பிரிவினைவாதப் போர் தொடுத்தனர். உக்ரேனின் முழு நிலப்பரப்பையும் ஆக்கிரமிக்கும் விளடிமீர் புட்டீனின் திட்டத்தில் அது முக்கிய பங்காக அமைந்தது. உக்ரேனில் மிகவும் கைத்தொழில் மயமாக்கப்பட்ட டொன்பாஸ் பிரதேசத்தின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளை இரசியப் படையினரும் டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களும் இணைந்து 2014-15இல் நடந்த போரில் கைப்பற்றிக் கொண்டனர். டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களுக்கு அங்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா என நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
டொன்பாசின் வரலாறு
ஆறாம் நூற்றாண்டில் உக்ரேனிலும் கிறிமியாவிலும் கிரேக்கர்கள் குடியேற்ற ஆட்சி ஏற்படுத்தினர். அதன் பின்னர் அவர்களுடன் ஈரானியர்கள் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து துருக்கியர்கள் அப்பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினர். துருக்கியர்களிடமிருந்து உக்ரேனியர்கள் ஏழாம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களை அரபுக்கள் ஆக்கிரமித்தனர். உக்ரேனியர்கள் கிரேக்கர், ரோமர், துருக்கியர், அரபுக்கள், ஈரானியர் போன்ற பண்டைய நாகரிகம் மிக்க இனங்களுடன் தொடர்பு பட்டவர்களாக இருந்தபடியால் அவர்களும் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். தற்போதைய இரசியத் தலைநகர் மொஸ்க்கோ ஒரு கிராமமாக இருந்த போது உக்ரேனியத் தலைநகர் கீவ் ஒரு உலகத்தரம் வாய்ந்த நகராக இருந்தது. 18-ம் நூற்றாண்டின் பின்னரே உக்ரேனின் கிழக்குப் பதியான டொன்பாஸ் பிரதேசத்துடன் இரசியர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
நிலக்கரிக்காக நிலம் பிடித்த இரசியர்
கைத்தொழில் புரட்சி ஐரோப்பாவிற்கு பரவிய நிலையில் நிலக்கரிக்கான தேடல் ஐரோப்பாவில் தீவிரமானது. 1721-ம் ஆண்டு உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொன்பாஸ் பிரதேசத்தில் நிலக்கரி இருப்புக் கண்டறியப்பட்டது. மரம் பழுக்க வரும் வௌவால்களாக கிரேக்கர், சேர்பியர், இரசியர் எனப்பலர் அங்கு சென்று நிலக்கரி அகழும் தொழிலில் ஈடுபட்டனர். பிரித்தானிய முதலாளிகளும் அங்கு அக்கறை காட்டினர். 1869-ம் ஆண்டு வேல்ஸ் வர்த்தகரான John Hughes என்பவர் டொன்பாஸ் பகுதியில் உருக்கு அகழ்வில் ஈடுபட்டு அங்கு பெரிய உருக்கு ஆலையையும் நிறுவினார். அவரே Donetsk என்ற நகரை உருவாக்கிவர் ஆவார். Donetsk இரசியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். Russian Imperial Census என்ற இரசிய ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிவு 1897 ச்செய்த கணக்கெடுப்பின் படி Donetsk மாகாணத்தில் 52.4% உக்ரேனியர்களும் 28.7% இரசியர்களும் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள், ஜெர்மனியர்கள், யூதர்கள், தாட்டார்கள் போன்றவரகளும் அங்கு வாழ்ந்துள்ளனர். 1918-ம் ஆண்டு வரை உக்ரேனிய குடியரசின் கட்டுப்பாட்ட்டில் டொன்பாஸ் பிரதேசம் இருந்தது. பின்னர் இரசியர்கள் உக்ரேனை ஆக்கிரமித்து உக்ரேனையும் தங்களது “பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு” என்பதன் ஒரு பகுதியாக்கினர். உக்ரேனையும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு ஒரு “குடியரசு” எனவும் பறைசாற்றினர். சோவியத் ஒன்றிய காலத்தில் அதில் இணைக்கப்பட்ட குடியரசுகளின் வளம் மிக்க பகுதிகளில் இரசியர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பிரதேசத்தில் இரசியர்கள் திட்டமிட்ட முறையில் பெரும்பான்மை இனமாக்கப்பட்டனர். Donetsk பகுதியில் 52.4% விழுக்காடாக இருந்த உக்ரேனியர்கள் 46% ஆக்கப்பட்டு 28.7% ஆக இருந்த இரசியர்கள் 48.15% ஆக அதிகரிக்கப்பட்டனர். இதுவே Luhansk மாகாணத்திலும் நடந்தது. ஆக்கிரமித்து இணைத்து குடியேற்றம் மூலம் பெரும்பான்மை ஆக்கப்பட்டவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா? கட்டமைக்கப்ப்ட்ட இனக்கொலை, இனச்சுத்தீகரிப்பு போன்றவற்றை இரசியா பல நூற்றாண்டுகளாக உக்ரேனியர்களுக்கு சொந்தமாக இருந்த டொன்பாஸ் பிரதேசத்தில் செய்யவில்லை என்பதை மறுக்க முடியுமா?
உக்ரேனின் ஒரு பகுதி டொன்பாஸ்
சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்த போது டொன்பாஸ் பகுதி உக்ரேனின் பகுதியாகவே இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பிற்கு ஏற்ப உக்ரேன் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்றது. ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபையால் உக்ரேன் ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக டொன்பாஸ் இருந்தது. உக்ரேன் சோவியத் ஒன்றியதில் இருந்து பிரியும் போதோ அல்லது தனிநாடாகப் பிரகடனப் படுத்தப் பட்ட போதோ டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பெரும்பாலான உக்ரேனியர்களின் கருத்து தம்முடைய கடந்த காலத்தை இரசியா அபகரித்தது. என்பதாகும். அதே இரசியா தமது எதிர்காலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்பதும் பெரும்பாலான உக்ரேனியர்களின் நிலைப்பாடும் ஆகும். அதனால அவர்கள் இரசியாவின் இரசியாவின் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதிலும் பார்க்க வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பில் இணைய விரும்பினார்கள் இதற்கான நகர்வுகளை 2014இல் உக்ரேனியர்கள் செய்த போது இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது. 2019இல் உக்ரேனின் அரசியலைப்பு நேட்டோவில் உக்ரேன் இணைவதை உறுதி செய்யும் வகையில் உக்ரேன் அதிபர் செயற்பட வேண்டும் என திருத்தப்பட்டது. இரண்டாம சோவியத் ஒன்றியத்தை (USSR-2.0) கட்டி எழுப்பும் வெறியுடன் இருக்கும் விளடிமீர்புட்டீனுக்கு அது கடும் சினத்தை மூட்டியதனால் 2021இல் உக்ரேனை சுற்றி இரசியப் படைகளை நிறுத்தி உக்ரேனை ஆக்கிரமிப்பேன் என மிரட்டிய போது உக்ரேனியர்கள் மசியவில்லை. சீற்றமடைந்த புட்டீன் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனை ஆக்கிரமிக்க அங்கு தன் படைகளை அனுப்பினார்.
புட்டீனின் நில அபகரிப்பு வெறி
2014இல் உக்ரேனின் கிழக்குப் பகுதிக்கு இரகசியமாக இரசியப் படையினரை அனுப்பி அங்கிருந்த உக்ரேனியப் படையினர் விரட்டப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பகுதியின் மீதான கட்டுப்பாட்டை உக்ரேனியர்கள் இழந்தனர். டொன்பாஸ் பகுதியின் Donetsk மற்றும் Luhansk மாகாணங்கள் தம்மை தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. அதேவேளை கிறிமியாவை கைப்பற்றிய இரசியப்படைகள் அங்கு கருத்துக் கணிப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதை இரசியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். உக்ரேனை முழுமையாக அபகரிக்காமல் பகுதி பகுதி பகுதியா அபகரிக்கும் திட்டத்தின் முதற்பகுதியை புட்டீன் 2014 சிறப்பாக நிறைவேற்றியமைக்கு காரணம் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பிற்கு தயார் நிலையில் இல்லாமல் இருந்தமையே காரணம். 2008-ம் ஆண்டு ஜோர்ஜீயா மீது இரசியா ஆக்கிரமிப்பு போர் தொடுத்த போது உக்ரேனியர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இரசிய எல்லையில் உள்ள போல்ரிக் நாடுகளான எஸ்துவேனியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. ஆனால் அந்த நாடுகளால் இரசியாவிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் ஏற்பட்டதில்லை. 2014 உக்ரேனின் நிலங்களை இரசியா அபகரித்த பின்னர் இரசியாவின் பல அயல் நாடுகள் தமது நாடுகளில் நேட்டோ படைகள் நிலை கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. போலாந்து அமெரிக்கப்படையினர் தமது நாட்டில் நிலை கொள்வதற்கான செலவை ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு வழங்குவோம் எனச் சொல்லி அமெஇர்க்கப் படையினரை தம் நாட்டில் நிலை கொள்ள வைத்தனர். கரும்பு தின்னக் கைக்கூலி கிடைத்த நிலை அமெரிக்க ஆதிக்கவாதத்திற்கு!
2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னர் உரையாற்றிய புட்டீன் உக்ரேன் ஒரு நாடாக இருப்பதற்கு தகுதியற்றது. அதன் எல்லை போலியானது என்றார். ஆனால் உக்ரேனின் டொம்பாஸ் பிரதேச மாகாணங்களான Donetsk மற்றும் Luhansk ஐ தனி நாடுகளாக அங்கீகரித்தார். நியாயமற்ற அந்தக் கூற்று உக்ரேனியர்களைச் சினமடையச் செய்தமையால் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உறுதியாக நின்று போராடுகின்றார்கள். உக்ரேனும் இரசியாவும் இலங்கையின் இனக்கொலைக்கு உதவிய நாடுகள். உக்ரேன் தனது விமான ங்களை விமானிகளுடன் இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியது. அவர்கள் இலங்கையில் குண்டு போட்டார்கள் என்பதால் தமிழர்கள் உக்ரேனியர்கள் மீது வஞ்சத்தை வைத்திருக்கலாம் அதற்காக இரசியப் படையினர் உக்ரேனில் செய்யும் அட்டூழியங்களை நியாயப்படுத்தக் கூடாது.