Monday 7 October 2019

கீழடி உறுதி செய்யும் தமிழரின் பொருளாதாரத் தொன்மை


ஒரு நாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்கு நட்புமிக்க மக்கள், சிறந்த நகரம், உயர்ந்த தொழில்நுட்பம், சிறந்த உட்கட்டுமானம், வேற்று நாட்டவர்களுடன் போக்கு வரத்துத் தொடர்பு, கருத்துப் பரிமாற்றத் தொடர்பு, உறுதியான ஆட்சி முறைமை, துறைமுகங்கள், ஆறுகள், மக்களின் கல்வித்தரம் போன்றவை முக்கியமானவையாகும். தமிழர்களின் தொன்மை பற்றியும் அவர்களது மொழிச் சிறப்புப் பற்றியும், அவர்களது வீரம் பற்றியும் பரவலாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. ஆனால் அவர்களது பொருளாதாரச் சிறப்புப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் தொழில்நுட்பம்

மனித இனத்தின் பழைய கண்டுபிடிப்புக்களில் தீ உண்டாக்குதலுக்கு அடுத்தபடியான முக்கிய கண்டுபிடிப்பாக சில்லு (சக்கரம்) கருதப்படவேண்டும். சில்லின் தொன்மையை ஆராய்ந்தவர்கள் மிகப் பழைமையான சில்லு இன்று ஈராக்காகவும் சிரியாவாகவும் இருக்கும் மெசப்பட்டோமியாவில் இற்றைக்கு 5,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகச் சொல்கின்றார்கள். ஆனால் அதை யார் கண்டு பிடித்தார்கள் என அறிய முடியாமல் இருக்கின்றது என்றும் அவர்கள் சொல்கின்றார்கள். தமிழர்களின் தொனமையை ஆய்வு செய்த இடங்களில் எல்லாம் பானைகள் கண்டறியப் பட்டுள்ளன. பானை செய்வதற்கு சில்லு முக்கியமான ஒன்றாகும். எந்த மக்கள் முதலில் பானை செய்யத் தொடங்கினார்களோ அவர்களே முதலில் சில்லைக் உருவாக்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஐம்பூதங்களைக் குறிக்கும் வழிபாட்டிடங்கள் ஐந்தும் ஒரே புவிநெடுங்கோட்டில் அமைத்தவர்களிடம் சிறந்த தொழில்நுட்ப அறிவு இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. Wootz steel அல்லது Damascus steel என அழைக்கப்படும் மிகச் சிறந்த உருக்கை தமிழர்கள் உருவாக்கினார்கள். அந்த உருக்கில் செய்யப்ப்ட்ட வாள் உலகெங்கும் போற்றப்பட்டது. மூன்று காற்பாந்தாட்ட மைதானங்களின் நிலப்பரப்பைக் கொண்ட தொழிற்சாலை ஒன்று கீழடியில் கண்டறியப் பட்டுள்ளது. மேலை நாட்டினர் ஒரு புள்ளியைச் சுற்றி 360பாகைகளை வகுத்துள்ளனர். திசையில் 8திசைகளை வைத்துள்ளனர். தமிழர்கள் ஒரு புள்ளியைச் சுற்றி 1024பாகைகளை வகுத்துள்ளனர். அவர்களின் திசையறிவு அவர்களை மிகச்சிறந்த பயணிகளாக்கியது. 

தமிழர்களின் நகர உருவாக்கமும் உட்கட்டுமானமும்

பொருளாதாரமும் நகரச் சிறப்பும் உட்கட்டுமானமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. பொருளாதாரம் வளர்வதற்கு சிறந்த உட் கட்டுமானம் தேவை. பொருளாதாரம் வளரும் போது நகரம் மேம்படும். நகர சிறக்கும் போது உட்கட்டுமானம் மேலும் சிறப்படையும். மெஹன்சதாரோ, ஹரப்பா, காவேரிப்பூம்பட்டணம், கீழடி ஆகிய இடங்களில் செய்யப் பட்ட அகழ்வாராய்ச்சியில் உயர்ந்த உட் கட்டுமானங்களைக் கொண்ட சிறந்த நகரங்களும் கண்டறியப் பட்டன. நெடுநல்வாடை என்ற தமிழிலக்கியத்தில் தமிழர்களின் நகர்கள் “மாடம் ஓங்கிய மல்லல் மூதூர், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்” என தெருக்கள் விபரிக்கப்பட்டுள்ளன. கீழடியில் உள்ள குடியிருப்புக்களும், தெருக்களும் மேசையில் இருந்து வரையப்பட்ட படங்களை வைத்து உருவாக்கிய நகரங்கள் போல் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் சுட்ட செங்கற்களால் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியங்களும் சாயத் தொட்டிகளும் அரிக்கமேட்டில் கண்டறியப் பட்டுள்ளன. 

தமிழர்களின் கடற்பயணம்

தமிழர்களின் வரலாறு பற்றி எழுதிய அறிஞர்கள் அவர்களை சிறந்த கடற்பயணிகள் என்பதில் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர். பண்டிய தமிழர்களின் கடற்பயணங்களைப் பற்றி ஒரிசா பாலு என அழைக்கப்படும் திருச்சி உறையூரில் பிறந்த சிவ பாலசுப்பிரமணி செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. கடல்சார் விஞ்ஞானம் கற்ற ஒரிசா பாலு ஆமைகள் கடலில் நீந்திச் செல்வதில்லை. அவை கடலில் உள்ள நீரோட்டத்தை அறிந்து அதில் மிதந்து செல்கின்றன. அதை பாதையைத் தொடர்ந்தே தமிழர்கள் தமது கடற்பயணங்களை மேற் கொண்டனர் என அவர் கண்டறிந்தார். தொலைதூரம் செல்ல நீண்ட காலம் எடுக்கும் அப்போது குடிநீருக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு ஒரிசா பாலு தமிழர்கள் மூங்கில் குழாய்க்குள் மூலிகைகளை வைத்து அதன் மூலம் 24 நிமிடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் அறிவு பெற்றிருந்தனர் என்ற உண்மையை வெளிக் கொண்டு வந்தார். இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்ட பெரும் செங்கற்களால் கட்டிய படகுத்துறை பூம்புகாரில் கண்டறியப்பட்டது. தமிழர்கள் உலகெங்கும் பயணித்தார்கள் என்பதற்கு ஆதரமாக உலகெங்கும் தமிழ்ப்பெயரில் உள்ள பத்தொன்பதாயிரம் நகரங்களை இனம் கண்டுள்ளார். உலகெங்கும் மதுரா என்னும் பெயரில் மட்டும் 24 நகரங்கள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். கீழடியில் தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும் இடையில் உள்ள நீப்பரப்பில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட துறைமுகங்கள ஒட்டிய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தமைக்கும் தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் மொழிகளில் கலந்திருப்பதையும் ஒரிசா பாலு வெளிப்படுத்தியுள்ளார். ரோமா புரி மன்னன் அகஸ்டஸ் சீசரிடம் பாண்டிய மன்னர்களின் தூதுவர்கள் மூவர் சென்றதை ரோம வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ரோமிலிருந்து ஆண்டு தோறும் தென் இந்தியாவிற்கு பத்தாயிரம் குதிரைகள் அனுப்பப்பட்டதையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். கீழடியை ஒரு பகுதியாகக் கொண்ட வைகை நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அழகன்குளம், பெரியபட்டினம் என இரண்டு பண்டைய துறைமுகங்கள் இருக்கின்றன.  கீழடி நகர மக்கள் இதன் மூலம் தங்கள் பன்னாட்டு வாணிபத்தைச் செய்துள்ளனர். அழகன்குளத்தில் கப்பலின் வரைபடம் உள்ள பானைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன கீழடி பாண்டியர்களின் தலைநகரான மணலூர் என வரலாற்று நிபுணர்கள் சொல்கின்றனர். கீழடியில் இருந்து முத்து, மிளகு, பருத்தி போன்ற தமிழர்களின் உற்பத்திப் பொருட்கள் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. எகிப்திய அரசி கிளியோப்பற்றாவும் பல ரோமாபுரி அரசிகளும் தமிழ்நாட்டு முத்துக்களை மதுவில் ஊறவைத்து குடித்தனர் என அவர்களது வரலாறுகள் உறுதி செய்கின்றன. முத்தின் இன்னொரு பெயரான பரல் மருவி ஐரோப்பிய மொழிகளில் Pearl ஆகவும் மிளகின் இன்னொரு பெயரான திற்பலி pepper ஆகவும் மருவி இருக்கின்றன. புவிசார் அரசியல் நிபுணரான ரொபேர்ட் கப்லான் இந்தியர்கள் எப்படி வியாபராக காற்றைப் பயன்படுத்தி கப்பலோட்டி உலக வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள் என்பதை விபரித்துள்ளார். கடற்போக்குவரத்து, கப்பற்கட்டுமானம், வாணிபம் பற்றிய பழைய குறிப்புக்கள் உள்ள ஒரே மொழி தமிழ். 
வெண்ணிக் குயத்தியார் பாடலில்:
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!...

பொருள்: கடலில் பெரிய கலங்களை காற்றின் சீற்றத்தினால் பாதிக்கப்படாமல் செல்லுத்தியவர்கள் சோழ மன்னர்கள். அவர் வழிவந்த, மிகப்பெரும் யானைப்படையை உடைய கரிகால் வளவனே! 

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(மு.வரதராசன் விளக்கம்: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.என்ற குறள் கணவன் வாணிபத்திற்காக வெளிநாடு சென்றதால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

நாணயக் கொடுப்பனவு முறைமை

கீழடி, காவேரிப் பூம்பட்டினம், மெஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிரேக்கம், ரோமாபுரி, மெசப்பட்டோமியா, எகிப்து ஆகிய பழம் பெரும் நகரங்களின் நாணயங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இதனால் தமிழர்களிடையே சிறந்த நாணய மாற்று முறைமை இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்று செய்யும் முறையில் இருந்து வளர்ச்சி பெற்ற முறைமையே நாணயக் கொடுப்பனவு முறைமை. நாணயங்களின் பெறுமதி பற்றிய அறிவும் தமிழர்களிடையே இருந்துள்ளன.

தமிழர்களின் மொழித் தொடர்பு

சிலப்பதிகாரத்தில் காவேரிப்பூம்பட்டினத்தில் பன்னாட்டு வாணிபம் எப்படி நடந்தது என்பதை:

“பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழிதீர் தே எத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்”

என்னும் வரிகளால் விபரிக்கின்றது. பல மொழி பேசும் மக்கள் எப்படி ஒற்றுமையாக செயற்பட்டனர் என்பதை அந்த வரிகள் விபரிக்கின்றன. தமிழர்களுடன் வர்த்தகம் செய்த சீனர்களும் ரோமர்களும் தமிழ் பேசும் திறன் பெற்றிருந்தனர். சீனர்களும் ரோமர்களும் தமிழில் பேசிக் கொண்டனர். உலகெங்கும் உள்ள பல்லாயிரம் மொழிகளில் நானூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் பொதுவாக இருக்கின்றன. அதில் முன்னூறு சொற்கள் தமிழ் சொற்களாக இருப்பது தமிழர்கள் பல மொழி பேசும் மக்களுடன் தொடர்பில் இருந்தனர் என்பதை உறுதி செய்கின்றது. மணிமேகலையில் கச்சிமாநகர் புக்க காதையில் காஞ்சியில் 18 மொழிகள் பேசும் திறன் கொண்ட மக்கள் வாழ்ந்ததாக குறிபிடப்பட்டுள்ளது:

மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்

தமிழர்களின் ஆட்சி முறைமை

பட்டினப்பாலை என்னும் பழைய தமிழ் இலக்கியத்தில் நகரத்தின் சிறப்பைச் சொல்லும் போது அங்கு இருப்பவை பற்றிக் கூறுகின்றார். அதில் வணிகர்களின் சிறப்பு, சுங்கம் கொள்வோரின் சிறப்பு, துறைமுகப் பண்டக சாலையின் முற்றம், அங்காடி வீதிகள், ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள், வணிகர், வேளாளர் குடிச்சிறப்பு போன்றவை பற்றி விபரிக்கின்றார். இவற்றை நெறிப்படுத்த சிறந்த ஆட்சி முறைமை தமிழர்களிடம் இருந்தது. வைகை ஆறு வற்றாத உயிர் நதியல்ல ஆண்டின் சில திங்கள்கள் மட்டுமே ஓடும் நதியாகும். அதனால் அதன் கரையில் வாழ்ந்த மக்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்க சிறந்த நீர் முகாமைத்துவத்தை மன்னர்கள் மேற்கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளன. நீர் சேமிப்பு, நீர் வழங்கல், கழிவு நீர் வசதி போன்றவை எல்லாம் சிறப்பாக இருந்தமை கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது.

நெசவுத் தொழில்

தமிழர்களின் நெசவுத் தொழிலின் ஆதாரங்களும் கீழடியில் கிடைத்துள்ளன. மற்ற நாடுகளின் பாய்மரக் கப்பல்கள் பல துணிகளைக் கொண்டன. ஆனல் தமிழர்களின் பாய்மரக் கப்பல் ஒரே துணியை மட்டும் கொண்டன. அந்த அளவிற்கு நீளமானதும் வலிமையானதுமான துணிகளை நெய்யும் தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்தது. எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம், மெசப்பட்டோமியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் தமிழர்கள் நெய்த மெல்லிய பருத்தித் துணி பிரபலமானது. மஸ்லின் என்ற சொல்லே முசுலிப்பட்டினம் என்ற சொல்லில் இருந்து மருவியதாகும். ஒரு சேலையின் அளவில் உள்ள துணியை உள்ளங்கைக்குள் அடக்கும் அளவிற்கு மெல்லிய துணியை தமிழர்கள் நெய்தார்கள். எகிப்தியப் பிரமிட்களில் இறந்தவர்களின் உடலைச் சுற்றி தமிழ்நாட்டு பருத்தித் துணியால் சுற்றி மூலிகைக்கள் இட்டுப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

உறுதியான ஆட்சியும் மக்களின் கல்வித்தரமும்

பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான ஆட்சி தேவை என்பது இன்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. போர் நடப்பது பொருளாதாரத்திற்கு கேடு என்பதும் இன்றைய உண்மை. பழைய தமிழ் மன்னர்கள் போர்கள் இன்றி அமைதியாக உறுதியான ஆட்சி செய்தனர் என்பதற்கு ஆதாரமாக இருப்பது கீழடியில் படைக்கலன்கள் ஏதும் இல்லாமல் இருப்பதே. கீழடியில் மக்கள் மொழியறிவு எழுத்தறிவு போன்றவையுடன் கல்வித்தரத்தில் உயர்ந்து இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக வீட்டுப் பொருட்களில் பெயர்களை எழுதி வைத்தல், சதுரங்க விளையாட்டுக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.

உறுதியான ஆட்சி, சிறந்த உட்கட்டுமானம், உயர்ந்த தொழில்நுட்பம், நல்ல தொடர்பாடல் மொழி, துறைமுகங்கள், மக்களின் கல்வித்தரம். பன்னாட்டு கொடுப்பனவு முறைமை போன்றவை உள்ள நகரங்களான இலண்டன், நியூயோர்க், சிங்கப்பூர், ஹொங் கொங் போன்றவை இன்று உலகின் முன்னணிப் பொருளாதார நிலையங்களாக இருக்கின்றன. அதே போல் தமிழர்களின் பண்டைய நகரங்களான காவேரிப்பூம் பட்டினம், மதுரை, மெகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்கள் அப்போது உலகின் மிக உயர்ந்த பொருளாதார நிலையங்களாக திகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 17 ஆற்றுப் படுக்கைகளிலும், கடலுக்குள் மூழ்கிப் போன குமரிக் கண்டத்திலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...