Showing posts with label ஹமாஸ். Show all posts
Showing posts with label ஹமாஸ். Show all posts

Tuesday, 31 May 2022

அல் அக்சா பள்ளிவாசலில் கைஓங்கும் யூதர்களும் கையாலாகத அரபுக்களும்

 2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இப்படி நடப்பதாக கூறுகின்றார்கள். இம் மூன்று மத்தினருக்கும் புனித இடமான ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரில் எப்போதும் போல் இல்லாத வகையில் இஸ்ரேலியர்களும் 2022 ஏப்ரலில் அரபுக்களும் மோதிக் கொண்டனர். ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் புனித இடமாகக் கருதப்படுகின்றது. இறை தூதர் நபி வர முன்னர் மட்டுமல்ல பரபிதா தன் ஒரே ஒரு குமாரரை புவியில் உள்ள பாவிகளை இரட்சிக்க அனுப்ப முன்னரே ஜெருசேலத்தில் பழைய நகர் யூதர்களின் புனித இடமாக இருந்து வருகின்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜெருசேலம் உலகன் நடுப்புள்ளியாக இருந்ததாகத யூதர்கள் கருதுகின்றனர். யூதர்களின் புனித இடமான மலைக்கோவில் (Temple Mount) ஜெருசேலம் பழைய நகரில் உள்ளது.  இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் புவியில் இருந்து வானுலகம் நோக்கி பயணைத்த புனித இடம் ஜெருசேலம் எனச் சொல்கின்றனர். அவரகள் ஜெருசேலம் பழைய நகரில் அல் அக்சா என்னும் பள்ளிவாசலை உருவாக்கி அதை அவர்கள் மக்கா, மதினா போன்ற மிகப் புனிதமான இடமாக கருதுகின்றனர். யேசு நாதர் போதனை செய்த, சிலுவையில் அறையப்பட்ட, உயிர்த்து எழுந்த தலம் ஜெருசேலம் நகராகும். ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரைச் சுற்றி மதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அங்கு கிருத்தவர்களுக்கு எனவும், ஆர்மினியர்களுக்கு எனவும் (அவர்கள் மரபுவழி கிருத்தவர்கள்) யூதர்களுக்கு எனவும் இஸ்லாமியர்களுக்கு எனவும் தனித்தனி நிலப்பரப்புக்கள் உள்ளன. 

1967 போர் வெற்றி ஊர்வலம்

யூதர்கள் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் தாம் வெற்றி பெற்றதையும் தங்களது புனித தலமாகிய கிழக்கு ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியதையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதை ஒட்டி அவர்கள் தங்கள் கொடியுடன் பழைய நகர் முழுவதும் ஊர்வலம் போவார்கள். போகும் போது பலஸ்த்தீனிய அரபுக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் அரபுக்கள் அழிக என கூச்சலிட்டுக் கொண்டு யூதர்கள் செல்வார்கள். கிழக்கு ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் இஸ்லாமியர்களின் நிலப்பரப்புக்களூடாக ஊர்வலம் செல்வார்கள். 2022 ஏப்ரல் 17-ம் திகதி உயிர்த்த ஞாயிறு நடந்த மோதலைத் தொடர்ந்து மே மாதம் 29-ம் திகதி யூதர்கள் ஊர்வலம் போகும் போது மோதல் கடுமையாக இருந்தது. 2022 மே மாதம் 29-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 150இற்கும் மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் காயமடைந்தனர். மூன்று யூத காவல் துறையினர் காயமடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். அல் அக்சாவினுள் பலஸ்த்தீனியர்கள் நுழைய முடியாமல் இஸ்ரேலியர் தடுத்து நின்றனர். பலஸ்த்தீனியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஒரு இளம் பெண் கடுமையாகத் தாக்கப் படும் காணொலிவெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாத இஸ்ரேலியர்கள்

இஸ்ரேலின் தீவிரதேசியவாதக் கட்சியின் தலைவரான இதமர் பென் வீர் தலைமையில் பல தீவிரதேசியவாத யூதர்க்ள் 2021-05-29 ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சாவை ஆக்கிரமித்திருந்தனர். அல் அக்சாவின் அல் கிபிலி வணக்க மண்டபத்தில் அவர்கள் நிலை கொண்டுள்ள்னர். பலஸ்த்தீன செம்பிறைச் சங்கம் தமது அவசர நோயாளர் வண்டி காயமடைந்தவர்களை எடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தீவிரவாத யூதர்கள் இஸ்லாமியர்களின் அல் அக்சா பள்ளிவாசலையும் மலைக் குவிமாடத்தையும் (Dome of the Rock) அகற்றிவிட்டு யூதர்களின் வழிபாட்டிடங்கள் அமைக்கப் படவேண்டும் என அடம் பிடிக்கின்றனர். இஸ்ரேலியச் சட்டப்படியும் யூத தலைமை மத குருவின் கட்டளைப்படியும் யூதர்கள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையை நடத்தக் கூடாது. இருந்தும் 2022 மே மாதம் யூத தீவிரவாதிகள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையைச் செய்தனர்.

2021 மோதலில் காசா நிலப்பரப்பில் கடும் தாக்குதல்

2021-ம் ஆண்டு மே மாதம் ரம்ழான் நோன்பு தொழுகையின் போது அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கியில் இருந்து வரும் ஒலி யூதர்களின் போர் வெற்றிக் கூட்டத்தில் ஆற்றுகின்ற உரைக்கு இடையூறாக இருந்ததால் இஸ்ரேலிய காவல் துறையினர் அல் அக்சாவினுள் சென்று ஒலிபெருக்கியை உடைத்தனர். அப்போது இரு தரப்பு மோதல் உருவானது. பல்ஸ்த்தீனியர்கள் கற்களையும் இஸ்ரேலிய காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த மோதலால் சினமடைந்த கமாஸ் அமைப்பினர் தமது காசா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். அதனால் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலியப் படையினர் கடும் தாக்குதல்களை செய்தனர். பதினொரு நாட்கள் தொடர்ந்த மோதலில் அரபு பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பல கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. 2022 நடக்கும் மோதலில் இதுவரை கமாஸ் அமைப்பினர் அமைதியாக இருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 2021-ம் ஆண்டு கமாஸிற்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் அது மீளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது கமாஸ் அமைப்பினர் தமது மக்களின் பொருளாதார நிலை மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் எனவும் கருத இடமுண்டு. இஸ்ரேல் இப்போது கமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் ஆளிலிவிமானங்களையும் எதிர் கொள்ளக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கியுள்ளது. அவற்றிற்கு தேர்வுக் களம் அமைத்துக் கொடுக்க கமாஸ் அமைப்பினர் விரும்பவில்லையா? 

  • The International Union of Muslim Scholars இஸ்லாமிய நாடுகள் அல் அக்சா பள்ளிவாசலை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1967இல் நடந்த போரில் கிழக்கு ஜெருசேலத்தை ஜோர்தானிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துக் கொண்டது. 2019இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் போது அதை இஸ்ரேலின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் கிழக்கு ஜெருசேலம் யூதர்களுக்கு சொந்தமானது அல்ல எனக் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி கிழக்கு ஜெருசேலம் ஓரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும். பன்னாட்டு சட்டங்களின் படி ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆக்கிரமித்த நாடு குடியேற்றங்களைச் செய்ய முடியாது. பன்னாட்டு நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு இசுலாமியர்களின் புனித இடமாகிய அல் அக்சாவை இழிவுபடுத்தும் இஸ்ரேலுடன் உறவை எப்படி வளர்ப்பது என்பது பற்றி பல அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இசுலாமியர்களின் முப்பெரும் புனித இடங்களில் ஒன்றான அல் அக்சாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வழிபட முடியவில்லை. அரபு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளின் நகர்வுகளை நன்கு அவதானிக்கும் இஸ்ரேலிய உளவுத்துறையின் உதவி அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு தமது நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றாமல் அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள்.

Friday, 21 May 2021

இஸ்ரேலின் IRON DOME வான் பாதுகாப்பு முறைமை வெற்றி பெற்றதா?

  


2021 மே மாதம் 7-ம் திகதி இஸ்ரேலியப்படையினர் கிழக்கு ஜெருசேலத்தில் உள்ள புனித அல் அக்சா பள்ளிவாசலை களங்கப்படுத்தினர் என்பதற்காக இஸ்ரேல் மீது மே 10-ம் திகதி தமது எறிகணைகளை வீச ஆரம்பித்தனர். வழமை போல் இஸ்ரேலின் பதிலடி மிக மிக காத்திரமானதாக இருந்தது. ஹமாஸ் அமைப்பின் எறிகணை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பொறியியலாளர்கள் பலரது வதிவிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசி அவர்களில் பலரை கொன்றது ஹமாஸ் அமைப்பினரை நிச்சயம் அதிச்சிக்கு உளாக்கியிருக்கும். அவர்களின் வதிவிடங்களையும் நகர்வுகளையும் ஹமாஸ் அமைப்பினர் மிகவும் இரகசியமாக வைத்திருந்தனர். இஸ்ரேலின் உளவுத் தொழில்நுட்பம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இன்னொன்று அவர்கள் விசிய எறிகணைகளின் பெரும் பகுதியை இஸ்ரேலின் IRON DOME என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை இடைமறித்து அழித்துவிட்டது. 2011-ம் ஆண்டு இஸ்ரேல் அமெரிக்காவின் ஒன்றரை பில்லியன் டொலர் நிதியுதவியுடன் IRON DOME முறைமையை உருவாக்கியது. இஸ்ரேல் அந்த முறைமையில் செயற்படு திறன் பற்றிய தகவல்களை அமெரிக்காவுடன் பகிந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா நிதியுதவியை வழங்கியது. IRON DOME முறைமை செயற்படத் தொடங்கியவுடன் ஹமாஸ் வீசிய முதலாவது ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது.



புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையில் இரும்புக் கூரை (IRON DOME) என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம். இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியும். இரும்புக் கூரை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இவை ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் இரும்புக்கூரையில் உள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஏவுகணையை அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் டோலர்கள் பெறுமதியான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாவிக்கின்றது

இனம் காண் நிலையம் (Radar Unit)

இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.

கட்டுப்பாட்டகம் (Control Centre )

இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் யாருமற்ற வெளியான அல்லது புறம்போக்கான இடம் என்றால் அதை அப்படியே விட்டுவிடும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம், இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.

ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)

ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும். வீசப்படும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 2.2மடங்கு வேகத்தில் பாயும்.

2014-ம் ஆண்டு நடந்த ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் ஹமாஸ் அமைப்பினர் 4600இற்கும் அதிகமான எறிகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசினர். அவற்றில் 90விழுக்காட்டை இஸ்ரேலின் IRON DOME முறைமை இடை மறித்து அழித்துவிட்டது. அதில் ஆறு இஸ்ரேலியர் மட்டும் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தனது எறிகணை எதிர்ப்பு முறைமையை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இஸ்ரேல் தற்போது பயன்படுத்தும் இரும்புக் கூரை(Iron Dome) என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரி வீசும் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் நான்கு முதல் எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து இனம் கண்டு இடைமறித்து தாக்கும். இடைமறித்து தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் தமிர் (Tamir) ஏவுகணைகள் ஒவ்வொன்றும் நூறு ஆயிரம் டொலர்கள் பெறுமதியானவை. ஒவ்வொரு ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் நூறு மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. இதனால் ஏற்படும் பெரும் செலவைக் குறைப்பதற்கு இரும்புக்கூரையின் மென் பொருள் செயற்பாட்டில் மதிநுட்பம் மிக்க மாற்றத்தை இஸ்ரேலியர்கள் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதன்படி எதிர் வீசும் எறிகணைகள் பாயும் திசை வேகம் ஆகியவற்றை துல்லியமாக ரடார் மூலம் கணிப்பிட்டு அவற்றில் எவை இஸ்ரேலியக் குடியிருப்புக்கள் மீது விழும் எவை கட்டாந்தரையில் விழும் என பிரித்தறிந்து குடியிருப்புக்கள் மீது விழும் எறிகணைகளை மட்டும் இடை மறித்து அழிக்க ஏவுகணைகள் வீசப்படும். ஹமாஸ் அமைப்பினர் இரும்புக்கூரை (Iron Dome) வீசக்கூடிய ஏவுகணைகளிலும் பார்க்க அதிகமான எறிகணைகளை விசுவதன் மூலம் தாங்கள் வீசும் மேலதிக எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்து தாக்குவதை உறுதி செய்ய முயல்கின்றனர். அதனால் இஸ்ரேல் தமது இரும்புக்கூரை (Iron Dome) ஒரேயடியாக எண்ணூறு ஏவுகணைகளை வீசக் கூடிய வகையில் மேம்படுத்தியுள்ளனர். தற்போது ஹமாஸ் அமப்பால் ஒரேயடியாக எண்ணூறு எறிகணைகளை வீச முடியாது. ஹமாஸின் தகவற்படி 2021 மே நடந்த மோதலில் ஐந்து நிமிடங்களுக்குள் 137 எறிகணைகள் வீசப்பட்டன. இந்த மோதலில் இஸ்ரேலில் சில கட்டிடங்களின் சில பகுதிகள் சிதைக்கப்பட்டன. ஆனால் காசா நிலப்பரப்பில் பல மாடித்தொடர்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

உலகில் இஸ்ரேல் மட்டுமே மிகச்சிறந்த எறிகணை எதிர்ப்பு முறமையைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் அதிக கவனம் செலுத்துகின்றன. அவை எதிரியின் ஏவுகணைகள் குண்டு வீச்சு விமானங்களை தொலைவில் வைத்தே இடைமறித்து அழிக்கக் கூடியவை. இரசியாவின் எஸ்-400 தற்போது உள்ள வான் பாதுகாப்பு முறைமைகளில் மிகச் சிறந்ததாகும். அதற்கு அடுத்த படியாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய David’s Sling (தாவீதின் கவண்) என்ற வான்பாதுகாப்பு முறைமை இருக்கின்றது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக David’s Slingஐ பாவிக்கத் தேவையில்லை. ஆனால் லெபனானில் இருந்து செயற்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடன் மோதும் போது David’s Slingஐ இஸ்ரேல் பாவிக்கும். உலகில் வான் பாதுகாப்பு முறைமையை அதிகம் பாவிக்கும் நாடாக இஸ்ரேல் இருக்கின்றது.

1948-ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் நடந்த எல்லா போர்களிலும் மோதல்களிலும் இஸ்ரேலியர்களின் கை ஓங்கி இருப்பதற்கு அவர்களது மதிநுட்பமே காரணம்.

மேலதிக தகவல்களுக்கு:-

https://www.veltharma.com/2014/08/blog-post_11.html

Monday, 19 October 2015

ஹாமஸிற்கு போட்டியாக ஈரான் உருவாக்கும் அல் சபிரின் அமைப்பு



ஈரானுக்கும் ஹமாஸிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக உறவு சீராக இல்லை. இருதரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டமைக்கு மூன்று முக்கிய  காரணங்கள் உள்ளன. முதலாவது சிரியாவில் ஈரானின் நட்பு ஆட்சியாளரான அல் அசாத்திற்கு உதவி செய்ய ஹமாஸ் மறுத்து விட்டது. மாறாக அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு ஹமாஸ் ஆதரவு வழங்கியது. இரண்டாவது ஹமாஸ் தனது தலைமயகத்தை இரகசியமாக துருக்கிக்கு மாற்றியது. மூன்றாவது ஹமாஸ் தலைவர்கள் ஈரானின் எதிரியும் சுனி முஸ்லிம்களின் நாடுமாகிய சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியது.

மதசார்பற்ற பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக அரபு வசந்தக் கிளர்ச்சி உருவான போது அதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு முக்கிய பாகம் வகித்தது. ஹமாஸ் அமைப்பின் தாய் வீடான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவு நிலையை ஹமாஸ் எடுத்தது ஈரானைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்த போது ஹமாஸ் ஈரானிலும் பார்க்கச் சிறந்த ஒரு நட்பு தனக்கு உருவாகிவிட்டது எனக் நம்பியது. ஆனால் அந்த நம்ப்பிக்கை ஓராண்டில் தகர்ந்துவிட்டது.

ஈரானில் தங்கியிருக்கும் ஹமாஸ்
அரபு சுனி அமைப்பான ஹமாஸிற்கு பாரசீக சியா நாடான ஈரான் நீண்டகாலமாக உதவி செய்து வருகின்றது. ஆண்டு ஒன்றிற்கு 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் ஈரான் ஹமாஸிற்கு உதவியாக வழங்குகின்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட பின்னர் அதற்கு மேலதிகமாக 100பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது. அந்த நிதியில் ஒரு பகுதி ஈரான் உதவி செய்யும் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் கணிசமான அளவு லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு யேமனில் செயற்படுக் ஹூதி மக்கஅமைப்பிற்குச் செல்லப் படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனால் இஸ்ரேலின் உளவுத்துறைத் தகவலின் படி ஹாமாஸ் அமைப்பிற்கு அண்மைக்காலமாக ஈரானிடமிருந்து பெருமளவில் பணமோ படைக்கலன்களோ செல்வதில்லை எனச் சொல்லப்படுகின்றது. ஹமாஸ் தனக்குத் தேவையான படைக்கலன்க்ளைத் தானே உற்பத்தி செய்கின்றது. அத்துடன் ஹமாஸ் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

உலகமயமான ஹமாஸ்
ஈரானின் வேண்டுதலின் பேரில் சியா முஸ்லிம்களின் அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் போராடுகின்றது. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் நடந்த மோதலின் போது அழிக்கப் பட்ட பல நிலக்கீழ் சுரங்கங்களை மீள நிர்மானிக்க ஈரான் நிதி உதவி செய்தது. ஹமாஸின் அரயற்துறைத் தலைவர் கலீட் மேஷால் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மன் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத்தை மட்டுமல்ல முன்னாள் பிரித்தானித் தலைமை அமைச்சர் ரொனி பிளேயரையும் சந்தித்து உரையாடினார். இதைத் தொடர்ந்து இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ், துருக்கியின் அதிபர் ரயிப் எர்கோடன் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார். இச் சந்திப்புக்கள் ஹமாஸை ஈரானிடம் இருந்து பிரிப்பதற்கான முயற்ச்சியா என எண்ணத் தோன்றுகின்றது.  

ஹமாஸின் வரலாறு
ஹமாலின் தோற்றத்தை சற்றுப் பார்ப்போம். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு படைக்கலன் போராட்டத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு மதவாத அமைப்பு. அது பலஸ்த்தீனத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் மத சார்பற்ற பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கும் அதற்கும் இடயில் மோசமான முறுகல் நிலை உருவானது. அது மோதலாக மாறிய போது இஸ்ரேலிய உளவுத்துறையினர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்குப் படைக்கலன்கள் வழங்கினர். இதனால் 1987-ம் ஆண்டு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பலர் பிரிந்து சென்று தனியான அமைப்பை உருவாக்கினர். அதுவே இன்று இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பாகும்.  பலஸ்த்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக் கொண்ட போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் என ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை இன்றுவரை பேணி வருகின்றது. அத்துடன் பலஸ்த்தீனப் பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் தீக்கப்பட முடியாத ஒன்று அது புனிதப் போரின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடையது. இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்களைத் தேடித் தேடி அழிக்கத் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் அமைப்பு சிறு குழுக்கள் பலவற்றைக் கொண்ட ஒரு அமைப்பாக மாற்றம் பெற்றது. இதனால் தலைவர்கள் கொல்லப்பட்ட போதும் அது தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

ஹமாஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் நடந்த பலஸ்த்தீனியப் பாராளமன்றத் தேர்தலில் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. . பின்னர் 2007-ம் ஆண்டு இரு அமைப்புக்களும் போரிட்டுக் கொண்டன. பலஸ்த்தீனியத்தின் மேற்குக் கரையை பலஸ்த்தீனிய விடுதலை இயக்கமும் காசா நிலப்பரபபை காசாவும் தமதாக்கிக் கொண்டன.  தொடர்ந்து இன்றுவரை காசா பிரதேசத்தை ஆண்டு  வருகிறது. ஹமாஸிற்குப் படைக்கலன்களும் நிதி உதவியும் ஈரானிடமிருந்தே சென்றன..

அரபு வசந்தம் ஹமாஸ் இயக்கத்திற்கும் பாதிப்பு
அரபு வசந்ததம் என்னும் தன்னாட்சி ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி சிரியாவிற்கும் படர்ந்த போது ஈரானின் வேண்டுதலினால் ஹிஸ்புல்லா அரச படைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அது ஹமாஸ் இயக்கம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டது.  இதுதால் ஈரான் ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி உதவியை நிறுத்தி விட்டது. ஆனால் படைக்கல உதவிகளை நிறுத்தவில்லை. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம் சிரிய அதிபர் அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராகப் போராடுகிறது. எகிப்தியப் படைத்துறையினருக்கும் இஸாமிய சகோதரத்துவ அமைப்புடன் நல்ல உறவு பேணும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை.

எகிப்திய ஆட்சி மாற்றங்களும் ஹமாஸ் இயக்கமும்
எகிப்தில் முஹமட் மேர்சி தலைமையில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் சமாதானத்திற்குமான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஹமாஸ் இயக்கத்தினர் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மேர்சியின் ஆட்சி கலைக்கபட்டு படைத்துறையினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசாப் பிரதேசத்தில் எகிப்தியப் படையினருக்கு எதிராக பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சினாய் பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினருக்கு எதிராக தாக்குதல்களும் நடாத்தினர். ஹமாஸ் இயக்கத்தின் மத போதகர்கள் எகிப்தியப் படைத் துறையினருக்கு எதிராக பலத்த பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது எகிப்தியப் படைத்துறையினரை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.

நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகள்
காசா நிலப்பரப்பிற்கான வழங்கற் பாதை எகிப்திய எல்லையில் உள்ள நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகளினூடாக நடக்கிறது. சில கணிப்புக்கள் 1200 வரையிலான சுரங்கப் பாதை இருப்பதாகச் சொல்கிறன. இதனூடாக எரிபொருள் படைக்கலன்கள் உணவு எனப் பலவகையானவை எடுத்துச் செல்லப்படுகின்றன.  ஈரானில் இருந்து ஹமாஸ் இயக்கப் போராளிகளுக்கு ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்கள் இந்த சுரங்கப்பாதைகளூடாக கிடைக்கின்றன.  ஹமாஸ் இயக்கம் இந்தச் சுரங்கப்பாதையால் ஆண்டு ஒன்றிற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகவும் பெறுகின்றது. ஹமாஸ் இயக்கத்தினர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டமையால் ஆத்திரமடைந்த எகிப்தியப் படைத்துறையினர் காசாவிற்கான நிலக்கீழ் சுரங்கப்பாதைகளைச் சிதைத்தும் மூடியும் வருகின்றனர். இதனால் காசாப் பிரதேசத்தில் பொருடகளின் விலைகள் அதிகரித்ததுடன் மின்வெட்டும் கடுமையாக அமூல் செய்யப்படுகிறது. விழித்துக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் தலைமை தனது உறுப்பினர்களுக்கும் மத போதகர்களுக்கும் எகிப்தின் படைத்துறையினருக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு புறம் இஸ்ரேலும் மறு புறம் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தரைக் கடலும் இருப்பதால் எகிப்த்தின் சினாய் பாலைவனத்தினுடனான நிலக் கீழ் சுரங்கப்பாதையால் மட்டும் ஹமாஸ் வெளியுலகத் தொடர்பை வைத்திருக்கின்றது. இஸ்ரேலுடன் ஒரு நீண்ட கால மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தால் ஹாமாஸிற்கு மத்திய தரைக்கடலினூடாக போக்குவரத்து செய்ய இஸ்ரேல் அனுமதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ரொனி பிளேயர் ஹமாஸ் அரசியற் துறைத் தலைவருடன் நடத்திய பேச்சு வார்த்தை இது பற்றியதாகவே இருந்தது.

2014-ம் ஆண்டில் இருந்து ஹமாஸ் அமைப்பிற்குப் போட்டியா இன்னும் ஒரு அமைப்பை ஈரான் காசா நிலப்பரப்பில் உருவாகி வருகின்றது. அதற்கு அல் சபிரின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சபிரின் என்னும் சொல் பொறுமை எனப் பொருள்படும். இதன் தலைவராக பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளிகள் என்னும் பெயர் கொண்ட அமைப்பின் தலைவர் ஹிஷாம் சலீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர். ஈரான் இப்போது  அல் சபிரினின் தலைவர் ஹிஷாம் சலீமிற்கு ஆண்டு தோறும் 10மில்லியன் டொலர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியை அவர் இஸ்ரேலியச் சிறையில் உள்ள பலஸ்த்தீனியர்களின் குடும்பத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றார். மேற்குக் கரையில் செயற்படும் பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளிகள் அமைப்பில் இருந்து விலகிப் பலர் அல் சபிரின் அமைப்பில் இணைந்து வருகின்றார்கள். ஆரம்பத்தில் தனது எதிரி அமைப்பான பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளி அமைப்பு வலுவிழப்பதை ஹமாஸ் விரும்பியது. பின்னர் தமக்குச் சவால் விடக்கூடிய அளவிற்கு அல் சபிரின் வளர்வதையிட்டு ஹமாஸ் கரிசனை கொள்ள ஆரம்பித்தது. ஹிஷாம் சலீம் பல சிறு அமைப்புக்களையும் தனது அல் சபிரின் அமைப்புடன் இணைத்து வருகின்றார். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் அல் சப்ரின் பலஸ்த்தீனியர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு பிரபலம் அடையவில்லை என ஈரானும் ஹிஸ்புல்லாவும் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால் அல் சபிரினின் வளர்ச்சி மூலம் ஈரான் ஹமாஸிற்குத் தனது செய்தியைத் தெளிவு படுத்தியுள்ளது. அதாவது தனது நிதி மற்றும் படைக்கல உதவி பெறும் அமைப்பு தனது சொற்படி நடக்க வேண்டும் என்பதே அச்செய்தி. ஆனால் பலஸ்த்தீனியர்களுக்கு தேவையே இல்லாத ஒன்று என்று சொன்னால் ஹமாஸிற்கும் அல் சபிரினிற்கும் இடையிலான சகோதரப் போர் ஆகும்.


Thursday, 28 August 2014

மோதல் நிறுத்தத்தின் பின்னர் மார் தட்டும் ஹமாஸ்

2100 பலஸ்த்தீனியர்களும் 70 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த‌ மோதலில் பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பெருந்தொகையான கட்டிடங்களும் கட்டுமானங்களூம் அழிக்கப்பட்ட நிலையில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் சொல்கின்றனர். ஹமாஸ் மானபங்கப்படுத்தப் பட்டதாகவும் இஸ்ரேல் தோல்வியடைந்ததாகவும் நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

வெற்றி இரும்புக் கூரைக்கே
அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கிய இரும்புக் கூரை எனப்படும் எவுகணை எதிர்ப்பு முறைமைதான் ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த போரில் வெற்றி பெற்றதாகப் படைத்துறை நிபுணர்கள் சொல்கின்றனர். ஹமாஸ் அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு ஈரானில் இருந்து கொன்டு வந்து சேர்த்த ஏவுகணைகளையும் தாம் உருவாக்கிய ஏவுகணைகளையும் கண்மூடித்தனமாக இஸ்ரேல் மீது வீசினர். மொத்தமாக 4600இற்கும் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 90 விழுக்காடு இரும்புக் கூரையால் அழிக்கப்பட்டு விட்டன. காசா இஸ்ரேல் எல்லையில் வசிக்கும் 6 இஸ்ரேலியப் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். எஞ்சிய 64 பேர்களும் மோதலில் கொல்லப்பட்டன் இஸ்ரேலியப் படைத்துறையினர்.

தோல்வியடைந்தது இஸ்ரேலியத் தலைமை அமைச்சரே
எகிப்தும் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இணைந்தே ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான மோதல் நிறுத்தத்தை ஏற்படுத்தினர். இஸ்ரேலில் உள்ள தீவிரப் போக்குடையவர்கள் இந்த மோதல் நிறுத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவிக்டொர் லீபெர்மன், பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யிட்ஷக் அஹரோனொவிச், தொடர்பாடல் துறை அமைச்சர் கிலட் ஏர்டன் பொருளாதாரத் துறை அமைச்சர் நஃப்டலி பெனெட் ஆகிய முக்கிய இஸ்ரேலிய அமைச்சர்கள் மோதல் நிறுத்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை இஸ்ரேலால் முற்றாக அழிக்க முடியவில்லை. இத்தனை எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் மோதல் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொன்டார். இஸ்ரேலில் உள்ள வலதுசாரித் தீவிரவாதிகள் ஹமாஸ் அமைப்பு முற்றாக அழிக்கப்படவேண்டும் காசா நிலப்பரப்பை இஸ்ரேல் கைப்பற்றி அங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர். மோதல் தொடங்க முன்னர் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் பெஞ்சமின் நெத்தன்யாஹூ 82 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். மோதலின் பின்னர் இது 38 ஆக விழ்ச்சியடைந்துள்ளது.

நன்மைகள் பெற்ற காசா மக்கள்
இதுவரை காலமும் காசா நிலப்பரப்பின் வெளியுலகத் தொடர்பை இஸ்ரேல் தடுத்து வைத்திருந்தது. எகிப்து அதைக் கட்டுப்படுத்திக் கொன்டிருந்தது. இதனால் காசாவிற்குத் தேவையானவை எல்லாம் நிலக் கீழ்ச் சுரங்கங்களுடாகக் கடத்தியே செல்லப்பட்டன. காசா வாழ் மக்கள் மத்திய தரைக் கடலில் மீன்பிடிப்பது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது. மோதல் நிறுத்தத்தின் அம்சங்களாக இந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. காசாவில் இரு துறைமுகத்தையும் ஒரு விமான நிலையத்தையும் உருவாக்க இஸ்ரேல் அனுமதிப்பதாக உடன்பட்டுள்ளது. ஹாமாஸைப் பொறுத்தவரை இது  ஒரு வெற்றியாகும். இதனால் காசா வாழ் மக்கள் மோதல் நிறுத்த உடன்பாட்டை மகிழ்ச்சியுடன் வீதிகளில் இறங்கிக் கொன்டாடினர்.

இருதரப்பும் இன்னும் எத்தனை நாட்கள் மோதாமல் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Monday, 18 August 2014

பலஸ்த்தீனத்தின் மீதான பாராமுகமும் முசுலிம்களிடையேயான ஒற்றுமை இன்மையும்


உலகெங்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும் அவர்களால் பலஸ்த்தீன மக்களின் சொல்லோணத் துயரைத் துடைக்க முடியவில்லை. அரபு நாடுகளின் எண்ணெய் வளம் வலுமிக்க அரசுகள் எதுவும் பலஸ்த்தீன மக்களின் கண்ணீர் துடைக்க உதவவில்லை. இஸ்ரேல் தான் விரும்பிய போதெல்லாம் பலஸ்த்தீனியக் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும்  தனது படைபலத்தால் தட்டிக் கேட்பாரின்றிக் கொன்று குவிக்க முடியும்.  இதற்கான காரணம் அவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையா?

சியா சுனி முரண்பாடு
முஸ்லிம்களிற்கிடையிலான முக்கிய வேறுபாடு சியா சுனி வேறுபாடாகும் சியா முஸ்லிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றது. ஆண் மகன் இல்லாத முகம்மது நபியின் மறைவின் பின்னர் அவரது உண்மையான வாரிசு யார் என்பதில் உருவான போட்டி சியா சுனி முஸ்லிம்களிடையேயான ஒரு போட்டியாக இன்றுவரை தொடர்கின்றது. இவர்களிடையேயான போட்டி அன்றிலிருந்து இன்றுவரை ஓர் அரசியல் போட்டியாகவே தொடர்கின்றது. இது ஒரு மத நெறி தொடர்பான முரண்பாடு அல்ல. முகம்மது நபியின் பிரியத்துக் குரிய மகள் ஃபாத்திமாவின் கணவர் அலி.  இவர் ஒரு சிறந்த வீரனும் அறிஞருமாகும். இவரை நபியின் உண்மையான வாரிசாகக் கருதியவர்கள் சியா முஸ்லிம்கள் எனப்படுகின்றனர். முகம்மது நபியின் பிரியத்துக்குரிய மனைவி ஆயிஷாவின் தந்தை அபுபக்கர்தான் முகம்மது நபியின் உண்மையான வாரிசு என நம்பியவர்கள் சுனி முஸ்லிம்கள் எனப்படுகின்றனர். முகம்மதுவிற்குப் பின்னர் சியாப் பிரிவினரின் ஆட்சியில் உள்ள அடக்கு முறைகளையும் ஊழல்களையும் எதிர்த்த அலியின் மகன் சுனி முசுலிம் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டான். இதுவே இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாட்டை பெரும் முறுகலாக மாற்றியது. தற்போது உலகில் உள்ள முஸ்லிம்களில் பத்து முதல் இருபது விழுக்காட்டினர் மட்டும் சியா முஸ்லிம்கள் ஆகும். ஈரான், ஈராக், சூடான் போன்ற நாடுகளில் சியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

ஈரானியர்கள்
முஸ்லிம்களிடையிலான வேறுபாட்டின் முக்கிய காரணியாகத் திகழ்வது ஈரான். சொறஸ்றியன் என்னும் மதத்தைப் பின்பற்றி வந்தவர்கள் ஈரானியர்கள். ரோமானியர்களால் பாரசசீகத்தினர் என அழைக்கப்பட்ட ஈரானியர்களுக்கு என்று ஓர் உயரிய கலாச்சாரம் உண்டு. ஈரானியர்கள் தமது கலாச்சாரம் அரபுக்களிலும் பார்க்க உயர்வானது எனக் கருதுகின்றனர். ஈரானியர்கள் 651-ம் ஆண்டு அரபுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இசுலாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். இவற்றால் ஈரானியர்கள் அரபுக்களை விரும்புவதில்லை. ஈரானியர்களில் பெரும்பகுதியினர் சியா முஸ்லிம்கள். அரபுக்களில் பெரும்பான்மையானவர்கள் சுனி முஸ்லிம்கள். உலக அரங்கில் அரபு நாடுகள் ஒரு ஈடுபாடற்ற நிலையைக் கடைப்பிடிக்கும் போதெல்லாம் ஈரான் ஒரு செயற்படு நிலையைக் கடைப்பிடிக்கும். ஈரானுக்கு என்று ஒரு வல்லரசுக் கனவு உண்டு. ஈரான் அணுக்குண்டை உற்பத்தி செய்து அஜர்பைஜான், லிபியா, எகிப்து, அல்ஜீரியா ஆகியவற்றுடன் சவுதி அரேபியாவின் ஒரு பகுதியையும் தனது  ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்து ஒரு வல்லரசாக வேண்டும் என்பதே அக்கனவு. இதனை எல்லா அரபு நாடுகளும் எதிர்க்கின்றன. ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்க சவுதி திட்டமிடுகின்றது.

அரபுத் தேசியவாதம்
எல்லா அரபுக்களும் முசுலிம்களல்லர். எல்லா முசுலிம்களும் அரபுக்களல்லர். அரபு நாடுகளின் வாழும் முசுலிம்கள் உலக மக்கள் தொகையின் இருபது விழுக்காட்டினர் மட்டுமே! அரபுக்கள் என்ற அடையாளம் மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கின்றது. அரபுத் தேசியவாதம் முதலாம் உலகப் போரின் பின்னர் முனைப்படைந்தது. அரபுக்கள் முதலாம் உலகப் போரின் முன்னர் உதுமானிய பேரரிசினால் இசுலாமிய மதப்படி ஆளப்பட்டார்கள். முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸுனாலும் பிரித்தானியாவினாலும் ஆளப்பட்டனர். பிரித்தானிய பிரெஞ்சு ஆட்சியின் போது அரபு மக்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்ற கொள்கையால் உந்தப்பட்டனர். இவ்விரு நாடுகளில் இருந்தும் சுதந்திரம் பெற்ற பின்னர் 1948-ம் ஆண்டு அரபு நாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது முன்னாள் எகிப்திய அதிபர் கமால் நாசர் முன்வைத்தார். பின்னர் 1958-ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசு உருவாக்கப்பட்டது. இதில் ஈராக்கும் இணைவதாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடக்கவில்லை. அரபுநாட்டு ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் ஐயப்படத் தொடங்கினார்கள். மன்னர் ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் படைத்துறை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களை வெறுத்தார்கள். அரபுக்கள் அவர்களது மொழி அடிப்படையில் ஒன்றாக முயன்றாலும் அவர்களிடையே இருந்த இனக்குழும வேறுபாடுகள் அவர்களை ஒன்று படுவதைத் தடுத்தது. அவர்களிடையே பல நூற்றுக் கணக்கான வேறுபாடுகள் இருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதும் உண்டு. சவுதி அரேபிய மன்னர் குடும்பம் கட்டார் மன்னர் குடும்பத்திலும் பார்க்க மேன்மையானது என நம்புகிறது. இதனால் இந்த அரச குடும்பங்களிடையே முரண்பாடு உண்டு. ஜோர்தான், சவுதி அரேபியா, லெபனான் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்குலக சார்பானவர்களாகவும் இருக்கிறார்கள். 1967-ம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த போரில் அரபு நாடுகள் படுதோல்வி அடைந்தவுடன் அரபுத்தேசியவாதம் வீழ்ச்சியடைந்தது. அன்வர் சதாத் இஸ்ரேலுடன் செய்த  காம்ப் டேவிட் உடன்படிக்கையுடன் அரபுத்தேசியவாதம் முடிவடைந்து விட்டது எனச் சொல்லலாம். அரபு நாடுகள் இப்படி ஒற்றுமையின்றிப் போன படியால் இஸ்ரேல் என்ற நாட்டின் தோற்றத்தையோ வளர்ச்சியையோ அவர்களால் தடுக்க முடியவில்லை. இப்போது எகிப்து    இஸ்ரேலுடன் நெருங்கிய உறவையும் சவுதி அரேபியா, ஜோர்தான் போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் இரகசிய உறவையும் பேணுகின்றன. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்ய முனைந்தால் இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் இணைந்து அதை முறியடிக்க இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி ஐக்கிய ஆபிர்க்கக் குடியரசு என்னும் பேரரசை உருவாக்க வேண்டும் என விரும்பினார். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தமக்கு என ஒரு நாணய நிதியத்தையும் பொது நாணயத்தையும் உருவாக்க வேண்டும் என விரும்பினார். அவரது எண்ணம் ஈடேறவில்லை. ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் ஹுசேய்ன் படை எடுப்புக்கள் மூலம் ஈரான், குவேய்த் ஆகியவற்றைத் ஈராக்குடன் இணைக்க முயன்றார். இதானால் அமெரிக்க ஆதிக்கம் மத்திய கிழக்கில் வலுப்பெற்றது.

துருக்கியர்
மேற்கொண்டு நாம் துருக்கியைப் பார்ப்போமானால். துருக்கி மற்றைய இசுலாமிய நாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அது ஒரு குடியரசு நாடு.  தேர்தல் மூலம் தனது பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கிறது. சம்பிரதாய குடியரசுத் தலைவர் கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அதன் அரசு மதசார்பற்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட ஒரே இசுலாமிய மக்களைப் பெரும்பான்மையினர்களாகக் கொண்ட நாடு துருக்கியாகும்.  அமரிக்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடு.பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கின்றது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, பால்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது. மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது. முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவுடனும் பிரான்ஸுடனும் இணைந்து அரபு நாடுகள் தமது முதுகில் குத்தின என துருக்கி கருதுகிறது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியில் இருப்பதை துருக்கி விரும்பியது. இதனால் அது எகிப்துடன் முரண்பட்டு நிற்கின்றது. சிரியாவில் பஸார் அல் அசாத்திற்கு எதிரான் கிளர்ச்சிக்காரர்களுக்கு துருக்கி ஆதரவு தெரிவிக்கின்றது. இதனால் துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. துருக்கி பலஸ்த்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்கின்றது.
முசுலிம்கள் வாழும் நாடுகள்

ஆசிய நாட்டு முசுலிம்கள்
அரபுநாடுகளிலும் பார்க்க அதிக அளவு முசுலிம்கள் ஆசியாவில் வாழ்கின்றனர். ஆசியாவில் ஒரு பில்லியன் முசுலிம்கள் வாழ்கின்றனர் அரபு நாடுகளில் முன்னூறு மில்லியன் (முப்பது கோடி) முசுலிம்கள் மட்டுமே. அதிக அளவு முசுலிம்கள் வாழும் நாடுகள் இந்தோனேசியா, பாக்கிஸ்த்தான், இந்தியா, பங்காளாதேசம் ஆகியவையாகும். இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் வாழும் மக்கள் ஒரு மில்லியன்களுக்கும் (பத்து இலட்சம்) அதிகமாகும். இந்தோனேசியா, புரூனை, மலேசியா ஆகியநாடுகளில் முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆசியாவில் முசுலிம் வாழும் நாடுகள் அரபு நாட்டு முசுலிம்களுடன் கலாச்சார ரீதியில் சற்று வேறுபட்டு நிற்கின்றனர். பல ஆசிய நாடுகள் பலஸ்த்தீனிய விடுதலையை இராஜதந்திர ரீதியில் ஆதரிக்கின்றன. பலஸ்த்தீனியத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பெரிய ஆதரவு கிடைப்பதற்கு ஆசிய நாடுகளின் ஆதரவும் ஒரு காரணம். பலஸ்த்தீனிய விடுதலைக்கு இராசதந்திர ஆதரவு மட்டுமே கொடுக்க முடிந்தது. பலஸ்த்தீனியர்களின் படைத்துறைப் போராட்டத்திற்கு நேரடியான உதவிகளை அவர்களால் செய்ய முடியவில்லை.

இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
1928-ம் ஆண்டு இஸ்லாமிய மத அறிஞர்களாலும் போதகர்களாலும் ஹசன் அல் பன்னா என்ற பேரறிஞர் தலைமையில் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.  தொடங்கி இருபது ஆண்டுகளில் இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது. ஒவ்வொரு இசுலாமியரும், சமூகமும், அரசும் இசுலாமிய சட்டப்படியே நடக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது இ.ச.அமைப்பு. அது கல்விக் கூடங்கள், நியாய விலைக்கடைகள், மருத்துவ மனைகள் போன்றவற்றை நடாத்தி வந்தது. அப்துல் கமால் நாசர் செய்த புரட்சியின் போது இ.ச.அமைப்பு அவருடன் இணைந்து செயற்பட்டது. ஆனால் நாசர் நாட்டை சோஸலிச நாடாக நடத்த விரும்பினார். இ.ச.அமைப்பு இசுலாமியச் சட்டங்களை அமூல்படுத்தும் படி அவரை வேண்டியது. நாசரைச் சந்திக்கச் சென்ற இ.ச.அமைப்பின் தலைவர் பெண்கள் முக்காடு போடுவதைச் சட்டமாக்கும் படி வேண்டினார். அதற்கு நாசர் ஒரு வீட்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும். நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன;. மருத்துவக் கல்லூரியில் பயிலும் உமது மகளை முதலில் முக்காடு போடச் செய்யும். பிறகு நாட்டைப் பற்றிப் பார்ப்போம் என்றார். பின்னர் நாசருக்கும் இ.ச.அமைப்பிற்கும் இடையில் பகைமை ஏற்பட்டு. இ.ச.அமைப்பு எகிப்தில் தடை செய்யப்பட்டது. சிரியாவின் ஹமா நகரில் 1982-ம் ஆண்டு நாற்பதினாயிரம் இ.ச.அமைப்பின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தற்போது சிரியாவில் ஆட்சியில் இருக்கும் பஷார் அல் அசாத்தின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்தால் மேற்கொள்ளபப்ட்டது. சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன், ஈரான், ஈராக், துனிசியா, பலஸ்த்தீனம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியக் கூட்டமைப்பு, ஓமான், குவைத், சிரியா, லிபியா, சோமாலியா, யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் உட்பட 50இற்கு மேற்பட்ட நாடுகளில் இ.ச.அமைப்பிற்கு கிளைகள் இருக்கின்றன. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு படைக்கலன் ஏந்திய போராட்டம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கையுடைய அமைப்பு. ஆனால் இதன் ஒரு கிளையே ஹமாஸ் அமைப்பு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பைப் பிடிக்காத எகிப்து, சவுதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் ஹமாஸ் அமைப்பை எதிர்க்கின்றன. காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் பெரிய அளவில் ஏதும் செய்யாதமைக்கு இதுவே காரணம்.

பலஸ்த்தீனியத் தேசியவாதம்
பலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர். அப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தன.  இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான். பலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின. மாறாக யசீர் அரபாத்  ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது. ஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. 1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர். ஜோர்தான் நாடுதான் முதலில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தியது. பின்னர் லெபனானில் பலஸ்த்தீனியர்களுக்கும் லெபனானியக் கிற்ஸ்த்தவர்களுக்கும் இடையில் மோதல் நடந்தது. பின்னர் சிரியப் படைகள் லெபனானிற்குள் சென்று பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினரைப் பெருமளவில் கொன்று குவித்தது. இதானல் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினர் லெபனானில் இருந்து வெளியேறினர். பின்னர் லெபனானில் எஞ்சியிருந்த பலஸ்த்தீனியர்களிடையே ஹிஸ்புல்லா அமைப்பு உருவானது. பலஸ்த்தீன விடுதலைக்கு என பல்வேறுபட்ட அமைப்புக்கள் உருவாகின. இவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதும் உண்டு.

அரபுக்களின் பாராமுகம்
அரபு நாட்டு செல்வந்தர்கள் இலண்டனிலும் பரிஸிலும் லஸ் வேகஸிலும் ஓர் இரவில் செலவளிக்கும் பணத்தில் பலஸ்த்தீனியர்களுக்கு பெரும் நிவாரணம் தேடித்தர முடியும். 2014 ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் புனித ரம்ழான் வேளையில் இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் அப்பாவி பலஸ்த்தீனியர்களைக் கொன்றும் அவர்களது வாழ்வாதாரங்களை அழித்தும் கொண்டிருக்கையில் மற்ற அரபு நாடுகள் ஒரு சில நிவாரணப் பொருட்களை மட்டுமே அனுப்பின. காத்திரமான இராஜதந்திர நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. ஒரு பிரபல பலஸ்த்தீனிய கருத்துப் பட வரைஞர் பலஸ்த்தினத்தை ஒரு  பெண்ணாகச் சித்தரித்து அப்பெண்ணை இஸ்ரேல் நெஞ்சில் கத்தியால் குத்துவது போலவும் அரபு நாடுகள் அப்பெண்ணிற்கு முதுகில் குத்துவது போலவும் வரைந்திருந்தார். அரபு நாடுகள் கடந்த மூன்று ஹமாஸ்-இஸ்ரேலிய மோதல்களின் போதும் மௌனத்தையே கடைப்பிடித்தன. பலஸ்த்தீன அறிஞர்கள் சபை இந்த மௌனத்தைக் கடுமையான வார்த்தைகள் உள்ளடக்கிய அறிக்கையால் கண்டித்தது.

மோதல் நிலைகள் முஸ்லிம்களிடை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பலஸ்த்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை முஸ்லிம்களால் தடுக்க முடியாமல்லிருக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...