Monday, 16 January 2017

கறுப்புப் பணமல்ல சாம்பல் பணமே நாட்டை சாம்பலாக்கும்



சட்ட விரோதப் பண இருப்புக்களில் பல வகைகள் உள்:

ஒருவர் தன் உழைப்பால் பெறும் வருமானத்தை அரசுக்குத் தெரிவித்து அதற்குரிய வரியைக் கட்டாமல் வைத்திருந்தால் அது கறுப்புப் பணமாகும்.

ஒருவர் திருடுவதன் மூலம் பெற்ற வருமானத்தை தன உழைப்பின் மூலம் பெற்ற வருமானமாக அரசுக்கு காட்டி வரி செலுத்தியிருந்தால் அது கறுப்புப் பணம் அல்ல. ஆனால் சட்ட விரோதமான பணமாகும்.

ஓர் அரச ஊழியர் இரண்டு ஒரு கோடிக்குச் செய்ய வேண்டிய பொது வேலையை இரண்டு கோடிக்குச் செய்ததாகக் கணக்குக் காட்டி ஒரு கோடியை தனது பணமாக்கினால் அது ஊழல் பணம். அதற்கு வருமான வரி கட்டாமல் விட்டால் அது கறுப்புப் பணம். அரசை ஏமாற்றி பெற்ற பணம் என்பதால் சட்ட விரோதப் பணமுமாகும்.

நூறு கோடி டொலர்களுக்கு வாங்க வேண்டிய பீராங்கியை நூற்றி ஐம்பது கோடி டொலர்களுக்கு வாங்குவதாகக் கணக்குக் காட்டி பீரங்கி விற்கும் நிறுவனத்திற்கு அரச நிதியில் இருந்து நூற்றி ஐம்பது டொலர்களைச் செலுத்தி மிகையான ஐம்பது மில்லியன் டொலர்களில் முப்பது மில்லியன் தலைமை அமைச்சரின் பெயரிலும் பத்து மில்லியன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெயரிலும் பத்து மில்லியன் நிதி அமைச்சர் பெயரிலும் பீரங்கி விற்கும் நிறுவனம் வைப்பிலிடுவது ஊழலாகும். இந்த ஐம்பது மில்லியன் டொலர்களும் ஊழல், சட்ட விரோத, கறுப்புப் பணமாகும்.

சாம்பல் பணம் உதாரணம் - 1
மாதவன் என்னும் பெயருடைய இந்திய நிறுவனம் ஒன்று உலகச் சந்தையில் நூறு டொலர்கள் பெறுமதியான பொருளை இறக்குமதி செய்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து அதற்கான நூறு டொலர்களை செலுத்துவது வழமையாகச் செய்ய வேண்டியது. மாதவன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயரில் சிங்கப்பூரில் ஒரு நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனத்தின் பெயரில்  பனாமாவில் ஆதவன் என்னும் பெயரில் இன்னொரு நிறுவனம் இருக்கும். பனாமாவில் இருக்கும் ஆதவன் நூறு டொலர்களுக்கு பொருளை வாங்கி அதை இந்தியாவிற்கு நூற்றி ஐம்பது டொலர்களுக்கு விற்பனை செய்யும். அந்த ஐம்பது டொலர் இலாபத்திற்கு ஆதவன் நிறுவனம் பனாமாவில் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. பனாமா ஒரு வருமானவரிப் புகலிட நாடாகும். ஆதவன் நிறுவனம் சிறு கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். நூற்று ஐம்பது டொலர்களுக்கு இறக்குமதி செய்த பொருளை இந்தியாவில் மாதவன் நிறுவனம் நூற்றி அறுபது டொலர்களுக்கு விற்பனை செய்து இலாபம் பத்து டொலர்களுக்கு மட்டுமே வருமான வரி செலுத்தும். ஆனால் மாதவனின் உரிமையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈட்டிய இலாபம் அறுபது டொலர்கள். சில சமயங்களில் இந்தியாவில் நூற்றி இருபத்தைந்து டொலர்களுக்கு அந்தப் பொருளை விற்பனை செய்து முப்பத்தைந்து டொலர்களுக்கு நட்டத்தில் வியாபாரம் நடப்பதாக கணக்குவிடப்படும். இந்த நட்டம் மாதவன் நிறுவனத்தின் வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈட்டிய இலாபத்திற்கு எதிராக கழிக்கப்பட்டு அந்த வருமானத்திற்கு கட்ட வேண்டிய வரி குறைக்கப்படும். மாதவனின் உரிமையாளர்களுக்கு ஆதவனின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் ஐம்பது டொலர்கள் சேரும்.

சாம்பல் பணம் உதாரணம் – 2
பாலன் என்னும் பெயருடைய நிறுவனம் இந்தியாவில் இருந்து நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்யும் தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.  நூற்றி ஐம்பது டொலர்களுக்கு உலகச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய அந்தப் பொருளை பனாமாவில் இருக்கும் பாலன் நிறுவனத்தின் உரிமையாளர்களிற்கு சொந்தமான மாலன் நிறுவனத்திற்கு நூற்றி ஐந்து டொலர்களுக்கு ஏற்றுமதி செய்வதாக பத்திரங்கள் தயாரிக்கப்படும். ஏற்றுமதி செய்யும் பொருள் பின்னர் பனாமாவில் இருக்கும் மாலன் நிறுவனத்தில் இருந்து வேறு நாடுகளுக்கு நூற்றி ஐம்பது டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும். இதனால் இந்தியப் பாலனுக்கு ஐந்து டொலர்கள் இலாபமும் பனாமா மாலனுக்கு நாற்பத்தி ஐந்து டொலர்களும் இலாபமாகக் கிடைக்கும். மாலன் தனது இலாபத்திற்கு வரி வரி செலுத்தாது. பாலன் இந்தியாவில் ஐந்து டொலர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும். ஆனால் பாலன் மற்றும் மாலன் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கிடைந்த மொத்த இலாபம் ஐம்பது டொலர்கள். அதில் ஐந்து டொலர்களுக்கு மட்டுமே அவர்கள் வரி செலுத்துகின்றார்கள். பனாமாவில் அவர்களுக்கு நாற்பத்தைந்து டொலர்கள் வங்கியில் சேரும். பனாமா போன்ற வருமான வரிப் புகலிட நாடுகளினூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதாக பத்திரங்கள் தயார் செய்வதால் பல மில்லியன் டொலர்கள் வருமான வரி ஏமாற்றம் செய்யப் படுகின்றது. இந்த வர்த்தகத்தால் இந்தியாவின் சட்டம் ஏதும் மீறப்படவில்லை. இதனால் அரசுக்கு உரிய வகையில் கணக்குகள் காட்டப்படுகின்றன.
 


இருட்டுப் பணம் (Dark Money)
இருண்ட பணம் என்பது செல்வந்தரகள் இலாபத்தை நோக்கமாகக் கொண்டிராத நிறுவனங்களுக்கு கொடுக்கும் பணமாகும். இந்த "இலாப நோக்கற்ற" நிறுவனங்கள் மூலம் செல்வந்தர்கள் தமது வர்த்தக் நோக்கங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல தேர்தல் முடிவுகளையும் கூட தமக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். அமெரிக்காவில் இந்த இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தமக்கு கிடைக்கும் "நன்கொடைகள்" எங்கிருந்து கிடைத்தன என்பதைப் பகிரங்கப்படுத்த மாட்டார்கள்.

ஆட்சியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்
மேலுள்ள உதாரணங்களில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி மூலமாக பல மில்லியன் இந்தியப் பணங்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் திரள்கின்றன. அவை மூலம் அவர்கள் வேறு நாடுகளில் அந்தப் பணங்களை முதலீடு செய்கின்றனர். அது மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு  முதலீடு தேவை என்னும் செய்தி பரப்பப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிவிலக்கு வழங்கப்படுகின்றது. இதனால் ஆதவன் மற்றும் பாலன் நிறுவனங்களின் உரிமையாளர்களின் பணம் இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு என்னும் பெயரில் வருகின்றது. அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு அவர்கள் வருமான வரி கட்ட மாட்டார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆதவன் பாலன் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்களின் கைப்பாவையாக அவர்கள் மாறிவிடுவார்கள். அவர்களின் நிறுவனங்கள் கொடுத்த நிதியைப் பாவித்தே கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறும். இதனால் வெளிநாட்டு முதலீட்டுக்கு வரிவிலக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வழங்கப்படும்.

நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கல்
இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கல் செய்யப்பட்டது. கறுப்புப் பணத்திற்கு எதிராக மோடி செய்த துல்லியத் தாக்குதல் இது என விபரிக்கப்பட்டது. ஆனால் பெருந்தொகைக் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் அதை நாணயத் தாள்களாக வைக்க மாட்டார்கள். தமது கறுப்புப் பணங்களுக்கு காணிகளும் கட்டிடங்களும் வாங்கிவிட்டனர். பலர் தமது பிள்ளைகளின் பெயரில் உல்லாச விடுதிகளும் கடைத் தொகுதிகளும் வாங்கி விட்டனர். ரியல் எஸ்டேட் எனப்படும் காணி மற்றும் கட்டிடங்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களின் சிறந்த புகலிடமாகும். கோடிக் கணக்கான காணி மற்றும் கட்டிடங்களை இலட்சக் கணக்குக்கு வாங்குவதாக கணக்குக் காட்டி விடுவார்கள். இதனால் கறுப்புப் பணம் விற்பனையாளர்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்.

சாதியின்றி ஏதுமில்லை.
இந்திய அரசியலை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் பற்றி ஆராய்வதானால் அங்குள்ள சாதிப்பிரச்சனையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தில் மிகச்சிறிய வியாபாரிகளான தெருவோர வியாபாரிகளும் வீடுவீடாகச் சென்று விற்பனை செய்வோரும் சிறிய காணிகளில் பயிர் செய்வோரும் கணிசமான பங்கு வகிக்கின்றனர். இவர்கள் சுப்பிரமணியன் சுவாமி போல் பூனூல் தரித்தவர்கள் அல்லர். இவர்களில் நிலை பற்றி சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் கவலைப் பட மாட்டார்கள். நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கியதால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே. காசில்லாத சமுதாயம் என்ற கூக்குரல் மிகச் சிறிய தொழில் புரிவோரை ஒழித்துக் கட்டும் சாதிய வெறியை நோக்கமாகக் கொண்டதா? காசிலாச் சமுதாயம் உருவாக்கப்பட்டால் இவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழப்பர். இவர்களது வியாபாரம் பெரு முதலாளிகளுக்குப் போய்ச் சேரச் செய்வதே சுவாமியில் நோக்கமா?

மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை
நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கியதால் மொத்தக் கறுப்புப் பணத்தில் 12 விழுக்காடு மட்டுமே ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.  2008-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் உலகில் பல நாடுகளும் மக்கள் கைகளில் பணப்புழக்கத்தை எப்படி அதிகரிப்பதற்கு பல வழிகளில் முயல்கின்றன. Quantitative Easing என்ற அளவு சார் என்ற அளவுசார் தளர்ச்சி மூலம் வங்கிகளுக்கு அதிக நிதியை வழங்கி அதன் மூலம் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை தூண்ட முயன்று கொண்டிருக்கையில் இந்தியா நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தை குறைத்துள்ளது. இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையவிருக்கின்றது. All India Manufacturers’ Organisationஇன் அறிக்கையின் படி 2016 டிசம்பர் மாதம் சிறு சேவை நிறுவனங்கள்  வேலையாட்களை முன்றில் ஒன்றால் குறைத்துள்ளன்ன, அவர்களது வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது.

mall services companies in India cut a third of jobs and saw their revenues cut in half in the mont

உலகெங்கும் இந்தியச் சாம்பல் பணமும் கறுப்புப் பணமும்
உலகெங்கும் உள்ள வருமானவரிப் புகலிட நாடுகளில் அல்லது பிரதேசங்களில் இந்தியாவின் பணம் 151 முதல் 181 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பத்தரை இலட்சம் கோடி இந்திய ரூபாக்கள். சில மதிப்பீடுகள் இது எழுபது இலட்சம் கோடி எனத் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 2016-ம் ஆண்டு 135.7 இலட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் ஏதோ ஒருவகையில் நாணயச் சுழற்ச்சியில் கலந்து பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும். சீதனங்களாக, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் அன்பளிப்புக்களாக அது நாணயச் சுழற்ச்சியில் கலக்கின்றது. இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 23.7 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பங்களிப்பாகும் என 2007-ம் ஆண்டு உலக வங்கி மதிப்பிட்டிருந்தது. தற்போது அது இன்னும் அதிகமாக இருக்கும். நாணயத் தாள்களைச் செல்லுபடியற்றதாக்கியவர்கள் இதை நன்கு அறிவர். அவர்களது முழு நோக்கமும் தாழ்த்தப் பட்ட சமூகத்தினர் செய்யும் சிறு தொழிலகளை ஒழித்துக் கட்டுவதே.

அந்நிய நாடுகளின் கள்ள நணயத்தாள்கள்
இந்தியாவில் அதன் எதிரி நாடுகள் கள்ள நாணயத் தாள்களை புழக்கத்தில் விட்டுள்ளன. அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பாவிக்கப் படுகின்றன என்பது உண்மையே. அதே போன்ற குற்றச் சாட்டை இந்தியாவின் எதிரி நாடுகள் இந்தியா மீது சுமத்துவதையும் மறுக்க முடியாது. நாணயத் தாள் செல்லு படியற்றதாக்கல் இந்த கள்ள நாணய நோட்டுக்களை ஒழித்துக் கட்டியதும் உண்மை. 

வருமான பங்கீட்டில் சமத்துவமின்மை
இந்தியாவின் மொத்தச் செல்வத்தின் அரைவாசியை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் ஒரு விழுக்காட்டினர் தம் வசம் வைத்துள்ளனர். இந்தியாவின் மொத்தச் செல்வத்தின் முக்கால் பங்கை இந்திய மொத்த மக்கள் தொகையின் பத்தில் ஒரு பங்கினர் வைத்துள்ளனர். கறுப்புப் பணத்திலும் பார்க்க பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த வருமானப் பங்கீட்டில் சமத்துவமின்மையே. இது பெரும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனையைக் கொண்டு வரக் கூடியது. ஆனால் இந்த வருமான சமத்துவமின்மையை சாதி வெறியர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள்.

கறுப்பு இந்தியாவில் வேலை செய்யும் சாம்பல் உலகில் வேலை செய்யும்
கறுப்புப் பணம் பல சிறு முதலாளிகளின் பணம். அது பொருளாதாரப் பங்களிப்புச் செய்கின்றது ஆனால் வெளிநாடுகளில் மறைக்கப்பட்டுள்ள சாம்பல் பணம் ஒரு சில பெரு முதலாளிகளுக்குச் சொந்தமானது. அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை. அந்த ஒரு சில முதலாளிகளின் கைகளில்தான் இந்தியாவின் ஆட்சியாளர்கள் தங்கியிருக்கின்றார்கள்.






Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...