2021 மே மாதம் 7-ம் திகதி இஸ்ரேலியப்படையினர் கிழக்கு ஜெருசேலத்தில் உள்ள புனித அல் அக்சா பள்ளிவாசலை களங்கப்படுத்தினர் என்பதற்காக இஸ்ரேல் மீது மே 10-ம் திகதி தமது எறிகணைகளை வீச ஆரம்பித்தனர். வழமை போல் இஸ்ரேலின் பதிலடி மிக மிக காத்திரமானதாக இருந்தது. ஹமாஸ் அமைப்பின் எறிகணை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பொறியியலாளர்கள் பலரது வதிவிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசி அவர்களில் பலரை கொன்றது ஹமாஸ் அமைப்பினரை நிச்சயம் அதிச்சிக்கு உளாக்கியிருக்கும். அவர்களின் வதிவிடங்களையும் நகர்வுகளையும் ஹமாஸ் அமைப்பினர் மிகவும் இரகசியமாக வைத்திருந்தனர். இஸ்ரேலின் உளவுத் தொழில்நுட்பம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இன்னொன்று அவர்கள் விசிய எறிகணைகளின் பெரும் பகுதியை இஸ்ரேலின் IRON DOME என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை இடைமறித்து அழித்துவிட்டது. 2011-ம் ஆண்டு இஸ்ரேல் அமெரிக்காவின் ஒன்றரை பில்லியன் டொலர் நிதியுதவியுடன் IRON DOME முறைமையை உருவாக்கியது. இஸ்ரேல் அந்த முறைமையில் செயற்படு திறன் பற்றிய தகவல்களை அமெரிக்காவுடன் பகிந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா நிதியுதவியை வழங்கியது. IRON DOME முறைமை செயற்படத் தொடங்கியவுடன் ஹமாஸ் வீசிய முதலாவது ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது.
புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையில் இரும்புக் கூரை (IRON DOME) என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம். இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியும். இரும்புக் கூரை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இவை ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் இரும்புக்கூரையில் உள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஏவுகணையை அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் டோலர்கள் பெறுமதியான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாவிக்கின்றது
இனம் காண் நிலையம் (Radar Unit)
இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.
கட்டுப்பாட்டகம் (Control Centre )
இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் யாருமற்ற வெளியான அல்லது புறம்போக்கான இடம் என்றால் அதை அப்படியே விட்டுவிடும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம், இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.
ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)
ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும். வீசப்படும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 2.2மடங்கு வேகத்தில் பாயும்.
2014-ம் ஆண்டு நடந்த ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் ஹமாஸ் அமைப்பினர் 4600இற்கும் அதிகமான எறிகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசினர். அவற்றில் 90விழுக்காட்டை இஸ்ரேலின் IRON DOME முறைமை இடை மறித்து அழித்துவிட்டது. அதில் ஆறு இஸ்ரேலியர் மட்டும் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தனது எறிகணை எதிர்ப்பு முறைமையை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இஸ்ரேல் தற்போது பயன்படுத்தும் இரும்புக் கூரை(Iron Dome) என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரி வீசும் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் நான்கு முதல் எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து இனம் கண்டு இடைமறித்து தாக்கும். இடைமறித்து தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் தமிர் (Tamir) ஏவுகணைகள் ஒவ்வொன்றும் நூறு ஆயிரம் டொலர்கள் பெறுமதியானவை. ஒவ்வொரு ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் நூறு மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. இதனால் ஏற்படும் பெரும் செலவைக் குறைப்பதற்கு இரும்புக்கூரையின் மென் பொருள் செயற்பாட்டில் மதிநுட்பம் மிக்க மாற்றத்தை இஸ்ரேலியர்கள் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதன்படி எதிர் வீசும் எறிகணைகள் பாயும் திசை வேகம் ஆகியவற்றை துல்லியமாக ரடார் மூலம் கணிப்பிட்டு அவற்றில் எவை இஸ்ரேலியக் குடியிருப்புக்கள் மீது விழும் எவை கட்டாந்தரையில் விழும் என பிரித்தறிந்து குடியிருப்புக்கள் மீது விழும் எறிகணைகளை மட்டும் இடை மறித்து அழிக்க ஏவுகணைகள் வீசப்படும். ஹமாஸ் அமைப்பினர் இரும்புக்கூரை (Iron Dome) வீசக்கூடிய ஏவுகணைகளிலும் பார்க்க அதிகமான எறிகணைகளை விசுவதன் மூலம் தாங்கள் வீசும் மேலதிக எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்து தாக்குவதை உறுதி செய்ய முயல்கின்றனர். அதனால் இஸ்ரேல் தமது இரும்புக்கூரை (Iron Dome) ஒரேயடியாக எண்ணூறு ஏவுகணைகளை வீசக் கூடிய வகையில் மேம்படுத்தியுள்ளனர். தற்போது ஹமாஸ் அமப்பால் ஒரேயடியாக எண்ணூறு எறிகணைகளை வீச முடியாது. ஹமாஸின் தகவற்படி 2021 மே நடந்த மோதலில் ஐந்து நிமிடங்களுக்குள் 137 எறிகணைகள் வீசப்பட்டன. இந்த மோதலில் இஸ்ரேலில் சில கட்டிடங்களின் சில பகுதிகள் சிதைக்கப்பட்டன. ஆனால் காசா நிலப்பரப்பில் பல மாடித்தொடர்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
உலகில் இஸ்ரேல் மட்டுமே மிகச்சிறந்த எறிகணை எதிர்ப்பு முறமையைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் அதிக கவனம் செலுத்துகின்றன. அவை எதிரியின் ஏவுகணைகள் குண்டு வீச்சு விமானங்களை தொலைவில் வைத்தே இடைமறித்து அழிக்கக் கூடியவை. இரசியாவின் எஸ்-400 தற்போது உள்ள வான் பாதுகாப்பு முறைமைகளில் மிகச் சிறந்ததாகும். அதற்கு அடுத்த படியாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய David’s Sling (தாவீதின் கவண்) என்ற வான்பாதுகாப்பு முறைமை இருக்கின்றது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக David’s Slingஐ பாவிக்கத் தேவையில்லை. ஆனால் லெபனானில் இருந்து செயற்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடன் மோதும் போது David’s Slingஐ இஸ்ரேல் பாவிக்கும். உலகில் வான் பாதுகாப்பு முறைமையை அதிகம் பாவிக்கும் நாடாக இஸ்ரேல் இருக்கின்றது.
1948-ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் நடந்த எல்லா போர்களிலும் மோதல்களிலும் இஸ்ரேலியர்களின் கை ஓங்கி இருப்பதற்கு அவர்களது மதிநுட்பமே காரணம்.
மேலதிக தகவல்களுக்கு:-