சிரியக் கிளர்ச்சியைத் தீர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையும் அரபு லீக் நாடுகளும் இணைந்து முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் அவர்களை ஐநா பாது காப்புச் சபையின் தீர்மானம் 2043இன் மூலம் சமாதானத் தூதுவராக நியமித்தன. கோஃபி அனன் தனது முதல் நடவடிக்கையாக ஒரு ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார். அதன் அம்சங்கள்:
- சிரிய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சிரிய மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை எடுத்தல்
- மோதல்களை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் படைக்கலன்கள் ஏந்தாத 300கண்காணிப்பாளர்களைச் சிரியாவிற்குள் அனுமதித்து மோதல் நிறுத்தத்தை உறுதி செய்தல்.
- மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல். மோதல் நடக்கும் இடங்களில் நாளொன்றிற்கு இரு மணித்தியாலங்கள் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல்.
- காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்திருப்பவர்களை உடன் விடுதலை செய்தல்.
- நாடு முழுவதும் ஊடகவியலாளர்களை தடையின்றி பயணங்கள் செல்ல அனுமதித்தல்
- சட்ட பூர்வமான அமைதியான ஆர்ப்பாடங்களை அனுமதித்தல்.
இந்த அடிப்படையில் சிரியத் தலைநகர் டமஸ்கஸ் சென்று சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துடன் கோஃபி அனன் பேச்சு வார்த்தை நடாத்தினார். கடும் மோதல்கள் நடக்கும் இடங்களில் நடவடிக்கை எடுக்க தானும் அல் அசாத்தும் உடன்பட்டதாக கோஃபி அனன் ஜெனீவாவில் இருந்து வழங்கிய காணொளிப் பேட்டியில் கூறினார்.ஆனால் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை
ஈரான் குற்றவாளியா தீர்வில் பங்காளியா?
கோஃபி அனன் ஜூலை 10-ம் திகதி ஈரானிய உயர்மட்டத்தினருடன் சிரியப் பிரச்சனை தொடர்ப்பாகக் கலந்துரையாடினார். 2014 இல் சிரியாவில் நடக்கவிருப்பதாகக் கூறப்படும் தேர்தல் சிரியப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் அழுத்தமாகத் தெரிவித்தார்கள். அத்தேர்தல் மூலம் சிரிய மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை மக்களாட்சி முறைப்படி தெரிவு செய்யலாம் என்று ஈரான் கருதுகிறது. சிரியப் பிரச்சனையில் ஈரானையும் ஒரு பங்காளியாக இணைத்து கோஃபி அனன் ஈரானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்தியதை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்த்தன. சிரிய அரசுக்கு கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஈரான் உதவி செய்வதால் சிரியப் பிரச்சனைக்கு ஈரானும் பங்களிப்புச் செய்கிறது என்பது மேற்கு நாடுகளின் கருத்து.
மாறி மாறிக் குற்றச் சாட்டு.
கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்கின்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது. மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்கிறது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்கிறது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்கிறது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்கிறது.
லிபியப் பாணியில் சிரியா
சிரியாவின் அரச சேவையில் இருந்து படைத்துறையினரும் அரச தந்திரிகளும் ஒவ்வொருவராக வெளியேறிவருகின்றனர். மேற்குலக நாடுகளின் தூண்டுதல்களால் இப்படி நடக்கலாம். ஏற்கனவே லிபியாவிலிருந்து மும்மர் கடாஃபியை பதவியில் இருந்து விரட்ட இந்த வெளியேற்றங்கள் நடந்தன. கடைசியாக சிரியாவின் ஆதரவு நாடான ஈராக்கிற்கான சிரியத் தூதுவர் விலகியுள்ளார். ஐக்கிய அமெரிக்கா சமாதான முயற்ச்சி தோல்வியடைந்து கிளர்ச்சி தீவிரமடைந்து பஷர் அல் அசாத்தை பதவியில் இருந்து விரட்டுவதை விரும்பலாம். அதை சீனாவும் இரசியாவும் எதிர்க்கலாம். இது சிரியாவில் பெரும் இரத்தக் களரியியை ஏற்படுத்தும்.
கடைசியாக கோஃபி அனன் தெரிவித்தவற்றில் முக்கியமான ஒரு அம்சம்: "ஐநா பாதுகாப்புச் சபை ஒரு மனதாக சிரிய ஆட்சியாளர்களையும் கிளர்ச்சியாளர்களையும் தனது சமாதானத் திட்டத்தை ஏற்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என எச்சரிக்க வேண்டும்"
கோஃபி அனனின் இந்த வேண்டுகோளில் இருந்து அவரது சமாதானத் திட்டத்தை இரு தரப்பும் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.