Saturday, 13 June 2009

யசூசி அகாசி கூற்று இந்தியாவிற்கு செருப்படி


சிறிலங்கா தொடர்பான தெளிவு எமக்கு இருந்தனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்ளவில்லை என்று சிறிலங்காவுக்கான ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல் உலகறிந்த செய்தி.
தமிழர்களின் அவலமானது மானிட அவலத்தின் உச்சக் கட்டம்.
இது இலங்கையின் அயல் நாடான இந்தியாவிற்கு தெரியாமல் போனது ஏன்?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொண்டது. ஜப்பானியத் தூதுவர் தமக்கு இலங்கைபற்றிய தெளிவான அறிவு இருந்த படியால் தமது நாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்கிறார். அப்போ இந்தியாவிற்கு ஏன் இந்த தெளிவு ஏற்படவில்லை? இந்தியாவும் இனக்கொலையை இணைந்து நடத்துகிறதா?

Friday, 12 June 2009

இந்தியா தலையிட முடியாமையால் வகுத்த தலையிடாக் கொள்கை தலையிடிக் கொள்கையாகியது.


இலங்கையில் இந்தியாவால் தலையிட முடியாத நிலை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவி வருகிறது. தலையிட்ட தெல்லாம் பாக்கிஸ்த்தான் அல்லது சீனா தலையிடாமல் தடுக்கவே இந்தியா இலங்கையின் அனுமதியுடன் அவ்வப்போது இந்தியா தலையிட்டு வந்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில் சீன சார்புப் பொதுவுடமை வாதிகள் வட கொரிய ஆதரவுடன் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டபோது இந்தியப் படைகள் வந்து அப் புரட்சியை அடக்கியது. இந்த ஆயுதப் புரட்சிக்கு சீனா ஆதரவு அளிக்கவில்லை. இலங்கையில் பொதுஉடமைவாத ஆயுதப் புரட்சிக்கு உரிய சூழ்நிலை இல்லை என எஸ். சண்முகதாசன் அவர்கள் சீனாவிற்கு தெரிவித்தமையும் இலங்கையுடன் நல்ல நட்புறவை தொடரந்து பேண சீனா விரும்பியமையுமே இதற்கான காரணங்கள்.
.
1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலத்த அச்சுறுத்தல் என்றுணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அப்போது 1977 இனக்கொலையை அடுத்து உருவாகி இருந்த தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கையிலெடுத்தார். அப்போதும் கணிசமான அழுத்தத்தை இலங்கைமீது பிரயோகிக்க பெரிதும் சிரமப்பட்டார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதி பல பிரயாணங்களை இலங்கைக்கு மேற்கொண்டார். இந்தியா பற்றி இலங்கை அரசியல் வாதிகளும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைப் பிரதமராக இருந்த பிரேமதாச இந்தியாவைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். முடியுமானல் உன் படையை அனுப்பிப் பார் என்று சவால்விட்டார் அவர். இதற்குப் பதிலளித்த இந்திரா அம்மையார் எமது அயலவர்கள் தமது கற்பனையை கன்னா பின்னா என ஓடவிடுகிறார்கள் என்றார்.
..
ஆண்டுகள் ஓடின தமிழர் பிரச்சனை தீரவில்லை. இலங்கையில் அமெரிக்காவின் பிடியும் தளரவில்லை. இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். அரசியல் கற்றுக் குட்டி ராஜுவ் காந்தி பதவிக்கு வந்தார். இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கரந்தடித் தாக்குதலை நடாத்தி பலத்த சேதம் விளைவிக்கும் நிலைக்கு வளர்ந்தனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட புலிகள் மறுத்தனர். ராஜுவ் காந்தி இலங்கைக்கும் புலிகளுக்கும் பலத்த நெருக்குதலைக் கொடுத்தார். இந்தியாவின் சகல திட்டங்களும் அமெரிக்க உளவுத் துறையூடாக இலங்கைக்கு தெரியப் படுத்தப் பட்டது. இந்தியாவின் நெருக்குதலுக்கு அடிபணிவது போல் ஜயவர்த்தனே நடித்து இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை முடிந்து விடுவதில் வெற்றி கண்டார். திருகோணமலைத்திட்டத்தையும் சிலாபத்திட்டத்தையும் இலங்கை கைவிட்டது. தமிழர்களின் முதுகில் ஏறி நின்று இந்தியா இதைச் சாதித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பேராட்டமின்றி இந்தியாவால் இதைச் சாதித்திருக்க முடியாது
.
இந்தியாவின் இலங்கைமீதான பிடி இந்தியப் படை இலங்கையில் இருக்கும் வரை தொடரும் என உணர்ந்த சீனாவும் அமெரிக்காவும் இந்தியப் படைகளை வெளியேற்றும் படி ஜனதா விமுக்திப் பெரமுனையை இலங்கை அரசிற்கு எதிராக தீவிர கிளர்ச்சியில் ஈடுபட வைத்தன. இலங்கையில் பெரும் அரசியல் நெருக்கடி இதனால் 1987-1988 இல் ஏற்பட்டது. பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். பிரேமதாச இந்தியப் படைகளை வெளியேறும் படி வற்புறுத்தினார். இந்தியா தனது ஆதரவாளர்களாகச் செயற்பட்டவர்கள் மூலம் பிரேமதாச அரசைக் கவிழ்கக எடுத்த முயற்சி பலத்த தோல்வியைச் சந்தித்தது. பிரேமதாசா இந்தியாவுடன் போர் புரிய புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததாகவும் பலர் நம்பினர்.
.
விடுதலைப் புலிகள் மீண்டும் வளர்ச்சியைக் கண்டனர். இலங்கை இந்தியாவுடன் நட்புபோல் நடித்துக் கொண்டு சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் அமெரிக்காவுடனும் தனது நட்பைப் பேணிவந்தது. விடுதலைப் புலிகளின் பாரிய வளர்ச்சி இந்தியாவை அதிர வைத்தது. இந்தியா நீண்டகாலத் திட்டமொன்றைத் தீட்டியது. இலங்கைப் படையினருக்குப் பயிற்ச்சி ஆயுத உதவி உளவுத் தகவல் விடுதலைப் புலிகளைப் பிரித்தல் எனப் பலவற்றை செய்து கொண்டிருக்க சீனா அம்பாந்தோடடையைத் தனக்குப் பெற்றுக்கொண்டது.
.
இலங்கையின் தயவில் இந்தியா
இப்போது விடுதலைப் புலிகள் ஒழிக்கப் பட்டுவிட்டதாக இலங்கை அறிவித்தது. இந்தியாவிற்கு என்று பிடியில்லை. இதை அண்மையில் சிவசங்கர மேனன் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த வேளையில் சொல்லிய கருத்துக் களிலிருந்து தெரிகிறது. இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சொன்னது ஒரு வகையில் சரிதான் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவ்சங்கர் மேனன் கூறினார். இந்தியா எந்த அழுத்தத்தயும் இலங்கைக்கு கொடுக்கவில்லை எனறார். உண்மையில் கொடுக்க முடியாத நிலையில் தான் அவரது இந்தியா இருக்கிறது. இலங்கைதான் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. இலங்கையின் அழுத்தத்தால் தான் இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் சந்திக்கவிருந்தது இரத்துச் செய்யப் பட்டது.
.
மெல்ல மெல்ல உறுதியாக வளரும் சீன ஆதிக்கம்.
சீனா இலங்கைக்கு வழங்கிய காதுவிகள் (ராடார்கள்) தென்னிந்தியாவை வேவுபார்கக் கூடியவை. இலங்கை புதிதாக வரைந்து கொண்டிருக்கும் கரையோரப் பாதுகாப்புத் திட்டம் இந்தியக் கடற்படைக்கு சீனா வைக்கும் ஆப்பு. இலங்கை தனது கடல் எல்லையை விரிவாக்கும் எண்ணமும் உண்டு. இத்திட்டத்தில் இலங்கை கச்ச தீவில் உயரிய கண்காணிப்புக் கோபுரத்தையும் அமைக்க விருக்கிறது. யார் எதைக் கண்காணிக்கப் போகிறார்கள்? இப்போதைய நிலையில் இந்தியாவின் வெறுப்பைச் சாதிக்க இலங்கக விரும்பாது. சில இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் சில்லறை முதலீடுகளைச் செய்ய இலங்கை அனுமதிப்பதன் மூலம் தான் இந்தியாவின் நண்பன் எனப் பாசாங்கு செய்து கொள்ளும். இதற்காக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்திய வர்த்தகர்கள் இலங்ககயில் திறக்க அனுமதி வழங்கப்படும். மற்றும் படி சீனவின் விரிவாக்கத் திட்டம் இலங்கையில் முறையாக அரங்கேறும். இலங்கை இந்தியாவிற்கு தொடர்ந்தும் தலையிடியாகவே அமையும்.

Thursday, 11 June 2009

இந்தக் கவிதை வடிவத்தை எப்படி அழைப்பர்?


சக்கரம் சுழல்வ தெப்படி?
திண்ணை மெழுகுவ தெப்படி?
அச்சாணியிட்டு.
.
இந்தக் கவிதை எங்கேயோ படித்த ஞாபகம்.
இக் கவிதை வடிவத்திற்கு என்ன பெயர்?
யாருக்காவது தெரிந்தால் அறியத் தரவும்.
இதைப் போன்று சில கவிதைகளை நான் எழுத எடுத்த முயற்சியால் உருவான வரிகளைக்கீழே தந்துள்ளேன்:
.
காதலன் கை துடிப்பதேன்?
விளக்கின்மேல் கை வீசுவதேன்?
அணைப்பதற்கு.
.
கலைஞன் திமிர் பெருகுவ தெப்படி?
கன்னி நெஞ்சம் பொருமுவ தெப்படி?
இணையின்றி
.
கலவியில் இணைவதெங்கே?
கல்வியில் உயர்வதெங்கே?
பள்ளியறையில்.
.
மாமியார் தேடும் மருமகள் யார்
மறைந்துபோன ஒரு மகள் யார்
அடக்கமானவள்

இலங்கையில் வெடித்துச் சிதறிய ஆயுத ஊழல்.


இலங்கையில் இரு ஆயுதக் கிடங்குகள் அடுத்து அடுத்து வெடித்துச் சிதறின. பாவனைக்கு உதவாத தோட்டாக்கள்தான் தற்செயலாக வெடித்துச் சிதறியதாக இலங்கை அரசு அறிவித்தது. முதலாவது யாழ்ப்பாணக்கரையோர மின்பிடிக்கிராமமான மயிலிட்டியில் சென்ற சனிக்கிழமை(06/06/2009) அன்று நடை பெற்றது. அடுத்தது சென்ற செவ்வாய்க்கிழமை 09/06/2006 இலன்று வவுனியா இராணுவத் தலமையகம் அமைந்துள்ள ஈரற்பெரிய குளத்தில் இடம் பெற்றது. இரண்டாவது ஆயுதக் கிடங்கு இலங்கைப் படையினரின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்காகும்.

தற்செயலாக அடுத்தடுத்து இரு ஆயுதக்கிடங்குகள் இலங்கையில் மட்டும்தான் வெடித்துச் சிதறும். இந்த ஆயுதக் கிடங்குகளைத் தாமே அழித்ததாக விடுதலைப் புலிகள் உரிமை கோரியுள்ளதாக ஒரு இணையத் தளம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடந்து கொண்டிருந்த மோதலில் வெளிநாட்டு ஆயுத விற்பனையாளர்களும் உள்ளூர் ஆயுதக் கொள்வனவாளர்களும் பெரும் பணமீட்டினர் என்பது பரவலாகப் பேசப்பட்டது.

இலங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு
பணம் இறைக்கும் இந்தியாவும் சீனாவும்.
இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைக்க இருக்கின்றன. இடைத்தங்கல் முகாம்கள் எனப்படும் வதை முகாம்களில் ஏதிலிகளாகத் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவி என்ற போர்வையில் பல நாடுகளும் இலங்கைக்கு பணம் உதவவக் காத்திருக்கின்றன.

இலங்கையின் அந்நியச் செலவாணி நெருக்கடி தீர்பதற்கு மேற்படி நிதி உட் பாய்ச்சல்கள் பெரிதும் உதவும். அந்நியச் செலவாணி நெருக்கடி தீர்ந்த நிலையில் இன்னொரு ஆயுதக் கொள்வனவு மூலம் பெரும் பணமீட்டும் சந்தர்ப்பத்தை யார்தான் நழுவ விடுவார்கள்? இத்துடன்தான் ஆயுதக் கிடங்குளின் அடுத்தடுத்த வெடிப்பை தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்!!!!

Wednesday, 10 June 2009

தமிழனின் விலை ஒரு மில்லியன் ரூபா.



வன்னியில் இடைத் தங்கல் முகாம் என இலங்கை அரசு கூறும் வதை முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு இலங்கை அரசு மிக அவசரப் பட்டு ஒரு வசதியைச் செய்து கொடுத்தது. அதாவது முகாம்களுக்குள் ஒரு இலங்கை வங்கியின் கிளையைத் திறந்தது. முகாம்களில் உள்ளவர்களின் உறவினர்கள் வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் அனுப்பும் பணத்தை கறப்பதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. இராணுவத்தினர் அத்துடன் நிற்காமல் முகாம்களுக்குள் தமது கடைகளையும் திறந்து வியாபாரத்தையும் ஆரம்பித்தனர். அக் கடைகளில் வழமையான விலைகளிலும் பார்க்க பொருட்கள் மிக அதிகம்.
இடைத்தங்கல் முகாம்களில் சட்டத்திற்கு புறம்பான முறையில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் ஒருவரை விடுவிப்பதற்கு கொடுக்கப் பட வேண்டிய விலை ஒரு மில்லியன் ரூபாக்கள் என்று அறியப்படுகிறது. அம் முகாம்களில் உள்ள மக்களின் சொல்லவொணாத் துயரம் சில அரச சார்பு தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உலுக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. அவரகள் முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவிக்க தம்மால் இயன்றவற்றை பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்கள்.

தமிழ் மக்களின் அவலத்திற்கு காரணம் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளே. இதை சொல்வது பேராசிரியர் சூரியநாராயணன்: எமது கைகள் இரத்தம் தோய்ந்துள்ளதாக" இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் நிலையம், சென்னையில் கடந்த திங்கட்கிழமை நடத்திய நிகழ்வின் போது உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மூன்று, நான்கு வருடங்களாக புதுடில்லி அரசாங்கம் தமிழ் நாட்டை கலந்தாலோசிக்காது எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tuesday, 9 June 2009

மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை


மறப்பேனா அன்று
உன்னிரு விழிகள்
எனைப் பார்த்ததை
உடல் வியர்த்ததை
.
மறப்பேனா அந்த
நெருக்கத்தில்
ஒரு புன்னகையை
சிறு கண்ணசைவை
.
மறப்பேனா அன்று
எம் உடல்கள்
மெல்ல உரசியதை
என்னுயிர் உருகியதை
.
மறப்பேனா அங்கு
நடனசாலையில்
எம்கரங்கள் பற்றியதை
சுரங்கள் வற்றியதை
.
மறப்பேனா அன்று
எமை மறந்து
இணைந்ததை காமத்தீ
அணைந்ததை.
.
மறப்பேனா அன்று
எனை நீ வெறுத்துப்
பிரிந்ததை என்னுயிர்
எரிந்ததை

வணங்கா மண்ணும் வழங்கா மண்ணும்



இலங்கையின் வன்னிப் பிரதேசத்தில் நடந்த இன ஒழிப்புப் போரின் போது அங்கிருந்து பன்னிரண்டாயிரம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து யாழ்ப்பாண மாவட்டம் சென்றனர். இவர்களைப் பராமரிக்க தேவையான வழங்கள் இன்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்ட ஆட்சியாளர்) யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இவர்களுக்கு உணவு மற்றும் தேவையானவற்ற வழங்கும் படி கேட்டுக் கொண்டார். யாழ் அரச அதிபர் தனது அரசாங்கத்திடமிருந்தே இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கத் தேவையான நிதியைப் பெற்றிருக்க வேண்டும். அப்படியிருக்கையில் யாழ் அரச அதிபர் மாணவர்களிடம் கையேந்தியதேன்? இலங்கை அரசு நிதி வழங்க மறுத்ததா? இலங்கை அரசு தமிழர்களுக்கு எதையுமே வழங்காதா?

ஆபத்தான பொருட்கள் இல்லாத படியால் அனுமதி இல்லை!
வன்னியில் இருந்து வரும் தகவல்களின் படி அங்கு தங்கியிருக்கும் மக்கள் மிக மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
  • உண்ண உணவில்லை.
  • உடுக்க உடையில்லை.
  • உறங்க இடமில்லை.
  • உயிர் வாழ உரிமையில்லை.
  • மரணத்தைத் தவிர வேறு தெரிவில்லை.

இந்நிலையில் இலங்கைக்கு தமிழர்களுக்கான நிவாரணப் பொருள்களுடன் சென்ற வணங்காமண் என்ற கப்பல் இலங்கை அரசால் தடுத்து நிறுத்தப் பட்டது. அக்கப்பலை பலத்த சோதனைக்குள்ளாக்கிய இலங்கை அரசு அதற்குள் எந்தவித ஆபத்தான பொருட்களும் இல்லை நிவாரணப் பொருட்கள் மட்டுமே இருக்கின்றன என்று கூறித் திருப்பி அனுப்பி விட்டது!!!!!

தமிழனுக்கு உண்ண உணவில்லை. உணவு வேண்டாம் காசு தா!
இப்போது இலங்கை அரசு எந்த தொண்டர் நிறுவனங்களையும் தமிழர்களுக்கு உதவ அனுமதிப்பதில்லை. அது கேட்பதெல்லாம் பணம் மட்டும்தான்.

சிங்களவர்கள் வாக்குறுதியை நிறைவேற்ற
வேண்டும் என்கிறது காங்கிரசு.
சிங்களவர்கள் கடந்த காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். அதில் எதையும் நிறைவேற்றியதில்லை. இந்நிலையில் மஹிந்த ராஜபக்சே அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஜயந்தி நடராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார். யாருக்கு எங்கு எப்போது என்ன வாக்குறுதி வழங்கப் பட்டது?

Monday, 8 June 2009

தமிழர் பிரச்சனை - துருப்புச் சீட்டு சீனாவின் கையில்!


இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இப்போது இலங்கை இராணுவம் ஒரு உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன: "இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை 1983இல் இருந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பலத்த ஆளணி இழப்புக்களுக்கு மத்தியில் பயமுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டிக்காத்து வந்தவர்கள் இலங்கை ஆயுதப் படையினர். 1956இல் S. W. R. D பண்டாரநாயக்கா தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வை முன் வைத்தபோது அதை எதிர்த்து அவர் S. J. V. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறியச் செய்தமையால் இலங்கையில் இனப் பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து நாடு பிரிவடையும் அச்சத்திற்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான சிங்கள் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்து அவயங்களை இழந்து இலங்கை பிரிவடைவதைத் தவித்தனர். ஆதலால் இனி அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம் ஆனால் தமிழருக்கு உரிமை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒன்று நடக்குமானால் நாம் ஆட்சி அதிகாரத்தை நம் கையில் எடுப்போம்."
இலங்கை இராணுவம் பல தோல்விகளைச் சந்தித்த போதெல்லாம் அதனை சில பத்திரிகைகள் எள்ளி நகையாடியபோது அதன் பின் நின்று ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்கள் யார்? சிங்களப் பேரின வாதிகள். இவர்கள் பேச்சைத்தான் இலங்கை இராணுவம் இப்போது கேட்கும். இவர்களின் கூற்றுப் படிதான் இனி இலங்கை இராணுவம் கேட்கும். இவர்களின் பேச்சைக் கேட்டுத்தான் இலங்கை இராணுவம் மேற்படி முடிவை எடுத்தது. சிங்களப் பேரின வாதிகளின் அமைப்பிற்கு இலங்கை அதிபரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே தலைவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் எல்.ஜெயசூர்ய என்பவரால் இலங்கை இராணுவத்தின் இணயத் தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது:
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.

இந்த தைரியம் இந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு எங்கிருந்து வந்தது? இவர்களின் பின்னணியில் சீனா இருப்பதால் தான் இந்தத் தைரியம் வந்தது.
விடுதலைப் புலிகளின் பலமிழக்கச் செய்யப் பட்ட பின்னர் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் ஆழமாகவும் அகலமாகவும் ஊன்றப் பட்டுவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை சீனா உறுதியான நம்பகமான நண்பன். இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுடன் நல்ல நட்பைப் பேணிவரும் ஒரே ஒரு நாடு சீனா. சீனா சொல்வதைத்தான் இந்த சிங்களப் பேரினவாதிகள் கேட்பார்கள். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வுக்கு முடிவெடுக்க வல்ல ஒரு நாடாக இப்போது சீனா மாறியுள்ளது.
கடந்த 20 வருடங்களாக சர்வதேச அரங்கில் இராணுவ பொருளாதார ரீதியில் மாபெரும் சக்தியாக சீனா மாறியுள்ளது. உலகின் மிகப் பெரிய அந்நியச் செலவாணியையும் மிக அதிக மக்கள் தொகையையும் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தையும் கொண்ட நாடான சீனா தனது நட்பு நாடும் பிராந்திய நலனுக்கு முக்கிய நடுமாகியா இலங்கையில் தனது நலனை ஒட்டியே காய்களை நகர்த்தும்.

Sunday, 7 June 2009

மூடிய அறைக்குள் ஐநா அதிகாரிகள் வறுத்தெடுக்கப் பட்டனரா?


ஐக்கிய நாடுகளின் அதிபர் பான் கீ மூன் அவரது உதவியாளர் விஜய் நம்பியார் உட்பட சில அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர்கள் போலவே அண்மக்காலங்களில் செயற்பட்டு வந்தனர். ஹெலிக்கொப்டரில் இருந்து தான் பார்த்தபோது இலங்கையின் வன்னிப்பகுதியில் கனரக ஆயுதங்கள் பாவித்தமைக்கான அடையாளங்கள் எவற்றையும் தான் பார்க்கவில்லை என்று அண்மையில் பான் கீ மூன் தெரிவித்தது அவர்மீது பலத்த சந்தேகங்களை பலருக்கும் ஏற்படுத்தியது. விஜய் நம்பியார் வில்லன் நம்பியார் ஆகவே செயற்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் மிரட்டலை பிரித்தானியா வெளியிட்டது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கையில் அங்கு சென்ற நம்பியார் தனது அறிக்கையை சமர்பிக்காமல் அடாவடித்தனமாக இழுத்தடிதார்.
யூன் மாதம் 5ம் திகதி அதிகார பூர்வமற்ற ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்ட மொன்று மூடிய அறைக்குள் நடை பெற்றது. அதன் பின் பான் கீ மூன் இலங்கை தொடர்பாகத் தனது கருத்தை மாற்றிக் கொண்டது போல் தெரிகிறது. அவர் வெளியிட்ட அறிக்கையில்:

Ban Ki-moon told UN Security Council on Friday that any "credible accusations" against either the military or the Liberation Tigers of Tamil Eelam (LTTE) should be investigated.
"Whenever and wherever there are credible allegations for the violations of international humanitarian law there should be a proper investigation," Ban told said after the closed-door meeting.
"I'd like to ask the Sri Lankan government to recognise the international call for accountability and full transparency," he said.
இலங்கையில் போர் குற்றங்கள் இழைக்கப் பட்டமைக்கான நம்பகமான ஆதரங்கள் இருக்கிறதாம் அதை விசாரிக்கப் படவேண்டியவையாம். இப்படிச் சொல்கிறார் பான் கீ மூன் அவர்கள்.
அவர் போர் நடந்துகொண்டிருந்த வேளை இலங்கைக்குச் செல்லாமல் நேரமில்லை என்று சொல்லித் தட்டிக் கழித்தார். போர் முடிந்த பின் இலங்கை சென்றார். அவரது பயண நோக்கத்திற்கு சம்பந்தமில்லாத கண்டி நகர் சென்று அங்குள்ள பௌத்த சின்னங்களைக் கண்டு களித்தார்.
அதன் பின் அவர் இலங்கை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையை பாதுகாப்பதாகவே இருந்தன.
இப்போது பான் கீ மூன் அவர்கள் திடீரென்று இலங்கை மீது விசாரணை வேண்டுமென்று கூறுவது ஏன்? மூடிய அறைக்குள் நடந்த கூட்டத்தில் அவர் சில பிரதி நிதிகளால் வறுத்தெடுக்கப் பட்டாரா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...