எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு
முறைமை
எதிரிகள்
வீசும் ஏவுகணைகளை இடைமறிப்புச் செய்து அழிக்கும் எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை
அமெரிக்க எதிர்ப்பையும் மீறி இந்தியா 2018 ஒக்டோபரில் இரசியாவிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தை
இந்தியா செய்தது. இரசியாவின் S-400
Triumf air defence missile systems என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமை
உலகிலேயே மிகச் சிறந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பதுடன் அமெரிக்காவின்
"தாட்" ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் பார்க்க சிறந்ததும்
மலிவானதுமாகும். இரசியாவினது $500மில்லியன்
விலை என்றும் அமெரிக்காவினது $3பில்லியன்
என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இரசியா எஸ்-400 முறைமையின் இந்தியாவிற்கான
விநியோகத்தை 2020 ஒக்டோபரில் ஆரம்பித்து 2021-ம் ஆண்டு முடிப்பதாக இருந்தது. ஆனால்
2020 பெப்ரவரியில் இரசியா கொவிட்-19 தொற்று நோயைக் காரணம் கட்டி எஸ்-400 விநியோகத்தில்
இரண்டு ஆண்டுகள் தாமதம் ஏற்படும் என அறிவித்தது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரசியாவிற்கு பயணமானார். மூன்றுமாதங்கள்
தடங்கல் ஏற்படுத்திய கொவிட்-19 தொற்று நோய் இரண்டு ஆண்டு கால தாமதம் ஏற்படுத்துகின்றது
என்பது நம்ப முடியாத ஒன்று. அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த பிரச்சனைக்குரிய நேரத்தில்
பாதுகாப்பு அமைச்சர் இரசியா செல்கின்றார் என்பது இந்த தாமத்தில் வேறு அரசுறவியல் பிரச்சனை
இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எஸ்-400 முறைமையை ஏற்கனவே சீனாவிற்கு
இரசியா வழங்கிவிட்டது. மேற்கு நாடுகள் சீனாவிற்கு எதிராக தொழில்நுட்ப போரை தொடுத்துள்ள
நிலையில் சீனா அதிக படைக்கலன்களை இரசியாவிடமிருந்து இனி வாங்குவதற்கான வாய்ப்புக்கள்
அதிகரித்துச் செல்கின்றது. இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு உள்ள
தடைகளை மேற்கு நாடுகள் நீக்குவது அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் இந்தியா
இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்து மேற்கு நாடுகளிடமிருந்து அதிக
படைக்கலன்களை வாங்க வாய்ப்புண்டு.
இந்திய இரசிய உறவு
இந்தியாவிற்கும்
இரசியாவிற்கும் இடையிலான கேந்திரோபாயப் பங்காண்மை பாக்கிஸ்த்தானில் இருந்து
பங்களாதேசத்தைப் பிரிக்க 1971 நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது மிகவும்
சிறப்பாக இருந்தது. இந்தியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தனது கடற்படையை இந்தியாவை
நோக்கி நகர்த்திய போது இரசியாவும் தனது கடற்படையை இந்தியாவை நோக்கி நகர்த்தியது.
பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பல் இந்தியாவை நோக்கி நகர முற்பட்ட போது
மத்திய தரைக் கடலில் அதை இரசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தடுத்து
நிறுத்தியது. பனிப்போர்க் காலத்தில் இது போல பல சந்தர்ப்பங்களில் இரகசியமாகவும்
பகிரங்கமாகவும் இரசியா இந்தியாவிற்கு ஆதரவாக நடந்து வருகின்றது. இரசிய இந்திய உறவு எந்த சூழலிலும் மாற்ற
முடியாது என்ற நிலை இது வரை காலமும் இருந்து வந்தது. இரசிய தரப்பில் இந்த உறவில்
மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் இந்தியாவின் பாதுகாப்புச் சூழல் வேறு விதமாக
மாறிக்கொண்டிருக்கின்றது.
இரசியாவிற்கு சீனா
தேவைப்படுகின்றது
விளடிமீர் புட்டீன்
அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத்
ஒன்றியம் போன்ற ஒரு பல நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பை இரசியா தலைமையில் உருவாக்க வேண்டும் என உறுதியாக இருக்கின்றார். இரசியாவிற்கு
எதிராக மேற்கு நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடையில் இருந்து இரசியப்
பொருளாதாரத்தை தக்க வைக்க இரசிய சீன உறவை மேம்படுத்த விரும்புகின்றார். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும்
அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய
ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும்
ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை
ஒத்துழைப்பையும் வளர்க்கும் அது இரசியாவின் படைத்துறை வர்த்தகத்திற்கு
பாதிப்பு ஏற்படுத்த்தும். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்
தத்தமது நாட்டில் தமது பிடியை உறுதியாக்கியுள்ளனர். அவரிகளின் வெளியுறவுக்
கொள்கைக்கு அவர்களின் மக்களிடையே காத்திரமான ஆதரவு உள்ளது. 2020-ம்
ஆண்டு இரசியா தான் படைத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றது.
அதற்கு அவசியமான ஐந்தாம் தரப் போர்விமானங்களையோ பாரிய கடற்படையையோ அதனால் உருவாக்க
முடியவில்லை. இரசியாவின் SU-57 போர் விமான உற்பத்தி
நிறைவடைந்த வேளையில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக அதை மாற்றுவதற்கான
இயந்திரங்களை உருவாக்க இரசியாவால் முடியவில்லை. SU-57 போர்
விமானங்களை பெருமளவில் உற்பத்தி செய்யக் கூட முடியவில்லை. 2017-ம் ஆண்டு இரசியா தனது பாதுகப்புச் செலவை 20விழுக்காட்டால்
குறைத்தது.
இந்தியாவின் இரசியா
தேவைப்படுகின்றது.
இந்தியாவின் தற்போதைய
ஆட்சியாளர்களின் வலதுசாரி-பழமைவாதச் சிந்தனை இந்திய அமெரிக்க நட்புறவிற்கு சாதகமாக
உள்ளது. நேரு இந்திராவின் வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு
கொள்கையைக் கடைப்பிடித்து இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்ற அவர்கள்
விரும்புகின்றார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளில் முக்கியமானது
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று ஒரு வல்லரசாக
வேண்டும்; அதற்கு ஏற்ப்ப தனது பொருளாதாரத்தையும் படைவலிமையையும் பெருக்க வேண்டும்.
ஐநா பாதுகாப்புச் சபையில் இரத்து (வீட்டோ) அதிகாரத்துடன் இருக்கும் சீனாவின்
ஆதரவின்றி இது நடக்காது. அதுவரை இந்தியாவிற்கு
பாதகமாக பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகளை இரத்துச் செய்ய இரசியாவின் நட்பு
இந்தியாவிற்கு தேவைப்படுகின்றது.
இந்தியாவின்
முக்கியத்துவத்தைப் பெறும் பிரான்ஸ்
இந்திய இரசிய உறவைப்
பற்றி சிந்திக்க வைக்கும் இரு நிகழ்வுகள் 2020 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்தன.
ஒன்று இரசியாவின் தாஸ் செய்தி நிறுவனம் அமெரிக்க சீனா போட்டியில் இருந்து இந்தியா
விலகி நிற்க வேண்டும் என ஒர் அறிவுறுத்தலை ஒரு நிபுணர் மூலமாக இந்தியாவிற்கு
விடுத்திருந்தது. இரண்டாவது பிரெஞ்சு அரசுறவியலாளர் ஒருவர் இந்திய பிரெஞ்சு உறவு
பல முனைகளிலும் வளர்கின்றது என்றார். அவரிடம் இரசியாவின் இடத்தை பிரான்ஸ்
பிடிக்கப் போகின்றாதா என்ற கேள்விக்கு நேரடியாக அவர் பதிலளிக்காமல் புது
டில்லியில் இரசியாவின் இடத்தில் பிரான்ஸ் எனச் சொல்வது பெருமை சேர்ப்பதாகும்
என்றார். கஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்த போது பிரான்ஸ் இந்தியாவுடன்
உறுதியாக நின்றது. இந்தியாவிற்கு தேவையான போதெல்லாம் ஐநா பாதுகாப்புச் சபையில் பிரான்ஸ்
இந்தியாவிற்கு முழுமையான ஆதரவுடன் செயற்பட முடியும். அதனால் இந்தியாவிற்கான இரசிய
உறவின் முக்கியத்துவத்தை குறைக்கலாம. அது மட்டுமல்ல இந்தியாவிற்கு தேவையான
படைக்கலன்களை பிரான்ஸால் வழங்க முடியும். இந்தியாவுடன் படைத்துறைத்
தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இருந்த தடைகளை அமெரிக்கா தொடர்ந்து
தளர்த்தி வருகின்றது. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும்
இஸ்ரேலும் இந்தியாவிற்கு தனது தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதை விரும்புகின்றது. படைத்துறைத்
தொழில்நுட்பத்தில் இரசியாவின் தேவை இந்தியாவிற்கு குறைந்து கொண்டே போகின்றது. சுவீடன்
சிறந்த போர்விமானங்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்கின்றது. அவற்றின்
இலத்திரனியல் திறன் தன்னிகரற்றவையாக இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா,
வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பில் இந்தியாவும்
இணைவதை விரும்புகின்றன. அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அமெரிக்க
வெளியுறவில் பாக்கிஸ்த்தானின் முக்கியத்துவம் பெரிதும் குறைந்து விடும். அதனால்
இந்திய அமெரிக்க உறவு மேம்படலாம். இந்திய வெளியுறவில் இரசியாவின் முக்கியத்துவம்
குறைந்து செல்லும் வாய்ப்பு அதிகமாகின்றது.
திட்டமிடப்பட்ட
நகர்வுகளா?
இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும்
இடையில் உறவை வளர்ப்பது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட நகர்வாகவும் இருக்கலாம். அதன்
மூலம் இரசியாவிடமிருந்து இந்தியாவைப் விலக்கி இந்தியாவைச் சீன-இரசியாவிற்கு எதிரான
தமது அணியில் இனைப்பது அவர்களின் எண்ணமாகவும் இருக்கலாம். 2020 ஜூன்
நடுப்பகுதியில் நேட்டோவின் பொது செயலாளர் சீனாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள்
ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலை விடுத்திருந்தார். இந்தியாவிற்கு எதிராக சீனா
படைக்கலன்களைப் பாவிப்பதிலும் பார்க்க சீனாவில் இருந்து இந்தியாவிற்குப் பாயும் ஆறுகளை
திசை திருப்பி இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சீனா
எப்போதும் இந்தியாவிற்கு அச்ச மூட்டும் ஒரு நாடகவே இருக்கும். சீனா உலக அரங்கில்
தனது ஆதிக்கத்தை நிதானமாகவும் காத்திரமாகவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சீன
வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இந்தியாவிற்கு ஒரு வலிமையான நட்புக் கட்டமைபு தேவை.
சீனாவை நெருங்கி நட்பை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இரசியாவின் நட்பு
இந்தியாவிற்கு எந்த அளவு உதவியாக இருக்கும் என்பதை இந்தியா கவனமாக கருத்தில்
கொள்ளும்.