குவாட் என்னும் பெயரில் இரண்டு அமைப்புக்கள் உள்ளன. ஒன்று குவாட் குழு. அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவற்றைக் கொண்ட வர்த்தகக் கூட்டமைப்பு. மற்றது குவாட் பாதுகாப்பு உரையாடல் என்னும் பெயர் கொண்டது. இது ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஒஸ்ரெலியா ஆகைய நாடுகளைக் கொண்ட ஒரு முறைசாரா கேந்திரோபாய அமையம் ஆகும். இதை ஆங்கிலத்தில் Quadrilateral Security Dialogue என்றும் சுருக்கமாக QUAD என்றும் அழைப்பர். 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைய விரும்புவதால் அதை QUAD+ எனவும் அழைக்கின்றனர். இது சீனாவை அடக்க உருவாகவிருக்கும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பின் முன்னோடி. சீனாவின் நடுத்தர காலக் கொள்கை ஆசியாவில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கமும் உலக அரங்கில் அமெரிக்காவினதும் சீனாவினதும் இருதுருவ ஆதிக்கமும் எனவும் நீண்ட காலக் கொள்கை உலகில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கம் எனவும் கருதப்படுகின்றது. இதைத் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை நெருங்கிச் சென்ற இரசியா தனது நெருக்கத்தை நிறுத்தி சீனாவிற்கான தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் நிறுத்தியுள்ளது.
இலங்கை உலக அரங்கில் பகிரங்க கொள்கை ஒன்றையும் திரைமறைவுக் கொள்கை ஒன்றையும் வைத்திருக்கின்றது. தன்னுடைய திருவோட்டை நிரப்புவதற்கு ஏற்ப அவ்வப்போது தன் கொள்கையை திரித்துக் கொள்ளும். இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுடைய அரசுறவியலாளர்கள் கொழும்பு சென்றால் அவருக்கு பதின்ம வயதுப் பெண்கள் (சிலருக்கு ஆண்கள்) உட்பட பரிமாறி அவர்களை நன்கு விருந்தோம்பும். இதையறியாமல் சில தமிழ் அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இலங்கை சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை வைத்திருக்கின்றது மற்ற உலக நாடுகளை தனது அறிஞர்களைப் பயன்படுத்தி சிறப்பாகக் கையாள்கின்றது எனப் பிதற்றுவார்கள்.
சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சீனாவை தங்களது எல்லாச்சூழலிலும் உதவும் நண்பனாகப் பார்க்கின்றனர். இந்திய இந்துக்களை இந்தியாவில் பௌத்த மதத்தை ஒழித்துக் கட்டியவர்களாவே பார்க்கின்றனர். தாராண்மைவாதம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் இலங்கையில் பராமரிக்கப் பட்டு வந்தது. ரணிலின் தில்லுமுல்லுக்களால் அது இலங்கையில் இப்போது படுதோல்வியடைந்துள்ளது. உலக அரங்கிலேயே ஓரம் கட்டப்பட்ட தாராண்மைவாதம் இனி ஒரு புதிய வடிவத்தில் வரமுயற்ச்சிக்கலாம். இந்தியா சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு தன்மீது இருக்கும் பகைமையை நீக்க கடந்த சில ஆண்டுகளாக பெரு முயற்ச்சி செய்கின்றது. அது இன்னும் வெற்றியளிக்க வில்லை. இந்தியாவை ஏமாற்றும் கலையில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் விற்பன்னர்களாக இருக்கின்றார்கள். சிங்கள பொதுவுடமைவாத தீவிரவாதிகளையும் தமிழ்பிரிவினைவாதிகளையும் அழிப்பதில் இந்தியா கூலி வாங்காத கூலிப்படையாக இலங்கைக்காக செயற்பட்டது. இலங்கையின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா அதைச் செய்யவில்லை தனது பிராந்திய நனலைக் கொண்டே செய்தது என்பதை சிங்கள பௌத்த பேரினவாதிகள் நன்கறிவர்.
சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவானது போல் இந்த நூற்றாண்டில் ஆசியாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றில் சீனாவும் வட கொரியாவும் கம்போடியாவும் இருக்கும். மற்றதில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, வியட்னாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகியவை உட்பட மேலும் ஒரு சில நாடுகள் இருக்கும். சுவீடன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் இல்லாமல் இருந்தன. அது போல் ஆசியாவிலும் பல நாடுகள் இருக்க முடியும். தற்போதைய சூழலில் பிலிப்பைன்ஸ் என்ன செய்யும் என சொல்ல முடியாமல் இருக்கின்றது. ஆனால் அங்கு உள்ள அமெரிக்கப் படைத்தளம் தற்போதைக்கு அகற்றப்பட மாட்டாது. அமெரிக்கா தலைமையிலான சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பு தற்போது குவாட் என அழைக்கப்பட்டாலும் அது வேறு பெயரைப் பெறும். குவாட் என்பது நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தை அமைப்பு மட்டுமே.
இலங்கை எந்தக் கூட்டமைப்பில் சேரும் எனற கேள்விக்கான விடை அது எதிலும் சேராது ஆனால் சீனாவுக்கு எதிராக எந்த ஒரு நகர்வையும் செய்ய மாட்டாது. எந்தச் சூழலிலும் இலங்கைக்கு ஆதரவாக ஐநா பொதுச் சபையில் இலங்கைக்காக இரத்து அதிகாரத்தைப் பாவிக்கும் ஒரு நாட்டின் நட்பு இலங்கைக்கு அவசியம். பொதுநலவாய நாடுகள், ஐநா துணை அமைப்புக்கள் போன்றவற்றில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம். இலங்கை சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் சீனா இலங்கையில் உள்ள பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் பயன்படுத்தி தனக்கு ஏதுவான ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை பாயும். சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி அது சிங்கப்பூருக்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க குறைவானது. இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்க்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி அதன் மொத்த ஏற்றுமதியில் 75%இலும் அதிகமானதாகும். அந்த நாடுகள் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்தால் இலங்கை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். ஆகையால் இலங்கை எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் சேரமாட்டாது.
சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் போட்டியில் இலங்கை சீனா பக்கம் நிற்கும். அப்போது அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கும். எமக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும். சர்வதேசம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியா எனது நண்பன் என்பவையெல்லாம் மனப்பால் மட்டுமே.
இலங்கையும் அமெர்க்காவும் Status of Forces Agreement (SOFA) செய்தாலும் ஆதற்கு இணையான வசதிகளை இலங்கை சீனாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.