Saturday, 8 December 2012

ஆப்பு வைக்கப் போய் ஆப்பிழுத்த குரங்கான ராஜபக்ச

அன்றைய பல்லிளிப்பு இன்றைய பல்லுடைப்பு
இலங்கையின் அரசமைப்பு யாப்பு மிக வித்தியாசமானது. அது ஜே ஆர் ஜயவர்த்தனவிற்காகத் தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்புயாப்பு 1978வரை வெஸ்ட்மினிஸ்டர் பாணியில் இருந்து வந்தது. ஜே ஆரை அங்கிள் என்று அழைக்குமளவிற்கு நெருக்கமான நீலன் திருச்செல்வம், தந்தை செல்வாவின் மருமகன் பேராசிரிய ஏ ஜே வில்சன் ஆகியோரின் ஆலோசனையுடன் 1978இல் தற்போதைய அரசியலமைப்புயாப்பு உருவாக்கப்பட்டது.


1978இல் இலங்கையில் இருந்த கட்சிகளின் வாக்கு வங்கி அடிப்படையில் ஒரு போதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வர முடியாத வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி பாராளமன்றத்திற்கு  உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் முறைமை 1978இல் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. 1978இல் இருந்து 1994 வரை சிறிலங்கா சுதந்திரக கட்சி ஆட்சிக்கு வர முடியாத நிலை இருந்தது. பின்னர் சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா தலைமையில் 1994 சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரு வெற்றியீட்டியது. பின்னர் ஜே ஆரின் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. தனது அரசமைப்பு யாப்பைப்பற்றி கருத்துத் தெரிவித்த ஜே ஆர் ஜயவர்த்தன
என்னால் இலங்கையில் ஒரு பெண்ணை ஆணாகவே அல்லது ஆணைப் பெண்ணாகவோ மாற்றுவதைத் தவிர மற்ற எதையும் செய்ய முடியும் என்றார்.

1978இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புயாப்பு தலைமை நீதியரசர், சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர், இலஞ்சத்துறை ஆணையாளர், காவற்துறை மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளமன்ற ஆணையாளர் (ombudsman) போன்ற மிக முக்கியமான பதவிகளை குடியரசுத் தலைவர் நியமிப்பர். இதனால் குடியரசுத் தலைவர் தனக்கு வேண்டியவர்களை இப்பதவிகளுக்கு நியமித்து நாட்டின் மொத்த நிர்வாகத் துறையையும் தனக்கும் தனது கட்சிக்கும் சாதகமாக நடக்கச் செய்ய முடியும். இதனால் பல பன்னாட்டு அமைப்புக்கள் இலங்கை அரசமைப்பு யாப்புத் தொடர்பாக தமது அதிருப்தியைத் தெரிவித்ததுடன் இவை பல பன்னாட்டு உடன்படிக்கைக்களை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தனர்.

பலதரப்பு ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசியல் அமைப்பில் 17வது திருத்தம் 2001-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு இலங்கைப் பாராளமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது. 17வது திருத்தத்தின் படி இலங்கையில் அரசமைப்புச் பேரவை ஒன்று நிறுவப்படவேண்டும். அரசமைப்புச் பேரவையானது:

  1. பாராளமன்ற சபாநாயகர்.
  2. பிரதம மந்திரி,
  3. எதிர்க்கட்சித்தலைவர்.
  4. குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஒருவர்.
  5. பிரதமர் எதிர்ககட்சித் தலைவர் ஆகியோரின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஐவர்.
  6. பாராளமன்றத்தால் நியமிக்கப்படும் ஒருவர். ஆகியோரை உள்ளடக்கியது.
அத்துடன் இலங்கையில், மனித உரிமை ஆணையகம் உட்படப் பல ஆணையகங்களும் உருவாக்க வேண்டும்:
1. அரசியலமைப்புப் பேரவை
2. பொதுச் சேவை ஆணைக் குழு
3. தேர்தல் ஆணைக் குழு
4. நீதிச் சேவை ஆணைக் குழு
5. தேசிய பொலிஸ் ஆணைக் குழு.

இந்தப் 17வது திருத்தம் இலங்கைக் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிடிலும் இலங்கையில் நீதியான ஒரு நிர்வாகத்தை மனித உரிமைகளுக்கான ஒரு மதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நீதியான நிர்வாகத்துடனோ அல்லது மனித உரிமைகளுக்கான மதிப்புடனோ இலங்கையை ஆளமுடியாது என்று கருதிய இலங்கை ஆட்சியாளர்கள் அதை அமூல் படுத்தவில்லை. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைகளை நிறுத்தும் போது 17வது திருத்தம் நிறைவேற்றப்படாமையும் ஒரு காரணமாகக் காட்டப்பட்டது. அதிகார வெறி பிடித்த மஹிந்த ராஜபக்ச தனக்கு 17வது திருத்தம் ஒரு இடையூறாக இருப்பதை உணர்ந்து அதை இரத்துச் செய்யும் 18வது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதனால் உலகத்திலேயா உச்ச அதிகாரம் கொண்ட ஒரு அரச பதவியாக இலங்கைக் குடியரசுத் தலைவர் பதவி கருதப்படுகிறது.

மன்னாரில் உருவான மோதல்                                                                      இலங்கையின் எல்லா அரச அதிகாரிகளும் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பெருவிரலின் கீழ் இருக்கின்றனர்.  இதற்கான பிரச்சனை மன்னார் நீதிமன்றில் ஆரம்பமானது. கோத்தபாய ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஜுன் மாதம் 17 ம்,18 ஆம் திகதிகளில் அமைச்சர் மன்னார் நீதவானுக்கு தொலைபேசியில் தீர்ப்பொன்று குறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் மஜிஸ்திரேட் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். இதனையடுத்து அமைச்சரை கைது செய்யுமாறு கோரி நாடு தழுவிய முறையில் நீதிமன்ற பகிஷ்கரிப்பை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டிருந்தது.இதிலிருந்து நீதித் துறைக்கும் ராஜபக்சகளுக்கும் இடையிலான மோதல் ஆரம்பித்தது. பின்னர் ஒக்டோபர் 7-ம் திகதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்னமீது இனம் தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மறுநாள் தாக்குதல் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், நீதிமன்றக் கட்டிடத்தைச் சுற்றி கறுப்பு துணி கட்டப்பட்டிருந்தன. அத்துடன் நீதிச்சேவை மரணித்து விட்டதனை பிரதிபலிக்கும் வகையில் சவப்பெட்டியினையும், மலர் வளையத்தினையும் சுமந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்னறனர். பின்னர் நீதிமன்றக் கட்டித் தொகுதி வீதியில் அதற்கு எரியூட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மகாணசபைகளின் நிதி அதிகாரங்களை தம்பிக்குத் தாரைவார்த்தல்    தற்போது இலங்கை அரசின் மொத்த செலவீனங்களில் 70% ராஜபக்ச உடன்பிறப்புக்களின் கைகளில் இருக்கின்றன. இது போதாது என்று மாகாண சபைகளின் நிதி அதிகாரங்களை பசில் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டுவரும் திவிநெகும சட்டமூலம் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டத்திருத்தத்திற்கு எல்லா மாகாணசபைகளினதும் சம்மதம் தேவை என இலங்கை உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்கா தீர்பளித்தமை ராஜபக்ச உடன்பிறப்புக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. விளைவு ஷிரானி பண்டாரநாயக்கவைப் பதவில் இருந்து அகற்றும் 14 குற்றச் சாட்டுக்களைக்கொண்ட குற்றவியல் பிரேரணை 117 பாராளமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஷிரானிக்கு எதிரான 14 குற்றச் சாட்டுக்களை விசாரிக்க 11 பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தெரிவுக் குழு பாராளமன்ற அவைத் தலைவர் சமல் ராஜபக்சவால் அமைக்கப்பட்டது. இப் பதினொரு பேரில் 7 பேர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு


ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நடவடிக்கை ஒரு அரசியல் பழிவாங்கலாகவே இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பரவலாகக் கருதப்படுகிறது. இலங்கை நீதித் துறையைச் சேர்ந்தவர்களும் சட்டத் துறையைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்க அரசு போன்றவையும் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ஆசிய மனித உரிமைக்கழகம் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவிற்கு எதிரான பதவி நீக்கல் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளபப்டவில்லை என்கிறது.

பிரச்சனைகளுக்கு மத்தியில் மஹிந்த

முறையான ஒரு நீதி விசாரணையின் அடிப்படையில் ஷிரானியப் பதவியில் இருந்து நீக்குதல் ராஜபசக்ளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் தலைமை நீதியரசர் ஷிரானை பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரிக்கும் பாராளமன்றத் தெரிவுக் குழுவினர்  சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டனர். விசாரணைக்கு வந்த ஷிரானியம் பைத்தியக்காரி என்றனர். ஒரு சாதாரண அரசு ஊழியருக்கு எதிராக ஒழுக்காறு நடவடிக்கை எடுக்கப்படும் போது கொடுக்கப்படும் கால அவகாசம் கூட அவருக்குக் கொடுக்கவில்லை. மிக நீண்ட குற்றச்சாட்டுகளடங்கிய பத்திரத்தைக் கொடுத்து இவற்றிற்கு மறுநாள் விளக்கமடிக்கும்படி பணித்தனர். இதனால் தன்னை விசாரிப்பவர்கள் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாகக் கூறி ஷிரானி பாராளமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையில் இருந்து வெளியேறிவிட்டார். அத்துடன் ஒரு பக்கச் சார்பற்ற பாரளமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் படி பாராளமன்றின் அவைத் தலைவரிடம் (சபாநாயகர்)வேண்டுதல் விடுத்தார். பாவம் ஷிரானி பாரளமன்ற அவைத்தலைவரே மஹிந்த ராஜ்பக்சவின் அண்ணன். எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்கள் தலைமை நீதியரசருக்கு எதிரான விசாரணைக்குழுவில் இருந்து வெளியேறிவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆளும் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் தமது அறிக்கையைப் பாராளமன்ற அவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ராஜபக்சேக்களின் நண்பர்களுக்கும் அதிருப்தி


இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை அடிக்கடி புகழ்ந்து எழுதும் பிரபல சீனப் பத்திரிகையே Chief justice impeachment in Sri Lanka gathers growing criticism என்னும் தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது.  இலங்கைப்பாராளமனற உறுப்பினர்கள் தலைமை நீதியரசர் பதவியையே மோசமாக அவமதிக்கும் செயலைச் செய்தனர் என்ற செய்தியை சீனப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை அப்பத்திரிகையின் ஆசிரியரே எழுதியுள்ளார். அத்துடன் அமெரிக்க அரசு இலங்கை தலைமை நீதியரசருக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக தனது இரண்டாவது அதிருப்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல ஊடகங்கள் (சென்னையில் இருந்து வெளிவரும் இந்துப் பத்திரிகையைத் தவிர) இலங்கையின் நீதித்துறையின் தன்னிச்சையான செயற்பாடு அச்சுறுத்தப்படுகிறது என எழுதியுள்ளன.

இலங்கையில் பிரபல சட்டவாளரான எஸ் எல் குணசேகரா ஷிரானி உரிய முறையில் விசாரிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அனைத்து சட்டத்துறையை சேர்ந்தவர்களும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களும் தலமை நீதியரசர் பதவியை  புறக்கணிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அத்துடன் யாராவது தலைமை நீதியரசர் பதவியை ஏற்றால் அவருடன் வேலை செய்வதை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். இது போன்ற நடவடிக்கை பாக்கிஸ்த்தானில் மேற்கொள்ளபப்ட்டது. பணத்தாலும் வெள்ளைவான் மூலமும் அனைவரும் மிரட்டப்படும் சூழலில் இப்படி ஒன்றை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்றாலும். ராஜபக்சேக்கள் இலங்கையில் நீதித் துறையிலும் சட்டத்துறையிலும் பெரும் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்தப் போகிறார்கள். இது உள் நாட்டிலும் வெளிநாடுகளும் (இந்தியாவைத் தவிர) பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தும். இலங்கைச் சட்டவாளரகள் சபை (The Bar Association of Sri Lanka) எஸ் எல் குணசேகராவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஷிரானிக்குப் பிறகு தலைமை நீதியரசர் பதவிக்கு யாராவது வந்தால் அவரைத் தாம் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளமை ராஜபக்ச உடன் பிறப்புக்களுக்கு ஒரு ஆப்பாக அமையப் போகிறது.

ஏற்கனவே பன்னாட்டு மட்டத்தில் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளும் ராஜபக்சேக்களுக்கு தலைமை நீதியரசர் விவகாரம் மேலும் பிரச்சனைகளைக் கொடுக்கப் போகிறது.

பிந்திக் கிடைத்த செய்தி:
பாரளமன்றத் தெரிவுக்குழுவின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மூன்று குற்றங்களைப் புரிந்ததாகத் தீர்மானித்துள்ளது:
1. Trillium property சம்பந்தமான குற்றச்சாட்டு
2. தனது வங்கிக் கணக்குகள் சிலவற்றை தனது சொத்து தொடர்பாக மறைத்தமை
3. தனது கணவனுக்கு எதிரான இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளின் பக்கச் சார்பாக நடந்து கொண்டமை.

இலங்கைச் சட்டவாளர்கள் சபை(The Bar Association of Sri Lanka) டிசம்பர் 14-ம் திகதி தனது உறுப்பினர்களின் பொதுக் கூட்டத்தைக் கூட்டி புதிதாக வரும் தலைமை நீதியரசரைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது நீதித் துறையிலும் சட்டத் துறையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். மஹிந்த ஆப்பு வைக்க வில்லை ஆப்பு இழுத்துள்ளார்.

Friday, 7 December 2012

சாம்பல் மேட்டுப் பூக்கள்

இன்றைய அழிபாடுகள்
நாளைய கோபுரங்களின்
அடித்தளங்களாகும்

இன்றைய அவலக் குரல்கள்
நாளைய வெற்றியிசையின்
பல்லவிகளாகும்

இன்றைய எரிந்த சாம்பல்கள்
நாளைய தோட்டங்களின்
பசளைகளாகும்

இன்றைய பின்னடைவுகள்
நாளைய பாய்ச்சல்களின்
கால் தடங்களாகும்

இன்றைய உமது கொக்கரிப்புகள்
நாளைய உங்கள் அவலக் குரல்களின்
முன்னோட்டங்களாகும்

Thursday, 6 December 2012

சிரியா அல் கெய்தாவின் கைகளுக்குப் போகுமா

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் கியூபாவிற்குத் தப்பி ஓடப் போகிறார் என்ற செய்தி 05/12/2012இலன்று வந்த வேளை அவருக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக்காரர்களில் பலர் அல் கெய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றிய பின்னர் அமெரிக்காவிற்கு எதிராகப் போர் புரியப் போவதாக சூளுரைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தவிக்கும் சிரிய அதிபர் அசாத்
சிரிய அதிபர் தற்போது நாட்டை விட்டு ஓடவும் முடியாமல் தனது ஆட்சியை பாதுகாக்கவும் முடியாமல் தவிக்கிறார். சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். அலவைற் இனக்குழுமம் கிரித்தவர்களுடன் மோதாமல் அவர்களையும் அணைத்து நடக்கிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத பதிவியில் இருந்து விலகினால் அது அலவைற் இனக்குழுமத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் அலவைற் இனப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைக் கொல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற நிலையில் உறுதியாகப் போராடுகின்றனர். பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மன்னராட்சி நிலவும் சவுதி அரேபியாவிலிருந்தும்  கட்டாரிலிருந்தும் கிடைக்கின்றன. அண்மையில் சிரிய அதிபரைச் சந்தித்த இரசியாவின் இராசதந்திரி ஒருவர் அசாத் ஒரு சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் என்றார். அவர் மீது அலவைற்றினரும் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் எனப்படுகிறது. மேலும் ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் பல கிருத்தவர்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்றும் கிருத்தவத் தேவாலயங்களை இடித்துத் தள்ளியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு காட்டார் நாட்டினூடாக ஐக்கிய அமெரிக்கா அனுப்பிய படைக்கலன்கள் புனிதப் போராளிகளைச் சென்றடைந்தன என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. இதில் படைக்கலன் வியாபாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனராம்.

ஹமாஸ் இயக்கமும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களும்
பலஸ்த்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் சிரியாவில் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக சிரியாவில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் வெளியேற்றப்பட்டனர்.

சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது பல களமுனைத் தாக்குதல்களுக்கு ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர்மீது பெரிதும் தங்கியிருக்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினரின் பல தாக்குதல்கள் களமுனைச் சமநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் கார் குண்டுத்தாக்குதல்களிலும் வல்லவர்கள். இவர்கள் கொடூரமாகப் போர் புரிகின்றனர். தம்மிடம் அகப்படும் எதிரிகளைக் கொடூரமாகக் கொல்கின்றனர்:


ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் அவ்வப் போது அமெரிக்கத் தேசியக் கொடிகளைக் கொழுத்தியும் அமெரிக்க எதிர்ப்பு வாசகங்களை உரக்கக் கூவியும் வருகின்றனர்.

சிரியாவில் சகோதரப் போர் வெடிக்கலாம்
சிரியாவில் பல தரப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளன. அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட்டபின்னர் பெரும் சகோதரப் போர் சிரியாவில் உருவாக்கப்படலாம்.

இரசாயனக் குண்டுப் புரளி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சிரியாவில் மேற்குலகத் தலையீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. மேற்குலகும் தமது தலையீட்டின் முன்னொடியாக சிரியாவின் வேதியியல் படைக்கலன்கள் இருக்கின்றன அவற்றை சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பாவிப்பார் என்று செய்திகள் பரப்பி விடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் வேதியியல் படைக்கலன்கள் பாவிக்கப்பட்டால் அது ஆத்திர மூட்டும் குற்றச் செயலாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமாவும் அசாத்தை வேதியியல் படைக்கலன்கள் பாவிப்பதற்கு எதிராக எச்சரித்துள்ளார்.

அசாத் தப்பி ஓடப் போகிறாரா?
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் துணை வெளிநாட்டமைச்சர் கியூபா, எக்குவேடர், வெனிசுலேவியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன. அசாத் இந்த நாடுகளில் ஒன்றில் தஞ்சம் கோரப்போகிறார் என்ற வதந்தியும் பரவியுள்ளது. ஆனால் அசாத் இப்படிச் சூளுரைக்கிறார்:
  • “I am not a puppet. I was not made by the West to go to the West or to any other country,” Assad said. “I am Syrian, I was made in Syria, I have to live in Syria and die in Syria."

Wednesday, 5 December 2012

இந்தியாவில் வலிவடையும் பிராந்தியத் அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு பயனளிக்குமா?

இந்தியாவின் அடுத்த தலைமை அமைச்சர் யார் என்ற கேள்விக்கு அரசியல் கட்சிகளுக்குள்ளேயே பல குத்து வெட்டுக்கள் உண்டு. சோனியா காந்தி தனது காங்கிரசுக் கட்சியில் ராகுல் காந்திக்குத் தடையாக இருந்த பிரணாப் முஹர்ஜீயை ராஸ்ரபதி பவனுக்கு அனுப்பி விட்டார். மன் மோகன் சிங்கிற்கு ஓய்வு பெறும் வயது வந்து விட்டது. இந்தியாவின் அடுத்த பிரதமராவது காங்கிரசைப் பொறுத்தவரை ராகுலின் பிறப்புரிமை.  ஆனால் பல மூத்த காங்கிரசுத் தலைவர்களுக்கு உள்ளுக்குள் ராகுல் காந்தியின் திறமையில் பெரும் ஐயம் உண்டு. எந்த ஒரு அமைச்சுப் பதவியிலும் இருக்காதவரும் ஒரு ஊடகத்திற்கு ஒழுங்காக பேட்டி கொடுக்கத் தெரியாதவருமான ராகுல் காந்தி அடுத்த இந்தியப் பிரதமராவது இந்தியாவின் தலைவிதியா? 2014-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கலாம்.

தம்பி வேண்டாம் அக்காவைக் கொண்டுவா
ராகுல் காந்திக்கு காங்கிரசு ஆட்சியில் அமைச்சுப் பதவி கொடுத்தால் அவரது திறமையின்மை அம்பலமாகிவிடும் என்பதற்காக அவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவில்லை. அவர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தால் அவரது அறிவீனம் அம்பலமாகிவிடும் என்று அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அனுமதிக்கப்படவில்லை.  சிலர் திரைமறைவில் ராகுலை ஓரம் கட்டிவிட்டு சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை முன்னணிக்குக் கொண்டுவரும் ஆலோசனையையும் முன் வைத்தனர். ஆனால் ஆட்சியை நடத்தப் போவது சில பணமுதலைகளும் நேரு - காந்தி குடும்ப ஆலோசகர்களும்தான்.

மோடியும் காவிகளும்
முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியில் அடுத்த தலைமை அமைச்சர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.  குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் அடுத்த தலமை அமைச்சர் வேட்பாளர் என்கிறார் சுஸ்மா சுவராஜ். வேறு சிலர் சுஸ்மா சுவராஜ்தான் என்கின்றனர். சுஸ்மா சுவராஜிற்குப் பதிலளிக்கும் முகமாக அதே கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு தமது கட்சி இன்னும் வேட்பாளர் யாரென்று முடிவெடுக்கவில்லை என்கிறார். உள்ளுக்குள் பதவி ஆசையை வைத்துக் கொண்டு மோடியை ஆதரிப்பது போல் வெளியில் காட்டிக் கொள்கிறார் எல் கே அத்வானி. இன்னொரு தலைவர் நிதின் கட்காரிக்கு மோடிமேல் பெரும் பொறாமை. இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸிற்கு மோடியைப் பிடிக்காது. சஞ்சய் ஜோஷி பகிரங்கமாக மோடியை எதிர்க்கிறார்.

மூன்றாம் அணி
இந்தியாவில் காங்கிசையும் பாரதிய ஜனதாக் கட்சியையும் புறம் தள்ளிவிட்டு முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஒரு மூன்றாம் அணி உருவாக்கும் முயற்ச்சி பெரும் வெற்றி அளிக்கவில்லை. ஆனால் தேசியக் கட்சிகள் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேட்டிலும் ஈடுபடுவதாலும் பெரும் பண முதலைகளின் பின்னால் போவதாலும் மூன்றாம் அணி உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று என்று தூய்மையான முற்போக்காளர்கள் இன்றும் நம்புகின்றனர். ஆனால் மூன்றாம் அணி இயற்கை இறப்பை எய்தி விட்டது என்கின்றனர் சிலர்.

இந்திய அரசியல் கூட்டணியைத் தீர்மானிக்கும் கோப்புக்கள்
இந்திய அரசியலில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியையும் கூட்டணி "தர்மத்தையும்" இந்திய மத்திய புலனாய்வுத் துறையினரின் கைகளில் இருக்கும் கட்சித் தலைவர்களின் ஊழல் தொடர்பான தகவல்களே தீர்மானிக்கின்றன.  05/12/2012இலன்று நடந்த அந்நிய முதலீடு தொடர்பான தீர்மானம் இந்தியப் பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது ஒரு பாராளமன்ற உறுப்பினர் சிபிஐ எனப்படும் இந்திய மத்திய புலனாய்வுத் துறையை காங்கிரச் பியூரோ ஒஃப் இன்வெஸ்ரிக்கேசன் என்றார். மாயாவதி காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்காமல் இருந்தமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசுடன் இணைந்து வாக்களித்தமைக்கும் அவர்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கும் வழக்குகளே காரணம்.

முக்கிய கட்சிகள் மாநிலக் கட்சிகளிடம் தோல்வியடையும்
2014இல் நடக்க இருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் தம்வசம் தற்போது இருக்கும் பல தொகுதிகளை மாநிலக் கட்சிகளிடம் இழக்கும் எனப் பல அரசியல் நோக்குனர்கள் எதிர்வு கூறுகின்றனர். தற்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சனையில் ஆளூம் கட்சி தேர்தலில் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கும். காங்கிரசுக் கட்சியின் உலகச் சாதனை படைத்த ஊழல்கள் அதன் செல்வாக்கைப் பெருமளவு பாதிக்கும். பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் ஊழல்கள் நடக்கின்றன. காங்கிரசு ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தும்அனா கசாரே போன்றவர்கள் காங்கிரசின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுத்துவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பல மாநிலங்களில் பிராந்திய அரசியல் தலைவர்களின் செல்வாக்குகள் தேசியத் தலைவர்களை மிஞ்சி வளர்ந்து வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியும், சமாஜவாதக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரசுக் கட்சித் தலைவி மம்தா பனர்ஜீயும், பீகாரில் நிதீஷ் குமாரும், ஒரிசாவில் நவீன் பட்நாயக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு 1967இலேயே தேசியத் தலைமையில் நம்பிக்கையை இழந்து விட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிக கட்சிகள் மாநிலக் கட்சிகளிடம் கையேந்த வேண்டிய நிலைமைதான் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஊழலுக்கு எதிரானவர்கள்
காங்கிரசு ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தும்அனா கசாரே போன்றவர்கள் காங்கிரசின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுத்துவார்கள்.  அரவிந்த் கேஜ்ரிவால் என்பவர் சோனியா காந்தியின் மகள் பிரியாங்காவின் கணவரின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். அவர் நரேந்திர மோடியின் ஊழல்களையும் அம்பலப்படுத்துகிறார். இவர்கள் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நடக்கும் ஊழல்களையும் அம்பலப்படுத்துகிறார்கள். இவை 2014 தேர்தலில் இரு பெரும் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப்பாதிக்கும். அத்துடன் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு காங்கிரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். 2014இல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அன்னா காசாரே அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

பிராந்தியத் தலைவர்களின் தலைமை அமைச்சர் கனவு

பிராந்தியத் தலைவரான சமாஜவாதக் கட்சியைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் பகிரங்கமாகவே தான் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சர் என்று சொல்லிவிட்டார். மம்தா பனர்ஜீ, ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் தலைமை அமைச்சராகும் கனவுடனேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடியும் ஒரு பிராந்தியத் தலைவரே அவர் ஜெயலலிதா, மயாவதி, நவீன் பட்நாயக் ஆகியோருடன் நல்ல உறவை வளர்த்து வருகிறார்.இரு பெரும் கட்சிகள் மீது மக்கள் இழ்ந்து வரும் நம்பிக்கை இவர்களிற்கு நல்ல வாய்ப்புக்களைத் தருகிறது. இவர்களில் மாயாவதியைத் தவிர மற்றவர்களின் செல்வாக்கு நல்ல நிலையில் உள்ளது

ஜெயலலிதாவும் 40 எம்பிக்களும்
தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளிலும் தானது கட்சி வெற்றி பெற்று தான் ஒரு கூட்டணி அரசில் இந்தியாவின் தலைமை அமைச்சராகும் திட்டத்துடன் ஜெயலலிதா இருக்கிறார். அவருக்கு சோதிடர்கள் நீ இந்தியாவின் பிரதமராக வருவாய் என்று வேறு சொல்லி விட்டார்கள்.ஜெயலலிதாவிற்கு மின்சாரமும் சம்சார வாழ்க்கையும் அவரது புகழிற்கு பெரும் சவாலாக இருக்கிறது. ஒரு கூட்டணி அரசில் சுழற்ச்சி முறையிலாவது பிரதமராக வரும் வாய்ப்பை ஜெயலலிதா நம்பி இருக்கிறார்.

தமிழர்களுக்குச் சாதகமாக அமையுமா?
2014இல் நடக்க விருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தியாவில் ஒரு கூட்டணி ஆட்சி அமையும் அதில் தமிழ்நாட்டுக் கட்சிகள் பெரும் செல்வாக்கை வகிக்கும் என்று சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நம்புகின்றனர். சில தமிழின உணர்வாளர்கள் இதைச் சாதகமாக வைத்து ஈழத் தமிழர்களினது பிரச்சனைக்கு சாதகமான நிலையை இந்தியா எடுக்கலாம் என்று நம்புகின்றனர். மத்தியில் ஜெயலலிதா செல்வாக்குள்ள நிலை ஏற்பட்டால் அவர் தனது தமிழின விரோதக் கொளகை கொண்ட பார்ப்பன ஆலோசகர்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படுவாரா? தமிழின உணர்வாளர்களை தேர்தல் பரப்புரைக்குப் பாவித்து விட்டு பின்னர் ஓரம் கட்டிவிடும் சாத்தியம் உண்டு. கருணாநிதி இனி ஈழத்தில் ஒரு தமிழன் தலையில் சிங்களவன் குட்டினாலும் அதைக் கண்டித்து அறிக்கை விடுவார். கடந்த சட்ட சபைத் தேர்தலில் ஈழப் பிரச்சனையை அடிப்படையாக வைத்து கருணாநிதி மோசமாகத் தோற்கடிக்கப்பட்டார். மலையாளிகளைக் கொண்ட கன்னியா குமரி மாவட்டத்தில் மட்டுமே ஒரு சில தொகுதிகளில் வென்றது. கருணாநிதி 2014வரை ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்வார். பல நாடகங்களையும் அரங்கேற்றுவார். முக்கிய நாடகமாக காங்கிரசுக் கட்சியுடனான உறவைத் தேர்தலுக்கு முன்னர் துண்டித்து விஜயகாந்துடனோ அல்லது வேறு யாருடனோ கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம்.  தேர்தலில் வென்ற பின்னர் மீண்டும் காங்கிரசுடன் இணையும் சாத்தியம் உண்டு. அல்லது மோடியுடனும் தேவை ஏற்படின் இணைவர். அப்போது தமிழர்களின் பிரச்சனையைக் கைகழுவி விடுவர்.  இந்த வகையில் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவது இல்லை

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி பெரு வெற்றி பெற்று அது இந்திய மைய கூட்டணி அரசில் செல்வாக்கு வகிக்கக் கூடிய ஒரு அங்கமாகி அதில் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சுக்களைத் தனதாக்கி டெல்லியின் தென்மண்டலத்தில் ஈழத் தமிழர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்குமா என்ற கேள்வி அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவாக மாறுவாரா என்ற கேள்விக்கு ஒப்பானது. தற்போது பெரிய நாடுகள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் வெளியுறவுக் கொள்கை, நிதிக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றில் பெரும் மாற்றம் செய்வதில்லை என்ற நிலைப்பட்டிலேயே இருக்கின்றன. நாடுகளிடையே பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு போன்றவை ஒரு நீண்டகால அடிப்படையையும் நோக்கம் கொண்டதாக இருப்பது நாடுகளின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என்பதாலேயே இந்த நிலைப்பாடு.  திருமாவளவன், பாமரன், தமிழருவி மணியன் போன்றோர் ஈழத் தமிழர்களைப் பார்த்து "உங்களுக்கு இந்தியா கொடுமைகள் இழைத்தது உண்மை; அதற்காக இந்தியாவை வெறுக்காதீர்கள்; பகைக்காதீர்கள்; இந்தியாவைக் குறை சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்; ஒரு நாள் உங்களுக்கு இந்தியா நன்மை செய்யும்" என்று சொல்வது இவர்கள் இந்திய உளவுத் துறையின் கொ.ப.செ ஆக மாறி விட்டார்களா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

Tuesday, 4 December 2012

கொதிக்கும் தென் சீனக் கடலில் கால் பதிக்கும் இந்தியா.

எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன.

இந்தியக் கடற்படைத் தளபதியின் அறிவிப்பு
தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கும் மற்றைய நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் உருவாகும் சூழல்கள் கடந்த சில ஆண்டுகளாக உருவாகியுள்ளன. கிழக்கத்திய உலகில் ஒரு போர் மூளும் அபாயம் தென் சீனக் கடலில் இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்தியக் கடற்படைத் தளபதி (Navy Chief Admiral) டி கே ஜோஷி இந்தியாவின் பொருளாதார மற்றும் கடற் போக்கு வரத்து நலன்களை தென் சீனக் கடலில் காப்பாற்றுவதற்காக இந்தியா தயாராக உள்ளதாக அறிவித்தமை பெரும் அதிரடியாக அமைந்துள்ளது. தேவை ஏற்படின் நாம் தென் சீனக் கடலுக்குச் செல்வோம் என்று ஜோஷி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த அறிவிப்பு சீனா தென் சீனக் கடலிற்கு வரும் கப்பல்களைத் தனது கடற்படை சோதனையிடும் என்று அறிவிப்பைத் தொடர்ந்து வந்ததால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தென்சீனக் கடல் தொடர்பான முந்தைய பதிவுகள்:
1. சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்கா
2. கொதிக்கும் தென் சீனக் கடல்


அமெரிக்காவின் பெரும் திட்டத்தில் ஒரு பகுதியா?
அமெரிக்கா சீனாவிற்குக் கிழக்கேயும் மேற்கேயும் நியூசிலாந்து, ஒஸ்ரேலியா போன்ற பசுபிக் நாடுகள் முதல் பல இந்து சமுத்திர நாடுகளையும் இணைத்து சீனாவிற்கு எதிராக ஒரு பெரும் கூட்டணியை அமைப்பதற்கு முயல்கிறது. அமெரிக்கா தனது எதிர்கால பொருளாதார மற்றும் வர்த்தக நலனகளுக்கு இந்து சமுத்திர மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் இணைய இந்தியா தயக்கம் காட்டுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியக் கடற்படைத் தளபதியின் அறிவிப்பு அமெரிக்காவின் திட்டத்தில் இந்தியாவும் ஒரு பகுதியாக இணைந்து விட்டதா என எண்ணத் தோன்றுகிறது.

வியட்னாம் இந்திய ஒத்துழைப்பு
இந்திய அரச நிறுவனமான Oil and Natural Gas Corp (ONGC) தென் சீனக் கடலில் உள்ள வியட்னாம் கரையோரத்தில் உள்ள Nam Con Son என்னும் இடத்தில் எண்ணெய் வள ஆய்வு உரிமங்களை வாங்கியுள்ளது. இதை சீனா விரும்பவில்லை. 2011 செப்டம்பர் மாதம் வியட்னாம் சென்று திரும்பிய இந்திய கடற் படைக் கப்பல் வியட்னாமின் ஹைப்பொங் துறை முகத்தில் இருந்து திரும்பும் போது சீனக் கப்பல் ஒன்று அந்தக் கப்பல் தனது ஆதிக்கக் கடற்பரப்பில் நுழைவதாக எச்சரித்தது. இந்தியக் கப்பல் அதைப் பொருட்படுத்தாமல் தனது பாதையில் நகர்ந்தது. பின்னர் ஒன்றும் நடக்கவில்லை. 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் கொண்ட தென் சீனக் கடல் உண்மையில் முக்கியத்துவம் பெறுகிறது. வியட்னாம் தனது எண்ணெய் வள ஆய்வை இந்தியாவிடம் ஒப்படைத்தது வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல. பிராந்திய படைபல கேந்திர முக்கியத்துவமும் அதில் கலந்திருக்கிறது.

அனுபவமற்ற சீனக் கடற்படை
உலக வல்லரசு நாடுகள் ஐந்தில் சீனா மட்டுமே குறிப்பிடத்தக்க எந்த ஒரு போரிலும் ஒருபோதும் ஈடுபடாத கடற்படையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியக் கடற்படை பங்களாதேசப் போரில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டது. சிட்டகொங் துறைமுகத்தை லாவகமாகக் கைப்பற்றியது.  அப்போதில் இருந்தே இந்தியாவிடம் விமானம் தாங்கிக் கப்பல் இருக்கிறது. ஆனால் சீன் சென்ற ஆண்டே தனது கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலை இணைத்துக் கொண்டது. தனது தென் சீனக் கடலாதிக்கக் கனவை நிலை நாட்ட சீனா பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும்.

Monday, 3 December 2012

மக்டொனால்ட் உணவுக்குள் மூக்குத்தி - காணொளி

மக்டொனால்டில் கால உணவை வாங்கி தனது 4வயதுப் பிள்ளைக்கு ஊட்டிக் கொண்டிருந்த தாய்க்கு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த உணவுக்குள் ஒரு மூக்குத்தியும் இருந்தது. தான் உணவு வாங்கிய மக்டொனால்டில் இது பற்றி முறையிட்ட தாயான Frances Rosarioவிற்கு மேலும் ஆச்சரியம் காத்திருந்தது. மக்டொனால்ட் உணவகத்தினர் அவருக்கு மரியாதைக் குறைவாகப் பதிலளித்தனர்.


அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள மக்டொனால்டில் வாங்கிய காலை உணவான burritoஇலேயே மூக்கில் கொழுவும் வளையம் காணப்பட்டது. இப்படி விபரீதமான துண்டுகள் மக்டொனால்ட் உணவுகளில் காணப்படுவது இது முதல் தடவை அல்ல. முகச்சவர அலகு(shaving blade) கரப்பான் பூச்சி, பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதற்கு முன்னர் மக்டோனால்ட் உணவுகளில் கண்டெடுக்கப்பட்டன என்கிறது Huffington Post.

தமது உணவகத்தில் சிறிய தோடுகள் தவிர மற்றப் பெரிய வளையங்கள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளன என்கிறது மக்டொனால்ட்.

ஐரோப்பாவின் புதிய ஆளில்லாப் போர் விமானம்

 ஆறு ஐரோப்பிய நாடுகளின் கதுவி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா தாக்குதல் போர் விமானத்தின் unmanned combat air vehicle (UCAV)முதலாவது பறப்பு 01/12/2012இலன்று நடைபெற்றது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின், கிரேக்கம், சுவிற்சலாந்து ஆகிய நாடுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தன. 500 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விமானத்திற்கு நியுரோன் nEUROn எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கதுவி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம்



போர் முனையில் எதிரி விமானங்களை கதுவி(Radar) மூலம் கண்டறிவர். கதுவிகளைத் தவிர்ப்பதற்கு  (Stealth) தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி விமானம் தட்டையாக வடிவமைக்கப்படும். அத்துடன் கதுவியில் இருந்து வரும் வானொலி அலைகளை உறிஞ்சும் வேதியியல் பதார்த்தம் விமானத்தில் பூசப்பட்டிருக்கும்.

ஆளில்லாப் போர் விமானங்கள்
உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

நியுரோன் விமானங்கள்
நியுரோன் விமானங்கள் ஆளில்லாத் தொழில் நுட்பத்தையும்  கதுவி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படுகின்றன.

எதிர்கால விமானப் போர் ஆளில்லா விமானங்களினுடாக நடக்கவிருக்கிறது. உலகின் சிறிய நாடுகள் கூட ஆளில்லா விமானங்களில் அக்கறை காட்டி வருகின்றன.

இந்திய ஆளில்லாப் போர் விமானங்கள்
Aura

பாக்கிஸ்த்தான் - ஆப்கானிஸ்த்தான் எல்லைகளில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவும் ஆளில்லாப் போர் விமானங்களில் அதிக அக்கறை காட்டி வருகின்றது.
AURA எனப் பெயரிடப்பட்ட ஏவுகணைகள் தாங்கிச் சென்று தாக்கக்கூடிய ஆளில்லா விமானங்களை இந்தியா உருவாக்கி வருகிறது.

அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலில் ஆளில்லா விமானம்
ஆளில்லா விமானங்களில் அதிக முன்னேற்றம் அடைந்த அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலில் முதல் முறையாக ஆளில்லா விமானங்களைச் சோதித்துப் பார்த்துள்ளது:

Sunday, 2 December 2012

கடவுச்சீட்டில் இந்திய சீன எல்லைப் பிரச்சனை

சீன அரசு  தனது புதிய கடவுச்சீட்டின் எட்டாம் பக்கத்தில் தனது தேச வரைபடத்தை நீர்க்குறி (water mark) பின்னணியாக இணைத்துள்ளது. இதில் இந்தியா தனது பிரதேசங்கள் எனச் சொல்லுபவற்றை தனது தேச வரைபடத்தில் உள்ளடக்கியுள்ளது. அது மட்டுமல்ல தென் சீனக் கடலில் பலத்த சர்ச்சைக்குரிய தீவுகளை தனது வரைபடத்தில் சீனா உள்ளடக்கியுள்ளது.

தென்சீனக் கடலில் உள்ள பல குட்டித் தீவுகளில் இருப்பதாகக் கருதப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றால் அவை இப்போது முக்கியத்துவம் பெற்று அவற்றிற்கு பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. இத்தீவுகளை தனது தேச வரைபடத்தில் சீனா இணைத்தது ஏற்கனவே கொதிநிலையில் உள்ள தென்சின மற்றும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தாய்வானும் பிலிப்பைன்ஸும் சீனக் கடவுச் சீட்டில் உள்ள சீன வரைபடம் தொடர்பக சீனாவிடம் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளன. வியட்னாம் சீனாவின் புதிய கடவுச்சீட்டுக்களில் நுழைவு அனுமதி(விசா) பதிவு செய்ய மறுக்கிறது.
சீனக் கடவுச் சீட்டில் அதன் வரைபடம்

இந்தியாவின் தீராத பிரச்சனை
இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் தீராத எல்லைப் பிரச்சனை இருக்கிறது. முக்கியமாக அருணாச்சலப் பிரதேசத்தில் இது ஒரு கொதி நிலையில் உள்ளது. அண்மைக்காலங்களில் சீனா இப்பகுதியின் ஊருடுவல்களை மேற் கொண்டது. இந்தியா தனது எல்லை என்று சொல்லப் பட்ட பகுதிகளுக்குள் சீனப் படைகள் ஊடுருவி தமது தளங்களையும் முகாம்களையும் அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 50,000இற்கும் 60,000இற்கும் இடைப்பட்ட துருப்புக்களைக் கொண்ட இரு பெரும் படையணிகளை அருணாச்சலப் பிரதேரத்திற்கு நகர்த்தியது. இதற்கு சீனா தனது எச்சரிக்கையை 2010 ஜூன் மாதம் ஆறாம் திகதி இப்படி வெளியிட்டது: India’s current course can only lead to a rivalry between the two countries. India needs to consider whether or not it can afford the consequences of a potential confrontation with China.” சீனா இரசியாவுடன் தனது எல்லைப் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்துவிட்டது. சீனா சோவியத் வீழ்ச்சியின் பின்னர் இரசியாவுடன் சுமூக உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. முன்னர் இரசியாவின் எல்லையில் இருந்த படைகளை இப்போது அதிகம் இந்திய எல்லைகளுக்கு நகர்த்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் என்பது சுவிஸ்சலாந்து நாட்டிலும் பார்க்க மூன்று மடங்கு நிலப்பரப்பைக் கொண்டது.

சீனாவின் புதிய கடவுச் சீட்டில் நுழைவு அனுமதி(விசா) பதிவுசெய்யும் போது இந்தியா தனது தேச வரைபட்டத்தை அதில் இணைக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் புதிய வரைபடம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

பல அரசறிவியல் அறிஞர்கள் சீனாவின் இந்தப் பிராந்திய எல்லை முரண்பாடு நீண்டகால அடிப்படையில் மோதல்களை உருவாக்கக் கூடியது என்கின்றனர்.

சீனாவின் பிராந்திய எல்லை முறுகல் நிலைமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலும் ஐக்கிய அமெரிக்கா கடவுச் சீட்டு வரைபடம் தொடர்ப்பாக தனது கரிசனையை சீனாவிடம் தெரிவிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...