2018 மே மாதம் 16-ம் திகதி
இரசியாவிற்கும் கிறிமியாவிற்கும் இடையிலான 19கிலோ மீட்டர் நீளமான பாலத்தைத்
திறந்து வைத்தார். கருங்கடலூடாகச் செல்லும் இப்பாலம் ஐரோப்பாவிலேயே மிக நீண்ட
பாலமாகும். போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள வாஸ் கொட காமா பாலத்தை இரசியா
3.69பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணித்த கிறிமியாப் பாலம் இரண்டாம்
இடத்திற்கு தள்ளிவிட்டது. கிறிமியாவின் கிழக்குக்கரை நகரமான கேர்ச்சை இரசியப்
பெருநிலப்பரப்புடன் இணைக்கின்ற இந்தப் பாலம் உக்ரேனின் கப்பற் போக்குவரத்தை பெரும்
நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பல
கருங்கடல் துறைமுகங்கள்மீதான ஆதிக்கத்தை இரசியா இழக்க வேண்டிய நிலை உருவானது.
2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் வசமிருந்த கிறிமியாத் தீபகற்பத்தை ஆக்கிரமித்து தன்னுடன்
இணைத்துக் கொண்டது.
தனிமைப்பாலம் தகர்ந்தது
கிறிமியாவில் வாழும் மக்களில் பலர் தாங்கள்
பன்னாட்டு அரங்கில் தனிமைப்படுத்தியதை கிறிமியப் பாலம் இல்லாமற் செய்துவிட்டதாகக்
கருதுகின்றனர். இரசியர்கள் அதிக அளவில் கிறிமியாவிற்கு உல்லாசம் பயணம் செய்வார்கள்
என்ற எதிர்பார்ப்புடன் பாலம் கட்டப்பட்டது. ஆனால் கிறிமியாவில் வசதிகள்
தேய்வடைந்து வருவதால் இரசியர்கள் அங்கு செல்வதைக் குறைத்து இரசியாவின் இன்னும் ஒரு
பிரச்சனைக்கு உரிய பிராந்தியமான செஸ்னியாவிற்கு செல்வதை விரும்புகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிருந்த உக்ரேன்
ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோப்
படைக்கூட்ட்மைப்பிலும் இணையவிருந்த உக்ரேனை அடக்குவதற்கு இரசிய அதிபர் விளடிமீர்
புட்டீன் எடுத்த நடவடிக்கைகளில் கிறிமியாவை உக்ரேனிடம் இருந்து கைப்பற்றியது
ஒன்று. மற்றது உக்ரேனில் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் கிழக்குப்
பிராந்தியத்தில் ஒரு பிரிவினைவாதப் போரை ஆரம்பித்து வைத்ததாகும். கிறிமிய
ஆக்கிரமிப்பின் பின்னர் இரசியாவின் புட்டீனின் செல்வாக்குப் பெருமளவு
அதிகரித்திருந்தது. உலக அரங்கில் இரசியாவின் செல்வாக்கு மீண்டும்
நிலைநாட்டுப்பட்டுவிட்டதாக இரசியர்கள் நம்பினர், பெருமிதம் கொண்டனர். கிறிமிய இணைப்பின் முன்னர் இரசியாவில்
புட்டீனிற்கு எதிரான பல கருத்துக்களும் விமர்சனங்களும் இருந்தன. அவரது அவரது
சகாக்களும் ஊழல் மூலம் பெருமளவு செல்வம் சேர்த்திருந்தனர். 2014-ம் ஆண்டு புட்டீன்
உலகின் முதற்தரச் செல்வந்தராக இருந்தார்.
உக்ரேன் வீறு கொண்டு எழுமா?
சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்த படைக்கலன் உற்பத்தி செய்யும்
பிரதேசமாக உக்ரேன் இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள்
உக்ரேனில் தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உக்ரேனியர்களிடம்
இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன்
தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ
கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ
எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa
எனப் பெயரிடப்பட்டுள்ள உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு
அதிகமாக ஏழு மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில்
பறக்கக் கூடியவை. கிறிமியாவை இரசியா உக்ரேனிடமிருந்து பிரித்தெடுத்த பின்னர்
உக்ரேனியர்கள் மத்தியில் இரசியாவிற்கு எதிரான கருத்து வலுவடைந்தது. உக்ரேன்
இரசியாவின் எதிரிகளுடன் இணைந்தால் அது இரசியாவைப் படைத்துறை அடிப்படையில் பெரும்
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரேன் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைய
வேண்டும் என்ற கருத்தை உக்ரேனிய அதிபர் பெட்றோ பொறஷெங்கோ முன்வைத்தார். அதற்கான
செயற்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார். 2017-ம் ஆண்டு உக்ரேனில் எடுத்த கருத்துக்
கணிப்பின்படி 69 விழுக்காடு உக்ரேனியர்கள் நேட்டோவுடன் இணைவதை விரும்புகின்றனர்.
ஆனால் நேட்டோவில் இணைவதற்கு உக்ரேனில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். பல பொருளாதாரச்
சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். மேலும் நேட்டோவில் இணையும் ஒரு புதிய நாட்டில்
பிராந்திய அடிப்படையிலான மோதல்கள் ஏதும் இருக்கக் கூடாது. சில படைத்துறை நிபுணர்கள் 2020-ம் ஆண்டளவில்
உக்ரேன் நேட்டோவில் இணையலாம் என எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே தனது எல்லையில் உள்ள
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா போன்ற
போல்ரிக் நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இருந்ததை தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும்
அச்சுறுத்தலாகவும் இரசியர்கள் பார்க்கின்றனர். ஜோர்ஜியா நேட்டோவில் இணைய
முற்பட்டபோது அதை ஆக்கிரமித்த இரசியா அதன் ஒரு பகுதியை தனது நாட்டுடன் இணைத்துக்
கொண்டது. ஏற்கனவே உக்ரேனில் செய்யப் பட்ட 13 அரசியல் கொலைகளின் பின்னால் இரசியா
இருப்பதாக உக்ரேனில் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இரசியப் பொருளாதாரம்
2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்ததில்
இருந்து உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் சரியத் தொடங்கின. அத்துடன் மேற்கு
நாடுகள் உக்ரேனில் தலையிட்ட இரசியாவிற்கு எதிராக பொருளாதார்த் தடைகளைக் கொண்டு
வந்தன. இரசியாவை அடக்குவதற்கு என்றே எரிபொருள் விலை 2014-ம் ஆண்டின் பின்னர்
திட்டமிட்டு வீழ்ச்சியடையச் செய்யப்பட்டது என்பதும் உண்மையாகும். இதனால் இரசியப்
பொருளாதார உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆனாலும் உக்ரேனை இரசியாவின் ஒரு
பகுதியாக பெரும்பாலான இரசியர்கள் இப்போதும் கருதுகின்றனர். அதனால் இரசியர்கள் தமது
பொருளாதாரச் சுமைகளைத் தாங்கிக் கொள்ளவும் தயாராகினர். பொருளாதாரத் தடை மேற்கு
நாடுகள் இரசியர்களை புட்டீனுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்யும் என
எதிர்பார்த்திருந்தனர். 2014-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை 260,000 படையினரை இரசியா உக்ரேனின் கிழக்குப்
பிராந்தியத்துடனான எல்லையில் ஆக்கிரமிப்பிற்குத் தயாரான நிலையில்
வைத்திருக்கின்றது. அதில் 1000தாங்கிகள், 2300 தாக்குதல்
வாகனங்கள் (combat vehicles) 1100இற்கும் மேற்பட்ட பீரங்கித்
தொகுதிகள், 400 பல்குழல் ஏவுகணைகள் போன்றவையும் அடங்கும்.
இவற்றிற்கான மேலதிகச் செலவையும் இரசியா செய்ய வேண்டியுள்ளது. 2016-ம் ஆண்டுவரை சுருக்கமடைந்த இரசியப் பொருளாதாரம். 2017-ம் ஆண்டில்
1.7விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது. 2018-ம் ஆண்டும் இரசியப் பொருளாதாரம் அதே அளவு
வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியாவின் மக்கள் தொகை
சுருக்கமடைந்து கொண்டிருப்பதால் பொருளாதார வளர்ச்சியும் குறைவடைய வாய்ப்புள்ளது.
உலக முதலீட்டாளர்கள் இரசியாவில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இரசியப் பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகளும் 70 டொலருக்கு கீழ் நிற்கும் எரிபொருள் விலைகள் தள்ளாடுவதும்
உக்ரேனுடன் போர் ஆபத்து நிலவுவதும் பொருளாதாரச் சீர்திருத்தம் செய்ய முடியாத
நிலையை உருவாக்கியுள்ளது.
கிறிமியப் பொருளாதாரம்
சோவியத் ஒன்றியம் இருந்த போது உக்ரேனில் இருந்து
கிறிமியாவிற்கு கால்வாய்கள் வெட்டி அதனூடாக கிறிமியாவிற்கு குடிப்பதற்கும்
விவசாயத்திற்கும் நீர் வழங்கப்பட்டது. 2014 கிறிமியாவை இரசியா தனதாக்கிய பின்னர்.
அக்கால்வாய்களை உக்ரேனிய அரசு அணைகள் கட்டி நீர் விநியோகத்ததைத் துண்டித்தனர்.
பின்னர் நிலத்துக்கடி நீர் பெருமளவில் பாவிக்க நீரில் உப்புத்தன்மை அதிகரித்தது. விவசாயப்
பாதிக்கப்பட்டது. குடிநீரின்மையால் பல இரசியர்கள் இரசியாவில் குடியேறினர். இதனால்
கிறிமியாவின் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. 2014-ம் ஆண்டின் முன்னர்
கிறிமியா உக்ரேனுக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருந்தது. இப்போது அந்தச் சுமையை
இரசியா தாங்குகின்றது. 2014-ம் ஆண்டின் முன்னர் உக்ரேனின் பணமுதலைகள்
ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் இரசிய ஆக்கிரமிப்புக்கு
எதிராக ஒன்றாக நிற்கின்றனர்.
இரண்டாம் ஆக்கிரமிப்பு நடக்குமா?
2014-ம் ஆண்டிலிருந்து உக்ரேனை அடக்க இரசியா
எடுத்த முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. அது நேட்டோவில் இணையும் தனது திட்டத்தை
தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் டொன்பாஸ்
பிராந்தியம் என அழைக்கப்படும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தைல் வாழும்
இரசியர்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என
உக்ரேனின் படைத்துறையின் துணைத் தளபதி எதிர்வு கூறியுள்ளார். இன்னொரு நாட்டுடன்
போர் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது. இரசியாவின் ஆக்கிரமிப்பின் முதுகெலும்பாக
அமையப்போவது அதன் தாங்கிகள். இரசியாவின் Armata T-14 தாங்கிகளை எதிர் கொள்ள அமெரிக்கா தனது ஜவலின் என்ற தாங்கி
எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. பராம் ஒபாமா அமெரிக்க அதிபராக
இருந்த போது உக்ரேனுக்கு தாக்குதற் படைக்கலன்களை வழங்குவதில்லை என்ற கொள்கை
பேணப்பட்டது. அப்படிச் செய்தால் அமெரிக்காவிற்கு எதிராகப் போராடும் நாடுகளுக்கோ
அல்லது தீவிரவாத அமைப்புக்களுக்கோ இரசியாவும் ஆபத்தான படைக்கலன்களை வழங்கலாம் என்ற
எதிர்பார்ப்பில் அப்படிச் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டில் இருந்தே உக்ரேன்
பலவிதமான படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து பெற முயற்ச்சி செய்து கொண்டிருந்தது.
அது 2018-ம் ஆண்டில் ஓரளவு நிறைவேறியுள்ளது. 2020-ம் ஆண்டு தனது படைத்துறையை
உலகின் முதற்தரப் படைத்துறையாக மாற்றும் திட்டத்தை இரசியா கடந்த பத்து ஆண்டுகளாக
நிறைவேற்றி வருகின்றது. அதற்கென அது உருவாக்கிய படைக்கலன்களை பரீட்சித்துப்
பார்க்க ஒரு காத்திரமான போர் முனை இரசியாவிற்குத் தேவை. சிரியாவில் சுமான் இருநூறு
புதிய படைக்கலன்களை பரீட்சித்துப் பார்த்தது இரசியா. ஆனால் அது ஒரு காத்திரமான
போர்முனை அல்ல. சிரியாவில் இரசியாவின் Armata T-14 தாங்கிகளை
அமெரிக்க ஆதரவுப் படைக்குழுக்கள் குறுகிய காலப் பயிற்ச்சியுடன் அமெரிக்காவின்
ஜவலின் ஏவுகணைகளால் அழித்தன. மரபுவழிப் படையினரைக் கொண்டுள்ள உக்ரேனியப்
படையினரால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.
மலேசிய விமானப் பிரச்சனை
2018 மே மாதம் ஐக்கிய நாடுகள்
சபையின் பாதுகாப்புச் சபையில் டச்சு வெளியுறவுத் துறை அமைச்சர் தமது நாட்டு
நிபுணர்களின் மலேசியாவின் விமானம் உக்ரேனில் சுட்டுவீழ்த்தியது தொடர்பான விசாரணை
அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அந்த அறிக்கையில்
மலேசியாவின் MH-17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இரசியாவே
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசியாவைப் பொறுத்தவரை கிறிமியாவில் உள்ள அதன்
கடற்படைத்தளம் மிகவும் தேவைப்படுகின்ற ஒன்று. அதை அது விட்டுக்கொடுக்க மாட்டாது
என்பதை உக்ரேனும் அறியும். மேற்கு நாடுகளும் அறியும்.
ஆனால் நேட்டோவில் உக்ரேன் இணைவதைத் தடுக்க இரசியா போரைக் கையில் எடுக்குமானால் அது
பெரும் பொருளாதாரப் பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.