Showing posts with label கூலிப்படை. Show all posts
Showing posts with label கூலிப்படை. Show all posts

Friday, 11 March 2022

உக்ரேனில் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளனவா?

 

Silent Professionals என்ற நிறுவனம் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு உக்ரேனில் போரில் ஈடுபட படைத்துறையில் பணிபுரிந்தவர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது. தனியார் படை என்பது கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட “கௌரவப் பெயராகும்”. சிரியா, லிபியா, ஆப்கான் போர்க்களங்களில் பெருமளவு தனியார் படையினர் அமெரிக்காவாலும் இரசியாவாலும் பாவிக்கப்பட்டனர். ஈழப்போரிலும் வெளிநாடுகளின் கூலிப்படைகள் செயற்பட்டன.  

கூலிப்படை வரலாறு

ஆரம்பத்தில் படையினருக்கான பின்புல வழங்கல் செய்தல், படையினருக்கான ஆபத்து பகுப்பாய்வு செய்தல், உளவு, வேவு போன்றவற்றில் தனியார் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உலகெங்கும் தற்போது உள்ள தனியார் படை அமைப்புக்களில் 70% அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூலிப்படைத்துறையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவின் சீல் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற Erik Prince என்பவர். இவரது தனியார் படை Blackwater என்னும் பெயரில் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அது ஆப்கானிஸ்த்தானில் செயற்பட்டது. இவரது படைப்பிரிவு பத்து பில்லியன் டொலர் கூலிக்காக உக்ரேனில் உள்ள வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பயிற்ச்சியளிக்கின்றது என அமெரிக்காவின் Time சஞ்சிகை 2021 ஜூலை 7-ம் திகதி செய்தி வெளியிட்டது. 2020 பெப்ரவரி 23-ம் திகதி Erik Prince உக்ரேன் தலைநகருக்கு சென்று உக்ரேனிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரேனிய படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களையும் உள்ளடக்கி ஒரு தனியார் படைப்பிரிவை அவர் உருவாக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 2022 மார்ச் 24-ம் திகதி உக்ரேனில் ஆரம்பித்த போரில் Erik Princeஇன் படையினரின் செயற்பாடுகள் மர்மமாக உள்ளன. இரசியாவின் மிகப்பிரபலமான விமான ங்களில் ஒன்றான Su-24 தாக்குதல் போர்விமானத்தை உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரேனியர்களிடமிருக்கும் Stinger போன்ற MANPAD ஏவுகணையால் Su-24ஐ சுட்டு வீழ்த்துவதற்கு போதிய பயிற்ச்சி தேவை. அவ் ஏவுகணைகள் தாழப்பறக்கும் விமானங்களை மட்டும் சுட்டு வீழ்த்த வல்லன. ஒலியிலும் வேகமாக பயணிக்கக்  கூடிய விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நீண்ட பயிற்ச்சியும் அனுபவமும் தேவை.

Erik Prince முன் வைத்த கோரிக்கையை பைடன் நிராகரித்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் எச்சந்தர்ப்பத்திலும் தமது படையை உக்ரேனுக்கு அனுப்பமாட்டேன் என அடிக்கடி சொல்கின்றார். Erik Prince அமெரிக்கா 2022இல் சேவையில் இருந்து நீக்கவிருக்கும் நாற்பத்தேழு F-16 போர்விமானங்களை வைத்து ஒரு தனியார் படையணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் முன்வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்து விட்டார் எனவும் 2022 மார்ச் 4-ம் திகதி பிரித்தானிய நாளிதழான Daily Mailஇற்கு தெரிவித்திருந்தார். F-16ஐ உக்ரேனில் களமிறக்குவது புட்டீனை பெரும் சினப்படுத்தும் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். சுட்டு விழுத்தப்படாத விமானம் என்னும் பெருமையைக் கொண்டிருந்த F-16 விமானம் 2019 இந்திய பாக் மோதலில் இந்தியாவிடமிருந்த MiG-21 Bison விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது. அதை உக்ரேனில் உறுதி செய்யப்படுவதை F-16 உற்பத்தியாளர்கள் விரும்ப மாட்டர்கள். தான் 2021இன் இறுதியில் முன்வைத்த திட்டத்தை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டிருந்தால் உக்ரேனில் இன்று இத்தகைய இழப்பு நடந்திருக்காது என்கின்றார் Erik Prince. புட்டீன் உக்ரேனில் உள்ள நாஜிகளை இல்லாமற் செய்யப் படை அனுப்புகின்றேன் எனச் சொன்னது Erik Prince பயிற்றுவித்துக் கொண்டிருந்த திவிர வலதுசாரிப் படைப்பிரிவைத்தான். இவர்கள் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதாகும்.

உக்ரேனிய கூலிப்படை

உக்ரேனுக்குள் இரசியப் படையினர் புகுந்தவுடனே உக்ரேனிய அதிபர் வெளிநாட்டில் வாழும் உக்ரேனியர்களும் உக்ரேனை விரும்புபவர்களும் உக்ரேனுக்காக போராட விரும்புகின்றார்கள் என அறிவித்தார். அவர்களை வைத்து “International Legion of Territorial Defence of Ukraine” என்னும் பெயர் கொண்ட படையணியை தான் உருவாக்கப் போவதாகவும் சொன்னார். இது அவர் ஒரு தனியார் படையை (கூலிப்படையை) உருவாக்கப் போகின்றார் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. உலகெங்கும் உள்ள வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளும் நாஜிவாதிகளும் உக்ரேனைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் அங்கு களமிறங்கி உள்ளனர் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தமது நாட்டுக்கு திரும்பி ஆபத்தான வகையில் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஒரு சதிக் கோட்பாடும் உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளால் அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஆபத்து என்பதால் அந்த நாடுகள் அவர்களை உக்ரேன் போர்முனைக்கு அனுப்பி கொல்ல முயற்ச்சிக்கின்றார்கள் என்பதே அச்சதிக் கோட்பாடு.

இரசியா சிரியாவில் கூலிப்படை திரட்டியது

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் பாரிய கட்டிடங்களுக்குள் நின்று போர் செய்யும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர். அவர்களை இரசியா தனியார் படையாக சேவைக்கு அமர்த்தி உக்ரேனில் களமிறக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை சிரியாவின் deiresso24.net என்ற இணையத்தளம் வெளியிட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனும் வெளியிட்டது. 2022 மார்ச் 6-ம் திகதி அமெரிக்க Wall Street Journal இரசியா நகர்சார் போரில் அனுபவமுள்ள சிரியப் படையினரை நாள் ஒன்றிற்கு $200முதல் $300 வரையிலான கூலிக்கு ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் உக்ரேன் போரில் ஈடுபடுத்த ஆள் சேர்ப்பதாக செய்தி வெளியிட்டது.  சிரியாவில் இருந்து 16,000 படையினர் இரசியப்படையுனருடன் இணைந்து ச் உக்ரேனியர்களுக்கு "உதவி" செய்ய தயாராக உள்ளதாக இரசிய பாதுகாப்பு அமைச்சர்  2022 மார்ச் 11-ம் திகதி புட்டீனுக்கு தெரிவித்ததாக இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times தெரிவித்துள்ளது

புட்டீனின் கூலிப்படை

இரசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் இரசிய அதிபரின் நெருங்கிய நண்பருமான Yevgeniy Prigozhin  என்பவர் Wagner Group என்ற தனியார் படைப்பிரிவை வைத்திருக்கின்றார். இரசிய தனியார் படையினரின் வருமானம் அரச படையினரின் வருமானத்திலும் பார்க்க 7 மடங்கு அதிகமாகும். Yevgeny Prigozhin இற்குச் சொந்தமான Evro Polis நண்பரின் சிரியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் 25விழுக்காடு உரிமம் பெற்றுள்ளது. சிரியாவில் தனியார் படையினரைப் பயன்படுத்தியமைக்கு இவருக்கு வழங்கப்பட்ட கூலியா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. உக்ரேனிய அதிபர் விலோடிமீர் ஜெலென்ஸ்கியை கொல்லும் பணியில் Yevgeniy Prigozhin யின் Wagner Group களமிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் GB News தெரிவித்துள்ளது.

இரசியாவின் கை உக்ரேனில் மேலும் ஓங்கும் போது நேட்டோ நாடுகள் அதிக நிதியை உக்ரேனுக்கு வழங்கும். அந்த நிதியைப் பாவித்து உக்ரேன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள தனியார் படையினரை போரில் ஈடுபடுத்தும். 

Tuesday, 25 July 2017

தனியர் படை நிறுவனங்கள் எனும் முகமூடியுடன் கூலிப்படைகள்

அமெரிக்கா பல நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்கா பெருமளவில் தனியார் படைகளைகளைப் பாவிப்பது பலருக்கும் தெரியாது. தனியார் படையினரின் துணை இன்றி அமெரிக்கா எந்த நாட்டுக்கும் தனது படைகளை அனுப்ப முடியாது என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவின் படை மற்றும் சிறப்புப் படையணிகளில் பணிபுரிந்தவர்கள் இந்தத் தனியார் படையில் செயற்படுகின்றனர். இவர்கள் அதிகாரிகள் மட்டத்தில் செயற்பட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் இந்த தனியார் படையில் இணைந்துள்ளனர். தீவிரவாத இயக்கக்ங்களில் முன்பு பணிபுரிந்தவர்கள் முன்னாள் போர்ப்பிரபுக்களும் அவர்களின் படையினரும் கூட அமெரிக்காவின் தனியார் படையில் இணைக்கப்படுகின்றனர். இந்த தனியார் படையின் சொந்தக்காரர்கள் பெருமளவு பணத்தை இலாபமாகப் பெறுகின்றனர்.

கூலிப்படையினரின் செயற்பாடுகள்
படையினருக்கான பின்புல வழங்கல் ஆதரவு, படையினருக்கன ஆபத்துப் பகுப்பாய்வு செய்தல், உளவுபார்த்தல் போன்றவற்றில் தனியார் துறையினரி ஈடுபடுத்தல் ஆட்சேபனைக்கு உரியதல்ல. இரண்டாம் ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போதே அமெரிக்கா படைத்துறையில் தனியார் துறையினரைப் பெருமளவில் அனுமதித்தது. ஆனால் 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்கா தனது படைத்துறைச் செலவைக் குறைப்பதற்காக படைத்துறையில் தனியாரையும் அதிக அளவில் ஈடுபடுத்தத் தொடங்கியது. தனியார் படைத்துறையை ஆரம்பித்து வைத்தவர் ஜெரால்ட் போர்ட்டின் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகும். மனித உரிமைகளை மீறும் அமெரிக்காவின் நட்பு நாடுகளிற்கு அமெரிக்கா தனது படைகளைப் பகிரங்கமாக அனுப்பி அந்த ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதில்லை. அந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் படை நிறுவனங்கள் “சேவை” செய்ய இரகசியமாக அனுமதியும் உதவியும் செய்கின்றது. பனிபோரின் பின்னர் இது பெருமளவில் அதிகரித்தது. உலகெங்கும் உள்ள தனியார் படை நிறுவனங்களில் 70 விழுக்காடு அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள்ன.

பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள்
ஒஸ்ரேலியாவில் இரண்டு தனியார் படை நிறுவனங்களும், கிப்ரால்டரில் ஒன்றும், பெருவில் ஒன்றும், தென் ஆபிரிக்காவில் ஒன்றும், பிரித்தானியாவில் ஆறும், ஐக்கிய அமெரிக்காவில் பதின்நான்கும் இருக்கின்றன. இவை மட்டுமல்ல சீனா உட்படப் பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள் உண்டு. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியப் பத்திரிகையான கார்டியன் உலக கூலிப்படைத் தொழிலில் பிரித்தானியா நடுநாயகமாக இருக்கின்றது என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளிவிட்டது. G4S என்பது உலகிலேயே மிகப்பெரிய தனியார் படை நிறுவனமாகும். பிரித்தானியாவில் பல தனியார் படை நிறுவங்னகளும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. கடாபி லிபியாவில் கொல்லப்பட்ட பின்னர் அங்கு உள்ள எரிபொருள் நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் G4S இன் பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்
தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தனியார் படை நிறுவனங்களில் இருந்து சற்று வேறுபட்டவையாகும். பாதுகாப்பு நிறுவனங்கள் வலிந்த தாக்குதலில் ஈடுபடுவதில்லை. அவை தமது ஒப்பந்தக்காரர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக செயற்படும் ஒரு தேர்ச்சி பெற்ற படையணியாகும். பிரித்தானியாவில் இரு வகை நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 46 என்கின்றது கார்டியன். ஈராக்கில் சதாமிற்கு எதிரான போரின் போது பிரித்தானியாவின் 80 தனியார் படைக் கம்பனிகள் இயங்கியதாகவும் கார்டியன்  அம்பலப்படுத்தியது. இதுபோல உலங்கெங்கும் பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தனியார் படை நிறுவனங்களும் பாதுகாப்பு நிறுவனங்களும் செயற்படுகின்றன.

ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்ப யோசனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வர முன்னரே ஆப்கானிஸ்த்தானுக்கு அதிக படையினரை அனுப்பப்போவதாக முழங்கியிருந்தார். எல்லாவற்றையும் மாற்றி யோசிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதினாறு ஆண்டு காலமாக நடக்கும் ஆப்கானிஸ்த்தான் போரையும் வித்தியாசமாக அணுகவிருக்கின்றார்.  ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் இரு பெரும் தனியார் படைகளைக் கொண்ட நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதே அதிபர் டிரம்பின் புதிய அணுகு முறையாகும். எரிக் டி பிரின்ஸ் என்னும் பெரும் செல்வந்தரின் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட்(Blackwater Worldwide) என்னும் படைகளையும் ஸ்றீவன் ஃபெயின்பேர்க் என்னும் செல்வந்தரின் டைய்ன் கோர்ப் இண்டர்நசனல்(DynCorp International) என்னும் படைகளையும் பாவிக்கும் திட்டத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையின் கேந்திரோபாய வகுப்பாளர் எஸ் கே பனன் முன்வைத்துள்ளார். தனியார் துறைப் படை என்பது கூலிப் படையினருக்கு வைத்த கௌரவப் பெயராகும்.

அமெரிக்காவின் இரு பெரும் கூலிப்படை நிறுவனங்கள்
வெள்ளை மாளிகையின் 2017 ஜூலை ஆரம்பத்தில் நடந்த ஆப்கானிஸ்த்தான் தொடர்பான கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் மற்றும் டைய்ன் கோர்ப் ஆகிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள டிரம்ப்பின் தலைமைக் கேந்திரோபாய வகுப்பாளரான எஸ் கே பனன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் டிரம்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் ஆப்கான் தொடர்பான கொள்கை மீளாய்வில் வெளியார் கலந்து கொள்வதைத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி வெளியேறிவிட்டார். டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் எச் ஆர் மக்மஸ்டரும் அதே கருத்தைக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வு வெள்ளை மாளிகையில் டிரம்ம்பின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் மத்தியில் ஒற்றுமை இன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரண்டு தனியார் படை நிறுவனங்களில் அமெரிக்காவிற்காகப் போர் புரிந்து பெரும் தொகைப்பணத்தை இலாபமாக ஈட்டிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஜோர்ஜ்ரவுண் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோன் மக்பேட் அதிகரித்துவரும் தனியார் படைகளின் செயற்பாடுகள் குறிந்து ஆய்வு செய்து “புதிய கூலிப்படைகள்” என்னும் நூலை எழுதியுள்ளார். அதில் அவர் இந்தக் தனியார் படைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களல்லர் என்பதையும் அம்பலப்படுத்தியதுடன் அதில் உள்ள தார்மீகப் பிரச்சனைகள் பற்றியும் விளக்கியுள்ளார். அந்நூலில் அவர் 21-ம் நூற்றாண்டில் உலகம் 20-ம் நூற்றாண்டைப் போல் இல்லாமல் 12-ம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளப்படுகின்றது எனச் சொல்லுகின்றார். 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த பல போர்களில் பெரும்பாலும் கூலிப்படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். 21-ம் நூற்றண்டில் அதிகரிக்கும் தனியார் படையணிகளும் அவற்றினது போர் நடவடிக்கைகளும் பெரும் பணம் படைத்தவர்களும் கூட்டாண்மைகளும்தான் இனி உலகப் பெருவல்லரசுகளாகுமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது என்கின்றார் பேராசிரியர் சோன் மக்பேட். தனியார் படை ஒன்றில் இருந்து வெளியேறிய ஒரு முன்னாள் கடல்சார் படைவீரர் தனியார் படையில் போதைப் பொருள் பாவனை அதிகம் என்றும் சிறுவர்களை பாலியல் தொழிலாளர்களாகப் பாவிப்பதும் உண்டு என அம்பலப்படுத்தினார். பன்னாட்டு அரசுறவியலாளர்களைப் போல் ஈராக்கில் செயற்படும் அமெரிக்கத் தனியார் படையினர் மீது ஈராக்கிய சட்டங்களில் இருந்து பாதுகாப்பு முன்பு இருந்தது. ஈராக்கியப் பொது மக்களால் இந்தத் தனியார் படையினர் கடுமையாக வெறுக்கப்பட்டனர். அமெரிக்க அரசு வேண்டுமென்றே தனியார் படைகளை அழுக்கான வகையில் செயற்பட அனுமதிக்கின்றது என ஈராக்கிய மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக அமெரிக்காவின் உயர் நிலைப் படை அதிகாரிகள் ஈராக்கில் பயணங்கள் மேற்கொள்ளும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் படையினர் ஈராக்கிய மக்களை மிகவும் கேவலமாக நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

இடத்தையும் பெயரையும் மாற்றிய பிளக்வோட்டர் நிறுவனம்
அமெரிக்கத் தனியார் படை நிறுவனமான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் அமெரிக்காவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக தனது பெயரை Frontier Services Group (FSG) என மாற்றி வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது போல் பதிவும் செய்துள்ளது. அது இப்போது அபுதாபியில் பதிவு செய்யப்பட்டு எரிக் பிரின்ஸ் என்பவருக்குச் சொந்தமானதாகியுள்ளது. எரிக் பிரின்ஸ் அமெரிக்காவின் கடல்சார் படையின் சிறப்புப் படையணியான சீல் குழுவில் பணிபுரிந்தவராவர். சீல் பிரிவினருக்கு உலகிலேயே தொழில்நுட்ப ரீதியிலும் தாக்குதிறன் ரீதியிலும் சிறந்த பயிற்ச்சி வழங்க்கப்படுவது எல்லோரும் அறிந்த உண்மை.
ஈராக்கில் கூலிப்படையினரின் அட்டூழியம்
ஈராக்கில் அமெரிக்காவின் தனியார் படைப்பிரிவான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி அவர்களது வாகனத் தொடரணி ஒரு நாள் வாகன நெருக்கடியில் சிக்குப் பட்டிருந்தது. தீவிரவாதிகள் தம்மைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் பத்து நிமிடம் வரை தெருவில் நின்ற வாகனங்கள் மீது கண்டபடி சுட்டுத்தள்ளி வகன நெருக்கடியை இல்லாமல் செய்தனர். இதனால் பல அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். தம்மீது தீவிரவாதிகள் தாக்க்குதல் செய்த படியால் தாம் தாக்குதல் செய்ததாக “வழமையான கதையை” அவர்கள் அவிழ்த்து விட்டனர். ஆனால் சம்பவத்தை ஒரு ஈராக்கிய அரச அதிகாரி நேரில் கண்டபடியால் இப்போது அவர்கள் மீது ஈராக்கில் வழக்கு நடக்கின்றது. ஈராக்கியப் படையினரின் சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனைக்காக நிறுத்தியதால்தான் வாகன நெருக்கடி தோன்றியிருந்தது.

சீனாவிற்குப் பணி புரியும் அமெரிக்கத் தனியார் படை
சீனாவின் One Belt, One Road (OBOR) என அழைக்கப்படும் புதிய பட்டுப்பதைத் திட்டம் ஆபத்து நிறைந்த பல பிரதேசங்களை உள்ளடக்கியது. அதற்கான பாதுகாப்புக்கு சீனா அபுதாபியில் உள்ள எரிக் பிரின்ஸுக்கு சொந்தமான தனியார் படை நிறுவனத்தின் சேவையைப் பெறுகின்றது.  எரிக் பிரின்ஸ் அமெரிக்க சீல் பிரிவில் பணி புரிந்தவர் என்பதால் அமெரிக்கா மிக இரகசியமாக வைத்திருக்கும் சீல் பிரிவின் பயிற்ச்சி நுட்பங்களை சீனா பெற்றுக் கொள்ள முயற்ச்சி செய்யலாம். ஈராக்கில் பிளக்வோட்டர் பணி செய்ய இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை ஏற்பட்டு செய்தவரே தற்போது Frontier Services Group (FSG) இற்கு புதியபட்டுப்பாதைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்துள்ளார். எரிக் பிரின்ஸ் தனது நிறுவனம் சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுக்கவில்லை அதன் வர்த்தகத்திற்கான பாதுகாப்பை மட்டுமே செய்கின்றோம் என இலண்டனில் இருந்து வெளிவரும் பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கரான பிரின்ஸ் அமெரிக்காவின் போட்டி நாடான சீனாவிற்கு பணி செய்வதன் மூலம் ஒரு தேசத் துரோகியாவும் உண்மையான கூலிப்படையாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல எரிக் பிரிஸ் இரசியர்களுடனும் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்கின்றார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

சீனா மட்டும் விட்டு வைக்குமா
உலகின் பல்வேறு நாடுகளில் சீனா கட்டுமானங்களில் முதலீடு செய்கின்றது. அந்த கட்டுமானப் பணிகளில் சீனர்களே பெருமளவு வேலை செய்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க சீனா பல தனியார் பாதுகாப்பு நிறுவங்களை உருவாக்கியுள்ளது. இவை அரசின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு செயற்படுகின்றன. உலகெங்கு வியாபிக்கும் சீனாவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க சீனாவின் படையினரை அனுப்பவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் தனியார் பாதுகப்புப் படை அவசியமான ஒன்றாகிவிட்டது.

செயற்கை விவேகமும் தனியார் படையும்
செயற்கை விவேகம் (artificial intelligence) என்பது ஒரு தனித்துவமான துறையாக உருவெடுத்து மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வில் கணினிகள் செலுத்தும் ஆதிக்கத்திலும் அதிகமாக இனி வரும் காலங்களில் செயற்கை விவேகம் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது. படைத்துறையிலும் செயற்கை விவேகம் பரவலாகப் பாவிக்கப் படப் போகின்றது. ரொபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களும் செயற்கை விவேகமும் போர் முனைகளில் பெரும் ஆபத்தாகக் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. இது தனியார் படை நிறுவனங்கள் பெருவளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாக அமையவிருக்கின்றது.


ஒரு காலத்தில் மருத்துவமனைகள் என்பது அரச நிறுவனமாக மட்டும் இருக்க முடியும் என பல நாடுகளில் கருதப்பட்டது. தற்போது உலகெங்கும் தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அது போலவே தனியார் படைகளும் விரைவில் தவிர்க்க முடியாதவையாகிவிடும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...