Saturday, 31 August 2013

சிரிய வேதியியல் குண்டுத் தாக்குதல் ஏற்கனவே அமெரிக்காவிற்குத் தெரியும்

சிரியாவில் வேதியியல்(இரசாயன) குண்டுத் தாக்குதல் நடக்க விருப்பது அமெரிக்காவின் உளவுத் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது. சிரியப் படையினரின் தொடர்பாடல்களை அமெரிக்க உளவுத் துறை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதால் இதை அறியக் கூடியதாக இருந்தது.

அமெரிக்கா இந்தத் தகவலை சிரியக் கிளர்ச்சிக் காரர்களுக்கு தெரிவித்ததா இல்லையா என்பது இப்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்க அமெரிக்க உளவுத் துறை மறுத்து விட்டது. சில சிரியக் கிளர்சி அமைப்புக்கள் தமக்கு இதை அமெரிக்கா தெரிவிக்காததை இட்டு கடும் கண்டனம் தெரிவிக்கின்றன.

சிரியாவில் ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த குண்டுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார் என்பது பற்றிய தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் அறிந்து கொள்ள முடியவில்லை. குண்டுத் தாக்குதல் நடந்த பின்னர் சிரியப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவருக்கும் வேதியியல் படைக்கலன்களுக்கு பொறுப்பான ஒருவருக்கும் இடையில் கலவரமான உரையாடலை அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக் கேட்டதன் பின்னர் வேதியியல் குண்டுத் தாக்குதல் சிரிய ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவின் கணிப்பின்படி 426 சிறுவர்கள் உட்பட 1429பேர் சிரிய வேதியியல் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

சில கிளர்ச்சிக்காரர்களுக்கு ஏற்கனவே வேதியியல் குண்டுத் தாக்குதல் நடக்கும் என்று தெரியும் அவர்கள் இது வழமையான சிறிய ரக குண்டுத் தாக்குதல் என இருந்து விட்டனர். இஸ்ரேலிய உளவுத் தகவல்களின் படி சிரியாவில் அடிக்கடி சிறிய ரக வேதியியல் குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன ஆனால் ஆகஸ்ட் 21-ம் திகதி ஒரு வலுமிக்க குண்டை வீசி விட்டார்கள். இதுதவறுதலாக நடந்திருக்க வேண்டும் அல்லது சிரிய மோதலை மோசமடைவதை விரும்பும் சிலரால் இது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சதிக் கோட்பாடு
எந்த ஒரு நிகழ்விற்கும் ஒன்று அல்லது பல சதிக் கோட்பாடு இருப்பது வழக்கம். ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கும் சதிக்கோட்பாடு இப்படிப் போகிறது: சிரியப் போர் இப்போது ஒரு தேக்க நிலையில் இருக்கிறது. இதைச் சிரிய கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்ற ஒன்றில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வழங்க வேண்டும். படதடவை அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வலிமை மிக்க படைக்கலன்கள் வழங்குவதாக தெரிவித்த போதும் அப்படி எதுவும் நடக்கவில்லை. துருக்கி மட்டும் லிபியாவில் இருந்து  படைக்கலன்கள் கடத்தப்படுவதற்கு உதவுகிறது. கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்றச் செய்ய வேண்டிய மற்றது சிரியாவின் விமானப்படை, தாங்கிப்படை, படைக்கலன் கிடங்குகள், வேதியியல் படைக்கலன் கிடங்குகள், கட்டளைப்பணியகம், தொடர்பாடல் நிலைகள் போன்றவற்றில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடாத்தி அழிக்க வேண்டும். இதற்கான ஒரு சாட்டாக சிரிய அரசு வேதியியல் குண்டுத்தாக்குதல் நடாத்தியதாக ஒரு குற்றச்சாட்டை உருவாக்க கிளர்ச்சிக்காரர்களே வேதியியல் குண்டுத் தாக்குதல்களைச் செய்தனர். இப்படிப் போகிறது சதிக் கோட்பாடு.

Friday, 30 August 2013

மாறுதல் கொண்டுவராத மாகாணசபைத் தேர்தல் ஆறுதல் தருமா?

தேர்தல் வரும் பின்னே
வாக்குறுதிகள் வரும் முன்னே
தேர்தலில் வென்ற பின்னே
வாக்குறு
திகள் காற்றில் பறக்குமடி கண்ணே
நாம் கற்றுக் கொள்ளாத பாடமிதுவா?

வடமாகாண சபைத் தேர்தலால்
வரும் மாறுதல்கள் என்ன என்ன
கிழக்கிலே வந்த மாறுதல்கள் என்ன என்ன
அங்கு தந்த ஆறுதல்கள் என்ன என்ன


கொள்கை விளக்கம் கொடுக்க
தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து
அக்கொள்கைகளுக்கு ஏற்ப 

வேட்பாளர் தேர்ந்தெத்து
மக்கள் மத்தியில் பெரும் பரப்புரையால்
விளக்க உரைகள் வழங்கி
வாக்குக் கேட்பதே தேர்தல் 

என நாமறிவோம்
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முன்னே
வேட்பாளர் பட்டியல் கொடுத்து 

ஏன் என நாம் அறியோம்

நோர்வேயையும் நம்பி 
அன்று ஏமாந்தோம் -இன்று 
மீண்டும் புதுடில்லியின் வலையில்
நாம் விழுகின்றோம் 

புது டில்லி பின்னால் நின்று இயக்க
சம்பந்தனாரின் முதல் நகர்வு
சுமந்திரனின் அரங்கேற்றம்
அவர் புலம் பெயர்ந்தோரை
ஒதுங்குங்கள் என்றார்


இந்தியாவைத் சொற்படி
சம்பந்தனாரின் இரண்டாம் நகர்வு
விக்கினேஸ்வரன் ஐயா
அவர் ஒரு படி மேலே போய்
புலம்பெயர் தமிழர்களோடு
தமிழ் நாட்டுத் தமிழர்களையும்
ஒதுங்குங்கள் என்கின்றார்
அடுத்து சம்பந்தன் ஐயா
இலங்கை வாழ் தமிழர்களையும்
ஒதுங்கி இருங்கள் எனச் சொல்ல
யாரைக் கொண்டு வருவார்.
 


முதலிரு கட்டப்போரிலும்
ஆட்சியாளர் காலைத்
தழுவிச் சுகம் கண்ட
சங்கரியும் சித்தார்தனும்
மூன்றாம் கட்டப்போரில்
போராளிகளாய் நிற்க
ஆறுதல் கிடைக்குமா 

Thursday, 29 August 2013

சிரியாவைத் தாக்கினால் இரசியா பதிலடி கொடுக்குமா?

சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கைக்கு எதிராக இரசியா கடுமையாக எச்சரிக்கை விட்டுள்ளது. இரசியாவின் எச்சரிக்கைகள் 1999இல் யூக்கோஸ்லாவியாவிலும், 2003இல் ஈராக்கிலும், 2011இல் லிபியாவிலும் உதாசீனம் செய்யப்பட்டன. இரசிய மக்கள் தமது அரசு 2013இல் சிரியாவிலும் கோட்டை விடப் போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

கசியும் இரகசியங்களும் பரப்பப்படும் பொய்களும்

2013இல்  சிரியாவில் இரசியா இலேசில் விடமாட்டாது என பலதரப்பினரும் உணர்ந்துள்ளனர். ஆனால் காத்திரமாக எதையும் செய்யக் கூடிய வகையில் இரசியாவிடம் மத்திய தரைக் கடலிலோ மத்திய கிழக்கிலோ படைப்பலமோ அல்லது வலிமை மிக்க நட்பு நாடுகளோ இல்லை. சீனா எந்த ஒரு படை நடவடிக்கைக்கும் தயாராக இல்லை. இரசியாவை அமைதிப்படுத்த அமெரிக்கா இரண்டு இரகசியங்களை வேண்டுமென்றே கசிய விட்டுள்ளது. ஒன்று: சிரியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை நாம் செய்யப் போவதில்லை. இரண்டு: சிரியா மீதான தாக்குதல் 48 மணித்தியாலங்கள் மட்டும் நடக்கும். சிரியாமீது நேட்டோப் படைகள் தாக்கினால் இரசியா சவுதி அரேபியாவைத் தாக்கும் என்ற ஒரு வதந்தியும் கசியவிடப்பட்டுள்ளது. இரசியாவின் செசஸ்னிய இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு சவுதி அரேபியா உதவி செய்கிறது என்ற ஆத்திரம் இரசியாவிற்கு இருக்கிறது. ஈராக் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதிகளுக்கு உதவுகிறது என்று 2003இல் அமெரிக்கா ஈராக்கைத் தாக்கலாம் என்றால் 2013இல் இரசியாவால் சவுதியை ஏன் தாக்க முடியாது?  சிரியாவிற்கான ஆதரவை இரசியா விட்டுக் கொடுத்தால் பதிலாக பல பொருளாதாரச் சலுகைகளை சவுதி அரேபியா இரசியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இரசியாவில் அதிபர் விளாடிமீர் புட்டீனைச் சந்தித்த சவுதி இளவரசர் பந்தர் பின் சுல்தான் தெரிவித்தாக செய்திகள் கசிந்தன.  இன்னும் ஒரு செய்தி சிரியாவை விட்டுக் கொடுக்காவிடில் செஸ்னியப் போராளிகள் இரசியாவி பெரும் தாக்குதல்களை மேற்கொள்வார்கள் எனவும் இரசியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செஸ்னியப் போராளிகள் பெரும் குழப்பம் விளைவிப்பார்கள் எனவும் சவுதி இளவரசர் பந்தர் பின் சுல்தான் புட்டீனை எச்சரித்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த புட்டீன் சவுதி அரேபியாவைத் தாக்கும்படி தனது படைகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கிறது. சவுதி அரேபியாவில் நடக்கும் எந்தத் தாக்குதலும் எரிபொருள் விலையிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஐக்கிய அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் நன்கு அறியும்.  இன்னும் ஒரு செய்தி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாமீதும் ஈரான்மீதும் தாக்குதலை நடாத்தி மூன்றாம் உலகப் போரை ஆரம்பிக்கப் போகிறார் என்கிறது.

பின்னடிக்கும் பிரித்தானியா
பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் சிரியா தண்டிக்கப்பட வேண்டியது என்பதில் உறுதியாக நின்றார். ஆரம்பத்தில் அதற்கு ஆதரவாக நின்ற எதிர்க் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் பின்னர் தனது நினையை மாற்றி ஒரு வெற்றுக் காசோலையை கொடுக்க முடியாது பாராளமன்றத்தில் முறையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார். இதனால் பிரித்தானியப் பாராளமன்றத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்படப் போகிறது. முதலாவது ஐக்கிய நாடுகள் சபையூடான நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம். இரண்டாவது ஐநா ஊடான நடவடிக்கை சரிவராவிடில் மீண்டும் பிரித்தானியப் பாராளமன்றத்தில் சிரியாமீதான நேரடிப்படை நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம். இவை பிரித்தானியப் பாராளமன்றத்தின் மக்களவையிலும் பிரபுக்கள் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். சிரியாவில் இருக்கும் ஐநா சபையின் நிபுணர்கள் முதலில் சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் ஐநா பாதுகாப்புச் சபையில்  சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கைக்கு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். அதை இரசியாவோ, சீனாவோ அல்லது இரண்டும் இணைந்தோ இரத்துச் செய்தபின்னர் நேட்டோ நாட்டுப் படைகள் சிரியா மீது தாக்குதல் செய்ய வேண்டும். 28/08/2013 புதன் கிழமை நடந்த பிரித்தானியப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சட்டமா அதிபர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இன்றி சிரியாமீது படை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமது ஆலோசனையை வழங்கியிருந்தார். சிரியாவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்களின் அறிக்கைக்கு முன்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இரசிய வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார். அரபு லீக் நாடுகள் வேதியியல் குண்டுகளை சிரிய அரச படைகள்தான் வீசின என்கிறது. ஐநாவின் சிரியாவிற்கான தூதுவர் லக்தர் பிராஹிமி சிரியாமீதான படை நடவடிக்கைக்கு ஐநாவின் அங்கீகாரம் தேவை என்கிறார். ஆனால் சிரியப் படைகள் எந்த அளவு மோசமான இனக்கொலை புரிந்தாலும் அதை பன்னாட்டரங்கில் பாதுகாக்க இரசியாவும் சீனாவும் தயாராக இருப்பதை யார் கவனத்தில் கொள்வார்கள். ஏற்கனவே ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் சிரியாவில் கொல்லப்பட்டு விட்டனர். பல இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு மாபெரும் மனித அவலம் சிரியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளாக இதை யாரும் தடுக்க முயலவில்லை.

அமெரிக்காவில் பல பாராளமன்ற உறுப்பினர்கள் சிரியாமீதான தாக்குதலை எதிர்க்கிறார்கள். சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த பின்னர் அங்கு அல் கெய்தாதான் ஆட்சியைக் கைப்பற்றும் என அவர்கள் கருதுகிறார்கள். அசாத்தை விட்டால் அவர் சார்பில் போராடும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அவருக்கு எதிராகப் போராடும் அல் கெய்தாவும் அடிபட்டு இறக்கட்டும் என அந்தப் பாராளமனற் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் அமெரிக்காவின் தந்திரம் வேறு. அசாத்திடம் விமானப்படை வலு இருக்கும் வரை போர்முனை அவருக்குச் சாதகமாகவே இருக்கும். அவரது விமானப்படையை ஏவுகணைகள் மூலம் அழித்துவிட்டு அவரது விமானங்களைப் பறக்க முடியாமல் செய்தால் சிரியக் கிளர்ச்சிக் குழுக்கள் வெற்றி பெறும். பின்னர் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பதில் கிளர்ச்சிக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளட்டும் - இதுதான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ஆனால் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் சிரியா மீதான தாக்குதலுக்கு பிரித்தானியாவைப் போல் தாமும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர்.  அதிபர் பராக் ஒபாமா இன்னும் தான் சிரியா மீதான தாக்குதல் தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை என்கிறார்.

சிரியாவின் படைத்துறையினரின் உரையாடல்களை ஒற்றுக் கேட்ட அமெரிக்கப் உளவுத் துறையினர் சிரியாவில் வேதியியல் குண்டுகளை வீசியது சிரிய அரச படைகள் என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனால் இரசியா வேதியியல் குண்டுகளை அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் வீசி இருக்கலாம் என்கிறது.

இரசியாவால் பதில் தாக்குதல் கொடுக்க முடியாது
பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே தமது படைகளை சிரியாவை நோக்கி நகர்த்தி விட்டன. சிரியாவில் இருந்த சிறிய இரசிய கடற்படைத் தளத்தில் இருந்து பலரை சென்ற ஆண்டே இரசியா திரும்பப்பெற்றுக் கொண்டுவிட்டது. இப்போது இரசியா எந்த ஒரு படை நகர்வையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இரசியாவால் எந்த ஒரு பதில் தாக்குதல்களையும்  நேட்டோப்படைகளுக்கு எதிராக தொடுக்க முடியாது. சவுதி அரேபியாவை அமெரிக்கா கடுமையாகப் பாதுகாக்கும். குவைத், கட்டார் போன்ற நாடுகளில் இரசியா தொலைதூர ஏவுகணைகளை வீசலாம். அது எந்த விதத்திலும் சிரியாவைப் பாதுகாக்க மாட்டாது. சிரியாவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தி மத்திய கிழக்கில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த இரசியா தூண்டலாம். ஈரானும் இதை உறுதி செய்வது போல் சிரியாமீதான தாக்குதல் சற்றும் எதிரபாராத மோதல்களை உருவாக்கலாம் என எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தனது துணைப்படையினரை அவசரமாக சேவைக்கு அழைத்ததுடன் ஏவுகணை எதிர்ப்பு நிலைகளை நகர்த்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு சிரியா மீதான தாக்குதல்களை தாம் சும்மா பார்த்துக் கொண்டிக்க மாட்டோம் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது.

பிந்திக் கிடைத்த செய்தி:
இரசியா தனது போர்க்கப்பல்கள் இரண்டை மத்தியதரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது.
பிரித்தானியப் பாராளமன்றத்தில் செய்யப்பட்ட முதலாவது வாக்கெடுப்பில் சிரியாமீதான படை நடவடிக்ககை தொடர்பான  தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறலாம்.

Wednesday, 28 August 2013

சிரியா மீதான தாக்குதல் எப்படி இருக்கும்?

சிரிய இலக்குகள்

சிரியாமீது இன்னும் ஓரிரு நாட்களில் நேட்டோப் படைகள் தாக்குத்ல் நடாத்தப் போகின்றன. அமெரிக்கப் படைத்துறை அதிபர் ஒபாமாவின் எந்த ஒரு தெரிவிற்கும் தாம் தயாராக இருப்பதாகச் சொல்கிறது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையாகவே இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

சிரியாமீது தொடுக்கப்படும் தாக்குதல் பெரும்பாலும் ஏவுகணைகளாலே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தக் காரணம் கொண்டும் எந்த ஒரு நேட்டோப்படை வீரனும் சிரியாவில் கால் பதிக்கமாட்டான். விமானங்கள் சிரிய வான் எல்லைக்குள் செல்லாமல் வெளியில் இருந்து கொண்டே ஏவுகணைகளை சிரியா மீது வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் எந்த ஒரு நேட்டோப் படைவீரனும் கொல்லப்படக் கூடாது என்பதில் நேட்டோ நாடுகளின் அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். தமது தாக்குதல்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்காது என நேட்டோ நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் சிரியப் படைகள் கடுமையான பதில் நடவடிக்கை எடுத்தால் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் மீதும் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியை தப்பி ஓடாமல் தடுத்துக் குண்டு வீசியது போல் தாக்குதல் நடாத்துவார்கள்.

இரசியாவின் கடும் தாக்குதல்
 இரசியாவின் உதவித் தலைமை அமைச்சர் டிமிட்ரி ரொகொஜின் மேற்கு(ஐக்கிய அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும்) இஸ்லாமிய நாடுகளில் கையில் குண்டுவைத்திருக்கும் ஒரு குரங்கு போலச் செயற்படுகிறது என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் 

அதிக ஏவுகணைகள் பாவிக்கப்படலாம்

உலகப் போர் வரலாற்றில் ஒரு நாளில் அதிக அளவு ஏவுகணைகள் பாவிக்கப்பட்ட போர் முனையாக சிரியா இடம்பெறலாம். நேட்டோப்படைகளின் விமானங்களில் இருந்தும் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் ஜோர்தானில் இருந்தும், துருக்கியில் இருந்தும் தொடர்ச்சியாக ஏவுகணைகள் சிரியப் படைத்துறை நிலைகள் மீது தாக்குதல்கள் நடக்கலாம்.

சிரியாவிற்கு அண்மையில் இருக்கும் அமெரிக்கப் படைத் தளங்கள்

அமெரிக்காவிற்கு ஜோர்தானில் ஒரு படைத்தளமும், துருக்கியில் இரு விமானப்படைத்தளங்களும், குவைத்தில் ஒரு விமானப்படைத் தளமும் இருக்கின்றன. இவற்றுடன் மத்தியதரைக்கடலில் இருக்கும் ஆறாவது கடற்படைப் பிரிவும் செங்கடலில் இருக்கும் மிக வலிமை மிக்க USS Harry S Truman என்னும் விமானம் தாங்கிக் கப்பலும் சிரியாவிற்கு திராக செயற்படலாம். இவற்றுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அமெரிக்கப் படைத் தளங்களில் இருந்து பல விமானங்களை இத்தாலிக்கும் பல்கேரியாவிற்கும் நகர்த்தி சிரியாவிற்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா தொடுக்கலாம். பிரித்தானியா சைப்பிரஸில் இருக்கும் தனது படைத்தளத்தில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம். பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பலான சார்ல்ஸ் டி காலுடன் ஐக்கிய அமீரகத்தில் உள்ள பிரெஞ்சு விமானப்படைத் தளத்தில் இருக்கும் அதனது Rafale, Mirage விமானங்கள் சிரியாவில் தாக்குதல் நடத்தலாம். இதன் வலிமையால் கவரப்பட்ட பிரித்தானியா அமெரிக்காவிடமிருந்து 65 ஏவுகணைகளை வாங்கியது. தாழப்பறக்கும் இந்த ஏவுகணைகளை ராடார்களால் இனம் காணுவது கடினம். இதன் முக்கிய அம்சங்கள்:
 Primary Function: long-range subsonic cruise missile for striking high value or heavily defended land targets.
Power Plant: Williams International F107-WR-402 cruise turbo-fan engine; CSD/ARC solid-fuel booster
Length: 18 feet 3 inches (5.56 meters); with booster: 20 feet 6 inches (6.25 meters)
Weight: 2,900 pounds (1,315.44 kg); 3,500 pounds (1,587.6 kg) with booster
Diameter: 20.4 inches (51.81 cm)
Wing Span: 8 feet 9 inches (2.67 meters)
Range: 870 nautical miles (1000 statute miles, 1609 km)
Speed: Subsonic - about 550 mph (880 km/h)
Guidance System: TERCOM, DSMAC, and GPS (Block III only)
Warheads: 1,000 pounds or conventional submunitions dispenser with combined effect bomblets.

ஆறாவது கடற்படைப்பிரிவு

சிரியாவிற்கு எதிரான தாக்குலில் அமெரிக்கக் கடற்படையின் மத்தியதரைக்கடலுக்குப் பொறுப்பான ஆறாவது கடற்படைப்பிரிவு முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.  இதன் கட்டளைப் பணியகம் இத்தாலியின் கேட்டா(Gaeta) நகரில் இருக்கிறது. ஆறவது கடற்படைப் பிரிவில் Destroyer Squadron 60, Task Force 60, Task Force 61, Amphibious Assault Force, Task Force 62, Landing Force (Marine Expeditionary Unit), Task Force 63 Logistics Force, Task Force 64 Special Operations, Task Force 65, Task Force 66, Task Force 67 Land-Based Maritime Patrol Aircraft, Task Force 68, Maritime Force Protection Force, Task Force 69 Submarine Warfare ஆகிய படைக் குழுக்கள் இருக்கின்றன.



Tomahawk சீர்வேக ஏவுகணை
Tomahawk ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கும்
சிரியாவிற்கு எதிரான தாக்குதலில் Tomahawk சீர்வேக ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கும் என உறுதியாகச் சொல்லலாம். 1991இல் சதாம் ஹுசேய்னுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய Tomahawk சீர்வேக ஏவுகணைகள் தற்போடு மேலும் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமா?
1999-ம் ஆண்டு சிலோபொடன் மிலொசெவிச் கொசோவாவில் செய்த கொலைகளில் இருந்து கொசோவே மக்களைப் பாதுகாப்பதற்காக எனச் சொல்லி அப்போதைய அமெரிக்க அதிபர் ஒரு மட்டுப்படுத்தப் பட்ட விமானத் தாக்குதலை மேற்கொண்டார். இரண்டு அல்லது மூன்று தினங்களில் மிலொசெவிச் பணிந்து விடுவார் என நேட்டோப்படைகள் எதிர்பார்தன ஆனால் அவர்களின் தாக்குதல்கள் 78 நாட்கள் தொடர்ந்தன.

Tuesday, 27 August 2013

சிரியா வல்லரசுகளின் முறுகல் களமாகுமா?


சிரியா மீதான தாக்குதல் செய்யும் எந்த முடிவு ஆபத்துக்கள் நிறைந்ததும் சறுக்கல்கள் நிறைந்ததுமான ஒரு பாதையிலேயே மேற்கை இட்டுச் செல்லும் என்கிறது இரசியா. ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியாவை நோக்கி நகர்த்தப்படுவதை தொடர்ந்து இரசிய வெளிவிவகார அமைச்சர் ஒரு அவசர பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டில் தனது எச்சரிக்கையை விடுத்ததுடன் ஐக்கிய நாடுகள் சபையில் முடிவெடுக்காமல் செய்யப்படும் சிரியாமீதான தாக்குதல் சட்டத்திற்கு முரணானது என்றும் சொன்னார்.

ஆபாசமான அறம் - Moral Obscenity
சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல் விவகாரம் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டியது என்கின்றது சீனா. அமெரிக்க அரச்த் துறைச் செயலர் ஜோன் கெரி சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல் ஆபாசமான அறம் என்றார். சிரியா சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் வேதியியல் படைக்கல நிபுணர்கள் மீது துப்பாக்கிப் பிரயாகம் செய்யப்பட்டுள்ளது.

வல்லரசுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள்.
பிரிததானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் அமெரிக்க்க அதிபர் பராக் ஒபாமா 40 நிமிடங்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு சிரியா பற்றி உரையாடினார். இதைத் தொடர்ந்து பிரித்தானியப் பிரதமருடன் தொலை பேசியாக தொடர்பு கொண்ட இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் சிரியாமீதான தலையீட்டிற்கு எதிராக தனது எச்சரிக்கையை விடுத்தார்.சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவித்தமைக்கான போதிய ஆதரங்கள் இல்லை என்றும் யார் பாவித்தார்கள் என்று சொல்ல முடியாமல் இருப்பதாகவும் புட்டீன் தெரிவித்தார். பதிலளித்த கமரூன் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்த்தான் வேதியியல் குண்டுத் தாக்குதலின் பின்னால் இருக்கிறார் என்பதில் சிறிதளவு ஐயம்தான் உள்ளதென்றார். சிரிய அதிபர் பஷார் அல் அசாத் அமெரிக்காவிற்கு சிரியாவில் தோல்வி காத்திருக்கிறது என்கிறார்.


லிபியாவில் விட்ட பிழையை இரசியா மறக்கவில்லை
நேட்டோ நாடுகளின் படைகள் லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் விமானப்பறப்பற்ற ஒரு பிராந்தியத்தை லிபியாவில் ஏற்படுத்துவதற்கு உரிய படை நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் விமானப் பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்காகவும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான மற்ற நடவடிக்கைகளையும் எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மற்ற நடவடிக்கைகள் என்ற பத்தத்தைப் பாவித்து லிபியாவின் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் தொலைத் தொடர்பு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டன. தரைப்படை நிலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதை இரசியாவும் சீனாவும் எதிர்த்திருந்தன. அவை இரண்டும் விமானப்படை நிலைகள் தவிர வேறு ஒரு இடத்திலும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் வேண்டின. அதை நேட்டோ நாடுகள் ஏற்கவில்லை. சிரியாவிற்கு எதிரான தீர்மானங்கள் மூன்றை ஏற்கனவே இரசியாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றி இருந்தன.  இது லிபியாவில் தாம் ஏமாற்றப்பட்டதாக சீனாவும் இரசியாவும் நினைப்பதாலேயே நடந்தன. சிரியாமீதான தாக்குதல் செங்கோட்டைத் தாண்டுவதாக அமையும் என்கிறது ஈரான்.

படை நகர்வுகள்
சிரியாவிற்கு எதிராக தாக்குதல் செய்ய அமெரிக்காவின் போரிடும் வல்லூறுகள் எனப்படும் F16 துருக்கியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவை துல்லியமாகாத் தக்கும் குண்டுகளை வீசக் கூட்டியவை.  ஜோர்தானிலும் அமெரிக்ககவின் F16 விமானங்கள் இருக்கின்றன. அத்துடன் பேட்ரியோற்ரிக் எனப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் 400இற்கு மேற்பட்ட ஏவுகணைகளும் ஜோர்தானில் இருக்கின்றன. USS Mahan, USS Barry, USS Gravely, USS Ramage ஆகிய கடற்படை நாசகாரிக் கப்பல்கள் மத்திய தரைக் கடலில் "பணியில்' இருக்கின்றன. பிரித்தானிய Tornado GR4 போர்விமானங்கள் சைப்பிரஸில் உள்ள அக்ரொட்ரி படைத்தளத்தில் இருக்கின்றன. படைத்துறை இலக்குகளைத் தாக்கக் கூடிய Strom Shadow எனப்படும் எவுகணைகளும் அங்கு இருக்கின்றன. பிரித்தானியாவின்  HMS Montose, HMS Westminster, HMS  Dragon, HMS Bulwark ஆகிய போர்க் கப்பல்களும் Trafalgar Class வகையைச் சேர்ந்த சீர்வேக(Cruise)  ஏவுகணைகளை வீசக்கூடிய நீர் மூழ்கிக் கப்பல்களும் சிர்யாவிற்கு எதிராக களத்தில் இறங்கும். அசாத்திற்கு எதிராக துருக்கியப் படைகளும் களமிறங்கும். ஜேர்மனி பின்புல ஆதரவுகளை வழங்கும். சிரியாவுட்ன எல்லையைக் கொண்ட துருக்கி நேட்டோவில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவிலான படையினரைக் கொண்ட நாடாகும். இரகசியமாக இஸ்ரேலியப் படையினர் நேட்டோவுடன் இணைந்து செயற்படலாம். சிரிய படைத் துறை இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களும் நேரடியாகத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனுபவமும் இஸ்ரேலியப்படையினருக்கு உண்டு. சிரிய உள்நாட்டுப்ப்போர் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குள் மூன்று தடவைக்கு மேல் இஸ்ரேலியப்படைகள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து தாக்குதல்கள் நடாத்தியுள்ளன. சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்களை அழிப்பதில் இஸ்ரேல் அதிக ஆர்வம் கொண்டுள்ளது.

பிரான்ஸின் தயக்கம்
சிரிய அதிபர் அசாத்தின் ஆட்சிக்கு எதிரான படைநடவடிக்கையில் மற்ற நாடுகளை விட அதிக ஆர்வம் காட்டிய பிரான்ஸ் சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கையில் ஐநாவை ஒதுக்கி விட்டு செயற்படுவது சிரமம் என்கிறது. ஆனால் ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அதை நிச்சயம் இரசியாவும் சீனாவும் இரத்துச் செய்யும். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வேதியியல் குண்டுத்தாக்குதல்களுக்கு படை நடவடிக்கைதான் ஒரே ஒரு பதில் என்றார்.

சட்ட அடிப்படையைத் தயார் செய்கிறது அமெரிக்கா
சிரியாமீதான தாக்குதலுக்கு ஒரு சட்டபூர்வ அடிப்படையை அமெரிக்கா தயார் செய்கிறது. கொசோவோ நாட்டில் தலையிட்டதை ஒரு அடிப்படையாக வைத்து இந்த சட்டபூர்வ நியாயம் காட்டப்படவிருக்கிறது. கொசோவோவில் இனக் கொலை செய்யபப்ட்ட போது அங்கு ஒரு படைநடவடிக்கையை மேற்கொள்ள ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. எந்தத் தீர்மானத்தையும் இரசியா இரத்துச் செய்திருக்கும். காக்கும் பொறுப்பு என்ற அடைப்படையில் கோசோவோவில் படை நடவடிக்கை செய்யப்பட்டது.

இரசியாவும் சீனாவும் என்ன செய்யும்?
நேட்டோப் படைகள் ஒருதலைப்பட்சமாக படை நடவடிக்கையில் இறங்கினால் அதை தடுக்க சீனாவாலோ இரசியாவாலோ முடியாது. இரசியாவிற்கு மத்திய கிழக்கில் சிரியாவில் மட்டும் ஒரு படைத் தளம் இருந்தது. அதுவும் பெருமளவு மூடப்பட்டுவிட்டது. சிரியாவில் இருந்த இரசியப் படைத் துறை வல்லுனர்கள் பலர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். இதனால் இரசியாவால் நேட்டோப்படை நடவடிக்கையைத் தடுக்க முடியாது. ஆனால் பதிலடியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதிலாவது இரசியா ஒரு தலைப்பட்ச படை நடவடிக்கை மேற்கொள்ளலாம். இன்னும் சில தினங்களில் நேட்டோப் படைகள் சிரியாவில் தாக்குதல் நடாத்தலாம். அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையாக இருக்கும். முதலில் சிரியாவின் விமான எதிர்ப்பு நிலைகளும் ஏவுகணைகளும் கட்டளை-கட்டுப்பாட்டு நிலைகளும் தாக்கி அழிக்கப்படலாம். பின்னர் சிரியப் படைத்துறைச் சமநிலையை சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்றக்கூடிய வகையில் சிரியா ஆட்சியாளர்களின் படைநிலைகள் அழிக்கப்படும். விமானங்களிலும் பார்க்க தொலைதூர ஏவுகணைகளே அதிகம் பாவிக்கப்படும். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லபப்ட வாய்ப்புகள் உண்டு. வேதியியல் குண்டுகள் பரவாயில்லை என சிரிய மக்கள் சிந்திக்கலாம்.

பிந்திய செய்திகள்:
பிரித்தானியப்படைத்துறை சிரியா மீதான தாக்குதல்களுக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன.
28/0/8/2013- புதன் கிழமை பிரித்தானிய பாதுகாப்புச் சபை கூட விருக்கிறது.
பிரித்தானிய முன்னாள் பிரதமரும் மத்திய கிழக்கிற்கான சமாதானத் தூதுவருமான ரொனி பிளேயர் அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் சிரியாவிற்கு எதிரான ஒரு படை நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய எதிர்க் கட்சியான தொழிற்கட்சி சிரியாமீதான தாக்குதல் தொடர்பாக பாராளமன்றத்தில் கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுள்ளது.29-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றம் கூட்டப்படலாம்.
 அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெல் தமது படையினர் சிரியாமீதான தாக்குதலுக்குத் தயாரான நிலையில் இருப்பதாகவும் அதிபர் பராக் ஒபாமாவின் கட்டளைக்குக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...