அமெரிக்கவிற்கும் சீனாவிற்குக் இடையிலான போட்டிக் களமாக பசுபிக் மாக்கடல் இருக்கின்றது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஒஸ்ரேலியா இருக்கின்றது. அமெரிக்காவின் படைத்தளம் இருக்கும் பிலிப்பைன்ஸ் அதன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. அதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் வாழைப்பழங்களை சீனா நிறுத்தப் போவதாக 2016இல் அறிவித்தது. பின்னர் பிலிப்பைன்ஸ் அதிபர் சீனாவிற்கு பயணம் செய்து அமெரிக்காவுடனான தமது நட்பை “விவாகரத்து” செய்வதாக அறிவித்தார். பின்னர் சீனா பிலிப்பைன்ஸ்லி இருந்து அதிக வாழைப்பழங்களை இறக்குமதி செய்வதுடன் பிலிப்பைன்ஸில் 24பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகவும் அறிவித்தது. இதே மாதிரியான மிரட்டலை சீனா அமெரிக்காவின் இன்னும் ஒரு நட்பு நாடான ஒஸ்ரேலியா மீது 2020இன் பிற்பகுதிகளில் ஆரம்பித்தது. ஒஸ்ரேலியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் வர்த்தகத்திற்கு சீனாவும் அவசியமானவை.
ஒத்துழைக்க வேண்டிய இரு நாடுகள்
ஒஸ்ரேலியா சீனாவில் இருந்து 7448கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இருபதினாயிரம் கிலோ மீட்டர் அகலமும் பதினையாயிரம் கிலோ மீட்டர் நீளமும் கொண்ட பசுபிக் மாக்கடலின் இரு நாடுகளும் அமைந்திருக்கின்றன. 1.2மில்லியன் சீனர்கள் ஒஸ்ரேலியாவில் வசிக்கின்றனர். இது ஒஸ்ரேலியாவின் மக்கள் தொகையில் 5.6% ஆகும். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சீனாதான் அதிக வர்த்தகம் செய்யும் நாடாக இருக்கின்றது. ஒஸ்ரேலியா இதற்கு விதிவிலக்கல்ல. ஒஸ்ரேலிய அதிக வர்த்தகம் செய்யும் நாடு சீனாவாகும். சீனாவுடன் வர்த்தகம் நாடுகளின் பட்டியலில் ஒஸ்ரேலியா ஏழாவது இடத்தில் இருக்கின்றது. ஒஸ்ரேலியாவிலும் பார்க்க சீனா அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கொங் கொங், தென் கொரியா, தைவான் ஆகியவை இருக்கின்றன. 2019-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 27.4% சீனாவுடன் நடந்தது. சீனர்களின் குடிவரவும் உல்லாசப் பயணமும் சீன முதலீடும் ஒஸ்ரேலியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின. 180,000 சீன மாணவர்கள் ஒஸ்ரேலியாவில் பயில்கின்றதால் பல்கலைக்கழகங்கள் 12பில்ல்யன் டொலர்களை வருமானமாகப் பெறுகின்றன. 2017 நவம்பரில் சீனாவின் அரச ஊடகமான குளோபல் ரைம்ஸ் ஒஸ்ரேலியாவின் பொருளாதாரம் சீனாவில் பெரிதும் தங்கியுள்ளது ஆனால் அது அதற்கேற்ப நன்றியுடையதாக இல்லை என்றது.
இருபத்தியேழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியைக் கண்ட ஒஸ்ரேலியா 2019-ம் ஆண்டு 3.8விழுக்காடு தேய்மானம் அடைந்தது.
பட்டுப்பாதைக்கு முட்டுக்கட்டை
புதிய பட்டுப்பாதை எனப்படும் சீனாவின் Belt and Road Initiative திட்டத்தில் ஒஸ்ரேலியாவின் சிட்னி மாகாணமும் முதலில் இணைந்து கொண்டது. சிட்னி விக்டோரியா ஆகிய நகரங்களுக்கு மாகாணத்திற்கு தேவையான உட்கட்டுமானங்களில் சீனாவின் முதலீடு அவசியம் தேவைப்பட்டது. டிசம்பர் 2020இல் சீனா ஒஸ்ரேலியாவில் இருந்து செப்பு உலோகம் எதையும் இறக்குமதி செய்யவில்லை. 2019 டிசம்பரில் ஒஸ்ரேலியாவில் இருந்து சீனா 110.930 மெட்ரிக் தொன் செப்பை இறக்குமதி செய்திருந்தது. இது ஒஸ்ரேலியாவை சீனா பழிவாங்குவதன் வெளிப்பாடாகும். சீனாவிற்கு தேவையான இரும்புத்தாதின் பெரும் பகுதி ஒஸ்ரேலியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் உடனடியாக ஒஸ்ரேலியாவில் இருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்த முடியவில்லை. ஆபிரிக்காவில் இருந்து சீனா மாற்று வழிகளைத் தேடுகின்றது. அங்கு உற்பத்தி செய்து இறக்குமதி செய்ய இன்னும் ஐந்து ஆண்டுகள் எடுக்கும். ஒஸ்ரேலியாவில் இருந்து சீனாவிற்கான நிலக்கரி ஏற்றுமதியை சீனத் துறைமுகங்களில் இழுத்தடிப்பு செய்வதன் மூலம் தாமதிக்கச் செய்தது.
ஒஸ்ரேலியாவில் சீனாவின் உளவு நடவடிக்கை.
2018 மார்ச் மாதம் சீனா பல வழிகளில் ஒஸ்ரேலியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் வெளிநாட்டுத் தலையீடு திட்டங்களின் பரிசோதைனைக் களமாக ஒஸ்ரேலியா இருப்பதாகவும் சீனப் படைத்துறையின் மேம்பாட்டிற்கு ஒஸ்ரேலியப் பல்கலைக்கழங்களில் ஆய்வுகள் செய்யப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் வெளிவந்தன. 2019இல் சீன உளவாளிகள் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் 32 வயதான சீனரை ஒஸ்ரேலியாவின் நாடளுமன்ற உறுப்பினராக்குவதற்கு அணுகினார்கள். அவர் ஒஸ்ரேலியாவின் தாராண்மைவாதக் கட்சியின் உறுப்பினராகும். அவருக்கு பெருமளவு பணம் கொடுத்து அவரை நாடாளுமனற உறுப்பினராக்க சீன உளவாளிகள் முயன்றார்களாம். இது ஒஸ்ரேலிய அரசு அறிந்த நிலையைல் அந்த சீனர் ஐயத்திற்கு இடமான வகையில் இறந்து போனார். இந்தக் குற்றச் சாட்டை சீனா ஒஸ்ரேலியாவின் நரம்புக்கோளாற்றால் வந்த மன நோய் என விபரித்தது.
சீன இணையவெளி ஊடுருவல்
2013-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவின் உளவுத் துறைக்கு கட்டிய புதிய தலைமச் செயலகத்தின் திட்ட வரைபை சீனா இணையவெளியூடாக ஊடுருவித் திருடிக் கொண்டதாக குற்றச் சாட்டுகள் வெளிவந்தன. 2019-ம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற தேர்தலுக்கு முன்னர் ஒஸ்ரேலியப் நாடாளமன்றத்தினதும் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் கணினித் தொகுதிகள் மீது சீனாவில் இருந்து இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒஸ்ரேலிய அரசு அறிவித்தது. 2020-ம் ஆண்டு சீனாவில் இருந்து செய்யப்பட்ட இணையவெளி ஊடுருவல்கள் மூலம் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்புத்துறையின் 300 Gigabytes அளவிலான தகவல்கள் திருடப்பட்டதாக அமெரிக்க அரசு பகிரங்கமாக அறிவித்தது
மோசமான 2020
2020இன் பிற்பகுதியில் சீன ஒஸ்ரேலிய உறவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதில் முதன்மையானது கொவிட்-19 தொற்று நோயின் பரவலில் சீனாவின் பங்கு தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒஸ்ரேலியா அறிவித்தமையாகும். இரண்டாவது அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்குவதில் ஒஸ்ரேலியா அதிக முனைப்பு காட்டியமை. ஆரம்பத்தில் சீனாவுடனான வர்த்தக உறவைக் கருத்தில் கொண்டு ஜப்பான் முன்மொழிந்த குவாட் ஒத்துழைப்பில் இணைய ஒஸ்ரேலியா தயக்கம் காட்டியது. மூன்றாவது இந்தியாவுடன் ஒஸ்ரேலிய செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம். அதன் படி ஒஸ்ரேலிய படை நிலைய வசதிகளை இந்தியாவும் இந்தியப் படை நிலைய வசதிகளை ஒஸ்ரேலியாவும் பாவிக்கலாம். அதில் சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியான மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ்(கீலிங்) தீவையும் இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் இரு நாடுகளும் சீனாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு பாவிக்கும் போது சீனக் கடற்போக்கு வரத்து பெரும் பின்னடைவைச் சந்திக்கும். நான்காவது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செய்து வந்த மலபார் போர்ப்பயிற்ச்சியில் 2020 நவம்பரில் ஒஸ்ரேலியாவும் இணைந்து கொண்டது.
ஒஸ்ரேலியா எப்படி சீனாவைக் கையாள்கின்றது என்பதை பேர்லின், ஒட்டாவா, வாஷிங்டன், வெலிங்டன் ஆகிய தலைநகரங்களில் உள்ள ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் உன்னிப்பாகக் கவனிக்கின்றார்கள்.