பிரித்தானியாவும் ஜேர்மனியும் அமெரிக்காவிடமிருந்து
ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ வாங்கியுள்ளன. அதிலும் சிறந்த F22 போர்விமானங்களை
அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பச்னை செய்வதில்லை. பிரான்ஸ் தனது படைக்கலன்களைத் தானே
உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையது. இரசியா எஸ்யூ-35, எஸ்யூ-57 ஆகிய ஐந்தாம்
தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்கின்றது. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ்,
இத்தாலி, சுவீடன் ஆகிய சிறந்த போர்விமானங்களை உற்பத்தி செய்யக் கூடிய நாடுகள் தமது
ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களைத் தாமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளன.
பல தலைமுறைகள் கண்ட விமான உற்பத்தி
ஒலியிலும் குறைந்த வேகத்தில் பறந்த போர் விமானங்கள்
முதலாம் தலைமுறைப் போர்விமானங்களாக 1940 – 1950 வரை இருந்தன. இவற்றில் கதுவிகள் (ரடார்கள்)
இருந்திருக்கவில்லை. அவற்றுக்கு என தற்பாதுகாப்பு முறைமையும் இருந்திருக்கவில்லை. அதையடுத்து
ஒலியின் வேகத்தில் பறக்கக் கூடிய இரண்டாம் தலைமுறைப் போர் விமானங்கள் 1960கள் வரை இருந்தன.
அவற்றில் வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை உணரக்கூடிய கதுவிகள்
உள்ளடக்கப்பட்டன. சிறந்த வளியியக்கவசைவியல் (aerodynamics) அவற்றின்
முக்கிய அமசமாகும். அதனால் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடியவையாக
அமைந்தன. மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள் 1960களில்
உருவாக்கப்பட்டன. சிறந்த பறப்புத் திறனும் திருப்பு திறனும் கொண்டவையாக அவை
இருந்தன. அமெரிக்காவின் F-4 இரசியாவின் மிக்-23 ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நான்காம் தலைமுறைப்போர் விமானங்கள்
ஒலியிலும் அதிக வேகமாகப் பறக்கக் கூடியவையாகவும் வானில் இருந்து வானிற்கும்
வானிலிருந்து தரைக்கும் குண்டுகளைப் பொழியக் கூடியவையாக அமைந்தன. MiG-29,
Su-27, F/A-18, F-15, F-16, மிராஜ்-2000 ஆகிய
நான்காம் தலைமுறைப் போர் விமானங்கள் 1970களில் இருந்து
பாவனைக்கு வந்தன அவற்றின் மேம்படுத்தப் பட்ட வடிவங்கள் இன்றும் பாவனையில் இருந்து
போர் முனையில் சாகசங்கள் செய்கின்றன. நான்காம் தலைமுறைப் போர்விமானங்கல் தொடர்ந்து
மேம்படுத்தப் பட்டுக்கொண்டிருந்ததால் நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்கள் என அவை
பெயரிடப்பட்டன. அவற்றில் ரடாருக்குப் புலப்படாத தன்மை உள்ளடக்கப்பட்டன. அதிக அளவு படைக்கலன்களை அவை தாங்கிச் செல்லக் கூடியவையாகவும் அமைந்துள்ளன.
அமெரிக்காவின் F/A-18E/F Super Hornet ஐரோப்பாவின் Eurofighter
Typhoon, சுவீடனின் Saab JAS 39 Gripen பிரான்ஸின்
Dassault Rafale ஆகியவை முன்னணி நான்கரையாம் தலைமுறைப் போர் விமானங்களாகும்.
ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச்
செயற்பாடுகளையும் மிகப் புதிய ரகக் கணனிகளையும் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற
விமானங்களுடனும் படைக் கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை
ஏற்படுத்தக் கூடியவை. இலத்திரனியலில் இவை உச்சத்தைத் தொட்டுள்ளன. இணையவெளிப் போர்
கூட இவற்றால் செய்ய முடியும். இதில் உள்ள கணினிகள் எதிரியின் கணினித் தொகுதிகளைச்
செயலிழக்கச் செய்யும். அமெரிக்கா 2007-ம் ஆண்டு தனது F-22
என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை சேவையில் ஈடுபடுத்தியது. அதன்
தொழில்நுட்பங்களை சீனா இணையவெளியூடாக திருடியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
அதன் மூலம் சீனா தனது J-20 போர்விமானங்களை உருவாக்கியது.
விமான எந்திர உற்பத்தியில் பின்தங்கியுள்ள சீனாவால்
அமெரிக்காவின் எந்திரங்களைப் பிரதி பண்ண முடியவில்லை. J-20 விமானங்களின்
எந்திரங்களின் இரைச்சல் அவற்றைப் புலப்படா விமானம் இல்லை என விவாதிக்க
வைக்கின்றது. இரசியாவின் SU-37 ஐந்தாம் தலைமுறைப்
போர்விமானமாகும். அமெரிக்காவின் F-22 மட்டுமே பரவலாக
போர்முனையில் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும்.
அமெரிக்காவின் F-35 இலத்திரனியலில் மிகவும் மேம்பட்ட ஐந்தாம்
தலைமுறைப் போர்விமானமாகும். வான்படை, கடற்படை, கடல்சார் படை ஆகிய முப்படைகளிலும் பாவிக்கக் கூடிய மூன்று வகையான F-35 போர்விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விமானம்தாங்கிக் கப்பலில்
பாவிக்கப்படும் F-35 மிகக்குறுகிய தூரம் ஓடி வானில்
எழும்பவும் உலங்குவானூர்தி போல் செங்குத்தாக தரையிறங்கவும் வல்லன.
பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறை விமானம்
2018-ம் ஆண்டு பிரித்தானியா தனது Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் மாதிரி அமைப்பைக் காட்சிப்படுத்தியது.
2020-ம் ஆண்டு இதற்கான முழுத் திட்ட வரைபும் செய்து முடிப்பதற்கென்று இருபது பில்லியன்
பவுணை பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளது. மொத்த உற்பத்திச் செலவு மிக மிக அதிகமாக இருக்கும்
என எதிர்பார்க்கப்படுவதால் இத்தாலியையும் சுவீடனையும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
சுவீடனின் விமான உற்பத்தித் துறை சிறந்த இலத்திரனியல் போர்முறைமைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால்
அதன் அனுபவம் சிறந்த பங்களிப்பைச் செய்யக் கூடும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப்
போர்விமானமான F-35இன் உற்பத்தியில் கணினி முறைமைகளின் குறியீடுகளில் பெரும்பாலானவற்றை
பிரித்தானியர்களே எழுதினர். அந்த அனுபவம் மேலும் விருத்திச் செய்யப்பட்டு ஆறாம் தலைமுறைப்
போர்விமானத்தில் பாவிக்கப்படும். Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப்
போர் விமானத்தின் எந்திரத்தை பிரித்தானியாவின் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத்
தொடங்கி விட்டது. Tempest(சூறாவளி) போர் விமானம் 20300-ம் ஆண்டுதான்
முழுமையான பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்
முழுமையாக
எதிரியால் புலப்படாத தன்மை, ஒலியிலும் பல மடங்கு வேகத்தில்
பறக்கும் திறன, துல்லியமாகத் தாக்குதல், செயற்கை விவேகத்தின் மூலம் மிகத்துரிதமான செயற்பாடு, விமானியில்லாமலும் விமானியாலும் இயங்கும் திறன், லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களைக் கொண்டிருத்தல், எதிரியின் எந்த வான் பாதுகாப்பையும் ஊடறுத்தல் ஆகியவை ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின்
முக்கிய அம்சங்களாகும். ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் தமது உடன் பறப்பு விமானங்களாக
பல ஆளில்லா போர் விமானங்களை தாமாகவே இயக்கிக் கொண்டு பறப்பவையாக இருக்கும்.
பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின்
பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து ஆறாம்
தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்ய முயல்கின்றன. பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பல்களும்
பாவிக்கக் கூடிய போர் விமானங்களையும் இணைத்து உற்பத்தி செய்ய விரும்புகின்றன. ஆனால்
ஜேர்மனிக்கு அது தேவையற்ற ஒன்றாகும். மிராஜ், டச்டோல்ஃப் ஆகிய விமானங்களை உற்பத்தி
செய்த Dassault Aviation
நிறுவனமும் ஜேர்மனியின்
Airbus நிறுவனமும் இந்த
உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்க விருக்கின்றன. ஜேர்மனியின் Airbus இயந்திரத்தை உற்பத்தி
செய்யும்.
ஒன்றுபடுதல்
அவசியம்
இரசியாவின்
படைத் தொழில் நுட்ப வளர்சியையும் இரசியாவின் விரிவாக்க நோக்கத்தையும் கருத்தில் கொண்டால்
மேற்கு ஐரோபிய நாடுகளுக்கு ஆறாம் தலைமுறைப் போர்விமானம் அவசியமானதாகும். பிரித்தானியாவும்
பினான்ஸும் தமது வல்லரசு நிலையைப் பேணுவதும் அவசியம். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரச்சூழல்
அவை தனித்தனியே உற்பத்தி செய்வதிலும் பார்க்க ஒன்று அட்டு உற்பத்தி செய்தல் நன்று.