கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு வலிமையான கடற்படை அவசியம். கடலோர வளங்களையும் கரையில் இருந்து 200 கிலோ மீட்டர் தூர கடற்பொருளாதார வளத்தையும் பாதுகாப்பதற்கும் கடற்போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் கடற்படை அவசியமானதாகும். முன்பு பிரித்தானியாவும் தற்போது அமெரிக்காவும் தமது கடற்படை வலிமை மூலமாகவே தம் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தின. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அதன் பொருளாதார வலிமையும் கடற்படை வலிமையுமே தூக்கி நிறுத்தின.
சீனாவினதும் அமெரிக்காவினதும் விமானம் தாங்கிக் கப்பல்கள்
சீனாவிடம் தற்போது இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. முதலாவது இரசியாவிடமிருந்து வாங்கிய லியோனிங். மற்றது சீனாவே உருவாக்கிய ஷாண்டோங். சீனா மேலும் இரண்டு புதிய விமானம் தாங்கிக் கப்பல்களை சீனா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அவை அறுபதாயிரம் தொன் எடையுள்ள நடுத்தர அளவு விமானம் தாங்கிக் கப்பல்களாகும். சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் 2023இல் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்காவின் பதினொரு விமானம் தாங்கிக் கப்பல்களும் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). விமானம் தாங்கிக் கப்பல்களின் தரவரிசை அவற்றின் எடை, தங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, அவற்றில் இருந்து விமானங்கள் கிளம்பிச் செல்லும் முறைமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். விமானம் தாங்கிக் கப்பல்களில் மிகச் சிறந்தவை மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). அவை:
1. ஒரு இலட்சம் தொன் அல்லது அறுபத்தி நான்காயிரம் மெட்ரிக் தொன் எடையுள்ளவை
2. தொண்ணூறு விமானங்களைக் கொண்டிருக்கும்.
3. மின்காந்த தொழில்நுட்பம் மூலம் குறைந்த அளவு தூரம் பறந்து விமானங்கள் வானில் பறக்கும்.
அமெரிக்காவின் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் இரண்டு விமானங்கள் பறந்து செல்லக் கூடியவை.
பின் தங்கிய சீனா
சீனா தனது விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு இரசியாவின் எஸ்யூ-33 போர்விமானங்களை வாங்க முயற்ச்சித்த போது இரசியா அவற்றை விற்பனை செய்ய மறுத்து விட்டது. பின்னர் சீனா உக்ரேனிடமிருந்து அரைகுறையாக வடிவமைக்கப் பட்ட எஸ்யூ-33 விமானங்களை வாங்கி Reverse Engineering மூலம் உருவாக்கிய விமானங்கள் சரியாக வேலை செய்யவில்லை. Reverse Engineering மூலம் இயந்திரஙக்ளை உருவாக்குவது மிக மிக கடினமானது என்ற படியால் சீனாவால் சிறந்த போர் விமானங்களை உருவாக்க முடியவில்லை. அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்
சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனல் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியாவின் பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
இந்தியவினதும் சீனாவினதும் கரையோரங்கள்
இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. தென் சீனக் கடலின் தொண்ணூறு விழுக்காடு தன்னுடையது என உரிமை கொண்டாடும் சீனா பல நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொள்கின்றது.
மலபார் போர்ப்பயிற்ச்சி
இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பில் மலபார் போர்ப்பயிற்ச்சி முக்கிய பங்கு வகிக்கும். 1992இல் இருந்து அமெரிக்கா, இந்தியா, இணைந்து செய்து வந்த இப்போர்ப்பயிற்ச்சியில் 2015இல் ஜப்பான் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே இப்போர்ப்பயிற்ச்சியை சீனா ஐயத்துடனும் சினத்துடனும் பார்த்தது வருகின்றது. மலபார் போர்ப்பயிற்ச்சியில் இனி ஒஸ்ரேலியாவும் இணைந்து கொள்ளவிருக்கின்றது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து குவாட் என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவக்கி வருகின்றன. இது ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் என்பதை மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்தமை எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிரான போர் ஏற்படும் போது இந்த மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு உதவக் கூடிய வகையில் ஒப்பந்தம் செய்தல் அவசியமானதாகின்றது.
அமெரிக்க தளங்களைப் பாவிக்கக் கூடியக இந்தியா
2016—ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் செய்து கொண்ட செயலாதார பரிமாற்ற ஒந்தக் குறிப்பணை(Logistics Exchange Memorandum of Agreement) இந்தியாவிற்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள அமெரிக்க படைத்தளங்களை பாவிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவின் கடற் போக்கு வரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவிற்கு வலிமை மிக்க கடற்படை தேவை. இந்தியாவின் இரண்டாவது வி/தா கப்பல் முப்பதினாயிரம் எடையுள்ள சிறிய வகை வி/தா கப்பலாகும்.. இந்தியா இரசியாவிடமிருந்து 2013இல் வாங்கி மேம்படுத்திய வி/தா கப்பலான விக்கிரமாதித்தியா 44,500 தொன் எடையுள்ளது. அமெரிக்காவிடமிருந்து மின் காந்தம் மூலம் விமானங்களை கப்பல்களில் இருந்து பறக்கவைக்கும் தொழில் நுட்பத்தை வாங்கும் அனுமதிய இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சீனா அத்தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல்
சீனா விரைவில் நான்கு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்ட ஒரு நாடாக உருவெடுப்பதால் இந்தியாவிற்கு மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் அவசியமானதாகின்றது. ஒரு விமானம் தாங்கிக் கப்பல் பராமரிப்பிற்காக மூன்று மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். சீனா தனது நான்கு விமானம் தாங்கிக் கப்பல்களையும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக நகர்த்த முடியாது என்றாலும் இந்தியா அரபிக்கடல், இந்து மாக்கடல், வங்கக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல் அவசியமாகின்றது. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் சீனாவினுடையவற்றிலும் பார்க்க சிறியதாகும். இந்தியக் கடற்படையினரும் மூன்றாவது கப்பலுக்கு நீண்ட காலமாக வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். விமானம் தாங்கிக் கப்பல் என்பது ஒற்றைக் கப்பல் அல்ல. அதற்கு என்று பல பரிவாரக் கப்பல்கள் அவசியம். ஒரு விமானம் தாங்கிக் கப்பலைச் சுற்றிவர நாசகாரிக் கப்பல்கள், நீர்மூழிகிக்கப்பல்கள், கரையோரக் கப்பல்கள் என்பன எப்போதும் இருக்க வேண்டும்.
சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை அழிப்பதற்கு என்று பலவகையான ஏவுகணைகளையும் நீர்மூழ்கிக்கப்பல்களையும் தானுந்தி நீரடி ஏவுகணைகளையும் (Torpedoes) உருவாக்கி வைத்துள்ளது. அவற்றில் இருந்து தனது விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான இடைமறிப்பு ஏவுகணைகளை இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற வேண்டியதும் அவசியமானதாகின்றது. அத்துடன் இரு நாடுகளும் இதில் இணைந்து பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கவும் வேண்டும்.