Saturday, 26 June 2010

எரிக் சொல்ஹெய்ம் சொல்வதும் சொல்லாமல் விட்டதும்


இலங்கையில் சமாதான(?) பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் காணாமற் போன இருவர் மீண்டும் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் யசூசி அகாஷி இவர் இருவாரங்களுக்கு முன்னர் இலங்கை சென்று தானும் ஒரு ஹெகேலிய ரம்புக்வேலபோல் பேசிவிட்டுச் சென்றார். அடுத்தவர் நோர்வேயின் அமைச்சர் எரிம் சொல்ஹெய்ம். இருவரும் இலங்கையில் சமாதானம் ஏற்படுத்த தாங்கள் முயல்வது போல் காட்டிக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்வதாக அறிவித்த பின்னர் இவர்களும் மௌனித்துக் கொண்டனர். போர் முடிந்தபின்னர் தமிழர்களின் அவலங்கள் பற்றியோ அவர்களுக்கு இழைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகள் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதில்லை. இவர்கள் இருவரும் இலங்கையில் சமாதானம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு ஏதோ நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் செயற்பட்டிருக்கிறார்கள்.

2009 மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் ஒரு வெளிநாட்டு முக்கிய பிரமுகரை உழங்கு வானொலியில் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சிறு பிரதேசத்தில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுத் தவிப்பதைக் காட்டி இச்சிறு பிரதேசத்துக்குள்தான் இந்த விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ளனர் என்று காட்டினார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் அப்படியே குண்டுகளைப் போட்டு அத்தனைபேரையும் அழித்தொழிக்கும்படி கூறினாராம். அந்தப் பிரமுகர் ஜப்பானின் யசூசு அகாசி என்று நம்பப்படுகிறது.

பலகாலமாக மௌனமாக இருந்த எரிக் சொல்ஹெய்ம் இப்போது திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவர் உதித்த திருவாசகம்:
  • 2009 மே மாதம் 17-ம் திகதி விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் எஸ். புலித்தேவன் மற்றும், சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதன் போது அவர்கள் சரணடையப் போவதாக என்னிடம் அறிவித்தனர். இதே கோரிக்கையை அவர்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஐநா சபை ஆகியவற்றிடமும் விடுத்திருந்தனர். விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்தேன்.எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் இவை நடந்த சில மணித்தியாலங்களில் அவர்கள் கொல்லப்பட்டதாக அறிந்தேன்.
  • என்னைப் பற்றி இலங்கை ஊடகங்கள் அப்பட்டமான பொய் செய்திகள் பரப்பின.
  • புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே போருக்கான பசி வேண்டாம். போருக்கு பன்னாட்டு ஆதரவு கிடையாது.
  • தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்ற பரந்த ஆதரவு உலகெங்கும் உண்டு.

எரிக் சொல்ஹெய்ம் சொல்லாமல் விட்டது:
  • இலங்கையில் சிங்களவர்கள் அவர்களுடன் நான் பழகியதன் அடிப்படையில் அவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு உரிமை வழங்கப்போவதில்லை
  • அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதைக் கூறவில்லை.
  • சரணடையும் பேச்சு வார்த்தையில் எரிக் சொஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சதீஸ் நம்பியார், கனிமொழி, ஜகத் கஸ்பர், இந்திய வெளியுறவுத்துறையினர், பாலித கொஹென்ன ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்தனர்.
இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை வேரோடு அழிப்பேன் என்று கூறியிருந்தார். இந்தியாவை ஆளும் குடும்பத்தின் நேக்கமும் அதுவே என்பது பகிரங்கப்படுத்தப் பட்ட உண்மை. அதற்கு அவர்களை சரணடையச் சொல்லிவிட்டு கொன்று குவிப்பதுதான் ஒரே வழி. இதை இலங்கையும் இந்தியாவும் ஒன்று சேர்ந்து செய்ததா? இறுதியில் படுகாயமடைந்திருந்தவர்களை கடைசியாக யார் புலிகள் யார் பொதுமக்கள் என்ற நிலையில் அனைவரையும் உயிருடன் புதைத்தனரா? செஞ்சிலுவைச் சங்கத்தால் காயமடைந்தவர்கள் என்று சொல்லி கொண்டு வந்தவர்களை இந்தியாவில் இருந்து வந்த மருத்துவர்கள் உரிய சிகிச்சைகள் வழங்காமல் கைகால்களைத் துண்டித்து அவர்களை நிரந்தர முடமாக்கினார்களா? அவர்களின் உடலுறுப்புக்களைத் திருடினரா? இவற்றை யார் சொல்வார்?

மோசமான மாமியர் நகைச்சுவை


உலகின் எந்த நாட்டிலும் எந்த இனக் குழுமத்திலும் மாமியார் மருமகள் சண்டையும் மாமியாரில் மருமகனுக்கு வெறுப்பும் பொதுவானதோ? மாமியார் பற்றி எத்தனையோ நகைச்சுவைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படி ஒன்று.

ஒரு நடுத்தர வயதுத் தம்பதிகள் மகிழூந்தில்(காரில்) உல்லாசமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். மனைவிக்கு கொஞ்சம் "மூடு" வந்துவிட்டது. மனைவி கைகள் ஏதோ செய்ய கணவன் இன்னும் வேகமாகக் மகிழூந்தை(காரை) ஓட்டினார். மகிழூந்து(கார்) மோதுண்டு கணவருக்கு கையில் காயம். மனைவி பாவம் முகத்தில் படுகாயம் கன்னங்களில் உள்ள சதைகள் கிழிந்தே விட்டன.

மருத்துவ மனையில் ஒரு நல்ல மருத்துவர்.கைதேர்ந்தவர். அவர் கணவனின் பின்புறத்தில்(buttocks)இருந்து தசை எடுத்து மனைவியின் முகத்தில் வைத்து மிகச்சிறப்பாக மனைவியின் முகத்தை சரிசெய்துவிட்டார்.

மனைவியின் முகம் இப்போது மிகவும் புதுப் பொலிவுடன் காணப்பட்டது. ஏற்கனவே இருந்த சுருக்கங்கள் யாவும் போய்விட்டன. இப்போது முன்பிருந்ததிலும் பார்க்க இளமையாகத் தோற்றம் அளித்தார்.

தனது முகம் புதுப் பொலிவு பெற்றதால் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் தனது கணவருக்கு நன்றி சொல்வதை மனைவி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படிச் சிலகாலம் சென்றது. ஒரு நாள் கணவரின் பின்புற(buttocks)தசைத் தானத்திற்கு நன்றி சொல்லும் போது கணவர் சொன்னார். நீ அடையும் மகிழ்ச்சியிலும் பார்க்க எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது உனது கன்னத்தில் உனது தாயார் முத்தமிடும் போதெல்லாம் என்றார்.

Friday, 25 June 2010

உறைந்த பனியில் கருகிய தளிரானது


என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
நெஞ்சோரத்தில் ஒரு கனப்பு
உள்ளமெங்கும் உன் நினைப்பு

என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
விழியோரத்தில் ஒரு நனைப்பு
இதயத்தில் ஒரு வலிப்பு


என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
என்னருகில் இன்று நீ இல்லை
என்படுக்கையில் ஒரு இடைவெளி

என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
கைகளிணைய கால்கள் உரச
ஆடிய நடங்கள் ஓய்ந்து விட்டன

என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
பார்வைகளால் வந்த அம்புகள்
வார்த்தைகளால் வந்தன

என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
ஏறிப்போன் கடனட்டை நிலுவைகள்
கனவுகள் ஏறின சிலுவைகள்

என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
உறைந்த பனியில் கருகிய தளிராய்
ஏன் மறைந்தது நம் உறவு

ஓர் ஐ-போனிற்கு ஏன் இந்தப்பாடு?




அமெரிக்காவில் முதலி ஐ-போன்4 இம்மாதம் 23-ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆறு இலட்சம் மக்கள் இணையத்தினூடாக முதல்நாள் வாங்கிக் கொண்டனர். மற்றவர்கள் கடைகளின் முன்னால் முதல் நாள் இரவில் இருந்தே காத்திருந்தனர். பலர் எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருந்தனர்.

இலண்டனில் ஐ-போன் 4 அறிமுகப்படுத்தப் பட்ட போது நிலைமை வேறு. இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் ஐ-போன்4 இன் பிரியர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

தான் முதல் ஆளாக வாங்க வேண்டும் என்று துபாயில் இருந்து இலண்டன் பறந்து வந்தார் அலெக்ஸ் லீ என்னும் 27 வயது இளஞர். இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருந்த அவருக்கு ஐ-போன்4 கிடைத்தது ஆனால் முதலாவதாகக் கிடைக்கவில்லை. முற்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்த ஒருவருக்கு 16 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்ததன் பின் முதலாவதாகக் கிடைத்தது.

ஐ-போன் கடைகளில் உள்ள கையிருப்பு அதன் பிரியர்களிலும் பார்க்கக் குறைவானதாகவே இருக்கிறது.

The iPhone 4, unveiled at Apple's WWDC in June, boasts a high-resolution 'retina' display, a longer-lasting battery and improved cameras among its many new features.

Not only does it run Apple's latest iOS4 (which finally includes multitasking), the newest incarnation of the popular mobile features video chat - something that Apple has named 'Facetime'. Users will be able to use the front-facing camera to chat with other users around the globe, though the service is limited to Wi-Fi only at present.

Thursday, 24 June 2010

வெளுத்துப் போன சிவத்த தம்பி




அன்று இப்படிச் சொன்ன சிவத்தம்பி இன்று சொல்வது:
  • முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
முதல்வர் கருணாநிதிக்கு ஒர் உறுதியான நிலைப்பாடு இருக்கிறது என்பதை சிவத்தம்பி அறியமாட்டார். அவரால் சொர்க்கத் தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியாவின் நிலைப்பாடுதான் அவரது நிலைப்பாடு. மத்திய அரசின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு என்று அவர் பகிரங்கமாக அறிவித்தவர்.

இலங்கையில் ஒருகாலத்தில் தங்களை மார்கசியவாதிகள் முற்போக்களர்கள் என்று சொல்லிக் கொண்டு சிங்களப் பேரினவாதிகள் பின்னால் அலைந்த பலருள் கலாநிதி சிவத்தம்பியும் ஒருவர். இலங்கையில் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் இலக்கியங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கவேண்டும் என்று முழங்கியது இந்தக் கும்பல். இலங்கைத் தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதிகளின் பேராசையை நிறைவேற்றவே இவர்கள் இப்படிக் கூக்குரல் இட்டார்கள்.

சிவத்தம்பி உட்பட தங்களை முற்போக்கு வாதிகள் என்று கூறிக் கொண்ட இந்த கம்யூனிச முகமூடிய சிங்களப் பேரினவாதிகளின் அடிவருடிகள் பெரியாரின் திராவிட இயக்கத்தையும் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் எப்படி விமர்சனம் செய்தார்கள் என்பதை தமிழர்கள் மறக்கவில்லை. இவர்கள் தந்தை செல்வாவின் இணைப்பாட்சி(சமஷ்டி) கொள்கையை எப்படி விமர்சித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

தமிழ்நாட்டு பத்திரிகைகள் சஞ்சிகைகள் இலங்கைக்கு வருவதை எதிர்த்த கும்பலில் சிவத்தம்பியும் ஒருவர். அவர் அன்று எந்த சஞ்சிகைகளை குப்பை என்று எதிர்தாரோ அதே சஞ்சிகைகளுக்கு பேட்டிகள் கட்டுரைகள் இன்று வழங்கிப் பெருமை தேடுகிறார்.

1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் என்றபோர்வையில் நடந்த இனக்கொலையின் பின்பே இந்த சிவத்த தம்பி சிங்களவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டார்.

என்றாகும் உன் நெஞ்சகம் என் நிரந்தரத் தங்ககம்


இதழது இனிப்பகம்
இடையது நூலகம்
கண்கள் காமன் தொழிலகம்
நெஞ்சது பட்டகம்
மனமது திறவாப் பெட்டகம்
வாயது முத்தகம்
மயக்கும் நகையகம்
தையலகம் என் துயிலகம்
வேண்டாம் நாணத் திரையகம்
கன்னங்கள் பளிங்ககம்
என் இளமைப் பசிக்கு
நீயே உணவகம்
மனதில் ஒரு குளம்பியகம்
தேறுமா என் காதல் முனைவகம்
உன்கைகள் ஆகட்டும் நலம் பேணகம்
இன்றேல் என் உள்ளம் வெதுப்பகம்
என்றாகும் உன் நெஞ்சகம்
என் நிரந்தரத் தங்ககம்

Wednesday, 23 June 2010

செம்மொழி மாநாடு பற்றி இலண்டன் வானொலியில் சொல்லப் பட்ட கருத்துக்கள்.


தமிழ்நாடு கோவையில் நடந்து கொண்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பற்றி தனது நேயர்களை கருத்துத் தெரிவிக்கும்படி இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்று புதன்கிழமை 23-06-2010 இரவு கேட்டுக் கொண்டது. அங்கு நேயர்கள் கூறிய கருத்துக்களின் சாராம்சம்:

1. முதல் வந்த நேயர் இது செம்மறி மாநாடு என்றார்- தமிழர்கள் உயிரோடு புதைக்கப் பட்டபோது பேசாமல் இருந்தவர்கள் இறந்த மக்களுக்கு இரங்கல் கூடத தெரிவிக்காமல் மாநாடு நடத்துவதைக் கண்டித்தார்.

2. அடுத்து வந்தவர் தமிழர்கள் கொல்லப் பட்டபோது பேசாமல் இருந்தது தமிழக அரசு. அது ஒரு கையாலாகாத அரசு. அப்படிப்படவர்களுக்கு செம்மொழி மாநாடு நடத்த அருகதை இல்லை என்றார்.

3. தொடர்ந்து வந்த நேயர் தமிழ் செம்மொழியாக்கப் பட்டமைக்கான மாநாடு அதில் இறந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கதது கண்டனத்துக்குரியது என்றார்

4. அதற்கடுத்து வந்த நேயர் இந்த மாநாடு தமிழர்களை முன்னிறுத்தாமல் திராவிடர்களை முன்னிறுத்தி நடத்தப் படுகிறது. சிங்களவரிலும் பார்க்க இந்தியா கொடுமையானது என்றும் கூறினார்.

5. பின்னர் வந்த நேயர் ரோம் எரியும் போது நீரோ மன்னர் பிடில் வாசித்ததிற்கு ஒப்பானது இந்தச் செம்மொழி மாநாடு என்று சொன்னார்.

6. அடுத்து வந்த நேயர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஒரு தமிழாராச்சி மாநாடு கூட நடத்தவில்லை . தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவும் தன்னைப் பற்றி மற்றவர்கள் புகழ்வதைப் பார்த்து மகிழவும், அதிமுகவின் கோட்டையான கோவையைத் தாக்கவும் இந்த மாநாடு என்றார்.
அவரிடம் இலண்டனில் பல நிகழ்வுகள் நடக்கின்றன என்றார் நிகழ்ச்சியை நடாத்திய அறிவிப்பாளர். அத்துடன் சிவத்தம்பி விழாவில் கலந்து கொள்கிறாரே என்றும் அறிவிப்பாளர் கேள்வி எழுப்பினார்.
முதலில் போக மறுத்த சிவத்தம்பியை கருணாநிதி கனிமொழி ஆகியோர்பல முயற்ச்சிகளின் பின் மனம் மாற்றினார்கள் என்றார் அந்த நேயர்.

7. இன்னொரு நேயர் இலண்டனில் இருந்து பற்றிமாஹரன் கலந்து கொண்டமைக்காக கவலைப்பட்டார்.

8 முதலாவதாக கலந்து கொண்ட நேயர் மீண்டும் வந்து கலைஞருக்கு இந்த மாநாட்டில் பட்டங்கள் வழங்கப்படும் என்றார்.

9. ஒரு நேயர் மீண்டும் வந்து செம்மொழி மாநாட்டைத் தாக்கிப் பேச முற்பட்டபோது அறிவிப்பாளருக்குப் பொறுக்க முடியவில்லை. இந்த வானொலியும் அதன் அறிவிப்பாளரும் இந்திய இலங்கை அரசுகளின் கைக்கூலி என்று சிலர் குற்றம் சுமத்துவது உண்டு. வந்த சகல நேயர்களும் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததை அவரால் பொறுக்க முடியவில்லை. ஐரோப்பிய தமிழர்களின் பலவீனம் அவர்களின் பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை என்பதுதான். அதுவும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை. அறிவிப்பாளர் வந்த நேயர்களைத் தாக்குவதற்கு அதை ஆயுதமாக எடுத்துக் கொண்டு திருப்பித் திருப்பி அதையே கூறிக் கொண்டார். இதனால் கருத்துக் களம் திசை மாறியது. பின்னர் அதிக நேரம் அதில் செலவிடப் பட்டது.

10. அடுத்து வந்த நேயர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கிண்டலாகச் சொன்னார்.

11. இன்னொரு நேயர் வந்து சிவ சங்கர மேனன் தமிழினத்தை வேரோடு அழிப்பேன் என்று கூறியதாகச் சொன்னார். அதை அந்த அறிவிப்பாளரும் ஆமோதித்தார். ( நான் அறிந்த மட்டில தமிழீழ விடுதலைப் புலிகளை வேரோடு அறுப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டது.) கலைஞர் ஈழத் தமிழ் மக்களைப் பற்றி கவலைப் படுவதில்லை என்றும் அந்த நேயர் சொன்னார்.

துரோகக் குழுவைச் சேர்ந்தவராகக கருதப்படும் அந்த அறிவிப்பாளர் இப்போது வேறு விதமாகக் கதையைத் திருப்பினார். இலங்கையில் இந்தியத் திரைப்பட விழா நடந்த போது டெல்லிவரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஏன் இதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, பயந்து விட்டார்களா என்று மறைமுகமாக சீமானைத் தாக்கினார். அத்துடன் தஞ்சையில் ஜெயலலிதா நடாத்திய மாநாட்டில் ஜெயலலிதாவின் பின்னால் நின்றவர் நெடுமாறன் என்றார். அதற்குச் சென்ற ஈழத் தமிழறிஞர்கள் சிவத்தம்பி உட்பட மாநாட்டில் பங்கு பற்றாமல் இந்திய அரசால் திருப்பி அனுப்பப் பட்டதையும் அந்த அறிவிப்பாளர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் எந்த ஒரு நேயரும் செம்மொழி மாநாட்டை ஆதரிக்கவில்லை.

இலங்கைக்கு வேண்டாதவர் ஐநா ஆலோசனைக் குழுவில்.


இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்க அமைக்கப் பட்டுள்ள குழு தொடர்பாக இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன் இலங்கையில் ஓர் உயர்மட்டக் குழு கூட்டப் பட்டுள்ளது.

பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடும்போது இலங்கையும் ஒரு வேட்பாளரை நிறுத்த முயன்றது. இலங்கை சார்பில் ஒருவர் போட்டியிட்டால் அது பான் கீ மூனின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்யும். இலங்கைப் பிரதிநிதி போட்டியில் இருந்து விலக திரை மறைவில் சில உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தென் கொரியரான பான் கீ மூனும் அவரது உதவியாளரான சதீஸ் நம்பியார் என்ற மலையாளியும் இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்வதாக பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டு வருகின்றன.

சர்வ தேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐநா விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இலங்கை புரிந்த அட்டூழியங்களை பல அதிர்ச்சியூட்டும் காணொளிகள் மூலமாக வெளிக் கொணர்ந்தது. இவற்றைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அது அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கால தாமதத்திற்கான காரணம் இலங்கையுடன் திரை மறைவில் பான் கீ மூன் பேச்சு வார்த்தைகளில் ஈடு பட்டுக் கொண்டு இருந்திருக்க வேண்டும். கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி இலங்கை ஐரோப்பியாவையோ அல்லது அமெரிக்காவையோ சேர்ந்தவர்கள் ஆலோசனைச் சபையில் இடம்பெறுவதை விரும்பவில்லை. அந்தக் கோரிக்கையை முழுதாக பான் கீ மூனால் நிறைவேற்ற முடியாற் போய்விட்டது. அவர் தன்னிச்சையாகவும் நியமிக்க முடியாது. அப்படிச் செய்தால் அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் பாயும். அவர் ஆசியான் நாடுகளின் பிரதிநிதியையும் அமெரிக்கப் பிரதி நிதியையும் ஆபிரிக்கப் பிரதி நிதிகளையும் கலந்தாலோசித்து இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோரை நியமித்துள்ளார். இலங்கைப் போர் குற்றங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா ஒரு திடமான கொள்கையை கடைப் பிடிக்கவில்லை. பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) எப்படி நடந்து கொள்வார் என்று எதிர்வு கூற முடியாது.

பான் கீ மூன் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் அவர்கள் ஏற்கனவே இலங்கையில் அமைக்கப் பட்ட பன்னாட்டு சுதந்திர நிபுணர் குழுவில் (International Independent Group of Eminent Person) இடப் பெற்றிருந்தவர். இக்குழு இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக விசாரணை செய்ய முயன்ற போது இவருக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனால் இவர் தமக்கு வேண்டப்படாதவர் என்று இலங்கை கருதுகிறது. அதனால் அதிர்ச்சியுமடைந்துள்ளது.

ஆலோசனைக் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக இன்னும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. ஆலோசனைக் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக பான் கீ மூன் இலங்கையுடன் கலந்தாலோசித்திருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பான் கீ மூன் அமைத்துள்ள ஆலோசனைக் குழு தொடர்பாக இலங்கை அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

Tuesday, 22 June 2010

ஐரோப்பிய ஒன்றியம் ஏன் ஜிஎஸ்பி+ ஐ நீடிக்கிறது?



ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை இலங்கைக்கு சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து வழங்கியது.

GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி அல்லது குறைந்த தீர்வுடன் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியம் 17 நாடுகளுக்கு இந்தச் சலுகையை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை நீக்கப் பட்டால் நேரடியாகவும் அதனுடன் தொடர்பு பட்டதாகவும் இருக்கும் 250,000 இலங்கையர் வேலை இழப்பர் என்று தெரிவிக்கப் படுகிறது. குடும்பங்களோடு தொடர்பு படுத்தி கணக்குப்பார்த்தால் இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிக்கப் படுவார்களாம்.
ஜிஎஸ்பி+ஆல் இலங்கை அடைந்த நன்மையை அறிந்து கொள்ள உகந்த புள்ளி விபரம்: 2005-ம் ஆண்டு 99பில்லியன் ரூபாக்கள் ஏற்றுமதி வருவாய் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்தது. ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை வழங்கியபின் அது 157பில்லியன் ரூபாக்களாக அதிகரித்தது. இதே வேளை அமெரிக்காவிற்கான எற்றுமதி வருவாய் 164பில்லியன்களில் இருந்து 173பில்லியன்கள் மட்டுமே அதிகரித்தது. அமெரிக்காவிற்கான வளர்ச்சியிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி பத்துமடங்கு அதிகரித்தது. இலங்கையில் ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையால் பயனடையும் துறைகளில் ஆடை அணிகலன் துறை மிக முக்கியமானதாகும். மற்றைய துறைகள் இறப்பர், மாணிக்கம், கடலுணவு மற்றும் மரக்கறி வகைகளாகும்.

பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று முன்னர் தெரிவித்துள்ளது. பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்று இலங்கைகான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.

Marks & Spencer, Tesco, Next போன்ற பிரித்தானிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து அங்கிருந்து GSP+ வர்த்தகச் சலுகையைப் பாவித்து குறைந்த விலையில் தமது பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்கின்றன.

GSP+ வர்த்தகச் சலுகையின் பின்னணி
மேற்குலக நாடுகள் தமக்கு குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் ஜப்பானைப் பயன்படுத்தின. ஜப்பான் பாரிய பொருளாதார வளர்ச்சியடைந்த பின் அதன் நாணய மதிப்பு பெரிதளவில் வளர்ச்சி கண்டது. பின்னர் ஆசியச் சிறு வேங்கைகள் என் அழைக்கப் பட்ட ஹொங் ஹாங், தென் கொரியா, தைய்வான், சிங்கப்பூர் ஆகியவற்றில் இருந்து இறக்குமதிகளைச் செய்தன. அவையும் பொருளாதார வளர்ச்சிகாண பின்னர் சீனா அந்த இடத்தைப் பிடிக்க முயன்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை ஒரு பொது உடமை போர்வை போர்த்திய அரச முதலாளித்துவ நாடான சீனாவில் இருந்து இறக்குமதி செயவது பெரிதும் விரும்பத்தக்கதல்ல. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேற்குலகிற்கு அச்சுறுத்தலாக அமையும். இதை தவிர்க்கும் முகமாக வறிய நாடுகளுக்கு ஜீஎஸ்பீ+ வரிச்சலுகையை அளித்து அவற்றிடம் இருந்து இறக்குமதிகளைச் செய்யவே இந்த ஜீஎஸ்பீ+ வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பல நிபந்தனைகளை விதிக்கிறது. 27 பன்னாட்டு உடன்படிக்கைகளை அந்த நாடுகள் அமூல் செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் கூறும் 27 பன்னாட்டு உடன்படிக்கைகளில் மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் அமைத்த விசாரணைக் குழு கூறியது:International Covenant on Civil and Political Rights, the Convention agaist Torture and Convention on Rights of Child.

இலங்கை அரசியல் அமைப்பின் 17வது திருத்தம் அமூல் படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்தது. பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் இலங்கைக்கான ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நிறுத்தப் படுவதாக அறிவித்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் 2011 பெப்ரவரி வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நீடிக்கப் படும் என்று அறிவித்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியக் குத்துக் கரணத்துக்கு என்ன காரணங்கள்?
  1. முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல். இலங்கையில் முதலீடு செய்த ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் முதலீட்டைப் பாதுகாப்பது. ஒரு நிறுவனம் முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டிற்கான மிள் செலுத்தல் காலம்(Pay back period) ஒன்றை கணக்கிடும். அந்த முதலீட்டுக் காலம் முடியும் வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை இழுத்தடிக்க வேண்டிய கட்டாயத்தால் இந்த வர்த்தகச் சலுகை நீடிக்கப்படுகிறது. Marks & Spencer, Tesco, Next போன்ற வர்த்தக நிறுவனங்களை பாதுகாக்க இந்த இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
  2. குறைந்த விலையில் இறக்குமதி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயங்களான யூரோ ஸ்ரேலிங் பவுன் போன்றவை அண்மைக் காலங்களாக பெறுமதித் தேய்வு கண்டு வருகிறன. இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை நிறுத்தினால் பல இறக்குமதிப் பொருட்களின் விலை மேலும் உயரும். இதைத் தடுக்கவும் இந்த பெப்ரவரி 2011 வரையான இழுத்தடிப்பு.

Monday, 21 June 2010

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கும் சிங்கள மந்தி(ரி)



1977-ம் ஆண்டு இலங்கை எங்கும் சில பொய் வதந்திகளைப் பரப்பி தமிழர்களுக்கு எதிரான ஒரு இனக் கொலையை சிங்களப் பேரினவாதிகள் அரங்கேற்றினர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டது. அதை உணர்ந்த அமெரிக்கா தனது கையாளும் தந்தை செல்வநாயகத்தின் மகனுமாகிய பேராசிரியர் ஏ ஜே வில்சனை அமெரிக்கவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முனைந்தது. அதன் ஒரு அம்சமாக எந்தவித அதிகாரமும் இல்லாத மாவட்ட சபை 1981இல்உருவாகியது. ஏ ஜே வில்சனின் ஆலோசனையுடன் உருவான மாவட்ட சபையை அதிகாரமற்றது என்று தமிழர்கள் ஏற்க மறுத்தனர். அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து அதை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்.

சிங்களத் தீவிரவாதிகளும் இந்த மாவட்ட சபை நாட்டைத் துண்டாட உதவும் என்று பலமாக எதிர்த்தனர். இத்தனைக்கும் மத்தியில் மாவட்ட சபைத் தேர்தல் நடந்தது. இந்த மாவட்டசபைத் தேர்தலில் பேரினவாத சிங்களக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிட்டது. அப்போது பிரதம மந்திரியாக இருந்த ஜே ஆர் ஜயவர்தன சிறில் மத்தியூ காமினி திசாநாயக்க ஆகிய இரு மந்திரிகளை பல சிங்களக் காடையர் சகிதம் யாழ்ப்பாணம் அனுப்பி என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ ஒருவரைத்தன்னும் தனது கட்சிக்காக யாழ் மாவட்டத்தில் வெல்ல வைக்க வேண்டும் என்று பணித்ததாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் வந்த சிறில் மத்தியூ யாழ் நூலகம் சென்ற போது அங்கு சிங்கள நூல்கள் இல்லை என்பதை அறிந்து ஆத்திரமடைந்தாராம். மறுநாள் தென் கிழக்காசியாவில் சிறந்த நூல் நிலையமாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை, வீதியோரங்களில், பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு, மே மாதம் 10ம் திகதியன்று, ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம், பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள், அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள்.

இந்த நூல் நிலைய எரிப்பிற்கு மஹிந்த ராஜபக்சவின் மந்திரியான சம்பிக்க ரணவக்க இப்போது யாழ்ப்பாணத்தில் வைத்து மன்னிப்புக் கோரியுள்ளார். இவர் சிரில் மத்தியூ காமினி திசாநாயக்க ஆகியோரிலும் பார்க்க படு மோசமான தமிழின விரோதி. 1981இல் சிங்களப் பேரினவாதிகளின் செயலுக்கு இன்று உள்ள சிங்களப் பேரினவாதி மன்னிப்புக் கேட்கிறார்.

இப்பொதுள்ள சிங்களப் பேரினவாதிகள் போரின் போது:
  • குழந்தைகளைக் கொன்றனர்.
  • மருத்துவ மனைகளை குண்டுகள் வீசி அழித்தனர்.
  • போர் முனையில் அகப்பட்ட பல இலட்சம் அப்பாவிப் பொதுமக்களுக்கு பல வாரக் கணக்காக உணவும் தண்ணீரும் மருந்தும் செல்லவிடாமல் தடுத்தனர்.
  • மக்களை உயிரோடு புதைத்தனர்.
  • சரணடைய வந்தவர்களை கொன்றனர். போர் கைதிகளை அடிமைகளாக நடத்துகின்றனர்.
இந்த அட்டூழியங்களுக்கு எப்போது யார் மன்னிப்புக் கேட்பர்?

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது


சமாதானத்திற்கான நிதியம் அமைப்பு வெளியிட்டுள்ள தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 177 நாடுகளில் 39 நாடுகள் தோல்வியடைந்த நாடுகளாக குறிக்கப் பட்டுள்ளன. அதில் முதலாம் இடத்தில் சோமாலியா, இரண்டாம் இடத்தில் ஜிம்பாவே, மூன்றாம் இடத்தில் சூடான், நான்காம் இடத்தில் சாட், ஐந்தாம் இடத்தில் கொங்கோ, ஆறாம் இடத்தில் இராக், ஏழாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் எட்டாம் இடத்தில் மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஒன்பதாம் இடத்தில் கினியா, பத்தாம் இடத்தில் பாக்கிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

22-ம் இடத்தில் இலங்கை
தோல்வியடைந்த நாடுகள் 39 இல் இலங்கை 22-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை பற்றிக் குறிப்பிடும் சகல ஆய்வாளர்களும் பத்திரிகைகளும் மற்றும் நிறுவனங்களும் முப்பதாண்டு உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தமிழர்கள் 62ஆண்டுகால பயங்கர அடக்கு முறைக்கு உட்பட்டிருப்பதை கவனிக்கத் தவறுகின்றனர்.

பூகோளப் படத்தில் சிவப்பு மயமாககப் பட்ட தோல்வியடைந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்தியா எச்சரிக்கைக் குரிய நாடாகக் காட்டப் பட்டுள்ளது.

பர்மா 13-ம் இடத்திலும், பங்களாதேசம் 18-ம் இடத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா தோல்வியடந்த 39 நாடுகளுக்குள் அடங்கவில்லை. அது தோல்வியடைந்த 177 நாடுகளின் பட்டியலில் 87-ம் இடத்தில் இருக்கிறது. 177 நாடுகளுக்குள் சிறந்த நாடுகளாக பின்வரும் நாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. அதில் நோர்வே மிகச்சிறந்த நாடாக இடம் பெற்றுள்ளது.
Iceland 165
Canada 166
Austria 167
Luxembourg 168
Netherlands 169
Australia 170
New Zealand 171
Denmark 172
Ireland 173
Switzerland 174
Sweden 175
Finland 176
Norway 177
இவற்றில் எந்த ஒரு வல்லரசு நாடும் இடம் பெறவில்லை. எந்த ஒரு ஆசிய நாடும் இடம்பெறவில்லை.

வல்லரசு நாடுகள்
சீனா 57
இரச்சியா 71
பிரான்ஸ் 158
ஐக்கிய அமெரிக்கா 159
ஐக்கிய இராச்சியம் 161
வல்லரசு நாடுகளில் ஐக்கிய இராச்சியம் சிறந்த இடத்திலும் சீனா மிக மோசமான இடத்திலும் இருக்கிறது. வல்லரசாக வரமுயலும் ஜெர்மனி 157-ம் இடத்திலும் இந்தியா 87-ம் இடத்தில் இருக்கிறது. சீனா இரசியாவிலும் பார்க்க இந்தியா சிறந்த நாடாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Sunday, 20 June 2010

ஜப்பானிய யசூசி அகாசியும் மனிதாபிமானமும்


2009 மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் ஒரு வெளிநாட்டு முக்கிய பிரமுகரை உழங்கு வானொலியில் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சிறு பிரதேசத்தில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுத் தவிப்பதைக் காட்டி இச்சிறு பிரதேசத்துக்குள்தான் இந்த விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ளனர் என்று காட்டினார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் அப்படியே குண்டுகளைப் போட்டு அத்தனைபேரையும் அழித்தொழிக்கும்படி கூறினாராம். அந்தப் பிரமுகர் ஜப்பானின் யசூசு அகாசி என்று நம்பப்படுகிறது.

காக்கும் பொறுப்பு - Responsibility to Protect (R2P)
11-04-2009இலன்று காக்கும் பொறுப்பிற்கான சர்வ தேச அமைப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு ஒரு திறந்த மடலை அனுப்பினர். அதில் Jan Egeland, Gareth Evans, Juan Méndez, Mohamed Sahnoun, Monica Serrano, Ramesh Thakur and Thomas G. Weiss, ஆகியோர் கையொப்பமிட்டு வன்னியில் மக்கள் பேரழிவைத் தடுக்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினர். ஐக்கிய நாடுகள் சபை அதைச் செய்யத் தவறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அதிகாரியும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேந்தருமான கிறிஸ் பற்றேண் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைத் தமிழர்கள் கொல்லப் பட்டபோது எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார்.

11-04-2009 இலன்று சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச் நெருக்கடி குழு, காக்கும் பொறுப்பிற்கான சர்வதேச அமைப்பு ஆகியன ஜப்பானியப் பிரதமருக்கு இலங்கையில் நடக்கவிருக்கும் மனிதப் பேரழிவை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடு என்ற வகையில் தடுக்கும்படி வேண்டின. இந்தக் குழுக்கள் ஏன் ஜப்பானுக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும். இலங்கையில் நடக்கும் இனக்கொலைக்கு ஜப்பானின் ஆசி இருந்தமையால்தான் அவை எழுதியிருக்க வேண்டும்.

இப்போது இலங்கை சென்ற ஜப்பானின் யசூசி அகாசி இலங்கை அரசின் ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலபோல் பேசியுள்ளார். அவரது பேச்சை ரம்புக்வெலதான் எழுதிக் கொடுத்தாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் தலையிடக்கூடாது என்று அவர் யசூசி அகாசி கூறியுள்ளார்.

தகடு கொடுத்த இலங்கை இந்திய அரசுகள்
இலங்கை தனது மக்களில் கணிசமான தொகையினரை கொன்றுள்ளது. கணிசமான மக்களை வீட்டற்றோர் ஆக்கியுள்ளது. கணிசமான மக்களை இன்றும் வசதிகள் குறைந்த முகாம்களில் வைத்துள்ளது. ஒரு அரசு தனது மக்களுக்கு உணவு உறைவிடம் உடை ஆகிய அடிப்படை வசதிகளைப் பெறும் நிலை ஏற்பட உறுதி செய்ய வேண்டும். ஆனால் இலங்கை அரசு இந்தியாவின் உதவியுடன் வீடுகளை இழந்த மக்களுக்கு சில தகரங்களைக் கொடுத்து உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. ஏதிலியான தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று கோத்தபாய ரஜபக்ச பகிரங்கமாகக் கூறிவிட்டார். . அநியாயமாக கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் போர்குற்றம் நடந்ததாகக் கூறுபவர்கள் தேசத் துரோகிகள் அவர்கள் தூக்கில் இடப் படுவார்கள் என ஜெனரல் சரத் பொன்சேக்காவால் அலுகோசு என வர்ணிக்கப் படும் கோத்தபாய ராஜப்க்ச கூறியுள்ளார்.
இது இலங்கை அரசு தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு தோல்வியடைந்த அரசு என்பதை உறுதியாகக் காட்டுகிறது. இந்நிலையில் காக்கும் பொறுப்பு எண்ணக் கருவின் அடிப்படையில் இலங்கையில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்கிறது. எப்படி இந்த யசூசி அகாசியால் இலங்கையில் ஐநா தலையிட முடியாது என்று சொல்லமுடியும். உயிருடன் நண்டை பச்சையாக துடிக்கத் துடிக்கச் சாப்பிடும் ஒருவரால்தான் இப்படி மனிதாபிமானம் அற்ற வகையில் பேச முடியும். பௌத்தத்தின் மனிதாபிமானத்திற்கு என்ன நடந்தது?

ஐநாவின் உயர் அதிகாரி பிலிப் அல்ஸ்டனின் இலங்கப் பயணத்தின் போது இலங்கைக்கு ஏற்படும் அபகீர்த்தியை ஈடு செய்யத்தான் யசூசி அகாசி இலங்கை வந்தாரா?

இலங்கைக்கு புலிகளின் சொத்துக் கையளிப்பின் பின்னணி என்ன?


தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் ஒன்பது பேர் கனடா, சுவிர்ச்சலாந்து, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை சென்று இலங்கை பாதுகாப்புச் செயலரும் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்து போருக்குப் பின்னரான புனரமைப்பு புனர்நிர்மாணம் தொடர்பாக கலந்துரையாடியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அப்பத்திரிகை இச்சந்திப்பை கொழும்பில் இருந்து கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதன் ஒழுங்கு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று இலங்கையில் மீண்டும் ஆயுத போராட்டம் தலைதூக்க்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும். உலகின் வேறு பாகங்களிலுமுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சொத்துக்களை இலங்கை அரசு இதற்காக கைப்பற்ற வேண்டும். விடுதலைப்புலிகளின் முக்கிய நோக்கம் இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள தமது போராளிகள் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரை உயிருடன் பாதுகாப்பதாகும். இந்த இரண்டு நோக்கங்களின் இசைவே மேற்படி சந்திப்பாகும்.

விடுதலைப் புலிகள் தமது சொத்துக்களை கையளித்து அதன் மூலம் இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள விடுதலைப் புலிப்போராளிகளை விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக அறியப்படுகிறது. பத்மநாதன் இதற்காகவே இலங்கை அரசிடம் "சரணடைந்ததாகவும்" கூறப்படுகிறது. இலங்கை அரசு விடுவிக்கும் போராளிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடாது என்றும் அவர்கள் இலத்திரனியல் கண்காணிப்புக்கு (electronic tagging) உட்படுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் போராளிகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் மட்டும் அவர்களை நடமாட வைக்க முடியும். அவர்கள் அவர்களது பிரதேசத்துக்கு வெளியில் போகுமிடத்து அவர்களின் உடலில் பொருத்தப் பட்டிருக்கும் இலத்திரன் கருவி அவர்களது கண்காணிப்பு நிலையத்திற்கு சமிக்ஞை அனுப்பும். அத்துடன் அவர்கள் இருக்கும் இடம்பற்றிய தகவலையும் வழங்கும். இதன் மூலம் அவர்கள் கைது செய்யப் படுவர். பல நாடுகள் இத் தொழில் நுட்பத்தை குற்றாவாளிகள் மீது இப்போது பிரயோகிக்கின்றன.

இலங்கைப் போர் குற்றம்: தொடர்ந்து அமெரிக்கா வெளியிடும் முரண்பட்ட கருத்துக்கள்.


இலங்கையில் தமிழர்கள் 62 ஆண்டுகளாக ஒரு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வருகின்றனர். இதற்கு எதிராக எழுபதுகளில் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடக்கினர். 1983இல் தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை சிங்களப் பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டனர். அதை அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் ஒரு இனப்படுகொலை என்றார். பின்னர் இந்தியா தமிழர்கள் மீது கரிசனை உள்ளது போல் காட்டிக் கொண்டது. ராஜீவ் காந்தி தனது கொலை வெறிப்படையை இலங்கைக்கு அனுப்பி அங்கு தமிழர்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். அதை முன்மாதிரியாகக் கொண்டு சிங்களவர்கள் தமது தமிழர்களுக்கு எதிரான வன்முறையை மேலும் அதிகரித்தனர். பின்னர் இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழர்களுக்கு எதிராக பெரும் இன அழிப்புப் போரை நடாத்தினர். விளைவாக பல இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் இழைக்கப் பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம், பன்னாட்டு நெருக்கடிச் சபை, பன்னாட்டு மன்னிப்புச் சபை Human Rights Watch, International Crisis Group, Amnesty International ஆகிய முக்கிய அமைப்புக்கள் கருதுகின்றன. அதற்குரிய ஆதாரங்களையும் அவை முன்வைக்கின்றன.

போர்குற்ற ஆதாரங்கள் தொடர்ந்து வருவதை இனியும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் தனக்கு இது தொடர்பாக ஒரு ஆலோசனைச் சபையை அமைத்துள்ளார்.

போர் குற்றம் தொடர்பாக இலங்கை அரசிற்கு எதிராக நெருக்கடிகள் உருவாவத உணர்ந்த இலங்கை அரசு தான் அது தொடர்பாக ஒரு போலி விசாரணைச் சபையை உருவாக்கியது. மனித உரிமைக் கண்காணிப்பகம், பன்னாட்டு நெருக்கடிச் சபை, பன்னாட்டு மன்னிப்புச் சபை Human Rights Watch, International Crisis Group, Amnesty International ஆகிய முக்கிய அமைப்புக்கள் இலங்கையின் கடந்தகால விசாரணைக் குழுக்களை ஆதாரம் காட்டி இலங்கை அமைத்த விசாரணைக் குழுவில் தமது அவ நம்பிக்கையை வெளிவிட்டன. ஆனால் இறுதிக்கட்ட போர் தொடர்பில், சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உறுதிமொழிகளை நிறைவேற்றும் என அமெரிக்க அரசாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் நம்பிக்கை வெளியிட்டார். இது தமிழர் தரப்பினால் எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான். இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக அமெரிக்காவிடம் நிறைய செய்மதிப் படங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து இலங்கை பாவித்த தடை செய்யப் பட்ட ஆயுதங்கள், இந்தியப் படைகள் போரில் ஈடுபட்டமை ஆகியவற்றை உறுதி செய்ய முடியும். ஆனாலும் அமெரிக்கா இது தொடர்பாக மௌனமாகவே இருக்கிறது.

இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் இஸ்ரேலின் மனித உரிமைமீறல் தொடர்பான ஐநாவின் விசாரணைக்குழுவிற்கு தலைவராக ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியை நியமித்தமை. இலங்கையின் பல மனித உரிமை மீறல்களுக்கு இஸ்ரேல் உதவி செய்தமை நாம் எல்லோரும் அறிவோம். இது எந்தவித திரைமறைவு உடன்படிக்கையின் பேரில் நடந்தது என்பது பெரிய கேள்வி.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒரு சுதந்திர விசாரணை தேவை என்று அமெரிக்க அரசு பல தடவை அறிவித்திருந்தது. அந்த சுதந்திர விசாரணை ஒரு பன்னாட்டு மட்டத்தில் மேற்கொள்ளப் படவேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில் நடந்த போர்குற்றங்களையோ மனித உரிமை மீறல்களையோ விசாரிக்கும் அதிகாரம் அற்றது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதி நிதி பிலிப் அல்ஸ்டன் அவர்கள் தெரிவித்துள்ளார். அப்படியானால் இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவைப்பற்றியோ அதன் அதிகாரங்களைப் பற்றியோ அறிந்து கொள்ளாமல் அது நியமிக்கப்பட்டமைக்கு ஹிலரி கிளிண்டன் பாராட்டுத் தெரிவித்தாரா?

ஹிலரி கிளிண்டன் இலங்கை அரசால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழுவில் நம்பிக்கை வெளியிட்டிருக்கையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்ரிபன் ரப் அவர்கள் இலங்கை அரசின் விசாரணைக் குழு சர்வதேச நியமங்களுக்கு அமைவானதாக காணப்படவில்லை என்கிறார். அமெரிக்க கொள்கையில் ஏன் இந்த முரண்பாடு?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...