Tuesday, 9 November 2021

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியை இஸ்ரேல் அழிக்குமா?

 



அமெரிக்கா உருவாக்கிய GBU-72/B என்னும் 5000இறாத்தல் எடையுள்ள காப்பரண் தகர்ப்பு குண்டுகளை வாங்கும் தன் விருப்பத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை தகர்ப்பதற்கே தாம் அவற்றைப் பெறவிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. GBU-72/B குண்டுகள் கடினமான பாறைகளைத் துளைத்துச் சென்று வெடித்து உள்ளிருக்கும் படைக்கலன்களை அழிக்க வல்லது. வட கொரியா கடினமான கிறனைட் பாறைகளுக்குள் தனது ஏவுகணைச் செலுத்திகளையும் எறிகணைச் செலுத்திகளையும் மறைத்து வைத்துள்ளது அவற்றை அழிப்பதற்கு காப்பரண் அழிக்கும் குண்டுகள் பயன்படுத்தப்படலாம்.


எதிரிகளின் அணுக்குண்டு உற்பத்தியை அழிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய வான் படையினர் 1981இல் ஈராக்கின் ஒசிராக்கில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை தாக்கி அழித்தது. பின்னர் சிரியாவில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை 2007இல் தாக்கி அழித்தது. இந்த இரண்டு நாடுகளும் ஈரானுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அண்மையாக இருக்கின்றன. அத்துடன் அந்த அணு ஆராய்ச்சி நிலையங்கள் ஓரிடத்தில் மட்டும் இருந்தன. ஆனால் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை பல இடங்களிலும் பாறைகளுக்கு கீழ் அறுபது அடி ஆழத்தில் அமைத்துள்ளன. அதனால் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி முயற்ச்சியை இஸ்ரேல் அதில் சம்பத்தப் பட்டுள்ள விஞ்ஞானிகளைக் கொலை செய்வதாலும் அந்த நிலையங்கள் மீது இணையவெளித் தாக்குதல் செய்வதாலும் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தியைத் தாமதப் படுத்துகின்றது.


அமெரிக்காவும் ஈரானும்

ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் இப்போது நேரடியான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தனது பலவிதமான படைக்கலன்களை இஸ்ரேலுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதுண்டு. தனது தொழில்நுட்ப இரகசியங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலுக்கு பல படைக்கலன்களை விற்பனை செய்யாதிருப்பதும் உண்டு. குறிப்பாக அமெரிக்காவின் F-22 Raptor என்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை அமெரிக்கா எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்வதில்லை. F-22 Raptor விமானங்களை வாங்க ஜப்பான் கடும் முயற்ச்சி செய்தும் அது கைகூடவில்லை. அமெரிக்காவின் படைக்கலன்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு இஸ்ரேல் சிறந்த களமாகும். இஸ்ரேல் அவற்றைப் போர்க்களத்தில் பாவிப்பதில் உள்ள அனுபவங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்கும். அதற்கு ஏற்ப அமெரிக்கா தனது அடுத்த உற்பத்தியை மேம்படுத்திக் கொள்ளும். அமெரிக்காவின் GBU-32 என்னும் காப்பரண் தகர்ப்பு குண்டுகளை இஸ்ரேல் காசா நிலப்பரப்பில் பாவித்து அதன் அனுபவங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டது. அவற்றை அடிப்படையாக வைத்து அமெரிக்கா GBU-72/B குண்டுகளை உருவாக்கியுள்ளது. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கான யூரேனிய பதப்படுத்தலைத் தடுக்க இஸ்ரேலுக்கு தேவைப்படுவன தொலைதூர குண்டு வீச்சு விமானங்களும் நிலத்திற்கு கீழ் அறுபது அடிவரை துளைத்து அழிக்கக் கூடிய குண்டுகளுமே.


இஸ்ரேலின் வான் வலிமை

இதுவரை காலமும் இஸ்ரேலுக்கு தேவைப்படும் விமானங்கள் வானதிக்கம் செலுத்தக் கூடிய சிறந்த குண்டு வீச்சு விமானங்களாக இருந்தன. அவற்றால் அது தனது அயல் நாடுகளுக்கு எதிராக நடந்த போர்களை வென்றது. தற்போது இஸ்ரேலுக்கு ஈரானிடமிருந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அரபு நாடுகளைப் போல் ஈரான் இஸ்ரேலுக்கு அண்மையில் இல்லை. இஸ்ரேலில் இருந்து ஈரான்1789கிமீ தொலைவில் உள்ளது. இஸ்ரேலின் வான்படையின் முதுகெலும்பாக இருப்பவை அதனிடமிருக்கும் 362 அமெரிக்கத் தயாரிப்பு F-16 போர்விமானங்களாகும். அவற்றின் பறப்புத் தூரம் 212கிமீ. அவற்றை வானில் வைத்தே இஸ்ரேலால் எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய முடியும். எதிரியின் வான் பரப்பில் வைத்து மீள் நிரப்பல் மிகவும் ஆபத்தானதாகும். இரசியா ஈரான்க்கு வழங்கிய எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகள் ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் நிலைகளைப் பாதுகாக்கின்றன. 2015-ம் ஆண்டு கிரேக்கமும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய INIOXOS-2015 போர் ஒத்திகையின் போது இஸ்ரேலிய வான் படையினர் தமது F-16 போர்விமானங்களை கிரேக்கத்திடமிருந்த இரசியத் தயாரிப்பு எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகளுக்கு எதிராக பயன்படுத்தி உரிய பயிற்ச்சிகளைப் பெற்றுக் கொண்டனர். இருந்தும் இஸ்ரேல் F-16 போர்விமானங்களை இதுவரை களமிறக்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பதால் அதில் சிக்கல்கள் உள்ளன என ஊகிக்கலாம். இஸ்ரேலிடம் இருக்கும் F-35 இற்கு மேலதிக எரிபொருள் தாங்கி இணைக்கப்பாட்டு அவற்றின் பறப்புத் தூரம் 2200கிமீ ஆக அதிகரிக்கப்பட்டாலும். அது இஸ்ரேலில் இருந்து பறந்து சென்று ஈரானில் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப முடியுமா என்பது கேள்விக் குறி. ஆனால் ஜூலை 2018இல் ஒரு குவைத் செய்திதாள் இஸ்ரேல் தனது மூன்று F-35 விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி சோதனை செய்தது என்று செய்தி வெளியிட்டது.

வலிமையடையும் ஈரான்

ஈரான் தனது ஏவுகணைகளின் வீச்செல்லையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் நிலையங்களை அழிக்க முன்னர் ஈரானின் ஏவுகணைகளையும் இஸ்ரேல் அழிக்க வேண்டும். அந்தப் பணியை இஸ்ரேல் நிறைவேற்றுவதில் உள்ள கடினம் நாளடவைவில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. தற்போது இஸ்ரேலால் ஈரான் வரை நேரடியாகச் சென்று தாக்குதல் செய்யக்கூடிய விமானங்கள் உள்ளன. என்று சில செய்திகள் தெரிவித்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே. ஈரான் வட கொரியா, இரசியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து தனக்கு தேவையான படைத்துறைத் தொழில்நுட்பங்களை வாங்கி தனக்கு தேவையான படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை காசாவில் செயற்படும் கமாஸ் அமைப்பின் மூலமாக பரீட்சிக்கின்றது.

ஒரு சாத்தியமான வழி

அமெரிக்காவின் B-21 போர்விமானங்கள் 2022-ம் ஆண்டு பாவனைக்கு வரவிருக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் B-21 விமானங்களை இனம் கண்டு அழிக்கக் கூடிய எதிர்ப்பு முறைமையை உருவாக்க முடியாத அளவிற்கு B-21இன் புலப்படாத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. அதன் இன்னும் ஓரு சிறப்பு அம்சம் அது அமெரிக்காவில் இருந்து கிளம்பி உலகின் எந்தப் பாகத்திலும் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப வரவல்லது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு B-21 தேவையில்லை ஈரானச் சுற்றிவர உள்ள படைத்தளங்களில் இருந்தோ அல்லது விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்தோ நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தோ அமெரிக்கா ஈரான் குண்டுகளை வீச முடியும். அதன் பின்னர் ஈரானியர்கள் பல தீவிரவாதிகளாக மாறும் போது அது அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு B-21 போர் விமான ங்களை விற்பனை செய்தால் இஸ்ரேலுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இலகுவாக அமையும்.

அமெரிக்கா B-21 ஐ ஈரானுக்கு வழங்குமா?

Sunday, 7 November 2021

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்குமா?

  


இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்க முயல்கின்றது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமெரிக்கப் நாடாளுமன்றத்திற்கு கொடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்களின் காதில் இந்தச் செய்தி தேனாகப் பாய்ந்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தமிழ் சட்டவாளர்களான மதியாபரணம் சுமந்திரன், கனக ஈஸ்வரன், திருமதி சந்திரகாசன் ஆகியோரை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளது என்ற செய்தியும் வெளிவந்ததால் தமிழர்களுக்கு தனிநாடே கிடைத்து விட்டது என்பது போல் துள்ளிக் குதிக்கின்றனர். ஓர் ஊடகம் பீதியில் தென்னிலங்கை எனச் செய்தியும் வெளிவிட்டுள்ளது.

அமெரிக்கா சொல்வதெல்லாம் உண்மையல்ல. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பொய் சொல்வதுமுண்டு. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதன் அதிபரின் கீழ் உள்ள ஓர் அமைச்சு. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அது நாடாளமன்றத்தில் இருந்தே பெறவேண்டும். அமெரிக்க நாடாளுமன்றதின் மக்களவைக்கு நிதி தொடர்பாக அதிக அதிகாரமும் மூதவைக்கு வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கணிசமான அதிகாரமும் உள்ளன. வளரும் சீனாவை இலகுவாக எதிர் கொள்வதற்கு அதிக நிதி அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் உள்ள படைக்கல உற்பத்தி முதலாளிகளும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி பெற உண்மைக்கு மாறான தகவல்களை பாதுகாப்புத்துறையை வழங்கும் படி தூண்டுவதுண்டு. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது தெரியும். அவர்களுக்கும் படைக்கல உற்பத்தியாளர்கள் “கவனித்துக்” கொள்வாரகள்.

பெண்டகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் உள்ள ஒரு பந்தியில்:

The PRC has likely considered a number of countries, including Cambodia, Myanmar, Thailand, Singapore, Indonesia, Pakistan, Sri Lanka, United Arab Emirates, Kenya, Seychelles,

Tanzania, Angola, and Tajikistan, as locations for PLA facilities. எனச் சொல்லப்பட்டுள்ளது.

இதில் உள்ள likely considered என்ற சொற்றொடரை வைத்துப் பார்க்கும் போது சீனா நிச்சயம் தனக்கான படைத்துறை வசதிகளை இலங்கையில் அமைக்கும் என்ற கருத்து அதில் இல்லை. அப்படிக் “கருத்திற் கொண்டிருக்க வாய்ப்புள்ளது” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பெண்டகனின் கருத்தை மறுத்த கொழும்பில் உள்ள சீனத் தூதுவரகம் “ஒரு கள்வன் மற்ற எல்லோரையும் கள்வன் என்பான். உலகெங்கும் 750இற்கு மேற்பட்ட படைத்தளங்களை வைத்துள்ளது அமெரிக்கா” என்றது.

இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதற்கான வழங்கற் பாதை மிகவுக் கடினமானதாகவே அமையும். இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதை ஒரு போர் ஆகவே இந்தியா கருதி அதன் மீது இந்தியா கடலில் இருந்து வானில் இருந்து தரையில் இருந்து என பல முனைத் தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் இலங்கையில் உள்ள சீனப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தலாம். இலங்கையில் இருந்து மிகத் தொலைவில் உள்ள இந்தியாவின அருணாசலப் பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கான தூரம் 4450கிமீ, கஷ்மீரில் இருந்து 4000கிமீ. இந்தியா அண்மையில் பரிசோதித்த அக்னி-5 ஏவுகணைகள் 5500 முதல் 8000கிமீ வரை பாயக் கூடியது. தமிழ்நாட்டுக் கரையோரத்தில் இருந்து குறுந்தூர ஏவுகணைகள் மூலம் இலங்கையின் எப்பகுதியிலும் தாக்குதல் செய்யலாம். இந்தியா Nuclear Triad நாடுகளில் ஒன்றாகும். அமெரிக்கா, சீனா, இந்தியா, இரசியா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் தரையில் இருந்தும், வானில் இருந்தும் கடலுக்குள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் அணுக்குண்டுகளை வீசக்கூடியவை என்பதால் அவை Nuclear Triad என அழைக்கபடுகின்றன. அதனால் இந்தியாவால் அம்மூன்று முனைகளில் இருந்தும் இலங்கையில் உள்ள நிலைகள் மீது அணுக்குண்டுகளையும் வீசலாம். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய SU-31 MKI போர்விமானங்கள 122 பிரம்மோஸ்-2 ஏவுகணைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன. அதிமீயொலி (ஹைப்பர்சோனிக்) வேகத்தில் பாயக் கூடிய பிரம்மோஸ்-2 ஏவுகணைகளால் இலங்கையில் உள்ள எந்தப் பெரிய படைத்தளத்தையும் அழிக்க முடியும். இந்தியாவின் காளி ஏவுகணைகள் திட்டம் முழு வெற்றியளித்தால் அவற்றால் எதிரிகளின் அதிமீயொலி வேக ஏவுகணைகளையும் அழிக்க முடியும்.

 

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்காது ஆனால் இந்தியாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இலங்கையை சீனா பாவிக்கும் என்பது உண்மையா எனப்பார்ப்போமானால்:

1. மலாக்கா நீரிணை வழியான நீண்ட கடல் பாதை 3108கடல் மைல்கள் அதனூடாக இலங்கைக்கு வரும் சீனாவின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா அந்தமான் தீவில் வைத்து தாக்கும்.

2. மியன்மார் ஊடாகவும் வங்கக் கடலூடாகவும் சீனா தன் படைகளைக் கொண்டு வரலாம். உலகின் மிக பெரிய விரி குடா. தரைவழியாக படகுகளை மட்டும் நகர்த்தலாம். அப்படி இலங்கை வரும் சீனப் படைகளை அந்தமான் நிக்கோபார் விசாகப்பட்டினம், சென்னை ஆகிய துறைமுகங்களி இருந்து இந்தியா தாக்குதல் நடத்தும்.

3. பாக்கிஸ்த்தான் ஊடாக குவாடர் துறைமுகம். அங்கிருந்து அம்பான்தோட்டை.க்கு சீனா தனது படைகளைக் கொண்டு வரலாம். தற்போது எந்த ஒரு கடற்கலன்களும் பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தில் இல்லை. பாக்கிஸ்த்தானின் கடற்படைக் கலன்களை சீனா பாவிக்கலாம். ஆனால் இந்தியாவின் மேற்கு கரையில் உள்ள ஆறுக்கு மேற்பட்ட துறைமுகங்களில் இருந்து இந்தியாவால் தாக்குதல் செய்ய முடியும்.

சீனாவால் பகிரங்கமாக ஒரு படைத்தளத்தை இலங்கையில் வைத்திருக்க முடியாது. கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களில் பெரிய கொள்கலன்களில் இந்தியாவைத் தாக்கக் கூடிய அசையும் ஏவுகணைச் செலுத்திகளை மறைத்து வைத்திருந்து தேவை ஏற்படும் போது இந்தியா மீதோ அல்லது இலங்கையை ஒட்டிய கடற்பரப்பில் பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் மீதோ சீனாவால் தாக்குதல் செய்ய முடியும்.

ஜிபுக்தியில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான படையினரைக் கொண்ட ஒரு படைத்தளத்தை சீனா வைத்துள்ளது. அங்கிருந்து சீனாவின் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்த முடியாது. கடற் கொள்ளையரிடமிருந்து தனது சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கவே சீனா அங்கு ஒரு படைத்தளத்தை வைத்துள்ளது. அங்கு சீனா மட்டுமல்ல அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் படைத்தளம் அமைத்துள்ளன.

இலங்கை ஆட்சியாளர்களுக்கும் சீனா இலங்கையில் படைத்தளம் அமைத்தால் தமது நாடு போர்க்களமாகும் என்பது தெரியும்.

2019 ஒக்டோபரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பல நகர்வுகளைச் செய்கின்றது. அவற்றில் ஒன்றாக பெண்டகனின் அறிக்கையைப் பார்க்க வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...