Thursday 21 April 2022

பாக்கிஸ்தானின் வெளியுறவு அதைப் பிளவு படுத்துமா?


இரசியாவுடன் இம்ரான் கான் உறவை வளர்க்க முயன்றதால் அவர் பதவியில் இருந்து அமெரிக்காவால் அகற்றப்பட்டார் என அவரே பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். சீனா-இரசிய உறவில் பாக்கிஸ்தானும் இணைந்து கொண்டால் அது அமெரிக்காவிற்கு மிகவும் பாதகமான நிலையை நடுவண் ஆசியாவில் ஏற்படுத்தும். இவற்றுடன் ஈரானும் இணைந்து கொண்டால் மேற்காசியாவின் நிலைமை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தைப் பெரிதும் பாதிக்கும்.

2021 டிசம்பரில் அமெரிக்கா கூட்டிய மக்களாட்சி உச்சி மாநாட்டில் பங்கேற்ற பக்கிஸ்தான் மறுத்திருந்தது. அந்த மாநாடு இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கூட்டப்பட்ட மாநாடு எனக் கருதப்பட்டது. சீனாவில் 2022 பெப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளை நேட்டோ நாடுகளின் அரசுறவியலாளரக்ள் புறக்கணித்தனர். ஆனால் அப்போதைய பாக் தலைமை அமைச்சர் இம்ரான் கான் பங்கேற்றார்.

2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசிய - உக்ரேன் போர் ஆரம்பித்தவுடன் இரசியாவைக் கண்டிக்கும் படி அப்போது தலைமை அமைச்சராக இருந்த இம்ரான் கான் மீது பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர். ஐநா சபையில் இரசியாவிற்கு எதிராக பாக் வாக்களிக்க வேண்டும் என 22 நாடுகளின் தூதர்கள் பாக் அரசுக்கு ஒரு பகிரங்க கடிதத்தையும் எழுதியிருந்தனர். அதை மறுத்த இம்ரான் கான் பாக்கிஸ்தான் யாருக்கும் அடிமையில்லை என முழங்கினார். அத்துடன் இந்தியாவிற்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதினீர்களா எனக் கேள்வியும் எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபையில் இரசியாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் பாக்கிஸ்தான் நடு நிலை வகித்தமை நேட்டோ நாடுகளை அதிருப்த்திக்கு உள்ளாக்கியது.

பாக்கிஸ்தான் இரசிய உறவு

14/08/1947 இல் சுதந்திரமடைந்த பாக்கிஸ்தானை 1948 மே மாதம் சோவியத் ஒன்றியம் (இரசியா) அங்கீகரித்தது. பாக்கிஸ்தானில் மக்களாட்சி நடக்கும் போது இரசிய பாக் உறவு நல்ல நிலையில் இருக்கும். படையினரின் ஆட்சி நடக்கும் போது அது மோசமடையும். பாக்கிஸ்தானில் படையினரின் ஆட்சிகள் உருவாகுவதின் பின்னணியை அறிந்து கொள்ளலாம். 1965-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாக் போரின் போது சோவியத் ஒன்றியம் தலையிட்டு போரை நிறுத்தியதுடன் இந்தியா கைப்பற்றிய நிலப்பரப்பில் இருந்து இந்தியாவை சோவியத் ஒன்றியம் வற்புறுத்தி விலகச் செய்தது. அந்த வற்புறுத்தலின் பின்னணிய அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்த்திரியின் இறப்பில் முடிந்தது. 1971இல் நடந்த பங்களாதேச விடுதலைப் போரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் இந்தியாவுடன் உறுதியாக இணைந்திருந்தது. 1979-1989 வரை நடந்த சோவியத் ஆப்கானிஸ்தான் போரின் போது சோவியத்-பாக் உறவு மோசமடைந்தது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை இந்தியா வாங்கத் தொடங்கியதில் இருந்து இரசிய பாக் உறவு நெருக்கமடைந்தது. சீனாவுடன் பாக்கிஸ்த்தானின் நட்பு ஏற்கனவே வளர்ந்திருந்த படியால் சீன இரசிய உறவு வளரும் போது பாக் – இரசிய உறவும் வளர்ந்தது. Pakistan Stream Gas Pipeline Project (PSGP) என்னும் பாக்கிஸ்தானில் 1,100கிலோ மீட்டர் நீளமான எரிவாயுக் குழாய் அமைக்கும் ஒப்பந்தம் 2021-ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இரு நாடுகளின் உறவை வளர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட லாஹூரையும் கராச்சியையும் எரிவாயு விநியோகத்தில் இணைக்கும் $2.5பில்லியன் பெறுமதியான இத்திட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆர்மினியா அஜர்பைஜான் போரில் இரசியாவின் நிலைப்பாடு, கஜக்ஸ்த்தானில் இரசியா தலையிட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்கியமை பாக்கிஸ்த்தானின் முன்னாள் தலைமை அமைச்சரை மிகவும் கவர்ந்திருந்தது. தனது ஆட்சியையும் இரசியா பாதுகாக்கும் என நம்பினார். ஆனால் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையை இரசியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

டொனால்ட் டிரம்ப் பாக்கிஸ்தானை வெறுத்தார்

1998-ம் ஆண்டு பராக் ஒபாமா பாக்கிஸ்தானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் 2001-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த நியூயோர்க் நகர் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவிற்கு பாக்கிஸ்தானை அதிகம் தேவைப்பட்டது. அமெரிக்கா தொடர்ச்சியாக பாக்கிஸ்த்தானுக்கு பல உதவிகளை செய்வதாகவும் ஆனால் அதற்கு கைமாறாக பாக்கிஸ்தான் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுவதாகவும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார். பாக்கிஸ்தான் படையினருக்கு அமெரிக்கா வழங்கி வந்த பயிற்ச்சிகளையும் நிறுத்தினார். அதனால் 2018-ம் ஆண்டு பாக் படைத்தளபதிகள் தொடர்ச்சியாக இரசியா சென்று பாக் படையினருக்கு இரசியா பயிற்ச்சி வழங்கும் ஒப்பந்தங்களையும் செய்தனர். 2018 செப்டம்பரில் அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு வழங்கவிருந்த முன்னூறு மில்லியன் நிதி உதவியையும் டிரம்ப் இரத்துச் செய்தார்.

அமெரிக்கா-இந்தியா-பாக்கிஸ்தான்

அமெரிக்க-பாக் உறவும் அமெரிக்க-இந்திய உறவும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் முரண்பட்டதாகவே இருக்கின்றது. பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவை இரசிய நட்பில் இருந்து பிரித்து நேட்டோ நாடுகளின் பக்கம் இழுப்பதற்காக 2022 ஏப்ரில் 20-ம் திகதி இந்தியா பயணமானார். இந்தியாவையும் இரசியாவிடமிருந்து பிர்க்க வேண்டும் பாக்கிஸ்தானையும் இரசியாவுடன் நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் பாக்கிஸ்த்தானை எப்படிக் கையாளப் போகின்றன என்ற கேள்விக்கான சாத்தியமான பதில்கள்:

1. பாக்கிஸ்தானில் இரசியாவிற்கு பாதகமான அமெரிக்காவிற்கு சாதகமான ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்துவது. 2022 ஏப்ரல் மாதம் புதிய பாக் தலைமை அமைச்சர் ஷெபாஸ் ஷரிஃப் அமெரிக்காவுடன் உறவை விரும்புகின்ற ஒருவர். ஆனால் அவரது பதவிக் காலம் இரண்டு கூட நீடிக்க முடியாது. 2023 ஒக்டோபருக்கு முன்னர் தேர்தல் நடக்க வேண்டும். அவரது கூட்டணிக் கட்சிகள் சீக்கிரம் தேர்தல் வேண்டும் என கதறுகின்றனர.

2. பாக்கிஸ்தானைப் பிரிப்பது. பாக்கிஸ்தானின் சிந்து, பலவரிஸ்தான், பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பிரிவினைவாதம் தலை தூக்கியுள்ளது. பாக்கிஸ்த்தானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலுச்சிஸ்த்தான் மாகாணம் இருக்கின்றது. அங்குள்ள குவாடர் துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. அத்துறைமுகம் சீனாவின் முத்துமாலைத் திட்டத்திலும் சீனாவின் பட்டி-பாதை முன்னெடுப்பு என்னும் பொருளாதாரத் திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏற்கனவே பலுச் இன மக்கள் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களால் கடும் சினம் அடைந்துள்ளனர். சீனர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களும் அங்கு நடந்துள்ளன. பலுச்சிஸ்த்தான் பிரிவினை ஈரானில் வாழும் பலுச் இன மக்களையும் பிரிவினைவாதத்தை வளர்க்கும். அதனால் பலுச் மக்கள் பாக்கிஸ்தானிற்கு ஈரானுக்கும் எதிராக அமெரிக்கவால் பாவிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவின் இந்துத்துவா ஆட்சியாளர்களின் மனதில் இருப்பவற்றை அவ்வப்போது சுப்பிரமணிய சுவாமி போட்டு உடைப்பது வழமை. பாக்கிஸ்தானை நாம் நான்கு நாடுகளாகப் பிளவு படுத்துவோம் என அவர் சொன்னதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். பிரித்தானிய இந்தியா இந்தியா பாக்கிஸ்தான் எனப் பிரியும் போது பலுச் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். நேரு அதை ஏற்க மறுத்தார். பலுச் இன மக்கள் அடிப்படையில் ஈரானியர்கள் ஆகும்.

பாக்கிஸ்த்தான் இரசிய சீன கூட்டில் இணைவது அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்.

Sunday 17 April 2022

இரசியாவின் முதன்மைக் கப்பலை மூழ்கடித்த உக்ரேனின் ஏவுகணைகள்

 

2022 ஏப்ரல் 14-ம் திகதி இரசியாவின் பத்தாயிரம் தொன் எடையுள்ள Moskva என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் உக்ரேனின் Odessa மாகாணத்திலிந்து 65 கடல் மைல் தொலைவில் கருங்கடலில் பயணிக்கையில் உக்ரேனியப் படையினர் வீசிய இரு R-360 Neptune ஏவுகணைகள் மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. அதன் தளபதி உட்பட அதில் பயணித்த 510 பேரும் கொல்லப்பட்டதாக உக்ரேன் சொல்வதை இரசியா மறுத்துள்ளது. இரசியாவின் தலைநகரின் பெயர் சூட்டப்பட்ட Moskva கப்பல் அதன் கடற்படையின் பெருமை மிகு கப்பலாகும்.  அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உக்ரேனிய உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி இரசியப் படையினருக்கு எரிபொருள் வழங்கும் குதம் ஒன்றையும் அழித்தனர். 2022 மார்ச் மாதம் 29-ம் திகதி இன்னும் ஒரு எரிபொருள் குதம் அழிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கருங்கடல் மற்றும் அஜோவ் கடல் பகுதியில் உக்ரேன் எல்லைக்கு அண்மையாக செயற்பட்டு வந்த இரசியக் கடற்படைக்கலன்கள் யாவும் அங்கிருந்து விலகி தூரத்தில் செயற்படுவதாக போரை அவதானிப்பவர்கள் சொல்கின்றனர்.

இரு கேந்திர முக்கியத்துவ இழப்பு

உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தை இரசியாவின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்கு இரசியாவின் கடல் வலிமையும் Belgorod நகரில் இருந்து வழங்கப்படும் விநியோகங்களும் அவசியமாகும். முதலில் இரசியா Moskvaவில் தீப்பிடித்ததாக பொய்யுரைத்தது. பின்னர் இரசியா பழுதடைந்த Moskvaவை வேறு கப்பல் மூலம் கட்டி இழுத்துச் செல்கையில் கடலில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது. நெப்டியூன் ஏவுகணைகளின் தாக்கத்தால் Moskvaவில் உள்ள ஏவுகணைகள் வெடித்து அது நீரில் மூழிகியுள்ளது. செய்மதிகள் மூலமான அவதானிப்புக்கள் மூலம் Moskvaவின் மூழ்கடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரசியாவின் கருங்கடல் கடற்படையணியில் தலைமைக் கப்பலாக Moskva இருந்தது.

இரசியாவின் Moskva ஏவுகணை தாங்கி

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசியா இழந்த மிகப் பெரிய கப்பல் Moskva ஆகும். இரசியாவின் P-1000 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் செலுத்திகள் பதினாறு, இரசியாவின் பிரபல விமான எதிப்பு ஏவுகணை முறைமையான S-300இன் 64 செங்குத்து குழாய்கள், Osa என்னும் வான் தற்பாதுகாப்பு ஏவுகணைகளின் செலுத்திகள் நாற்பது, நீரடிஏவுகணைகள் (Torpedo) செலுத்திகள், உலங்கு வானூர்தி தளங்கள் ஆகியவற்றுடன் Moskva வழிகாட்டி கப்பல் இரசியாவின் கருங்கடல் பிராந்தியத்தின் மீதான் ஆதிக்கத்தின் கோட்டையாக இருந்தது. 12,500 தொன் எடையுள்ள Moskva 1979இல் செயற்பாட்டிற்கு விடப்பட்டது. அன்றிலிருந்து அதற்கு பல தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்ட்ன. அதில் 440மைல்கள் பாயக் கூடிய கப்பல்களை அழிக்கும் பதினாறு ஏவுகணைகள் உள்ளன. இரண்டு வகையான முப்பரிமாண ரடார்கள், கப்பலோட்டும் ரடார்கள், மூன்று வகையான தீயணைக்கும் ரடார்கள் எனப் பலதரப்பட்ட ரடாரகளும் அதில் உள்ளன. Moskvaவை இழந்தமையால் எதிரியின் விமானங்கள், ஏவுகணைகள், உலங்கு வானூர்திகள், ஆளிலிகள் போன்றவை இரசியாவின் கடற்கலனிகள் மீது தாக்குதல் செய்வதை தடுக்கும் திறன் குறைந்துள்ளது.

உக்ரேனின் உன்னத தயாரிப்பு நெப்டியூன்

உக்ரேன் முதன் முதலாக தனது நெப்டியூன் ஏவுகணையை போரில் பயன்படுத்தியுள்ளது. நெப்டியூன் துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய வழிகாட்டல் ஏவுகணையாகும். நெப்டியூன் ஏவுகணைகள் சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட KH-25 என்ற ஏவுகணைகளை அடிப்படையாக கொண்டு உக்ரேனியர்களால் உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த போது உக்ரேனியர் தம் கடற்படைக்கலன்களில் எண்பது விழுக்காட்டை இழந்த பின்னர் உக்ரேனியரக்ள் நெப்டியூன் ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கினர். KH-25 ஏவுகணைகள் கடலிலும் வானிலும் இருந்து வீசப்படும் ஏவுகணைகளாகும். ஆனால் உக்ரேனியர்கள் அதில் பல மாற்றங்களைச் செய்து தரையில் பார ஊர்திகளிலும் இருந்து ஏவக் கூடிய வகையில் மாற்றியுள்ளனர். அதனால் அவை மும்முனைகளில் இருந்தும் வீசக் கூடையவை. நெப்டியூன் ஏவுகணைகள் இருநூறுமைல்கள் வரை பாயக் கூடியவை. அவற்றின் முக்கிய இலக்குகள் கடற்கலன்களாகும். உக்ரேனின் மேற்கு கரையில் உள்ள அஜோவ் கடலிலும் தெற்குப் பகுதியில் உள்ள கருங்கடலிலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்டன. உக்ரேனின் LUCH Design Bureau நெப்டியூனை உருவாக்கியது. உக்ரேனின் நெப்டியூன் ஏவுகணைகள் கருங்கடலின் எப்பாகத்திலும் தாக்கும் திறனை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. R-360 நெப்டியூன் ஏவுகணையால் ஐயாயிரம் தொன் எடையுள்ள கடற்கலனை அழிக்க முடியும் Moskva வழிகாட்டி கப்பல் பத்தாயிரம் தொன் எடையுள்ளது என்றபடியால் அதன் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டன. நெப்டியூனின் முதலாவது பரிசோதனை 2016 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டது. எதிரியின் இடைமறிப்பு ஏவுகணைகளால் தடுக்கப்படுவதை தடுக்க நெப்டியூன் கடல் மேற்பரப்பில் இருந்து பத்து முதல் பதினைந்து மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும் இறுதியாக இலக்கைத் தாக்க முன்னர் அது மூன்று முதல் பத்து மீட்டர் உயரத்தில் பறக்கும். அந்த சிறப்புத் தன்மையால் S-300 உட்பட பல ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளைக் கொண்ட Moskva வழிகாட்டி கப்பலை அழித்தது. ஐந்து மீட்டர் நீளமான நெப்டியூன் ஏவுகணை 320 இறாத்தல் எடையுள்ள உயர் திறன் வெடிபொருள் கொண்ட குண்டுகளைத் தாங்கிச் செல்லும். அது தனது வழிகாட்டல் முறைமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இரசியாவின் கண்காணிப்பு, வேவு, உளவு தோல்வி

பெருவல்லரசாக கருதப்படும் இரசியா தன் எதிரியின் நகருவுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக வேவு பார்க்க வேண்டும். போதிய உளவாளிகளை எதிரிகளிடையே நிறுத்தியிருக்க வேண்டும். நெப்டியூன் ஏவுகணையை செலுத்துவதற்கு பெரிய பார ஊர்தி தேவை. அதன் உயர்ந்த செலுத்தியை தூக்கி நிறுத்த வேண்டும். இவற்றை செய்மதியில் இருந்தே அவதானிக்க முடியும். உக்ரேனின் ஏவுகணைச் செலுத்திகளையும் அதன் ஏவுகணை இருப்பு களஞ்சியங்களையும் அழிக்க இரசியா தவறியமை அதன் வலுவற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

2022 பெப்ரவரி 24-ம் திகதி பல நேட்டோ நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட வலுவுள்ள படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்குகின்றன. முதல் தடவையாக வலிமை மிக்க படைக்கலன் ஒன்றை இரசியாவிற்கு எதிராக பாவித்து இரசியாவிற்கு பேரிழப்பை உக்ரேன் ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக இருந்த போது மிகச் சிறந்த படைத்துறை உற்பத்தி நாடாக இருந்த உக்ரேன் மீண்டும் தன் படைக்கல உற்பத்தியை மேம்படுத்த ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் நெப்டியூன் அதன் படைக்கல உற்பத்தியின் மீள் எழுச்சியை உறுதி செய்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட நெப்டியூன் ஏவுகணைகள் உக்ரேனிடம் உள்ளன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...