![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBx4nK4oxq1tG5EVbI1QF6BwhtZ7dvGO7L1S7B9uUusW-fND5sghGq9I0JibevpaI_-Y1hOykNQj7KlSxApLT6pKmetxApghN1snWllEzvLPtypEQoAkwDBmiZudFEuws7c3YMThzIXU0b/s400/Sarath_Fonseka.jpg)
முதலாளித்துவவாதிகள் அரசியலில் தனி ஒரு நபர் செல்வாக்குப் பெறுவதை விரும்புவதில்லை. அப்படி யாராவது செல்வாக்குப் பெற்றால் அவர்களின் கடந்தகால அல்லது நிகழ்காலத் தவறுகளை முதலாளித்துவப் பத்திரிகைகள் அம்பலப் படுத்தி அவர் செல்வாக்கைச் சரித்துவிடும். அண்மையில் இப்படிப் பலியானவர்களில் ஒருவர் பில் கிளிண்டன்.
வெற்றிக் கனியைப் பறிப்பதா? பங்கு போடுவதா?
இலங்கைப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டதால்(?) மஹிந்த ராஜபக்சே இலங்கையில் பெரும் புகழ் பெற்றார். அந்தப் புகழை மட்டுமே வைத்துக் கொண்டு அவரால் ஆட்சி செய்ய முடியும் எவருடைய அல்லது எந்த நாட்டினுடைய வற்புறுத்தலுக்கோ வேண்டுகோள்களுக்கோ செவிசாய்க்காமல் அவரால் ஆட்சி செய்ய முடியும். போதாக்குறைக்கு மஹிந்த ஒரு சீன ஆதரவாளர். அவர் தனக்கு ஏற்பட்ட புதுப் புகழைப் பயன் படுத்தி குடியரசுத் தேர்தலை நடத்தி தனது புகழுக்கான அறுவடையைச் செய்ய முயன்றார். இவரது வெற்றிக் கனியை பறிக்க முடியாத அமெரிக்கா அதைப் பங்கு போட ஒரு வழியைக் கண்டு பிடித்தது. அதற்காக அமெரிக்க எந்தச் சிரமமும் படும் தேவையும் இருக்கவில்லை. சந்தர்ப்பம் அதன் காலடியில் சரத் பொன்சேக்கா வடிவில் பச்சை அட்டையுடன் கிடந்தது. மிக இலகுவாக சரத்தைப் பயன் படுத்திக் கொண்டது.
தேர்தல் வந்தால் தோல்வி நிச்சயம் என்று துவண்டு கிடந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒரு துருப்புக் கிடைத்தது அமெரிக்காவிடம் இருந்து. ஆரம்பத்தில் இந்தியா ரணிலைத் தன்பக்கம் இழுக்க முயற்ச்சித்தது. அப்போது ரணில் சரத் பொன்சேக்காவை பொது வேட்பாளராக்க பல நிபந்தனைகளை விடுதார். அந்நிபந்தனைகளின் படி சரத் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் முறைய ஒழித்து வெஸ்ற் மின்ஸ்டன் பாணி அரசியலமைப்பை உறுவாக்க வேண்டும். சொந்தமாக அரசியல் கட்சி இல்லாத சரத் பின்னர் செல்லாக் காசாக்கப் பட்டு விடுவார்.
அமெரிக்காவின் சதி
ரணில் விக்கிரமசிங்க பின்னர் மிக இலகுவாகவும் பெரிய பேச்சு வார்த்தைகள் எதுவும் நடக்காமலும் சரத் பொன்சேக்காவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். இலங்கையின் பழம்பெரும் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார்? இதன் பின் அமெரிக்காவின் தந்திரம் சிறப்பாகச் செயற்படுகிறது. பொன்சேக்கா-ராஜபக்சே கூட்டணியை பிரித்ததின் மூலம் அமெரிக்கா பல போர்குற்றத் தகவல்களை திரை மறைவில் இலகுவாகப் பெற்று விட்டது. அத்துடன் நிற்கவில்லை அமெரிக்காவில் வசிக்கும் பொன்சேக்காவின் மகளும் மருமகனும் செய்த ஆயுத பேரக் குளறு படிகளை அமெரிக்கா திரட்டிவிட்டது. அமெரிக்கவைப் பொறுத்தவரை சரத் பொன்சேக்கா ஒரு ஒத்திவைக்கப் பட்ட சிறைக் கைதி. சரத் பொன்சேக்கா அமெரிக்காவின் கைப்பொம்மையாகச் செய்ற்படுவதைத் தவிர வேறு வழியில்லை. அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. அவர் ஆட்சி அமைத்து மந்திரி சபை அமைப்பதானால் அவர் ரணில் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அப்போது அமெரிக்காவின் அடுத்த இலக்கான ஜேவிபிக்கு சில மந்திரிப் பதவிகளைக் கொடுத்து அதைப் பிளவு படுத்த முடியும். அதைத் தொடர்ந்து பல பிரபல சிங்கள் அரசியல்வாதிகளை ரணில்-சரத் கூட்டணியில் இணைத்து பாராளமன்றத் தேர்தலில் பெரு வெற்றியை ஈட்ட முடியும். அதில் ரணில் விக்கிரமசிங்கவின் யூஎன்பி கட்சிதான் பிரதான கட்சியாக அமையும். அப்போது அரசமைப்பை மாற்றி குடியரசுத் தலைவர் முறை ஒழிக்கப் பட்டு சரத் பொன்சேக்கா கறிவேப்பிலை போல் தூக்கி எறியப்படுவார். ஆக மொத்தத்தில் சர்த் பொன்சேக்கா அமெரிக்காவிற்கு வெற்றி தேடிக் கொடுக்கப் போகிறார்.