ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை இலங்கைக்கு சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து வழங்கியது.
GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி அல்லது குறைந்த தீர்வுடன் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியம் 17 நாடுகளுக்கு இந்தச் சலுகையை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை நீக்கப் பட்டால் நேரடியாகவும் அதனுடன் தொடர்பு பட்டதாகவும் இருக்கும் 250,000 இலங்கையர் வேலை இழப்பர் என்று தெரிவிக்கப் படுகிறது. குடும்பங்களோடு தொடர்பு படுத்தி கணக்குப்பார்த்தால் இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிக்கப் படுவார்களாம்.
ஜிஎஸ்பி+ஆல் இலங்கை அடைந்த நன்மையை அறிந்து கொள்ள உகந்த புள்ளி விபரம்: 2005-ம் ஆண்டு 99பில்லியன் ரூபாக்கள் ஏற்றுமதி வருவாய் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்தது. ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை வழங்கியபின் அது 157பில்லியன் ரூபாக்களாக அதிகரித்தது. இதே வேளை அமெரிக்காவிற்கான எற்றுமதி வருவாய் 164பில்லியன்களில் இருந்து 173பில்லியன்கள் மட்டுமே அதிகரித்தது. அமெரிக்காவிற்கான வளர்ச்சியிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி பத்துமடங்கு அதிகரித்தது. இலங்கையில் ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையால் பயனடையும் துறைகளில் ஆடை அணிகலன் துறை மிக முக்கியமானதாகும். மற்றைய துறைகள் இறப்பர், மாணிக்கம், கடலுணவு மற்றும் மரக்கறி வகைகளாகும்.
பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று முன்னர் தெரிவித்துள்ளது. பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்று இலங்கைகான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.
Marks & Spencer, Tesco, Next போன்ற பிரித்தானிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து அங்கிருந்து GSP+ வர்த்தகச் சலுகையைப் பாவித்து குறைந்த விலையில் தமது பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்கின்றன.
GSP+ வர்த்தகச் சலுகையின் பின்னணி
மேற்குலக நாடுகள் தமக்கு குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் ஜப்பானைப் பயன்படுத்தின. ஜப்பான் பாரிய பொருளாதார வளர்ச்சியடைந்த பின் அதன் நாணய மதிப்பு பெரிதளவில் வளர்ச்சி கண்டது. பின்னர் ஆசியச் சிறு வேங்கைகள் என் அழைக்கப் பட்ட ஹொங் ஹாங், தென் கொரியா, தைய்வான், சிங்கப்பூர் ஆகியவற்றில் இருந்து இறக்குமதிகளைச் செய்தன. அவையும் பொருளாதார வளர்ச்சிகாண பின்னர் சீனா அந்த இடத்தைப் பிடிக்க முயன்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை ஒரு பொது உடமை போர்வை போர்த்திய அரச முதலாளித்துவ நாடான சீனாவில் இருந்து இறக்குமதி செயவது பெரிதும் விரும்பத்தக்கதல்ல. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேற்குலகிற்கு அச்சுறுத்தலாக அமையும். இதை தவிர்க்கும் முகமாக வறிய நாடுகளுக்கு ஜீஎஸ்பீ+ வரிச்சலுகையை அளித்து அவற்றிடம் இருந்து இறக்குமதிகளைச் செய்யவே இந்த ஜீஎஸ்பீ+ வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பல நிபந்தனைகளை விதிக்கிறது. 27 பன்னாட்டு உடன்படிக்கைகளை அந்த நாடுகள் அமூல் செய்ய வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் கூறும் 27 பன்னாட்டு உடன்படிக்கைகளில் மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் அமைத்த விசாரணைக் குழு கூறியது:International Covenant on Civil and Political Rights, the Convention agaist Torture and Convention on Rights of Child.
இலங்கை அரசியல் அமைப்பின் 17வது திருத்தம் அமூல் படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்தது. பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் இலங்கைக்கான ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நிறுத்தப் படுவதாக அறிவித்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் 2011 பெப்ரவரி வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நீடிக்கப் படும் என்று அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியக் குத்துக் கரணத்துக்கு என்ன காரணங்கள்?
- முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல். இலங்கையில் முதலீடு செய்த ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் முதலீட்டைப் பாதுகாப்பது. ஒரு நிறுவனம் முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டிற்கான மிள் செலுத்தல் காலம்(Pay back period) ஒன்றை கணக்கிடும். அந்த முதலீட்டுக் காலம் முடியும் வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை இழுத்தடிக்க வேண்டிய கட்டாயத்தால் இந்த வர்த்தகச் சலுகை நீடிக்கப்படுகிறது. Marks & Spencer, Tesco, Next போன்ற வர்த்தக நிறுவனங்களை பாதுகாக்க இந்த இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
- குறைந்த விலையில் இறக்குமதி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயங்களான யூரோ ஸ்ரேலிங் பவுன் போன்றவை அண்மைக் காலங்களாக பெறுமதித் தேய்வு கண்டு வருகிறன. இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை நிறுத்தினால் பல இறக்குமதிப் பொருட்களின் விலை மேலும் உயரும். இதைத் தடுக்கவும் இந்த பெப்ரவரி 2011 வரையான இழுத்தடிப்பு.
No comments:
Post a Comment