Thursday, 9 July 2015

புதிய ஆட்சியாளருக்கும் அடங்க மறுக்கும் பொக்கோ கரம்

நைஜீரியாவில் செயற்படும் மதவாத அமைப்பான பொக்கோ ஹரம் ஜுலை மாதம் முதலாம் திகதி இரவு ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்தியுள்ளது. வட கிழக்கு நைஜீரிய நகரான குக்கவாவில்  புனித ரம்ழான் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எண்பது பேர் இதில் படுகொலை செய்யப்பட்டனர். ஏழு மகிழுந்திலும் ஒன்பது விசையுந்திலும் வந்த பொக்கோ ஹரம் போராளிகள் பல பள்ளிவாசல்களில் இத்தாக்குதலை நடாத்தினர். இதற்கு முதல் நாள் அவர்கள் மேற்கொண்ட இன்னொரு தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். ஒரு படையினர் சோதனைச் சாவடியிலும் தாக்குதல் நடாத்தப் பட்டது. மூன்று தாக்குதல்களிலும் மொத்தம் 140 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள்ப் படத்தளபதி முஹம்மது புஹாரி நைஜீரியாவின் அதிபராகப் பதவி ஏற்றபின்னர் பொக்கோ ஹரம் அமைப்பு அடக்கப் படும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.  அவர் பதவி ஏற்று ஒரு மாதங்களில் பல தொடர் தாக்குதல்களை பொக்கோ ஹரம் அமைப்பினர் செய்துவருகின்றனர். மார்ச் மாதம் நடந்த நைஜீரியத் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனார்த்தன் பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடாத்தினார். அதை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம என அவர் நம்பினார். பொக்கோ ஹரமும் அடக்கப் படவில்லை குட்லக் ஜொனார்த்தனும் வெற்றி பெறவில்லை. பொக்கோ ஹரம் அமைப்பினரின் தாக்குதலால் 15 இலட்சம் நைஜீரியர்கள் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெண்கள் 12 வயதுக்கு மேல் படிக்கக் கூடாது.
நைஜீரிய அரசு இசுலாமிய விதிகளுக்கு எதிராகச் செயற்படுவதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். இவர்கள்  மேற்கத்தைய கலாச்சாரம், சமூக முறைமை போன்றவை தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.  பெண்கள் 12 வயதிற்குப் பிறகு பாடசாலைக்குச் செல்லக் கூடாது என்ற கொள்கையால் உந்தப்பட்டு பொக்கோ ஹரம் அமைப்பினர் அவர்களைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்கள். 2014-ம் ஆண்டு இருநூறு சிறுமிகளைப் பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற போது பொக்கோ ஹரம் அமைப்பினர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தனர்.



நைஜீரியாவில் பின் தங்கிய இஸ்லாமியர்கள்
நவீனமான எதுவும் பொக்கோ ஹரம் அமைப்பினருக்குப் பிடிப்பதில்லை. மத சார்பின்மை என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அல்லாவின் போதனைகளை மீறி நடப்பவர்கள் எல்லை மீறியவர்களாகும் என்ற குரான் வாசகம் இவர்களின் தாரக மந்திரமாக உள்ளது. கார் குண்டு வெடிப்புக்கள், தற்கொடைக் குண்டு வெடிப்புக்கள் போன்றவற்றை நிறையச் செய்கின்றார்கள்.  ஆசியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் பொக்கோ ஹரம் அமைப்பினர் மிகவும் அச்சத்தை உருவாக்கியுள்ளார்கள். நைஜீரியாவில் கிறிஸ்த்தவர்கள் வாழும் பிரதேசங்கள் வளர்ச்சியடைந்தும் இஸ்லாமியர்கள் வாழும் பிரதேசங்கள் பிந்தங்கியும் இருப்பது பொக்கோ ஹரம் அமைப்பினருக்கான ஆதரவுக்கு ஏதுவாக இருக்கின்றது.

வரலாறு
2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது. பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது.  பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர். கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர்.  2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும் அபுபக்கர் செக்கௌ தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர். 2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர். 2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது. 2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர். 2015-ம் ஆண்டு மே மாதம் சாட் நாட்டிலும் பொக்கோ ஹரம் அமைப்பினர் பல தாக்குதல்களைச் செய்தனர். அத்துடன் நிஜர் நாட்டிலும் உகண்டா நாட்டிலும் அவர்கள் பல தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

ஐ எஸ்ஸுடன் கை கோர்த்த பொக்கோ ஹரம்
ஐக்கிய அமெரிக்கா பொக்கோ ஹரம் அமைப்பினர் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் என்றும் இசுலாமிய அரசு என்றும் அழைக்கப்படும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பிற்கும் பொக்கோ ஹரம் அமைப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு அண்மைக் காலங்களாக உருவாகியுள்ளதாக அஞ்சப்படுகின்றது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் திகதி அபுபக்கர் ஷெகௌவின் தலைமையில் இயங்கும் பொக்கோ ஹரம் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து விட்டதாக செய்திகள் முதலில் வெளிவந்தன. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருடனான இணைவு பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு அதிக நிதி, அதிக உறுப்பினர்கள், நவீன படைக்கலன்கள், சிறந்த பயிற்ச்சி போன்றவற்றை பொக்கோ ஹரம் அமைப்பினரால் பெற முடியும்.

ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்பட்டு வந்த ஐ எஸ் அமைப்பு லிபியா, எகிப்து, லெபனான், யேமன், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கும் தமது நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது. இதனால் பொக்கோ ஹரம் அமைப்பையும் அடக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. நைஜீரியப் படையினருக்கு அமெரிக்கப் படையினர் பயிற்ச்சி அளிக்கின்றனர். நைஜீரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக அமெரிக்கா நைஜீரியாவிற்குப் படைக்கலன்கள் விற்பனை செய்வது அமெரிக்காவில் சட்ட விரோதமாகும். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி வாஷிங்டனுக்குப் பயணம் செல்ல விருக்கின்றார். இதன் பின்னர் அமெரிக்கா பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம்  என எதிர்பார்க்கப் படுகின்றது.

Sunday, 5 July 2015

நெல்லியடி நாயகன் முதல் அத்தனை வேங்கைகளையும் போற்றுவோம்

கார்த்திகை மலர்கள் தேர்ந்தெடுத்து
மாலை தொடுமின்
நன்றியினை நெய்யாக்கி நினைவுத்திரியில்
நற்றீபம் வைமின்
ஈழமகளும் தமிழ்மகளும் கால மகளோடு
தியாகப் பண் பாடுமின்
வீர யாழெடுத்து தீர இசை கூட்டி
பக்க வாத்தியமிசைமின்
நெல்லியடி நாயகன் முதல்
அத்தனை தியாகிகளையும்
நினைவு கொள்மின் நினைவு கொள்மின்

புவியில் நிகரில்லாப் புண்ணியரைப்
போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும்
தாயகக் கனவோடு போன தனயரைப்
போற்றிப் துதித்தேற்ற வேண்டும்
எழுமின் இசைமின் ஏற்றிப் பாடுமின்
நஞ்சணி நெஞ்சினரை நாநிலம்
மறவாதிருக்க போற்றிப் போற்றிப்
பாடுமின் தொழுமின்

கோட்டையைப் பிடித்தமை பாடி
கொக்காவிலைச் சரித்தமை பாடி
கொக்கட்டிச்சோலையில்
மார்தட்டி நின்றமை பாடி
சாஹரவர்த்தனாவை மூழ்கடித்தமை பாடி
நெல்லியடியில் தவிடுபொடியாக்கியமை பாடி
பூநகரியை எதிரிக்கு புதைகுழியாக்கியமை பாடி
ஆனையிறவில் ஆணிவேரோடு அறுத்தமை பாடி
சீக்கியைரை சிதறடித்தமை பாடி
கூர்காக்களை கூறு போட்டமை பாடி
நீழ்கடலெங்கும் நிமிர்ந்து நின்றமை பாடி
அம்பாறையில் மறைந்திருந்து தாக்கியமை பாடி
அம்பாந்தோட்டையில் துணிவோடு தூக்கியமை பாடி
அநுராதபுரத்தில் எல்லாளனாய் நின்றமை பாடிப் பாடிப்
போற்றித் துதிப்போமே துதிப்போமே.

கனியணி மரங்கள் ஆட ஆட
கடலலை ஓயாமல் ஆட ஆட
காற்றலை இசையோடு ஆட ஆட
தீபச் சுடர்கள் ஒளியோடு ஆட ஆட
கார்த்திகை மலர்களும் ஆட ஆட
வேங்கைகளும் வீரமாய் ஆட ஆட
எம் கைகள் உயர்தி பிடித்து
புண்ணியர் புகழ் பாடி ஆடுவோமே

   
படைக்கலன்கள் தோள்களில் ஆர்ப்ப ஆர்ப்ப
தொண்டர்கள் கூடி ஆர்ப்ப ஆர்ப்ப
நாட்டுக்கெனப் பிறந்தவர் ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் புகழை ஆர்ப்ப ஆர்ப்ப
கடலோடு காற்றும் ஆர்ப்ப ஆர்ப்ப
வானோடு மண்ணும் ஆர்ப்ப ஆர்ப்ப
நாளும் மறக்கக் கூடா நாயகரைப்
போற்றிப் பாடி ஆர்ப்போமே

Friday, 3 July 2015

ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா முக்கூட்டு உறவு

அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய சுழற்ச்சி மையத்திற்கும் சீன விரிவாக்கத்தைத் தடுப்பதற்கும் ஜப்பானுடனும் தென் கொரியாவுடனும் அமெரிக்கா சிறந்த உறவை வைத்திருக்க வேண்டும் அதற்கு ஜப்பானிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் நல்ல உறவு இருத்தல் அவசியம். தென் கொரியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான உறவு சீர் செய்யப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு ஜூன் மாதம் 21-ம் திகதி கொண்டாடப்பட்டது. ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் உள்ள தென் கொரியத் தூதுவரகத்தில் இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்ட விழாவில் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே கலந்து கொண்டார். அதே போல் கொரியத் தலநகர்  சியோலில் உள்ள ஜப்பானியத் தூதுவரகத்தில் நடந்த வைபவத்தில் கொரியக் குடியரசுத் தலைவி பார்க் கௌன் ஹை கலந்து கொண்டார்.

ஒன்று திரளுங்களய்யா ஒன்று திரளுங்கள்

தென் கொரியாவும் ஜப்பானும் சீனா மற்றும் வட கொரியா தொடர்பான உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க நீண்டகாலமாக முயற்ச்சித்து வருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் இருந்த கடந்த காலக் கசப்பான அனுபவத்தை மறக்க மறுக்கின்றன. இதற்கு இப்போது வாக்கு வேட்டை அரசியலும் குடும்பப் பெருமைகளும் தடையாக உள்ளன. ஜப்பானியத் தலைமை அமைச்சரின் பேரன் 1930களில் ஜப்பானியப் பேரரசைக் கட்டி எழுப்பியவர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நடந்து கொண்ட விதங்கள் பிழையாவனை என்றால் அது தலைமை அமைச்சர் சின்சே அபேயின் குடும்பப் பெருமைக்கு இழுக்காகும். இதனால் இவர் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் செய்தமை சரி என உலக அரங்கிலும் உள் நாட்டிலும் காட்டம் முயல்கின்றார். ஆனால் தென் கொரிய மக்கள் ஜப்பானியப் படையினர் தமது நாட்டு மக்களுக்கும் முக்கியமாகப் பெண்களுக்கு செய்த கொடுமைகளுக்கு  ஜப்பான் தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.  தென் கொரியக் குடியரசுத் தலைவி பார்க் கௌன் ஹையின் தந்தை பார்க் சூங் ஹை இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் படையில் அதிகாரி தரத்தில் கடமையாற்றியவர். தனது குடும்பத்தின் களங்கத்தைத் துடைக்க அவர் தன்னை ஒரு ஜப்பானிய விரோதியாக்கக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருகின்றார். இதனால் கொரியக் குடியரசுத் தலைவர் ஜப்பானியத் தலைமை அமைச்சரைச் சந்திப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் இருப்பதாகச் சொல்கின்றார்.

நடந்த கதை மறப்பதில்லை
ஜப்பானியப் புத்தகக் கடைகள் கொரியர்களுக்கு எதிரான புத்தகங்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. கொரியாவில் ஜப்பானிய எதிர்ப்பானது நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் உறவை ஏற்படுத்திக் கொண்ட ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளில் இரு தூதுவரகத்தின் முன்பும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. சியோலில் கூடிய கொரியர்கள் இழப்பீடு கொடு என முழங்கினர். டோக்கியோவில் உள்ள கொரியத் தூதுவரகத்தின் முன் கூடிய ஜப்பானியர்கள் கொரியர்கள் செய்யாத குற்றத்திற்காகத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் என முழங்கினர். ஜப்பான் ஒரு வலதுசாரித் தீவிரவாத நாடாக மாறி தாக்குதல் செய்யக் கூடிய படைத்துறையை உருவாக்கலாம் எனவும் கொரியர்கள் அஞ்சுகின்றனர். இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் இப்போதும் போர் நடப்பது போன்ற ஒரு மனப்பாங்கு கொரியர்களிடம் இருப்பதாகக் கருதப்படுகின்றது.  ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்படும் போது இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனி நடந்து கொண்ட விதம் பற்றி மற்ற ஐரோப்பிய நாடுகள் கருத்தில் கொள்ளவில்லை. அது போல கொரியாவும் ஜப்பானும் ஒத்துழைக்க வேண்டும் என்பது அமெரிக்கா அடிக்கடி வலியுறுத்தும் ஒன்றாக இருக்கின்றது. லியன்கோர்ட் ரொக்ஸ், சுஷீமா ஆகிய தீவுக் கூட்டங்கள் யாருக்குச் சொந்தம் என்பதிலும் இரு நாடுகளும் முரண்படுகின்றன. கொரியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் உள்ள கடலை ஜப்பான் கடல் என அழைப்பதை கொரியர்கள் விரும்பவில்லை.

கடலின் பெயர் என்ன?

ஜப்பானியத் தலைமை அமைச்சர் பிராந்திய ரீதியிலும் உலக ரீதியிலும் ஜப்பானிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படக் கூடிய வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலை நாட்டப்பட வேண்டும் என்றார். தென் கொரியக்க் குடியரசுத் தலைவி இரு நாடுகளுக்கும் இடையிலான சரித்திர நினைவுச் சுமையை நல்லிணக்கம் கொண்ட இதயத்துடன் இறக்கி வைத்து விட்டு இணைந்த செழுமைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார். இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவு பிராந்திய புவிசார் கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இரு நாடுகளும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் மக்களாட்சி  முறைமைப்படி வெற்றிகரமான முதலாளித்துவப் பொருளாதாரங்களாக உருவெடுத்துள்ளன.

ஆசியாவின் ஈசான மூலையில் செல்வம் இருக்கின்றது
வட கிழக்கு ஆசியா உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மூலையாகும்.  இந்தப் பிரதேசத்தில் உள்ள ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமது பொருளாதாரத்தை 130 மடங்காக அதிகரித்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளாக தமது பொருளாதாரத்தை இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரதேசத்தில் இரசியா, வட கொரியா, சீனா ஆகிய நாடுகள் அணுக்குண்டுகளை வைத்துள்ளன. ஜப்பான் தேவை ஏற்படின் அணுக்குண்டைத் தயாரிக்கக் கூடிய வளங்களைக் கொண்டுள்ளது. தென் கொரியாவாலும் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய நிலையை அடைய முடியும்.

ஜப்பானில் அமெரிக்கத் தளங்கள்
1950-ம் ஆண்டில் இருந்தே ஐக்கிய அமெரிக்கா ஜப்பானுடனும் தென் கொரியாவுடனும் படைத்துறை உறவுகளைப் பேணிவருகின்றது. பல இருதரப்புப் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப் பட்டு வருகின்றன. ஐக்கிய அமெரிக்கா தனது நாட்டுக்கு வெளியே வைத்துள்ள ஒரே ஒரு கடல்சார் பயணப் படை(Marine Expeditionary Force) தளம் ஜப்பானில் இருக்கின்றது. ஜப்பானில் ஐக்கிய அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான ஜோர்ஜ் வாஷிங்டன் ஜப்பானின் யுக்கோசுக்கா துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. 2015-ம் ஆண்டு மேமாதம் இந்தக் கப்பல் அமெரிக்காவிற்கு மீளச் சென்றது. இதற்குப் பதிலாக ஏறக்குறைய அதே அளவு வலுக்கொண்ட யூ.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானிற்கு அனுப்பப்படவுள்ளது. 1991-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா சதாம் ஹுசேயினின் ஆட்சியின் கீழ் ஈராக்கியப் படைகள் குவைத்தை ஆக்கிரமித்த போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொண்ட பாலைவனப்புயல் (Desert Storm) படை நடவடிக்கையின் போதும் பின்னர் 1998-ம் ஆண்டு சதாம் ஹுசேயினிற்கு எதிராக செய்த பாலைவன நரி (Desert Fox) படைநடவடிக்கையின் போதும் ஜப்பானில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் படைத் தளங்கள் பெரிதும் பாவிக்கப்பட்டன.

தென் கொரியாவில் அமெரிக்கா

தென் கொரியாவில் 15 அமெரிக்கப் படைத்தளங்கள் உள்ளன. தென் கொரியாவை அதன் எதிரிகள் தாக்கினால் அந்த எதிரிகளுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ளன. முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்கப் படையினர் முழுவலுவுடன் தென் கொரியாவில் நிலை கொண்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்கப் படையினர் தென் கொரியாவில் நிலை கொண்டுள்ளமை ஒரு புவி சார் அரசியல் மற்றும் கேந்திரோபாயக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா தென் கொரியா மீது ஆக்கிரமிக்க முயற்ச்சித்ததால் 1950-ம் ஆண்டிற்கும் 1953-ம் ஆண்டிற்கும் இடையில் கொரியப் போர் நடந்தது. போரின் பின்னர் தென் கொரியாவை வட கொரியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்கப்படையினர் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என சீனா கரிசனை கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தென் கொரியா தனது நாட்டுப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் கட்டளைக்குக் கீழ் தொடர்ந்து 2020-ம் ஆண்டு வரை இருப்பதாக ஒத்துக் கொண்டது.

சீனாவுக்குப் பிடிக்காத தாட்
அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். இந்த தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது.  அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும்.  அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை தென் கொரியாவில் நிறுத்தப்படுவதை சீனா கடுமையாக ஆட்சேபித்திருந்தது.

அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காண்மை தந்திரம்.
சீனாவின் பொருளாதர வளர்ச்சிக்குக் காரணம் அதன் மக்கள் தொகையே. அதற்கு ஈடு கொடுக்க அமெரிக்கா TPP எனப்படும் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans-Pacific Partnership) ஐ உருவாக்கியுள்ளது.  இது சீனாவைச் சூழவுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் உறவையும் வர்த்தகத்தையும் விரிவு படுத்தும் நோக்கம் கொண்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலில் வென்றவுடன் முதல் செய்த பயணம் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கே. ஆசியான் மாநாட்டுக்குச் சென்ற ஒபாமா வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல சீனாவின் அயல் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றி உரையாடினார். ஏற்கனவே சிங்கப்பூரும் ஒஸ்ரேலியாவும் பல முனைகளில் அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, புரூணே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தப் பங்காண்மையில் இணையப் பேச்சு வார்த்தைகள் செய்கின்றன. இந்தப் பங்காண்மை உலகிலேயே பெரிய சுந்தந்திர வர்த்தக வலயம் ஆக உருவெடுக்கும்.  தென் கொரியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், தாய்வான் ஆகிய நாடுகள் இந்தப் பங்காண்மையில் இணைய அக்கறை கொண்டுள்ளன. வளர்ச்சியடைத நாடான தென் கொரியா இதில் இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகின்றது. அமெரிக்கப் பாராளமன்றம் அதிபர் பராக் ஒபாமாவிற்கு பல முட்டுக் கட்டைகள் போட்டுக் கொண்டிருக்கின்றது.

உலக அரங்கில் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட முன்னர் அதை அதன் கொல்லைப் புறத்தில் வைத்து அடக்குவதற்கு அமெரிக்காவிற்கு ஆசியாவின் இரு வளர்ச்சியடைந்த நாடுகளான தென் கொரியாவினதும் ஜப்பானினதும் ஒத்துழைப்பு அவசியம். சீன விரிவாக்கத்தின் கொரிய ஆக்கிரமிப்பும் ஒன்றாக இருக்கலாம் என கொரியர்கள் நம்பினால் அல்லது போலியாக நம்ப வைத்தால் இது நடப்பது சாத்தியம்.

Thursday, 2 July 2015

அமெரிக்காவின் Space-War Centerஉம் மெசடோனியாவில் இரசியாவுடனான போட்டியும்

ஐக்கிய அமெரிக்கா அவசர அவசரமாக Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் ஒன்றைத் திறக்கவிருக்கின்றது. தற்போது அமெரிக்காவின் வான் படையின் செயலராக இருக்கும் டெபரா ஜேம்ஸ் விண்வெளிப் போர் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்டருக்கு ஆலோசகராக விரைவில் நியமிக்கப்படவிருக்கின்றார்.
சீனாவிடமிருந்தும் இரசியாவிடமிருந்தும் விண்வெளியில் உருவாகியுள்ள சவால்களை சமாளிக்க அடுத்த ஆறுமாதங்களுக்குள் Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் அமெரிக்காவால் திறக்கப்படவிருக்கின்றது.

2016-ம் ஆண்டிற்கான அமெரிக்கப் பாதுகாப்புச் செலவீனத்தில் ஐந்து பில்லியல் டொலர்கள் விண்வெளிப் பாதுகாப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் 21 மில்லியன் டொலர்கள் அமெரிக்க கடற்படைக்கான தொடர்பாடல் செய்மதிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் செய்யப் பட்டதிலும் பார்க்க இரண்டு மடங்காகும்.

விண்வெளிப் போர் நிலையத்தில் அமெரிக்கா காட்டும் அவசரம் சீனாவிடமிருந்தோ அல்லது இரசியாவிடமிருந்தோ ஒரு காத்திரமான அச்சுறுத்தல் உருவாகிவிட்டது என்பதைக் காட்டுகின்றது. அண்மைக்காலங்களாக இரசிய உயர் அதிகாரிகள் பகிரங்கமாகவே அமெரிக்காவை அணுக்குண்டுகளால் தாக்கத் தம்மால் முடியும் எனத் தெரிவித்து வருகின்றனர். ஒரு இரசிய படைத்துறை நிபுணர் இரசியாவால் மட்டுமே ஐக்கிய அமெரிக்காவை ஒரு அணுக்குண்ட்டால் அழிக்கப் பட்ட குப்பை மேடாக மாற்ற முடியும் எனத் தெரிவித்திருந்தார். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அக்கறையை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மீது காட்டுகின்றார். 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆரம்பத்தில் சீனா, இரசியா, கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்தான், ஆகிய நாடுகள் ஆரம்பத்தில் இணைந்தன. பின்னர் உஸ்பெக்கிஸ்த்தான் 2001ம் ஆண்டு இணைந்து கொண்டது.  இந்த அமைப்பில் பெலரஸ், துருக்கி, இலங்கை ஆகிய நாடுகள் இதில் உரையாடக் கூடிய நாடுகளாகவும் இந்தியா, பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், மொங்கோலியா, ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாகவும் இருக்கின்றன. மத்திய ஆசிய நாடுகளிடை நெருக்கடிகளைத் தவிர்க்க உருவாக்கப் பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் நிலை உருவாகியுள்ளது. இது இரசியாவின் நேட்டோ எனவும் விமர்சிக்கப்படுகின்றது. இதில் இந்தியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் முழு உறுப்புரிமையுடன் இணைந்து கொண்டால் இது உலக மக்கள் தொகையில் அரைப்பங்கு மக்களைக் கொண்ட அமைப்பாகும்.



மற்ற நாடுகளின் செய்மதிகள் அமெரிக்கப் படைத்துறை இலக்குகளைப்  பூமியில் வைத்தோ அல்லது விண்வெளியில் உள்ள அமெரிக்க செய்மதிகளை இலக்கு வைத்தோ தாக்குதல் செய்ய முடியாதபடி பார்த்துக் கொள்வதும் அமெரிகாவின் செய்மதிகளை ஒன்றிணைப்பதும் விண்வெளிப் போர் நிலையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். விண்ணில் இருக்கும் செய்மதிகளை தரையில் இருந்து ஏவுகணைகளை வீசி அழிக்கும் திறனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே சீனா பெற்றுவிட்டது.

2015 ஜூன் 25-ம் திகதி அமெரிக்காவின் பிரதிப் பாதுகாப்புத் துறைச் செயலர் Bob Work இரசியாவின் அணுக்குண்டு மிரட்டல்களுக்கு அனுமதிக்க மாட்டோம் என்றார்.  இரசியா Intermediate-Range Nuclear Forces Treaty, எனப்படும் நடுத்தர தூர அணுக்குண்டுப்படைகள் தொடர்பான உடன்படிக்கையை மீறுவதாகக் குற்றம் சாட்டும் Bob Work இரசியாவை ஒரு அடக்கப்பட்ட நிலைக்கு தம்மால் இட்டுச் செல்ல முடியும் எனவும் சூளுரைத்தார். எக்காரணம் கொண்டும் நடுத்தர தூர அணுக்குண்டுப்படைகள் தொடர்பான உடன்படிக்கையை மீறுவதால் இரசியா ஒரு மேலாண்மையைப் பெற நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என உறுதி கூறினார். பனிப்போர்க் காலத்தில் இருந்தே இரசியாவும் அமெரிக்காவும் விண்வெளியில் படைத்துறைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இத்துறையில் சீனாவும் காலடி எடுத்து வைத்தமை ஒரு புதிய களத்தை அமெரிக்காவிற்கு திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரியா, எஸ்த்தோனியா, லத்வியா, போலாந்து, லித்துவேனியா, ருமேனியா, ஜேர்மனி ஆகிய இரசியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா தனது படைவலுவை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. உக்ரேனில் மேற்கு நாடுகளுக்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியது போல்  மெசடோனியா (முன்னாள் யூக்கோஸ்லாவியக் குடியரசு) நாட்டிலும் ஒரு போட்டி உருவாகியுள்ளது. 1991-ம் ஆண்டு யூக்கோஸ்லாவியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற மெசடொனியா கிரேக்கத்தின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் 2004-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கோரி விண்ணப்பித்தது. இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது உறுப்புரிமை பெறவில்லை. இதே போல் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் மெசடோனியா இணைய விண்ணப்பித்துள்ளது. இதையும் கிரேக்கம் எதிர்த்தது. மெசடோனியா என்னும் பெயர் கொண்டிருப்பதால் அது தன்னுடைய பிராந்தியத்தையும் உரிமை கொண்டாடலாம் என கிரேக்க நாடு கருதுகின்றது. தனது முன்னாள் செய்மதி நாடான மசெடோனியா ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைய விரும்புவதை இரசியா மிகக் கரிசனையுடன் பார்க்கின்றது.  இதனால் உக்ரேனில் 2014-ம் ஆண்டு இருந்த நிலை இப்போது மசெடோனியாவில் நிலவுகின்றது.  அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் 2003-ம் ஆண்டில் ஜோர்ஜியாவிலும் 2005-ம் ஆண்டு உக்ரேனிலும்  2009-ம் ஆண்டு  மோல்டோவாவிலும் செய்த ஆட்சி மாற்றத்தை தற்போது மசெடோனியாவில் செய்ய முயல்வதாக இரசியா கருதுகின்றது. இது போல ஒவ்வொரு முன்னாள் இரசியச் செய்மதி நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைவதால் இரசியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் மோசமாகப் போகும் முறுகல் நிலை ஒரு படைத்துறைப் போட்டியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது அதன் ஓர் அம்சமாகவே ஐக்கிய அமெரிக்காஅவசர அவசரமாக Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் ஒன்றைத் திறக்கவிருக்கின்றது.

Friday, 19 June 2015

ஜெருசலம் யாருக்குச் சொந்தம்?

அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்துள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு வகையில் முக்கியத்துவம் பெற்றது. முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் செயற்பாட்டில் எந்த அளவு தூரம் அதன் பாராளமன்றம் தலையிடலாம் என்பது. இரண்டாவது ஜெருசலம் தனக்குச் சொந்தமானது என இஸ்ரேல் சொல்லுவது எந்த அளவிற்கு உண்மையானது. ஏப்ரகாமிய மதங்கள் எனக் கருதப்படும் யூத மதம், கிருஸ்த்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகிய மூன்றிற்கும் ஜெருசலம் நகர் முக்கியமானதாகும்.

2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது.

இஸ்ரேலியர்களுக்கு என ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசும் இருக்க வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்கா நீண்டகாலமாக வெளிப்படுத்தும் ஒரு நிலைப்பாடாக இருந்தது. அதே வேளை ஜெருசலம் இந்த இரு அரசுகளுக்கும் சொந்தமில்லாத ஒரு தனிப்பிராந்தியமாக ஐக்கிய அமெரிக்க அரசு கருதி வருகின்றது. அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.  2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய கடவுச்சீட்டுச் சட்டத்தில் கையொப்பமிட்ட ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தில் உள்ளது போல் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடப்படுவதைத் தான் நிறைவேற்றப் போவதில்லை எனத் தெரிவித்தார். அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய சட்டம் அமெரிக்க அரசமைப்பு குடியரசுத் தலைவருக்கு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக வழங்கிய உரிமையை மீறுவது என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது. அவருக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் கடவுட்சீட்டு என்பது அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான கடவுட்சீட்டுக்குரியவர் தொடர்பான தகவல் பரிமாற்றப் பத்திரம் என்றும் அதில் என்ன தகவல் இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றார்.

ஜெருசலம் நகர்தான் தனது நாட்டின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்த போது எந்த ஒரு நாடும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலுடன் தூவரக உறவைக் கொண்ட நாடுகள் எல்லாம் தமது தூதுவரகங்களை டெல் அவீவில் மட்டுமே திறந்தன.

 பலஸ்த்தீனியத் தேசியவாதம்
பலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர். அப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தன.  இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான். பலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின. மாறாக யசீர் அரபாத்  ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது. ஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. 1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர்.

இஸ்ரேலின் உருவாக்கம்
தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே எண்ணம். ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.

அரபுக்களின் ஆத்திரம்
இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.ஏப்பிரஹாம் என்பவரில் இருந்தே அரபுக்களும் யூதர்களும் தோன்றினார்கள். ஏப்ரஹாம் தனது மாற்றாந்தாய் ம்களான சேராவைத் திருமணம செய்தார். அதன் மூலம் பிறந்த  ஒரு மகனான ஐசக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர்கள். ஏப்பிரஹாமின் இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த மகன் இஸ்மயிலின் வழித்தோன்றல்கள் அரபுக்கள் (Genesis 16:1-16). ஏப்பிரஹாமின் உண்மையான வாரிசு யார் என்பதில் அரபுக்களும் யூதர்களும் முரண்பட்டுக் கொள்கின்றனர். எல்லா அரபுக்களும் இஸ்லாமியர்கள் அல்லர். எல்லா இஸ்லாமியர்களும் அரபுக்கள் அல்லர்.


இஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின் வாதம். ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர கிலோ மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர கிலோ மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர கிலோ மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.  புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது. பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர்  பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது. சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். இரத்தக் களரியையே கடந்த காலமாகக் கொண்ட புனித நகரான ஜெருசலம் இனிவரும் காலங்களிலும் மூன்று புனித மார்க்கங்களில் இரத்தைக்கறை பூசும் என்பது நிச்சயம்.

Monday, 15 June 2015

துருக்கித் தேர்தலின் புவிசார் அரசியலும் குர்திஷ் மக்களின் போராட்டமும்.

உலகின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கின்றது. உலக எரிபொருள் வளத்தின் நடைபாதையில் இருக்கும் துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது.  புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களுமாகும். சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.

நேட்டோத் துருக்கி
நேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார். அவர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சியை விரும்பினார். லிபியாவிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் திரிப்போலியில் நடத்தும் ஆட்சிக்கு உதவுகின்றார். சுனி முஸ்லிமான எர்டோகான் மத்திய கிழக்கில் தான் ஒரு சுனி முஸ்லிம் கூட்டணியில் ஒருவராகத் தன்னைக் காட்டாமல் சியா மற்றும் சுனி முஸ்லிம்களிடையேயான முறுகலின் நடு நிலையாளராகக் காட்ட விரும்புவர். ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எர்டோகான் ஒத்துழைக்க மறுத்தார். துருக்கியில் உள்ள நேட்டோவின் படைக் கூட்டமைப்பு முறைமயையும் துருக்கிய விமானத் தளங்களையும் அமெரிக்கா பாவிக்க அனுமதி மறுத்தார் அவர். மத்திய கிழக்குப் பிராந்தியப் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டும் துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக முன்னிறுத்த விரும்புகின்றது.

மேற்கே போன துருக்கி
மேற்கு நாடுகளுடன் இணைந்த ஒரு இசுலாமிய நாடான துருக்கி மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உறுப்பு நாடாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்ச்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

துருக்கியின் அடக்குமுறை ஆட்சியாளர்
ஊடகங்களுக்கு எதிராகவும் எர்டோகானின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே இருந்தன. அவரை எதிர்க்கும் பல ஊடகங்கள் மிரட்டப்பட்டன. மிரட்டலுக்கு அடிபணிய மறுக்கும் ஊடகர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச் சாட்டுக்கள் புனையப்பட்டன. இதனால் அவருக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் துருக்கிய எதிர்க் கட்சிகள் இருக்கவில்லை. முன்னணி எதிர்க் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சி இந்த முறைத் தேர்தலில் கடும் போட்டியைக் காண்பித்தது. எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் துருக்கியின் அரசமைப்பை மாற்றி ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவராகத் தன்னை மாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன.  துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார்.  550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இல்லை.

எதிர்பார்த்தது கிடைக்கவில்லை

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் துருக்கியப் பாராளமன்றத்தின் தேர்தல் 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. ஊழல் மிக்க ஆட்சியை எர்டோகான் செய்கின்றார் என 2013-ம் ஆண்டு ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர் அடக்கினார். நீதித் துறையில் எர்டோகான் தலையிடுவதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இடது பக்கம் சாய்ந்த குர்திஷ் மக்களின் வாய்ப்பு

ஈராக்கின் வடக்கில் ஏர்பில் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் துருக்கியின் தெற்கில் தியர்பக்கிர் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்திலும் செறிந்து வாழும் குர்திஷ் இன மக்கள் மூன்று நாட்டு ஆட்சியாளர்களாலும் இன அழிப்பபிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 2014-ம் ஆண்டில் ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிய அரசபடைகளை பல பிராந்தியங்களில் இருந்து விரட்டிய போது குர்திஷ் மக்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதே போல் துருக்கியில் கடும் போட்டிக்கு இடையில் நடந்த தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். விகிதாசாரப் பிரதிநித்துவப்படி துருக்கியில் நடக்கும் தேர்தலில் ஒரு கட்சி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குகளையாவது பெற வேண்டும். இதுவரை காலமும் குர்திஷ் மக்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. குர்திஷ் மக்களின் கட்சியான மக்கள் மக்களாட்சிக் கட்சி  13 விழுக்காடு வாக்குகளை முதன் முறையாகப் பெற்று 80 பாராளமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. சரியான முறையில் இடதுசாரிகளுடன் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட்டதால அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது. மேலும் அவர்கள் துருக்கியில் வாழும் யஷீதிரியர்கள் ஆர்மினியர்கள் கிறிஸ்த்தவர்கள் ஆகியோருடன் தேர்தலில் இணைந்து செயற்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் 1970-ம் ஆண்டில் இருந்து தமது சுதந்திரத்திற்காக 40,000 உயிரிழப்புக்களுடன் போராடி வரும் குரிதிஷ் மக்கள் தியர்பக்கிர் நகரில் வாணவேடிக்கைகளுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர்.

குர்திஷ் மக்களின் சோக வரலாறு

2014-ம் ஆண்டின் பிற்பகுதியில் சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாத்திருந்திருக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படையாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சியதால் எந்த ஒரு மனித நேய நடவடிக்கையையும் துருக்கி செய்யவில்லை. உலகெங்கும் மூன்று கோடி குர்திஷ் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதலில் குர்திஷ் இன மக்கள் அரபு மக்¬களால் வெற்றி கொள்ளப்பட்டு ஆளப்பட்டார்கள். பின்னர் மங்கோலியர்களாலும் உதுமானியப் பேரரசினாலும் தொடர்ந்து மேற்கு ஐரோப்பியர்களாலும் அவர்கள் ஆளப்பட்டனர். முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கை லௌசான் உடன்¬ப¬டிக்¬கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்¬டன. அதில் குர்திஷ்த்தான் துண்டாடப்பட்டு சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டது. இனச்சுத்திகரிப்பு, இனக்கொலை, பாரிய மனிதப் புதைகுழி, வேதியியல் குண்டுகள் (இரசாயனக் குண்டுகள்), பேரழிவு விளைவிக்கும் குண்டுகள் ஆகியவை குர்திஷ் மக்களின் வரலாற்றுத் தடயங்களாகும். மொழி பாவிக்கத் தடை, மத வழிபாட்டுத் தடை, சமூக ஒதுக்கல், பொருளாதாரப் புறக்கணிப்புக்கள் ஆகியவற்றால் குர்திஷ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். துருக்கி ஐரோப்பியா ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பு நாடாக இணையும் வரை குர்திஷ் மொழி பொது இடங்களில் பேசுவது தடை செய்யப்பட்டிருந்தது.

விடிய இன்னும் நேரமிருக்கு

தற்போது நடந்த தேர்தலில் எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாதபடியால் அது 45 நாட்களுக்குள் ஒரு கூட்டணி அரசை அமைக்க வேண்டும். அல்லாவிடில் மீண்டும் தேர்தல் நடாத்தப்படும். மறு தேர்தல் நடந்தால் குர்திஷ் மக்களின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மனம் மாறி தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். இதனால் குறைந்த அளவான 10 விழுக்காடு வாக்கு அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். இதனால் குர்திஷ் மக்கள் படைக்கலப் போராட்டத்திற்கு மீண்டும் தள்ளப் படலாம்.

Thursday, 11 June 2015

அமெரிக்காவும் வியட்னாமும் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்பாடு.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் வியட்நாமும் ஒன்றை ஒன்று பாதுக்காக்கும் உடன்படிக்கைக செய்து கொண்டன. ஐக்கிய அமெரிக்கா சார்பில் பாதுகாப்புத் துறைச் செயலர்  அஸ்டன் கார்ட்டரும் வியட்னாம் சார்பில் அதன் பாதுகாப்பு அமைச்சர்ஃபுங் குவாங் தானும்  "பாதுகாப்பு உறவு தொடர்பான இணை நோக்குக் கூற்று" (Joint Vision Statement) என்னும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று போர் புரிந்த ஐக்கிய அமெரிக்காவும் வியட்னாமும் இப்போது சீனாவைப் பொது எதிரியாகக் கொண்டு ஒன்று பட்டு வருகின்றன.  சென்ற ஆண்டு வியட்னாமிற்கு எதிரான படைக்கல விற்பனைத் தடையை அமெரிக்கா தளர்த்தி இருந்தது. இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு 2011- ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வுக் குறிப்பாணையின் படி மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

வியட்னாம் தனது படைக்கலன்களில் 90 விழுக்காட்டை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. வியட்னாமிற்கு அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முயல்கின்றது. ஐக்கி நாடுகள் சபையின் பன்னாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சியை வியட்னாமியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கவிருக்கின்றது. ஒரு மனித உரிமை மீறும் பொதுவுடமை நாடாகக் கருதப்படும் வியட்னாமின் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் பயிற்ச்சி அளிப்பதா என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஐநா பணி என்ற போர்வை பாவிக்கப்படுகிறது.


ஐக்கிய அமெரிக்காவிற்கும் வியட்னாமிற்கும் இடையிலான ராஜ தந்திர உறவின் இருபதாம் ஆண்டு நிறைவில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு ஆழமாக்கப்படும் என்றார் அமெரிக்க ப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஷ்டன் கார்ட்டர். வியட்னாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முட்கள் போல் தடையாக இருக்கின்றது.

ஆசிப பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தனிமைப் படுத்தி தனது நட்பு வட்டத்தைப் பெருக்க முயலும் அமெரிக்காவிற்கு வியட்னாமின்  உறவு முக்கியமானதாகும். 1979-சினாவும் வியட்னாமும் போர் புரிந்தன. 2014-ம் ஆண்டு மே மாதம் சீனக் கப்பல் ஒன்று  வியட்னாம் தனது எனச் சொந்தம் கொண்டாடும் கடற்பரப்பினுள் எரிபொருள் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டது. அதைத் தடுக்கச் சென்ற வியட்னாம் கப்பலை சீனா மூழ்கடித்தது. இது சீனாவிற்கு எதிரான உணர்வை வியட்னாமில் தூண்டியது. வியட்னாமில் உள்ள சீன முதலீகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. பின்பு சீன எரிபொருள் ஆய்வுக் கப்பல் இரண்டு மாதங்களில் சீரற்ற கால நிலை காரணமாக விலகிச்சென்றது. வியட்னாமின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா பெரும் பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் 24 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். வியட்னாமில் உற்பத்திகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது உள்ளீடுகளிற்கு சீனாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பல சீன உட்கட்டுமானங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. சீனாவின் மிரட்டல்கள் அத்து மீறல்களில் இருந்து தன்னைப் பாதுகாக்க வியட்னாமிற்கு மாற்று வழி தேவைப்பட்டது. இதைத் தொடர்ந்து பல அமெரிக்க இராசதந்திரிகள் வியட்னாமிற்குப் பயணம் செய்தனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் வியட்னாமிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் வியட்னாமின் கடற்படைத் தலைமையகத்திற்கும் ரோந்துபடைத் தலைமையகத்திற்கும் சென்றிருந்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜப்பான் வியட்னாமிற்கு போர்ப்படகுகளை வழங்க முன்வந்தது. இவற்றைத் தொடர்ந்து சீனப் பொதுவுடமைக் கட்சி யின் உயர் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் வியட்னாமிற்குச் சென்றார். ஆனாலும் சீன வியட்னாம் உறவு சீரடையவில்லை. இதன் பலனாக அமெரிக்காவுடன் வியட்னாம் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்துள்ளன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...