உலகின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கின்றது. உலக எரிபொருள் வளத்தின் நடைபாதையில் இருக்கும் துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களுமாகும். சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.
நேட்டோத் துருக்கி
நேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார். அவர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சியை விரும்பினார். லிபியாவிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் திரிப்போலியில் நடத்தும் ஆட்சிக்கு உதவுகின்றார். சுனி முஸ்லிமான எர்டோகான் மத்திய கிழக்கில் தான் ஒரு சுனி முஸ்லிம் கூட்டணியில் ஒருவராகத் தன்னைக் காட்டாமல் சியா மற்றும் சுனி முஸ்லிம்களிடையேயான முறுகலின் நடு நிலையாளராகக் காட்ட விரும்புவர். ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எர்டோகான் ஒத்துழைக்க மறுத்தார். துருக்கியில் உள்ள நேட்டோவின் படைக் கூட்டமைப்பு முறைமயையும் துருக்கிய விமானத் தளங்களையும் அமெரிக்கா பாவிக்க அனுமதி மறுத்தார் அவர். மத்திய கிழக்குப் பிராந்தியப் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டும் துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக முன்னிறுத்த விரும்புகின்றது.
மேற்கே போன துருக்கி
மேற்கு நாடுகளுடன் இணைந்த ஒரு இசுலாமிய நாடான துருக்கி மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உறுப்பு நாடாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்ச்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
துருக்கியின் அடக்குமுறை ஆட்சியாளர்
ஊடகங்களுக்கு எதிராகவும் எர்டோகானின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே இருந்தன. அவரை எதிர்க்கும் பல ஊடகங்கள் மிரட்டப்பட்டன. மிரட்டலுக்கு அடிபணிய மறுக்கும் ஊடகர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச் சாட்டுக்கள் புனையப்பட்டன. இதனால் அவருக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் துருக்கிய எதிர்க் கட்சிகள் இருக்கவில்லை. முன்னணி எதிர்க் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சி இந்த முறைத் தேர்தலில் கடும் போட்டியைக் காண்பித்தது. எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் துருக்கியின் அரசமைப்பை மாற்றி ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவராகத் தன்னை மாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன. துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார். 550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இல்லை.
எதிர்பார்த்தது கிடைக்கவில்லை
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் துருக்கியப் பாராளமன்றத்தின் தேர்தல் 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. ஊழல் மிக்க ஆட்சியை எர்டோகான் செய்கின்றார் என 2013-ம் ஆண்டு ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர் அடக்கினார். நீதித் துறையில் எர்டோகான் தலையிடுவதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இடது பக்கம் சாய்ந்த குர்திஷ் மக்களின் வாய்ப்பு
ஈராக்கின் வடக்கில் ஏர்பில் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் துருக்கியின் தெற்கில் தியர்பக்கிர் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்திலும் செறிந்து வாழும் குர்திஷ் இன மக்கள் மூன்று நாட்டு ஆட்சியாளர்களாலும் இன அழிப்பபிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 2014-ம் ஆண்டில் ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிய அரசபடைகளை பல பிராந்தியங்களில் இருந்து விரட்டிய போது குர்திஷ் மக்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதே போல் துருக்கியில் கடும் போட்டிக்கு இடையில் நடந்த தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். விகிதாசாரப் பிரதிநித்துவப்படி துருக்கியில் நடக்கும் தேர்தலில் ஒரு கட்சி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குகளையாவது பெற வேண்டும். இதுவரை காலமும் குர்திஷ் மக்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. குர்திஷ் மக்களின் கட்சியான மக்கள் மக்களாட்சிக் கட்சி 13 விழுக்காடு வாக்குகளை முதன் முறையாகப் பெற்று 80 பாராளமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. சரியான முறையில் இடதுசாரிகளுடன் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட்டதால அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது. மேலும் அவர்கள் துருக்கியில் வாழும் யஷீதிரியர்கள் ஆர்மினியர்கள் கிறிஸ்த்தவர்கள் ஆகியோருடன் தேர்தலில் இணைந்து செயற்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் 1970-ம் ஆண்டில் இருந்து தமது சுதந்திரத்திற்காக 40,000 உயிரிழப்புக்களுடன் போராடி வரும் குரிதிஷ் மக்கள் தியர்பக்கிர் நகரில் வாணவேடிக்கைகளுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர்.
குர்திஷ் மக்களின் சோக வரலாறு
2014-ம் ஆண்டின் பிற்பகுதியில் சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாத்திருந்திருக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படையாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சியதால் எந்த ஒரு மனித நேய நடவடிக்கையையும் துருக்கி செய்யவில்லை. உலகெங்கும் மூன்று கோடி குர்திஷ் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதலில் குர்திஷ் இன மக்கள் அரபு மக்¬களால் வெற்றி கொள்ளப்பட்டு ஆளப்பட்டார்கள். பின்னர் மங்கோலியர்களாலும் உதுமானியப் பேரரசினாலும் தொடர்ந்து மேற்கு ஐரோப்பியர்களாலும் அவர்கள் ஆளப்பட்டனர். முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கை லௌசான் உடன்¬ப¬டிக்¬கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்¬டன. அதில் குர்திஷ்த்தான் துண்டாடப்பட்டு சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டது. இனச்சுத்திகரிப்பு, இனக்கொலை, பாரிய மனிதப் புதைகுழி, வேதியியல் குண்டுகள் (இரசாயனக் குண்டுகள்), பேரழிவு விளைவிக்கும் குண்டுகள் ஆகியவை குர்திஷ் மக்களின் வரலாற்றுத் தடயங்களாகும். மொழி பாவிக்கத் தடை, மத வழிபாட்டுத் தடை, சமூக ஒதுக்கல், பொருளாதாரப் புறக்கணிப்புக்கள் ஆகியவற்றால் குர்திஷ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். துருக்கி ஐரோப்பியா ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பு நாடாக இணையும் வரை குர்திஷ் மொழி பொது இடங்களில் பேசுவது தடை செய்யப்பட்டிருந்தது.
விடிய இன்னும் நேரமிருக்கு
தற்போது நடந்த தேர்தலில் எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாதபடியால் அது 45 நாட்களுக்குள் ஒரு கூட்டணி அரசை அமைக்க வேண்டும். அல்லாவிடில் மீண்டும் தேர்தல் நடாத்தப்படும். மறு தேர்தல் நடந்தால் குர்திஷ் மக்களின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மனம் மாறி தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். இதனால் குறைந்த அளவான 10 விழுக்காடு வாக்கு அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். இதனால் குர்திஷ் மக்கள் படைக்கலப் போராட்டத்திற்கு மீண்டும் தள்ளப் படலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment