Sunday, 5 July 2015

நெல்லியடி நாயகன் முதல் அத்தனை வேங்கைகளையும் போற்றுவோம்

கார்த்திகை மலர்கள் தேர்ந்தெடுத்து
மாலை தொடுமின்
நன்றியினை நெய்யாக்கி நினைவுத்திரியில்
நற்றீபம் வைமின்
ஈழமகளும் தமிழ்மகளும் கால மகளோடு
தியாகப் பண் பாடுமின்
வீர யாழெடுத்து தீர இசை கூட்டி
பக்க வாத்தியமிசைமின்
நெல்லியடி நாயகன் முதல்
அத்தனை தியாகிகளையும்
நினைவு கொள்மின் நினைவு கொள்மின்

புவியில் நிகரில்லாப் புண்ணியரைப்
போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும்
தாயகக் கனவோடு போன தனயரைப்
போற்றிப் துதித்தேற்ற வேண்டும்
எழுமின் இசைமின் ஏற்றிப் பாடுமின்
நஞ்சணி நெஞ்சினரை நாநிலம்
மறவாதிருக்க போற்றிப் போற்றிப்
பாடுமின் தொழுமின்

கோட்டையைப் பிடித்தமை பாடி
கொக்காவிலைச் சரித்தமை பாடி
கொக்கட்டிச்சோலையில்
மார்தட்டி நின்றமை பாடி
சாஹரவர்த்தனாவை மூழ்கடித்தமை பாடி
நெல்லியடியில் தவிடுபொடியாக்கியமை பாடி
பூநகரியை எதிரிக்கு புதைகுழியாக்கியமை பாடி
ஆனையிறவில் ஆணிவேரோடு அறுத்தமை பாடி
சீக்கியைரை சிதறடித்தமை பாடி
கூர்காக்களை கூறு போட்டமை பாடி
நீழ்கடலெங்கும் நிமிர்ந்து நின்றமை பாடி
அம்பாறையில் மறைந்திருந்து தாக்கியமை பாடி
அம்பாந்தோட்டையில் துணிவோடு தூக்கியமை பாடி
அநுராதபுரத்தில் எல்லாளனாய் நின்றமை பாடிப் பாடிப்
போற்றித் துதிப்போமே துதிப்போமே.

கனியணி மரங்கள் ஆட ஆட
கடலலை ஓயாமல் ஆட ஆட
காற்றலை இசையோடு ஆட ஆட
தீபச் சுடர்கள் ஒளியோடு ஆட ஆட
கார்த்திகை மலர்களும் ஆட ஆட
வேங்கைகளும் வீரமாய் ஆட ஆட
எம் கைகள் உயர்தி பிடித்து
புண்ணியர் புகழ் பாடி ஆடுவோமே

   
படைக்கலன்கள் தோள்களில் ஆர்ப்ப ஆர்ப்ப
தொண்டர்கள் கூடி ஆர்ப்ப ஆர்ப்ப
நாட்டுக்கெனப் பிறந்தவர் ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் புகழை ஆர்ப்ப ஆர்ப்ப
கடலோடு காற்றும் ஆர்ப்ப ஆர்ப்ப
வானோடு மண்ணும் ஆர்ப்ப ஆர்ப்ப
நாளும் மறக்கக் கூடா நாயகரைப்
போற்றிப் பாடி ஆர்ப்போமே

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...