ஐக்கிய அமெரிக்கா அவசர அவசரமாக Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் ஒன்றைத் திறக்கவிருக்கின்றது. தற்போது அமெரிக்காவின் வான் படையின் செயலராக இருக்கும் டெபரா ஜேம்ஸ் விண்வெளிப் போர் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்டருக்கு ஆலோசகராக விரைவில் நியமிக்கப்படவிருக்கின்றார்.
சீனாவிடமிருந்தும் இரசியாவிடமிருந்தும் விண்வெளியில் உருவாகியுள்ள சவால்களை சமாளிக்க அடுத்த ஆறுமாதங்களுக்குள் Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் அமெரிக்காவால் திறக்கப்படவிருக்கின்றது.
2016-ம் ஆண்டிற்கான அமெரிக்கப் பாதுகாப்புச் செலவீனத்தில் ஐந்து பில்லியல் டொலர்கள் விண்வெளிப் பாதுகாப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் 21 மில்லியன் டொலர்கள் அமெரிக்க கடற்படைக்கான தொடர்பாடல் செய்மதிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் செய்யப் பட்டதிலும் பார்க்க இரண்டு மடங்காகும்.
விண்வெளிப் போர் நிலையத்தில் அமெரிக்கா காட்டும் அவசரம் சீனாவிடமிருந்தோ அல்லது இரசியாவிடமிருந்தோ ஒரு காத்திரமான அச்சுறுத்தல் உருவாகிவிட்டது என்பதைக் காட்டுகின்றது. அண்மைக்காலங்களாக இரசிய உயர் அதிகாரிகள் பகிரங்கமாகவே அமெரிக்காவை அணுக்குண்டுகளால் தாக்கத் தம்மால் முடியும் எனத் தெரிவித்து வருகின்றனர். ஒரு இரசிய படைத்துறை நிபுணர் இரசியாவால் மட்டுமே ஐக்கிய அமெரிக்காவை ஒரு அணுக்குண்ட்டால் அழிக்கப் பட்ட குப்பை மேடாக மாற்ற முடியும் எனத் தெரிவித்திருந்தார். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அக்கறையை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மீது காட்டுகின்றார். 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆரம்பத்தில் சீனா, இரசியா, கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்தான், ஆகிய நாடுகள் ஆரம்பத்தில் இணைந்தன. பின்னர் உஸ்பெக்கிஸ்த்தான் 2001ம் ஆண்டு இணைந்து கொண்டது. இந்த அமைப்பில் பெலரஸ், துருக்கி, இலங்கை ஆகிய நாடுகள் இதில் உரையாடக் கூடிய நாடுகளாகவும் இந்தியா, பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், மொங்கோலியா, ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாகவும் இருக்கின்றன. மத்திய ஆசிய நாடுகளிடை நெருக்கடிகளைத் தவிர்க்க உருவாக்கப் பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் நிலை உருவாகியுள்ளது. இது இரசியாவின் நேட்டோ எனவும் விமர்சிக்கப்படுகின்றது. இதில் இந்தியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் முழு உறுப்புரிமையுடன் இணைந்து கொண்டால் இது உலக மக்கள் தொகையில் அரைப்பங்கு மக்களைக் கொண்ட அமைப்பாகும்.
மற்ற நாடுகளின் செய்மதிகள் அமெரிக்கப் படைத்துறை இலக்குகளைப் பூமியில் வைத்தோ அல்லது விண்வெளியில் உள்ள அமெரிக்க செய்மதிகளை இலக்கு வைத்தோ தாக்குதல் செய்ய முடியாதபடி பார்த்துக் கொள்வதும் அமெரிகாவின் செய்மதிகளை ஒன்றிணைப்பதும் விண்வெளிப் போர் நிலையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். விண்ணில் இருக்கும் செய்மதிகளை தரையில் இருந்து ஏவுகணைகளை வீசி அழிக்கும் திறனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே சீனா பெற்றுவிட்டது.
2015 ஜூன் 25-ம் திகதி அமெரிக்காவின் பிரதிப் பாதுகாப்புத் துறைச் செயலர் Bob Work இரசியாவின் அணுக்குண்டு மிரட்டல்களுக்கு அனுமதிக்க மாட்டோம் என்றார். இரசியா Intermediate-Range Nuclear Forces Treaty, எனப்படும் நடுத்தர தூர அணுக்குண்டுப்படைகள் தொடர்பான உடன்படிக்கையை மீறுவதாகக் குற்றம் சாட்டும் Bob Work இரசியாவை ஒரு அடக்கப்பட்ட நிலைக்கு தம்மால் இட்டுச் செல்ல முடியும் எனவும் சூளுரைத்தார். எக்காரணம் கொண்டும் நடுத்தர தூர அணுக்குண்டுப்படைகள் தொடர்பான உடன்படிக்கையை மீறுவதால் இரசியா ஒரு மேலாண்மையைப் பெற நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என உறுதி கூறினார். பனிப்போர்க் காலத்தில் இருந்தே இரசியாவும் அமெரிக்காவும் விண்வெளியில் படைத்துறைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இத்துறையில் சீனாவும் காலடி எடுத்து வைத்தமை ஒரு புதிய களத்தை அமெரிக்காவிற்கு திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்கேரியா, எஸ்த்தோனியா, லத்வியா, போலாந்து, லித்துவேனியா, ருமேனியா, ஜேர்மனி ஆகிய இரசியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா தனது படைவலுவை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. உக்ரேனில் மேற்கு நாடுகளுக்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியது போல் மெசடோனியா (முன்னாள் யூக்கோஸ்லாவியக் குடியரசு) நாட்டிலும் ஒரு போட்டி உருவாகியுள்ளது. 1991-ம் ஆண்டு யூக்கோஸ்லாவியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற மெசடொனியா கிரேக்கத்தின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் 2004-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கோரி விண்ணப்பித்தது. இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது உறுப்புரிமை பெறவில்லை. இதே போல் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் மெசடோனியா இணைய விண்ணப்பித்துள்ளது. இதையும் கிரேக்கம் எதிர்த்தது. மெசடோனியா என்னும் பெயர் கொண்டிருப்பதால் அது தன்னுடைய பிராந்தியத்தையும் உரிமை கொண்டாடலாம் என கிரேக்க நாடு கருதுகின்றது. தனது முன்னாள் செய்மதி நாடான மசெடோனியா ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைய விரும்புவதை இரசியா மிகக் கரிசனையுடன் பார்க்கின்றது. இதனால் உக்ரேனில் 2014-ம் ஆண்டு இருந்த நிலை இப்போது மசெடோனியாவில் நிலவுகின்றது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் 2003-ம் ஆண்டில் ஜோர்ஜியாவிலும் 2005-ம் ஆண்டு உக்ரேனிலும் 2009-ம் ஆண்டு மோல்டோவாவிலும் செய்த ஆட்சி மாற்றத்தை தற்போது மசெடோனியாவில் செய்ய முயல்வதாக இரசியா கருதுகின்றது. இது போல ஒவ்வொரு முன்னாள் இரசியச் செய்மதி நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைவதால் இரசியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் மோசமாகப் போகும் முறுகல் நிலை ஒரு படைத்துறைப் போட்டியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது அதன் ஓர் அம்சமாகவே ஐக்கிய அமெரிக்காஅவசர அவசரமாக Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் ஒன்றைத் திறக்கவிருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment