அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய சுழற்ச்சி மையத்திற்கும் சீன விரிவாக்கத்தைத் தடுப்பதற்கும் ஜப்பானுடனும் தென் கொரியாவுடனும் அமெரிக்கா சிறந்த உறவை வைத்திருக்க வேண்டும் அதற்கு ஜப்பானிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் நல்ல உறவு இருத்தல் அவசியம். தென் கொரியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான உறவு சீர் செய்யப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு ஜூன் மாதம் 21-ம் திகதி கொண்டாடப்பட்டது. ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் உள்ள தென் கொரியத் தூதுவரகத்தில் இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்ட விழாவில் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே கலந்து கொண்டார். அதே போல் கொரியத் தலநகர் சியோலில் உள்ள ஜப்பானியத் தூதுவரகத்தில் நடந்த வைபவத்தில் கொரியக் குடியரசுத் தலைவி பார்க் கௌன் ஹை கலந்து கொண்டார்.
ஒன்று திரளுங்களய்யா ஒன்று திரளுங்கள்
தென் கொரியாவும் ஜப்பானும் சீனா மற்றும் வட கொரியா தொடர்பான உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க நீண்டகாலமாக முயற்ச்சித்து வருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் இருந்த கடந்த காலக் கசப்பான அனுபவத்தை மறக்க மறுக்கின்றன. இதற்கு இப்போது வாக்கு வேட்டை அரசியலும் குடும்பப் பெருமைகளும் தடையாக உள்ளன. ஜப்பானியத் தலைமை அமைச்சரின் பேரன் 1930களில் ஜப்பானியப் பேரரசைக் கட்டி எழுப்பியவர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நடந்து கொண்ட விதங்கள் பிழையாவனை என்றால் அது தலைமை அமைச்சர் சின்சே அபேயின் குடும்பப் பெருமைக்கு இழுக்காகும். இதனால் இவர் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் செய்தமை சரி என உலக அரங்கிலும் உள் நாட்டிலும் காட்டம் முயல்கின்றார். ஆனால் தென் கொரிய மக்கள் ஜப்பானியப் படையினர் தமது நாட்டு மக்களுக்கும் முக்கியமாகப் பெண்களுக்கு செய்த கொடுமைகளுக்கு ஜப்பான் தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கருதுகின்றனர். தென் கொரியக் குடியரசுத் தலைவி பார்க் கௌன் ஹையின் தந்தை பார்க் சூங் ஹை இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் படையில் அதிகாரி தரத்தில் கடமையாற்றியவர். தனது குடும்பத்தின் களங்கத்தைத் துடைக்க அவர் தன்னை ஒரு ஜப்பானிய விரோதியாக்கக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருகின்றார். இதனால் கொரியக் குடியரசுத் தலைவர் ஜப்பானியத் தலைமை அமைச்சரைச் சந்திப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் இருப்பதாகச் சொல்கின்றார்.
நடந்த கதை மறப்பதில்லை
ஜப்பானியப் புத்தகக் கடைகள் கொரியர்களுக்கு எதிரான புத்தகங்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. கொரியாவில் ஜப்பானிய எதிர்ப்பானது நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் உறவை ஏற்படுத்திக் கொண்ட ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளில் இரு தூதுவரகத்தின் முன்பும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. சியோலில் கூடிய கொரியர்கள் இழப்பீடு கொடு என முழங்கினர். டோக்கியோவில் உள்ள கொரியத் தூதுவரகத்தின் முன் கூடிய ஜப்பானியர்கள் கொரியர்கள் செய்யாத குற்றத்திற்காகத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் என முழங்கினர். ஜப்பான் ஒரு வலதுசாரித் தீவிரவாத நாடாக மாறி தாக்குதல் செய்யக் கூடிய படைத்துறையை உருவாக்கலாம் எனவும் கொரியர்கள் அஞ்சுகின்றனர். இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் இப்போதும் போர் நடப்பது போன்ற ஒரு மனப்பாங்கு கொரியர்களிடம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்படும் போது இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனி நடந்து கொண்ட விதம் பற்றி மற்ற ஐரோப்பிய நாடுகள் கருத்தில் கொள்ளவில்லை. அது போல கொரியாவும் ஜப்பானும் ஒத்துழைக்க வேண்டும் என்பது அமெரிக்கா அடிக்கடி வலியுறுத்தும் ஒன்றாக இருக்கின்றது. லியன்கோர்ட் ரொக்ஸ், சுஷீமா ஆகிய தீவுக் கூட்டங்கள் யாருக்குச் சொந்தம் என்பதிலும் இரு நாடுகளும் முரண்படுகின்றன. கொரியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் உள்ள கடலை ஜப்பான் கடல் என அழைப்பதை கொரியர்கள் விரும்பவில்லை.
கடலின் பெயர் என்ன?
ஜப்பானியத் தலைமை அமைச்சர் பிராந்திய ரீதியிலும் உலக ரீதியிலும் ஜப்பானிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படக் கூடிய வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலை நாட்டப்பட வேண்டும் என்றார். தென் கொரியக்க் குடியரசுத் தலைவி இரு நாடுகளுக்கும் இடையிலான சரித்திர நினைவுச் சுமையை நல்லிணக்கம் கொண்ட இதயத்துடன் இறக்கி வைத்து விட்டு இணைந்த செழுமைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார். இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவு பிராந்திய புவிசார் கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இரு நாடுகளும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் மக்களாட்சி முறைமைப்படி வெற்றிகரமான முதலாளித்துவப் பொருளாதாரங்களாக உருவெடுத்துள்ளன.
ஆசியாவின் ஈசான மூலையில் செல்வம் இருக்கின்றது
வட கிழக்கு ஆசியா உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மூலையாகும். இந்தப் பிரதேசத்தில் உள்ள ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமது பொருளாதாரத்தை 130 மடங்காக அதிகரித்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளாக தமது பொருளாதாரத்தை இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரதேசத்தில் இரசியா, வட கொரியா, சீனா ஆகிய நாடுகள் அணுக்குண்டுகளை வைத்துள்ளன. ஜப்பான் தேவை ஏற்படின் அணுக்குண்டைத் தயாரிக்கக் கூடிய வளங்களைக் கொண்டுள்ளது. தென் கொரியாவாலும் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய நிலையை அடைய முடியும்.
ஜப்பானில் அமெரிக்கத் தளங்கள்
1950-ம் ஆண்டில் இருந்தே ஐக்கிய அமெரிக்கா ஜப்பானுடனும் தென் கொரியாவுடனும் படைத்துறை உறவுகளைப் பேணிவருகின்றது. பல இருதரப்புப் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப் பட்டு வருகின்றன. ஐக்கிய அமெரிக்கா தனது நாட்டுக்கு வெளியே வைத்துள்ள ஒரே ஒரு கடல்சார் பயணப் படை(Marine Expeditionary Force) தளம் ஜப்பானில் இருக்கின்றது. ஜப்பானில் ஐக்கிய அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான ஜோர்ஜ் வாஷிங்டன் ஜப்பானின் யுக்கோசுக்கா துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. 2015-ம் ஆண்டு மேமாதம் இந்தக் கப்பல் அமெரிக்காவிற்கு மீளச் சென்றது. இதற்குப் பதிலாக ஏறக்குறைய அதே அளவு வலுக்கொண்ட யூ.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானிற்கு அனுப்பப்படவுள்ளது. 1991-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா சதாம் ஹுசேயினின் ஆட்சியின் கீழ் ஈராக்கியப் படைகள் குவைத்தை ஆக்கிரமித்த போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொண்ட பாலைவனப்புயல் (Desert Storm) படை நடவடிக்கையின் போதும் பின்னர் 1998-ம் ஆண்டு சதாம் ஹுசேயினிற்கு எதிராக செய்த பாலைவன நரி (Desert Fox) படைநடவடிக்கையின் போதும் ஜப்பானில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் படைத் தளங்கள் பெரிதும் பாவிக்கப்பட்டன.
தென் கொரியாவில் அமெரிக்கா
தென் கொரியாவில் 15 அமெரிக்கப் படைத்தளங்கள் உள்ளன. தென் கொரியாவை அதன் எதிரிகள் தாக்கினால் அந்த எதிரிகளுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ளன. முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்கப் படையினர் முழுவலுவுடன் தென் கொரியாவில் நிலை கொண்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்கப் படையினர் தென் கொரியாவில் நிலை கொண்டுள்ளமை ஒரு புவி சார் அரசியல் மற்றும் கேந்திரோபாயக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா தென் கொரியா மீது ஆக்கிரமிக்க முயற்ச்சித்ததால் 1950-ம் ஆண்டிற்கும் 1953-ம் ஆண்டிற்கும் இடையில் கொரியப் போர் நடந்தது. போரின் பின்னர் தென் கொரியாவை வட கொரியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்கப்படையினர் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என சீனா கரிசனை கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தென் கொரியா தனது நாட்டுப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் கட்டளைக்குக் கீழ் தொடர்ந்து 2020-ம் ஆண்டு வரை இருப்பதாக ஒத்துக் கொண்டது.
சீனாவுக்குப் பிடிக்காத தாட்
அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். இந்த தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது. அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும். அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை தென் கொரியாவில் நிறுத்தப்படுவதை சீனா கடுமையாக ஆட்சேபித்திருந்தது.
அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காண்மை தந்திரம்.
சீனாவின் பொருளாதர வளர்ச்சிக்குக் காரணம் அதன் மக்கள் தொகையே. அதற்கு ஈடு கொடுக்க அமெரிக்கா TPP எனப்படும் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans-Pacific Partnership) ஐ உருவாக்கியுள்ளது. இது சீனாவைச் சூழவுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் உறவையும் வர்த்தகத்தையும் விரிவு படுத்தும் நோக்கம் கொண்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலில் வென்றவுடன் முதல் செய்த பயணம் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கே. ஆசியான் மாநாட்டுக்குச் சென்ற ஒபாமா வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல சீனாவின் அயல் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றி உரையாடினார். ஏற்கனவே சிங்கப்பூரும் ஒஸ்ரேலியாவும் பல முனைகளில் அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, புரூணே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தப் பங்காண்மையில் இணையப் பேச்சு வார்த்தைகள் செய்கின்றன. இந்தப் பங்காண்மை உலகிலேயே பெரிய சுந்தந்திர வர்த்தக வலயம் ஆக உருவெடுக்கும். தென் கொரியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், தாய்வான் ஆகிய நாடுகள் இந்தப் பங்காண்மையில் இணைய அக்கறை கொண்டுள்ளன. வளர்ச்சியடைத நாடான தென் கொரியா இதில் இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகின்றது. அமெரிக்கப் பாராளமன்றம் அதிபர் பராக் ஒபாமாவிற்கு பல முட்டுக் கட்டைகள் போட்டுக் கொண்டிருக்கின்றது.
உலக அரங்கில் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட முன்னர் அதை அதன் கொல்லைப் புறத்தில் வைத்து அடக்குவதற்கு அமெரிக்காவிற்கு ஆசியாவின் இரு வளர்ச்சியடைந்த நாடுகளான தென் கொரியாவினதும் ஜப்பானினதும் ஒத்துழைப்பு அவசியம். சீன விரிவாக்கத்தின் கொரிய ஆக்கிரமிப்பும் ஒன்றாக இருக்கலாம் என கொரியர்கள் நம்பினால் அல்லது போலியாக நம்ப வைத்தால் இது நடப்பது சாத்தியம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment