Thursday, 11 June 2015

அமெரிக்காவும் வியட்னாமும் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்பாடு.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் வியட்நாமும் ஒன்றை ஒன்று பாதுக்காக்கும் உடன்படிக்கைக செய்து கொண்டன. ஐக்கிய அமெரிக்கா சார்பில் பாதுகாப்புத் துறைச் செயலர்  அஸ்டன் கார்ட்டரும் வியட்னாம் சார்பில் அதன் பாதுகாப்பு அமைச்சர்ஃபுங் குவாங் தானும்  "பாதுகாப்பு உறவு தொடர்பான இணை நோக்குக் கூற்று" (Joint Vision Statement) என்னும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று போர் புரிந்த ஐக்கிய அமெரிக்காவும் வியட்னாமும் இப்போது சீனாவைப் பொது எதிரியாகக் கொண்டு ஒன்று பட்டு வருகின்றன.  சென்ற ஆண்டு வியட்னாமிற்கு எதிரான படைக்கல விற்பனைத் தடையை அமெரிக்கா தளர்த்தி இருந்தது. இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு 2011- ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வுக் குறிப்பாணையின் படி மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

வியட்னாம் தனது படைக்கலன்களில் 90 விழுக்காட்டை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. வியட்னாமிற்கு அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முயல்கின்றது. ஐக்கி நாடுகள் சபையின் பன்னாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சியை வியட்னாமியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கவிருக்கின்றது. ஒரு மனித உரிமை மீறும் பொதுவுடமை நாடாகக் கருதப்படும் வியட்னாமின் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் பயிற்ச்சி அளிப்பதா என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஐநா பணி என்ற போர்வை பாவிக்கப்படுகிறது.


ஐக்கிய அமெரிக்காவிற்கும் வியட்னாமிற்கும் இடையிலான ராஜ தந்திர உறவின் இருபதாம் ஆண்டு நிறைவில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு ஆழமாக்கப்படும் என்றார் அமெரிக்க ப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஷ்டன் கார்ட்டர். வியட்னாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முட்கள் போல் தடையாக இருக்கின்றது.

ஆசிப பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தனிமைப் படுத்தி தனது நட்பு வட்டத்தைப் பெருக்க முயலும் அமெரிக்காவிற்கு வியட்னாமின்  உறவு முக்கியமானதாகும். 1979-சினாவும் வியட்னாமும் போர் புரிந்தன. 2014-ம் ஆண்டு மே மாதம் சீனக் கப்பல் ஒன்று  வியட்னாம் தனது எனச் சொந்தம் கொண்டாடும் கடற்பரப்பினுள் எரிபொருள் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டது. அதைத் தடுக்கச் சென்ற வியட்னாம் கப்பலை சீனா மூழ்கடித்தது. இது சீனாவிற்கு எதிரான உணர்வை வியட்னாமில் தூண்டியது. வியட்னாமில் உள்ள சீன முதலீகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. பின்பு சீன எரிபொருள் ஆய்வுக் கப்பல் இரண்டு மாதங்களில் சீரற்ற கால நிலை காரணமாக விலகிச்சென்றது. வியட்னாமின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா பெரும் பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் 24 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். வியட்னாமில் உற்பத்திகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது உள்ளீடுகளிற்கு சீனாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பல சீன உட்கட்டுமானங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. சீனாவின் மிரட்டல்கள் அத்து மீறல்களில் இருந்து தன்னைப் பாதுகாக்க வியட்னாமிற்கு மாற்று வழி தேவைப்பட்டது. இதைத் தொடர்ந்து பல அமெரிக்க இராசதந்திரிகள் வியட்னாமிற்குப் பயணம் செய்தனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் வியட்னாமிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் வியட்னாமின் கடற்படைத் தலைமையகத்திற்கும் ரோந்துபடைத் தலைமையகத்திற்கும் சென்றிருந்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜப்பான் வியட்னாமிற்கு போர்ப்படகுகளை வழங்க முன்வந்தது. இவற்றைத் தொடர்ந்து சீனப் பொதுவுடமைக் கட்சி யின் உயர் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் வியட்னாமிற்குச் சென்றார். ஆனாலும் சீன வியட்னாம் உறவு சீரடையவில்லை. இதன் பலனாக அமெரிக்காவுடன் வியட்னாம் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்துள்ளன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...