Thursday, 7 August 2014

இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்றமும் ஈழத்தமிழர்களுக்கான படிப்பினையும்

பலஸ்த்தீன அரசியல் தலைவர்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெறுவதற்கான ஆயத்தங்கள் செய்கின்றனர். இஸ்ரேலைப் பன்னாட்டு நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கும் எண்ணத்துடன் அவர்கள் செயற்படுகின்றனர். 29/11/2012 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. இதன் படி பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமையை பலஸ்த்தீனத்தால் பெறமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீனம் முழு உறுப்புரிமை பெறுவதை பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா தடுத்தது. ஒரு நாடு முழு உறுப்புரிமை பெற பாதுகாப்புச் சபையின் சம்மதம் வேண்டும்.  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து (வீட்டோ) அதிகாரமும் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஐந்து வல்லரசு நாடுகளும் சுழற்ச்சி முறையில் பிராந்திய அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்புரிமை பெறும் பத்து நாடுகளும் உள்ளன. அமெரிக்காவில் எதிர்ப்பால் பலஸ்த்தீன ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்

நிரந்தர உ|றுப்புரிமையைப் பெறமுடியாத பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 2012 நவம்பர் நடந்த வாக்கெடுப்பில் Canada, Czech Republic, Israel, Marshall Islands,  Micronesia,  Nauru,     Palau, Panama,  United States ஆகிய நாடுகள் மட்டும் எதிர்த்தன. 138 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.

ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தின. பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் தாம் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும் நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு மிரட்டியது.

காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலியப் படைகள் செய்மதிகளின் கண்காணிப்புடன் கடல், தரை, வான் வழிகளூடாக ஜூலை/ ஓகஸ்ட் மாதங்களில் செய்த கண்மூடித்தனமான தாக்குதல்களும் அதில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களும் குழந்தைகளும் செய்யப்பட்ட கட்டுமான மற்றும் சொத்து அழிவுகளும் பலஸ்த்தீனியர்களை இப்போது வேறுவழிகளில் சிந்திக்க வைத்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்கக அனுசரணையுடன் நடந்த பேச்சு வார்த்தைகளும் எந்தப் பயனும் தரவில்லை.

பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறுவது தொடர்பாகக் கலந்துரையாட பலஸ்த்தீன அதிகார சபையின் வெளிநாட்டு அமைச்சர் ரியாத் அல் மல்க்கி நெதர்லாந்து நகர் ஹேக்கிற்குப் பயணம் மேற் கொண்டுள்ளார். இந்த ஆண்டு மே மாதம் பன்னாட்டு மன்னிப்புச் சபை உட்படப் பதினேழு மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறுவதால் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து பலஸ்த்தீனர்களைப்பாதுகாக்க முடியும் என வலியுறுத்தி இருந்தன.

ஜூலை மாத இறுதியில் பலஸ்த்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் பனாட்டு நீதிமன்றில் இணைவது தொடர்பாக பலஸ்த்தீனியர்களின் பல்வேறுபட்ட அமைப்புக்களின் கருத்தை அறியும் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். ஹமாஸ் அமைப்பும் இசுலாமியப் புனிதப் போராளி அமைப்பும் இதற்குத் தயக்கம் காட்டியதாகச் சொல்லப்படுகின்றது. இந்த இரு அமைப்புக்கள் மீதும் போர்க்குற்றம் சாட்டும் சாத்தியம் உண்டு.

பன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம் உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம்(விசாரிக்கும் உரிமை) இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

நய வஞ்சகன் பான் கீ மூன்
2009-ம் ஆண்டு இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் ஈய வார்ப்பு என்னும் குறியீட்டுப் பெயருடன் செய்த படை நடவடிக்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு நீதி மன்றத்திடம் பலஸ்த்தீனியர்கள் எடுத்துச் சென்றபோது பலஸ்த்தீனம் ஒரு நாடு அல்ல என்பதால் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக இஸ்ரேலின் ஈய வார்ப்பு  படை நடவடிக்கையை விசாரணை செய்யதென் ஆபிரிக்க நீதியாளர் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் நியமிக்கப்பட்டார். இலங்கையைப் போலவே இவருடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் இலங்கை இப்போது செய்வது போல் ஓர் உள்ளக விசாரணையை மேற்கொண்டது. ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரிந்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இருதரப்பினரும் தமது குற்றங்களிற்கு உள்ளக விசாரணைகளை முதலில் மேற் கொண்டுவிட்டு பின்னர் பன்னாட்டு நீதிமன்றத்திற்குச் செல்லும் படி பரிந்துரை செய்திருந்தார்.  ஆனால் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரனின் அறிக்கையில் அதிக அக்கறை காட்டவில்லை. ஐநா சபையின் விசாரணைச் சபையின் தலைவர் இஸ்ரேலியப் படைகள் பலஸ்த்தீனத்தில் இருந்த ஒன்பது ஐநா நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தியதைப் போர்க்குற்றம் எனக் கூறி அதை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருதார். அதை பான் கீ மூன் தடுத்துவிட்டார். இந்த விசாரணைகளைத் தடுக்கும் பான் கீ மூனின் அறிக்கை நியூயோர்க்கில் உள்ள இஸ்ரேலியர்களால் தயாரிக்கப்பட்டது. எல்லாம் இலங்கையின் நடந்த வற்றின் மீள் ஒளிபரப்புப் போல் இருக்கின்றது.

பலஸ்த்தீனத்திற்கான ஐநா நிவாரணப் பணி முகவரகம் The U.N. Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) ஐநாவின் 95 நிலையங்கள் காஸா நிலப்பரப்பில் ஜூலை 8-ம் திகதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலின் பின்னர் தாக்கப்பட்டதாகக் கூறுகின்றது. ஜூலை 24-ம் திகதி பெய்த் ஹனௌனில் (Beit Hanoun)ஐநாவின் பாடசாலை மீதும் ஜூலை 30-ம் திகதி ஜபாலியா பெண்கள் முன்பள்ளி மீதும் ஓகஸ்ட் 3-ம் திகதி ரஃபாவில் உள்ள ஆண்கள் முன்பள்ளி மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியதாக பலஸ்த்தீனத்திற்கான ஐநா நிவாரணப் பணி முகவரகம் The U.N. Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) தெரிவிக்கின்றது. இவற்றில் பலஸ்த்தீனியர்கள் இடம் பெயர்ந்து தங்கியிருந்தனர். இது தொடர்பாக பான் கீ மூன் இப்படிக் கருத்துத் தெரிவித்திருந்தார்;:
  • "This attack, along with other breaches of international law, must be swiftly investigated and those responsible held accountable.... This madness must stop." 

2014 ஜூலை இறுதியிலும் ஓகஸ்ட் முற்பகுதியிலும் இஸ்ரேலியப் படையினர் செய்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலும் விசாரிக்கப் போகின்றது என்கின்றது இஸ்ரேலிய அரசு.

காஸாவில் இஸ்ரேல் செய்யும் தாக்குதலை நியாயப் படுத்த இஸ்ரேலிய தினசரிப்பத்திரிகை ஒன்று "தேவையான இனக்கொலை" என்னும் தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் தீட்டியது. பலத்த எதிர்ப்பின் மத்தியில் இது பின்னர் இணையத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றத்தில் இணைவதையும் இஸ்ரேல் மீது போர்க் குற்றம் சுமத்துவதையும் தடுக்குமாறு அமெரிக்கப் பாராளமன்றத்திடம் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தான்யாஹூ வேண்டு கோள் விடுத்துள்ளார். இதை அமெரிக்க ஊடகம் ஒன்று இப்படிச் சொல்கின்றது:
'The prime minister asked us to work together to ensure that this strategy of going to the ICC does not succeed.'

ஈழத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான முன்னெடுப்புக்களைக் கைவிட்டு நல்லிணக்கம் என்னும் மாயமான் பின்னால் செல்லும் படி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாஷிங்டனில் இருந்தும் புது டில்லியில் இருந்தும் வற்புறுத்தல்கள் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து அனந்தி சசிதரன் அடக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென் ஆபிரிக்கா காட்டும் எலும்புத் துண்டுக்குப் பின்னால் போகின்றது.  நோர்வேயின் அனுசரணையுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பலஸ்த்தீன விடுதலை இயக்கம் சென்றதன் பயனாகா யஸீர் அரபாத் நஞ்சூட்டி நயவஞ்சகமாகக் கொல்லப்ப்ட்டார்.

Wednesday, 6 August 2014

ஹமாஸை அழிக்க முடியுமா?

அடிக்கடி எல்லை தாண்டி எல்லை மீறிய பயங்கரவாதச் செயலில் இஸ்ரேல் ஈடுபடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேல் தன் மீது செய்யப்படும் தாக்குதலுக்கு அளவிற்கு மிஞ்சிய பதிலடிகள் கொடுக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இஸ்ரேலிற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. இஸ்ரேலியர்களும் வாழ வேண்டும் எனச் சொல்பவர்களும் உண்டு.

கண்டனங்கள் சேகரிக்கும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் எறிகணைகளையும் சுரங்கங்களையும் அழிக்க காஸா நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு இரு அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஒன்று சுரங்கங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் அதிகமாக இருந்தன. இரண்டாவது சுரங்கங்களின் கட்டுமானத் தரம் எதிர்பார்த்ததிலும் மேம்பட்டவையாக இருந்தன. இஸ்ரேல் செய்த அளவிற்கு மீறிய பதிலடியால் குழந்தைகள் கொல்லப்பட்ட படங்களும் ஐக்கிய நாடுகள் வீடிழந்தவர்களுக்கு என பாடசாலைகளில் அமைத்த தற்காலிக வதிவிடங்களைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்காமல் குண்டுகள் வீசி அழிக்கின்றது என்ற உண்மையும் உலகெங்கும் இஸ்ரேலிற்கு எதிராக கடுமையான கண்டனங்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் 72 மணித்தியாலப் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒத்துக் கொண்டன. இதை நீங்கல் வாசிக்கும் போது போர் நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் மோதல்கல் ஆரம்பிக்கப்படிருக்கலாம்.  எகிப்தின் அனுசரணையுடன் இந்தப் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தைக்கு இஸ்ரேலியப் பிரதிநிதிகள் எவரும் எகிப்த்திற்குச் செல்லவில்லை. எகிப்தே எல்லாவற்றையும் ஹமாஸுடனும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடனும் பேசி முடிவெடுத்தது. எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வுகம் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது.

இஸ்ரேல் முந்திக் கொண்டு செய்த தாக்குதல்
இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் யூதர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்கு எதிராக ஒரு பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தது என இஸ்ரேலுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்ததாம். அதன்படி ஹமாஸ் போராளிகள் நிலத்தின் கிழ்ச் சுரங்கங்கள் ஊடாக ஊடுருவி இஸ்ரேலியப் படையினர் மீதும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீதும், குடிமக்களுக்கான வழங்கற் கட்டுமானங்கள் மீதும் கடும் தாக்குதல்களைச் செய்யத் திட்டமிட்டிருந்தனராம். அதை முன்கூட்டியே முறியடிக்கத்தான் இஸ்ரேல் இப்போது ஹமாஸ் மீது தாக்குதல் செய்ததாம். அத்துடன் தனது மேம்படுத்தப் பட்ட இரும்புக்கூரை என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறமையையும் சோதித்துப் பார்த்துக் கொண்டது இஸ்ரேல். ஜூலை மாதம் 7-ம் திகதி  ஆரம்பித்த மோதலில் ஹமாஸ் 3200 எறிகணைகளைப் பாவித்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹமாஸின் எறிகணைகளை இஸ்ரேல் தரையில் வைத்தே அழித்தது. ஹமாஸின் படை வலுவில் பாதி அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுகின்றது. ஹமாஸை அழிக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்கு மத்திக கிழக்குப் பிரச்சனையின் சரித்திரப் பின்னணியைப் பார்க்க வேண்டும்.

தீர்மானம் 181
அரபு நாட்டினர் எவரையும் உறுப்பினராகக் கொள்ளாத "பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின்" (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது.  அப்போது சியோனிசவாதிகள்  யூதர்களிற்கு என ஒரு சிறு நிலப்பரப்பில் ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என உறுதியாக நம்பினர். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.


யூதர்கள்
இஸ்ரேலியர்களை அவர்களின் இன அடையாளத்தை வைத்து யூதர்கள் என்றும் மொழியை வைத்து ஹீப்ருக்கள் என்றும் அழைப்பர். இஸ்ரேலியர்கள் தாம் ரோமர்களிடம் இழந்த அரசை மீள அமைக்க வேண்டும் என்ற நீண்டகனவை உண்மையாக்கும் யூதத் தேசியவாதத்தை சியோனிசம் என்பர். சியோனிசவாதிகள் ஐநாவின் தீர்மானத்தை ஒட்டி தமக்கு என ஒரு நாட்டை பலஸ்த்தீனத்தில் உருவாக்கினார்கள். இதை அரபுக்கள் ஏற்கவில்லை.  சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளும் பலஸ்த்தீன தேசியவாத அமைப்புக்களான புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் இணைந்து பலஸ்த்தீனப் பிரதேசத்தின் மீது படை எடுத்தன. இதனால் பலஸ்த்தீனப் பிரதேசம் இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பலஸ்த்தீனத் தேசியவாதம் பின்னர் தீவிரமடைந்தது. 1964-ம் ஆண்டு பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

எல்லை இல்லா எல்லை தாண்டுதல்                                                                                    பலஸ்த்தீனியத் தேசியவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தேசிய எல்லைகளைத் தாண்டி பல தாக்குதல்களை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. முதலாவது எல்லை தாண்டிய தாக்குதல் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஜோர்தானில் 1968-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 1978, 1982, 1992, 1993, 2006 ஆகிய ஆண்டுகளில்  இஸ்ரேலியப் படைகள் எல்லை தாண்டி லெபனானிற்குள் சென்று பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டது. அது மட்டுமல்ல ஈரான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகள் யூரேனியப் பதப்படுத்தல் செய்ய ஆரம்பிக்கும் போதெல்லாம் இஸ்ரேலிய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தின. சிரிய உள் நாட்டுப் போர் 2011-ம் ஆண்டு ஆரம்பித்த பின்னர் இரு தடவைகளுக்கு மேல் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானிற்குள் படைக்கலன்களை எடுத்துச் செல்வதைத் தடுத்தனர்.

கார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும்.
                      இஸ்ரேலுடன் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரில் பலத்த தோல்வியை அரபு நாடுகள் சந்தித்தன. 1967 ஓகஸ்ட் மாத இறுதியில்   சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலாம மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.

ஹமாஸின் தோற்றம்                                                                                                                    பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் தீவிரத் தன்மை குறையத் தொடங்கிய சூழ்நிலையில், இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ச்சியாக நில அபகரிப்பும் யூதக் குடியேற்றமும் செய்து கொண்டிருக்கும் சூழலில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பலஸ்த்தீனியர் இண்டிஃபாடா என்னும் மக்கள் பேரெழுச்சியை நடத்தத் தொடங்கிய வேளையில் ஹமாஸ் அமைப்பு 1987-ம் ஆண்டு உருவானது. வன்முறை கூடாது படைக்கலன் ஏந்தக் கூடாது என்ற கொள்கைகளையுடையது  இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு இஸ்லாமிய நிலையம் என்னும் பெயரில் இருந்து காஸாவிலும் மேற்குக் கரையிலும் 1973-ம் ஆண்டில் இருந்து சமூக நலப்பணி செய்து கொண்டிருந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கததைப் வலுவிழக்கைச் செய்ய சகோதரத்துவ அமைப்பின் இஸ்லாமிய நிலையத்திற்கு இஸ்ரேல் சாதகமாக நடந்தத கொண்டது. இதில் முக்கிய மாகச் செயற்பட்டவர் ஷேக் அஹ்மட் யஸ்ஸின். அவரே 1987இல் ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பை ஆரம்பித்தார். பலஸ்த்தீன தேசியவாதம், இசுலாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவை ஹமாஸ் அமைப்பின் கொள்கைகளாகின. ஒரு புறம் இஸ்ரேலியப் படையினருக்கும் பலஸ்த்தீனியர்களின் நிலங்களை அபகரித்துக் குடியேறிய யூதர்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதலும் மறுபுறம் சமூக நலப்பணிகள் பலவற்றைச் சிறப்பாகச் செய்வதும் ஹாமாஸ் அமைப்பின் தலையாய பணிகளாக இன்றுவரை இருக்கின்றன. ஹமாஸ் ஒரு சுனி முசுலிம் அமைப்பு எனப்படுகின்றது.  1983-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் தமது முதலாவது தற்கொடைத் தாக்குதலை மேற்கொண்டனர்.

ஹமாஸின் தலைமை                                                                                                                       ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு தலைவர் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. அது ஷுரா சபை என்னும் கூட்டுத் தலைமையால் இயக்கப்படுகின்றது. 2004-ம் ஆண்டில் இருந்து ஹமாஸில் முன்னணித் தலைவராக இருப்பவர் கட்டார் நாட்டில் இருந்து செயற்படும் கலீட் மேஷால் என்பவராகும். ஹமாஸின் படைத் துறைக்குப் பொறுப்பாக அஹமட் ஜபாரி இருந்தார். இவர் 2012-ம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் யார் படைத்துறைக்குப் பொறுப்பானவர் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.  ஹமாஸ் காஸா நிலப்பரப்பில் நடத்தும் அரசின் தலைமை அமைச்சராக இஸ்மயில் ஹனியா செயற்படுகின்றார்.இஸ்ரேலை ஒழித்துக் கட்டுதல், பலஸ்தீனிய நிலத்தில் ஒரு இசுலாமிய அரசை நிறுவுதல் ஆகியவை ஹமாஸின் முக்கிய கொள்கைகளாகும்.

ஹமாஸின் படைவலு                                                                                                                       ஹமாஸ் அமைப்பினரிடம் குறுகிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய எறிகணைகள் பல இருக்கின்றன. ஈரானிடம் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இந்த எறிகணைகளைப் பெற்றனர். அத்துடன் தாகாஸா நிலப்பரப்பில் நிலத்தின் கிழ் மிக பல மிக நீண்ட சுரங்கப் பாதை வலைப்பின்னல் இருக்கின்றன. இதனால் அவர்கள் தமது படைக்கலன்களையும் வியாபாரப் பொருட்களையும் பாதுகாப்பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பலமாக இருக்கும். இதனால் இஸ்ரேலியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என நினைக்கின்றனர். இவற்றை அழைக்கும் நோக்குடன் இஸ்ரேலியப் படையினர் டாங்கிகளுடனும் புல்டோசர்களுடனும் பார ஊர்திகளுடனும் காஸா நிலப்பரப்பினுள் தரை நகர்வை தற்போது மேற் கொள்கின்றனர்.

ஹமாஸின் பொருளாதாராம்.                                                                                                   நிலக் கீழ் சுரங்கப் பாதையூடாகக் கடத்தும் பெருட்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் ஆண்டு ஒன்றிற்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுகின்றனர். 2005-ம் ஆண்டு பலஸ்த்தீன அதிகார சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் அந்த சபைக்கான நிதியும் ஹமாஸின் கைக்கு வந்தன. ஆனால் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி  உதவிகள் ஹமாஸின் கைக்களுக்குப் போவதில்லை. பல வெளிநாடுகளில் வாழும் பலஸ்த்தீனியர்கள் அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஹமாஸிற்கு நிதி உதவி செய்கின்றனர். ஈரானிய அரசும் ஹமாஸிற்கு பெரும் நிதி உதவி செய்து வந்தது. 2011-ம் ஆண்டு உருவான சிரிய உள்நாட்டுப் போரில் ஹமாஸ் சுனி முசுலிம் கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் சியா மு்சுலிம் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்ட படியால் ஈரான் ஹமாஸிற்கான தனது நிதி உதவியை நிறுத்திக் கொண்டது. ஹமாஸ் அமைப்பு அது உருவான நாளில் இருந்து 400 இஸ்ரேலியர்களையும் 25 அமெரிக்கர்களையும் கொன்றுள்ளது. இதுவரை இஸ்ரேல் மீது 8,000 எறிகணைகளை வீசியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தாமே தயாரிக்கும் கஸ்ஸாம் ஏவுகணைகள் 12மைல்கள் தூரம் பாயக் கூடியவை, எம்-75 ஏவுகணைகள் 47 மைல்கள் பாயக்கூடியவை, சிரியாவில் தயாரிக்கப்பட்ட M-302 ஏவுகணைகள் 93 மைல்கள் தூரம் பாயக் கூடியவை.ஈரானில் இருந்து அனுப்பப்படும் ஏவுகணைகள் முதலில் சிரியா போய்ச் சேரும். சிரியாவிலிருந்து ஏவுகணைகள் விமான மூலம் சூடானுக்கு அனுப்பப்பட்டு சூடானில் இருந்து எகிப்த்தின் கட்டுப்பாட்டில் உள்ள சினாய் பாலைவனத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஹமாஸ் அமைப்பினர் நிலக்கீழ்ச் சுரங்கங்கள் மூலம் காஸாவிற்கு எடுத்துச் செல்வர். காஸா நிலப்பரப்பு ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது பல ஆண்டுகளாக இஸ்ரேலின் சுற்றி வளைப்புக்குள் வெளியுலகத் தொடர்பின்றியே இருக்கின்றது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சி அமைத்தவுடன் ஹமாஸ் அமைப்பினர் அவர்களுடன் அதிக உறவும் உரிமையும் பாராட்டிக் கொண்டனர். ஆனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் ஒன்றின் மூலம் அல் சிசி ஆட்சிக்கு வந்த பின்னர் ஹமாஸ் அமைப்பின் 1600 சுரங்கங்களை எகிப்தியப் படைகள் அழித்தனர். அல் சிசியின் ஆட்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டுகின்றது.
ஹமாஸின் முடிவின் ஆரம்பமா?
                                                                                        ஹமாஸின்பலவீனங்கள்:                                                                                                                            
  1. 1. ஈரான், சிரியா, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றுடன் அரபு வசந்தத்தின் பின் ஏற்பட்ட முறுகல்.                                                                                                                 
  2. எகிப்தின் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடை செய்யப்பட்டமை.             
  3. எகிப்த்தில் சாதகமற்ற ஆட்சி ஏற்பட்டமை.                                                                     
  4. அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து ஆகியவை ஹமாஸிற்கு எதிராகத் திரும்பியமை.                                                                                                                                   
  5.  மூன்று புறம் நிலமும் ஒரு புறம் கடலையும் கொண்ட காஸாவில் இருந்து செயற்படும் ஹமாஸிடம் ஒரு கடற்படை இல்லை.    
 இஸ்ரேலிய வலதுசாரிகள் ஹமாஸை ஒழித்துக் கட்டும்வரை இஸ்ரேலியப் படைகள் காஸாவில் தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தயாஹு இஸ்ரேலியக் குடிமக்கள் ஹமாஸின் ஏவுகணைகளுக்குப் பயந்து ஒரு நிமிடம் தன்னும் பதுங்கு குழிகளுக்குள் ஒளித்திருக்கக் கூடாது எனச் சூளுரைத்துள்ளார். அதற்கு ஏற்ப தாம் ஹமாஸின் ஏவுகணைகளையும் நிலக் கீழ் சுரங்கப் பாதைகளையும் அழிக்க வேண்டும் என்கின்றார் நெத்தன்யாஹூ. சிரிய உள்நாட்டுப் போரின் பின்னர் ஹமாஸிற்கும் ஈரானிற்கும் இடையில் முறுகல் நிலை உருவாகி இருந்தாலும் இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஈரான் தொடர்ச்சியாக ஹமாஸுடன் தொடர்பில் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஒழித்துக் கட்டுப்படுவதை ஈரானும் விரும்பவில்லை. லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் விரும்பவில்லை. ஹமாஸ் ஒழித்துக் கட்டப்படுவதை எந்த ஒரு அரபுக் குடிமகனும் விரும்பவில்லை. ஹமாஸிற்கான ஆதரவு இப்போது கட்டார் நாட்டில் இருந்தும் சவுதி அரேபியச் செல்வந்தர்களிடம் இருந்தும் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். துருக்கியும் ஹமாஸிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஹமாஸையும் அதன் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் ஒழித்துக் கட்ட நீண்ட காலம் காஸாவில் இஸ்ரேலியப் படைகள் தங்கியிருந்தால் அவை பலத்த உயிரிழப்புக்களைச் சந்திர்க்க நேரிடும். ஹமாஸும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு இஸ்ரேலின் மீது புதியவகையான தாக்குதல்களைத் தொடுக்கலாம். இஸ்ரேலியர்கள் தமது படைத்துறைக்கு பெரிய ஆளணி இழப்புக்கள் ஏற்பதுவதை விரும்புவதில்லை. தற்போது நடக்கும் போரின் போது ஹமாஸ் முன்று வகைகளில் இஸ்ரேலியப் படையினரையும் உலகத்தையும் ஆச்சரியப் பட வைத்த்து. முதலாவது இஸ்ரேலியக் கடற்படையினர் விமானப்படையின் ஆதரவுடன் மத்திய தரைக் கடலூடாக செய்ய முயன்ற ஒரு கடல்வழித் தரையிறக்கத்தை முறியடித்தது. இரண்டாவதாக இரசியத் தயாரிப்பு தாங்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பாவித்தது. மூன்றாவதாக ஒரு ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் செய்ய முயன்றது. போர் முனையில் உலகிலேயே முதற்தடவையாக ஆளில்லாப் போர் விமானம் மூலம் தாக்குதல் செய்ய முயன்ற போராளி அமைப்பு என்ற பெருமையை ஹமாஸ் அமைப்புப் பெற்றுக் கொண்டது. இந்த ஆளில்லாப் போர் விமானங்களை ஹமாஸே  உருவாக்கியதாகச் சொல்கின்றது. ஹமாஸின் முதலாவது ஆளில்லா விமானம் இஸ்ரேலால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  ஹமாஸ் நாளொன்றிற்கு நூறு ஏவுகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றது இவற்றில் தொண்ணூறு விழுக்காடானவை வானில் வைத்தே இஸ்ரேலின் இரும்புக்கூரைப் பாதுகாப்பு முறைமையால் அழிக்கப்படுகின்றன. இருந்தும் ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேலின் இரும்புக் கூரையை நோக்கி எறிகணைகளை வீசிக் கொண்டே இருக்கின்றது. இது இஸ்ரேலின் இரும்புக்கூரை தொடர்பாக மற்ற நாடுகள் தகவல் திரட்டுவதற்காக என கருதப்படுகின்றது. ஏற்கனவே இரும்புக்கூரை தொடர்பான தகவல்களை சீனா இணையவெளி மூலம் ஊடுருவிப் திருடி விட்டதகாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. இரும்புக்கூரையை ஊடுருவக் கூடிய வகையில் இனி ஈரானோ சிரியாவோ ஏவுகணைகளை உருவாக்கி ஹமாஸிற்கு வழங்கலாம். ஹமாஸின் விழ்ச்சி ஹிஸ்புல்லாவையும் அல் கெய்தாவையும் வலுவிழக்கச் செய்யலாம். ஹமாஸ் வீழ்ந்தால் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது அதிக கவனம் செலுத்தலாம். இதனால் மற்ற இசுலாமியப் போராளி இயக்கங்கள் ஹமாஸிற்கு உதவ முன்வரும். ஏற்கனவே பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலுக்கும் நல்ல உறவு இல்லை. குழந்தைகள் கொல்லப்படும் போர் தொடர்ந்தால் அமெரிக்கா ஐநா சபையில் இஸ்ரேலிற்கு வழங்கும் கவசத்தை குறைக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வந்து விட்டன. ஐநா பாடசாலைகளில் அமைத்த பொதுமக்கள் தங்குமிடங்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கின்றது. ஹமாஸுடன் போர் தொடங்கிய பின்னர் ஒபாமாவிற்கும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் மிகவும் காரசாரமாக அமைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டார், சவுதி, துருக்கி போன்ற நாடுகள் ஹமாஸிற்கு அதிக உதவிகளை மறைமுகமாக வழங்க முன்வரலாம். ஹமாஸை ஒழித்துக் கட்டுவது இலகுவானதல்ல.

Sunday, 3 August 2014

ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர்

புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியும்.

இரும்புக் கூரையின் உருவாக்கம்
எவுகணை மற்றும் எறிகணை போன்றவற்றிற்கு எதிரான ஒரு முறைமை யை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக் கரு 2004-ம் ஆண்டே இஸ்ரேலில் உருவானது. ஈரான் தான் தயாரித்த எறிகணைகளில் பெருமளவற்றை லெபனானில் செயற்படும் சியா முசுலிம்களின் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கும் பலஸ்த்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பிற்கும் வழங்கியது. 2006-ம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் நடந்த போரின் போது குறி தப்பாமல் இஸ்ரேலின் மீது ஒரு மாதத்தில் 4,000 எறிகணைகளை வீசியது. இது இஸ்ரேலியர்களை ஒரு உலுப்பு உலுப்பியது. அவர்களின் உள்ளத்தின் வலுவை பெரிதாகப் பாதித்ததுடன் இஸ்ரேலியப் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதல்தான் இஸ்ரேலை ஒரு எறிகணைப் பாதுகாப்பு முறைமை உருவாக்கும் நிலைக்குத் தள்ளியது.  இஸ்ரேலை நோக்கி ஈரானியப் படையினர், கசாக் கரையோரம் இயங்கும் ஹமாஸ் இயக்கத்தினர், லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆகியோரிடமிருந்து 200,000 ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரும்புக்கூரை (Iron Dome) என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறைமையை உருவாக்கின. இதை உருவாக்கும் பொறுப்பு Rafael Advanced Defense Systems Ltd என்னும் இஸ்ரேலிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக இரு நாடுகளும் பல பில்லியன் டொலர்களைச் செலவழித்தன. 2008-ம் ஆண்டு ஆரம்ப நிலைச் சோதனைகள் செய்யப்பட்டன. 2009-ம் ஆண்டு பல தடவைகள் ஹமாஸ் அமைப்பினரின் கஸ்ஸாம் எறிகணைகளை போன்ற எறிகணைகளை இஸ்ரேல் உருவாக்கி அவற்றின் வீச்சுக்கு எதிராக இரும்புக்கூரையை சோதித்துப் பார்த்தது.

2012-ம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேல் மோதல்
2012 நவம்பர் மாத நடுப்பகுதியில் இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஒன்றின் மீது ஒன்று எறிகணைத் தாக்குதல் நடாத்திய போது முதல் முறையாக போர் முனையில் இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome)யை வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்தது. இரும்புக் கூரையால் பல ஈரானியத் தயாரிப்பு ஃபஜீர் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் வெளியில் வைத்து அழித்தது.  இரும்புக் கூரையால் ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய எல்லா ஏவுகணைகளையும் அழிக்க முடியாமல் போனது. சில படைத் துறை வல்லுனர்கள் இரும்புக் கூரை சரியாக வேலை செய்யவில்லை என்கின்றனர்.ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் ஏவிய 400 ஏவுகணைகளைத் தமது இரும்புக் கூரைகள் அழித்தன அதனால் தமது இரும்புக் கூரை 90% வெற்றி என்றது இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை. காஸாவில் மோசமாம மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கப் பாராளமன்றம் ஏவுகணைப்பாதுகாப்பு முறைமைக்கு தமது பங்களிப்பாக 225 மில்லியன் டொலர்களை அவசர அவசரமாக ஒதுக்கியுள்ளது.பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடு இஸ்ரேலின் அரசியல் பரப்புரைஞர்களின்(lobbyists) வலிமையை எடுத்துக் காட்டுகின்றது.

இரும்புக் கூரை வேலை செய்யும் முறை
 இரும்புக் கூரை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இவை ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் இரும்புக்கூரையில் உள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஏவுகணையை அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் டோலர்கள் பெறுமதியான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாவிக்கின்றது

இனம் காண் நிலையம் (Radar Unit)
இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.

கட்டுப்பாட்டகம் (Control Centre )
இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் யாருமற்ற வெளியான அல்லது புறம்போக்கான இடம் என்றால் அதை அப்படியே விட்டுவிடும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம், இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.

ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)
ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும்.

இரும்புக்கற்றை
மிகச் சிறிய எறிகணைகளை அழிப்பதற்கு இரும்புக்கற்றை(Iron Beam)  என்னும் லேசர் கதிர் வீசிகளையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ளன. இவை இரும்புக் கூரை முறைமையால் இனம் கண்டு தாக்கியழிக்க முடியாத சிறு எறிகணைகள் மீது லேசர் கதிர்களைப் பாய்ச்சி அழிக்கும். இதுவும் இரும்புக்கூரையைப் போல் ஒரு தானியங்கி முறைமையாகும்.

சோதனைக் களம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அரபு இஸ்ரேல் மோதல் அதனது படைவலுவிற்கு ஒரு சோதனைக்களமாகும். தற்போது நடந்து கொண்டிருக்கும்(2014-ஜூல முதல்) இஸ்ரேலிற்கும் ஹமாஸிற்குமான போரில் ஈரானிய ஏவுகணைகளையும் தனது சொந்தத் தயாரிப்பு ஏவுகணைகளையும் ஹமாஸ் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கின்றது. அவை அழிக்கப்படுகின்றன என்று அறிந்தும் ஹமாஸ்  நாள் ஒன்றிற்கு நூற்றுக் கணக்கில் ஏவுகணைகளை வீசுகின்றது. இது இஸ்ரேலின் இரும்புக் கூரை பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காகவும் இருக்கலாம். இரும்புக் கூரை பற்றிய தகவல்கள் ஈரான், சீனா, வட கொரியா போன்ற நாடுகளுக்கு பெறுமதிமிக்கவையாகும். சீனா இணைய வெளியூடாக இரும்புக்கூரை தயாரிக்கும் இஸ்ரேலிய நிறுவனமான Rafael Advanced Defense Systems Ltd இன் கணனிகளை ஊடுருவி இரும்புக் கூரை தொடர்பான இரகசியங்களைத் திருடிவிட்டதாக நம்பப்படுகின்றது. இரும்புக்கூரையின் களநிலைச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களும் சீனாவிற்கு தேவைப்படும். இதை பெறுவதற்காக ஹமாஸ் தொடர்ந்து எறிகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றதா?

இரும்புக் கூரையை அடுத்து மந்திரக் கோல்
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மந்திரக் கோல் என்ற குறியீட்டினால் அழைக்கப்படும் David's Sling என்னும் நீண்ட தூர ஏறிகணைகளையும் குறுந்தூர  ஏவுகணைகளையும் (long-range rockets and short-range missiles)இடை மறித்து அழிக்கக்கூடிய முறைமையை இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கி வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்துள்ளன.  டேவிக் கோலியாத் கதையில் வரும் சிறுவன் டேவிட்டின் பெயர் இந்த இடைமறிஏவுகணைக்குச் சூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை நிறுவனமான Rafael Advanced Defense Systems மும் அமெரிக்க படைக்கலன் உற்பத்தி நிறுவனமான Raytheonஉம் இணைந்து David's Slingஐ உருவாக்கியுள்ளன. மதிரக்கோல் எனப்படும் David's Sling ஹிஸ்புல்லா இயக்கத்தினரிடம் இருக்கும் M600, the Zelzal, Fajr and Fateh 110 ஆகிய ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

அம்பு முறைமை(Arrow systems) எனும் பல தட்டுப் பாதுகாப்பு முறைமை
இரும்புக் கூரை குறுந்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும், David's Sling நடுத்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும் தரும் என இஸ்ரேல் நம்புகிறது. தொலைதூர ஏவுகணைகளுக்கும் வழிகாட்டி ஏவுகணைகளுக்கும் (cruise missiles ) எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் அம்பு முறைமை(Arrow systems)யை உருவாக்கிவருகிறது.  மந்திரக்கோல் எனப்படும் David's Sling 2014-ம் ஆண்டு அல்லது 2015-ம் ஆண்டு முழுமையாக உருவாகிவிடும். அம்பு முறைமை 2016இல் முழுமை பெற்று விடும் என்கிறது இஸ்ரேல். அம்பு முறைமை - 3 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை அவற்றின் ஏவு நிலைகளுக்கு அண்மையில் வைத்தே அழிக்கும் வல்லமை படைத்தவை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் இஸ்ரேலின் பல்தட்டு பாதுகாப்பு முறைமை எனப்படுகிறது. David's Sling விரைவாக வரும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது என்கிறது இஸ்ரேல்.

அமெரிக்காவின் Phlanx
சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பறக்கும் விமானங்களையும் பாயும் ஏவுகணைகளையும்  அழிக்கக் கூடிய வகையில் அமெரிக்கா Phlanx என அழைக்கப்படும் Close in Weapon System என்னும் முறைமையை உருவாக்கியுள்ளது. இவை லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் ஹப்பர் சோனிக் ஏவுகணைகளையும் ஹப்பர் சோனிக் விமானங்களையும் அழிக்கும். இது பற்றிய மேலதிக விபரங்களை இந்த இணைப்பில் பார்க்கவும்: Close-in Weapon Systems

Monday, 28 July 2014

அமெரிக்கப்படையினருக்கு சட்டைப் பைக்குள் வைக்கக் கூடிய சிறிய விமானங்கள்.

அமெரிக்கா தனது படைத்துறைக்கு பலதரப்பட்ட ஆளில்லா விமானங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் சட்டைப்பைக்குள் வைக்கக் கூடிய சிறிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா உருவாக்குகின்றது. ஆபத்தான சூழலில் சிறு குழுக்களாக அல்லது தனியாகச் செயற்படும் அமெரிக்கப் படையினருக்கு வேவுபார்க்கக் கூடிய வகையில் இச்சிறு விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் Massachusetss இல் உள்ள US Army Natick Soldier Research, Development and Engineering Centre என்னும் படைத்துறை ஆராய்ச்சி மையத்தில் சட்டைப்பைகளுக்குள் வைக்கக் கூடிய வேவு பார்க்கும் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.

Cargo Pocket Intelligence, Surveillance and Reconnaissance program என்னும் செயற்திட்டம் அமெரிக்காவின் சட்டைப்பை விமானங்களில் செயற்படுத்தப்படும். இதை சுருக்கமாக CP-ISR என அழைக்கப்படுகின்றது. படைத்துறையைப் பொறுத்தவரை உளவு, கண்காணிப்பு, வேவுபார்த்தல் (Intelligence, Surveillance and Reconnaissance) ஆகியவை முக்கியமானவையாகும். இம்மூன்றையும் செய்யக் கூடியவகையில் இச்சிறு விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்திற்குள் அல்லது கட்டிடத்திற்குள் படையினர் நகர்வுகளை மேற்கொள்ள முன்னர் இச்சிறிய விமானத்தை அனுப்பி நிலைமைகளை அறிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே சிறிய உழங்கு வானூர்தி (helicopter)  உருவாக்கப்பட்டு விட்டன. Prox Dynamics' PD-100 Black Hornet என்னும் உள்ளங்கை அளவு உழங்கு வானூர்தி (helicopter) 16 கிராம் எடையுள்ள உள்ளங்கை அளவிலானது. இடு இருதது நிமிடங்கள் பறந்து காணொளிப் பதிவுகளை நேரடியாக ஒளிபரப்பக் கூடியது. இதில் மூன்று சிறிய ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

முதலில் படைத்துறையினருக்கு என உருவாக்கிய சிறிய ஆளில்லா விமானங்கள் பின்னர்  சிறிய இலையான் அளவில் இருந்து பெரிய குண்டு வீச்சு விமானங்கள் வரை இப்போது உருவாக்கப்படுகின்றன. வர்த்தகத் துறையிலும் ஆளில்லா விமானங்கள் திடீர் உணவு விநியோகம் பொதி விநியோகம் ஆடைகள் சலவை செய்து விநியோகித்தல் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகின்றன. குடிசார் சேவைகளிலும் ஆளில்லாப் போர் விமானங்கள் பயன் படுத்தப் படுகின்றன.அண்மையில் அமெரிக்காவில் காணாமற் போன ஒரு 82வயதானவரை ஆளில்லாப் போர் விமானத்தின் மூலம் தேடிப்பிடித்தார்கள்.

Sunday, 27 July 2014

பலஸ்த்தீனிய இஸ்ரேலிய மோதலின் பின்னணிகள்


பலஸ்த்தீன விடுதலையை இஸ்ரேல் மட்டும் அழிக்கவில்லை.
ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளும் அழித்தன. இதைப்பற்றி அறியவும் ஹமாஸ் இஸ்ரேல் மோதலைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவும் அரபு இஸ்ரேல் மோதலின் புவியியல் பின்னணியையும் சரிந்திரப் பின்னணியையும் நாம் பார்க்க வேண்டும்.

இஸ்ரேலின் இனக்கொலைக்கு ஒரு சாட்டு
பலஸ்த்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் இருந்து கைக்குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளிவந்திருக்கும் போது இஸ்ரேலிற்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என அமெரிக்கா சொல்கின்றது. 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதி பலஸ்த்தீனர்களின் நிலத்தில் குடியேறியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இஸ்ரேலிய பதின்பருவத்து இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப் பட்டனர்.இவர்களைக் கொன்றது காஸாப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் அமைப்பினர் என இஸ்ரேல் அறிவித்தது. பின்னர் பலஸ்த்தீன இளைஞர் ஒருவர் கடத்தி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இதைச் செய்தவரை இஸ்ரேல் கைது செய்துள்ளதாகச் சொல்கின்றது. மூன்று இஸ்ரேலிய இளைஞர்களின் கொலையாளிகளை கைது செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரைக் கைது செய்ததுடன் ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைத்தாக்குதலும் மேற் கொன்டது.  இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தினர். இந்த ஏவுகணைகளில் பெரும்பான்மையானவற்றை இஸ்ரேலின் இரும்புக் கூரை என்னும் பாதுகாப்பு முறைமை தடுத்து விட்டது. 

இஸ்ரேலின் இன்னும் ஒரு ஆக்கிரமிப்பு
காஸா நிலப்பரப்பின் மீது தொடர்ந்து முப்படைகள் மூலமும் குண்டுத் தாக்குதல் செய்த இஸ்ரேல் ஜூன் 17-ம் திகதியில் இருந்து ஹமாஸ் அமைப்பின் கட்டுப் பாட்டில் இருக்கும் காஸா நிலப்பரபினுள் ஒரு தரைவழிப் படைநகர்வை மேற் கொள்கின்றது. இஸ்ரேல் தனது இந்த இனவழிப்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பு விளிம்பு (Operation Protective Edge) எனப் பெயரிட்டுள்ளது. இஸ்ரேலிய மக்கள் இனியும் ஹமாஸின் ஏறிகணைகளுக்குப் பயந்து பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொள்ளக் கூடாது என்கின்றார் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர். ஹமாஸ் அமைப்பினர் அரபு வசந்தத்தின் பின்னர் எகிப்த்தில் இசுலாமிய சகோதரத்துவை அமைப்பை ஆதரித்ததால் தற்போது எகிப்தில் ஆட்சியில் இருக்கும் படைத்துறையினரின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டதால் ஈரானின் ஆதரவை ஹமாஸ் அமைப்பினர் இழந்துவிட்டனர். இதனால் ஹமாஸ் அமைப்பினர் தற்போது ஒரு வலுவிழந்த நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றது ஹாமாஸ் அமைப்பினர்தான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. வலுவிழட்னு இருக்கும் ஹமாஸ் அமைப்பை அழிக்க அல்லது சில ஆண்டுகளுக்குச் செயற்படாமல் செய்ய மூன்று இளைஞர் கொலை ஒரு சாட்டாக இஸ்ரேல் போலியாக உருவாக்கினதா? இஸ்ரேலுடன் சவுதி அரேபியாவும் ஹமாஸ் அமைப்பும் இணைந்து ஹமாஸ் அமைப்பை அழிக்க முயல்கின்றன என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உருவாக்கிய ஹமாஸை அழிப்பதில் அந்த அமைப்பை விரும்பாத எகிப்தும் சவுதியும் அக்கறை காட்டுகின்றன எனச் சொல்லப்படுகின்றது.

ஹமாஸின் வலு நிலத்தின் கீழ்
ஹமாஸ் அமைப்பினரிடம் குறுகிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகள் பல இருக்கின்றன. காஸா நிலப்பரப்பில் நிலத்தின் கிழ் மிக பல மிக நீண்ட சுரக்கப் பாதை வலைப்பின்னல் இருக்கின்றன. இதனால் அவர்கள் தமது படைக்கலன்களையும் வியாபாரப் பொருட்களையும் பாதுகாப்பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பலமாக இருக்கும். இதனால் இஸ்ரேலியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என நினைக்கின்றனர். இவற்றை அழைக்கும் நோக்குடன் இஸ்ரேலியப் படையினர் டாங்கிகளுடனும் புல்டோசர்களுடனும் பார ஊர்திகளுடனும் காஸா நிலப்பரப்பினுள் தரை நகர்வை மேற் கொள்கின்றனர்.

புவியியல் பின்னணி
புவியியல் பின்னணியை முதலில் பார்ப்போமானால் பலஸ்த்தீனமும் இஸ்ரேலும் மேற்காசியாவில் மத்திய தரைக் கடலை ஒட்டிய ஒரு பிரதேசமாகும். ஜோர்தானின் மேற்கு எல்லையில் ஜோர்தானிய நதி இருக்கின்றது. ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளூடாகவும் இந்த நதி செல்கின்றது. ஜோர்தானிய நதியின் மேற்குக் கரையில்  அந்த நதியை கிழக்கு எல்லையாகவும், சிரியாவையும் லெபனானையும் வடக்கு எல்லையாகவும் மத்திய தரைக்கடலை மேற்கு எல்லையாகவும், எகிப்தை தெற்கு எல்லையாகவும் கொண்ட பலஸ்த்தீனப் பிரதேசம் இப்போது மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. "காஸா நிலப்பரப்பு" ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலும், "மேற்குக் கரை" பலஸ்த்தீனா அதிகார சபையின் கட்டுப்பாட்டிலும் எஞ்சிய பிதேசம் இஸ்ரேல் நாடாகவும் இருக்கின்றது. காஸா நிலப்பரப்பு ஹமாஸ் அமைப்பினது வேறு சில அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது இஸ்ரேலின் சுற்றிவளைப்பிலேயே என்றும் இருக்கின்றது. காஸா நிலப்பரப்பில் துறைமுகமோ விமான நிலையமோ இல்லை. எகிப்தை ஒட்டிய சினாய் பாலைவனத்தில் நிலத்தின் கீழான சுரங்கப்பாதையூடாகவும் மற்றும் இஸ்ரேல், எகிப்த்து ஆகிய நாடுகளின் தயவுடனும் காசாப் பிரதேசத்திற்கான விநியோகம் நடக்கின்றது. மேற்குக் கரை எனப்படும் பிரதேசத்தில் இஸ்ரேல் 1967-ம் ஆண்டில் இருந்து தொடர் நில அபகரிப்புச் செய்து அங்கு யூதர்களைக் குடியேற்றி வருகின்றது. பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஒரு தொடர் நிலப்பரப்பு மேற்குக் கரையில் இல்லாத வகையில் யூதக் குடியேற்றம் நடக்கின்றது.

மேற்கொண்டு நாம் அரபு இஸ்ரேலின் வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்பதற்கு யூதர்களின் சியோனிசம், உதுமானியப் பேரரிசிடம் இருந்து பிரித்தானிய அரசு மத்திய கிழக்கைக் கைப்பற்றியமை, அரபு இஸ்ரேலியப் போர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 181, போன்றவை உட்பட மேலும் பலவற்றை நாம் பார்க்க வேண்டும்.

சியோனிஸம்
சியோன் என்பது பலஸ்தீனத்தில் இருக்கும் ஒரு மலையின் பெயராக இருந்தது. இம்மலையில் யூதர்களின் அரசின் கோட்டை இருந்தது. பலஸ்த்தீனம் துருக்கியின் உதுமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் 1808-ம் ஆண்டில் இருந்து 1922-ம் ஆண்டு வரை இருந்தது. உதுமானியப் பேரரசு ஒரு இசுலாமிய அரசு என்றபடியால் யூதர்கள் தமக்கு என ஒரு நாடு வேண்டும் என உருவாக்கிய கொள்கை சியோனிசம் எனப்படுகின்றது. பல ஆண்டுகளாக இந்தச் சிந்தனை இருந்தாலும் 1870-ம் ஆண்டிற்கும் 1897-ம் ஆண்டிற்கும் இடையில் இதர்கு ஒரு தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டது. பலஸ்த்தினத்தில் இருந்து வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் அங்கு குடியேற்றி அவர்களுக்கு என ஒரு நாடு உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் சியோனிசவாதிகள் செயற்பட்டனர். இன்னும் அதே கொள்கையுடன் இருக்கின்றனர் எனச் சொல்லப்படுகின்றது. சியோனிசம் என்பது யூதத் தேசியவாதம் என்கின்றனர் யூதர்கள்.

சரித்திரப் பின்னணி - பிரித்தாண்ட பிரித்தானியா
உதுமானியப் பேரரசிற்கு எதிராக முதலாம் உலகப் போரின் போது (28 -07-1914இற்கும்  11-11-1918இற்கும் இடையில்) பிரித்தானியாவும் பிரன்சும் போரிட்டன. பலஸ்த்தீனப் பிரதேசத்தில் யூதர்களுக்கு ஒரு  அரசு அமைத்துத் தருவதாக யூதர்களிடமும், பலஸ்த்தினத்தில் வாழும் அரபு மக்களுக்கு என்று ஒரு அரசு அமைத்துத் தருவதாக பலஸ்த்தீன அரபுக்களுக்கும் பிரித்தானியா வாக்குறுதிகளை வழங்கி உதுமானியப் பேரரசிற்கு எதிராக தன்னுடன் இணைந்து அவர்களைப் போர் புரியச் செய்தது.பிரித்தானியா வாழ் யூதர்களுடன் பிரித்தானிய அரசு ஒரு சந்திப்பை மேற்கொண்டு அவர்களுக்கு பலஸ்த்தீனத்தில் ஒரு நாடு உருவாக்க செய்து கொண்ட உடன்பாடு பல்ஃபர் தீர்மானம் (Balfour Declaration) எனப்படுகின்றது. பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் Arthur Balfourஇற்கும் பிரித்தானியா வாழ்  யூதர்களின் பிரதிநிதி Walter Rothschildஇற்கும் நடந்த உடன்பாடுதான் பல்ஃபர் பிரகடனம்.  அதேவேளை பிரித்தானிய அரசு உதுமானியப் பேரரசிற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி இருந்த மக்காவில் உள்ள மத குரு ஹுசேய்னிற்கு அரபுக்களுக்கு என ஒரு அரசு பலஸ்தீனத்தில் ஒரு அரசு உருவாக்க உறுதி அளித்து ஒரு கடிதம் எழுதி இருந்தது. ஒரு தரப்பினருக்குக் கொடுத்த வாக்குறுதி மற்றத் தரப்பினருக்குத் தெரியாது. ஆனால் முதலாம் உலகப் போரின் பின்னர் பலஸ்த்தீனப் பிரதேசம் பிரித்தானிய ஆட்சியின் கீழ் கொன்டு வரப்பட்டது. அப்போது அரபு நாடுகளின் எல்லைகளை பிரித்தானியாவும் பிரான்சும் உதுமானியப் பேரரசு போல் மீண்டும் ஒரு இசுலாமியப் பேரரசு உருவாகாமல் இசுலாமியர்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் வகுத்துக் கொண்டன. உதுமானியப் பேரரசின் கீழ் முறுகல்கள் இருந்தாலும் மோதல்கள் இன்றி வாழ்ந்த அரபுக்களும் யூதர்களும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் அடிக்கடி மோதுக் கொண்டனர். பலஸ்த்தீனத்தை அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் என பிரதேச ரீதியாகப் பிரிக்கும் போது மிகச் சிறுபான்மையினராக இருந்த யூதர்களுக்கு அரைவாசிக்கு மேலான நிலப்பரப்பு வழங்க பிரித்தானியா முற்பட்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் பலஸ்த்தீனத்தில் பிரித்தானியப் பேரரசு மக்கள் தொகைக் கணிப்பீடு எடுத்த போது ஏழு இலட்சம் அரபியர்களும் ஐம்பத்து ஆறாயிரம் யூதர்களும் இருந்தனர். தொடர்ந்து பல யூதர்கள் பலஸ்த்தீனத்தில் குடியேற்றப்பட்டனர். நில அபகரிப்புக்கள் தொடர்ந்தன. பிரித்தானியா தனது காலனித்துவ ஆட்சியை இரண்டாம் உலகப் போரின் பின்னர் முடித்து பல நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கிய போது பலஸ்த்தீனத்திற்கு சுதந்திரம் வழங்காமல் அதன் ஆட்சிப் பொறுப்பை ஐநா சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் அரபு யூதப் பிரச்சனையைப் பற்றி ஆராய ஐநாவின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழு (UNSCOP) அமைக்கப்பட்டது. யூதர்களின் வற்புறுத்தலின் பேரில் இதில் எந்த ஒரு அரபு நாட்டுக் குடிமனும் உள்ளடக்கப்படவில்லை.

ஐநா தீர்மானம் 181
பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.

1948 முதல் அரபு இஸ்ரேலியப் போர்

முதலாம் அரபு இஸ்ரேலியப் போர் 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் பலஸ்தீனத்தின் படையெடுத்தன. பலஸ்த்தீன அரசு உருவாக்கப்பட்டது. பின்னர் இஸ்ரேல் சிரியா, எகிப்து, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளுடன் தனித்தனியாகவும் ஒன்றன் பின்னர் ஒன்றாகவும் எல்லைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. .  1964-ம் ஆண்டு பலஸ்த்தீனத்தில் வாழும் அரபு மக்களுக்கு ஒரு தனி அரசு உருவாக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் பலதாக்குதல்களை மேற்கொண்டதால் அதை ஒரு பயங்கரவாத இயக்கம் என இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் பிரகடனப் படுத்தின. 1991-ம் ஆண்டு  மாட்ரிட் நகரில் பலஸ்த்தீனத்திற்கும் இடையில் நடந்த சமாதானப் பேச்சு வார்த்தையின் பின்னர் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என ஒத்துக் கொள்ளப்பட்டது. பதிலுக்கு இஸ்ரேலின் இருப்புரிமையை பலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஏற்றுக் கொண்டது.

ஜோர்தானில் இருந்து விரட்டப்பட்ட ஜஸீர் அரபாத்

1948-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் ஜோர்தானிய நதியின் மேற்குக் கரையை ஜோர்தானிய அரசு தன்னுடன் இணைத்துக் கொண்டது. 1968-ம் ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான் நாட்டிற்குள் புகுந்து அங்குள்ள பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினர் மீது தாக்குதல் நடாத்தின அதில் இரு நூறு போராளிகளைக் கொன்று மேலும் 150 பேரைச் சிறைப்பிடித்தன. ஜோர்தானிச் வாழும் பலஸ்த்தீனியர்களால ஜோர்தானிய மன்னர் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் தந்திரமாக ஜோர்தானிய மன்னர் மனதில் தூவப்பட்டது. தனது ஆட்சிக்கு பலஸ்த்தீன விடுதலை அமைப்பால் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி 1970-ம் 71-ம் ஆண்டுகளில் ஜோர்தானில் ப.வி.இயக்கத்திற்கு எதிராகக் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்து அவர்கள் லெபனானிற்குத் தப்பிச் சென்றனர். 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல் ஆரம்பித்த படியால் அது கறுப்பு செப்டம்பர் என அழைக்கப்படுகின்றது.

1967 எகிப்து இஸ்ரேலியப் போர்
எகிப்து தன் மீது தாக்குதல் நடத்த படை நகர்வுகளை மேற் கொள்வதாகக் கூறி 1967ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி இஸ்ரேல் எகிப்த்தின் மீது அதிரடியான தாக்குதல்களை மேற் கொன்டது. பல எகிப்தியப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எகிப்துடன் இணைந்து ஈராக், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளும் போரிட்டன. இப் போரின் போது சினாய், காஸா ஆகிய பிரதேசங்களை எகிப்த்திடமிருந்தும் கிழக்கு ஜெருசலம் மேற்குக் கரை ஆகியவற்றை ஜோர்தானிடமிருந்தும் கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் பிடுங்கிக் கொண்டது. இப் போரின் போது இஸ்ரேல் தனது வலிமையை உலகிற்கு உணர்த்தியது. பல படைக்கலன்களையும் எதிரிகளிடமிருந்து இஸ்ரேல் பறித்தெடுத்தது. இப்போரின் பின்னர் அரபு நாடுகள் சூடான் தலைநகர் காட்டூமில் ஒன்று கூடி கார்ட்டும் தீரமானத்தை நிறைவேற்றின. அதன்படி இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை, இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை, இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. 1973ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலியர்கள் தமது பண்டிகை ஒன்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் எகிப்தும் சிரியாவும் தமது இழந்த நிலங்களை மீட்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தின. முதலில் சில நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றினாலும் பின்னர் இஸ்ரேலின் பதில் தாக்குதலின் போது முன்பு இருந்ததை விட அதிக பிரதேசங்களை இஸ்ரேலிடம் அவர்கள் இழந்தனர். பின்னர் ஏற்பட்ட ச்மாதான முயற்ச்சிகளில் இஸ்ரேல் தான் கைப்பற்றிய சில பிரதேசங்களை எகிப்திற்கும் சிரியாவிற்கும் விட்டுக் கொடுத்தது.

கார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும். 
1967-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில்   சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலாம மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.

கிள்ளூக் கீரையான லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல்
தேவை ஏற்படும்போதெல்லாம் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது. ஜஸீர் அரபாத் தலைமையிலான பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஜோர்தானில் இருந்து 1971-ம் ஆண்டு விரட்டப்பட்ட பின்னர் லெபனானில் இருந்து செயற்பட்டது. அங்கிருந்து அது பல தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராகச் செய்து கொன்டிருந்தது. பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் லெபானானில் வலுமிக்க ஒரு அமைப்பாக உருவானது. மாரோனைற் கிருத்தவர்களுக்கும் பாலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இடையில் போர் மூண்டது. 1978-ம் ஆண்டு இஸ்ரேல் லெபனானிற்குள் Operation Litani என்னும் பெயரில் ஒரு படைநடவடிக்கையை மேற் கொண்டது. லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல் அங்கு பல பலஸ்த்தீனப் போராளிகளைக் கொன்றது. இஸ்ரேல் மீண்டும் 1982-ம் ஆண்டு லெபனானின் தெற்குப் பிரதேசத்தில் இருந்து வடக்கு நோக்கி பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினரை விரட்டும் நோக்குடன் லெபனான் மீது படை எடுத்தது. தெற்கு லெபனானில் பின்னர் ஹிஸ்புல்லா இயக்கம் உருவானது. 1993-ம் ஆண்டு ஜூலை மாதம்25-ம் திகதி Operation Accountability என்னும் பெயரில் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது. இது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான படை நடவடிக்கையாகும். 1982-ம் ஆண்டு ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேல் லெபனான் மீது மூன்று தடவை படை எடுத்தது. பின்னர் 1993-ம் ஆண்டு Operation Grapes of Wrath என்னும் படை நடவடிக்கையும் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து 2006-ம் ஆண்டும் லெபனான் மீது இஸ்ரேல் படை எடுத்தது.

லெபனானிற்குப் படை எடுத்த சிரியா
லெபனாலில் பல்ஸ்த்தீன இயக்கம் வலுமிக்கதாக இருந்து செயற்பட்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தந்திரமாக பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் லெபனானைக் கைப்பற்றினால் அது சிரியாவிற்கு ஆபத்தாக முடியும் என சிரிய ஆட்சியாளர்களை நம்ப வைத்தனர். இதனால் அப்போதைய சிரிய அதிபர் ஹஃபீஸ் அல் அசாத் 1976இல் லெபனானிற்கு நாற்பதினாயிரம் படையினரை அனுப்பினார். பல பாலஸ்த்தீனிய விடுதலைப் போராளிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இஸ்ரேலின் பேருந்துப் பயணிகள் 35 பேரை பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கொலசெய்தது எனச் சொல்லி  1978-இல் இஸ்ரேலியப் படையினர் Operation Litani என்னும் குறியீட்டுப் பெயருடன் லெபனானை ஆக்கிரமித்து பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினரைக் கொன்று குவித்தனர்.

ஒஸ்லோ உடன்படிக்கை
நோர்வேயின் அனுசரணையுடன் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் சமாதான் உடன்படிக்கை ஒன்றை 1994-ம் ஆண்டு செய்து கொண்டன. அதன்படி பலஸ்த்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் இருந்து வெள்யேறி அதன் நிர்வாகம் புதிதாக உருவாக்கப்பட்ட பலஸ்த்தீன அதிகார சபையிடம் கொடுக்கப்பட்டது. பலஸ்த்தீன அதிகாரசபைக்கான தேர்தலில் யஸீர் அரபாத்தின் ஃபட்டா கட்சியினர் வெற்றி பெற்றனர். அரபாத் பலஸ்த்தீன அதிகார சபையின் தலைவரானார். 2004-ம் ஆண்டு அரபாத் கொல்லப்பட்டார். 2006-ம் ஆண்டு நடந்த பலஸ்த்தீன அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸ் அமைப்பினர் வெற்றி பெற்றனர். பின்னர் ஹமாஸும் ஃபட்டா கட்சியினரும் கூட்டணியாக பலஸ்த்தீன அதிகார சபையை நிர்வகித்தனர். ஆனால் அவர்களிடையே பலத்த மோதல் நடந்தது. பின்னர் ஹமாஸ் அமைப்பினர் காஸா நிலப்பரபபியும் மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றம் இல்லாத சிறிய நிலப்பரப்பை பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினரும் தம்வசமாக்கினர். ஒஸ்லோ உடன்படிக்கையின் படி இஸ்ரேல் மேற்குக் கரையில் இருந்தும் காஸா நிலப்பரப்பில் இருந்தும் வெளியேற வேண்டும். 20 ஆண்டுகளாகியும் அது நடக்க வில்லை. நோர்வேயின் சமாதான முயற்ச்சி இனக் கொலையில் முடியும் என்பது எமக்குத் தெரியும்.

மஹ்மூட் அப்பாஸ்

2001-ம் ஆண்டு அமெரிக்க நியூயோர்க் நகரத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் "பயங்கரவாத" பின்னணியைக் கொண்ட யசீர் அரபாத் முன்னணியில் இருந்து செயற்படக் கூடாது என ஜோர்ஜ் புஷ் நிர்ப்பந்த்தித்தால் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தில் மஹ்மூட் அப்பாஸ் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டார். இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பிரான அப்பாஸ் 2001இன் முன்னரே ஒரு மேற்குலக சார்பு ஆளாகக் கருதப்பட்டவர். 2001இன் பின்னர் இவர் பல விடயங்களில் அரபாத்துடன் முரன்படத் தொடங்கினார். அண்மையில் இவரது மனைவிக்கு இஸ்ரேலில் மருத்துவம் செய்யப்பட்டது. இவரை தீவிரவாத பலஸ்த்தீனியர்கள் ஒரு துரோகியாகக் கருதுகின்றனர். 2013-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான பொருள் வாங்கல், முதலீடு, வர்த்தகம் புறக்கணிப்புப் போராட்டத்தை அப்பாஸ் நிராகரித்தார். 2014 மார்ச் மாதம் அப்பாஸிற்கும் ஹமாஸிற்கும் இடையில் உருவான ஒருமைப்பாட்டை இஸ்ரேலின் நிர்ப்பந்தத்தால் அப்பாஸ் கைவிட்டார்.

Intifada எனப்படும் மக்கள் எழுச்சி
இஸ்ரேலின் நில அபகரிப்பு, அத்து மீறிய குடியேற்றம், அடக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக பலஸ்த்தீனிய மக்கள் தாமாகவே இரு தடைவைகள் மக்கள் பேரெழுச்சிகளை மேற்கொண்டனர். முதலாவது எழுச்சி 1987-ம் ஆண்டில் இருந்து ஆரம்பமானது. பெரும் பார வண்டிகளில் வரும் இஸ்ரேலியப் படையினருக்கு எதிராக சிறுவர், பெண்கள் உட்பட எல்லாத் தரப்பினரும் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு இஸ்ரேலியரைத் தாக்கினார்கள்.1987-ம் ஆண்டு உருவாகிய இந்த முதலாவது மக்கள் பேரெழுச்சி 1991-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. இரண்டாவது மக்கள் பேரெழுச்சி இஸ்ரேலிய தலைமை அமைச்சர் புனித மலைக்கு 2000-ம் ஆண்டு மேற் கொண்ட பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க உருவாகி 2005-ம் ஆண்டுவரை தொடர்ந்தது.
 
சமாதான முயற்ச்சிச் சதி
ஹமாஸ் இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர எகிப்து எடுத்த முயற்ச்சியை ஹமாஸ் அமைப்பினர் தம்மைக் கலந்து ஆலோசிக்காமல் எடுத்த முயற்ச்சி என்று சொல்லி நிராகரித்து விட்டனர். இதைத் தொடர்ந்து எகிப்த்தில் ஹமாஸின் அரசியல் துறைப் பொறுப்பாளர் அபு மார்ஸூக்கும் மஹ்மூட் அப்பாஸும் சந்தித்து உரையாடினர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் கட்டார் நாட்டின் நிதி உதவியுடன் காஸாவில் சமாதானம் கொண்டுவர எகிப்த்திற்குப் பயணமானார். அமெரிக்க அரசுச் செயலர் ஜோன் கெரியும் அங்கு சென்றார். நீண்ட முயற்ச்சிக்குப் பின்னர் ஜூலை 26-ம் திகதி ஒரு 12 மணித்தியால போர் நிறுத்தத்திற்கு இருவரையும் சம்மதிக்கச் செய்தனர்.  

துருக்கியின் வணங்கா மண்
துருக்கியின் மனித உரிமை அமைப்புக்கள் இஸ்ரேலிற்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்றை அனுப்புகின்றது. 2010-ம் ஆண்டும் இப்படி ஒரு கப்பல் துருக்கியில் இருந்து காஸாவை நோக்கிப் போனது. இஸ்ரேலியப் படையினர் அதை இடைமறித்து தமது நாட்டிற்குக் கடத்திச் சென்றனர். இந்த முறை என்ன நடக்குமோ? ஆனால் இந்த முறை துருக்கியப் படையினரும் பாதுகாப்பிற்காகச் செல்வதாகச் சொல்லப்படுகின்றது.

மனிதக் கேடயப் பொய்ப்பரப்புரை
ஒரு மக்கள் மயப் படுத்தப்பட்ட போராட்டத்தில் மக்களும் போராளிகளும் ஒன்றாக இருந்தே செயற்படுவார்கள். அப் போராட்டத்தை அழிக்க முயலும் போது குழந்தைகள் பெருமளவில் கொல்லப்படுவார்கள். இனக்கொலையாளிகளின் கோர முகம் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்களில் அம்பலமாகும் போது. இனக்கொலையாளிகளும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்களும் மனிதக் கேடயம் என்ற பதத்தை தமது பொய்ப்பரப்புரைக்கு பரவலாகப் பாவிப்பார்கள்.  பலஸ்த்தீன விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை  மக்கள் பயிற்றப்பட்ட போராளிகள் இறப்பதை பலஸ்தீனியர்கள் விரும்புவதில்லை. அவர்களைப் பாதுகாக்க பல வகைகளில் முயற்ச்சி செய்வார்கள்.

சிரியாவில் சுனிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்ததால் ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கான மாதாந்த நிதி உதவியில் இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களைக் குறைத்தது. இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்ததால் எகிப்திற்கும் ஹமாஸ் மீது கடும் அதிருப்தி. இதனால் ஹமாஸ் அமைப்பு பலவீனமடைந்திருக்கும் நிலையில் அதற்கு பேரிழப்பை ஏற்படுத்த இஸ்ரேல் முயல்கின்றது. ஹமாஸ் வலுவடையாமல் அதன் மீது அடிக்கடி தாக்குதல் செய்து அதை வலுவற்றதாக்குவது இஸ்ரேல் வழமையாகச் செய்யும் ஒன்று. இப்போது நடக்கும் மோதலை இன்னும் சில நாட்கள் தொடரச் செய்து ஹமாஸ் அமைப்பு உறுப்பினர்களையும் அவர்களிடம் இருக்கும் நீண்ட தூர எறிகணைகளையும் அவர்களின் நிலக்கீழ் சுரங்கப் பாதைகளை அழித்தால் இன்னும் சில ஆண்டுகளுக்கு இஸ்ரேல் தாம் நிம்மதியாக இருக்கலாம் என இஸ்ரேலியர் நினைக்கின்றனர். இதைச் செய்து முடிக்க இஸ்ரேலிற்கு இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம். அதுவரை மேற்கத்திய ஊடகங்களின் பொய்ப்பரப்புரை இஸ்ரேலிற்கு அவசியம் தேவைப்படுகின்றது. காஸா நிலப்பரப்பில் தொடர்ந்து அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது மற்ற அரபு நாட்டு மக்களை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கும் இதனால் அவற்றின் ஆட்சியாளர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படும்.

Tuesday, 22 July 2014

பாக்கிஸ்த்தான் தான் வளர்த்த கடாக்களைப் பலியெடுக்கின்றது

பாக்கிஸ்த்தானியப் படையினர் ஆப்கானிஸ்த்தானின் எல்லைப் பிரதேசமான வஜிரிஸ்த்தானில் முஹம்மது நபியின் வாளின் பெயரான பெரு வெட்டு (Zarb-e-Azb) என்னும் குறியீட்டுப் பெயருடன் ஒரு படை நடவடிக்கையை மேற்கொன்டுள்ளனர். இப்பிரதேசங்களில் இருக்கும் இசுலாமியப் போராளிகளை ஒழித்துக் கட்டும் நோக்குடன் இந்தப் படை நடவடிக்கை நடை பெறுகின்றது. அமெரிக்காவும் ஆப்கானிஸ்த்தானும் பல்லாண்டு காலமாக வேண்டு கோள் விடுத்துக் கொண்டிருக்கும் இந்த வஜிரிஸ்த்தானில் மறைந்து இருந்து செயற்படும் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை வெற்றியளிக்குமா?

பாக்கிஸ்த்தானியப் படையினர் முதலில் பலத்த விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொன்டு விட்டுப் பின்னர் தரை நகர்வை மேற்கொன்டனர். நானூற்றிற்கு மேற்பட்ட போராளிகளைக் கொன்றும் நூற்றிற்கு மேற்பட்ட அவர்களது மறைவிடங்களை அழித்தும் விட்டதாக ஜுலை மாதம் 9ம் திகதி பெருவாள் படை நடவடிக்கைக்குப் பொறுப்பான படையதிகாரி தெரிவித்தார். மிரான்ஸா நகரில் அல் கெய்தாப் போராளிகளும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

2001-ம் ஆண்டிற்கும் 2013-ம் ஆண்டிற்கும் இடையில் பாக்கிஸ்த்தானில் 13,271 தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் ஐம்பதினாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2007-ம் ஆண்டிற்கும் 2013-ம் ஆன்டிற்கும் இடையில் 358 தற்கொடைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இது உலகிலேயே அதிக அளவு எண்ணிக்கையாகும். கடந்த பத்து ஆண்டுகளாக தீவிரவாத நடவடிக்கைக்களால் பாக்கிஸ்த்தானிற்கு 78 பில்லியர் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டுள்ளது.

பாக்கிஸ்த்தானில் பலதரப்பட்ட தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. தலிபான், அல் கெய்தா, ஹக்கானி, லக்சர் இ தொய்பா ஆகியவை முக்கியமான அமைப்புக்களாகும். சில தீவிரவாத அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானிய அரச படைகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவையாக இருக்கின்றன. பாக்கிஸ்த்தானிய அரச படைகளிடமிருந்து நிதி, படைக்கலன், பயிற்ச்சி ஆகியவை பெறும் போராளிக்குழுக்களும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் அமெரிக்கப்படைகளுக்கு எதிராகச் செயற்படும் அமைப்புக்களிற்கு பாக்கிஸ்த்தானில் பலதரப்பினரிடையும் ஆதரவு உண்டு. ஆனால் சீனாவின் உய்குர் இனப் போராளிகள், உஸ்பெக்கிஸ்த்தன் அரசுக்கு எதிராகப் போராடும் போராளிகள், இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் போராளிகள் எனப் பலதரப்பினர் பாக்கிஸ்த்தானில் செயற்படுகின்றனர். இதனால் எல்லா அயல் நாடுகளின் நெருக்கத்திற்கும் பாக்கிஸ்த்தான் உள்ளாகியுள்ளது.  கனடியக் குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர் பாக்கிஸ்த்தானிய அரசு பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்ப்பதாக பகிரங்கமாகவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சுமத்தியிருந்தார். மேலும் அவர் பாக்கிஸ்த்தனின் குடிசார் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாமல் படையினர்தான் மேற்கொள்கின்றார்கள் என்றதுடன் எல்லா நாடுகளும் இணைந்து பாக்கிஸ்த்தானிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றும் தெரிவித்தார். இதுவே பாக்கிஸ்த்தானிற்கான அபாயச் சங்கானது.

அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவிற்கும் பாக்கிஸ்த்தானில் உள்ள தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு 1954-ம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்டது. இந்தியா கூட்டுச் சேரக் கொள்கை என்னும் பெயரில் சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமானதாலலதைச் சமாளிக்க பாக்கிஸ்த்தான் அமெரிக்காவுடன் அப்போது இணைந்து கொண்டது. பின்னர் 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு நிறையப் படைக்கலன்களைக் கொடுத்து உதவியது. 1989-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு நெருக்கமடைந்தது. அமெரிக்கா பல பில்லியன் கணக்கில் செலவழித்து பாக்கிஸ்த்தான் உளவுத் துறையுடன் இணைந்து ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்துள்ள சோவியத் படைகளுக்கு எதிராக மதவாதப் போராளிகளை பயிற்றுவித்தது. அரபு ஆப்கானிஸ்த்தானியர் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட போராளி அமைப்பில் பின் லாடனும் ஒருவராவர். பின் லாடனுக்கு அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ பயிற்ச்சி வழங்கியதாக நம்ப்பப்படுகின்றது.

சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியபின்னர் சவுதி அரேபிய செல்வந்தரும் பொறியியலாளருமான பில் லாடனும், எகிப்தில் வாழ்நாள் முழுக்கப் போராளியாக இருந்த ஜவாகிரி, பாக்கிஸ்த்தானியக் கல்விமானுமாகிய ஃப்டல் ஆகியோர் இணைந்து அல் கெய்தா அமைப்பை 1988-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி உருவாக்கினர்கள். இவர்கள் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்களாக மாறினார்கள். இவர்களின் அமெரிக்க எதிர்ப்பின் உச்சக் கட்டமாக 2001 செப்டெம்பர் 11-ம் திகதி நிகழ்ந்த அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது.

1998-ம் ஆண்டு பாக்கிஸ்த்தான் அணுக்குண்டுப் பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு மிக மோசமடைந்தது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வந்த எல்லா உதவிகளும் நிறுத்தப்பட்டன. 2001-ம் ஆண்டு அமெரிக்கா பய்ங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்த்தானையும் இணைக்க மீண்டும் அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் தம் உறவை மேம்படுத்தி மீண்டும் பாக்கிஸ்த்தானுக்கான அமெரிக்க உதவி வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்-பாக் கேந்திரோபாயம் ஒன்றை வகுத்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையிலும் இதற்கு என ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் மூல, இசுலாமியத் தீவிர வாதத்தை ஒழிக்கலாம் என அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு 7.5 பில்லியன் டொலர்கள் உதவியை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது. 2010-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாக்கிஸ்த்தானிய ஊடகர் சலீம் சஹ்ஜாட் பாக்கிஸ்த்தானிய உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ இன் தலைமைச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டார்.  சலீம் சஹ்ஜாட் Asia Times Onlineஇல் பாக் உளவுத் துறையினருக்கும் தீவிர வாத அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மே மாதம்அவர் கடத்தப்பட்டு கொடூரமாக் கொல்லப்பட்டார். அவர் மீது விழுந்த அடிகள் அவர் விலா எழும்புகளை முறித்து ஈரலைக் கிழித்திருந்தன. அமெரிக்க கடற்படையின் அட்மிரல் மைக் முல்லன்  பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் உளவுத் துறைமீது வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் நாடுகளுக்கிடையிலான வரம்புகளை மீறி குற்றம் சுமத்தியது பாக் அரசை ஆத்திரமடையச் செய்துள்ளது. அமெரிக்க அட்மிரல் அத்துடன் நிற்கவில்லை இந்த மாதிரியான கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன என்றார். இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மோசமடைந்தது.  பின் லாடனைக் கொல்ல வந்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அதிலிருந்து பாக் படையினர் மற்றும் உளவுத் துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்இடையிலான தொடர்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. அவற்றின் அடிப்படையில் பாக்கிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி வந்தது.

ஹிலரி கிளிண்டனின் பாக்கிஸ்தானியப் பயணம்
2011 மே 2-ம் திகதி பின் லாடன் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குள் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டன் பாக்கிஸ்தானிற்கு  சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளின் பட்டியல் பாக்கிஸ்தானிடம் ஹிலரியால் கையளிக்கப் பட்டது. பின் லாடனின் உதவியாளர் ஐமன் அல் ஜவகிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தளபதி ஒமர் சிராஜ் ஹக்கானி, லிபிய அல் கெய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் அப்பட்டியலில் இருந்தனர். இப்பட்டியல் கையளிக்கப் பட்டதன் நோக்கம் இவர்களை நீ பிடிக்கிறாயா அல்லது நான் பிடிக்கட்டுமா என்பதுதான் என்று சொல்லப்பட்டது. அமெரிக்காவின் பாக்கிஸ்த்தானுக்கான இரண்டு பில்லியன் டொலர் உதவி பின்னர் இடை நிறுத்தப் பட்டது. பாக்கிஸ்த்தானின் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கப் படையினர் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பாக்கிஸ்த்தனிற்கு அமெரிக்கா கொடுக்கும் கைக்கூலியே பலமில்லியன் டொலர்கள் உதவியாக இருந்தது. அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்தினால் தாம் தமது படைகளை ஆப்க்கனிஸ்த்தான் எல்லைகளில் இருந்து விலக்க வேண்டி வரும் என்று பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார் அமெரிக்காவை 12-07-2011இலன்று மிரட்டினார். ஆனால் பாக் பாதுகாப்புத் துறை அமைச்சரிலும் பார்க்க படைத்துறைத் தளபதிகள் அதிக அதிகாரம் உள்ளவர்கள்.  2011 ஜூலை 11-ம் திகதி பாக்கிஸ்த்தானுக்குள் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் பல தீவிரவாதிகளைக் கொன்றன. இவை ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள அமெரிக்கப் படைகளால் ஏவப்பட்டிருந்திருக்கலாம்.

எல்லாத் தீவிரவாதிகளுக்கும் எதிரான கொள்கை வெற்றி தருமா?
பாக்கிஸ்த்தான் அரசையும் அதன் படையினரையும் பொறுத்த வரை அங்குள்ள தீவிரவாத அமைப்புக்கள் பல தேவையானவையாகவே இருக்கின்றன. பாக்கிஸ்த்தானின் வெளியுறவில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா உட்படப் பல தரப்பில் இருந்தும் நெருக்குதல்கள் வருவதால் பாக்கிஸ்த்தான் தனது கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதாக வெளிப்படுத்துகிறது. பாக்கிஸ்த்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி அமைப்பு உட்பட எல்லாத் தீவிரவாத அமைப்புக்களிற்கும் எதிராக படைநடவடிக்கை எடுப்பதாகப் பாக்கிஸ்த்தான் சொல்கின்றது. பாக் படையினரின் நடவடிக்கைகளை அமெரிக்கப் படைநிபுணர்கள் நெறிப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்றது. ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தானில் தாக்குதல் நடாத்துவதில்லை. ஹக்கானி அமைப்பினர் பாக் அரசுக்கும் மற்ற தீவிரவாத அமைப்புக்களுக்கும் அதிலும் முக்கியமாக தலிபான் அமைப்பினருக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலமாகச் செயற்படுகின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இந்தியர்களுக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடாத்தியது. அல் கெய்தா இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுவதில்லை. லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுதையே தலையாய பணியாய்க் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தான் படையினர் போதிய முன்னறிவித்தல் கொடுத்துவிட்டே தமது தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். வடக்கு வஜிரிஸ்த்தான் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்பதற்காக முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் பல போராளிகள் தமது தாடிகளை மழித்து விட்டுப் பொதுமக்களோடு தாமும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். வஜிரிஸ்த்தான் பகுதியில் அணைக்காலங்களாக சலூன்காரர்களுக்கு நல்ல வருமானம் என்கின்றது பாக்கிஸ்த்தானிய ஊடகம் ஒன்று. பாராபட்சமின்றி எல்லா அமைப்புக்களையும் ஒழிக்கப் போவதாக பாக்கிஸ்த்தானியப் படைகள் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. ஹக்கானி அமைப்பின் தலைவருக்கு ஏற்கனவே பாக் படையினர் தமது நடவடிக்கை பற்றித் தெரிவித்து விட்டனர் எனச் சொல்லப்படுகின்றது. 2009-ம் ஆண்டும் பாக் படைகள் வஜிரிஸ்த்தானில் இருந்த போராளிகளுக்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டன. அது தீவிரவாதத்தை ஒழிக்க வில்லை. அது போலவா இதுவும்?

Monday, 21 July 2014

விழுந்தது விமானம்! விழுத்தியது யார்? வழிமாறிப் போனது ஏன்?

அண்மைக் காலங்களாக உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எடுப்பதற்கு பல ஆண்டுகளாக பல முயற்ச்சிகள் எடுத்துத் தோல்வியடைந்துள்ளன. ஆனால் தொடங்கி ஓராண்டு கூடப் பூர்த்தி செய்யாத உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்களிடம் எப்படி விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தன? Malaysia Airlines Flight 17 விமானம் விழுந்த இடத்திற்கு பன்னாட்டு விசாரணைக் குழுவினர் செல்லவிடாமல் இரசிய சார்பினராகக் கருதப்படும் உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்கள் தடுத்தது ஏன்?

Malaysia Airlines Flight 17 மலேசிய நேரப்படி 2014 ஜூலை 17-ம் திகதி மாலை 6-15 மணிக்கு நெதர்லாந்தின் அம்ஸ்ரடம் விமான நிலையத்தில் இருந்து 283 பயணிகளுடனும் 15 பணியாளர்களுடனும் புறப்படுகின்றது.  நான்கு மணித்தியாலங்கள் கழித்து அந்த விமானம் உக்ரேனின் இரசியாவிற்கு அண்மித்த எல்லையில் பறந்து கொண்டிருக்கும் போது உக்ரேனிய விமானக் கட்டுப்பாட்டகம் Malaysia Airlines Flight 17உடனான தொடர்புகளை இழக்கின்றது. இத் தொடர்புத் துண்டிப்பு மலேசிய விமானச் சேவைக்கு அறிவிக்கப் படுகின்றது. இரவு 11-40இற்கு Malaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக  இரசியத் தலைநகர் மாஸ்க்கோவில் இருந்து  செயற்படும் Interfax செய்தி முகவரகம் செய்தி வெளியிடுகின்றது

Malaysia Airlines Flight 17விமானத்தை யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது தொடர்பான சர்ச்சை விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட மறுநாளே ஆரம்பித்து விட்டது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியத்தில் இரசியர்களே அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் தமக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை Self-defence forces of the Donetsk People’s Republic என அழைப்பார்கள். இவர்களுக்கு இரசிய அரசின் ஆதரவு உண்டு. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியதுடன் இணைந்து செயற்படாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என உக்ரேனை இரசியா நிர்பந்தித்து வருகின்றது. இதனால் உக்ரேனில் வாழும் இரசியர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். ஏற்கனவே உக்ரேனின் ஒரு பிராந்தியமான கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. Malaysia Airlines Flight 17விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியம் உக்ரேன் அரசுக்கு  எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே உக்ரேனிய அரச படையினரின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி உள்ளனர். உக்ரேனிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய அரச படைகள் எந்த ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வீசியதில்லை.

உக்ரேன் உள்நாட்டுப் போர் பற்றி மேலும் ஆறிய கீழே சொடுக்கவும்:
1- உக்ரேன் தேர்தல்
2. உக்ரேன் அதிபர்

விமானம் சுட்டுவீழ்த்தப் பட்ட இடத்திற்கு முதலில் எவரையும் அனுமதிக்காத இரசியக் கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து இறந்த உடல்கலையும் பல தடயங்களையும் அப்புறப்படுத்தினர். விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கையளிப்பதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. அது இரசியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் பரவிய பின்னர் அது விசாரிக்க வந்தவர்களிடம் கையளிக்கப்பட்டது. விமானம் சுட்டு வீழ்த்தியது தொடர்பான ஒரு விசாரணைக்காக உக்ரேனிய அரச படையினருக்கும் Self-defence forces of the Donetsk People’s Republic படைய்னருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, ஆனால் அது நடைபெறவில்லை. பன்னாட்டு விசாரணைக் குழு ஒன்றிற்கு உக்ரேனில் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் இருக்கும் பிரதேசத்தில் விமானம் விழுந்த இடத்தில் கட்டுப்பாடற்ற முறையில் விசாரணை செய்ய அனுமதிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
British Airways உக்ரேன் ஊடாகப் பறப்பதைத் தவிர்த்து வருகின்றது.

மலேசியன் விமானங்கள் உக்ரேனூடாகப் பறப்பதை ஏன் தவிர்க்கவில்லை?

வழிதவறிப் போனது ஏன்?
Malaysia Airlines Flight 17 விமானம் உக்ரேனின் தென் பகுதியூடாகப் பறப்பதாக இருந்தது. ஆனால் அது ஏன் வழிமாறி உக்ரேனின் வட கிழக்குப் பகுதிக்கு மேலால் பறந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. சில வல்லரசு நாடுகள் பயணிகள் விமானங்களில் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தி அந்த விமானங்களை வழிதவறிச் செல்வது போல் பிரச்சனைக்கு உரிய அல்லது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுக்கு மேலாகப் பறக்கச் செய்வார்கள். Malaysia Airlines Flight 17 விமானத்திற்கும் இப்படி நடந்ததா? ஆனால் ஐரோப்பிய விமான ஓட்டிகளின் ஒன்றியத்தின் (European Cockpit Association) தலைவர் தான் இதே காலப்பகுதிகளில் உக்ரேனூடாகப் பறக்கும் போது மோசமான கால நிலை காரணமாக தானும் KLM விமானங்களை வழமையான பாதையில் இருந்து வடக்குப் பக்கமாக விலகிப் பறந்ததுண்டு என்கின்றார்.

காட்டிக் கொடுக்கும் சமூக வலைத்தளப் பதிவு
Malaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் பின்னர் இரசியாவின் ஆதரவுடன் செயற்படும் உக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்காரர்களின் தலைவர்களில் ஒருவர் தாம் உக்ரேனிய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகப் ஒரு பதிவு இட்டிருந்தார். பின்னர் அந்தப் பதிவை அழித்து விட்டார்.

காட்டிக் கொடுக்கும் படங்கள்
மலேசிய விமானத்தைச் சுட்டதாகக் கருதப்படும் Buk SA-11 launcher என்னும் நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவுகணைகளை ஏவும் வண்டிகள் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் பகுதியின் நின்ற படங்களும் பின்னர் அவை இரசியாவிற்கு மாற்றப்பட்டு நிற்கும் படங்களும் வெளிவந்துள்ளன.

உக்ரேனிய அரசின் ஒலிப்பதிவு
உக்ரேனிய அரசுக்கு எதிராகச் செயற்படும் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் உரையாடல்களை தாம் இடைமறித்து ஒட்டுக் கேட்ட போது அவர்கள் ஒரு பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரையாடியதாக உக்ரேனிய அரசு சொல்கின்றது. உக்ரேனிய அரசு வெளிவிட்ட உரையாடல் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கின்றது:
"We have just shot down a plane. It's 100 percent a passenger aircraft It's totally f****d. The pieces are falling right into yards. There are no weapons on the site. Absolutely nothing. Civilian items, medicinal stuff, towels, toilet paper."

செய்மதிப்படங்கள்
ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செய்மதிப் படங்களில் விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து தரையில் இருந்து விண்ணை நோக்கி ஏவுகணைகள் புகை கக்கிக் கொண்டு பாய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரிக்கப் போனவர்கள் அமெரிக்கக் கைப்பொம்மைகளாம்.
உக்ரேனில் மலேசிய விமானம் விழுந்த பகுதிக்கு விசாரிக்கச் சென்ற  Organization for Security and Cooperation in Europe (OSCE) அமைப்பினர் அமெர்க்காவின் கைப்பொம்மைகள் என்கின்றனர் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள்.

இரசியாவிற்குப் பின்னடைவு
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டமை உக்ரேனை தன்வசமாக்கும் இரசியாவின் முயற்ச்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்கின்றன மேற்கு நாட்டு ஊடகங்கள். 1983-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தென் கொரியாவின் பயணிகள் விமானத்தைச் சுட்டு விழுத்திய பின்னர் சோவியத் ஒன்றியம் வலுவிழந்து வீழ்ச்சியடைந்தது. அது போல இப்போது இரசியாவிற்கும் நடக்கும் என்கின்றன சில ஊடகங்கள். தென் கொரிய Korean Airlines Boeing 747  விமானத்தைச் சட்டு விழ்த்தியதை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மிருகத்தனமான செயல் எனக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தால் கண்டித்தார். "It was an act of barbarism, born of a society which wantonly disregards individual rights and value of human life and seeks constantly to expand and dominate other nations." என்பது அவர் பாவித்த வார்த்தை. அப்போது சோவியத் ஒன்றியம் தாம் அனுப்பிய சமிக்ஞைகளை தென் கொரிய விமானம் புறக்கணித்ததாகச் சொன்னது. பின்னர் அது பொய் என நிரூபணமானது.

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை. 
ஏற்கனவே கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் இரசியாவிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதராத் தடையை விதித்திருந்தன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டததைத் தொடர்ந்து மேலும் பொருளாதாரத் த்டைகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன. இனிவரும் பொருளாதாரத் தடை ஆசியான் நாடுகளையும் இணைத்துக் கொண்டு செய்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு.  தற்போது உலகிற்குத் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதாரத் தடைகள் உகந்தவை அல்ல.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...