Wednesday 6 August 2014

ஹமாஸை அழிக்க முடியுமா?

அடிக்கடி எல்லை தாண்டி எல்லை மீறிய பயங்கரவாதச் செயலில் இஸ்ரேல் ஈடுபடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேல் தன் மீது செய்யப்படும் தாக்குதலுக்கு அளவிற்கு மிஞ்சிய பதிலடிகள் கொடுக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இஸ்ரேலிற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. இஸ்ரேலியர்களும் வாழ வேண்டும் எனச் சொல்பவர்களும் உண்டு.

கண்டனங்கள் சேகரிக்கும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் எறிகணைகளையும் சுரங்கங்களையும் அழிக்க காஸா நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு இரு அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஒன்று சுரங்கங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் அதிகமாக இருந்தன. இரண்டாவது சுரங்கங்களின் கட்டுமானத் தரம் எதிர்பார்த்ததிலும் மேம்பட்டவையாக இருந்தன. இஸ்ரேல் செய்த அளவிற்கு மீறிய பதிலடியால் குழந்தைகள் கொல்லப்பட்ட படங்களும் ஐக்கிய நாடுகள் வீடிழந்தவர்களுக்கு என பாடசாலைகளில் அமைத்த தற்காலிக வதிவிடங்களைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்காமல் குண்டுகள் வீசி அழிக்கின்றது என்ற உண்மையும் உலகெங்கும் இஸ்ரேலிற்கு எதிராக கடுமையான கண்டனங்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் 72 மணித்தியாலப் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒத்துக் கொண்டன. இதை நீங்கல் வாசிக்கும் போது போர் நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் மோதல்கல் ஆரம்பிக்கப்படிருக்கலாம்.  எகிப்தின் அனுசரணையுடன் இந்தப் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தைக்கு இஸ்ரேலியப் பிரதிநிதிகள் எவரும் எகிப்த்திற்குச் செல்லவில்லை. எகிப்தே எல்லாவற்றையும் ஹமாஸுடனும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடனும் பேசி முடிவெடுத்தது. எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வுகம் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது.

இஸ்ரேல் முந்திக் கொண்டு செய்த தாக்குதல்
இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் யூதர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்கு எதிராக ஒரு பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தது என இஸ்ரேலுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்ததாம். அதன்படி ஹமாஸ் போராளிகள் நிலத்தின் கிழ்ச் சுரங்கங்கள் ஊடாக ஊடுருவி இஸ்ரேலியப் படையினர் மீதும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீதும், குடிமக்களுக்கான வழங்கற் கட்டுமானங்கள் மீதும் கடும் தாக்குதல்களைச் செய்யத் திட்டமிட்டிருந்தனராம். அதை முன்கூட்டியே முறியடிக்கத்தான் இஸ்ரேல் இப்போது ஹமாஸ் மீது தாக்குதல் செய்ததாம். அத்துடன் தனது மேம்படுத்தப் பட்ட இரும்புக்கூரை என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறமையையும் சோதித்துப் பார்த்துக் கொண்டது இஸ்ரேல். ஜூலை மாதம் 7-ம் திகதி  ஆரம்பித்த மோதலில் ஹமாஸ் 3200 எறிகணைகளைப் பாவித்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹமாஸின் எறிகணைகளை இஸ்ரேல் தரையில் வைத்தே அழித்தது. ஹமாஸின் படை வலுவில் பாதி அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுகின்றது. ஹமாஸை அழிக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்கு மத்திக கிழக்குப் பிரச்சனையின் சரித்திரப் பின்னணியைப் பார்க்க வேண்டும்.

தீர்மானம் 181
அரபு நாட்டினர் எவரையும் உறுப்பினராகக் கொள்ளாத "பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின்" (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது.  அப்போது சியோனிசவாதிகள்  யூதர்களிற்கு என ஒரு சிறு நிலப்பரப்பில் ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என உறுதியாக நம்பினர். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.


யூதர்கள்
இஸ்ரேலியர்களை அவர்களின் இன அடையாளத்தை வைத்து யூதர்கள் என்றும் மொழியை வைத்து ஹீப்ருக்கள் என்றும் அழைப்பர். இஸ்ரேலியர்கள் தாம் ரோமர்களிடம் இழந்த அரசை மீள அமைக்க வேண்டும் என்ற நீண்டகனவை உண்மையாக்கும் யூதத் தேசியவாதத்தை சியோனிசம் என்பர். சியோனிசவாதிகள் ஐநாவின் தீர்மானத்தை ஒட்டி தமக்கு என ஒரு நாட்டை பலஸ்த்தீனத்தில் உருவாக்கினார்கள். இதை அரபுக்கள் ஏற்கவில்லை.  சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளும் பலஸ்த்தீன தேசியவாத அமைப்புக்களான புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் இணைந்து பலஸ்த்தீனப் பிரதேசத்தின் மீது படை எடுத்தன. இதனால் பலஸ்த்தீனப் பிரதேசம் இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பலஸ்த்தீனத் தேசியவாதம் பின்னர் தீவிரமடைந்தது. 1964-ம் ஆண்டு பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

எல்லை இல்லா எல்லை தாண்டுதல்                                                                                    பலஸ்த்தீனியத் தேசியவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தேசிய எல்லைகளைத் தாண்டி பல தாக்குதல்களை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. முதலாவது எல்லை தாண்டிய தாக்குதல் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஜோர்தானில் 1968-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 1978, 1982, 1992, 1993, 2006 ஆகிய ஆண்டுகளில்  இஸ்ரேலியப் படைகள் எல்லை தாண்டி லெபனானிற்குள் சென்று பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டது. அது மட்டுமல்ல ஈரான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகள் யூரேனியப் பதப்படுத்தல் செய்ய ஆரம்பிக்கும் போதெல்லாம் இஸ்ரேலிய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தின. சிரிய உள் நாட்டுப் போர் 2011-ம் ஆண்டு ஆரம்பித்த பின்னர் இரு தடவைகளுக்கு மேல் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானிற்குள் படைக்கலன்களை எடுத்துச் செல்வதைத் தடுத்தனர்.

கார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும்.
                      இஸ்ரேலுடன் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரில் பலத்த தோல்வியை அரபு நாடுகள் சந்தித்தன. 1967 ஓகஸ்ட் மாத இறுதியில்   சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலாம மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.

ஹமாஸின் தோற்றம்                                                                                                                    பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் தீவிரத் தன்மை குறையத் தொடங்கிய சூழ்நிலையில், இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ச்சியாக நில அபகரிப்பும் யூதக் குடியேற்றமும் செய்து கொண்டிருக்கும் சூழலில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பலஸ்த்தீனியர் இண்டிஃபாடா என்னும் மக்கள் பேரெழுச்சியை நடத்தத் தொடங்கிய வேளையில் ஹமாஸ் அமைப்பு 1987-ம் ஆண்டு உருவானது. வன்முறை கூடாது படைக்கலன் ஏந்தக் கூடாது என்ற கொள்கைகளையுடையது  இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு இஸ்லாமிய நிலையம் என்னும் பெயரில் இருந்து காஸாவிலும் மேற்குக் கரையிலும் 1973-ம் ஆண்டில் இருந்து சமூக நலப்பணி செய்து கொண்டிருந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கததைப் வலுவிழக்கைச் செய்ய சகோதரத்துவ அமைப்பின் இஸ்லாமிய நிலையத்திற்கு இஸ்ரேல் சாதகமாக நடந்தத கொண்டது. இதில் முக்கிய மாகச் செயற்பட்டவர் ஷேக் அஹ்மட் யஸ்ஸின். அவரே 1987இல் ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பை ஆரம்பித்தார். பலஸ்த்தீன தேசியவாதம், இசுலாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவை ஹமாஸ் அமைப்பின் கொள்கைகளாகின. ஒரு புறம் இஸ்ரேலியப் படையினருக்கும் பலஸ்த்தீனியர்களின் நிலங்களை அபகரித்துக் குடியேறிய யூதர்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதலும் மறுபுறம் சமூக நலப்பணிகள் பலவற்றைச் சிறப்பாகச் செய்வதும் ஹாமாஸ் அமைப்பின் தலையாய பணிகளாக இன்றுவரை இருக்கின்றன. ஹமாஸ் ஒரு சுனி முசுலிம் அமைப்பு எனப்படுகின்றது.  1983-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் தமது முதலாவது தற்கொடைத் தாக்குதலை மேற்கொண்டனர்.

ஹமாஸின் தலைமை                                                                                                                       ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு தலைவர் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. அது ஷுரா சபை என்னும் கூட்டுத் தலைமையால் இயக்கப்படுகின்றது. 2004-ம் ஆண்டில் இருந்து ஹமாஸில் முன்னணித் தலைவராக இருப்பவர் கட்டார் நாட்டில் இருந்து செயற்படும் கலீட் மேஷால் என்பவராகும். ஹமாஸின் படைத் துறைக்குப் பொறுப்பாக அஹமட் ஜபாரி இருந்தார். இவர் 2012-ம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் யார் படைத்துறைக்குப் பொறுப்பானவர் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.  ஹமாஸ் காஸா நிலப்பரப்பில் நடத்தும் அரசின் தலைமை அமைச்சராக இஸ்மயில் ஹனியா செயற்படுகின்றார்.இஸ்ரேலை ஒழித்துக் கட்டுதல், பலஸ்தீனிய நிலத்தில் ஒரு இசுலாமிய அரசை நிறுவுதல் ஆகியவை ஹமாஸின் முக்கிய கொள்கைகளாகும்.

ஹமாஸின் படைவலு                                                                                                                       ஹமாஸ் அமைப்பினரிடம் குறுகிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய எறிகணைகள் பல இருக்கின்றன. ஈரானிடம் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இந்த எறிகணைகளைப் பெற்றனர். அத்துடன் தாகாஸா நிலப்பரப்பில் நிலத்தின் கிழ் மிக பல மிக நீண்ட சுரங்கப் பாதை வலைப்பின்னல் இருக்கின்றன. இதனால் அவர்கள் தமது படைக்கலன்களையும் வியாபாரப் பொருட்களையும் பாதுகாப்பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பலமாக இருக்கும். இதனால் இஸ்ரேலியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என நினைக்கின்றனர். இவற்றை அழைக்கும் நோக்குடன் இஸ்ரேலியப் படையினர் டாங்கிகளுடனும் புல்டோசர்களுடனும் பார ஊர்திகளுடனும் காஸா நிலப்பரப்பினுள் தரை நகர்வை தற்போது மேற் கொள்கின்றனர்.

ஹமாஸின் பொருளாதாராம்.                                                                                                   நிலக் கீழ் சுரங்கப் பாதையூடாகக் கடத்தும் பெருட்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் ஆண்டு ஒன்றிற்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுகின்றனர். 2005-ம் ஆண்டு பலஸ்த்தீன அதிகார சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் அந்த சபைக்கான நிதியும் ஹமாஸின் கைக்கு வந்தன. ஆனால் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி  உதவிகள் ஹமாஸின் கைக்களுக்குப் போவதில்லை. பல வெளிநாடுகளில் வாழும் பலஸ்த்தீனியர்கள் அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஹமாஸிற்கு நிதி உதவி செய்கின்றனர். ஈரானிய அரசும் ஹமாஸிற்கு பெரும் நிதி உதவி செய்து வந்தது. 2011-ம் ஆண்டு உருவான சிரிய உள்நாட்டுப் போரில் ஹமாஸ் சுனி முசுலிம் கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் சியா மு்சுலிம் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்ட படியால் ஈரான் ஹமாஸிற்கான தனது நிதி உதவியை நிறுத்திக் கொண்டது. ஹமாஸ் அமைப்பு அது உருவான நாளில் இருந்து 400 இஸ்ரேலியர்களையும் 25 அமெரிக்கர்களையும் கொன்றுள்ளது. இதுவரை இஸ்ரேல் மீது 8,000 எறிகணைகளை வீசியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தாமே தயாரிக்கும் கஸ்ஸாம் ஏவுகணைகள் 12மைல்கள் தூரம் பாயக் கூடியவை, எம்-75 ஏவுகணைகள் 47 மைல்கள் பாயக்கூடியவை, சிரியாவில் தயாரிக்கப்பட்ட M-302 ஏவுகணைகள் 93 மைல்கள் தூரம் பாயக் கூடியவை.ஈரானில் இருந்து அனுப்பப்படும் ஏவுகணைகள் முதலில் சிரியா போய்ச் சேரும். சிரியாவிலிருந்து ஏவுகணைகள் விமான மூலம் சூடானுக்கு அனுப்பப்பட்டு சூடானில் இருந்து எகிப்த்தின் கட்டுப்பாட்டில் உள்ள சினாய் பாலைவனத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஹமாஸ் அமைப்பினர் நிலக்கீழ்ச் சுரங்கங்கள் மூலம் காஸாவிற்கு எடுத்துச் செல்வர். காஸா நிலப்பரப்பு ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது பல ஆண்டுகளாக இஸ்ரேலின் சுற்றி வளைப்புக்குள் வெளியுலகத் தொடர்பின்றியே இருக்கின்றது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சி அமைத்தவுடன் ஹமாஸ் அமைப்பினர் அவர்களுடன் அதிக உறவும் உரிமையும் பாராட்டிக் கொண்டனர். ஆனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் ஒன்றின் மூலம் அல் சிசி ஆட்சிக்கு வந்த பின்னர் ஹமாஸ் அமைப்பின் 1600 சுரங்கங்களை எகிப்தியப் படைகள் அழித்தனர். அல் சிசியின் ஆட்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டுகின்றது.
ஹமாஸின் முடிவின் ஆரம்பமா?
                                                                                        ஹமாஸின்பலவீனங்கள்:                                                                                                                            
  1. 1. ஈரான், சிரியா, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றுடன் அரபு வசந்தத்தின் பின் ஏற்பட்ட முறுகல்.                                                                                                                 
  2. எகிப்தின் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடை செய்யப்பட்டமை.             
  3. எகிப்த்தில் சாதகமற்ற ஆட்சி ஏற்பட்டமை.                                                                     
  4. அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து ஆகியவை ஹமாஸிற்கு எதிராகத் திரும்பியமை.                                                                                                                                   
  5.  மூன்று புறம் நிலமும் ஒரு புறம் கடலையும் கொண்ட காஸாவில் இருந்து செயற்படும் ஹமாஸிடம் ஒரு கடற்படை இல்லை.    
 இஸ்ரேலிய வலதுசாரிகள் ஹமாஸை ஒழித்துக் கட்டும்வரை இஸ்ரேலியப் படைகள் காஸாவில் தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தயாஹு இஸ்ரேலியக் குடிமக்கள் ஹமாஸின் ஏவுகணைகளுக்குப் பயந்து ஒரு நிமிடம் தன்னும் பதுங்கு குழிகளுக்குள் ஒளித்திருக்கக் கூடாது எனச் சூளுரைத்துள்ளார். அதற்கு ஏற்ப தாம் ஹமாஸின் ஏவுகணைகளையும் நிலக் கீழ் சுரங்கப் பாதைகளையும் அழிக்க வேண்டும் என்கின்றார் நெத்தன்யாஹூ. சிரிய உள்நாட்டுப் போரின் பின்னர் ஹமாஸிற்கும் ஈரானிற்கும் இடையில் முறுகல் நிலை உருவாகி இருந்தாலும் இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஈரான் தொடர்ச்சியாக ஹமாஸுடன் தொடர்பில் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஒழித்துக் கட்டுப்படுவதை ஈரானும் விரும்பவில்லை. லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் விரும்பவில்லை. ஹமாஸ் ஒழித்துக் கட்டப்படுவதை எந்த ஒரு அரபுக் குடிமகனும் விரும்பவில்லை. ஹமாஸிற்கான ஆதரவு இப்போது கட்டார் நாட்டில் இருந்தும் சவுதி அரேபியச் செல்வந்தர்களிடம் இருந்தும் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். துருக்கியும் ஹமாஸிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஹமாஸையும் அதன் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் ஒழித்துக் கட்ட நீண்ட காலம் காஸாவில் இஸ்ரேலியப் படைகள் தங்கியிருந்தால் அவை பலத்த உயிரிழப்புக்களைச் சந்திர்க்க நேரிடும். ஹமாஸும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு இஸ்ரேலின் மீது புதியவகையான தாக்குதல்களைத் தொடுக்கலாம். இஸ்ரேலியர்கள் தமது படைத்துறைக்கு பெரிய ஆளணி இழப்புக்கள் ஏற்பதுவதை விரும்புவதில்லை. தற்போது நடக்கும் போரின் போது ஹமாஸ் முன்று வகைகளில் இஸ்ரேலியப் படையினரையும் உலகத்தையும் ஆச்சரியப் பட வைத்த்து. முதலாவது இஸ்ரேலியக் கடற்படையினர் விமானப்படையின் ஆதரவுடன் மத்திய தரைக் கடலூடாக செய்ய முயன்ற ஒரு கடல்வழித் தரையிறக்கத்தை முறியடித்தது. இரண்டாவதாக இரசியத் தயாரிப்பு தாங்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பாவித்தது. மூன்றாவதாக ஒரு ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் செய்ய முயன்றது. போர் முனையில் உலகிலேயே முதற்தடவையாக ஆளில்லாப் போர் விமானம் மூலம் தாக்குதல் செய்ய முயன்ற போராளி அமைப்பு என்ற பெருமையை ஹமாஸ் அமைப்புப் பெற்றுக் கொண்டது. இந்த ஆளில்லாப் போர் விமானங்களை ஹமாஸே  உருவாக்கியதாகச் சொல்கின்றது. ஹமாஸின் முதலாவது ஆளில்லா விமானம் இஸ்ரேலால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  ஹமாஸ் நாளொன்றிற்கு நூறு ஏவுகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றது இவற்றில் தொண்ணூறு விழுக்காடானவை வானில் வைத்தே இஸ்ரேலின் இரும்புக்கூரைப் பாதுகாப்பு முறைமையால் அழிக்கப்படுகின்றன. இருந்தும் ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேலின் இரும்புக் கூரையை நோக்கி எறிகணைகளை வீசிக் கொண்டே இருக்கின்றது. இது இஸ்ரேலின் இரும்புக்கூரை தொடர்பாக மற்ற நாடுகள் தகவல் திரட்டுவதற்காக என கருதப்படுகின்றது. ஏற்கனவே இரும்புக்கூரை தொடர்பான தகவல்களை சீனா இணையவெளி மூலம் ஊடுருவிப் திருடி விட்டதகாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. இரும்புக்கூரையை ஊடுருவக் கூடிய வகையில் இனி ஈரானோ சிரியாவோ ஏவுகணைகளை உருவாக்கி ஹமாஸிற்கு வழங்கலாம். ஹமாஸின் விழ்ச்சி ஹிஸ்புல்லாவையும் அல் கெய்தாவையும் வலுவிழக்கச் செய்யலாம். ஹமாஸ் வீழ்ந்தால் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது அதிக கவனம் செலுத்தலாம். இதனால் மற்ற இசுலாமியப் போராளி இயக்கங்கள் ஹமாஸிற்கு உதவ முன்வரும். ஏற்கனவே பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலுக்கும் நல்ல உறவு இல்லை. குழந்தைகள் கொல்லப்படும் போர் தொடர்ந்தால் அமெரிக்கா ஐநா சபையில் இஸ்ரேலிற்கு வழங்கும் கவசத்தை குறைக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வந்து விட்டன. ஐநா பாடசாலைகளில் அமைத்த பொதுமக்கள் தங்குமிடங்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கின்றது. ஹமாஸுடன் போர் தொடங்கிய பின்னர் ஒபாமாவிற்கும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் மிகவும் காரசாரமாக அமைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டார், சவுதி, துருக்கி போன்ற நாடுகள் ஹமாஸிற்கு அதிக உதவிகளை மறைமுகமாக வழங்க முன்வரலாம். ஹமாஸை ஒழித்துக் கட்டுவது இலகுவானதல்ல.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...