Sunday, 27 July 2014

பலஸ்த்தீனிய இஸ்ரேலிய மோதலின் பின்னணிகள்


பலஸ்த்தீன விடுதலையை இஸ்ரேல் மட்டும் அழிக்கவில்லை.
ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளும் அழித்தன. இதைப்பற்றி அறியவும் ஹமாஸ் இஸ்ரேல் மோதலைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவும் அரபு இஸ்ரேல் மோதலின் புவியியல் பின்னணியையும் சரிந்திரப் பின்னணியையும் நாம் பார்க்க வேண்டும்.

இஸ்ரேலின் இனக்கொலைக்கு ஒரு சாட்டு
பலஸ்த்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் இருந்து கைக்குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளிவந்திருக்கும் போது இஸ்ரேலிற்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என அமெரிக்கா சொல்கின்றது. 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதி பலஸ்த்தீனர்களின் நிலத்தில் குடியேறியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இஸ்ரேலிய பதின்பருவத்து இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப் பட்டனர்.இவர்களைக் கொன்றது காஸாப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் அமைப்பினர் என இஸ்ரேல் அறிவித்தது. பின்னர் பலஸ்த்தீன இளைஞர் ஒருவர் கடத்தி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இதைச் செய்தவரை இஸ்ரேல் கைது செய்துள்ளதாகச் சொல்கின்றது. மூன்று இஸ்ரேலிய இளைஞர்களின் கொலையாளிகளை கைது செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரைக் கைது செய்ததுடன் ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைத்தாக்குதலும் மேற் கொன்டது.  இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தினர். இந்த ஏவுகணைகளில் பெரும்பான்மையானவற்றை இஸ்ரேலின் இரும்புக் கூரை என்னும் பாதுகாப்பு முறைமை தடுத்து விட்டது. 

இஸ்ரேலின் இன்னும் ஒரு ஆக்கிரமிப்பு
காஸா நிலப்பரப்பின் மீது தொடர்ந்து முப்படைகள் மூலமும் குண்டுத் தாக்குதல் செய்த இஸ்ரேல் ஜூன் 17-ம் திகதியில் இருந்து ஹமாஸ் அமைப்பின் கட்டுப் பாட்டில் இருக்கும் காஸா நிலப்பரபினுள் ஒரு தரைவழிப் படைநகர்வை மேற் கொள்கின்றது. இஸ்ரேல் தனது இந்த இனவழிப்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பு விளிம்பு (Operation Protective Edge) எனப் பெயரிட்டுள்ளது. இஸ்ரேலிய மக்கள் இனியும் ஹமாஸின் ஏறிகணைகளுக்குப் பயந்து பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொள்ளக் கூடாது என்கின்றார் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர். ஹமாஸ் அமைப்பினர் அரபு வசந்தத்தின் பின்னர் எகிப்த்தில் இசுலாமிய சகோதரத்துவை அமைப்பை ஆதரித்ததால் தற்போது எகிப்தில் ஆட்சியில் இருக்கும் படைத்துறையினரின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டதால் ஈரானின் ஆதரவை ஹமாஸ் அமைப்பினர் இழந்துவிட்டனர். இதனால் ஹமாஸ் அமைப்பினர் தற்போது ஒரு வலுவிழந்த நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றது ஹாமாஸ் அமைப்பினர்தான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. வலுவிழட்னு இருக்கும் ஹமாஸ் அமைப்பை அழிக்க அல்லது சில ஆண்டுகளுக்குச் செயற்படாமல் செய்ய மூன்று இளைஞர் கொலை ஒரு சாட்டாக இஸ்ரேல் போலியாக உருவாக்கினதா? இஸ்ரேலுடன் சவுதி அரேபியாவும் ஹமாஸ் அமைப்பும் இணைந்து ஹமாஸ் அமைப்பை அழிக்க முயல்கின்றன என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உருவாக்கிய ஹமாஸை அழிப்பதில் அந்த அமைப்பை விரும்பாத எகிப்தும் சவுதியும் அக்கறை காட்டுகின்றன எனச் சொல்லப்படுகின்றது.

ஹமாஸின் வலு நிலத்தின் கீழ்
ஹமாஸ் அமைப்பினரிடம் குறுகிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகள் பல இருக்கின்றன. காஸா நிலப்பரப்பில் நிலத்தின் கிழ் மிக பல மிக நீண்ட சுரக்கப் பாதை வலைப்பின்னல் இருக்கின்றன. இதனால் அவர்கள் தமது படைக்கலன்களையும் வியாபாரப் பொருட்களையும் பாதுகாப்பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பலமாக இருக்கும். இதனால் இஸ்ரேலியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என நினைக்கின்றனர். இவற்றை அழைக்கும் நோக்குடன் இஸ்ரேலியப் படையினர் டாங்கிகளுடனும் புல்டோசர்களுடனும் பார ஊர்திகளுடனும் காஸா நிலப்பரப்பினுள் தரை நகர்வை மேற் கொள்கின்றனர்.

புவியியல் பின்னணி
புவியியல் பின்னணியை முதலில் பார்ப்போமானால் பலஸ்த்தீனமும் இஸ்ரேலும் மேற்காசியாவில் மத்திய தரைக் கடலை ஒட்டிய ஒரு பிரதேசமாகும். ஜோர்தானின் மேற்கு எல்லையில் ஜோர்தானிய நதி இருக்கின்றது. ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளூடாகவும் இந்த நதி செல்கின்றது. ஜோர்தானிய நதியின் மேற்குக் கரையில்  அந்த நதியை கிழக்கு எல்லையாகவும், சிரியாவையும் லெபனானையும் வடக்கு எல்லையாகவும் மத்திய தரைக்கடலை மேற்கு எல்லையாகவும், எகிப்தை தெற்கு எல்லையாகவும் கொண்ட பலஸ்த்தீனப் பிரதேசம் இப்போது மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. "காஸா நிலப்பரப்பு" ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலும், "மேற்குக் கரை" பலஸ்த்தீனா அதிகார சபையின் கட்டுப்பாட்டிலும் எஞ்சிய பிதேசம் இஸ்ரேல் நாடாகவும் இருக்கின்றது. காஸா நிலப்பரப்பு ஹமாஸ் அமைப்பினது வேறு சில அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது இஸ்ரேலின் சுற்றிவளைப்பிலேயே என்றும் இருக்கின்றது. காஸா நிலப்பரப்பில் துறைமுகமோ விமான நிலையமோ இல்லை. எகிப்தை ஒட்டிய சினாய் பாலைவனத்தில் நிலத்தின் கீழான சுரங்கப்பாதையூடாகவும் மற்றும் இஸ்ரேல், எகிப்த்து ஆகிய நாடுகளின் தயவுடனும் காசாப் பிரதேசத்திற்கான விநியோகம் நடக்கின்றது. மேற்குக் கரை எனப்படும் பிரதேசத்தில் இஸ்ரேல் 1967-ம் ஆண்டில் இருந்து தொடர் நில அபகரிப்புச் செய்து அங்கு யூதர்களைக் குடியேற்றி வருகின்றது. பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஒரு தொடர் நிலப்பரப்பு மேற்குக் கரையில் இல்லாத வகையில் யூதக் குடியேற்றம் நடக்கின்றது.

மேற்கொண்டு நாம் அரபு இஸ்ரேலின் வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்பதற்கு யூதர்களின் சியோனிசம், உதுமானியப் பேரரிசிடம் இருந்து பிரித்தானிய அரசு மத்திய கிழக்கைக் கைப்பற்றியமை, அரபு இஸ்ரேலியப் போர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 181, போன்றவை உட்பட மேலும் பலவற்றை நாம் பார்க்க வேண்டும்.

சியோனிஸம்
சியோன் என்பது பலஸ்தீனத்தில் இருக்கும் ஒரு மலையின் பெயராக இருந்தது. இம்மலையில் யூதர்களின் அரசின் கோட்டை இருந்தது. பலஸ்த்தீனம் துருக்கியின் உதுமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் 1808-ம் ஆண்டில் இருந்து 1922-ம் ஆண்டு வரை இருந்தது. உதுமானியப் பேரரசு ஒரு இசுலாமிய அரசு என்றபடியால் யூதர்கள் தமக்கு என ஒரு நாடு வேண்டும் என உருவாக்கிய கொள்கை சியோனிசம் எனப்படுகின்றது. பல ஆண்டுகளாக இந்தச் சிந்தனை இருந்தாலும் 1870-ம் ஆண்டிற்கும் 1897-ம் ஆண்டிற்கும் இடையில் இதர்கு ஒரு தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டது. பலஸ்த்தினத்தில் இருந்து வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் அங்கு குடியேற்றி அவர்களுக்கு என ஒரு நாடு உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் சியோனிசவாதிகள் செயற்பட்டனர். இன்னும் அதே கொள்கையுடன் இருக்கின்றனர் எனச் சொல்லப்படுகின்றது. சியோனிசம் என்பது யூதத் தேசியவாதம் என்கின்றனர் யூதர்கள்.

சரித்திரப் பின்னணி - பிரித்தாண்ட பிரித்தானியா
உதுமானியப் பேரரசிற்கு எதிராக முதலாம் உலகப் போரின் போது (28 -07-1914இற்கும்  11-11-1918இற்கும் இடையில்) பிரித்தானியாவும் பிரன்சும் போரிட்டன. பலஸ்த்தீனப் பிரதேசத்தில் யூதர்களுக்கு ஒரு  அரசு அமைத்துத் தருவதாக யூதர்களிடமும், பலஸ்த்தினத்தில் வாழும் அரபு மக்களுக்கு என்று ஒரு அரசு அமைத்துத் தருவதாக பலஸ்த்தீன அரபுக்களுக்கும் பிரித்தானியா வாக்குறுதிகளை வழங்கி உதுமானியப் பேரரசிற்கு எதிராக தன்னுடன் இணைந்து அவர்களைப் போர் புரியச் செய்தது.பிரித்தானியா வாழ் யூதர்களுடன் பிரித்தானிய அரசு ஒரு சந்திப்பை மேற்கொண்டு அவர்களுக்கு பலஸ்த்தீனத்தில் ஒரு நாடு உருவாக்க செய்து கொண்ட உடன்பாடு பல்ஃபர் தீர்மானம் (Balfour Declaration) எனப்படுகின்றது. பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் Arthur Balfourஇற்கும் பிரித்தானியா வாழ்  யூதர்களின் பிரதிநிதி Walter Rothschildஇற்கும் நடந்த உடன்பாடுதான் பல்ஃபர் பிரகடனம்.  அதேவேளை பிரித்தானிய அரசு உதுமானியப் பேரரசிற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி இருந்த மக்காவில் உள்ள மத குரு ஹுசேய்னிற்கு அரபுக்களுக்கு என ஒரு அரசு பலஸ்தீனத்தில் ஒரு அரசு உருவாக்க உறுதி அளித்து ஒரு கடிதம் எழுதி இருந்தது. ஒரு தரப்பினருக்குக் கொடுத்த வாக்குறுதி மற்றத் தரப்பினருக்குத் தெரியாது. ஆனால் முதலாம் உலகப் போரின் பின்னர் பலஸ்த்தீனப் பிரதேசம் பிரித்தானிய ஆட்சியின் கீழ் கொன்டு வரப்பட்டது. அப்போது அரபு நாடுகளின் எல்லைகளை பிரித்தானியாவும் பிரான்சும் உதுமானியப் பேரரசு போல் மீண்டும் ஒரு இசுலாமியப் பேரரசு உருவாகாமல் இசுலாமியர்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் வகுத்துக் கொண்டன. உதுமானியப் பேரரசின் கீழ் முறுகல்கள் இருந்தாலும் மோதல்கள் இன்றி வாழ்ந்த அரபுக்களும் யூதர்களும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் அடிக்கடி மோதுக் கொண்டனர். பலஸ்த்தீனத்தை அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் என பிரதேச ரீதியாகப் பிரிக்கும் போது மிகச் சிறுபான்மையினராக இருந்த யூதர்களுக்கு அரைவாசிக்கு மேலான நிலப்பரப்பு வழங்க பிரித்தானியா முற்பட்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் பலஸ்த்தீனத்தில் பிரித்தானியப் பேரரசு மக்கள் தொகைக் கணிப்பீடு எடுத்த போது ஏழு இலட்சம் அரபியர்களும் ஐம்பத்து ஆறாயிரம் யூதர்களும் இருந்தனர். தொடர்ந்து பல யூதர்கள் பலஸ்த்தீனத்தில் குடியேற்றப்பட்டனர். நில அபகரிப்புக்கள் தொடர்ந்தன. பிரித்தானியா தனது காலனித்துவ ஆட்சியை இரண்டாம் உலகப் போரின் பின்னர் முடித்து பல நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கிய போது பலஸ்த்தீனத்திற்கு சுதந்திரம் வழங்காமல் அதன் ஆட்சிப் பொறுப்பை ஐநா சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் அரபு யூதப் பிரச்சனையைப் பற்றி ஆராய ஐநாவின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழு (UNSCOP) அமைக்கப்பட்டது. யூதர்களின் வற்புறுத்தலின் பேரில் இதில் எந்த ஒரு அரபு நாட்டுக் குடிமனும் உள்ளடக்கப்படவில்லை.

ஐநா தீர்மானம் 181
பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.

1948 முதல் அரபு இஸ்ரேலியப் போர்

முதலாம் அரபு இஸ்ரேலியப் போர் 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் பலஸ்தீனத்தின் படையெடுத்தன. பலஸ்த்தீன அரசு உருவாக்கப்பட்டது. பின்னர் இஸ்ரேல் சிரியா, எகிப்து, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளுடன் தனித்தனியாகவும் ஒன்றன் பின்னர் ஒன்றாகவும் எல்லைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. .  1964-ம் ஆண்டு பலஸ்த்தீனத்தில் வாழும் அரபு மக்களுக்கு ஒரு தனி அரசு உருவாக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் பலதாக்குதல்களை மேற்கொண்டதால் அதை ஒரு பயங்கரவாத இயக்கம் என இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் பிரகடனப் படுத்தின. 1991-ம் ஆண்டு  மாட்ரிட் நகரில் பலஸ்த்தீனத்திற்கும் இடையில் நடந்த சமாதானப் பேச்சு வார்த்தையின் பின்னர் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என ஒத்துக் கொள்ளப்பட்டது. பதிலுக்கு இஸ்ரேலின் இருப்புரிமையை பலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஏற்றுக் கொண்டது.

ஜோர்தானில் இருந்து விரட்டப்பட்ட ஜஸீர் அரபாத்

1948-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் ஜோர்தானிய நதியின் மேற்குக் கரையை ஜோர்தானிய அரசு தன்னுடன் இணைத்துக் கொண்டது. 1968-ம் ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான் நாட்டிற்குள் புகுந்து அங்குள்ள பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினர் மீது தாக்குதல் நடாத்தின அதில் இரு நூறு போராளிகளைக் கொன்று மேலும் 150 பேரைச் சிறைப்பிடித்தன. ஜோர்தானிச் வாழும் பலஸ்த்தீனியர்களால ஜோர்தானிய மன்னர் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் தந்திரமாக ஜோர்தானிய மன்னர் மனதில் தூவப்பட்டது. தனது ஆட்சிக்கு பலஸ்த்தீன விடுதலை அமைப்பால் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி 1970-ம் 71-ம் ஆண்டுகளில் ஜோர்தானில் ப.வி.இயக்கத்திற்கு எதிராகக் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்து அவர்கள் லெபனானிற்குத் தப்பிச் சென்றனர். 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல் ஆரம்பித்த படியால் அது கறுப்பு செப்டம்பர் என அழைக்கப்படுகின்றது.

1967 எகிப்து இஸ்ரேலியப் போர்
எகிப்து தன் மீது தாக்குதல் நடத்த படை நகர்வுகளை மேற் கொள்வதாகக் கூறி 1967ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி இஸ்ரேல் எகிப்த்தின் மீது அதிரடியான தாக்குதல்களை மேற் கொன்டது. பல எகிப்தியப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எகிப்துடன் இணைந்து ஈராக், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளும் போரிட்டன. இப் போரின் போது சினாய், காஸா ஆகிய பிரதேசங்களை எகிப்த்திடமிருந்தும் கிழக்கு ஜெருசலம் மேற்குக் கரை ஆகியவற்றை ஜோர்தானிடமிருந்தும் கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் பிடுங்கிக் கொண்டது. இப் போரின் போது இஸ்ரேல் தனது வலிமையை உலகிற்கு உணர்த்தியது. பல படைக்கலன்களையும் எதிரிகளிடமிருந்து இஸ்ரேல் பறித்தெடுத்தது. இப்போரின் பின்னர் அரபு நாடுகள் சூடான் தலைநகர் காட்டூமில் ஒன்று கூடி கார்ட்டும் தீரமானத்தை நிறைவேற்றின. அதன்படி இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை, இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை, இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. 1973ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலியர்கள் தமது பண்டிகை ஒன்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் எகிப்தும் சிரியாவும் தமது இழந்த நிலங்களை மீட்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தின. முதலில் சில நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றினாலும் பின்னர் இஸ்ரேலின் பதில் தாக்குதலின் போது முன்பு இருந்ததை விட அதிக பிரதேசங்களை இஸ்ரேலிடம் அவர்கள் இழந்தனர். பின்னர் ஏற்பட்ட ச்மாதான முயற்ச்சிகளில் இஸ்ரேல் தான் கைப்பற்றிய சில பிரதேசங்களை எகிப்திற்கும் சிரியாவிற்கும் விட்டுக் கொடுத்தது.

கார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும். 
1967-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில்   சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலாம மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.

கிள்ளூக் கீரையான லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல்
தேவை ஏற்படும்போதெல்லாம் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது. ஜஸீர் அரபாத் தலைமையிலான பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஜோர்தானில் இருந்து 1971-ம் ஆண்டு விரட்டப்பட்ட பின்னர் லெபனானில் இருந்து செயற்பட்டது. அங்கிருந்து அது பல தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராகச் செய்து கொன்டிருந்தது. பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் லெபானானில் வலுமிக்க ஒரு அமைப்பாக உருவானது. மாரோனைற் கிருத்தவர்களுக்கும் பாலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இடையில் போர் மூண்டது. 1978-ம் ஆண்டு இஸ்ரேல் லெபனானிற்குள் Operation Litani என்னும் பெயரில் ஒரு படைநடவடிக்கையை மேற் கொண்டது. லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல் அங்கு பல பலஸ்த்தீனப் போராளிகளைக் கொன்றது. இஸ்ரேல் மீண்டும் 1982-ம் ஆண்டு லெபனானின் தெற்குப் பிரதேசத்தில் இருந்து வடக்கு நோக்கி பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினரை விரட்டும் நோக்குடன் லெபனான் மீது படை எடுத்தது. தெற்கு லெபனானில் பின்னர் ஹிஸ்புல்லா இயக்கம் உருவானது. 1993-ம் ஆண்டு ஜூலை மாதம்25-ம் திகதி Operation Accountability என்னும் பெயரில் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது. இது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான படை நடவடிக்கையாகும். 1982-ம் ஆண்டு ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேல் லெபனான் மீது மூன்று தடவை படை எடுத்தது. பின்னர் 1993-ம் ஆண்டு Operation Grapes of Wrath என்னும் படை நடவடிக்கையும் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து 2006-ம் ஆண்டும் லெபனான் மீது இஸ்ரேல் படை எடுத்தது.

லெபனானிற்குப் படை எடுத்த சிரியா
லெபனாலில் பல்ஸ்த்தீன இயக்கம் வலுமிக்கதாக இருந்து செயற்பட்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தந்திரமாக பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் லெபனானைக் கைப்பற்றினால் அது சிரியாவிற்கு ஆபத்தாக முடியும் என சிரிய ஆட்சியாளர்களை நம்ப வைத்தனர். இதனால் அப்போதைய சிரிய அதிபர் ஹஃபீஸ் அல் அசாத் 1976இல் லெபனானிற்கு நாற்பதினாயிரம் படையினரை அனுப்பினார். பல பாலஸ்த்தீனிய விடுதலைப் போராளிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இஸ்ரேலின் பேருந்துப் பயணிகள் 35 பேரை பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கொலசெய்தது எனச் சொல்லி  1978-இல் இஸ்ரேலியப் படையினர் Operation Litani என்னும் குறியீட்டுப் பெயருடன் லெபனானை ஆக்கிரமித்து பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினரைக் கொன்று குவித்தனர்.

ஒஸ்லோ உடன்படிக்கை
நோர்வேயின் அனுசரணையுடன் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் சமாதான் உடன்படிக்கை ஒன்றை 1994-ம் ஆண்டு செய்து கொண்டன. அதன்படி பலஸ்த்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் இருந்து வெள்யேறி அதன் நிர்வாகம் புதிதாக உருவாக்கப்பட்ட பலஸ்த்தீன அதிகார சபையிடம் கொடுக்கப்பட்டது. பலஸ்த்தீன அதிகாரசபைக்கான தேர்தலில் யஸீர் அரபாத்தின் ஃபட்டா கட்சியினர் வெற்றி பெற்றனர். அரபாத் பலஸ்த்தீன அதிகார சபையின் தலைவரானார். 2004-ம் ஆண்டு அரபாத் கொல்லப்பட்டார். 2006-ம் ஆண்டு நடந்த பலஸ்த்தீன அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸ் அமைப்பினர் வெற்றி பெற்றனர். பின்னர் ஹமாஸும் ஃபட்டா கட்சியினரும் கூட்டணியாக பலஸ்த்தீன அதிகார சபையை நிர்வகித்தனர். ஆனால் அவர்களிடையே பலத்த மோதல் நடந்தது. பின்னர் ஹமாஸ் அமைப்பினர் காஸா நிலப்பரபபியும் மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றம் இல்லாத சிறிய நிலப்பரப்பை பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினரும் தம்வசமாக்கினர். ஒஸ்லோ உடன்படிக்கையின் படி இஸ்ரேல் மேற்குக் கரையில் இருந்தும் காஸா நிலப்பரப்பில் இருந்தும் வெளியேற வேண்டும். 20 ஆண்டுகளாகியும் அது நடக்க வில்லை. நோர்வேயின் சமாதான முயற்ச்சி இனக் கொலையில் முடியும் என்பது எமக்குத் தெரியும்.

மஹ்மூட் அப்பாஸ்

2001-ம் ஆண்டு அமெரிக்க நியூயோர்க் நகரத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் "பயங்கரவாத" பின்னணியைக் கொண்ட யசீர் அரபாத் முன்னணியில் இருந்து செயற்படக் கூடாது என ஜோர்ஜ் புஷ் நிர்ப்பந்த்தித்தால் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தில் மஹ்மூட் அப்பாஸ் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டார். இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பிரான அப்பாஸ் 2001இன் முன்னரே ஒரு மேற்குலக சார்பு ஆளாகக் கருதப்பட்டவர். 2001இன் பின்னர் இவர் பல விடயங்களில் அரபாத்துடன் முரன்படத் தொடங்கினார். அண்மையில் இவரது மனைவிக்கு இஸ்ரேலில் மருத்துவம் செய்யப்பட்டது. இவரை தீவிரவாத பலஸ்த்தீனியர்கள் ஒரு துரோகியாகக் கருதுகின்றனர். 2013-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான பொருள் வாங்கல், முதலீடு, வர்த்தகம் புறக்கணிப்புப் போராட்டத்தை அப்பாஸ் நிராகரித்தார். 2014 மார்ச் மாதம் அப்பாஸிற்கும் ஹமாஸிற்கும் இடையில் உருவான ஒருமைப்பாட்டை இஸ்ரேலின் நிர்ப்பந்தத்தால் அப்பாஸ் கைவிட்டார்.

Intifada எனப்படும் மக்கள் எழுச்சி
இஸ்ரேலின் நில அபகரிப்பு, அத்து மீறிய குடியேற்றம், அடக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக பலஸ்த்தீனிய மக்கள் தாமாகவே இரு தடைவைகள் மக்கள் பேரெழுச்சிகளை மேற்கொண்டனர். முதலாவது எழுச்சி 1987-ம் ஆண்டில் இருந்து ஆரம்பமானது. பெரும் பார வண்டிகளில் வரும் இஸ்ரேலியப் படையினருக்கு எதிராக சிறுவர், பெண்கள் உட்பட எல்லாத் தரப்பினரும் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு இஸ்ரேலியரைத் தாக்கினார்கள்.1987-ம் ஆண்டு உருவாகிய இந்த முதலாவது மக்கள் பேரெழுச்சி 1991-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. இரண்டாவது மக்கள் பேரெழுச்சி இஸ்ரேலிய தலைமை அமைச்சர் புனித மலைக்கு 2000-ம் ஆண்டு மேற் கொண்ட பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க உருவாகி 2005-ம் ஆண்டுவரை தொடர்ந்தது.
 
சமாதான முயற்ச்சிச் சதி
ஹமாஸ் இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர எகிப்து எடுத்த முயற்ச்சியை ஹமாஸ் அமைப்பினர் தம்மைக் கலந்து ஆலோசிக்காமல் எடுத்த முயற்ச்சி என்று சொல்லி நிராகரித்து விட்டனர். இதைத் தொடர்ந்து எகிப்த்தில் ஹமாஸின் அரசியல் துறைப் பொறுப்பாளர் அபு மார்ஸூக்கும் மஹ்மூட் அப்பாஸும் சந்தித்து உரையாடினர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் கட்டார் நாட்டின் நிதி உதவியுடன் காஸாவில் சமாதானம் கொண்டுவர எகிப்த்திற்குப் பயணமானார். அமெரிக்க அரசுச் செயலர் ஜோன் கெரியும் அங்கு சென்றார். நீண்ட முயற்ச்சிக்குப் பின்னர் ஜூலை 26-ம் திகதி ஒரு 12 மணித்தியால போர் நிறுத்தத்திற்கு இருவரையும் சம்மதிக்கச் செய்தனர்.  

துருக்கியின் வணங்கா மண்
துருக்கியின் மனித உரிமை அமைப்புக்கள் இஸ்ரேலிற்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்றை அனுப்புகின்றது. 2010-ம் ஆண்டும் இப்படி ஒரு கப்பல் துருக்கியில் இருந்து காஸாவை நோக்கிப் போனது. இஸ்ரேலியப் படையினர் அதை இடைமறித்து தமது நாட்டிற்குக் கடத்திச் சென்றனர். இந்த முறை என்ன நடக்குமோ? ஆனால் இந்த முறை துருக்கியப் படையினரும் பாதுகாப்பிற்காகச் செல்வதாகச் சொல்லப்படுகின்றது.

மனிதக் கேடயப் பொய்ப்பரப்புரை
ஒரு மக்கள் மயப் படுத்தப்பட்ட போராட்டத்தில் மக்களும் போராளிகளும் ஒன்றாக இருந்தே செயற்படுவார்கள். அப் போராட்டத்தை அழிக்க முயலும் போது குழந்தைகள் பெருமளவில் கொல்லப்படுவார்கள். இனக்கொலையாளிகளின் கோர முகம் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்களில் அம்பலமாகும் போது. இனக்கொலையாளிகளும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்களும் மனிதக் கேடயம் என்ற பதத்தை தமது பொய்ப்பரப்புரைக்கு பரவலாகப் பாவிப்பார்கள்.  பலஸ்த்தீன விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை  மக்கள் பயிற்றப்பட்ட போராளிகள் இறப்பதை பலஸ்தீனியர்கள் விரும்புவதில்லை. அவர்களைப் பாதுகாக்க பல வகைகளில் முயற்ச்சி செய்வார்கள்.

சிரியாவில் சுனிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்ததால் ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கான மாதாந்த நிதி உதவியில் இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களைக் குறைத்தது. இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்ததால் எகிப்திற்கும் ஹமாஸ் மீது கடும் அதிருப்தி. இதனால் ஹமாஸ் அமைப்பு பலவீனமடைந்திருக்கும் நிலையில் அதற்கு பேரிழப்பை ஏற்படுத்த இஸ்ரேல் முயல்கின்றது. ஹமாஸ் வலுவடையாமல் அதன் மீது அடிக்கடி தாக்குதல் செய்து அதை வலுவற்றதாக்குவது இஸ்ரேல் வழமையாகச் செய்யும் ஒன்று. இப்போது நடக்கும் மோதலை இன்னும் சில நாட்கள் தொடரச் செய்து ஹமாஸ் அமைப்பு உறுப்பினர்களையும் அவர்களிடம் இருக்கும் நீண்ட தூர எறிகணைகளையும் அவர்களின் நிலக்கீழ் சுரங்கப் பாதைகளை அழித்தால் இன்னும் சில ஆண்டுகளுக்கு இஸ்ரேல் தாம் நிம்மதியாக இருக்கலாம் என இஸ்ரேலியர் நினைக்கின்றனர். இதைச் செய்து முடிக்க இஸ்ரேலிற்கு இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம். அதுவரை மேற்கத்திய ஊடகங்களின் பொய்ப்பரப்புரை இஸ்ரேலிற்கு அவசியம் தேவைப்படுகின்றது. காஸா நிலப்பரப்பில் தொடர்ந்து அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது மற்ற அரபு நாட்டு மக்களை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கும் இதனால் அவற்றின் ஆட்சியாளர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...