Malaysia Airlines Flight 17 மலேசிய நேரப்படி 2014 ஜூலை 17-ம் திகதி மாலை 6-15 மணிக்கு நெதர்லாந்தின் அம்ஸ்ரடம் விமான நிலையத்தில் இருந்து 283 பயணிகளுடனும் 15 பணியாளர்களுடனும் புறப்படுகின்றது. நான்கு மணித்தியாலங்கள் கழித்து அந்த விமானம் உக்ரேனின் இரசியாவிற்கு அண்மித்த எல்லையில் பறந்து கொண்டிருக்கும் போது உக்ரேனிய விமானக் கட்டுப்பாட்டகம் Malaysia Airlines Flight 17உடனான தொடர்புகளை இழக்கின்றது. இத் தொடர்புத் துண்டிப்பு மலேசிய விமானச் சேவைக்கு அறிவிக்கப் படுகின்றது. இரவு 11-40இற்கு Malaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரசியத் தலைநகர் மாஸ்க்கோவில் இருந்து செயற்படும் Interfax செய்தி முகவரகம் செய்தி வெளியிடுகின்றது
Malaysia Airlines Flight 17விமானத்தை யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது தொடர்பான சர்ச்சை விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட மறுநாளே ஆரம்பித்து விட்டது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியத்தில் இரசியர்களே அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் தமக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை Self-defence forces of the Donetsk People’s Republic என அழைப்பார்கள். இவர்களுக்கு இரசிய அரசின் ஆதரவு உண்டு. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியதுடன் இணைந்து செயற்படாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என உக்ரேனை இரசியா நிர்பந்தித்து வருகின்றது. இதனால் உக்ரேனில் வாழும் இரசியர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். ஏற்கனவே உக்ரேனின் ஒரு பிராந்தியமான கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. Malaysia Airlines Flight 17விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியம் உக்ரேன் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே உக்ரேனிய அரச படையினரின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி உள்ளனர். உக்ரேனிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய அரச படைகள் எந்த ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வீசியதில்லை.
உக்ரேன் உள்நாட்டுப் போர் பற்றி மேலும் ஆறிய கீழே சொடுக்கவும்:
1- உக்ரேன் தேர்தல்
2. உக்ரேன் அதிபர்
விமானம் சுட்டுவீழ்த்தப் பட்ட இடத்திற்கு முதலில் எவரையும் அனுமதிக்காத இரசியக் கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து இறந்த உடல்கலையும் பல தடயங்களையும் அப்புறப்படுத்தினர். விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கையளிப்பதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. அது இரசியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் பரவிய பின்னர் அது விசாரிக்க வந்தவர்களிடம் கையளிக்கப்பட்டது. விமானம் சுட்டு வீழ்த்தியது தொடர்பான ஒரு விசாரணைக்காக உக்ரேனிய அரச படையினருக்கும் Self-defence forces of the Donetsk People’s Republic படைய்னருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, ஆனால் அது நடைபெறவில்லை. பன்னாட்டு விசாரணைக் குழு ஒன்றிற்கு உக்ரேனில் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் இருக்கும் பிரதேசத்தில் விமானம் விழுந்த இடத்தில் கட்டுப்பாடற்ற முறையில் விசாரணை செய்ய அனுமதிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
British Airways உக்ரேன் ஊடாகப் பறப்பதைத் தவிர்த்து வருகின்றது. |
மலேசியன் விமானங்கள் உக்ரேனூடாகப் பறப்பதை ஏன் தவிர்க்கவில்லை? |
வழிதவறிப் போனது ஏன்?
Malaysia Airlines Flight 17 விமானம் உக்ரேனின் தென் பகுதியூடாகப் பறப்பதாக இருந்தது. ஆனால் அது ஏன் வழிமாறி உக்ரேனின் வட கிழக்குப் பகுதிக்கு மேலால் பறந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. சில வல்லரசு நாடுகள் பயணிகள் விமானங்களில் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தி அந்த விமானங்களை வழிதவறிச் செல்வது போல் பிரச்சனைக்கு உரிய அல்லது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுக்கு மேலாகப் பறக்கச் செய்வார்கள். Malaysia Airlines Flight 17 விமானத்திற்கும் இப்படி நடந்ததா? ஆனால் ஐரோப்பிய விமான ஓட்டிகளின் ஒன்றியத்தின் (European Cockpit Association) தலைவர் தான் இதே காலப்பகுதிகளில் உக்ரேனூடாகப் பறக்கும் போது மோசமான கால நிலை காரணமாக தானும் KLM விமானங்களை வழமையான பாதையில் இருந்து வடக்குப் பக்கமாக விலகிப் பறந்ததுண்டு என்கின்றார்.
காட்டிக் கொடுக்கும் சமூக வலைத்தளப் பதிவு
Malaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் பின்னர் இரசியாவின் ஆதரவுடன் செயற்படும் உக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்காரர்களின் தலைவர்களில் ஒருவர் தாம் உக்ரேனிய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகப் ஒரு பதிவு இட்டிருந்தார். பின்னர் அந்தப் பதிவை அழித்து விட்டார்.
காட்டிக் கொடுக்கும் படங்கள்
மலேசிய விமானத்தைச் சுட்டதாகக் கருதப்படும் Buk SA-11 launcher என்னும் நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவுகணைகளை ஏவும் வண்டிகள் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் பகுதியின் நின்ற படங்களும் பின்னர் அவை இரசியாவிற்கு மாற்றப்பட்டு நிற்கும் படங்களும் வெளிவந்துள்ளன.
உக்ரேனிய அரசின் ஒலிப்பதிவு
உக்ரேனிய அரசுக்கு எதிராகச் செயற்படும் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் உரையாடல்களை தாம் இடைமறித்து ஒட்டுக் கேட்ட போது அவர்கள் ஒரு பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரையாடியதாக உக்ரேனிய அரசு சொல்கின்றது. உக்ரேனிய அரசு வெளிவிட்ட உரையாடல் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கின்றது:
"We have just shot down a plane. It's 100 percent a passenger aircraft It's totally f****d. The pieces are falling right into yards. There are no weapons on the site. Absolutely nothing. Civilian items, medicinal stuff, towels, toilet paper."
செய்மதிப்படங்கள்
ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செய்மதிப் படங்களில் விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து தரையில் இருந்து விண்ணை நோக்கி ஏவுகணைகள் புகை கக்கிக் கொண்டு பாய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரிக்கப் போனவர்கள் அமெரிக்கக் கைப்பொம்மைகளாம்.
உக்ரேனில் மலேசிய விமானம் விழுந்த பகுதிக்கு விசாரிக்கச் சென்ற Organization for Security and Cooperation in Europe (OSCE) அமைப்பினர் அமெர்க்காவின் கைப்பொம்மைகள் என்கின்றனர் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள்.
இரசியாவிற்குப் பின்னடைவு
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டமை உக்ரேனை தன்வசமாக்கும் இரசியாவின் முயற்ச்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்கின்றன மேற்கு நாட்டு ஊடகங்கள். 1983-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தென் கொரியாவின் பயணிகள் விமானத்தைச் சுட்டு விழுத்திய பின்னர் சோவியத் ஒன்றியம் வலுவிழந்து வீழ்ச்சியடைந்தது. அது போல இப்போது இரசியாவிற்கும் நடக்கும் என்கின்றன சில ஊடகங்கள். தென் கொரிய Korean Airlines Boeing 747 விமானத்தைச் சட்டு விழ்த்தியதை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மிருகத்தனமான செயல் எனக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தால் கண்டித்தார். "It was an act of barbarism, born of a society which wantonly disregards individual rights and value of human life and seeks constantly to expand and dominate other nations." என்பது அவர் பாவித்த வார்த்தை. அப்போது சோவியத் ஒன்றியம் தாம் அனுப்பிய சமிக்ஞைகளை தென் கொரிய விமானம் புறக்கணித்ததாகச் சொன்னது. பின்னர் அது பொய் என நிரூபணமானது.
இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை.
ஏற்கனவே கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் இரசியாவிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதராத் தடையை விதித்திருந்தன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டததைத் தொடர்ந்து மேலும் பொருளாதாரத் த்டைகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன. இனிவரும் பொருளாதாரத் தடை ஆசியான் நாடுகளையும் இணைத்துக் கொண்டு செய்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தற்போது உலகிற்குத் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதாரத் தடைகள் உகந்தவை அல்ல.
No comments:
Post a Comment