Thursday, 7 August 2014

இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்றமும் ஈழத்தமிழர்களுக்கான படிப்பினையும்

பலஸ்த்தீன அரசியல் தலைவர்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெறுவதற்கான ஆயத்தங்கள் செய்கின்றனர். இஸ்ரேலைப் பன்னாட்டு நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கும் எண்ணத்துடன் அவர்கள் செயற்படுகின்றனர். 29/11/2012 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. இதன் படி பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமையை பலஸ்த்தீனத்தால் பெறமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீனம் முழு உறுப்புரிமை பெறுவதை பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா தடுத்தது. ஒரு நாடு முழு உறுப்புரிமை பெற பாதுகாப்புச் சபையின் சம்மதம் வேண்டும்.  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து (வீட்டோ) அதிகாரமும் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஐந்து வல்லரசு நாடுகளும் சுழற்ச்சி முறையில் பிராந்திய அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்புரிமை பெறும் பத்து நாடுகளும் உள்ளன. அமெரிக்காவில் எதிர்ப்பால் பலஸ்த்தீன ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்

நிரந்தர உ|றுப்புரிமையைப் பெறமுடியாத பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 2012 நவம்பர் நடந்த வாக்கெடுப்பில் Canada, Czech Republic, Israel, Marshall Islands,  Micronesia,  Nauru,     Palau, Panama,  United States ஆகிய நாடுகள் மட்டும் எதிர்த்தன. 138 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.

ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தின. பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் தாம் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும் நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு மிரட்டியது.

காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலியப் படைகள் செய்மதிகளின் கண்காணிப்புடன் கடல், தரை, வான் வழிகளூடாக ஜூலை/ ஓகஸ்ட் மாதங்களில் செய்த கண்மூடித்தனமான தாக்குதல்களும் அதில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களும் குழந்தைகளும் செய்யப்பட்ட கட்டுமான மற்றும் சொத்து அழிவுகளும் பலஸ்த்தீனியர்களை இப்போது வேறுவழிகளில் சிந்திக்க வைத்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்கக அனுசரணையுடன் நடந்த பேச்சு வார்த்தைகளும் எந்தப் பயனும் தரவில்லை.

பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறுவது தொடர்பாகக் கலந்துரையாட பலஸ்த்தீன அதிகார சபையின் வெளிநாட்டு அமைச்சர் ரியாத் அல் மல்க்கி நெதர்லாந்து நகர் ஹேக்கிற்குப் பயணம் மேற் கொண்டுள்ளார். இந்த ஆண்டு மே மாதம் பன்னாட்டு மன்னிப்புச் சபை உட்படப் பதினேழு மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறுவதால் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து பலஸ்த்தீனர்களைப்பாதுகாக்க முடியும் என வலியுறுத்தி இருந்தன.

ஜூலை மாத இறுதியில் பலஸ்த்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் பனாட்டு நீதிமன்றில் இணைவது தொடர்பாக பலஸ்த்தீனியர்களின் பல்வேறுபட்ட அமைப்புக்களின் கருத்தை அறியும் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். ஹமாஸ் அமைப்பும் இசுலாமியப் புனிதப் போராளி அமைப்பும் இதற்குத் தயக்கம் காட்டியதாகச் சொல்லப்படுகின்றது. இந்த இரு அமைப்புக்கள் மீதும் போர்க்குற்றம் சாட்டும் சாத்தியம் உண்டு.

பன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம் உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம்(விசாரிக்கும் உரிமை) இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

நய வஞ்சகன் பான் கீ மூன்
2009-ம் ஆண்டு இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் ஈய வார்ப்பு என்னும் குறியீட்டுப் பெயருடன் செய்த படை நடவடிக்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு நீதி மன்றத்திடம் பலஸ்த்தீனியர்கள் எடுத்துச் சென்றபோது பலஸ்த்தீனம் ஒரு நாடு அல்ல என்பதால் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக இஸ்ரேலின் ஈய வார்ப்பு  படை நடவடிக்கையை விசாரணை செய்யதென் ஆபிரிக்க நீதியாளர் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் நியமிக்கப்பட்டார். இலங்கையைப் போலவே இவருடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் இலங்கை இப்போது செய்வது போல் ஓர் உள்ளக விசாரணையை மேற்கொண்டது. ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரிந்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இருதரப்பினரும் தமது குற்றங்களிற்கு உள்ளக விசாரணைகளை முதலில் மேற் கொண்டுவிட்டு பின்னர் பன்னாட்டு நீதிமன்றத்திற்குச் செல்லும் படி பரிந்துரை செய்திருந்தார்.  ஆனால் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரனின் அறிக்கையில் அதிக அக்கறை காட்டவில்லை. ஐநா சபையின் விசாரணைச் சபையின் தலைவர் இஸ்ரேலியப் படைகள் பலஸ்த்தீனத்தில் இருந்த ஒன்பது ஐநா நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தியதைப் போர்க்குற்றம் எனக் கூறி அதை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருதார். அதை பான் கீ மூன் தடுத்துவிட்டார். இந்த விசாரணைகளைத் தடுக்கும் பான் கீ மூனின் அறிக்கை நியூயோர்க்கில் உள்ள இஸ்ரேலியர்களால் தயாரிக்கப்பட்டது. எல்லாம் இலங்கையின் நடந்த வற்றின் மீள் ஒளிபரப்புப் போல் இருக்கின்றது.

பலஸ்த்தீனத்திற்கான ஐநா நிவாரணப் பணி முகவரகம் The U.N. Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) ஐநாவின் 95 நிலையங்கள் காஸா நிலப்பரப்பில் ஜூலை 8-ம் திகதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலின் பின்னர் தாக்கப்பட்டதாகக் கூறுகின்றது. ஜூலை 24-ம் திகதி பெய்த் ஹனௌனில் (Beit Hanoun)ஐநாவின் பாடசாலை மீதும் ஜூலை 30-ம் திகதி ஜபாலியா பெண்கள் முன்பள்ளி மீதும் ஓகஸ்ட் 3-ம் திகதி ரஃபாவில் உள்ள ஆண்கள் முன்பள்ளி மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியதாக பலஸ்த்தீனத்திற்கான ஐநா நிவாரணப் பணி முகவரகம் The U.N. Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) தெரிவிக்கின்றது. இவற்றில் பலஸ்த்தீனியர்கள் இடம் பெயர்ந்து தங்கியிருந்தனர். இது தொடர்பாக பான் கீ மூன் இப்படிக் கருத்துத் தெரிவித்திருந்தார்;:
  • "This attack, along with other breaches of international law, must be swiftly investigated and those responsible held accountable.... This madness must stop." 

2014 ஜூலை இறுதியிலும் ஓகஸ்ட் முற்பகுதியிலும் இஸ்ரேலியப் படையினர் செய்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலும் விசாரிக்கப் போகின்றது என்கின்றது இஸ்ரேலிய அரசு.

காஸாவில் இஸ்ரேல் செய்யும் தாக்குதலை நியாயப் படுத்த இஸ்ரேலிய தினசரிப்பத்திரிகை ஒன்று "தேவையான இனக்கொலை" என்னும் தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் தீட்டியது. பலத்த எதிர்ப்பின் மத்தியில் இது பின்னர் இணையத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றத்தில் இணைவதையும் இஸ்ரேல் மீது போர்க் குற்றம் சுமத்துவதையும் தடுக்குமாறு அமெரிக்கப் பாராளமன்றத்திடம் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தான்யாஹூ வேண்டு கோள் விடுத்துள்ளார். இதை அமெரிக்க ஊடகம் ஒன்று இப்படிச் சொல்கின்றது:
'The prime minister asked us to work together to ensure that this strategy of going to the ICC does not succeed.'

ஈழத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான முன்னெடுப்புக்களைக் கைவிட்டு நல்லிணக்கம் என்னும் மாயமான் பின்னால் செல்லும் படி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாஷிங்டனில் இருந்தும் புது டில்லியில் இருந்தும் வற்புறுத்தல்கள் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து அனந்தி சசிதரன் அடக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென் ஆபிரிக்கா காட்டும் எலும்புத் துண்டுக்குப் பின்னால் போகின்றது.  நோர்வேயின் அனுசரணையுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பலஸ்த்தீன விடுதலை இயக்கம் சென்றதன் பயனாகா யஸீர் அரபாத் நஞ்சூட்டி நயவஞ்சகமாகக் கொல்லப்ப்ட்டார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...