Monday, 28 April 2014

ஆட்டம் காணும் இரசியப் பொருளாதாரமும் அசையாத புட்டீனும்

உலக நிலப்பரப்பின்  ஐந்தில் ஒரு பகுதியை மீண்டும்  தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர  இரசியா முயல்கின்றது.    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீண்டும் இரசிய ஆதிக்க வலயத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் திட்டமாக இருக்கின்றது.     1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம்விழ்ச்சியடைந்த பின்னர்   மீண்டும் சோவியத் ஒன்றிய நாடுகளை ஏதாவது ஒருவகையில்   தன்னுடன் இணைக்க இரசியா    பலவழிகளில் முயன்று கொண்டிருக்கின்றது.   1991-ம் ஆண்டிலேயே சிஐஎஸ் எனப்படும் சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம் என்னும் பெயரில் முதல் இணைப்பு நடந்தது.   இந்தக் கூட்டமைப்பு முதலில் இரசியா, உக்ரேன், பெலரஸ் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து உருவாக்கின. இரு வாரங்கள் கழித்து ஆர்மேனியா, அஜர்பைஜான், கிர்கிஜ்ஸ்த்தான், மொல்டோவா, தேக்மெனிஸ்த்தான், தயிகிசஸ்தான், உஸ்பெகிஸ்த்தான் ஆகிய எட்டு நாடுகள் இணைந்தன. இரண்டு ஆண்டுகள் கழித்து ஜோர்ஜியா இணைந்தது. இரசியா தனது ஆதிக்க நிலப்பரப்பை விரிவாக்குவதை அதன் எதிரிகள் விரும்பவில்லை. இதனால் ஜோர்ஜியாவிலும் உக்ரேனிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. அவை இரசியாவிற்கு எதிராகத் திரும்பின. இரசியாவிற்கு மேற்காக உள்ள நாடுகளை நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் தம்முடன் ஒன்றன் பின்னர் ஒன்றாக இணைக்க இரசியாவிற்கு கிழக்காக உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுடன் சீனா தனது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதை கடந்த பத்து ஆண்டுகளாகப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த விளடிமீர் புட்டீன்
  • தனது செல்வாக்கை இரசிய மக்கள் மத்தியில் உயர்த்தினார்.
  •  தனது உள்நாட்டு எதிரகளையும் விமர்சகர்களையும் கடுமையாகத் தண்டித்தார்.
  • இரசியப் பொருளாதாரத்தை சீர் செய்து மேம்படுத்தி எரிபொருள் ஏற்றுமதி மூலம் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்தார்.
  • இரசியப் படைகளுக்கு சிறந்த பயிற்ச்சி கொடுத்தார்
  • இரசியாவைன் படைக்கலங்களை நவீன மயப் படுத்தினார்..
  • இவற்றின் மத்தியில் பில் கேட்ஸ் போன்ற உலகப் பணக்காரர்கள் எல்லாம் முந்தி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகின் முதலாம் பணக்காரர் ஆனார்.
  • அவரது சொத்து மதிப்பு 75 பில்லியன் அதாவது 750 கோடி அமெரிக்க டொலர்கள் எனப்படுகின்றது.
தன்னையும் தனது நாட்டையும் பலமாக்கிய புட்டீன் ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டி அதைப் போரில் அடக்கி அதன் பிராந்தியம் ஒன்றை இரசியாவின் ஆதிக்கதிற்குள் கொண்டு வந்தார். உக்ரேனின் கிறைமியாவை இரசியாவுடன் இணைத்தார். இதனால் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைக்களை மேற் கொண்டன.

இதனால் இரசியப் பொருளாதாரம் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது    2014-ம் ஆண்டு இரண்டரை விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த இரசியப் பொருளாதாரம் உக்ரேன் விவகாரத்தால் ஒரு விழுக்கடு மட்டும் வளரும் என இரசியாவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் உலக வங்கி     இரசியப் பொருளாதாரம் இரண்டு விழுக்காடு  வரை சுருக்கமடையலாம் என எதிர்வு கூறியுள்ளது.

நிதியுண்டு பயமில்லை
2014-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இரசியாவில் இருந்து 51 பில்லியன் அதாவது 510 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் வெளியேறிவிட்டன.   சில கணிப்பீடுகள் 71 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள்   இரசியாவில் இருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்கின்றன.   ஏற்கனவே இரசிய பொருளாதாரத்தின் வலுக் குறைந்தபடியால் 2013-ம் ஆண்டு 62 பில்லியன் டொலர் முதலீடு இரசியாவில் இருந்து வெளியேறியது. முழு ஆண்டுக்குமான 62 பில்லியன் வெளியேற்றத்துடன் ஒப்பிடுகையில் 2014 ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான முதலீடு வெளியேற்றம் மிக அதிகமானதாகும். இதுவரை உக்ரேனுக்கு இரசியா கழிவு விலையில் எரிவாயுவை வழங்கி வந்தது.   இப்போது இரசியா உக்ரேனிற்கு வழங்கும் எரிவாயுவின் விலை 80விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரேன் தனது எரிவாயுவை வேறு இடங்களில் இருந்து வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதுவும்  இரசியாவின் வருமானத்தைப் பாதிக்கும். இரசியா தனது குறுங்கால நிதிப் பிரச்சனையை    அதன் கையிருப்பில் உள்ள வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு 400 பில்லியன் அதாவது 4,000 கோடி அமெரிக்க டொலர்களை வைத்துச் சமாளிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இரசியாவின் வட்டி விழுக்காடு 5.5இல் இருந்து 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில்   இரசியப் பங்குச் சந்தை 11விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.   மற்ற வளர்முக நாடுகளின் பங்குச் சந்தை 3விழுக்காடு மட்டுமே வீழ்ச்சியடைந்திருந்தது.  2014 பெப்ரவரி மாதம் 6.2விழுக்காடாக இருந்த இரசியப் பணவிக்கம் மார்ச் மாதம் 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்கின்றது இரசியப் பொருளாதார அமைச்சு.

கடங்காரா???
கடன்படு திறன் மதிபீடு முகவர் அமைப்பான standard & Poor , ரஷ்யாவின் கடன்படு திறன் மதிப்பினைக் குறைத்துள்ளது.    இது இரசியாவின் நாணய மதிப்பிலும் இரசியாவில் வெளியார் முதலீட்டிலும்   பெரும் பாதிப்பை மேலும் ஏற்படுத்தும்.

சரியாத செல்வாக்கு சரியான செல்வாக்கு
ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்   இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்கலாம்.    இதனால் இரசியப் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் எனக் கருதப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை விளடிமீர் புட்டீனை பணியச் செய்யும் என மேற்கு நாடுகள் எண்ணுகின்றன.   ஆனால் இரசியாவில் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இதனால் ஏற்கனவே உக்ரேனின் கருங்கடல் குடாநாடான கிறைமியாவைத் தனதாக்கிக் கொண்ட உக்ரேன் இனி உக்ரேனின் கிழக்குப் பிராந்திய நகரங்களை ஒன்றன் பின் ஒன்றாக தனதாக்கிக் கொள்ளலாம் என நம்பப்படுகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் கிறைமியாவைப் போலவே இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அங்கு உக்ரேன் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்துபவர்கள் இரசியாவின் படைத்துறைப் பயிற்ச்சியை நன்கு பெற்றவர்கள் என்கின்றார் நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதி பிலிப் பிறீட்லவ்.

ஏற்கனவே  உக்ரேன் மீது போர் தொடுக்கும் அதிகாரத்தை   இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் பாராளமன்றத்திடம் இருந்து பெற்றுவிட்டார்.    உக்ரேனிய எல்லையில் பெருமளவு இரசியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 2014 மே மாதம் உக்ரேனில் தேர்தல் நடந்து அங்கு ஒரு உறுதியான அரசு அமையவிடாமல் தேர்தலை குழப்பும் நோக்கம் விளடிமீர் புட்டீனிற்கு உள்ளது என மேற்கு நாட்டுப் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.   நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் இரசியாவின் எல்லை வரை சென்று இரசியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியது. பின்னர் 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் இரசியா புரிந்த தென் ஒஸ்ஸெற்றியப் போருடன் நேட்டோவின் விரிவாக்கம் ஒரு முடிவிற்கு வந்தது.

பெரிய மீனும் சிறிய மீனும்
ஒரு பெரிய நாடு  ஒரு சிறிய நாட்டைத்  தன்னுடன் இணைக்க முயல்வதும் அதை பார்த்துக் கொண்டு மற்ற சில நாடுகள் எதிர்ப்பதும்,  சில நாடுகள் தாம் உண்டு தம் நாடு உண்டு என இருக்க முயல்வதும்   சில நாடுகள் நடுநிலை வகிப்பது போல் காட்டிக் கொள்வதும் சில நாடுகள் தம் பொருளாதாரத்தில் அக்கறை கொண்டிருப்பதும் முதலாம் உலகப் போர் ஆரம்பிக்கும் போது இருந்த நிலை என அண்டுரு ஸ்ரவேர்ஸ் என்னும் ஆய்வாளர் கருத்துத் தெரிவித்துள்ளார். 1914-ம் ஆண்டு உருவான உலகப் போரை அப்போது வலுவாக இருந்த பிரித்தானியாவால் தடுத்திருக்க முடியும் என்பது போல் இப்போது வலுவாக இருக்கும் ஜேர்மனியால் இன்னும் ஒரு ஐரோப்பியப் போரைத் தடுக்க முடியும்.   ஜேர்மனி தனது எரிபொருள்த் தேவையின் பெரும்பகுதியை இரசியாவில் இருந்தே பெற்றுக் கொள்கின்றது. இரசியாவுடனான மோதல்   ஜேர்மனியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.   அதேவேளை 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு   இப்போது ஒரு போர் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை ஏறபடுத்தும்.   ஜேர்மனியும் யூரோ வலய நாடுகளும்   உறுதியாக நின்றால்    இரசியாவை பொருளாதார ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் பணிய வைக்க முடியும்   என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.    2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொண்ட பின்னர்   அமெரிக்கா சிவனே என உட்கார முடியாமல் ஐரோப்பாவில் ஒரு வல்லரசுடன் ஒரு போர் முனையைத் திறக்க முடியுமா எனபதும் பெரும் கேள்வி. ஜேர்மனியுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும் பிரித்தானியா ஜேர்மனியின் விருப்பப்படி நடக்கவே விரும்புகின்றது.
உக்ரேன் மீண்டும் தனது படையை தன் கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. அதற்கு என்ன நடந்தது என்பதை இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதுதான் தெரியும்.

உக்ரேன் விவகாரமும் ஜெனிவா போனது
உக்ரேன் பிராந்தியத்தில் பதட்டத்தைத் தணிக்கும் நோக்குடன் இரசியா, உக்ரேன், ஐக்கிய அமெரிக்கா, ஐரோபிய ஒன்றியம் ஆகியவை ஜெனிவானில் கூடின. அங்கு இரசியா கிறைமியா புதிய இரசியாவின் ஒரு பகுதி என்றது.    உக்ரேனியப் பிரச்சனை அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான பிரச்சனை அல்ல    அது உக்ரேனியர்களின் பிரச்சனை.    உக்ரேனில் வாழும் மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்றது இரசியா.     பெரிய வெள்ளியில் இருந்து உயிர்த்த ஞாயிறுவரை ஒரு மோதல் தவிர்ப்பு கிழக்கு உக்ரேனில் செய்யப் போவதாக அறிவித்தனர்.   ஆனால் அது கடைப்பிடிக்கப்படவில்லை.



வேட்டியை மடிச்சுக் கட்டிய புட்டீன்
கிறைமியா இணைப்பைத் தொடர்ந்து   கருங்கடலுக்குள் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான யூ.எஸ்.எஸ் டொனால்ட் குக்கிற்கு மிக அண்மையாக இரசியாவின் இரு எஸ்யூ-24 போர் விமானங்கள் 90 நிமிடங்களில் 12தடவைகள் மாறி மாறிப் பறந்து சென்றன. எஸ்யூ-24 போர் விமானங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள பலதடைவகள் முயன்ற போதும் பதில் கிடைக்கவில்லை.   இது இரசியா தனது பிராந்திய ஆதிக்கத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை   எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் பத்து இலட்சம் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் கடந்த இருநூறூ நூற்றாண்டுகளாக கிறைமியயவில் தான் வைத்திருக்கும் கடற்படைத் தளத்தை இரசியா என்ன விலை கொடுத்தும் பாது காக்கும் என உலகிற்கு உணர்த்துகின்றது. கிழக்கு உக்ரேனில் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை அடக்கப் போன உக்ரேனியப் படையினர் கட்சி மாறி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்ததாகச் சொல்லப்படுகின்றது. அதே வேளை அங்கு ஏற்கனவே பல இரசியப் படையினர் இரகசியமாக ஊடுருவி விட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஒரு நாட்டின் தயக்கம் இன்னொரு நாட்டின் வாய்ப்பு.
ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தயக்கம் விளடிமீர் புட்டீனுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கின்றது. அத்துடன் பல பொருளாதார நெருக்கடிகள்    இனிவரும் காலங்களில் இரசியாவிற்கு வந்தாலும் இரசிய மக்கள் பெருமளவில் புட்டீனின் பின் நிற்கின்றன. ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற முயன்றால் இரசியா தனது எரிபொருளை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்கலாம். இதனால் புட்டீன்  தனது மேற்கு நோக்கிய இரசிய விரிவாக்கத்தை தொடரலாம். இதற்கு இரசியாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரோபாயச் சொத்தாக மற்ற நாடுகளில் வாழும் இரசியர்கள் இருக்கின்றனர்.   இவர்களுடன் இரசியா நெருங்கிய உறவைப் பேணுகின்றது.   கிறைமியாவை ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் ஒரு துளி இரத்தம் சிந்தாமல் இரசியா தனதக்கியமைக்குக் காரணம் கிறைமியாவில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்வதே.

மோல்டோவா
பதின் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஐரோப்பாவில் வறிய நாடான மோல்டோவா நாட்டில் ஐந்தாயிரம் படையினர் உள்ளனர்.   இரசியா மோல்டோவாவை ஆக்கிரமித்தால்    அந்த ஐயாயிரம் படையினரில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள்    இரசியாவுடன் இணைந்து விடுவார்கள்.     ஏற்கனவே மோல்டோவாவின் ஒரு பிராந்தியமான திராண்ட்னீஸ்டர்(Transdniester) பிரிவினை கோரியுள்ளது. அங்கு இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். 

இரசிய குடியேற்ற ஆட்சியும் நேட்டோவும்
எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இது இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும்.   நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால்   மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து   அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக  வாழுகின்றனர்.ஆரம்பம் முதலே உக்ரேன் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வரும் நாடு போலாந்து. உக்ரேனில் இருந்த இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச் அவர்களை பதவியில் இருந்து அகற்றி அங்கு மேற்குலகிற்கு சார்பான ஒரு ஆட்சியை அமைப்பதில் போலாந்து அதிக அக்கறை காட்டியது. ஐக்கிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் உக்ரேன் சென்று நிலைமைகள் தொடர்பாக உக்ரேன் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட போலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் தோமஸ் சீமோனியக் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெலைச் சந்தித்து உரையாடினார். பின்னர் அமெரிக்கப் படையினர் போலாந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைக்களில் ஈடுபடுவதாக இரு தரப்பினரும் பெண்டகனில் ஒடததுக் கொண்டனர். ஆனால் போலாந்தில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினர் உக்ரேனில் எந்த வித படை நடவடிக்கககளும் மேற்கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.


பணயக் கைதிகள்
உக்ரேனின் தென் கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்க்கில் (Donetsk) உக்ரேன் அரசுக்கு எதிரான இரசியக் கிளர்ச்சிக்காரர்கள் ஐரோப்பாவில் பாதுகாப்புக் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் (Organization for Security and Cooperation in Europe ) கண்காளிப்பாளர்களாகப் பணிபுரியச் சென்ற ஜேர்மனியர்களைப் பணயக் கைதிகளாக்கி உக்ரேனிய அரசு கைது செய்த தமது ஆட்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமநிலையும் சமரசமும்
1991-ம் ஆண்டு நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தன் பொருளாதாரத்தையும் படை வலுவையும் மேம்படுத்திய இரசியா கிழக்கு ஐரோப்பாவில் தன் ஆதிக்க பரப்பை விரிவாக்க முயல்கின்றது. ஐரோப்பாவில் 1991-ம் ஆண்டு குழம்பிய சமநிலை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமநிலையை அடைந்தது. உக்ரேனை தம்முடைய ஆதிக்க வலயத்திற்குள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை என்ற போர்வையில் மேற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இழுத்தபோது இந்தச் சமநிலைக்கு ஆபத்து உண்டானது. பின்னர் 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்ரேன் விவகாரத்துடன் குழம்பிவிட்டது. சிலியில் அலண்டேயின் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்த சதி வேறு லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொல்ல செய்த சதி வேறு. உக்ரேனில் அரபு வசந்தப் பாணியில் மக்களைத் தெருவில் இறக்கி ஆட்சி மாற்றம் செய்யப் பட்டது. அங்கு குழம்பிய சமநிலை ஒரு பொருளாதாரப் போரின் மூலமும் படை நகர்த்தல்கள் மூலமும் மீள் சமநிலப்படுத்தப்படும். ஆனால் நீண்ட காலம் எடுக்கும்.

Saturday, 26 April 2014

இந்தியப் பாராளமன்றத் தேர்தல் மலையாளிகளுக்கு படுதோல்வியைத் தருமா?

2014 ஏப்ரல் 6-ம் திகதியில் இருந்து மே மாதம் 12-ம் திகதிவரை நடக்கும் இந்தியப்  பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் கேரல மாநிலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி மாட்டாது என எதிர்பார்க்கப் படுகின்றது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் காட்சி கேரளாவில் அமோக வெற்றியீட்டியது. அதைத் தொடர்ந்து இந்திய மைய அரசின் அமைச்சரவையில் கேரளாவைச் சேர்ந்த எட்டுப்பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேரளாவைச் சேர்ந்த:
 1 ஏகே அந்தோனி முக்கிய அமைச்சான பாதுகாப்புத் துறை அமைச்சராகவும்,
2, சசி தரூர் மனித வளத்துறை இணை அமைச்சராகவும்,
3. கொடிக்குன்னில் சுரேன் தொழிலாளர் துறை இணை அமைச்சராகவும்,
4. வயலார் ரவி கடல் தாண்டிய இந்தியர் விவகார அமைச்சராகவும்,
5 கே வி தோமஸ் நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச்சராகவும்
6. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள் துறை இணை அமைச்சராகவும்,
7. கேசி வேணுகோபால் வலுவளத்துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றனர்.
 இவர்கள் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஈ அஹமட் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றார்.

இந்தியச் சுதந்திரத்தின் பின்னர் கடவுளின் பூமி எனப்படும் கேரளாவை பொதுவுடமைக் கட்சியினரும் காங்கிரசுக் கட்சியினரும் மாறி மாறி ஆண்டனர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியது. இதுவரை காலமும் எந்த ஒரு பாராளமன்றத் தேர்தலிலோ அல்லது மாநில சட்ட சபைத் தேர்தலிலோ கேரளாவில் பாரதிய ஜனதாக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றதில்லை

கேரளாவில் இம்முறை 2 கோடியே 42லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்களிக்க உள்ளனர். 20 தொகுதிகளில் மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தியாவிலேயா அதிக அளவு படித்தவர்களையும் 25விழுக்காடு முஸ்லீம்களையும், 56விழுக்காடு இந்துக்களையும் கொண்ட கேராளவின் மதவாத்திற்கு ஆதரவு மிகவும் குறைவு. ஆனால் கேரளத் தலித்துக்கள் தாங்கள் காங்கிரசுக் கட்சியால் புறக்கணிக்கப் பட்டதாகக் கருதி சில தலித்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சியை ஆதரிக்கின்றார்கள். ஆனாலும் கேரளாவில் பாரதிய ஜனாதாக் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது என ஒரு கருத்துக் கணிப்பும் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் இன்னொரு கருத்துக் கணிப்பும் தெரிவித்தன. சென்ற முறை 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சி இம்முறை 9 இடங்களிலும் சென்ற முறை நான்கு இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரிகளின் கூட்டணி இம்முறை 11 இடங்களில் வெற்றி பெலாம். இதனால் நாரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சரவையில் இடம் பெறாமல் போகலாம். அத்துடன் புது டில்லி அரசில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் மலையாளி அதிகாரிள் பலரும் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருப்பதாலும் சோனியா காந்திக்கு மலையாளி ஆண்களை மிகவும் பிடிக்கும் என்பதாலும் பல இந்திய மைய அரசின் மலையாள அதிகாரிகளின் தலை உருளலாம்.

Monday, 21 April 2014

காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா?

லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் மே மாதம் 12-ம் திகதி வரை நடக்கும். காந்தி குடும்பம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கான் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு வாழ்வா இறப்பா என்ற நிலையை அடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி தோல்வியடைவது நிச்சயம் அவர்கள் இப்போது ஒரு கௌரவமான தோல்விக்காகப் போராடுகிறார்கள் எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்களைக் கவர முடியாத ராகுல் காந்திக்கு கைகொடுக்க அவரது அக்கா பிரியங்கா காந்தி கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரியங்கா காந்தியின் பரப்புரை காங்கிரசுக்கு பெரிதுக் கைகொடுத்தது. அப்போது  இருந்தது போல் பிரியங்கா இளமையாக இல்லை.  இப்போது அந்த அளவு இளமையும் கவர்ச்சியும் இன்றிக் காணப்படுகின்றார். அத்துடன் பிரியங்காவின் கணவர் ஹரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலங்களை மாநில காங்கிரசு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பெரும் செல்வந்தர் ஆகிவிட்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக நிலவுகின்றது. இதனால் பிரியங்காவின் பரப்புரை சென்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தாது என எதிர் பார்க்கப்படுகின்றது. தலைமைத்துவப் பண்புகளுக்காக நடாத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புக்களில் ராகுல் காந்தி நரேந்திர மோடியுடனும் அரவிந்த் கேஜ்ரிவாலுடனும் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளார். தலைமைத்துவம் என்று வரும் போது ராகுலை விட வேறுயாரும் காங்கிரசுக் கட்சியின் தலைமை அமச்சராக முடியாது என்பது காங்கிரசினது விதி. அது இந்தியாவின் தலைவிதி. பாரதிய ஜனதாக் கட்சியைப்பொறுத்தவரை மோடியை விட்டால் தேர்தலில் வெற்றி ஈட்டித் தரக் கூடிய வேறு தலைவர் இல்லை

இரு புத்தகங்கள்
முன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அதிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

Silent Modeஇல் தொடரும் மன்மோகன் சிங்
எங்கும் தேர்தல் என்று வரும் போது தலைமை அமைச்சராக இருப்பவர் தனது அரசு செய்தவற்றைப் பற்றிப் பொறிபறக்கப் பரப்புரை செய்வார். ஆனால் மன்மோஹன் சிங் இப்போதும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்.

பயனற்றுப் போன அம்புகள்
நரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.
மாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுலின் பலவீனத்தில் தாக்குதல்
ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.

ஊழல்
 கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு.    2ஜி அலைக் கற்றை ஊழல்,  நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.

Sunday, 20 April 2014

இந்திய இரசிய விஞ்ஞானிகள் உருவாக்கும் சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள்

இந்திய இரசிய விஞ்ஞானிகள் இணைந்து சிறிய பிரம்மோஸ்-எம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்திய விமானம் தாங்கிக் கப்பலான விக்கிரமாதித்தியா தாங்கிச் செல்லும் மிக்-29 விமானங்களிலும் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களிலும் இருந்து வீசக்கூடியதாக சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் வழமையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 3 தொன் எடையுள்ளவை. ஆனால் சிறிய ரக பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஒன்றரைத் தொன் எடையுள்ளவையாக இருக்கும். பலதரப்பட்ட தளங்களில் இவை பாவிக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக torpedo tubes of submarines என்னும் சிறிய நீர்மூழ்கிக் கலன்களில் இவை பொருத்தப்படக் கூடியவையாக இருக்கும்.

பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.

20130ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.

இந்தியாவும் இரசியாவும் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது







Tuesday, 15 April 2014

லிபியாவின் அரபு இலையுதிர்காலம்

அரபு வசந்தம் என்னும் பெயரில் நேட்டோப்படைகள் குண்டு மாரி பொழிய கேணல் மும்மர் கடாஃபின் ஆட்சி லிபியாவில் கவிழ்க்கப்பட்டு நீதிக்குப் புறம்பான வகையில் கடாஃபியும் கொல்லப்பட்டார். உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகளுடன் கடாஃபி ஆட்சி செய்த லிபியா இப்போது பிளவு படும் நிலையை அடைந்துள்ளது. பல இனக் குழுமங்கள் பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. பலவீனமான லிபிய மைய அரசுக்கு எதிராக எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களின் மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

லிபிய வரலாற்றில் முதன் முறையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். மொத்தத்தில் லிபியாவில் அரபு வசந்த்ம் அரபு இலை உதிர்காலமாக மாறிவிட்டது. லிபிய அரமைப்புச் சபைக்கான தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது நடந்த வன்முறைகள் இதற்குக் காரணமாகும்.

பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.  கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.

காடாஃபியின் தேச ஒருமைப்பாடு
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.

மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் இருந்தனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி. 
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.   .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.

பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.


கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதி கடாஃபி உட்பட 39 மும்மர் கடாஃபியின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார்கள் என்பது புதிய அரசு எப்படி மக்களாட்சி முறைமையை மதித்து நடக்கும் என்பதற்கான அளவுகோலாகக் கருதப்படுகின்றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.

லிபியாவின் பொதுத் தேசிய சபை

லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்ச்சி எடுக்கின்றது.  அது இடைக்காலத் தலைமை அமைச்சரால அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது அவரது பதவிக்காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்படுகின்றது. லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும் படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடியாதாகவும் ஒரு அமைச்சரவையை அவர் உருவாக்கவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் அப்படி ஒரு அமைச்சரவையை உருவாக்க முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இனக்குழுமங்களையும் படைக்கலன் எந்திய குழுக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் அவரால் ஓர் அமைச்சரவையை உருவாக்க முடியாததால் அவரால் அப்பதவியில் தொடர முடியவில்லை. தான் இடைக்காலத் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.

Sunday, 13 April 2014

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி

ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை  உருவாக்கியுள்ளது. இந்த லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் இணைக்கப்படவுள்ளன. இந்த லேசர் படைக்கலன் முறைமையை ஆங்கிலத்தில் Laser Weapon System எனவும் சுருக்கமாக (LaWS) எனவும் பெயரிடப்பட்டுள்ளன. இந்தப் லேசர் படைக்கலன்கள் விரைவாக அசையும் சிறு படகுகளையும் ஆளில்லா வேவு விமானங்களையும் இலகுவாக தொலைவில் வைத்தே அழிக்கக் கூடியன. இந்த லேசர் படைக்கலன்கள் பொருத்திய Arleigh Burke-class வகையைச் சேர்ந்த USS Dewe நாசகாரிக் கப்பல்கள் மத்திய கிழக்கின் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.

மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய கடற்போக்குவரத்து  நிலையமான ஹோமஸ் நீரிணணக்கு அண்மையாக ஈரான் இருக்கின்றது. இதனால ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது.

ஈரானிற்கு அண்மையில் உள்ள ஹோமஸ் நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்தைப் பாவிப்பதாகக் நம்பப்படுகின்றது. இதற்காக அவர்களின் மிகைவிரைவுப் படகுகளையும் அதன் தொழில் நுட்பத்தையும் இலங்கையிடமிருந்து ஈரான் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் 2010-ம் ஆண்டு அடிபட்டன. இலங்கை அரசின் பெரிய கடற்படைக் கப்பல்களையும் வழங்கு கப்பல்களையும் தாக்கி அழிக்க குளவி குத்தல் தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தனர். இதன்படி இலங்கை அரசின் பெரிய கப்பலை நோக்கி விடுதலைப் புலிகளின் அதிக எண்ணிக்கையான  சிறிய படகுகள் தாக்கச் செல்லும் இலங்கை அரசின் கப்பல் அவற்றை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு கடற்கரும்புலிகளின் படகு மிக வேகமாக இலங்கை அரசின் கப்பலை நோக்கிச் சென்று அத்துடன் மோதி வெடித்து அக்கப்பலை அழிக்கும். ஈரான் இதே முறையை அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படகுகளையும் ஹிஸ்புல்லாப் போராளிகளையும் பாவித்து தாக்குதல் செய்யும் திட்டத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவே கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா ஆய்வு செய்து லேசர் படைக்கலன் முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்துடன் அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிய விரைவாக அசையும் சிறு பொருட்களைத் தொலைவில் இருந்தே இனம் காணும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ஈரானின் திட்டத்தை அமெரிக்கா முறியடிக்கவுள்ளது

குரங்காக மாறிய காங்கிரசின் பிள்ளையர்

ஊழல் எதிர்ப்புக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிற்கு எதிரான வாக்குக்களைப் பிரித்து காங்கிரசின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசின் திரைமறைவு ஆதரவு இருந்ததாகவும் வதந்திகள் அடிபட்டன.

 இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெரும் பங்காற்றவிருக்கின்றது. 180 முஸ்லிம் வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாத நிலை இருக்கின்றது. 35 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 30% இற்கும் அதிகம். மேலும் 180 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 10%இற்கும் அதிகம். இதனால் இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான 543 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றது. 96% அதிகமான முஸ்லிம்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த கல்வி ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த மூன்று அம்சங்களிலும் காங்கிரசு தோல்வி கண்டதாக பரவலான கருத்து நிலவுகின்றது. இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பொதுவான தேர்தல் கட்சியோ அல்லது தேர்தல் கொள்கையோ இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் இவர்களின் வாக்கு வங்கி பல்வேறுபட்ட கட்சிகளிக்காகப் பிளவுபடுகின்றது.

நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரசின் வலுமிக்க படைக்கலன் ஆக இருந்த முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கிக்கு பெரும் ஆபத்து ஆம் ஆத்மி கட்சியினால் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு.    2ஜி அலைக் கற்றை ஊழல்,  நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும்.

காங்கிரசின் உலக சாதனை படைத்த ஊழல்களால் முஸ்லிம் வாக்காளர்களும் காங்கிரசின் மீது பெரு வெறுப்பு அடைந்துள்ளனர். இவர்கள்  காங்கிரசுக்கு எதிராககத் திரும்பி ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். 2009-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்கு காங்கிரசின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றின. பல தொகுதிகளில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளில் 25% முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்குகளே. கணிசமான அளவு முஸ்லிம்கள் மோடி தலைமையில் நல்லாட்சி அமையும் என நம்பி பாரதி ஜனதாக் கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். இதற்கான ஆதரம் டில்லி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஏழு பாரளமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பின் போது கிடைத்ததாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரசின் மூத்த அமைச்சரான கபில் சிபால் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் சாய்வதால தோல்வியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது அதிக அளவிலான முஸ்லிம்களைக் கொண்ட டில்லிப் பிராந்தியம் இதுவரை முஸ்லிம்களின் வாக்கு வங்கியால் காங்கிரசின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் இம்முறை நடந்த தேர்தலில் அதிக அளவிலான முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தமையினால் நரேந்திர மோடி தலைமையிலான  பாரதிய ஜனதாக் கட்சி டில்லிப் பிராந்தியத் தொகுதிகளில் பெரும் வெற்றி ஈட்டும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...