Sunday, 13 April 2014

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி

ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை  உருவாக்கியுள்ளது. இந்த லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் இணைக்கப்படவுள்ளன. இந்த லேசர் படைக்கலன் முறைமையை ஆங்கிலத்தில் Laser Weapon System எனவும் சுருக்கமாக (LaWS) எனவும் பெயரிடப்பட்டுள்ளன. இந்தப் லேசர் படைக்கலன்கள் விரைவாக அசையும் சிறு படகுகளையும் ஆளில்லா வேவு விமானங்களையும் இலகுவாக தொலைவில் வைத்தே அழிக்கக் கூடியன. இந்த லேசர் படைக்கலன்கள் பொருத்திய Arleigh Burke-class வகையைச் சேர்ந்த USS Dewe நாசகாரிக் கப்பல்கள் மத்திய கிழக்கின் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.

மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய கடற்போக்குவரத்து  நிலையமான ஹோமஸ் நீரிணணக்கு அண்மையாக ஈரான் இருக்கின்றது. இதனால ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது.

ஈரானிற்கு அண்மையில் உள்ள ஹோமஸ் நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்தைப் பாவிப்பதாகக் நம்பப்படுகின்றது. இதற்காக அவர்களின் மிகைவிரைவுப் படகுகளையும் அதன் தொழில் நுட்பத்தையும் இலங்கையிடமிருந்து ஈரான் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் 2010-ம் ஆண்டு அடிபட்டன. இலங்கை அரசின் பெரிய கடற்படைக் கப்பல்களையும் வழங்கு கப்பல்களையும் தாக்கி அழிக்க குளவி குத்தல் தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தனர். இதன்படி இலங்கை அரசின் பெரிய கப்பலை நோக்கி விடுதலைப் புலிகளின் அதிக எண்ணிக்கையான  சிறிய படகுகள் தாக்கச் செல்லும் இலங்கை அரசின் கப்பல் அவற்றை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு கடற்கரும்புலிகளின் படகு மிக வேகமாக இலங்கை அரசின் கப்பலை நோக்கிச் சென்று அத்துடன் மோதி வெடித்து அக்கப்பலை அழிக்கும். ஈரான் இதே முறையை அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படகுகளையும் ஹிஸ்புல்லாப் போராளிகளையும் பாவித்து தாக்குதல் செய்யும் திட்டத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவே கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா ஆய்வு செய்து லேசர் படைக்கலன் முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்துடன் அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிய விரைவாக அசையும் சிறு பொருட்களைத் தொலைவில் இருந்தே இனம் காணும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ஈரானின் திட்டத்தை அமெரிக்கா முறியடிக்கவுள்ளது

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...