பலஸ்த்தீனிய இஸ்லாமிய புனிதப் போர் அமைப்பினர் ஐந்து பேரும் அக்சா மாவீரர் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி ஜகாரியா ஜுபெய்தி ஆகியோர் இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க ஜிபோவா சிறையில் இருந்து 2021 செப்டம்பர் 5-ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தப்பி ஓடினார்கள். அவர்கள் சுரங்கம் வெட்டி அதனூடாக தப்பி ஓடினார்கள் எனப்படுகின்றது. ஜகாரியா ஜுபெய்தி Intifada என்னும் கல்லெறி போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் என்பது மட்டுமல்ல பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு உபாயங்கள் வகுத்தவரும் ஆவர். 1976-ம் ஆண்டு பிறந்த ஜுபெய்தி இஸ்ரேலிய அரசால் மிகவும் தேடப்பட்டவராக இருந்தவர். பின்னர் 2007-ம் ஆண்டு இஸ்ரேலின் பொதுமன்னிப்பு உடன்பட்டு தனது படைக்கலன்களை பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையிடம் கையளித்தவர். ஆனால் அவருக்கு வழங்கிய மன்னிப்பை 2011 டிசம்பரில் இரத்துச் செய்தது.
தப்பி ஓடியவர்களில் நால்வர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள். ஜகாரியா ஜுபெய்தியின் மீதும் மற்றொருவர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 1998-ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்த்தீனியர்கள் தப்பி ஓடியுள்ளனர். மொனடேல் யக்கூப் நபீட் , யக்கூப் காசிம், யக்கூப் முகம்மது கத்ரி, நயீம் கமாம்ஜீ, மக்மூட் அப்துல்லா ஆடா, என்பன ஜகாரியா ஜிபெய்தியுடன் தப்பிச் சென்ற மற்றக் கைதிகளின் பெயர்கள் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கழிப்பறையில் இருந்து சுரங்கம் தோண்டுவதற்கு வெளியார் உதவி கிடைத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.
இஸ்ரேலின் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து பலஸ்த்தீனிய போராளிகள் தப்பிச் சென்றது இஸ்ரேலுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல் என பல போராளி அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இது மன உறுதியுடன் தொடர்ச்சியாகப் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தமக்கு தருவதாக பல போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களைப் போல் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். காசா நிலப்பரப்பில் ஹமாஸ் போராளிகள் இனிப்பு பரிமாறினர்.
இஸ்ரேலிய தலைமை அமைச்சர் இந்த சிறைத் தப்பி ஓட்டத்தை ஒரு கடுமையான நிகழ்வு (Serious Incident) என்றார். உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு.
No comments:
Post a Comment