2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இப்படி நடப்பதாக கூறுகின்றார்கள். இம் மூன்று மத்தினருக்கும் புனித இடமான ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரில் எப்போதும் போல் இல்லாத வகையில் இஸ்ரேலியர்களும் 2022 ஏப்ரலில் அரபுக்களும் மோதிக் கொண்டனர். ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் புனித இடமாகக் கருதப்படுகின்றது. இறை தூதர் நபி வர முன்னர் மட்டுமல்ல பரபிதா தன் ஒரே ஒரு குமாரரை புவியில் உள்ள பாவிகளை இரட்சிக்க அனுப்ப முன்னரே ஜெருசேலத்தில் பழைய நகர் யூதர்களின் புனித இடமாக இருந்து வருகின்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜெருசேலம் உலகன் நடுப்புள்ளியாக இருந்ததாகத யூதர்கள் கருதுகின்றனர். யூதர்களின் புனித இடமான மலைக்கோவில் (Temple Mount) ஜெருசேலம் பழைய நகரில் உள்ளது. இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் புவியில் இருந்து வானுலகம் நோக்கி பயணைத்த புனித இடம் ஜெருசேலம் எனச் சொல்கின்றனர். அவரகள் ஜெருசேலம் பழைய நகரில் அல் அக்சா என்னும் பள்ளிவாசலை உருவாக்கி அதை அவர்கள் மக்கா, மதினா போன்ற மிகப் புனிதமான இடமாக கருதுகின்றனர். யேசு நாதர் போதனை செய்த, சிலுவையில் அறையப்பட்ட, உயிர்த்து எழுந்த தலம் ஜெருசேலம் நகராகும். ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரைச் சுற்றி மதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அங்கு கிருத்தவர்களுக்கு எனவும், ஆர்மினியர்களுக்கு எனவும் (அவர்கள் மரபுவழி கிருத்தவர்கள்) யூதர்களுக்கு எனவும் இஸ்லாமியர்களுக்கு எனவும் தனித்தனி நிலப்பரப்புக்கள் உள்ளன.
1967 போர் வெற்றி ஊர்வலம்
யூதர்கள் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் தாம் வெற்றி பெற்றதையும் தங்களது புனித தலமாகிய கிழக்கு ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியதையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதை ஒட்டி அவர்கள் தங்கள் கொடியுடன் பழைய நகர் முழுவதும் ஊர்வலம் போவார்கள். போகும் போது பலஸ்த்தீனிய அரபுக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் அரபுக்கள் அழிக என கூச்சலிட்டுக் கொண்டு யூதர்கள் செல்வார்கள். கிழக்கு ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் இஸ்லாமியர்களின் நிலப்பரப்புக்களூடாக ஊர்வலம் செல்வார்கள். 2022 ஏப்ரல் 17-ம் திகதி உயிர்த்த ஞாயிறு நடந்த மோதலைத் தொடர்ந்து மே மாதம் 29-ம் திகதி யூதர்கள் ஊர்வலம் போகும் போது மோதல் கடுமையாக இருந்தது. 2022 மே மாதம் 29-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 150இற்கும் மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் காயமடைந்தனர். மூன்று யூத காவல் துறையினர் காயமடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். அல் அக்சாவினுள் பலஸ்த்தீனியர்கள் நுழைய முடியாமல் இஸ்ரேலியர் தடுத்து நின்றனர். பலஸ்த்தீனியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஒரு இளம் பெண் கடுமையாகத் தாக்கப் படும் காணொலிவெளியிடப்பட்டுள்ளது.
தீவிரவாத இஸ்ரேலியர்கள்
இஸ்ரேலின் தீவிரதேசியவாதக் கட்சியின் தலைவரான இதமர் பென் வீர் தலைமையில் பல தீவிரதேசியவாத யூதர்க்ள் 2021-05-29 ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சாவை ஆக்கிரமித்திருந்தனர். அல் அக்சாவின் அல் கிபிலி வணக்க மண்டபத்தில் அவர்கள் நிலை கொண்டுள்ள்னர். பலஸ்த்தீன செம்பிறைச் சங்கம் தமது அவசர நோயாளர் வண்டி காயமடைந்தவர்களை எடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தீவிரவாத யூதர்கள் இஸ்லாமியர்களின் அல் அக்சா பள்ளிவாசலையும் மலைக் குவிமாடத்தையும் (Dome of the Rock) அகற்றிவிட்டு யூதர்களின் வழிபாட்டிடங்கள் அமைக்கப் படவேண்டும் என அடம் பிடிக்கின்றனர். இஸ்ரேலியச் சட்டப்படியும் யூத தலைமை மத குருவின் கட்டளைப்படியும் யூதர்கள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையை நடத்தக் கூடாது. இருந்தும் 2022 மே மாதம் யூத தீவிரவாதிகள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையைச் செய்தனர்.
2021 மோதலில் காசா நிலப்பரப்பில் கடும் தாக்குதல்
2021-ம் ஆண்டு மே மாதம் ரம்ழான் நோன்பு தொழுகையின் போது அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கியில் இருந்து வரும் ஒலி யூதர்களின் போர் வெற்றிக் கூட்டத்தில் ஆற்றுகின்ற உரைக்கு இடையூறாக இருந்ததால் இஸ்ரேலிய காவல் துறையினர் அல் அக்சாவினுள் சென்று ஒலிபெருக்கியை உடைத்தனர். அப்போது இரு தரப்பு மோதல் உருவானது. பல்ஸ்த்தீனியர்கள் கற்களையும் இஸ்ரேலிய காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த மோதலால் சினமடைந்த கமாஸ் அமைப்பினர் தமது காசா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். அதனால் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலியப் படையினர் கடும் தாக்குதல்களை செய்தனர். பதினொரு நாட்கள் தொடர்ந்த மோதலில் அரபு பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பல கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. 2022 நடக்கும் மோதலில் இதுவரை கமாஸ் அமைப்பினர் அமைதியாக இருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 2021-ம் ஆண்டு கமாஸிற்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் அது மீளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது கமாஸ் அமைப்பினர் தமது மக்களின் பொருளாதார நிலை மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் எனவும் கருத இடமுண்டு.
- The International Union of Muslim Scholars இஸ்லாமிய நாடுகள் அல் அக்சா பள்ளிவாசலை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1967இல் நடந்த போரில் கிழக்கு ஜெருசேலத்தை ஜோர்தானிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துக் கொண்டது. 2019இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் போது அதை இஸ்ரேலின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் கிழக்கு ஜெருசேலம் யூதர்களுக்கு சொந்தமானது அல்ல எனக் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி கிழக்கு ஜெருசேலம் ஓரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும். பன்னாட்டு சட்டங்களின் படி ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆக்கிரமித்த நாடு குடியேற்றங்களைச் செய்ய முடியாது. பன்னாட்டு நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு இசுலாமியர்களின் புனித இடமாகிய அல் அக்சாவை இழிவுபடுத்தும் இஸ்ரேலுடன் உறவை எப்படி வளர்ப்பது என்பது பற்றி பல அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இசுலாமியர்களின் முப்பெரும் புனித இடங்களில் ஒன்றான அல் அக்சாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வழிபட முடியவில்லை. அரபு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளின் நகர்வுகளை நன்கு அவதானிக்கும் இஸ்ரேலிய உளவுத்துறையின் உதவி அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு தமது நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றாமல் அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள்.
No comments:
Post a Comment