இஸ்ரேலியத் தலைமை அமைச்சர்
பெஞ்சமின் நெத்தன்யாஹூ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்பை எனது நண்பன் என்றே விளிப்பார். டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபைக்கான
அமெரிக்கத் தூதுவராக நியமித்த நிக்கி ஹேலி இஸ்ரேலில் தேர்தலில் போட்டியிட்டால்
பெரு வெற்றி பெறும் அளவிற்கு இஸ்ரேலியர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
31-12-2018 பதவியில் இருந்து விலகிய அவர் தன் பதவிக் காலத்தில் இஸ்ரேலுக்கு
மிகவும் சாதகமாக நடந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன்
ஜெரார்ட் குஷ்ணர் யூதர். அவர் யூத மரபுகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதுடன்
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர். அத்துடன் அவர் சவுதி அரேபிய இளவரசன் பின் சல்மனுடன்
நெருங்கிய நட்பானவரும் ஆவார்.
அமெரிக்க அதிபராக இஸ்ரேலின்
கையாள்
நிக்கி ஹேலி அமெரிக்காவின்
ஐநாவிற்கான தூதுவர் பதவியில் இருந்து விலகியது டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
ஜோன் போல்ரனையும் வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோவையும் ஆச்சரியப்பட
வைத்தது. டிரம்ப், போல்ரன் பொம்பியா ஆகிய மூவரையும் முந்திக்
கொண்டு நிக் ஹெலி இரசியாவிற்கு எதிராக மேலதிக பொருளாதாரத் தடை கொண்டு வரப்படும் என
நிக்கி அறிவித்திருந்தார். இது அவருக்கு எதிராக பல வெள்ளை மாளிகை அதிகாரிகளைத்
திருப்பியது. அதனால் அவர் பதவி விலக வேண்டிய சூழல் உருவானது எனச் சில செய்திகள்
சொல்கின்றன. இருந்தும் இஸ்ரேலுக்கு மிக வேண்டியவரான நிக்கி ஹேலி அமெரிக்க அதிபராக்க யூதப் பெரும் செல்வந்தர்கள்
ஆயத்தம் செய்கின்ரார்கள். அதற்கான வேலைகளைக் கவனிக்கவே நிக்கி ஹேலி பதவி விலகினார்
என்றும் சில செய்திகள் அடிபடுகின்றன.
மேற்குகரைக் குடியேற்றங்களை டிரம்ப் ஆதரிக்கின்றாரா?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்படுவதற்கு முந்திய 22 மாதங்களில்
பலஸ்த்தீனிய மேற்குக் கரையில் யூதர்களுக்கு 4476 குடியிருப்பு வீடுகள்
கட்டப்பட்டன. டிரம்ப் அமெரிக்க அதிபராகிய பின்னரான 21 மாதங்களில் அங்கு 4476
வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதாவது பலஸ்த்தீனிய நிலங்களை அபகரித்து யூதர்கள்
குடியேறுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் டிரம்ப் இஸ்ரேலுக்கு
ஆதரவாகச் செயற்படுவதுதான். இரசியாவில் உள்ள யூதப் பெரும் செல்வந்தர்கள் டிரம்பை
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்ல வைக்க இரசிய அதிபர் புட்டீனுக்கு ஊக்கம்
கொடுத்தனர் எனவும் சில செய்திகள் குற்றம் சாட்டுகின்றன. 1949-ம் ஆண்டு உலக நாடுகள் கையொப்பமிட்டு உருவாக்கிய ஜெனிவா
நான்காவது உடன்படிக்கையின் படி ஆக்கிரமித்த ஒரு நாடு ஆக்கிரமித்த நாட்டில் தனது
மக்களைக் குடியேற்ற முடியாது.
இஸ்ரேலியத் தலைநகராக ஜெருசேலம்
ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக்குவதை டிரம்ப்
ஏற்றுக் கொண்டார். 2017-ம் ஆண்டு டிசம்பரில் இதை அமெரிக்கா திரும்பப் பெறவேண்டும்
என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் எகிப்த்தால்
முன்மொழியப்பட்டது. பாதுகாப்புச் சபையில்
அமெரிக்காவைத் தவிர எல்லா நாடுகளும் அதை ஆதரித்தன. அப்போது ஐநாவிற்கான அமெரிக்கத்
தூதுவராக இருந்த நிக்கி ஹேலி தன் கைவளையல்
கலகலவென ஒலிக்க சுட்டு விரல் நீண்டிருக்க தன் வலது கையை உயர்த்தி அத்தீர்மானத்தை
நிராகரித்தார்.
பலஸ்த்தீனத்தின் ஐநா முழு
உறுப்புரிமை முயற்ச்சி
2014-ம் ஆண்டு 29-ம் திகதி பலஸ்த்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்
கொள்ளும் முன் மொழிவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஜோர்தான் முன்வைத்தது.
இந்த முன்மொழிவில் இஸ்ரேல் பலஸ்த்தீனத்துடனான பேச்சு வார்த்தைகளை ஓராண்டுக்குள் முடிவுக்குக்
கொண்டு வரவேண்டும், (ஜோர்தானிய ஆற்றின்) மேற்க்கும் கரையிலும்
கிழக்கு ஜெருசலத்தில் இருந்தும் இஸ்ரேலியப் படைகள் மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும், கிழக்கு ஜெருசலம் பலஸ்த்தீனத்தின் தலைநகராக்கப்பட வேண்டும், பலஸ்த்தீனியர்களில் நிலங்களில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்
போன்ற கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஜோர்தானின் முன்மொழிவை இரசியா, சீனா, பிரான்ஸ், ஆர்ஜெண்டீனா, சாட், சிலி, லக்சம்பேர்க், ஆகிய எட்டு நாடுகள் ஆதரித்தன. ஐக்கிய இராச்சியம், லித்துவேனியா, நைஜீரியா, கொரியக் குடியரசு, ருவண்டா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்காவும்
அவுஸ்திரேலியாவும் எதிர்த்து வாக்களித்தன. ஐந்து வல்லரசு நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகவும்
பத்து நாடுகளை தற்காலிக உறுப்பினர்களாகவும் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்
சபையில் வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் ஜோர்தானின் முன் மொழிவு நிராகரிக்கப்பட்டது. 2017 டிசம்பரில் ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக்குவதற்கு எதிரான தீர்மான முன்மொழிவு தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள்
சபைக்கான பலஸ்த்தீன தூதுவர் டானி டன்னும் பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையின் அதிபர்
மஹ்மூட் அப்பாஸும் ஐக்கிய நாடுகள் சபையில் முழு உறுப்புரிமை பெறும் எனச்
சூளுரைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் பன்னாட்டரங்கில் தமது உறுப்புரிமைக்கு
ஆதரவாக ஆதரவு திரட்ட கடும் முயற்ச்சி மேற்கொண்டனர். இதற்கு எதிராக இஸ்ரேல் செய்த
பரப்புரையால் அந்த முயற்ச்சியை பலஸ்த்தீனியர்கள் கைவிட்டனர்.
பன்னாட்டு நீதிமன்றில் இஸ்ரேலை நிறுத்த முடியாது
பலஸ்த்தீனிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட் அப்பாஸ் பலஸ்த்தீனத்தை பன்னாட்டு நீதிமன்றில்
ஓர் உறுப்பு நாடாக 2015இல் இணைத்தார்.ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள்
பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தி வந்தன.
பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும்
நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு
மிரட்டியது. இவற்றின் மத்தியில் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் தன்
உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. 2018 மே மாதம் பலஸ்த்தீனியர்கள் பன்னாட்டு நீதி மன்றில் இஸ்ரேலை
விசாரிக்கும் படி முறையிட்டனர். 2017-ம் ஆண்டு ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளரின் அறிக்கையையும் தமக்கு
ஆதரவாக அவர்கள் முன்வைத்தனர். ஏற்கனவே (2015)பன்னாட்டு நீதி மன்ற வழக்குத் தொடுனர் (Prosecutor Fatou Bensouda) பலஸ்த்தீனத்தில் நடப்பவை தொடர்பாக விசாரணையை ஆரம்பித்திருந்தார். பன்னாட்டு நீதி
மன்ற விசாரணையாளருக்கு இஸ்ரேலுக்கு எதிரான ஆதாரம் நிறைந்த தகவல்களைத் திரட்டுவதி சிரமம்
இருக்கின்றது. அல் ஹக் என்ற பலஸ்த்தீனிய தன்னார்வ மனித உரிமைகள் அமைப்பு தகவல்களைத்
தொடர்ந்து வழங்கி வருகின்றது. பன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம்
உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது
இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம் (விசாரிக்கும் உரிமை)
இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே
உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் அதன் மீது இந்த நீதிமன்றில்
குற்றம் சாட்ட ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பும் தேவைப்படும். பாதுகாப்புச்
சபையின் ஒத்துழைப்பைப் பெறாமல் பார்த்துக் கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா
இருக்கின்றது.
F-35 விமானங்கள் இஸ்ரேலிற்கு
தனித்துவமாக உருவாக்கப்பட்டன.
தற்போது உலகின் மிகச் சிறந்த போர்விமானமாகக்
கருதப்படும் அமெரிக்காவின் F-35 விமானங்களை ஐக்கிய இராச்சியம், இத்தாலி, ஒஸ்ரேலியா, கனடா, நோர்வே, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு
அமெரிக்கா விற்பனை செய்தது. அதில் இஸ்ரேல் மட்டும்தான் இரகசியமாக F-35
சிரியாவில் தாக்குதல் செய்யப் பயன்படுத்தியது. தனக்கு ஏற்ற வகையில் அந்த
விமானங்களில் மாற்றங்கள் செய்து தரவேண்டும் என பல நாடுகள் வேண்டுகோள்
விடுத்திருந்தன. ஆனால் இஸ்ரேலுக்கு மட்டுமே அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின்
நிறுவனம் மாற்றங்கள் செய்யப்பட்ட விமானங்களை விநியோகிக்க ஒத்துக் கொண்டது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா
ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான
உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை டிரம்ப் ஒருதலைப்பட்சமாக வெளியேற்றினார். இது
இஸ்ரேலினதும் சவுதி அரேபியாவின் தூண்டுதலின் பேரிலும் அமெரிக்கா மேற்கொண்ட
நகர்வாகும். அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின்
எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டதுடன் ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொண்டா அவற்றுக்கு தண்டம்
விதிக்கின்றது.
பலஸ்த்தீனம் யுனெஸ்க்கோவில் இணைய அமெரிக்க எதிர்ப்பு.
யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம் இணைந்தமைக்கு எதிர்ப்பு
தெரிவித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்க்கோவில் இருந்து 2018இன் இறுதியில் இருந்து
விலகிக் கொண்டன. ஐநாவின் ஒரு துணை அமைப்பான யுனெஸ்க்கோவை ஆரம்பித்த நாடுகளில் ஒன்றான
அமெரிக்கா அதன் நிதி வரவில் 22விழுக்காட்டை பங்களிப்பாக செய்து வந்தது.
இஸ்ரேலை அதிருப்திப்படுத்தும் அமெரிக்காவின்
நகர்வுகள்
இஸ்ரேலை அதிருப்திப் படுத்தும் சில நகர்வுகளை
அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் செய்திருந்தார். ஒன்று சிரியாவில் இருந்து
அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்ற அறிவிப்பு. இரண்டாவது ஈரான் தனக்குத்
தேவையானவற்றை சிரியாவில் செய்யலாம் என டிரம்ப் கருத்து வெளியிட்டது. முதலாவது
நகர்வை பின்னர் டிரம்ப் சற்று மாற்றிக் கொண்டார். சிரியாவில் இருந்து அமெரிக்கப்
படைகள் படிப்படியாகவே வெளியேறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நகர்வு
டிரம்ப் வழமையாக டுவிட்டரில் செய்யும் அதிரடிகளில் ஒன்றாகும். இஸ்ரேலின்
திருத்தியபதிப்பு F-16 (அமெரிக்க உற்பத்தி) போர் விமானங்களை
குரோசியாவிற்கு இஸ்ரேல் விற்பனை செய்வதற்கு டிர்ம்பின் நிர்வாகம் அனுமதி
கொடுக்கவில்லை. இஸ்ரேல் வசமுள்ள 20 ஆண்டுகள் பாவித்த F-16 போர்விமானங்களை
குரோசியாவிற்கு விற்பனை செய்ய முயன்றது. அதற்கு அமெரிக்காவின் அனுமதியை இஸ்ரேல் பெறாமல்
விற்பனை செய்தமை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விற்பனை நிபந்தனைகளை மீறிய
செயல் என அமெரிக்கா கருதியது.
மேற்காசியாவில் டொனால்ட் டிரம்பின் கொள்கை
ஒபாமாவின் கொள்கையின் தொடர்ச்சியே. அமெரிக்காவின் மேனா பிரதேசம் என சுருக்கமாக
அழைக்கப்படும் மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிரதேசத்திற்கான கொள்கை முக்கியமாக
மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது:
1. உலக எரிபொருள் விநியோகம்
2. இஸ்ரேலின் பாதுகாப்பான இருப்பு
3. ஈரானையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும்
அடக்குதல்.
2017-ம் ஆண்டே அமெரிக்கா எரிபொருள் உற்பத்தியில்
தன்னிறைவு பெற்றுவிட்டது. எரிபொருளுக்காக மேனா பிரதேசத்தில் எரிபொருளுக்கான
அமெரிக்காவின் கேந்திரோபாய முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் மற்ற
நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தையும்
பாதிக்கும். அதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் இந்தியாவும் சீரான எரிபொருள்
விநியோகத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது.
No comments:
Post a Comment