இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா,
ஜோர்தான ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையில் 1967-ம் ஆண்டு ஜூன் 5-ம் திகதி
முதல் 11-ம் திகதி வரையிலான ஆறு நாட்கள் போர் நடந்து
ஐம்பது ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் இஸ்ரேல் படைத்துறை, தொழில்நுட்பம், பொருளாதாரம்
ஆகியவற்றில் அசைக்க முடியாத ஒரு நாடாக வளர்ந்து விட்டது. அரபு நாடுகள் உள்நாட்டுப்
போர்களாலும் நாடுகளிடையிலான பூசல்களாலும் பெரும் குழப்ப நிலையில் உள்ளன.
குழப்பங்கள் மிகு அரபுநாடுகள்
இஸ்ரேலை ஒழித்துக் கட்ட
வேண்டும் என 1967-ம்
ஆண்டு சூழுரைத்த நாடுகள்
இப்போது தமது பிரச்சனைகளுக்குள் மூழ்கிப்
போய் இருக்கின்றன. சினாய் பாலைவனத்தில்
செயற்படும் ஐ எஸ் அமைப்பினர்
மீது எகிப்தும், சவுதி அரேபியாவும்
ஐக்கிய அமீரகமும் யேமனிலும்,
எகிப்தும் ஐக்கிய அமீரகமும்
லிபியாவிலும், ஜோர்தானும் துருக்கியும்
சிரியாவிலும் ஈராக்கிலும் தமது
கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.
இவை போதாது என்று
கட்டார் நாட்டுக்கும் மற்ற
வளைகுடா நாடுகளுக்கும் இடையில்
முறுகல் நிலை தோன்றியுள்ளது. அரபு நாடுகளால்
இப்போது இஸ்ரேலுக்கு எதிராக ஏதும்
முடியாத அளவிற்கு இஸ்ரேல்
வலுவாக இருக்கின்றது. இஸ்ரேலின் நில
அபகரிப்புக்களுக்கும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கும் இந்த நாடுகள் அவ்வப்போது
குரல் கொடுக்க மட்டுமே
முடியும். பலஸ்த்தீனியர்களுக்கு என்று
ஒரு நாடு உருவாகுவது சாத்தியமற்ற
ஒன்றாகும்.
இஸ்ரேலின் உருவாக்கம்
1948-ம் ஆண்டு பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம்
கையளித்தது. பலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமியர்களுக்கு என ஓர் அரசு உருவாகாமல் தடுக்கும்
நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது
என்பதே நோக்கம். ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின்
(UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு
நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப்
பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும்
7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல்
தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும்
ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
தற்போதைய இஸ்ரேல், காசா நிலப்பரப்பு, மேற்குக் கரை ஆகிய
மூன்றையும் உள்ளடக்கியதே பலஸ்த்தீனம் அது அரபுக்களுடையது என்பது அரபுக்களின்
நிலைப்பாடாக இருந்தது.
அரபுக்களின் ஆத்திரம்
இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக்
கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும்
புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன.
இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன்
இணைத்துக் கொண்டது.
புலிவருது என ஏமாற்றிய இஸ்ரேல்
இஸ்ரேலிய விமானங்கள் காலை 7 மணியளவில் வானில் பறப்பதை
அரபு நாட்டு ரடார்கள் அவதானித்தன. வானில் பறக்கும் விமானங்கள் சிறிய தூரம் பறந்து
விட்டு ரடார் அலைவரிசைகளுக்கு புலப்படாத உயரத்தில் பறந்து விட்டு பின்னர் தமது
தளம் திரும்பும். இது ஒரு நாள் அல்ல இரு நால் அல்ல இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து
நடந்தது. ஆனால் 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் திகதியும் அதே மாதிரி நடந்தது. வழமை
போல அரபு நாட்டு விமானங்கள் அவற்றை அவதானித்து விட்டு வழமை போல் பேசாமல் இருந்து
விட்டன. ஆனால் அன்றைய நாள் இஸ்ரேலிய விமானங்கள் எகிப்த்தினுள் பறந்து சென்று
எகிப்திய விமானங்களை ஏறக்குறைய முற்றாக அழித்தன. அது அரபு நாடுகளுக்கும்
இஸ்ரேலுக்கும் இடையிலான ஆறு நாட் போரை ஆரம்பித்து வைத்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஒரு
போரைத் தொடுத்து அதை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தழிக்க வேண்டும் என சூளுரைத்த
நாடுகள் திணறடிக்கப்பட்டன.
ஒற்றைக் கண்ணால் ஒரு தொலை நோக்கு
1967-ம் ஆண்டு இஸ்ரேலின் போர் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் ஒரு கண்ணைப் போரில்
இழந்த தளபதி மோஸே தயான். 1967 போரில் அரபுக்கள் தோல்வியடைந்த பின்னர் பலஸ்த்தின அரபுக்கள்
மேற்குக் கரையில் இருந்தும் வெளியேறத் தொடங்கினர். ஆனால் மோஸே தயான் அவர்களைத் தடுத்து
அங்கேயே இருக்கும்படி செய்தார். அவர்களுக்கு வேண்டிய கல்வி மற்றும் இருப்பிட வசதிகளைச்
செய்து கொடுத்தார். இது அவர் செய்த பெரும் பிழை எனச் சில இஸ்ரேலியர்கள் வாதிடுகின்றனர்.
அவர்களை அப்போது மேற்குக் கரையில் இருந்தும் காஸாவில் இருந்தும் முழுமையாக விரட்டியிருக்க
வேண்டும் என்கின்றனர் அவர்கள். ஆனால் முழுமையாக விரட்டப்பட்டால் அது இன்னும் பெரிய
ஆபத்தாக மாறியிருக்கும் என்பது மோஸே தயானின் கணிப்பாக இருந்திருக்கலாம்.
ஈர் அரசுத் தீர்வும் நல்லிணக்கம் போலவே
மூன்று புறங்கள் தன்னை அழிக்க முயலும் அரபு
நாடுகளாலும் நான்காம் புறம் மத்திய தரைக்கடலாலும் சூழப்பட்ட சிறு நிலப்பரப்பு
இஸ்ரேலாக 1967-ம் ஆண்டின் முன்னர் இருந்தது. 1967-ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக
இஸ்ரேல் நில அபகரிப்பையும் யூதக் குடியேற்றத்தையும் செய்து கொண்டிருக்கின்றது.
இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற அரபு நாடுகளிடம் பலஸ்த்தீனியர்களுக்கு
என ஓர் அரசு, இஸ்ரேலுக்கு ஓர் அரசு என ஈர்
அரசுத் தீர்வை முன்வைத்தது அமெரிக்கா. அதற்கு நிபந்தனையாக அரபு நாடுகள் இஸ்ரேலின்
இருப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டது. அரபு நாடுகள் அதை ஏற்றுக்
கொண்டன. ஆனால் ஈரான் இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 1967-ம் ஆண்டுக்கு முன்னர்
இருந்த எல்லைகளுக்கு ஏற்ப பலஸ்த்தீனிய இஸ்ரேல் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்
என பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு இஸ்ரேலில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
கார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும். 1967 ஓகஸ்ட் மாத இறுதியில்
சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி
ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம்
இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின்
முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன்
அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார்.
இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின்
பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க
டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து
அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலால் மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த
மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.
பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம்
1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் 1967-ம் ஆண்டின் பின்னர்
இஸ்ரேலுக்கு எதிராகப் பலவகையில் போராடியது. அதற்கு எதிராக ஜோர்தான் 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல்
நடத்தியது. அது கறுப்பு செப்டம்பர் என அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர்
சிரியாவும் லெபனானில் தங்கியிருந்த பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினர் மீது
தாக்குதல் நடத்தியது. பலஸ்த்தீனிய விடுதலை இயக்கமும் அதன் தலைவரும் பல்வேறு பேச்சு
வார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இஸ்ரேலின் நில அபகரிப்புக்களையோ
அத்து மீறிய குடியேற்றங்களையோ அது மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களையோ ஜெனீவாவில்
உள்ள மனித உரிமைக்கழகம் தடுக்கவுமில்லை தண்டிக்கவுமில்லை.
இஸ்ரேலிய வான்படை
1967-ம் ஆண்டு நடந்த போரில் வான் ஆதிக்கம்
போரை வெல்லும் என்பதை இஸ்ரேல் உணர்ந்து கொண்டது. தன்னிலும் பார்க்க பல மடங்கு
படையினரைக் கொண்ட அரபு நாடுகளை இஸ்ரேலால் வெற்றி கொள்ளக் கூடிய நிலையை
உருவாக்கியது. 1967இல்
நடந்த போரில் பிரெஞ்சுத்
தயாரிப்பு மிராஜ் போர்விமாங்கள்
சிறப்பாகச் செயற்பட்ட பின்னர்
தனது நாட்டில் உள்ள
இஸ்லாமியர்களினதும் இஸ்லாமிய நட்பு
நாடுகளினதும் வெறுப்பில் இருந்து
விடுபட பிரான்ஸ் இஸ்ரேலுக்கு
படைக்கலன்களை விற்பனை செய்வதை
நிறுத்தியது. தன்னிடம் ஏற்கனவே
உள்ள மிராஜ் விமானங்களினது
தொழில்நுட்பங்களைப் பிரதி பண்ணியும்
பிரான்ஸ் புதிதாக உருவாக்கும்
தொழில்நுட்பங்களை தனது உளவுப்படை
மூலம் திருடியும் இஸ்ரேல்
தன்னுடைய கஃபீர் போர்விமானங்களை உருவாக்கத் தொடங்கியது. பிரான்ஸ் வேண்டுமென்றே
இஸ்ரேல் தனது தொழில்நுட்பங்களைத் திருட
அனுமதித்தது என்ற குற்றச் சாட்டும்
உண்டு. எழுபதுகளில் அமெரிக்காவின் F-15 Eagles போர்விமானங்களை இஸ்ரேல்
வாங்கியது. இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு
அதன் மொத்தத் தேசிய
உற்பத்தியின் 24விழுக்காடாகவும் இருந்தது.
அதன் போர்விமானத் தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு உதவியது. இதனால் 1980களில்
இஸ்ரேல் தனது லவி என்னும்
நான்காம் தலைமுறைப் போர்விமானத்தை
உருவாக்கியது. லவி போர்விமானங்கள் வெற்றிகரமான
செயற்பாடு அமெரிக்கப் போர்விமான
உற்பத்தியைப் பாதிக்கும் என்பதால்
அமெரிக்கா லவியின் உற்பத்தியால்
அதிருப்தியடைந்தது. இதனால் இஸ்ரேலிய
அமைச்சரவை லவியின் உற்பத்தியைக்
கைவிட்டன. இஸ்ரேல் தனது வான்படைக்குத்
தேவையான போர்விமாங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகி அதில் மாற்றங்களை
செய்யும் திறனை இஸ்ரேல் பெற்றுள்ளது.
இதனால் அவற்றின் பறப்பு
தூரம் செயற்படு திறன்
போன்றவை அதிகரிக்கப்படுகின்றன.
1967-ம்
ஆண்டு நடந்த போரால் தமது
இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய
பலஸ்த்தீனியர்கள் இன்றுவரை சொந்த
வீடுகளுக்குத் திரும்பவில்லை. ஆறு நாட் போர் முடிந்தவுடன் இஸ்ரேல் மேற்குக் கரையில் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டது. அப்போது அங்கு இருந்தவர்களை மட்டுமே மேற்குகரையில் வதிவிட உரிமையுள்ள பலஸ்த்தீனியர்கள் என இஸ்ரேல் அடம்பிடிக்கின்றது. போரால் இடம் பெயர்ந்தவர்களை மட்டுமல்ல படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்காக தற்காலிகமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தவர்களையும் இஸ்ரேல் அங்கு மீளச்செல்ல அனுமதிக்கவில்லை.
பெரும்பாலான வீடுகளில்
இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர். இஸ்ரேலை ஒழித்துக்
கட்ட வேண்டும் என
1967-ம் ஆண்டு சூழுரைத்த நாடுகள்
இப்போது தமது பிரச்சனைகளுக்குள் மூழ்கிப்
போய் இருக்கின்றன. சினாய் பாலைவனத்தில்
செயற்படும் ஐ எஸ் அமைப்பினர்
மீது எகிப்தும், சவுதி அரேபியாவும்
ஐக்கிய அமீரகமும் யேமனிலும்,
எகிப்தும் ஐக்கிய அமீரகமும்
லிபியாவிலும், ஜோர்தானும் துருக்கியும்
சிரியாவிலும் ஈராக்கிலும் தமது
கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.
இவை போதாது என்று
கட்டார் நாட்டுக்கும் மற்ற
வளைகுடா நாடுகளுக்கும் இடையில்
முறுகல் நிலை தோன்றியுள்ளது. அரபு நாடுகளால்
இப்போது இஸ்ரேலுக்கு எதிரான
எந்த போர் நடவடிக்கையிலும் ஈடுபட
முடியாத அளவிற்கு இஸ்ரேல்
வலுவாக இருக்கின்றது. இந்த நாடுகள்
காசா நிலப்பரப்பில் எந்த
இனவழிப்பை இஸ்ரேல் செய்தாலும்
அதற்கு எதிராக எந்த
படைநடவடிக்கையும் செய்ய முடியாது.
இஸ்ரேலின் நில அபகரிப்புக்களுக்கும் அத்துமீறிய
குடியேற்றங்களுக்கும் இந்த நாடுகள்
அவ்வப்போது குரல் கொடுக்க மட்டுமே
முடியும். பலஸ்த்தீனியர்களுக்கு என்று
ஒரு நாடு உருவாகுவது சாத்தியம் குறைந்த ஒன்றாகும்.
No comments:
Post a Comment