Friday, 8 March 2013

மகளிர்தானே அன்பின் விளைநிலம்

கருவாக்கி உருவாக்கி
உணவாக்கி குணமாக்கி
வளமாக்கி
வளர் தருவாக்கி
அன்னை உருவாக
வரும் மகளிர்தானே
உலகின் விளைநிலம்

காலுறை தேடியெடுத்துக் கொடுத்து
மேலாடை அழுத்திக் கொடுத்து
முடிதிருத்தி அழகாக்கி
பணிவிடை செய்யும் அக்காக்கள்
அகிலத்தில் இருப்பதால்
மகளிர்தானே பாசத்தின் விளைநிலம்

என்பொருள் திருடும் மென்பொருளாகி
தோளில் சாய்ந்திருந்து அலைவரிசை மாற்றி
அடிக்கடி சண்டை போடும் தங்கைகளுடன்
வாழாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா
தங்கைகளின் அன்பில் எல்லாம் உருகும்
அதனால் மகளிர்தானே அன்பின் விளைநிலம்

எல்லாவற்றையும் பொறுத்து
எல்லாக் குளப்படிகளுக்கும் அர்த்தம் கொடுத்து
பாராட்டி மகிழும் பாட்டியின் அன்பிற்கு
எதுதான் இந்த உலகத்தில் இணையாகும்
அதனால் மகளிர்தானே பரிவின் விளைநிலம்

மாமியாகி மைத்துனியாகி
சித்தியாகி பெரியம்மாவாகி
பக்கத்து வீட்டு ஆன்ரியாகி
மருத்துவ மனையில் தாதியாகி
பள்ளித் தோழியாகி பணிமனை நண்பியாகி
எத்தனை வடிவில் வந்து
எம்மில் அன்பு காட்டுவதால்
மகளிர்தானே நட்பின் விளைநிலம்

இதயச் சிறையிலடைத்துப் - பின்
முத்தத்தால் பிணை எடுத்து
ஓரப்பார்வையால் உயிரெடுத்து

தளர்ந்தால் தூக்கி நிறுத்தி
இளமையை இனிக்க வைப்பதால்
மகளிர்தானே காதலின் விளைநிலம்

கட்டிலில் கதாநாயகியாகி
கடைத்தெருவில் வில்லியாகி
சமையலறையில் தாயாகி
கவலைப்படுகையில் நட்பாகி
நெஞ்சின் உள்ளும் வெளியும்
எம்மைச் சுமக்கும் மனைவியர்
எம்மில் பாதியாக வாழ்வதால்
மகளிர்தானே வாழ்கையின் விளைநிலம்

எவரைப் புகழ்ந்தாலும்
எத்தனை சொன்னாலும்
கழுத்தில் நஞ்சணிந்து
களமாடிய பெண்புலிகள்தானே
வீரத்தின் தாய்களானார்
அதனால் மகளிர்தானே 

வீரத்தின் விளைநிலம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...