Sunday, 25 October 2009

சர்வதேசத்தின் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு தமிழர்களுக்கு சார்பானது அல்ல.


இலங்கைக்கு எதிராக சென்ற வாரம் பல அறிக்கைகள் வந்து குவிந்தன. அவற்றில் முக்கியமானவை:

அமெரிக்க அரசத் திணைக்களம் விடுத்த அறிக்கை: இது இலங்கையில் விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் குற்றம் சாட்டியுள்ளது. சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியமை, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மக்களுக்கு செல்ல விடாமல் தடுத்தமை, பாதுகாப்பு வலயம் என்ற அறிவிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆயுதங்கள் பாவித்தமை என்று செல்லும் இவ்வறிக்கையின் முக்கிய அம்சம் அறிக்கை எந்தவித சட்டரீதியான முடிவையும் எடுக்கவில்லை. அறிக்கை எந்த சட்டரீதியான முடிவையும் எடுக்கவில்லை என்று அறிக்கையிலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தேவை. அறிக்கையில் இவ்வாண்டு மே மாதத்தில் மட்டும் இலங்கை அரசு170 போர்க்குற்றங்கள் செய்துள்ளதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஐரோப்பியப் பாராளமன்றத் தீர்மானம்: இலங்கையைப் பற்றி கடுமயான நிலைப் பாட்டுடன் ஒரு பிரேரணை ஐரோப்பியப் பாராளமன்றில் சமர்பிக்கப்பட்டது.ஆனால் அதில் பலமாற்றங்கள் செய்யப் பட்டன: இலங்கையை முகாம்களில் மக்களைத் தடுத்து வைத்திருப்பதை "கடுமையக கண்டிப்பதாக" இருந்த வாசகம் நீக்கப் பட்டு "ஆழ்ந்த கவலை" தெரிவிப்பதாக மாற்றப் பட்டது. ஜீஎஸ்பி+ வழங்கப் படக் கூடாது என்ற வாசகம் நீக்கப் பட்டது. பிரேரணையில் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அவர்களின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது ஆனால் தீர்மானத்தில் அது நீக்கப் பட்டிருந்தது. சில இந்திய உளவுத்துறைக்குச் சார்பான தமிழ் ஊடகங்கள் தீர்மானத்தில் இலங்கையின் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமையத் தீர்வு காணப்படவேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாகப் பொய் கூறின. பிரேரணையிலோ திர்மானத்திலோ அது இடம் பெற்றிருக்கவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கண்காணிப்பகம்: இதன் அதிபராக தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியான நவநீதம்பிள்ளை இருக்கிறார். இவரைப் பற்றி ஏற்கனவே இலங்கை அரசு கடுமையாக விமர்சித்திருந்தது. இவரது பேச்சாளர் இலங்கையில் போர் குற்றம் தொடர்பாக மதியகிழக்கு காஸாவில் செய்தது போல் ஒரு விசாரணை நடாத்தப் படவேண்டும் என்று ஜெரிவித்துள்ளார்.

உலக வங்கி: இலங்கையில் தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப் பட்டாலே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைகள் திட்டமிட்டு ஒரேகாலத்தில் வெளிவரச் செய்யப் பட்டவையாகும். அமெரிக்க அறிக்கையுடன் ஒரேகாலத்தில் வெளிவரச் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை அவசரமாக நிறைவேற்றியது. இந்த அறிக்கைகளின் விளைவு: இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் எந்தப் பாதுகாப்பு உடன்படிக்கையும் இல்லை அப்படி ஒன்று ஏற்படப் போவதில்லை என்று அறிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐநா ஆகியன வன்னிப் போரில் கொடூரமாகக் கொலைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புகைப்பட ஆதாரங்களுடன் சமர்ப்பித்த வேளை எந்த நடவைக்கைகளும் எடுக்காமல் கைகட்டி நின்றன. இந்தியாவுடனான வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவின் வற்புறுத்தலால் மக்களின் பேரழிவிற்கும் பேரவலத்திற்கும் எதிராக நடவிக்கை எடுக்காமல் இருந்தன. இப்போது அறிக்கைகள் விடுவதும் தீர்மானங்கள் போடுவதும் தமிழர்களின் நலன்களுக்காக அல்ல. தமது பிராந்திய நலன்களுக்கும் வர்த்தக மேம்பாட்டிற்கும் இலங்கை சீன உறவு நெருக்கம் அடைவது உகந்தது அல்ல என்று கருதுவதாலேயே அவை இப்படிச் செயற்படுகின்றன. இலங்கைமீது போர்குற்றம் சுமத்தப் படப்போவதாக மிரட்டி இலங்கையை தமது வழிக்குக் கொண்டுவருவதே இவர்களின் நோக்கம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...