Tuesday, 2 August 2022

அல் கெய்தா தலைவர் அல் ஜவஹிரியை கொன்றது அமெரிக்கா

 அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அல் கெய்தாவின் தலைவர் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார்.  ஆப்கான் தலைநகர் காபுலில் அவர் மறைந்திருந்த வீடு ஒன்றின் மீது 2022 ஜூலை 31-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ செய்த படை நடவடிக்கையால் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் செய்யப்பட்ட இரட்டைக் கோபுரத்தாக்குதலைச் செயற்படுத்துவதில் அல் கெய்தா தலைவர் பின் லாடனுடன் அல் ஜவஹிரியும் இணைந்து செயற்பட்டார் என்பதால் அதற்கான நீதி வழங்கப்பட்டதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அத்தாக்குதலில் 2977பேர் கொல்லப்பட்டனர். கென்யா தன்சானியா ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரகங்களில் அல் கெய்தா தாக்குதல் நடத்தி 244 அமெரிக்கர்களை கொன்றதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. 

25மில்லியன் டொலர் கொலை

அல் ஜவஹிரியின் தலைக்கு அமெரிக்கா 25மில்லியன் டொலர் பரிசுத்தொகையையும் அறிவித்திருந்தது.  ஜவஹிரியின் இருப்பிடத்தை உறுதி செய்தபின்னர் அவரைக் கொல்ல தான் அனுமதி வழங்கியதாக அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு பின் லாடனை பாக்கிஸ்த்தானில் வைத்துக் கொலை செய்தபின்னர் அல் கெய்தாவின் தலைமைப் பொறுப்பை தற்போது 71 வயதான எகிப்த்திய கண் அறுவை மருத்துவரான ஐமன் அல் ஜவஹிரி ஏற்றிருந்தார். எத்தனை காலமானாலும் எங்கு மறைந்திருந்தாலும் அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதிகளை நாம் அழிப்போம் என அமெரிக்கா மார் தட்டியுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்த்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக அனுமதிக்க மாட்டோம் எனவும் அறிவித்திருந்தது. ஆப்கானிஸ்த்தானில் அதிகாரத்தில் உள்ள தலிபான்கள் தாக்குதலை உறுதி செய்தது ஆனால் கொல்லப்பட்டவர் யார் என்பதைக் கூறவில்லை. 

கண் அறுவை மருத்துவர் (Eye Surgeon)

இளவயதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஐமன் அல் ஜவஹிரி 15வது வயதில் எகிப்திய அரசால் கைது செய்யப்பட்டார். மருத்துவரான பின்னர் பாக்கிஸ்த்தான் சென்று சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்த்தான் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தானில் வைத்து மருத்துவ உதவிகளை செய்துவந்தார். 1998-ம் ஆண்டு கென்யாவிலும் தன்சானியாவிலும் அமெரிக்க தூதுவரகங்களில் செய்யப் பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவால் மிகவும் தேடப்படும் ஒருவராக அவர் இருந்தார். திட்டமிட்டு தாக்குதல்கள் செய்வதில் அவர் வல்லவராக கருதப்படுகின்றார். அவர் கொல்லப்படும் போது அவர் மட்டும் வீட்டில் இருந்தார் எனவும் அவரது குடும்பத்தினர் வேறு இடங்களில் இருந்தனர் எனவும் நம்பப்படுகின்றது. 

AGM-114 Hellfire ஏவுகணைகள்

Air to Ground Missiles 114 Hellfire என்னும் வானில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டால் ஜவஹிரி கொல்லப்பட்டார். 45கிலோ எடையுள்ள துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய இந்த ஏவுகணைகளை பெறுமதி மிக்க இலக்குகள் மீது தாக்குதல் செய்ய அமெரிக்கப்படையினர் பாவித்ஹ்டு வருகின்றனர். 2004-ம் ஆண்டு அவற்றைப் பாவித்து ஹமாஸ் தளபதியை இஸ்ரேலியர் கொலை செய்தனர். அமெரிக்காவில் பிறந்து பின்னர் அல் கெய்தாவில் இணைந்த இஸ்லாமிய போதகரான அனவர் அல் அவ்லாக்கியின் கொலைக்கும் அவ் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டன. அல் ஷஹாப் தலைவர் அகமட் அப்டி கொடானே சோமாலியாவி வைத்து Air to Ground Missiles 114 Hellfire ஏவுகணையால் கொல்லப்பட்டார். 

சிஐஏயின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

ஒரு பயங்கரவாத அமைப்பாக பலரும் கருதும் அமெரிக்க உளவு  நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஒரு படைத்துறைப் பிரிவை உருவாக்கியது. அதன் படையணிகள் வெளிநாடுகளில் செய்யும் கொலைகள் அமெரிக்காவின் சட்டங்களுக்குள் உட்பட்டதல்ல அமெரிக்க அரசுக்கோ மக்களுக்கோ பொறுப்புக் கூற வேண்டிய நிலையிலும் அவை இல்லை. பல நாடுகளில் சிஐஏயின் படையினர்  தளம் அமைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் அந்த நாடுகளுக்கு தெரியாமலே அவர்களின் படைத்தளம் அமைந்துள்ளது. பாக்கிஸ்த்தானில் சிஐஏயின் படைத்தளம் அமைக்க இம்ரான் கான் ஒத்துக் கொள்ளவில்லை. அவர் அதன் பின்னர் ஆட்சியை இழந்தார். 2022-ம் ஆண்டு ஏப்ர மாதத்தில் அல் ஜவஹிரி ஆப்கானிஸ்த்தானில் மறைந்திருக்கும் இடத்தை சிஐஏ அறிந்து கொண்டது. அவர் தனது வீட்டின் உப்பரிகையில் நிற்பதையும் சிஐஏ (Balcony) அவதானித்தது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு அவரது அடையாளம் நடமாடும் விதம் உறுதி செய்யப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் இப்போது திறமையாக சிஐஏயால் உளவுத் தாக்குதல் செய்ய முடியும் என்பது நிருபணமாகியுள்ளது. 

2020-ம் ஆண்டு அமெரிக்காவும் தலிபானும் செய்து கொண்ட உடன்பாட்டின் படி அல் கெய்தா ஆப்கானிஸ்த்தானில் செயற்பட தலிபான் அனுமதிக்காது என ஒத்துக் கொள்ளப்பட்டிருந்தது. தலிபான் உடன்பாட்டை மீறியது எனச் சொல்லி இனி அமெரிக்காவும் உடன்பாட்டை மீறலாம். 

Thursday, 14 July 2022

இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுமா?

 அரசியலமைப்பு நெருக்கடி: அரசியலில் ஏற்படும் முதன்மையான நெருக்கடிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தினிற்குள் அல்லது கடந்த கால முன்மாதிரிகளை வைத்துக் கொண்டோ தெளிவான தீர்வு கொண்டுவர முடியாத நிலையை அரசியலமைப்பு நெருக்கடி என்பார்கள். அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் போது அரசு செயற்பட முடியாத நிலை உருவாகும்.

அரசியலமைப்பு நெருக்கடி உருவாகும் சூழல்கள்:

1, ஒரு நெருக்கடிக்கான தீர்வு அரசியலமைப்பில் இல்லாதபோது

2. அரசியலமைப்பின் வாசகங்களுக்கான வியாக்கியாங்களில் முரண்பாடு நீதித்துறையில் ஏற்படும்போது.

3. அரசியலமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது.

4. அரச நிறுவனங்கள் செயற்பட முடியாத போது. உதாரணமாக அரசமைப்பின் படி தேர்தல் நடத்த வேண்டிய நேரத்தில் அதை நடத்த முடியாத நிலை ஏற்படுதல்.

அரசியலமைப்பு நெருக்கடிக்கான உதாரணங்கள்

1. உலக அரசியல் வரலாற்றில் பல அரசியலமைப்பு நெருக்கடிகள் ஏற்பட்டதுண்டு. தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் வாக்களிக்க முடியாமல் அதன் அரசியலமைப்பு தடை செய்திருந்தது. கலப்பின மக்களும் வாக்களிக்க முடியாது என 1950இல் சட்டம் மாற்றப்பட்டதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. அதை அரசு ஏற்க மறுத்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

2. 1975இல் ஒஸ்ரேலியாவின் தொழிற்கட்சி தலைமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது ஆளுநர் நாயகம் தாராண்மைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை தலைமை அமைச்சராக நியமித்தார். அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ந்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

3. ஐக்கிய அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குடியரசுத் தலைவர் செயற்படும் போது அரசியலமைப்பு நெருக்கடி அடிக்கடி ஏற்படுவது உண்டு.  

4. 2007-ம் ஆண்டு உக்ரேனிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் கலைத்தமையை நாடாளுமன்றம் ஏற்க மறுத்த போது பிணக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் விட்ட போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்ப்பட்டது.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல்

குடியரசுத் தலைவராக 2019இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ச 2022 ஜூலை 9-ம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து நாட்டில் இருந்து வெளியேறி விட்டார். தனது வாயால் தான் பதவி விலகுவதாக அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பார் என முதலில் அறிவித்த இலங்கை நாடாளுமன்ற அவைத்தலைவர் (சபாநாயகர்) மஹிந்த யாப்பா அபேவர்த்தன பின்னர் அவர் கடிதத்தில் கையொப்பமிட்டார் என்றார். ஆனால் 2022 ஜூலை 14ம் திகதை காலை 10 மணியளவில் வெளிவந்த செய்திகளின் படி குடியரசுத் தலைவர் அவைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை. பொதுவாக குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்லும் போது தலைமை அமைச்சர் தற்காலிக குடியரசுத் தலைவராக பதவி ஏற்கலாம். குடியரசுத் தலைவர் வெளிநாடு சென்றார் என்பது கூடிய முறைப்படி அறிவிக்காத நிலையில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தார். பின்னர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அவரது ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் இன்னொரு உறுப்பினரான பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்காவும் ரணிலின் பதவி ஏற்றல் செல்லுபடியற்றது என்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்கவும் ரணிலை குடியரசுத் தலைவராக ஏற்கவில்லை. இவர்கள் பாதுகாப்புத்துறையினர், காவற்துறையினர் உட்பட அரசைச் சேர்ந்தவரகள் ரணிலின் உத்தரவிற்கு இணங்க செயற்படக்கூடாது எனப் பகிரங்க அறிக்கை விட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவின் ஆளும் மக்கள் முன்னணியின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினரகள் ரணிலை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இலங்கை சுதந்திரக் கட்சி (மைத்திரிபால சிரிசேன), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவாக இல்லை. இத்தனை பிரச்சனைகளினதும் நடுவண் புள்ளியாகிய மக்கள் எழுச்சியை செய்தவர்களில் முதன்மையானவர்களாகிய அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ரணில் பதவி ஏற்பை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த அமைப்பும் மற்ற கிளர்ச்சிக்காரர்களும் தலைமை அமைச்சரின் அரச வதிவிடமான அலரி மாளிகையை தங்கள் வசமாக்கியுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச தான் இருக்கும் போது உள்ள குழப்பத்திலும் பார்க்க தான் போன பின்னால் அதிக குழப்பம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டிருக்கலாம். தனது பதவிலகல் கடிதத்தை சமர்ப்பிக்காமல் விட்டால் தான் தனது பதவிக் காலம் முடியமுன்னர் நாடு திரும்பி மீண்டும் பதவி ஏற்கலாம் என்ற எண்ணத்துடனும் அவர் செயற்ப்பட்டிருக்கலாம். 

2022 ஜூலை 14-ம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு (பிரித்தானிய நேரம்) கோத்தபாய மின்னஞ்சல் மூலம் தன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக செய்தி வந்தது. அங்கும் ஒரு குழப்பம். மின்னஞ்சல் மூலமான பதவி விலகல் கடிதம் அரசியலமைப்பில் இல்லை. அதற்கான முன்மாதிரியும் இல்லை. அவர் வெளிநாட்டில் இருந்தால் அந்த நாட்டில் உள்ள இலங்கையின் தூதுவரகத்தில் பதவி விலகல் கடிதத்தை வழங்குவது ஏற்புடையதாக இருக்கலாம். பிரித்தானிய நேரம் 16:47இற்கு பிரித்தானிய கார்டியன் பத்திரிகையின் இணையச் செய்தியின் படி சிங்கப்பூரில் இருந்து பதவி விலகல் கடிதம் விமான மூலம் அவைத் தலைவருக்கு போய்ச் சேர்ந்ததாகவும் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்த பின்னர் ஜூலை 15-ம் திகதி அவைத்தலைவர் பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என அறியக் கூடியதாக உள்ளது. 

அரசியலமைப்பு நெருக்கடி மட்டுமல்ல இரத்தக்களரி

கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவராக இருக்கும் வரை அவருக்கான அரசுறவியல் கவசம் (Diplomatic Immunity) பல நாடுகளில் கிடைக்கும். அதனால் அவர் தனக்கும் தனது உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட குடும்பத்தினர்க்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை பதவி விலகல் கடிதம் சம்ர்ப்பிக்க மாட்டர் என்றே தோன்றுகின்றது. நாடாளுமன்ற அவைத்தலைவர் அபேவர்த்தன பதில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நிலையில் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட அதிபர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான கடிதம் இல்லாத சூழலில் அவர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான சட்ட ஆதாரங்களைத் தான் தேடுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் கடிதம் இல்லாமல் அவர் பதவி விலகினார் என்பதை அபேகுணவர்த்தனவோ அல்லது சட்ட மா அதிபரோ உறுதிப்படுத்தாவிடில் இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. அதை “போராட்டம்” (அரகலய) என்னும் பெயரில் கிளர்ச்சி செய்பவர்களை மேலும் சினப்படுத்தலாம். வெளிநாடுகளின் ஆதரவுடன் ரணிலை பதவியில் தக்க வைக்க படையினர் முயன்றால் இரத்தக் களரி ஏற்பட வாய்ப்புண்டு.

Wednesday, 6 July 2022

தைவான்: ஒரு சீனா ஒரே பொய்

 அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றார். இது அமெரிக்காவின் நிலைப்பாடல்ல என்றார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன். அமெரிக்கா தைவான் தொடர்பாக வெளியில் சொல்வது வேறு அதன் செயற்பாடு வேறு. சீன ஆட்சியாளர்கள் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர். ஆனால் தைவான் எல்லா வகையிலும் ஒரு தனிநாடாகவே செயற்படுகின்றது.

சீனாவின் ஐநா உறுப்புரிமை தைவானிடம்

1945 ஒக்டோபரில் ஐக்கியநாடுகள் சபை உருவான போது சீனாவும் அதில் ஓர் உறுப்பு நாடாகியது. அது பொதுவுடமை சீனா உருவாக முன்னர் இருந்த மக்கள் சீனக் குடியரசாகும். அதன் ஒரு பகுதியாக தைவானும் இருந்தது. 1949 ஒக்டோபரில் பொதுவுடமைவாதிகள் மாவோ தலைமையில் மக்கள் சீனக் குடியரசை உருவாக்கிய போது தைவான் ஒரு தனிநாடாகியது. அமெரிக்கா தைவானில் ஆட்சியில் இருப்பவர்கள் தான் உண்மையான சீன ஆட்சியாளர்கள் என்றும் தைவான் அரசுதான் சீனக் குடியரசு என்றும் அந்தக் குடியரசு தான் ஐக்கிய நாடுகள் சபையில் முழுச் சீனாவிற்குமான உறுப்புரிமை உடையது என்றும் அடம் பிடித்தது. 1943-ம் ஆண்டு எகிப்தில் நடந்த முதலாவது கெய்ரோ மாநாட்டில் உலகப் போரின் பின்னரான ஆசிய அரசுகள் பற்றி முடிவு செய்த போது ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட தைவான சீனக் குடியரசின் ஒரு பகுதியாக ஒத்துக்கொள்ளப்பட்டது. அது பொதுவுடமைப் புரட்சிக்கு முன்னரான நிலைப்பாடு.

கேந்திரோபாயத் தெளிவின்மையா (Strategic Ambiguity) கேந்திரோபாய பொய்யா?

தைவான் தொடர்பான நிலைப்பாட்டை “கேந்திரோபாயத் தெளிவின்மை” (Strategic Ambiguity) என்னும் பெயரிட்டு குழப்பமான ஒன்றாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் முன்னெடுக்கின்றார்கள். 1972-ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சனும் சீனத் தலைவர் மாவோ சே துங்கும் சந்திக்கும் வரை தைவான் சீனக் குடியரசு எனவும் சீனா மக்கள் சீனக் குடியரசு எனவும் அழைக்கப்பட்டன. 1979இல் சீன அமெரிக்க உறவைப் புதுப்பித்தல் (Détente)செய்த போது சீனாவிற்கு அமெரிக்கா காட்டிய இரட்டை முகத்தில் இருந்து கேந்திரோபாய தெளிவின்மை செயற்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை விருப்பமின்றி ஒத்துக் கொண்டார். நிக்சன் எதை ஒத்துக் கொண்டார் என்பதற்கும் அப்போதைய சீன ஆட்சியாளர்கள் அதை எப்படி புரிந்து கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உண்டு என 2000-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கர் சொல்லி வருகின்றார்கள். நிக்சனும் மாவோவும் பேச்சு வார்த்தை நத்திக் கொண்டிருக்கையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தைவான் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை தைவானை சீனக் குடியரசு என அழைத்து வந்த அமெரிக்க தைவான் பாதுகாப்புச் சட்டத்தில் “தைவானை ஆளும் அதிகாரப்பட்டயங்கள் (Governing Authorities of Taiwan) எனக் குறிப்பிட்டது. 1979இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சீனாவை தன் நட்பு நாடாக்குவதற்காக அமெரிக்கா சொன்ன பொய் “ஒரே சீனா”. அந்த ஒரே சீனாவில் தைவான் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் “கேந்திரோபாயத் தெளிவின்மை”

இரு விமானம் தாங்கி கப்பல்களுக்கு அஞ்சிய சீனா!

பொதுவுடமைச்(?) சீனாவின் சிற்பியாகிய மாவோ சே துங்கின் குறிக்கோள் ஹொங் கொங்கும் தைவானும் சீனாவின் பிரிக்க முடியாத பகுதிகள் என்பதாகும். ஆனால் இன்றுவரை சீனாவால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக போர் செய்யும் என்பது போல அமெரிக்காவில் இருந்து கருத்து வெளியிடப்படுவது ஆண்டு தோறும் வலுவடைந்து கொண்டு போகின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும்.

தைவான் வேறு சீனா வேறு என்கின்றது அமெரிக்கா

The American Enterprise Institute என்ற அமெரிக்க வலதுசாரிக் கருத்துக் கலம் வரலாற்று ஆய்வு ஒன்றைச் செய்து தைவான் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என ஒரு நூலை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த நூல் சீனா தைவானை ஆட்சி செய்த காலத்திலும் பார்க்க நீண்ட காலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளை ஆட்சி செய்தன என்கின்றது. கிங் கோமரபு (Qing Dynasty) தைவானை இரண்டு நூற்றாண்டுகளுக்கு (1683 – 1895) மேல் ஆட்சி செய்தது. கிங் கோமரபின் பிடியில் இருந்த சீனாவுடன் ஜப்பானியர்கள் 1894இல் போரை ஆரம்பித்தனர். 1895இல் முடிந்த முதலாம் சீன-ஜப்பான் போரில் ஜப்பான் தைவானையும் சீனாவின் காற்பங்கு நிலப்பரப்பையும் கைப்பற்றியது. கிங் கோமரபு ஆட்சியாளர்கள் உண்மையான ஹன் சீனர்கள் அல்ல அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களே என அமெரிக்க ஆய்வு நிறுவனம் சொல்கின்றது. கிங் கோமரபிற்கு முன்னர் தைவானை டச்சுக்காரர்களும் போர்த்துக்கேயர்களும் ஆண்டனர். பொதுவுடமை சீனாவைப் பற்றி பல நூல்களை எழுதிய Edgar Snow என்பவருக்கு மாவோ சே துங் 1936இல் வழங்கிய பேட்டியில் மாவோ தைவானை சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடவில்லை என்கின்றது The American Enterprise Institute.

சீனாவால் தைவானைக் கைப்பற்ற முடியாதாம்

சிலர் தைவான் தீவைக் கைப்பற்றக் கூடிய வலிமையான கடற்படை ஒரு போதும் சீனர்களிடம் இருந்ததில்லை என்கின்றனர். 23.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவானைக் கைப்பற்ற போர் அனுபவம் இல்லாத சீனப்படையினர் எத்தனை பேர் தேவைப்படுவார்கள் என்ற கேள்விக்கு நூறு தைவானியர்களுக்கு ஒரு சீனப் படை வீரர் என்ற கணக்குப் படி பார்த்தால் 240,000 சீனப் படையினர் தேவைப்படுவார்கள். அவர்களையும் அவர்களுக்கு தேவையான போர்த்தாங்கிகள், ஆட்டிலெறிகள், துப்பாக்கிகள், சுடுகலன்கள், உணவுகள் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நூறு மைல்கள் தூரம் கடலைக் கடந்து செல்ல வேண்டும். அதற்கு தேவையான தரையிறக்க கப்பல்கள் (Landing Vessels) சீனாவிடம் இல்லை என்ற விவாதத்தை சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் முன்வைக்கின்றார்கள். சீனாவிடம் உள்ள எட்டு தரையிறக்க கப்பல்கள் மூலம் ஐம்பதினாயிரம் படையினரையும் ஆயிரம் போர்த்தாங்கிகளை மட்டும் தரையிறக்க முடியும் என்பது அவர்களது கருத்து. பகுதி பகுதியாக படையினரை இறக்கினால் மிகப்பெரும் அழிவை சீனப் படையினர் சந்திக்க வேண்டிவரும். சீனா தனது தரை, வான், கடல் நிலைகளில் இருந்து குண்டுகளை வீசி தைவானை தரைமட்டமாக்கிய பின்னர் படையெடுத்தால் சீனா தைவானின் தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் கைப்பற்றும் நோக்கம் நிறைவேறாது. தைவானியர்களின் கரந்தடிப் போரை சீனா எதிர் கொள்ள வேண்டிவரும். தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் களமிறங்கினால் நிலைமை மோசமாக இருக்கும். இவை உண்மையாயின் சீனா தொடர்ந்தும் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என வாயளவில் (பொய்) சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது சீனாவும் தைவான் மீது படை எடுக்கும் என எதிர்பார்த்ததும் நடக்கவில்லை.

முள்ளம் பன்றிக் கோட்பாடு

ஒரு முள்ளம்பன்றி சிறிதாக இருந்தாலும் அதன் எதிரிகள் அதைத் தொட்டால் அதன் முள்ளுகள் குத்தும். அப்படியாக இருக்கக் கூடிய மாதிரி தைவானை வைத்திருக்கும் திட்டத்தை 2008-ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கியது. அத்திட்டத்தின் படி அமெரிக்கா போர் விமானங்கள் மற்றும் படைத்தாக்குதல் செய்யக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்கள்,  கணினியால் இயங்கும் கண்ணி வெடிகள் போன்றவற்றை தைவானிற்கு வழங்கியது. உக்ரேன் போரில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து தைவானின் படையினரை மாற்றி அமைக்க அமெரிக்கா முயல்கின்றது. அத்துடன் தைவானிற்கு மேலதிக படைக்கலன்களை விற்று பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா முயல்கின்றது. சமச்சீரற்ற போர் முறைப் பயிற்ச்சியையும் அதற்குரிய படைக்கலன்களையும் தைவான் பெற வேண்டும் என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 1979 தைவான் உறவுச் சட்டம் அமெரிக்கா தைவானிற்கு தற்காப்பு படைக்கலன்களை வழங்க வேண்டும் என்கின்றது. தாக்குதற் படைக்கலன்கள் இல்லாமல் சீனாவை தைவானியர்கள் எதிர் கொள்ள வேண்டும்.

தற்காப்பு படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டு உக்ரேனியர்கள் படும் பாட்டை தைவானியர்கள் அவதானித்துக் கொண்டு இருக்கும் வேளையில் இரசியாவின் இழப்புக்களை சீனர்களும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர்.

Monday, 6 June 2022

திருத்த முடியாத சிங்களத்தின் இருபத்தோராம் திருத்தம்

இலங்கையில் அரசியலமைப்பு யாப்பு மக்களுக்காக எழுதப்படாமல் தனிப்பட்டவர்களுக்காக எழுதப்படுவதும் திருத்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு யாப்பு பிரித்தானிய குடியேற்றவாத்த த்தை புதிய குடியேற்றவாதமாக மாற்றுவதற்கு 1947இல் எழுதப்பட்டது. 1972இல் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கைக் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு யாப்பை பயன்படுத்தினார். 1978இல் ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜயவர்த்தன தன்னை அதிகாரம் மிக்க ஆட்சியாளராக மாற்ற ஓர் அரசியலமைப்பு யாப்பை உருவாக்கினார். தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத்தலைவராக்கினார்.

திருத்தங்கள் நாட்டை திருத்தவில்லை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் முறைமையை ஒழிப்பேன் என சூளுரைத்துக் கொண்டு 1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அதை நிறைவேற்றாமல் அதிபரின் அதிகாரங்களை இலங்கை அரசியல் யாப்பின் 17-ம் திருத்தம் மூலம் குறைத்தார். 2001-ம் ஆண்டு குடியரசுத் தலைவராக ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச 18-ம் திருத்தத்தின் மூலம் தன் அதிகாரங்களை அதிகரித்தார். 2015-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேன குடியரசுத் தலைவராகவும் கூட்டாக ஆட்சியைக் கைப்பற்றினர். ரணில் தலைமை அமைச்சரான தனது அதிகாரஙகளை அதிகரிப்பதற்காகவும் மைத்திரியை ஓரம் கட்டுவதற்காகவும் 19-ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறலை அதிகரித்தது என்று சொல்லப்பட்டாலும் ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கை நடுவண் வங்கியின் கடன் முறி விற்பனையில் பெரும் ஊழல் நடந்தது. 2019இல் கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அவரது கட்சியான இலங்கை மக்கள் முன்னணி 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் 2020இல் இலங்கை அரசியலமைப்பின் 20-ம் திருத்தத்தை நிறைவேற்றினர். அதனால இலங்கை அவரகளது பிடிக்குள் போய்விட்டது என்ற குற்றம் சாட்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பரவலாக முன்வைக்கப்பட்டது. இலங்கையின் அரசியலமைப்பு யாப்பு அவ்வப்போது தனிப்பட்டவர்களுக்கு ஏற்ப திருத்தப்பட்டமையால் நாட்டில் ஊழல், திறமையற்ற ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் இலங்கையின் பொருளாதார முகாமைத்துவத்தில் பேரினவாதம் இரண்டறக் கலந்திருப்பதாலும் நாடு தொடர்ச்சியாக சீரழிந்து கொண்டிருக்கின்றது.

கொலையாளிகளைத் தேடும் சிங்களம்

இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தேர்தலில் இனக்கொலையை சிறப்பாகச் செய்பவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். 2019 குடியரசுத் தலைவர் தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் உதிர்த்த ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புக்களே முடிவு செய்தன. அது தேர்தல் முடிவை மாற்ற திட்டமிட்டுச் செய்யப்பட்ட குண்டு வெடிப்புக்கள் என ஐயம் வெளிவிடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை ஆலோசகரான சகல இரத்நாயக்க கோத்தபாய ராஜபக்சவை “சேர்” (Sir) என அழைப்பதை அவருடன் பணிபுரிபவர்கள் நகைத்த போது கோத்தபாய விடுதலைப் புலிகளை அழித்தவர் என்பதால் அவர் மரியாதைக்கு உரியவர் என சகல இரத்நாயக்க பதிலளித்தார். ஓர் இனம் இனைக்கொலையாளி எனக் குற்றம் சாட்டுபவரை மற்ற இனம் மதிப்புக்குரியவராக உயர்த்திக் கொண்டிருப்பதால் அவரது தகைமை, திறமை, நேர்மை போன்றவற்றிற்கு அப்பால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். முன்னாள் இலங்கை குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜயவர்த்தன தமிழர்களுக்கு தீங்கிழைப்பவர்களை சிங்களவர்கள் மதிப்பார்கள் எனப் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

21இற்கு திசை திருப்பும் ரணில்

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் பெரும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த நிலையில் மஹிந்த ராஜ்பக்ச தலைமை அமைச்சுப் பதவியில் இருந்து விலக ரணில் விக்கிரமசிங்கேயை தலைமை அமைச்சராக 2022 மே மாதம் அவரது அரசியல் எதிரியாகக் கருதப்படும் குடியரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்ச நியமித்தார். நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு, அரசியல் சீர்திருத்தம் என்பவற்றை முதன்மை கொள்கையாக முன்வைத்து ரணில் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற பின்னர் மேற்கு நாடுகளில் இருந்தும் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமிருந்தும் கடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காலிமுகத்திடலில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை இலங்கை வர்த்தக சபை, சட்டவாளர் சபை, சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஆகியவை காலிமுகத் திடல் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைப்புக்களாக கருதப்படுகின்றது. ரணில் தலைமை அமைச்சராகிய பின்னர் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தின் வலிமை குறைந்து விட்டதாகவும் சில செய்திகள் வெளிவருகின்றன.

குடியரசுத் தலைவர் பதவியை ஒழிக்க முடியுமா?

ரணில் விக்கிரமசிங்கவால் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் பொருட்களுக்கான விலையை குறைக்க முடியாது என்ற சூழலில் மக்களைத் திசைதிருப்பவும் தனது அதிகாரத்தை கூட்டி படிப்படியாக ராஜபக்சேக்களை ஓரம் கட்டவும் இலங்கை அரசியல் யாப்பிற்கான 21-ம் திருத்தத்தை கொண்டு வர முயல்கின்றார். அவரது கை இலங்கை அரசியலில் ஓங்குவதை விரும்பாத அவரது அரசியல் எதிரியான மக்கள் வலிமைக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு 21-ம் திருத்தத்தை முன் வைத்துள்ளார். ரணில் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை குறைக்க முயல்கின்றார். சஜித் குடியரசுத் தலைவர் பதவியையே ஒழித்துக் கட்ட முயல்கின்றார். சஜித் தன்னால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால் அப்பதவியை ஒழிக்க முயல்கின்றார். இறப்பதற்கு முன்னர் தான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அவாவில் ரணில் அதை ஒழிக்க மறுக்கின்றார். கோத்தபாய ராஜபக்சவும் குடியரசுத் தலைவர் பதவியை ஒழிப்பதை எதிர்க்கின்றார்.

இரட்டைக் குடியுரிமைப் பிரச்சனை

21-ம் திருத்தத்தின் படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவோ குடியரசுத்தலைவராகவோ பதவி வகிக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவதில் ரணிலும் சஜித்தும் முனைப்பு காட்ட கோத்தபாயவின் மக்கள் முன்னணிக் கட்சியினர் பலர் அதை எதிர்க்கின்றனர். இலங்கையின் அரசியலமைப்பு தனிப்பட்டவர்களைச் சுற்றியே சுழலுகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

கோத்தாவிற்கு அமைச்சுப்பதவி பிரச்சனை

கோத்தபாய ராஜ்பக்ச தன் குடியரசுத் தலைவர் பதவியுடன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கின்றார். குடியரசுத் தலைவர் அமைச்சுப் பதவியை வகிக்க கூடாது என சஜித் மற்றும் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் கருதுகின்றனர். ரணில் கோத்தபாயாவைச் சமாளிக்க வேண்டி இருப்பதால் அதில் அதிக முனைப்பு காட்டவில்லை. ஆனால் ரணிலிடம் பாதுகாப்பு அமைச்சுப் பதவி இருந்தால் அவரால் இலகுவாக கோத்தபாயாவை ஓரம் கட்டலாம்.

தலைமை அமைச்சரின் அதிகாரம்

தலைமை அமைச்சரான ரணில் தலைமை அமைச்சருக்கே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் 21-ம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார். தற்போது தலைமை அமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது. அது ரணிலின் கையில் வந்தால் அவர் தனது பக்கம் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ரணில் மனுஷ நாணயக்காரா, ஹரின் பெர்னாண்டோ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சஜித் பிரேமதாசவின் மக்கள் வலிமைக் கட்சியில் இருந்து தன் பக்கம் கவர்ந்துள்ளார். மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாயவின் அதிகாரங்களை தேர்தலில் தோல்வியடைந்து பின் கதவால் நாடாளுமன்றத்திற்கு வந்த ரணிலுக்கு தாரைவார்க்கக் கூடாது என கோத்தபாயவின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 20-ம் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து நான்கரை ஆண்டுகளின் பின்னரே அதை குடியரசுத் தலைவர் கலைக்க முடியும். ரணில் அந்தக் கால எல்லையை 21-ம் திருத்தத்தின் மூலம் இரண்டரை ஆண்டுகளாக குறைக்க முயல்கின்றார். அதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்துவிட்டு தேர்தலை நடத்தி தான் அதிகாரம் மிக்க ஒருவராக வரவேண்டும் என்பது ரணிலின் கனவு.

சிங்களவர்கள் எத்தனை தடவை அரசியலமைப்பை மாற்றினாலும் அவர்களால் ஒரு நேர்மையான, திறமையான ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதில்லை என்பதை இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் திருந்தும் வரை திருத்தங்கள் பயன் தரமாட்டாது. 

Tuesday, 31 May 2022

அல் அக்சா பள்ளிவாசலில் கைஓங்கும் யூதர்களும் கையாலாகத அரபுக்களும்

 2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இப்படி நடப்பதாக கூறுகின்றார்கள். இம் மூன்று மத்தினருக்கும் புனித இடமான ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரில் எப்போதும் போல் இல்லாத வகையில் இஸ்ரேலியர்களும் 2022 ஏப்ரலில் அரபுக்களும் மோதிக் கொண்டனர். ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் புனித இடமாகக் கருதப்படுகின்றது. இறை தூதர் நபி வர முன்னர் மட்டுமல்ல பரபிதா தன் ஒரே ஒரு குமாரரை புவியில் உள்ள பாவிகளை இரட்சிக்க அனுப்ப முன்னரே ஜெருசேலத்தில் பழைய நகர் யூதர்களின் புனித இடமாக இருந்து வருகின்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜெருசேலம் உலகன் நடுப்புள்ளியாக இருந்ததாகத யூதர்கள் கருதுகின்றனர். யூதர்களின் புனித இடமான மலைக்கோவில் (Temple Mount) ஜெருசேலம் பழைய நகரில் உள்ளது.  இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் புவியில் இருந்து வானுலகம் நோக்கி பயணைத்த புனித இடம் ஜெருசேலம் எனச் சொல்கின்றனர். அவரகள் ஜெருசேலம் பழைய நகரில் அல் அக்சா என்னும் பள்ளிவாசலை உருவாக்கி அதை அவர்கள் மக்கா, மதினா போன்ற மிகப் புனிதமான இடமாக கருதுகின்றனர். யேசு நாதர் போதனை செய்த, சிலுவையில் அறையப்பட்ட, உயிர்த்து எழுந்த தலம் ஜெருசேலம் நகராகும். ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரைச் சுற்றி மதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அங்கு கிருத்தவர்களுக்கு எனவும், ஆர்மினியர்களுக்கு எனவும் (அவர்கள் மரபுவழி கிருத்தவர்கள்) யூதர்களுக்கு எனவும் இஸ்லாமியர்களுக்கு எனவும் தனித்தனி நிலப்பரப்புக்கள் உள்ளன. 

1967 போர் வெற்றி ஊர்வலம்

யூதர்கள் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் தாம் வெற்றி பெற்றதையும் தங்களது புனித தலமாகிய கிழக்கு ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியதையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதை ஒட்டி அவர்கள் தங்கள் கொடியுடன் பழைய நகர் முழுவதும் ஊர்வலம் போவார்கள். போகும் போது பலஸ்த்தீனிய அரபுக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் அரபுக்கள் அழிக என கூச்சலிட்டுக் கொண்டு யூதர்கள் செல்வார்கள். கிழக்கு ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் இஸ்லாமியர்களின் நிலப்பரப்புக்களூடாக ஊர்வலம் செல்வார்கள். 2022 ஏப்ரல் 17-ம் திகதி உயிர்த்த ஞாயிறு நடந்த மோதலைத் தொடர்ந்து மே மாதம் 29-ம் திகதி யூதர்கள் ஊர்வலம் போகும் போது மோதல் கடுமையாக இருந்தது. 2022 மே மாதம் 29-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 150இற்கும் மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் காயமடைந்தனர். மூன்று யூத காவல் துறையினர் காயமடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். அல் அக்சாவினுள் பலஸ்த்தீனியர்கள் நுழைய முடியாமல் இஸ்ரேலியர் தடுத்து நின்றனர். பலஸ்த்தீனியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஒரு இளம் பெண் கடுமையாகத் தாக்கப் படும் காணொலிவெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாத இஸ்ரேலியர்கள்

இஸ்ரேலின் தீவிரதேசியவாதக் கட்சியின் தலைவரான இதமர் பென் வீர் தலைமையில் பல தீவிரதேசியவாத யூதர்க்ள் 2021-05-29 ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சாவை ஆக்கிரமித்திருந்தனர். அல் அக்சாவின் அல் கிபிலி வணக்க மண்டபத்தில் அவர்கள் நிலை கொண்டுள்ள்னர். பலஸ்த்தீன செம்பிறைச் சங்கம் தமது அவசர நோயாளர் வண்டி காயமடைந்தவர்களை எடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தீவிரவாத யூதர்கள் இஸ்லாமியர்களின் அல் அக்சா பள்ளிவாசலையும் மலைக் குவிமாடத்தையும் (Dome of the Rock) அகற்றிவிட்டு யூதர்களின் வழிபாட்டிடங்கள் அமைக்கப் படவேண்டும் என அடம் பிடிக்கின்றனர். இஸ்ரேலியச் சட்டப்படியும் யூத தலைமை மத குருவின் கட்டளைப்படியும் யூதர்கள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையை நடத்தக் கூடாது. இருந்தும் 2022 மே மாதம் யூத தீவிரவாதிகள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையைச் செய்தனர்.

2021 மோதலில் காசா நிலப்பரப்பில் கடும் தாக்குதல்

2021-ம் ஆண்டு மே மாதம் ரம்ழான் நோன்பு தொழுகையின் போது அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கியில் இருந்து வரும் ஒலி யூதர்களின் போர் வெற்றிக் கூட்டத்தில் ஆற்றுகின்ற உரைக்கு இடையூறாக இருந்ததால் இஸ்ரேலிய காவல் துறையினர் அல் அக்சாவினுள் சென்று ஒலிபெருக்கியை உடைத்தனர். அப்போது இரு தரப்பு மோதல் உருவானது. பல்ஸ்த்தீனியர்கள் கற்களையும் இஸ்ரேலிய காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த மோதலால் சினமடைந்த கமாஸ் அமைப்பினர் தமது காசா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். அதனால் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலியப் படையினர் கடும் தாக்குதல்களை செய்தனர். பதினொரு நாட்கள் தொடர்ந்த மோதலில் அரபு பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பல கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. 2022 நடக்கும் மோதலில் இதுவரை கமாஸ் அமைப்பினர் அமைதியாக இருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 2021-ம் ஆண்டு கமாஸிற்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் அது மீளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது கமாஸ் அமைப்பினர் தமது மக்களின் பொருளாதார நிலை மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் எனவும் கருத இடமுண்டு. இஸ்ரேல் இப்போது கமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் ஆளிலிவிமானங்களையும் எதிர் கொள்ளக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கியுள்ளது. அவற்றிற்கு தேர்வுக் களம் அமைத்துக் கொடுக்க கமாஸ் அமைப்பினர் விரும்பவில்லையா? 

  • The International Union of Muslim Scholars இஸ்லாமிய நாடுகள் அல் அக்சா பள்ளிவாசலை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1967இல் நடந்த போரில் கிழக்கு ஜெருசேலத்தை ஜோர்தானிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துக் கொண்டது. 2019இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் போது அதை இஸ்ரேலின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் கிழக்கு ஜெருசேலம் யூதர்களுக்கு சொந்தமானது அல்ல எனக் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி கிழக்கு ஜெருசேலம் ஓரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும். பன்னாட்டு சட்டங்களின் படி ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆக்கிரமித்த நாடு குடியேற்றங்களைச் செய்ய முடியாது. பன்னாட்டு நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு இசுலாமியர்களின் புனித இடமாகிய அல் அக்சாவை இழிவுபடுத்தும் இஸ்ரேலுடன் உறவை எப்படி வளர்ப்பது என்பது பற்றி பல அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இசுலாமியர்களின் முப்பெரும் புனித இடங்களில் ஒன்றான அல் அக்சாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வழிபட முடியவில்லை. அரபு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளின் நகர்வுகளை நன்கு அவதானிக்கும் இஸ்ரேலிய உளவுத்துறையின் உதவி அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு தமது நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றாமல் அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள்.

Tuesday, 17 May 2022

சுவீடன் +பின்லாந்து: நேட்டோ விரிவாக்கத்தை துருக்கி தடுக்குமா?

 

“ஐரோப்பிய பாதுகாவலர்” மற்றும் “உடனடி பதிலடி” என்னும் இரு 2022 மே மாதம் 13-ம் திகதி போலாந்து உட்பட 14 நாடுகளிலும் “Exercise Hedgehog” என்னும் போர்ப்பயிற்ச்சியை இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ உறுப்பு நாடாகிய எஸ்தோனியாவிலும் இன்னும் ஓர் எல்லை நாடாகிய லித்துவேனியாவில் “இரும்பு ஓநாய்” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் ஜெர்மனியில் “Wettiner Heide” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் இருபது நாடுகள் இணைந்து செய்துள்ளன. 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த மிக பெரிய அளவிலும் மிகப் பரந்த நிலப்பரப்பிலும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்துள்ளது. இது உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கு முன்ன்ரே திட்டமிடப்பட்டிருந்தது. இப்போர்ப்பயிற்ச்சிகளில் பின்லாந்தும் சுவீடனும் கலந்து கொண்டுள்ளன.

நேட்டோவிலும் வீட்டோ உண்டு

நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் ஒரு நாடு புதிதாக இணைவதை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஒரு நாடு எதிர்த்தாலும் இணைய முடியாது. இதுவும் ஒரு வகை இரத்து (வீட்டோ) அதிகாரம் போன்றது. நேட்டோவில் யூக்கோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து உருவாகிய நாடாகிய மசிடோனியா இணைய முற்பட்ட போது கிரேக்கம் அதை தடுத்திருந்தது. கிரேக்கத்தில் மசிடோனியா என்ற பெயரில் ஒரு மாகாணம் உள்ளது அதே பெயருடன் இன்னும் ஒரு நாடு இருப்பதை கிரேக்கம் விரும்பவில்லை. அதனால் அந்த நாட்டின் வட மசிடோனியா என மாற்ற வேண்டும் என கிரேக்கம் வற்புறுத்தியது ஆனால் மசிடோனியா அதற்கு இணங்கவில்லை. மசிடோனியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது கிரேக்கம் தடுத்த படியால் வேறு வழியின்றி மசிடோனியா 2018இல் தன் பெயரை வட மசிடோனியா என மாற்றி நேட்டோவில் இணைந்து கொண்டது. வட மசிடோனியா முதற்தடவையாக 2022 மே 13-ம் திகதி ஆரம்பித்த நேட்டோ போர்ப்பயிற்ச்சியில் இணைந்து கொண்டது.

துள்ளும் துருக்கி

பெரிய போர்ப்பயிற்ச்சியை நேட்டோப் படைகள் ஒரு புறம் நடத்திக் கொண்டிருக்க மறு புறம் பல ஆண்டுகளாக இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான முறுகலில் நடு நிலை வகித்துக் கொண்டிருந்த சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்துள்ளன. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் முறைசாரா மாநாடு (informal meeting) 2022 மே 15-ம் திகதி நடைபெற்றது. அங்கு உரையாற்றிய நேட்டோவின் ஒரே ஒரு இஸ்லாமிய நாடான துருக்கியின் வெளிநாட்டமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு பின்லாந்தும் சுவீடனும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் துருக்கியின் ஏற்றுமதிக்கு அவர்கள் விடுத்துள்ள தடைகளை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் தான் எந்த நெம்பு கோலையும் பாவிக்கவில்லை எனவும் யாரையும் பயமுறுத்தவில்லை எனவும் கூறியதுடன் குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சிக்கு பின்லாந்தும் சுவீடனும் வழங்கும் ஆதரவை பகிரங்கப் படுத்துவதாகவும் வெளிப்படுத்தினார். சுவீடனில் பெருமளவு குர்திஷ் மக்கள் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். இந்தியா தமிழர்கள் எங்கு விடுதலை பற்றி பேசும்போது அவர்களுக்கு எதிராக இரகசியமாகச் செயற்படுவது போல் அல்லாமல் துருக்கி உலகின் எப்பகுதியிலும் குர்திஷ் மக்கள் தமது விடுதலைச் செயற்பாட்டை முன்னெடுத்தால் துருக்கி அங்கு பகிரங்கமாகத் தலையிடுவது வழக்கம். ஈராக்கில் உள்ள அரபுக்கள் அங்குள்ள குர்திஷ் மக்களின் விடுதலைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையிலும் பார்க்க அதிக நடவடிக்கையை துருக்கி எடுப்பதுண்டு. சிரியாவிலும் இதே நிலைமை தான். உக்ரேனுக்கு இரசியாவிற்கு எதிரான போரில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை துருக்கி வழங்கி வருகின்றது. உக்ரேனின் கடற்பகுதிகளை இரசியா கைப்பற்றினால் கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கம் ஓங்குவது துருக்கிக்கும் அச்சுறுத்தல் என்பதை துருக்கி நன்கு உணரும். ஆனால் துருக்கியில் வாழும் குர்திஷ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதை துருக்கி கடுமையாக எதிர்க்கின்றது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவதைத் தடுத்து தனது வேண்டுகோளை கிரேக்கம் நிறைவேற்றியது போல் துருக்கியும் தனது காய்களை நகர்த்த முயல்கின்றது. ஆனால் துருக்கியி தனது கோரிக்கையில் உறுதியாக நிற்க மாட்டாது என நம்பப்படுகின்றது.

 

கங்கணம் கட்டுமா ஹங்கேரி?

1999-ம் ஆண்டு போலாந்து செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் ஹங்கேரியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. ஹங்கேரி இரசியாவில் இருந்து மலிவு விலையில் எரிவாயு வாங்க விரும்புகின்றது. அதற்கான விதிவிலக்கு தனக்கு வழங்கப் பட்டால் மட்டுமே சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் இணைய அனுமதிப்பேன் என ஹங்கேரி தன் காய்களை நகர்த்துகின்றது. நேட்டோ நாடுகளில் இரசியாவுடன் நல்ல உறவை ஹங்கேரி பேணி வந்தது. ஆனாலும் உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பது ஹங்கேரிக்கும் ஆபத்தானது.

உக்ரேன் போரின் பின்னர் மேற்கு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன என மேற்கு ஊடகங்கள் மார் தட்டிக் கொண்டிருக்கையில் துருக்கியும் ஹங்கேரியும் அந்த ஒருமைப் பாட்டை கலைக்குமா என 2022 மே மாதம் 21-ம் திகதிக்கு முன்னர் தெரிய வரும்.

Tuesday, 10 May 2022

இரசிய நாணயம் ரூபிளின் பெறுமதி உயர்ந்தது எப்படி?

  


2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகளை விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பியதால் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதனால் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி நாற்பது விழுக்காட்டால வீழ்ச்சியடைந்து 2022 மார்ச் 7-ம் திகதி ஒரு அமெரிக்க டொலருக்கு 139 ரூபிள் என ஆனது. பின்னர் ரூபிளின் பெறுமதி முன்பு இருந்த நிலைக்கு மீளவும் உயர்ந்து 2022 மார்ச் மாதம் உலகில் சிறந்த பெறுமதி வளர்ச்சி அடைந்த நாணயமாக அடையாளமிடப்பட்டது.

இறந்த பூனையா பதுங்கிய புலியா

நிதிச் சந்தையில் ஒரு நாணயத்தின் அல்லது பங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு மீளவும் சற்று உயர்ந்து அதைத் தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதுண்டு. அந்த இடைக்கால மீள் உயர்ச்சியை இறந்த பூனையில் விழிப்பு என்பர். ஆனால் இரசிய ரூபிள் புலி போலச் சற்று பதுங்கிப் பாய்ந்துள்ளது. 2022 மே மாதம் 9-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரண்டாம் உலகப் போர் வெற்றி நினைவு நாளில் உரையாற்றுகையில் ரூபிளின் பெறுமதி எழுச்சியடைந்தது. அமெரிகாவின் Wall Street Journal 2022 மார்ச்சில் இந்த ஆண்டு ரூபிளின் பெறுமதி தாழ்ந்த நிலையில் இருக்கும் என எதிர்வு கூறியிருந்தது. இரசியப் பொருளாதார நிபுணர்கள் பிரித்தானிய Economist சஞ்சிகையின் BigMac Index முறைமையை ஆதரமாக வைத்து ஒரு அமெரிக்க டொலர் 23 இரசிய டொலருக்கு ஈடானது என்கின்றார். 2022 மே மாதம் 68 ரூபிளாக இருக்கின்றது. அதன் படி ரூபிளின் பெறுமது உண்மையான பெறுமதியிலும் பார்க்க குறைந்த மதிப்பில் உள்ளது. ரூபிளின் பெறுமதி தாக்குப் பிடிப்பதால் வட்டி விழுக்காடு 14% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இரசிய எரிவாயுவிற்கு உடனடி மாற்றீடு இல்லை

இரசியா மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத் தடைகளில் பெரும்பான்மையானவை இரசியா டொலர், யூரோ போன்ற நாணயங்கள் பெற்முடியாமல் இருக்கவே செய்யப்பட்டிருந்தன. இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெரிய அளவில் அதிகரித்தது. உலகின் முன்னணி எரிபொருள் கொள்வனவு நாடுகளான சீனாவும் இந்தியாவும் இரசியாவில் இருந்து தமது எரிபொருள் கொள்வனவை அதிகரித்தன. இந்த இரண்டு காரணிகளாலும் இரசியாவின் எரிபொருள் ஏற்றுமதி வருமானம் அதிகரித்தது. அதன் மூலம் இரசியாவிற்கு தேவையான வெளிநாட்டுச் செலவாணி தங்கு தடையின்றிக் கிடைத்தது. பல ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் இருந்து எரிவாயுவை தொடர்ந்தும் வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க வழமையிலும் பார்க்க அதிக எரிபொருளை வாங்கின.

ரூபிளில் மட்டும் எரிவாயு வங்கலாம்

ரூபிளின் பெறுமதியை தக்க வைக்க இரசியா எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் முக்கியமானது. இரசியாவில் இருந்து வாங்கும் எரிபொருளுக்கு இரசிய ரூபிளில் கொடுப்பனவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டமையே. அதற்கு முன்னர் பெரும்பாலும் அக்கொடுப்பனவுகள் யூரோவிலும் டொலரிலும் செய்யப்பட்டன. இந்த உத்தரவால் எரிபொருள் இறக்குமதியாளர்கள் டொலர், யூரோ போன்றவற்றை விற்று ரூபிள் வாங்க வேண்டிய நிலை உருவானது. ரூபிளை பலர் பெருமளவில் வாங்கியதால் அதன் பெறுமதி அதிகரித்தது. 2018-ம் ஆண்டு அப்போதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெர்மனி தன் எரிபொருள் தேவைக்கு இரசியாவில் பெருமளவு தங்கியிருப்பது அதன் பாதுகாப்பிற்கு பாதகமானது எனச் சொன்ன போது ஜெர்மனியர் சிரித்தார்கள்.

வட்டி அதிகரிப்பு

எந்த ஒரு நாடும் தன் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடியாமல் இருக்க அதன் வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும். அதை இரசியா தாராளமாகச் செய்தது. இரசிய வட்டி விழுக்காடு 20ஆக அதிகரிக்கப்பட்டது. அது ரூபிளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் அதை விற்பனை செய்யாமல் தடுத்தது. அதனால் ரூபிளின் பெறுமதி மீள் எழுச்சியடைந்தது.

அதிரடியான உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் இரசியர்கள் தங்கள் வருவாயில் எண்பது விழுக்காட்டை ரூபிளுக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவு இரசியாவில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு வர்த்தகம் புரியும் இரசிய நிறுவனங்கள் தங்கள் டொலர் மற்றும் யூரோ போன்ற நாணயங்களை விற்று ரூபிளை வாங்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இதனால் ரூபிளின் பெறுமதி அதிரித்தது.

தடுக்கப்பட்ட விற்பனை

பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இரசியாவின் அரச கடன் முறிகளிலும் இரசியப் பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்திருந்தனர். அவர்களின் கடன்முறிகளையும் பங்குகளையும் விற்பனை செய்வதை இரசியா தடை செய்தது. இதனால் அவர்கள் ரூபிளில் இருக்கும் சொத்துக்களை விற்று டொலை வாங்குவது தடுக்கப்பட்டது. உக்ரேன் போர் தொடங்கியவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம் முதலீட்டை விற்பனை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்காமல் தடுத்தமை ரூபிளின் வீழ்ச்சியைத் தடுத்தது.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

என்ற வள்ளுவன் வக்கு மகளிருக்கு மட்டுமல்ல நாணயத்திற்கும் பொருந்தும். இரசியாவின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் பாதுகாக்கப்படும் போதே து நிறைவானதும் நிரந்தரமானதுமான பெறுமதியாக இருக்கும். இரசிய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் செயற்கையாக ரூபிளிற்கு உலகச் சந்தையில் வாங்கப்படுவதை அதிகரித்தும் விற்கப்படுவதை குறைப்பதாகவும் உள்ளன. உக்ரேன் போருக்கு முடிவு கொண்டு வந்து இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப்பட்டால் இரசிய நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து நிலைத்து நிற்கும். பொருளாதாரத் தடை தொடர்ந்தால் இரசியா ஒரு நாளுக்கு $900மில்லியன்களைத் தொடர்ந்து செலவு செய்து கொண்டிருந்தால் இரசியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற்ற்றுக் கொள்ளும். உலகெங்கும் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் மாற்று எரிபொருள்களும் உருவாக்கப்படும். அதனால் ரூபிளின் பெறுமதியை செயற்கையாக உயர்ந்த நிலையில் பேண முடியாமல் போவதுடன் ஒரு கட்டத்தில் ரூபிளின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்து இரசியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம். 14% வட்டியும் வெளி நாட்டு முதலீட்டு தடையும் உள்நாட்டில் முதலீட்டைக் குறைக்கும். 14% வட்டி தொடர்ந்து பேண முடியாது.ச் அது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. இரசியாவில் இளையோர் தொகை மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதுடன் பல இளையோர் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அது இரசியப் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. இரசியா தனது பொருளாதாரத்தை உறுதியான வளர்ச்சி நிலையில் வைத்திருக்க வேண்டும். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...